Skip to Content

11. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

பிளசிங் பாக்கெட்

சென்னையில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவர், தனது எஜமானி அம்மாளுக்கு அடிக்கடி ஒரு கவர் தபாலில் வருவதையும், அதை அவர் கண்ணில் ஒற்றிக் கொண்டு கவரிலிருந்ததை தனது கைப்பையில் பத்திரப்படுத்திக் கொள்வதையும் கண்டார்.

இது அடிக்கடி நிகழவே, என்னவென்று எஜமானியிடம் கேட்டாள். பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் மலர்ப் பிரசாதம், ஸ்ரீ கர்மயோகி அவர்களிடமிருந்து வருவது. பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பு, உடல் நலம், குடும்ப சுமுகம் என எதுவானாலும் துணையாக நான் கருதுவது என அவர் கூறினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ள தனது கணவனை அக்கொடிய பழக்கத்திலிருந்து மீட்க உதவுமா எனக் கேட்டாள். கணவனது சிட்டையில் பிளசிங் பாக்கெட்டை வைத்துக்கொள்ளச் சொல். நீயும் அன்னையிடம் மானசீகமாக உன் கணவனைப் பார்த்துக்கொள்ளச் சொல் என்றார். தனக்கென ஒரு பிளசிங் பாக்கெட்டை வரவழைக்கச் சொல்லி கேட்டுப் பெற்றாள்.

கணவனிடம் இது சாமிப் பிரசாதம். உன் சிட்டைப் பையில் இருக்கட்டும். பத்திரமாக வைத்துக் கொள் எனச் சொல்லி வைத்தாள்.

மாலை வீடு வந்த கணவன், தான் திருச்சி செல்லப் போவதாகக் கூறினான். பெயிண்டிங் வேலை கிடைத்திருப்பதாகவும் வருவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும் எனவும் கூறினான்.

பத்திரமாக இருக்கும்படி சொல்லிவிட்டு, பிரசாதம் பத்திரமாக வைத்துக் கொள் எனச் சொல்லி வழியனுப்பினாள்.

கணவன் நினைவு வரும்பொழுதெல்லாம், எங்கு குடித்துவிட்டு விழுந்துகிடக்கிறாரோ என்ற எண்ணம் மேலிட, பிளசிங் பாக்கெட் நினைவு வர அன்னையினை பார்த்துக் கொள்ள சொல்லி வேண்டினாள்.

ஒரு மாதம் சென்ற நிலையில், ஒரு நாள் காலை வீட்டு வேலைகள் முடித்து தனது குடிசைக்கு வரும் வழியில், தெருவில் இருந்தவர்கள், உன் புருஷன் வந்திருக்கிறான்டி என்றனர்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே, இவர் குடித்துவிட்டு வந்தால் பிள்ளைகளை அடித்துத் துரத்துவாரோ என்ற பதற்றத்துடன் குடிசையில் நுழைந்தாள்.

பிள்ளைகளைக் காணவில்லை. என்ன தேடுகிறாய்? பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டு விட்டுவிட்டேன் என கணவன் சொன்னான்.

குடிக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டவளாய், சாப்பிடுகிறாயா எனக் கேட்டாள். முதலில் பையில் இருக்கும் சாமான்களை எடுத்து வைத்துக் கொள், வைத்துவிட்டு வா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றான்.

பெயிண்டிங் வேலை செய்ய போன இடத்திற்கு பக்கத்து பில்டிங்கில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீள உதவும் மையத்தின் போர்டைப் பார்த்தேன். தினமும் வேலை முடிந்ததும் அங்குச் சென்று வந்தேன். திருச்சி சென்றதிலிருந்து குடிப்பதில்லை என்று கூறியவனைப் பார்த்து வியந்து ஆனந்தப்பட்டாள்.

********

நல்லெண்ணம், பாதுகாப்பு என அன்னையின் அருளைத் தாங்கிவரும் பிளசிங் பாக்கெட்; அதை பவித்திரமான நம்பிக்கையோடு பயன்படுத்தும் அன்பர்களுக்கு அற்புதம் நிகழ்த்தியருளும் என்பதை இந்த அனுபவம் அறுதியிட்டு உரைக்கிறது.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

நான் சொல்வதை எவரும் கேட்பதில்லை என்பவர் பிறர் கேட்கக் கூடியதை சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். யோக சட்டப்படி பிறருக்கு நாமே எதையும் சொல்லக் கூடாது. அவர்களே கேட்டால், அவர் ஏற்கக் கூடியதை மட்டுமே சொல்ல வேண்டும்.

**********



book | by Dr. Radut