Skip to Content

09. நிதானம்

நிதானம்

கர்மயோகி

சமர்ப்பணம் நிலைத்து யோகம் செய்யும் திறன் வந்த பிறகு நிதானம் உருவாகி சமர்ப்பணத்தின் பயனைச் சீரமைத்து யோக அஸ்திவாரம் எழுப்ப வேண்டும். ஒரு சாதாரண அமெரிக்கருக்குக் காலமான உறவினர் $20 மில்லியன் உயிலில் அளித்தார். பணம் வந்தபின் பலரும் அவரை நாடினர். அவருக்குப் படிப்பில்லை. பண்பான பக்குவமில்லை. பணமிருப்பதால் அவர் குறைகளை எவரும் பொருட்படுத்துவதில்லை. மாடியிலிருந்து இறங்க வந்தால் அவருக்குக் கைப்பிடி மீது உட்கார்ந்து சிறு குழந்தை போல் வழுக்கும் பழக்கம் உண்டு. பலர் வந்து பேசும்பொழுது Fire Engine மணியடித்துக் கொண்டு ரோடில் போனால் உடனே எழுந்து ஓடி அதை வேடிக்கை பார்ப்பார். பணம் வந்துவிட்டது. பக்குவமில்லை. நிதானம் அவசியம் எனப் பலரும் கூறினர். 25 வயது இளைஞனை அவருடைய பேராசிரியர் கண்டு வியந்து நான் காணும் வயதானவர்கட்கில்லாத நிதானம் உங்களிடம் காணப்படுகிறது. இது எப்படியெனப் புரியவில்லை என்றார். பையன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். மூன்றாம் தலைமுறை நான்காம் தலைமுறையில் அவன் வீட்டிற்குப் பெரிய வீடு எனப் பெயர். எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுவேன், வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனக்கு, வம்பு சண்டைக்குப் போக மாட்டேன், வந்த சண்டையை விட மாட்டேன் என்பன அவர்களிடமிருந்து வராது, அவனால் எவருடனும் சண்டை போட முடியாது. பிறரிடம் குற்றம் காண முடியாது. பயம் அவனறியாதது, அவசரம் அவனுக்கில்லை, இது போன்றவை எளிய நல்லவர் பெற்ற குணங்கள். அதுவும் ஒரு வகை நிதானம். யோகத்திற்குரிய நிதானமும் நிதானமே, ஆனால் உயர்ந்தது. தொடர்ந்து வளர்வது. இனிமை உள்ளிருந்து எழுவது. அவர் செய்யும் காரியம் தவறுவதில்லை. அவரை அனைவரும் விரும்புவர். அவருள்ள இடத்தில் சூடு, போட்டி, பொறாமை, கடுகடுப்பு இருக்காது. நிதானம் போல் உயர்ந்தவை பல. அறிவு, ஞானம், விழிப்பு, உஷார், ஆனந்தம், சத்தியம், தெம்பு, திறமை, பொறுமை, மௌனம், சாந்தி எனப் பல்வேறு உயர்ந்த குணங்களுண்டு. மனிதனிடம் இவையிருந்தால் வளரும். வளர்ச்சி ஒரு கட்டத்தில் தடைபடும். அது உலக இயல்பு. எப்படி அறிவு உருவாகிறது, வளர்கிறது, ஏன் சிலரிடம் அது காணப்படுகிறது பிறரிடமில்லையென சிந்தனை செய்து, கவனித்து, ஆராய்ச்சி செய்வது தத்துவம். அது போன்ற ஆராய்ச்சிக்கு நிதானத்தை இங்கு எடுத்துக் கொண்டேன். பத்து அடுக்கு மாடி கட்டடம் எனில் அஸ்திவாரம் ஆழமாகப் பலமாக இருக்கும். நிதானம் பல பத்து மாடிக் கட்டடம் போல். அதன் அஸ்திவாரம் உடல், அதன் தெம்பு உயிர். உடல் வலிமை அபரிமிதமாகி அசைய மறுக்கும் நிலை நிதானத்திற்குரியது. உயிர் தெம்பு தருவது. தெம்பு அதிகமானால் உட்கார முடியாது. துருதுரு என இருக்கும். தெம்பு அபரிமிதமாகி அளவுகடந்து வளர்ந்தபடியிருப்பதை உடல் கிரகித்து ஆட்டம் அசைவு இல்லாமலிருப்பது நிதானம் உருவாக உதவும். புதியதாக அறிவதைப் பலரிடமும் கூறுவது வழக்கம். அது மனத்தை நிரப்பி வாய் வழியே வழியும். நிரம்பியது வழிவதைக் கடந்து மனத்தால் அறிவு கிரகிக்கப்பட்டு மனம் அசைவிழந்து மௌனத்தை நாடுவது நிதானம் பெறும் தகுதி. தேவன் “கோமதியின் காதலன்” என்ற நாவலில் நாயகன் ரங்கராஜன் நாயகி கோமதியைக் கண்டதைக் கூறும்பொழுது ஒரு பெண்ணைப் பார்த்தால் இவனுக்கு மீண்டும் பார்க்கத் தோன்றுவதில்லை. கோமதியைக் கண்டபின் மீண்டும் அவளைப் பார்க்க நினைக்கிறான். கன்னியிடம் இதயத்தைப் பறி கொடுத்தவனுக்கு இதயத்தில் நிதானமிருக்காது. தெய்வ தரிசனம் கிட்டும் எனத் தோன்றியபின் பக்தனுக்கு இதயம் நிதானத்தை இழந்து விடும். இலட்சம் பிறவியில் மோட்சம் கிடைக்கும் என்றறிந்த ஞானி சோகமானான். அதையே கேட்ட பக்தன் பரவசமாகி நடனமாடியதால் மோட்சம் உடனே கிடைத்தது.

புத்தியைக் கூர்மைப்படுத்தினால் அறிவு வளரும். உடலுக்குப் பயிற்சி கொடுத்தால் உடல் வளரும். நிதானம் வளர என்ன செய்ய வேண்டும். நெஞ்சில் ஆசை எழுந்தால் நெஞ்சுக்கு நிலையிருக்காது. ஆசையை மனம் ஏற்றால் அது அலைமோதும். ஆசை வேறு, மனம் வேறு. ஆசையிருந்தாலும் இல்லா-- விட்டாலும் மனம் ஆசையைப் பாராட்டாவிட்டால் நிதானம் குலையாது. ஆசையைக் கண்டு அது சிறுபிள்ளைத்தனம் என அறிந்து அகற்ற முனைவது நிதானம் எழ உதவும். சாந்தி என்பது அமைதி. அதற்குரிய இருப்பிடம் ஆத்மா. அமைதியற்ற ஆன்மா நிலைகுலைந்து விடும். அவரைக் கண்டவர் உடனே அவர் நிலையை அறிவார். அறிவாலோ, முயற்சியாலோ அமைதியைப் பெற முடியாது. தெய்வ நம்பிக்கை அமைதியை அனுமதிக்கும். அமைதி சிறந்து சாந்தி பிறக்கும். சாந்தி சுகம் பெற வழி செய்யும். ஆத்மா மகிழ்ந்து வாய் விட்டுச் சிரிப்பது glad laughter of the soul. நான்கு கட்டங்களை சமஸ்கிருத சொற்களால் கூறிய பகவான் அடுத்த கட்டத்தை ஆங்கிலத்தில் எழுதுகிறார். சமதா, சாந்தி, சுகம் என்பவை முதல் மூன்று. ஆத்மாவின் சிரிப்பு பூரண யோகத்திற்கே உரியது. அதற்குரிய சமஸ்கிருத சொல்லில்லை. நிதானத்தை அறிவு, உணர்வு, அமைதி மூலம் மூலத்திலிருந்து சிந்தனை செய்தால் நிதானம் மேலும் மேலும் விளங்கும். விளங்குவதன் விபரம் சிந்திப்பது. திறமை பெற்ற ஓவியர் முதலில் நிதானமாக இருக்க முடியாது. தேர்ச்சி பெற்ற ஓவியர் வரையும்பொழுது அவர் சூழலே நிதானம் பெறும். அறிவு, தெம்பு, திறமை மூலம் நிதானத்தை ஆராய மூலத்தையடைந்து அங்கு ஆரம்பிக்க வேண்டும். ஓடுபவனுக்கு ஓடும்பொழுது நிதானம் தேவை. மேடைப்பேச்சாளர் கூட்டத்தைத் தட்டி ஆரவாரம் அடிக்கடி செய்யும்பொழுது உற்சாகம் பெறும் வெற்றியில் நிதானம் வேண்டும். கயிறு மேல் நடப்பவர்க்கு உடலில் நிதானம் தேவை. சிங்கத்தைக் கட்டி ஆள்பவனுக்கு அதனருகில் உள்ளபொழுது நிதானம் தேவை. பாரதி மிருகக்காட்சி சாலையில் சிங்கத்தை அணுகி தடவிக் கொடுத்து “மிருக ராஜாவே கவி அரசனுக்கு ஓர் கர்ஜனை கொடு” என்றார். சிங்கம் கர்ஜித்தது. எவரும் கேட்காத பணத்தைத் திருப்பித் தர முடிவு செய்த Mr.பென்னட் பெற்ற நிதானம் உயர்ந்த பண்பு செயல்பட எடுக்கும் முடிவின் நிதானமாகும். அது சமூகத்தைக் கடந்த சக்தி. அதைச் செய்பவருக்கு மனைவியின் ஆர்ப்பாட்டத்தின் முன் நிதானமாக இருக்க முடியவில்லை. நிதானம் பெரியது, பல நிலைகளில் உள்ளது, பலவகையானது. நமக்குரியது யோக நிதானம். யோகம் என்பது அன்பர்கட்குப் பூரண யோகம். தான் விரும்பும் ஒருத்தி தன்னை விரும்புகிறாள் என்ற நேரம் ஆத்மா நெஞ்சில் மலர்ந்து நிறையும் நேரம். நிதானம் க்ஷணமிருக்காது. இதுவரை உலகில் என் போல் அன்பு செலுத்தியவரில்லை எனக் கூறத் தவறுவதில்லை. ஆறு மாதம் கழித்து அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் நிதானமிழந்தேன் எனப் புரியும். ஒருவர் பிறந்த ஊர் எது என்பதை அவர் உச்சரிப்பினின்று அறியலாம். ஆங்கிலத்தில் உயிரெழுத்து ஐந்து. நமக்கெல்லாம் ஒரு எழுத்தை எப்படி உச்சரிக்கிறோம் எனத் தெரியும் கடணிணஞுtடிஞிண் உச்சரிக்கும் கலையை அறிந்தவர் ஐந்து உயிரெழுத்துகளை இருபத்து மூன்று வகையாக மக்கள் உச்சரிப்பதை அறிவார். அதனால் அவருக்கு Phonetic expert வல்லுனர் எனப் பெயர். அவரை வந்து சந்தித்த புரொபஸர் உயிரெழுத்துகளை நூற்று ஐம்பத்தி மூன்று வகையாக உச்சரிப்பதை அறிவார். அவரால் ஒருவர் பேச்சைக் கேட்டு பிறந்த இடம், படித்த இடம், தொழில் செய்த இடம், போய்ப் பார்த்த நாடுகளைக் கூற முடியும். குப்பையில் கிடந்த படிக்காத கன்னியை அவரால் ஆறு மாதத்தில் பெரும் சீமாட்டி போல் பேச வைக்க முடிந்தது. நிதானத்தின் மூலம் எனர்ஜி, வளர்ச்சி, ரூபம், பரிணாமம் ஆகியவற்றை நாம் அந்த அளவுக்குப் பயில முடியும்.

மனம், ஆத்மா, ஜீவன், உயிர், உடல் ஆகியவற்றிற்குரிய நிதானம் வேறுபடும். அதை அறிய இவற்றுக்குரிய வேறுபாட்டை அறிய வேண்டும். நினைவு, சிந்தனை ஆகியவை மனத்தின் பகுதிகள். நெஞ்சமும் ஒரு வகையில் மனத்தின் பகுதி. நெஞ்சு மனத்திலிருந்து வேறுபட்டது, மனத்திற்கு முன் உருவானது என்றாலும் மனத்திற்கும் நெஞ்சுண்டு. நெஞ்சுக்கும் மனம் உண்டு. நினைவு தெரிந்தது மனத்திலிருப்பது. சிந்தனை தெரிந்த பல விஷயங்கள் மூலம் மனம் அறிவு பெறுகிறது. கற்பனை இவற்றினின்று வேறுபட்டது. தீர்மானம், உறுதி ஆகியவை வேறு. மனத்தின் இருப்பிடம் மூளை. மூளையில் மனம் செயல்படுவதால் விஞ்ஞானம் மூளை மனத்தைச் சிருஷ்டித்தது என்கிறது. மோட்டார் இயங்க கரண்ட் வெளியிலிருந்து வர வேண்டும். கரண்ட் செயல்பட மோட்டார் கண்டுபிடிக்கப்பட்டது. மனம் மனிதனில் செயல்பட மூளையை இயற்கை சிருஷ்டித்தது என்கிறார் பகவான். கைகால்களில் விரல்கள் உள. கால், கை விரல்களற்றதாக நெடுநாள் முன்னிருந்ததாகக் கூறுகிறார்கள். நடக்கும்பொழுது பிடிப்பு ஏற்பட பாதம் முகப்பில் விரல்களாகப் பிரிந்தது. வேலை செய்வதால் அதற்கேற்ப கையில் விரல்கள் ஏற்பட்டன. கலைஞர்கள் கைவிரல்கள் மென்மையாக, நீளமாக இருக்கும். மனம் என்பது ஜீவனின் பகுதி. முதன்மையான பகுதி. இதன் கருவிகள் சிந்தனை, நினைவு. உயிர் என்பது (vital) நெஞ்சு உறையுமிடம். உடல் அதற்கும் கீழுள்ளது. ஆத்மா ஜனித்தல் எனில் ஆத்மா ஓர் உடலை ஏற்று அதனுள் உயிரையும், மனத்தையும் கோடிக்கணக்கான வருஷங்களாக உற்பத்தி செய்கிறது. மனம், நெஞ்சு, உடல், ஆத்மா அனைத்தும் சேர்ந்தது ஜீவன். ஆத்மா ஜீவனின் பகுதி. ஆனால் ஜீவனுக்குரிய ஆத்மாவும் உண்டு. அது ஜீவாத்மாவாகும். மரபு ஒவ்வொருவருக்கும் ஒரு ஜீவாத்மா உண்டு எனக் கூறுகிறது. சிருஷ்டிக்குரியது ஒரே ஜீவாத்மா. அது இன்னும் சிருஷ்டியில் பிறக்கவில்லை. அனைவரும் தனித்தனியாகப் பெற்ற ஆத்மா அந்த ஒரே ஜீவாத்மாவின் பிரதிபிம்பங்களே என்று பகவான் கூறுகிறார். நிதானம் இவையனைத்துக்கும் உண்டு. மனத்திற்கு நிதானம் உடலின் நிதானத்திலிருந்து வேறுபடும். நினைவுக்குரிய நிதானம் சிந்தனைக்குரிய நிதானத்தினின்று வேறுபட்டது. ஒவ்வொரு நிலைக்கும் அம்சத்திற்குரிய நிதானத்தை விவரமாக அறிந்து நம் அனுபவத்தால் அதை அறிவது நூறு அல்லது இருநூறு நிலைகளில் நிதானம் புலப்பட உதவும். ஒரு கம்பெனி வளர ஆரம்பித்தபொழுது இரண்டரை கோடி முதல் தேவைப்பட்டது. சொத்தில்லாததால் பணம் புரளவில்லை. சொத்துக்குரிய கடன் பத்து இலட்சம் பெறும். அவர் சரக்கு பிரபலமாய் விட்டதால் மக்களிடம் ஷேர் வசூல் செய்ததில் அவருக்கு இருபது கோடி முதல் திரண்டது. சொத்துக்குரிய கடன் பத்து இலட்சம். வியாபாரத்திற்குரிய கடன் இருபது கோடி. சொத்திற்குரிய நிதானம் பெறுவதும் மார்க்கெட்டிற்குரிய நிதானம் பெறுவதும் இருபது மடங்கு. அப்படியானால் நிதானம் என்றால் என்ன? சொத்தைப் பெறுவதால் பெருமையை உணர்ந்தால் நிதானமிருக்காது. பெருமைப்படாமல், ஆர்ப்பாட்டம் செய்யாமலிருந்தால் பெருமிதம் ஏற்படும். சொத்திற்குரிய நிதானம் உள்ளவர்க்கே மார்க்கெட் நிலைப்படும். மார்க்கட்டிற்குரிய நிதானமுள்ளவர்க்கு மார்க்கெட் இலாபம் தருவதுடன் முதலும் தரும். நிதானம் இங்கெல்லாம் எழவில்லை என்றாலும் அறிவில் நிதானம் புதைந்திருப்பதையும் அது செல்வம் தரும் என்பதையும் காணலாம்.

சத்தியம், உண்மை, நிதானத்தின் அடிப்படை. பொய் சொல்பவர் பலவிதம். அவருள் இருதரப்பினர் உண்டு. 1) ஆனந்தமாக பரவசப்பட்டு பொய்யைப் புனைந்து கூறுவதில் ஆத்ம திருப்தியடைபவர், 2) ஒரு பொய்யும் வாயால் கூற மறுக்கும் கட்டுப்பாட்டை ஏற்று பொய்யின் புனித உருவம் ஆழத்தில் ஜகஜ்ஜோதியாய் உருவாகி வாயால் சொல்லும் மெய்யெல்லாம் முடிவில் பொய்க்கச் செய்வது. முதல் தரப்பார் அவர்களே விரும்பி முடிவு செய்தால் மனிதகுல மாணிக்கமாவார். இரண்டாம் தரத்தார் உடலே அழிந்தாலும் பொய்யை எளிதில் கைவிட முன்வர மாட்டார். நமக்கு அவர்களைப் பற்றித் தெரிவதால் சத்தியத்தின் வேகம் விளங்கும். சத்தியம் சத்தியமாக ஜெயிக்கும். ஜெயத்தை நாடாவிட்டாலும் சத்தியம் ஜெயிக்கும். சத்தியத்தை உள்ளும் புறமும் மேற்கொண்டாலும் அறியாமை அதனுடன் செயல்படும். சத்தியமான மனிதனின் அறியாமையால் செயல்பட்டு செயல் அறியாமையை அழித்து அறிவாகத் திருவுருமாற்றி சத்தியம் ஜெயிக்க வழிவகுப்பதைக் காண்பவருக்குச் சமர்ப்பணம் மேலும் தெளிவாக விளங்கும். அறியாமைக்கு நிதானம் உண்டு. அறிவுக்கும் நிதானம் உண்டு. பொய்க்கும் நிதானம் உண்டு. மெய்க்கும் நிதானமுண்டு. பொய் மெய் அறிவு அறியாமை எவ்வகையாகக் கலந்தாலும் அதற்கும் நிதானமுண்டு.

(தொடரும்)

**********



book | by Dr. Radut