Skip to Content

10. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

அன்னையை வழிபட நேர்ந்ததே அதிர்ஷ்டம் என்பதில் ஐயம் இல்லை. அன்னையைக் கேட்டு அதிர்ஷ்டத்தைப் பெறுதல் அதனினும் சிறப்பு. (Mother’s Luck) அன்னையின் அதிர்ஷ்டம் என்பது ஒன்று உண்டு. அதிர்ஷ்டம் என்பதை விளக்கத் தேவையில்லை. ஒருவன் வாழ்வில் ஓர் அம்சத்தால் அதிர்ஷ்டம் வந்துவிட்டால் அவன் நடுத்தெருவிலிருந்து நாட்டின் நடுவுக்குச் சிறப்புற உயர்ந்து விடுகிறான். அன்னையின் அதிர்ஷ்டம் என்பது மனிதனுடைய எல்லா அம்சங்களையும் அதிர்ஷ்டமுடையதாகச் செய்வதாகும். அதன் தன்மை சிறப்புடையது. நாளுக்கு நாள் வளரும் தன்மையுடையது. இதுவரை இல்லாததை உற்பத்தி செய்து முதலில் நமக்கு அளிக்கக்கூடியது. அதைப் பெற நாம் செய்ய வேண்டியது பிரார்த்தனைதான். பிரார்த்தனைக்குரிய நிபந்தனைகளைச் சொல்வது எளிது; கடைப்பிடிப்பது எளிதன்று. மலர்ந்த மனம், சந்தோஷம் பொங்கும் நெஞ்சம், காண்பவரெல்லாரையும் கடவுளாகக் கருதும் மனப்பான்மை, சிறிய புத்தியே அறியாத பெருந்தன்மை, குறையால் நிரம்பியவன் வாழ்வில் உள்ள நிறைவின் வித்துகளைக் கண்டு அவற்றை வளர்க்கப் பாடுபடும் இலட்சியம், மற்றவர்கள் வெற்றியால் மனம் துள்ளும் இயல்பு போன்ற நல்ல குணங்களால் மட்டுமான சுபாவம் அன்னையின் அதிர்ஷ்டத்தைப் பெறத் தகுதியுடையது. இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யக்கூடியவர்கள் அன்னையின் அதிர்ஷ்டத்தையும் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.

முடிவான பலன் முதலில் கிடைக்கும்:

முடிவான பலனை முதலில் கொடுக்கும் திறன் அன்னைக்கு உரியது. அன்னையின் அன்பர்கள் தங்கள் தொழிலில் அடிக்கடி இதைப் பார்ப்பதுண்டு. கேவல்கோ என்ற தொழில் அதிபர் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அன்பர் ஒருவரை நாடினார். அன்பருக்குக் கேவல்கோவைப் பிரார்த்திக்கச் சொல்ல முடியாது. எனவே தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களைச் சொல்லி, அவற்றைப் பின்பற்றினால், இவற்றால் 5, 6 கோடி வியாபாரம் பெருகும். அதன் வழியாகச் சிக்கல் தீரும் என்றார். சொல்லிய அன்பர் தம் இடம் வந்து அன்னைக்குப் பிரார்த்தனை செய்தார். இரண்டாம் நாள் கேவல்கோ அன்பரைக் கூப்பிட்டு தனக்கு 5, 6 கோடி வியாபாரம் இரண்டு நாளில் ஏற்பட்டதாகச் சொன்னார். ஒரு முறையைக் கைப்பிடித்து, முடிவாக வர வேண்டிய பலனை முதலிலேயே கொடுக்கும் திறனுடையது அன்னையின் அருள். நமக்கு அது வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யலாம். அதற்குரிய நிபந்தனையை மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும்; முடிவான பலன் வர நாம் என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அம்முயற்சியைப் பிரியமாகச் செய்யும் அளவுக்கு மனம் இன்று பக்குவமடைய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. தாலுக்கா ஆபீஸ் குமாஸ்தா சர்வீஸ் முடிவில் டெபுடி கலெக்டராக ரிடையர் ஆவார் என்றால், இன்று அவருடைய மனநிலை டெபுடி கலெக்டருக்குரிய மனநிலையாக மாறுமேயானால், அந்த மனநிலைக்குரிய பதவியை அன்னை இன்றே அளித்துவிடுவார்.

முடிவான பலன் முதலிலேயே வேண்டும் என்று பிரார்த்தனை செய்பவர், முடிவான நிலையிலுள்ள மனப்பக்குவத்தை இன்று பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

திறமை, சாமர்த்தியம், அனுபவம், நுணுக்கம், அரிய சந்தர்ப்பம், நல்ல குணம், உயர்ந்த மனப்பான்மை ஆகியவற்றை நாம் அனுபவத்தால் பெறுகிறோம். அனுபவத்தால் பெறும் எந்தத் திறமையையும், எந்த அம்சத்தையும் அன்னையிடமிருந்து பிரார்த்தனையால் பெறலாம். இருவர் ஒரு பெரிய பிரமோஷனுக்காகப் பரீட்சை எழுதினார்கள். இரண்டு பேரும் பாஸ் செய்தனர். இருவருக்கும் பிரமோஷன் கிடைத்தது. ஒருவர் மற்றவரைப் பார்த்து கேலியாக “நான் படித்து பாஸ் செய்தேன். ராமஜெயம் எழுதிப் பாஸ் பண்ணவில்லை’’ என்றார். படித்து பாஸ் செய்வது அறிவின் முயற்சி. ராமஜெயம் எழுதி அதே பலன் பெறுவது ஆன்மிக முயற்சி. படித்தவர் ராமஜெயம் எழுதியிருந்தால், ராமஜெயம் எழுதலாமே தவிர, அது பாஸ் கொடுக்காது. அதற்கு ஒரு பக்குவம் தேவை. எத்தனையோ பேர் ராமஜெயம் எழுதுகிறார்கள். எல்லோருக்கும் அதே பலன் கிடைப்பதில்லை.

வெய்யிலின் கடுமை குறைய வேண்டும், மழை வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பலன் பெறுவதுண்டு.

பிரார்த்தனையின் இரகஸ்யம் நம்பிக்கை; அன்னையால் இதைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையே பிரார்த்தனையின் கரு.

பிரார்த்தனையால் சாதிக்கக்கூடியவை:

  1. யோக சித்தி பெறுதல்.
  2. நம் அறிவு நிலை, மனநிலை, செயல் நிலைகளை உயர்த்தி, உயர்ந்த சமூக நிலையை அடைதல் (To raise your level of functioning and status). 3. பிரச்சினைகளைத் தவிர்ப்பது.

முதல் இரண்டையும் கருதாமல் மூன்றாவதாகப் பிரச்சினையைத் தீர்த்தலை மட்டும் இக்கட்டுரையில் எழுதுகிறேன். உடல் நலம், புத்திசாலித்தனம், தோற்றப் பொலிவான அழகு, அந்தஸ்து, சந்தோஷம், அதிர்ஷ்டம் ஆகியவற்றைப் பிரார்த்தனையால் பெறலாம். நாமறிந்த வாழ்க்கையில் இவையெல்லாம் நடக்காது என அறிவோம். அன்னை வாழ்வில் அத்தனையும் நடக்கும் என்பதைப் பிரார்த்தனை நமக்கு அறிவுறுத்தும்.

தொலைந்த பொருட்கள்:

தொலைந்த பொருட்களைத் தேடும்போது அவை கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தனை சிலருக்கு உடனே பலிக்கும்; பலருக்குப் பலிப்பதில்லை. தன் வீட்டில் 1 1/2 இலட்சம் பெறுமான நகை களவு போனதை ஊரிருந்து திரும்பி வந்து பார்த்தவர், போலீஸுக்குப் புகார் கொடுப்பதன்முன் ஆசிரமத்திற்குச் செய்தியனுப்பி, பிரார்த்தனை செய்தார். 3-ஆம் நாள் வேறோர் ஊர் போலீசாரிடம் அது தற்செயலாக முழுவதுமாகக் கிடைத்தது, இவருக்குச் செய்தி வந்தது.

பொருள் தொலைந்தபின் மனம் பதட்டமாக இருக்கும். இந்த நிலையில் செய்யும் பிரார்த்தனை பதட்டத்தைக் குறைக்குமே தவிர, அன்னையின் காதில் போய் விழாது. மனத்தைத் திடம் செய்து கொண்டு, அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீண்டும் புதுப்பித்துக்கொண்டு, மனம் பதட்டம் அடங்கும்வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் போய்த் தேடினால் உடனே கிடைக்கும்.

தலைவலி போன்ற வியாதிகள்:

வியாதி ஏற்பட்டபின் பிரார்த்தனை செய்தால் பத்தில் ஒன்பது குணமாய்விடும். ஏதோ காரணத்தால் ஒன்று பிரார்த்தனைக்கு அசையாது. அதுபோன்ற நிலையில் பிரார்த்தனைக்குமுன் அன்னையின் ஒளி தலை முழுவதும் நிரம்புவதுபோல் கற்பனை செய்தால் அது தலைவலி குணமாவதற்குப் பயன்படும். எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அந்த இடம் அன்னையின் ஒளியால் அல்லது சாந்தியால் நிரம்புவதுபோல் கற்பனை செய்வது பிரார்த்தனைக்குத் துணையாகும்.

கெட்ட கனவு:

காலையில் எழுந்தவுடன் அன்றிரவு நல்ல தூக்கம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, மாலையில் குளித்து, சுத்தமான துணியை அணிந்து, இரவில் படுக்குமுன் கை, கால் கழுவி, வாயைக் கொப்பளித்துப் படுத்தால் கெட்ட கனவுகளை நம் பிரார்த்தனை விலக்க உதவும். நம்மைச் சுற்றி (cocoon of peace) அமைதியால் ஆன கூண்டு ஒன்றை கட்டிக்கொள்ளுதல் நல்லது என்று அன்னை கூறுகிறார்.

வெளியூர் பிரயாணம்:

கணவன் அடிக்கடி வெளியூர் சென்றால் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமென மனைவி பயப்படுவாள். கணவன் போக வேண்டிய இடத்திற்கெல்லாம் மானசீகமாக அன்னையை முதலிலேயே அழைத்துச் சென்று, பின்னர் பிரார்த்தனை செய்தால், மனப்பாரம் குறையும். அன்னையின் பாதுகாப்பு கணவருடன் இருக்கும்.

பிரார்த்தனை என்பது தெய்வம் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம். அதனால் பெற முடியாத வரம் ஒன்றில்லை. அதைப் பயன்படுத்தக்கூடிய திறனும், பயிற்சியும், மனநிலையும் உள்ள எவரும் பிரார்த்தனை மூலம் எதையும் பெற முடியும்.

சிறப்பான பிரார்த்தனை:

தினந்தோறும் பிரார்த்தனை செய்யும் நேரம் மாலையானால் அந்த நேரம் வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்து, பிரார்த்தனை செய்யும்பொழுது மனம் இனிமையாக இருந்து, அது முடிந்தவுடன் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் ஏற்பட்டால் நமக்குப் பிரார்த்தனைக்கு உரிய மனநிலை இருக்கிறது என்று பொருள். அதுவே பிரார்த்தனையின் சிறப்புக்குரிய அடையாளம்.

*********

10. அமுதசுரபி

அமிர்தத்தைத் தேடி பாற்கடலைக் கடைய, ஆரம்பத்தில் கிடைத்தது ஆலகாலம். அதுவே சிருஷ்டியின் அமைப்பும், சிறப்பும் ஆகும். வாழ்வின் இருபுறங்கள் ஒளியும், இருளும் ஆகும். அதைப் போன்றே ஆலகால விஷமும், அமிர்தமும் சிருஷ்டியின் இரு கோடிகள் ஆகும். சுவர்க்கத்தை நாடிப் போனால் வழியில் நரகம் வரும். நரகத்தைத் தாண்ட மறுப்பவர்கள் சுவர்க்கத்தை அடைய முடியாது என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் வாக்கு. ஆதிநாள் முதல் இன்றுவரை உள்ள நிலை இது. பூரணயோகம் மனித வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்ற முயலும்பொழுது சிருஷ்டியின் அடிப்படையையே மாற்றிவிடுகிறது. சிருஷ்டியின் அஸ்திவாரம் ஆலகாலமென்றால், பூரண யோகம் ஆலகாலத்திலிருந்து ஆரம்பித்து அமிர்தத்தை நாடும் மனிதனுக்கு ஆலகாலத்தை அமிர்தமாக மாற்றிக் கொடுக்கிறது. இதுவே பூரணயோகத்தின் இலட்சியம். இந்த யோகத்தை மேற்கொள்ளும் சாதகனைப் பூரணயோகம் அத்தகைய மாற்றத்தை அவனுள் ஏற்படுத்தக் கோருகிறது. சாதகன் தன்னுள் உறையும் ஆலகாலத்தைத் தன் ஆத்ம சக்தியினால் அமிர்தமாக மாற்ற வேண்டும். சாதகன் மனித குலத்தின் பிரதிநிதியானதால் அவனுள் ஏற்பட்ட மாற்றம் பின்னர் உலகத்தில் ஏற்பட வாய்ப்புண்டு.

பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் பூரண யோகத்தை மேற்கொண்டு சிருஷ்டியை முழுவதும் ஒளிமயமாக்க முயன்றனர். அவர்களை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வழங்கும் பரிசு சிறப்பானது. எளிய மனிதன் தன் உள்ளுணர்வால் பவித்திரப்பட்டு, பக்தி மேலிட்டு, நேர்மையான வாழ்க்கையை மேற்கொண்டு, அன்னையை நாடி, அவர்களுடைய தெய்வப்பிறப்பின் சிறப்பை அறிந்து வழிபட ஆரம்பித்தால், அவனது வாழ்வை அன்னை அமுதசுரபியாக மாற்றிவிடுகிறார். அதாவது, ‘கொள்ளத்தான் குறையாது’, ‘தொட்டனைத்தூறும் மணற்கேணி’ என்பதற்கேற்ப வாழ்வின் வளங்கள் எடுக்க எடுக்க அபரிமிதமாக உற்பத்தியாகும். அமுதசுரபி எனும் வாழ்வை அவனுக்குப் பரிசாக அன்னை அளிக்கின்றார். இது பொதுவான பலன். வாழ்வில் சிறப்பான மனிதர்கள் உண்டு. அவரைப் பார்த்தால் ‘கையெடுத்துக் கும்பிடத் தோன்றும்’, ‘சாந்தமே உரு ஆனவர்’, ‘எதிரியும் வாழ நினைப்பவர்’, ‘எதற்கும் கலங்காதவர்’, ‘அவரைப் பார்த்தபின் அவரிடம் பொய் சொல்ல வாய் எழவில்லை’, ‘உத்தமமான மனிதர்’, ‘நடமாடும் தெய்வம்’ என்பன போன்ற எண்ணங்கள் எழும் பல வகையான சிறப்பான மனிதர்கள் உண்டு. இவர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டால் அன்னை அவர்களுக்குப் பரிசளிப்பதில்லை. வாழ்க்கைக்குப் பரிசாக அவர்களை அன்னை அளிக்கின்றார். அத்தன்மையான மனிதர்கள் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவர்கள் தங்கள் ஆத்மாவில் அன்னையைப் பிரதிஷ்டை செய்துவிடுகின்றார்கள். அதன்பின் தங்கள் வாழ்க்கையை அன்னை வாழ்க்கையாக மாற்றி, வாழ்க்கையில் தங்கள் திறனை வெளிப்படுத்த முயலாமல் அன்னையை வெளிப்படுத்த ஆர்வமாகச் செயல்படுகின்றார்கள். சாதாரண மனிதனுக்கு வாழ்க்கையை அமுதசுரபியாக மாற்றிக் கொடுக்கும் அன்னை சிறப்பான மனிதனுக்குக் கொடுப்பது வேறு. அவனையே அமுதசுரபியாக மாற்றி வாழ்க்கையை அவன் மூலம் வளப்படுத்துகிறார் அன்னை. மனித வாழ்வை தெய்வீக வாழ்வாக மாற்றும் கருவியாக அவனை அன்னை மாற்றி, ஏற்றுக் கொள்கிறார்.

எடுக்க எடுக்கக் குறையும் என்ற நியதியை நாம் அறிவோம். எடுக்க எடுக்கக் குறையாது என்று புராணங்களில் கேட்டிருக்கிறோம். அப்படி ஒரு நிலை இருக்க முடியுமா? எடுக்க எடுக்க வளரும் நிலை உண்டா? வாழ்க்கையில் அத்தகைய நிகழ்ச்சிகளை நாம் காண முடியுமா? முடியும் என்றால் எப்படி அந்த நிலை ஏற்பட்டது? எங்கிருந்து மேலும் சுரந்து வருகின்றது?

கிணற்றிலுள்ள நீரை இறைத்தால் நீர்மட்டம் குறையும். இறைப்பதை நிறுத்தினால் ஊற்றுக் கிளம்பி நீர் மட்டத்தை பழைய நிலைக்குக் கொண்டுவரும். கிணறு உள்ள இடம் ஏரிக்குச் சற்று தூரத்தில் அமைந்திருந்தால், கிணற்று நீரை இறைக்கும்பொழுது பூமியில் ஊற்று கிளம்பி மீண்டும் மீண்டும் கிணற்றை நிரப்பும் சமயத்தில் கிணற்றின் ஊற்றுக்கும், ஏரியில் உள்ள நீரூற்றுக்கும் தொடர்பு ஏற்படுமேயானால் கிணற்றின் நிலை வேறு. இறைக்க இறைக்க நீர் மட்டம் குறைவதற்குப் பதிலாக உயர்வதைக் பார்க்கலாம். ஏரியின் ஊற்றுநீர் கிணற்றடியில் உள்ள ஊற்றோடு தொடர்பு கொண்டுவிட்டதால் கிணற்றுக்கு ஏரியிலிருந்து நீர் வர ஆரம்பிக்கும். கிணற்று நீரை இறைக்காவிடில், அடி ஊற்றுகள் சிறியதாகவே இருக்கும். கிணற்று நீரை இறைத்தால், அடி ஊற்றுகள் ‘கண்’ பெரியதாகி அதிக நீரைக் கொடுத்து, நீர் மட்டத்தை உயர்த்தும்.

சிறிய ஊற்றான கிணறு, பெரிய ஊற்றான ஏரியுடன் தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட விளைவு, கிணற்றை அமுத-சு ரபியாக்குகிறது. எந்தச் சிறிய செயலும், பெரிய நிலைகளுடன் தொடர்புகொண்டவுடன், வற்றாத வளம் கொண்டதாக மாறும். அதுவே அமுதசுரபியின் அடிப்படை. ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ என்பதில் உள்ளது இந்தத் தத்துவமே. ‘பயில் தோறும் நூல் நயம் போல்’ என்பதிலும் இதே அடிப்படை செயல்படுகிறது. நூல் என்பதில் எளிமையானது செய்தி; செய்தியை வெளிப்படுத்துவது கருத்து; கருத்துக்கு அடிப்படை இலட்சியம்; இவற்றை இணைப்பது இலக்கியம். இலக்கி- யத்தைச் சிறப்புறச் செய்வது இலக்கணம். மாணவன் முதலில் செய்தியை அறிகிறான். ஊன்றிப் படித்து, கருத்தை உணர்கிறான். இலட்சியத்தைப் புரிந்துகொண்டபொழுது அவனுக்கு வியப்பு ஏற்படுகிறது. மேலும் இலக்கண, இலக்கிய சிறப்புகள் நயம்பட வெளிப்படுகின்றன. அடுக்கடுக்காக உயர்ந்த கட்டங்கள் பின்னணியில் இருப்பதால் நூலைப் பயில்தொறும் நயம் மிகுந்து காணப்படுகிறது.

சொல்லும், செய்தியும் சிறிய ஊற்றானால், கருத்தும், இலட்சியமும் பெரிய ஊற்றாகி, பயில்தொறும் நயத்தை இடையறாது வழங்குகிறது. மிகச் சிறிய அளவில் வாழ்வில் இத்தகைய நிலையை நாம் காணலாம். பொதுவாக அன்னையிடம் வரும் அன்பர்களை வளப்படுத்த அன்னை கையாளும் முறைகளில் இது ஒன்று. வாழ்வில் எந்தப் பகுதியில் ஊற்றுக்குப்பின் பேரூற்றுள்ளதோ அங்கு அன்னை அன்பர்களை அழைத்துச் செல்வார். பின்னர் தொட்டதெல்லாம் பலிக்கும்; எதிர்பாராத அளவில் பலிக்கும். ‘இப்படியெல்லாம் சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன என்பதையே நானறியேன்’ என்றவர் பலர். அகில இந்திய ஸ்தாபனத்தின் தலைவர் ஒருவர் அன்னை பக்தர். மற்றொரு பக்தருடைய திட்டத்தில் சிறு அளவு பங்கு கொண்டார். சிறிய திட்டம் வெற்றி கண்டது. அடுத்த கட்டத்திற்குப் போகலாம் என்றார்கள்; போனார்கள். எல்லோரும் பாராட்டிப் பேசினார்கள். திட்டத்தை இந்தியாவில் எங்கும் பரப்பலாம் என்றார்கள். அதுவும் வெற்றியோடு பரவியது. ஸ்தாபனத்தின் தலைவருக்கு அந்த ஸ்தாபனத்தில் 130 ஆண்டுகளாக இல்லாத பெருமை அடுக்கடுக்காக வர ஆரம்பித்தது. ‘ஏதோ ஸ்டண்ட் என்று நினைத்து முதலில் இதற்கு இசைந்தேன். இந்தியா முழுவதும் வெற்றியுடன் இந்த அளவுக்குப் புகழ் பரப்பும் என நான் கனவிலும் நினைக்கவில்லை’ என்றார் அந்தத் தலைவர்.

  அனுபவமான பக்தர்கள் ஒரு காரியத்தை நாடிப் போகும் பொழுது, ஒரு முடிவு எடுக்கத் தயங்குவார்கள். உதாரணமாக மகனை இன்ஜினீயராக்க வேண்டும் என்று ஒருவர் பிரியப்- பட்டால், அன்னை அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறார். தம் விருப்பம் எவ்வளவு பெரியதானாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு “அன்னை எந்த வழி காட்டுகிறாரோ அதையே நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று அவர் விரும்பினால், அன்னை அவரை ஒரு பேரூற்றருகில் கொண்டு போய் விடுவார். Dr. M.S. சுவாமிநாதன் பட்டம் பெற்றபின் I.P.S. பரீட்சைக்குச் செல்ல அவருடைய தகப்பனார் பிரியப்பட்டார். அவரும் I.P.S. எழுதிப் பாஸ் செய்தார். பாஸ் செய்தபின் தகப்பனாரிடம் தமக்கு (research) ஆராய்ச்சியில் ஆர்வம் இருப்பதாகவும், I.P.S.-ஐ விரும்பவில்லை என்றும் தம் கருத்தைத் தெரிவித்தார். தகப்பனார் தம் கருத்தை விலக்கி, மகனுடைய விருப்பத்தை ஏற்று agriculture research-க்கு அனுப்பினார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக சுவாமிநாதன் விளங்கியபொழுது ஒரு பத்திரிகை, “அன்று அவர் தகப்பனார் சொற்படி I.P.S.-இல் சேர்ந்திருந்தால், சுவாமிநாதன் இன்று I.G.-ஆக ரிடையர் ஆகியிருப்பார். உலகம் ஒரு விஞ்ஞானியை இழந்திருக்கும்’’ என்று எழுதியது. தம் கருத்தை விட்டுக்-கொடுத்து பிறர் கருத்தை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் ஆண்டவன் செயல்பட முடிகிறது. தம்மை விலக்கி அன்னையை ஏற்றுக்கொண்டால் அன்னை நம்மை வாழ்க்கையில் உள்ள ஓர் அமுதசுரபியில் கொண்டு சேர்க்கின்றார்; ஒன்று பத்தாகிறது; தொட்டதெல்லாம் பலிக்கிறது. வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்ற நிலை மாறி, வற்றாத ஊற்றுகள் நிறைந்ததே வாழ்க்கை என உணர முடிகிறது.

கல்வி, விவசாயம், மார்க்கெட், நட்பு, ஸ்தாபனம் போன்ற வாழ்க்கையின் கூறுகளுக்கெல்லாம் சில இடங்களில், சில நேரங்களில் அமுதசுரபியின் அம்சம் ஏற்படுவதுண்டு. பல உதாரணங்கள் மூலமாக அவற்றை விளக்கலாம். அதைத் தவிர்த்து, அன்னையின் ஒளியால் மனிதன் தன்னை எப்படி அமுதசுரபியாக மாற்றிக்கொள்கிறான் என்பதை மட்டும் கவனிப்போம்.

பொதுவாகச் சொன்னால், பக்தி சிரத்தையுடன் அன்னையைத் தெய்வமாக வணங்கும் ஒருவர் ‘நல்லவர், சிறப்பானவர்’ என்ற விளக்கத்திற்கு உரியவரானால், அவரது வாழ்க்கையில் மேற்சொல்லியது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி காணலாம். சாதாரண வாழ்க்கையில் சிறப்பானவை எனக் கருதக்கூடியவை அவரது வாழ்வில் நிறைந்திருக்கும்.

உடலால் செய்வது உழைப்பு. அதற்கு ஆர்வமும், அறிவும் துணை நிற்காவிட்டால் உழைப்புக்குப் பலனாக ஊதியம் கிடைக்கும். அந்தத் திறமை மட்டும் உள்ளவன் கூலி வேலைதான் செய்ய முடியும். ஆர்வத்தோடு உழைப்பவனுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். அவன் தலைவனாகிறான். தலைவனானாலும் அவனுக்குத் தெளிவு இருக்காது, திறமை மட்டுமே மிஞ்சி நிற்கும். ஆர்வத்தோடு உழைப்பவனுக்கு அறிவு தெளிவாக இருந்தால், அவனால் பல ‘தலைவர்களை’ கட்டுப்படுத்த முடியும். தலைவனுக்கு மனிதன் கட்டுப்படுவதைப் போல், அறிவுள்ள ஒருவனுக்குப் பல தலைவர்கள் அடங்குவார்கள். அப்படிப்பட்டவர்களே அரசியல், தொழில் முதலிய துறைகளில் முன்னோடியாக நிற்பார்கள். அந்த அறிவும் இலட்சியத்திற்குக் கட்டுப்படுமேயானால், சுதந்திர இயக்கம் போன்ற பெரிய இயக்கங்களை நடத்தும் தலைவர்களாவார்கள். ஆர்வம் நிறைந்த உழைப்பை, இலட்சிய அறிவுக்கு உட்படுத்தி செயலாற்றும் பெருமக்கள் ஆத்ம விளக்கம் பெற்றவர்களானால், அவர்களால் உலகில் சாதிக்க முடியாதது என்று ஒன்றில்லை. பொதுவாக அப்படிப்பட்டவர்கள் வாழ்வை விட்டு விலகி, அகவாழ்க்கையில் ஈடுபட்டுத் தவம் போன்ற நிலையில் இருக்கப் பிரியப்படுவார்கள். உலக மக்களிடையேயுள்ள நிலைகளின் தரத்தை அடுத்தடுத்துப் பார்த்தோம். இதற்கும் மேலே ஒரு கட்டம் உண்டு. ஆத்ம விளக்கம் பெற்றவர்கள், தாம் பெற்ற ஜோதியை உலகுக்குக் கொடுக்க தம் அறிவைக் கருவியாக்கி, எழுத்தையோ, இலக்கியத்தையோ படைத்தால் உபநிஷதம் போன்றவை உற்பத்தியாகின்றன. (தம் ஆத்ம பலனை வாழ்வில் செயலால் விளக்கம் பெற அவர் விழைந்தால், கிருஷ்ண பரமாத்மாவைப் போல் போர்க்களத்தினிடையே நின்று கீதோபதேசம் செய்து 56 தேச மன்னர்களிடையே தர்மத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகின்றவர் ஆவார்). ஆத்மா பெற்ற விளக்கத்தை உடலின் அணுக்கள் பெற்று, அவை வாழ்வின் அஸ்திவாரமாக வேண்டுமென விழைந்தால், உடலின் அணுக்கள் பொன்னொளியால் மிளிர்ந்து உலகத்தின் இருளையும், பொய்மையையும் கரைக்க முற்படும். அதுவே பூரண யோகத்தின் பாதை. அன்னையை வந்தடைந்த அன்பன் தன் வாழ்வு தன் கையில் இல்லை, பிரச்சினையால் நிறைந்தது என உணர்ந்த நிலையில் அவன் உள்ளுணர்வில் ஏற்றுக்கொண்ட அன்னை அவனது பக்குவத்திற்கேற்ப செயல்படுகிறார். அன்னையை ஏற்றுக் கொண்ட அளவில் பக்தனுடைய வாழ்க்கை விளக்கம் பெறுகிறது.

அவனது உடல் சிறு ஊற்று; வாழ்வு அதைவிடப் பெரியது; மனம் உயர்ந்தது; ஆத்மா சிகரமானது. ஆத்மாவை வெளிப்படுத்தும் மனம், ஆத்மாவைவிட உயர்ந்தது. ஆத்ம விளக்கம் பெற்ற வாழ்வு அதைவிடச் சிறந்தது. ஆத்ம ஒளியால் சுடர்விடும் உடல் எல்லாவற்றையும் விடச் சிறந்தது. இவையெல்லாம் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் அமைந்த பேரூற்றுகள்.

சேவை செய்யும் பக்தனது உடல் விளக்கம் பெறுகிறது. யோக நூலைப் படிப்பவர்க்குத் தியானம் சித்திக்கிறது. உணர்வால் பெருகுபவர்க்கு உள்ளம் சிறப்படைகிறது. பொதுவாக ஒருவரிடம் இந்த எல்லா அம்சங்களும் கலந்து, ஒன்று அதிகமாகவும், மற்றது குறைந்தும் காணப்படும். ஆனால் இந்த எல்லா நிலைகளும் வாழ்வைவிடப் பெரியவை; பெரிய ஊற்றுகளாகும். வாழ்க்கையின் பிடியில் உள்ள பக்தன் பிரச்சினை வரும்பொழுது அன்னைக்குப் பிரார்த்திக்கின்றான். நேரம் கிடைத்தபொழுது யோக நூலைப் படிக்கிறான்.

முடிந்தால் சேவை செய்கிறான். அவனது முயற்சிக்குத் தக்கவாறு அன்னை அவனை நாடி வருகிறார். அப்படியின்றி அன்னையை அன்னைக்காகவே விழைந்து அன்னையை நோக்கி ஆத்மா விரைந்து செல்லுமானால், அவனது ஆத்மாவில் அன்னை தோன்றி, நின்று, நிலைக்கின்றார். இது பெரும்பேறு.

எனினும், பலருக்குக் கிடைக்கக் கூடியது. குறிப்பாகப் பக்குவமான ஆத்மாக்களுக்கும், சேவையை அர்ப்பணிப்பவர்களுக்கும் கிடைக்கக்கூடியது. அந்தப் பேற்றைப் பெற்றவர்கள் அதன்பின் தங்கள் சுபாவத்தையும், பிரியத்தையும், அறிவையும் வெளிப்படுத்தாமல் அன்னையின் ஒளியை மட்டும் வெளிப்படுத்த முயன்றால், அவர்கள் வாழ்வு அன்னையின் அருள் சுரக்கும் அமுதசுரபியாக மாறுகிறது. அவர்கள் வாழ்வைவிடப் பெரியவர்கள். வாழ்க்கையால் அவர்களுக்குச் சேவை செய்ய முடியாது. அவர்களே வாழ்க்கைக்கு வளத்தைக் கொடுத்து சேவை செய்வார்கள்.

எந்தத் துறையில் அவர்கள் செயல்பட்டாலும் அந்தத் துறையில் அவர்களது செயல் அமுதசுரபியாக இருக்கும். பல துறைகளில் செயல்பட்டால் அவர்களது ஆன்மிக வாழ்வு அமுதசுரபிகள் ஜனிக்கும் அமுதசுரபியாக விளங்கும்.

அன்னையை நாடி வந்த செயல் திறம் மிக்கவர்க்கும், நேர்மை நிறைந்தவர்க்கும், பண்பால் பக்குவம் அடைந்தவர்க்கும், அறிவின் பிழம்பானவர்க்கும், சேவையை ஏற்றுக்-கொண்டவர்க்கும் இந்த நிலையை அடையும் வாய்ப்புண்டு.

*********

11. மௌனத்தில் வெளிப்படும் மனோசக்தி

‘இச்சையற்றவர்க்குச் சித்திக்கும்’ என்பது தமிழ்நாட்டு வாக்கு. இது ஆத்மிக அடிப்படையில் ஏற்பட்ட உண்மை. இந்த மகத்தான உண்மையின் ஒரு சிறு பகுதி, ஒரு கதிர் போன்ற மற்றொரு உண்மையைப் பற்றிய கட்டுரை இது. நாம் எண்ணிய கருத்தை வெளியிட வேண்டிய காலத்தில் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதை வெளியிடாமல் இருந்தால், அந்தக் கருத்திற்கு ஒரு சக்தி வருகின்றது. நாம் வெளியிட்டுப் பெறும் பலனைவிட, வெளியிடாமலிருக்கும்போது கிடைக்கும் பலன் அதிகமானது. அந்தச் சக்தி மனத்தின் சக்தியாகும். மௌனமாக நாமிருக்கும்பொழுது சக்தியுடன் வெளிப்படும் எண்ணத்தின் திறனாகும். அதை silent will என்கிறோம். பழம்பெரும் பள்ளி ஒன்றில் திறமை மிகுந்த இளைஞர் ஒருவர் ஆசிரியராகச் சேர்ந்தார். எல்லா ஆசிரியர்களும் அவருடன் விருப்பமாகப் பழகினார்கள். அவருடைய திறமையை வெளிப்படையாகப் புகழ்ந்தார்கள். ஒரு சில ஆண்டுகள் கடந்தன. முதிய ஆசிரியர்கள் இருவர், இவருடைய (இளைஞருடைய) நெருங்கிய நண்பர்கள், பொறாமையால் கொந்தளிக்க ஆரம்பித்தனர். தலைமையாசிரியரிடம் புகார் செய்தனர். தலைமையாசிரியர் இவரை விசாரித்தார். இளைஞர் தாம் நண்பராகக் கருதிய முதிய ஆசிரியரிடமே சென்று இதுபற்றிச் சொல்வார். இதுபோல் 29 புகார்கள். முடிவில் இளைஞருக்கு அறிவு வந்தது. புகார் செய்பவர்கள் யார் என உணர்ந்தார். நெருக்கடி தாங்க முடியாமல் தலைமை ஆசிரியர், ஆசிரியர் கூட்டத்தைப் போட்டு இந்தப் புகார்களை விவாதிக்க ஏற்பாடு செய்தார். இளைஞர்மீது இருந்த 29 புகார்களில் ஒன்று, ‘அவர் அடிக்கடி ஆசிரமம் செல்கிறார்’ என்பது. இதுபோன்ற கூட்டங்களில் தலைவர் தெளிவில்லாதவரானால் நிகழ்ச்சிகள் எந்தப் பாதையில் போகும் என்று சொல்ல முடியாது. பள்ளியின் 100 ஆண்டுகள் வாழ்க்கையில் நடக்காத நிகழ்ச்சி. எல்லா ஆசிரியர்களும் மிரண்டுபோயிருந்தனர். ரகளை நடக்குமா, உத்தியோகம் போகுமா, மற்றவர்களுக்கெல்லாம் எதிர்காலம் எப்படி இருக்கும்? எதனையும் சொல்ல முடியவில்லை. மிரட்சி நிறைந்த முகத்துடன் பீதியுணர்வோடு கூட்டம் ஆரம்பமாயிற்று. இளைஞர் silent will-ஐக் கடைப்பிடிப்பது என முடிவு செய்தார். தன் மனதிலுள்ள எதையும் பேச வேண்டாம் என முடிவு செய்தார். தலைமை ஆசிரியர் குற்றப்பட்டியலைப் பாதி வரைக்கும் பேசினார். மேலே பேச முடியவில்லை; திணறினார்; நின்றார். ஓர் ஆசிரியர் எழுந்து, “இந்தச் செய்தியெல்லாம் எப்படிக் கிடைத்தது?’’ என்றார். தலைமை ஆசிரியரின் முகத்தைப் பார்த்தபின், பதில் எதிர்பார்க்காமல் உட்கார்ந்துவிட்டார். புகாரைக் கிளப்பிய முதிய ஆசிரியர் எழுந்தார். “இந்த மாதிரிப் பிரச்சினைகளை.....’’ என ஆரம்பித்தார். தலைமை ஆசிரியர் பொறுமை இழந்தார். “உட்கார். இங்கு நான் தலைமை ஆசிரியர். நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவரவர் வேலையைச் செய்யுங்கள். என்னிடம் புகார் கொண்டுவர வேண்டாம்’’ என்று இரைந்து பேசினார். கூட்டம் கலைந்துவிட்டது. இளைஞரின் மனதில் உள்ள எண்ணத்தை அதே சொற்களில் தலைமையாசிரியர் பேசிவிட்டார். அவருடைய மௌனத்திற்குப் பலன் கிடைத்தது. அன்னை அவருடைய மௌனத்தின் மூலம், மனக் கட்டுப்பாட்டின் மூலம் செயல்பட முடிந்தது.

நம் மனத்தின் எண்ணங்களைத் திறம்படப் பேசினால் சிறப்பான பலன் கிடைக்கும் நேரங்களுண்டு. திறமை அதிகமானால், பலனுடைய சிறப்பு அதிகமாகும். ஏதோ ஒரு சமயத்தில் திறமை பலனற்றுப்போகும். எவராலும் எதுவும் செய்ய முடியாமற்போகும். அப்பொழுது மனிதத் திறமை செயல்பட முடியாது; தெய்வம் செயல்பட வேண்டும். அத்தகைய செயலுக்கு மௌனமான மனம் சிறந்த கருவியாகும். B.N. ராவ் ரிசர்வ் பேங்க் கவர்னர். பர்மீய சர்க்கார் ஆலோசனைக்காக அவருக்கு அழைப்பு அனுப்பியது. போகும் வழியில் அவர் கல்கத்தா ராஜ்பவனில் தங்கினார். இந்து- முஸ்லீம் கலகம் தலைவிரித்தாடும் நேரம். ராவ் அங்கு I.G.-யைப் பார்த்தார், விசாரித்தார். I.G. போலீஸ் எடுத்த முஸ்தீபுகளை விவரித்தார். கலகத்தை எப்படிக் கட்டுப்படுத்தினார்கள் என்று கூறினார். ராவ் இந்தியப் போலீஸின் திறமையை வியந்தார். பர்மா சென்று திரும்பி வரும்பொழுது ராஜ்பவனில் தங்கினார். கலகம் நிலைகடந்துவிட்ட நேரம். போலீஸை நம்ப முடியவில்லை. ராணுவத்தை நம்ப முடியவில்லை. நவகாளியில் பயங்கரப் படுகொலை. மனித யத்தனம் பயனற்றுப் போய்விட்டது. இனி கலகம் தானே அடங்கினால் உண்டு. காந்திஜி நவகாளிக்குச் சென்றார். இந்துக்களையும், முஸ்லீம்களையும் ‘ராம்துன்’ பாடச் சொன்னார்; அமைதியைப் பரப்பினார். அந்த நேரம் ராவ் அங்கு ராஜ்பவனில் தங்கியிருந்தார். மீண்டும் I.G.-யைப் பார்க்க நேர்ந்தது; விசாரித்தார். “எல்லாம் ஒரு மனிதன் - காந்திஜி - செய்த அற்புதம்’’ என்றார். மனிதத் திறமை தேவை; அதற்கெல்லை உண்டு. அது பயன்படாதபொழுது தெய்வம் செயல்படும். நம் வாழ்க்கையில் அதுபோன்ற நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்கள் வருகின்றன.

  நம்மை மீறிய சந்தர்ப்பங்களில் நாம் மனத்தை அடக்கி, மௌனமாக இருந்தால் அன்னையின் செயல் சிறப்பாக நடைபெறும். நம் திறமைக்கு உட்பட்ட சந்தர்ப்பங்களிலும் மௌனத்தைக் கடைப்பிடிப்பது அரிது. அது யாருக்கு முடியுமோ அவர்களுக்கு வாழ்க்கையில் யோகத்திறன் ஏற்பட்டுவிடுகிறது. இதற்குப் பெரிய மனிதர்களிடம் போக வேண்டாம். நமக்குத் தெரிந்த சாதாரண நபர்கள் சிலருக்கு இந்தக் குணம் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட நபர்களிடம் மற்றவர்கள் “நீபாட்டுக்குத் தலையை ஆட்றே, அவுங்க எல்லாத்துக்கும் ஒத்துக்கிறாங்க. இது உன் ராசி’’ என்று சொல்வதைக் கேட்கலாம். இன்னும் சில பொறுமைசாலிகளைப் பார்க்கலாம். “நானாக எதையும் தேடிப் போக மாட்டேன். தானே வருவது வரட்டும்’’ என்பார்கள். அவர்களைத் தேடி எல்லாம் வரும்; இது ஒரு பெரிய குணம். எளிய மனிதர்களிடையேகூட தென்படும்.

கேட்டாலொழிய கிடைக்காது என்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. அப்பொழுது கேட்பது சரி. கேட்காவிட்டால் மற்றவர்களுக்கு உன் தேவை எப்படித் தெரியும்? தெய்வம்கூட மனிதன் கேட்கட்டும் என்றுதானே இருக்கிறது. மாறாக, கேட்டதனால் காரியம் கெட்டுப் போகிற சமயம், கேட்டே கெடுத்தோம் என்பது போன்ற நேரமும் உண்டு. இந்த வித்தியாசத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

உன்னுடைய உரிமையும், தேவையும் நியாயமானவை. ஆனால் மற்றவர்களுக்குத் தெரியாது என்னும்பொழுது கேட்பது சரி. பெண்ணுக்கு மாப்பிள்ளையைத் தேடிப் போக வேண்டியது அவசியம். கல்லூரி சேர விண்ணப்பம் போட வேண்டியது அவசியம். ‘நான் silent will-ஐ கடைப்பிடிக்கப்போகிறேன்’ என்று சொல்ல முடியாது. சித்தப்பாவுக்குப் பிள்ளையில்லை. அவருடைய சொத்தை அவர் குடும்பத்திலுள்ள 4 பிள்ளைகளில் ஒருவருக்குக் கொடுக்கலாம். அவருக்கு உன்னைப் பற்றியும், மற்ற பங்காளிகளைப் பற்றியும் முழுவதும் தெரியும். கேட்காமலிருக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். silent will-இன் முழுச்சக்தியும் இந்த மாதிரி நேரங்களில் தெரியும். ஒரு கமிட்டி கூட்டம் நடக்கிறது. விழாவை ஆகஸ்டில் வைத்தால் நல்லது.

எல்லோரும் அறிவாளிகளாகவும், நல்லவர்களாகவும் இருந்தால், ஏன் ஆகஸ்டில் கூட்டத்தை வைக்க வேண்டுமென்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். அங்கு விளக்கம் கொடுப்பது முறை. கமிட்டியில் உள்ளவர்கள் தங்கள் முக்கியத்தை மட்டுமே கருதுபவர்களானால், நீங்கள் சொல்லியதற்காகவே மறுத்துப் பேசுபவர்களானால், விதண்டாவாதக்காரர்களானால், அங்கு விளக்கம் பலன் தாராது; மௌனம் பலன் தரும். முந்திக்கொண்டு வரும் நம் எண்ணத்தைப் புறக்கணிப்பது பிரம்மப் பிரயத்தனம். புறக்கணித்தால் நம் மனதில் உள்ள அதே எண்ணத்தை மற்றவர்கள் அனைவரும் பேசுவார்கள்.

லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் முதன்முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது நாட்டுக்கே ஒரு வியப்பான செய்தியாக இருந்தது. அவர்கள் silent will பழகவில்லை. நிலைமையும், அவர்களது மனப்பாங்கும் அமைந்த விதம் அது. அவர்கள் பதவியை நாடவில்லை; பதவி அவர்களை நாடியது. அவர்கள் அந்தப் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் கிடைத்திருக்குமா? அல்லது இவ்வளவு சுமுகமாகக் கிடைத்திருக்குமா என்பது கேள்வி.

வீட்டிலும், ஆபீசிலும் அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம், ‘நாங்கள் எல்லாம் ஆசைப்படுகிறோம், கேட்கிறோம். எங்களுக்கு எல்லாம் கொடுக்கவில்லை; பரவாயில்லை. கேட்காத ஒருத்தருக்கு வலியப்போய் ஏன் கொடுக்கிறீர்கள்? என்ன விந்தை இது?’ என்று சொல்லும் சந்தர்ப்பங்களுண்டு.

(தொடரும்)

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னையை நினைப்பவன் பக்தன். அன்னையை மட்டும் நினைப்பவன் சாதகன். அன்னையைத் தவிர வேறெதையும் நினைக்க முடியாதவன் சத்திய ஜீவியத்தை நோக்கிப் போகின்றவன்.

நினைவு முதிர்ந்து காட்சியாகி, காட்சி வளர்ந்து ஜீவியமாகும்.

*******



book | by Dr. Radut