Skip to Content

08. விஞ்ஞானம் தராத விடைகளைத் தரும் ஆன்மிகம்

விஞ்ஞானம் தராத விடைகளைத் தரும் ஆன்மிகம்

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் - சொற்பொழிவு ஆற்றியவர்: திரு. இரத்தினவேலு

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 07.06.2015

மனித வாழ்வின் பிரச்சினைகட்கு விஞ்ஞானம் தந்த தீர்வுகள் அனந்தம். பிளேக், பெரியம்மை போன்ற நோய்களை அழித்ததும், புயல், பூகம்பம் ஆகியவற்றிலிருந்து பெருமளவு தப்பவும் உதவியது விஞ்ஞானம். அறுவை சிகிச்சையின் அற்புதத்தை பகவான் வியந்து பாராட்டுகிறார். விஞ்ஞானம் எவ்வளவு பெரிய சாதனையைச் செய்தாலும் மனிதத்திறமையால் செயல்படுவதால், பிரச்சனை உருவாக்குவது மனம் என்பதால் எப்பொழுதும் அதில் குறையிருக்கும்.

ஆன்மிகம் முழுமையானது. எக்காலத்திலும் ஆன்மிகம் விஞ்ஞானத்தைக் கடந்த திறனுடையது. விஞ்ஞானத்தின் விடைகள் அறிவுக்குரியவை. ஆன்மிகத் தீர்வுகள் ஆன்மாவுக்குரியவை. உலகப் போர் முடிந்தபின் எழுந்த உலகப் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆன்மிகம் விடை பெற்றுள்ளது. விஞ்ஞானத்தில் விடைகள் இல்லையெனக் கூற முடியாது. உலகம் அவற்றை அறியவில்லையா, ஏற்கவில்லையா என்பவை வேறு கேள்விகள். நீர், பெட்ரோல் போன்றவை இயற்கை சாதனங்கள். எலக்ட்ரிசிட்டி, ரயில் போன்றவை விஞ்ஞானம் புதியதாகக் கண்டவை. மால்தஸ் ஜனத்தொகைப் பெருக்கத்தின் ஆபத்தை எடுத்துக் கூறியது உலகத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல்வேறு பிராணிகளின் வாழ்வில் பெருக்கம் அழிவுக்கு வழி செய்தது போல் மனிதனுக்கும் அது வந்தது. உணவு உற்பத்தியின் பெருக்கம் முக்கியமாக அதை ஆபத்தினின்று விடுவித்தது. உலக மக்கட்தொகை 450 கோடியை எட்டினால் இன்றைய நிலமும் உற்பத்தி முறைகளும் அதை சமாளிக்கும் என அதற்கு தீர்வு கண்ட விஞ்ஞானம் பெருமையுடையது. விஞ்ஞானம் மறைபெõருளைக் காணும். இல்லாததை உற்பத்தி செய்யும். ஆன்மிக முறைகள் மனத்தின் திறமைகள் என்பதால் முடிவற்றவை. உலகம் பெரும் பிரச்சனைகளாக இன்று கருதுபவை ஏராளம். முக்கியமானவை 1) அணு ஆயுதம், 2) பொருளாதார நெருக்கடி, 3) வேலையில்லாத் திண்டாட்டம், 4) சூழல் பாதிப்பது, 5) கரி, பெட்ரோல் தீரும் நிலை, 6) தூய நீர் சப்ளை போன்றவை.

நூறாண்டிற்குமுன் மனிதன் 30 வருஷம் வாழ்ந்தான். பழங்காலத்தில் 10 ஆண்டுகளே வாழ்ந்ததாக ஆராய்ச்சி. இன்று 75 ஆண்டுகள் வாழ்வது பெரும்பாலும் விஞ்ஞான சாதனை. நாகரிகம், கல்வி, விஞ்ஞானம் இணைந்து இதைச் சாதித்தன. விஞ்ஞானம் இல்லாத அற்புதங்களைக் கண்டுபிடிக்கிறது. அது மனிதனை நாகரிகமாக வாழ உதவும். ஆன்மிகம் அகத்தின் முழுமையை நாடுவதால் ஆன்மிக வாழ்விற்குப் பிரச்சனை என்பதேயில்லை. விஞ்ஞானம் ஆன்மிகத்தின் பகுதி.

Green Cross International என்ற ஸ்தாபனம் கோர்பஷாவ் தலைமையில் ஏற்பட்டது. சூழலைப் பாதுகாக்கும் நிறுவனம் அது. அவர்களுடைய முக்கிய கவலை நீர். அவர்கள் கையாளும் முக்கிய முறைகள் நீரைத் தூய்மைப்படுத்துவது, சிக்கனமாகப் பயன்படுத்துவது. மனிதன் தண்ணீர் சப்ளையை அதிகப்படுத்த முடியும் என்று அவர்களால் நினைக்க முடியவில்லை. ஏனெனில் அது ஆன்மிகத் துறைக்குரிய அறிவு. தமிழ்நாடு 40 அங்குலம் முதல் 60 அங்குலம் மழை பெறும் பிராந்தியம். கலிபோர்னியாவில் பருத்தி பயிரிட பயன்படுத்தும் நீரைப் போல் இங்கு 35 மடங்கு தண்ணீர் செலவாவதைக் கண்டு கலிபோர்னியாவில் வாழும் கேரள எக்ஸ்பர்ட் தமிழ் நாட்டில் சில இடங்களில் அம்முறையை அறிமுகப்படுத்தினார். நம் நாட்டு விவசாயம் 85% நீரை விரயம் செய்கிறது என்பது உலகம் அறிந்தது.

ஆன்மிகம் என்றால் அபரிமிதம். அதன் முறைகளில் முக்கியமானது ஸ்தோத்திரம். கவனம் எனக் கூறலாம். ஒரு பொருளை ஆர்வமாகக் கவனித்தால் அப்பொருள் பெருகும் என்பது ஆன்மிக உண்மை.

வில்வதளம் தங்க இலையாக மாறி இந்திய கோயில்கள் கட்டப்பட்டன என்பது வழக்கு. இன்று நாம் கண்ணுறுவதில்லை என்பதால் நம்பிக்கையுள்ளவரே ஏற்கக்கூடிய செய்தியது. தண்ணீர் விரயமாகாமல் தடுத்தால்தான் பெற்ற கவனத்தை ஏற்று தண்ணீர் பெருகும் என்று அன்பர்கள் பலமுறை அனுபவத்தில் கண்டுள்ளனர். விரயமாகும் மழை நீரை மீண்டும் போர் கிணற்றுக்குள் செலுத்தும் முறை நெடுநாளாக உலகம் பின்பற்றும் முறை. தமிழ் நாட்டில் ஊர் எல்லைக்குள் அது பின்பற்றப்பட வேண்டும் என்ற கருத்து ஓரளவு நெடுநாளாக இருந்தது. கொஞ்ச நாட்கட்குமுன் அதற்குரிய சட்டம் அமலுக்கு வந்தது.

Life Response என்பது உடனே நடக்கும். காலம் தாழ்ந்தும் நடைபெற வல்லது. சட்டம் வந்த ஆண்டிற்குப்பின் ஓராண்டு கழித்து 82 அங்குலம் மழையைத் தமிழ் நாடு பெற்றது. இம்முறை ஊருக்குள் மட்டும் அமல் செய்யப்பட்டது. இறைப்புப் பாசனக் கிணறுகட்கு சட்டம் இதுவரை வரவில்லை. கவனம் அபரிமிதம் தரும் என்பது புதிய கொள்கையில்லை. கருமியின் கவனம் அவனுக்குப் பெரும் பணம் தருகிறது. கவனம் செலுத்தப் பட்டது அதிகரிப்பது என்பதை ஆயிரம் துறைகளில் உலகம் கண்டுள்ளது. கல்வி, பணம், மின்சாரம், ரோடு, போன் என்ற எல்லாத் துறைகளிலும் நாம் இக்கொள்கையைக் காண்கிறோம். எப்பொருள் குறையானாலும் கவனம் குறையை நிறையாக்கும்.

விஞ்ஞானம் அறிவின் சிகரம். பூமி சூரியனைச் சுற்றுவதைக் கண்டது விஞ்ஞானம். சந்திர மண்டலத்தை எட்டிய மேதைகள் விஞ்ஞானிகள். ஒரு விஷயம் பிரச்சனையாக இருக்கிறது, தீர்க்க முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுவது விநோதம். மனிதன் பேரறிவு பெற்ற பின்னும் சிறிய விஷயங்களில் எவரையும் போல் நடக்கக்கூடியவன். நெல் பயிரிடுபவனுக்கு இலாபம் வராது, வந்தால் சிறு இலாபமே வரும் என்பதை உழுபவன் கணக்குப் பார்த்தால் உழவுகோலும் மிஞ்சாது என அனுபவம் கூறியது. கரும்பு பணப்பயிர் எனப் பெயர் பெற்றது. கிராமத்தில் குடிசைகள் அதிகம். கல் வீடு அரிது. கரும்பு குடித்தனக்காரன் கல் வீட்டுக்காரன் என்பது சொல். கரும்பு மட்டும் பணம் தருவதில்லை. பணப்பயிர் எனப் பெயர் பெற்ற பயிர்கள் ஒன்று இரண்டில்லை. ஓராயிரமில்லை எனினும் எவரும் அறிந்தவை ஏராளம். எந்தக் காய்கறியும் பெரும் பணம் தருவதை நாம் அறிவோம். நெல் 300 ரூபாய் கொடுக்க சிரமப்படும் நேரம் கத்திரிக்காய் 30,000 ரூபாய் இலாபம் கொடுத்ததைக் கண்ட கிராமத்தார் அனைவரும் அதைப் பயிரிட்டனர். எவ்வளவு இலாபம் தரும் எப்படித் தரும் என்றெல்லாம் ஒருவர் கேட்டபொழுது, “ஏன் இந்தக் கேள்வியெல்லாம்? கத்திரிக்காய் பயிரிடும் கிராமத்தில் குடிசையேயில்லை” என்று பதில் சொன்னார் ஓர் அனுபவசாலி. வேறொரு பணப்பயிரைக் கணக்கெடுத்தவர் அதைப் பயிரிடுபவரை விபரம் கேட்டார். விபரத்தைப் பாதியில் நிறுத்தி “செடியை நட்டு, பணத்தைப் பலனாக உருவிக் கொள்ளலாம்”என்றார். படிக்காத விவசாயியின் நிலை மட்டும் இல்லை இது.

1928-இல் சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. செட்டியார் அதைத் தன் பெயரில் கட்டினார். அதற்குமுன் தாயார் பெயரில் கல்லூரி நடத்தினார். அதன்முன் தகப்பனார் பெயரில் பள்ளிக்கூடம் நடத்தினார். அத்தனையும் சிதம்பரத்தில் ஏற்படுத்தினார். சிதம்பரத்திலுள்ள வசதியான குடும்பங்களில் உள்ள புத்திசாலிப் பிள்ளைகளில் ஒரு சிலரே கல்லூரியில் சேர்ந்தனர். இலங்கை, கேரளா, பங்களூர், ஆந்திரா மாணவர்கள் பல்கலைக் கழக 2000 பேரில் 200 பேராவர். ஏன் இந்த நிலை?

உலகப் புகழ் பெற்ற IBM வாட்சனும், Dell கம்பெனி முதலாளியும், Bill Gates-ம், பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும், வின்ஸ்டன் சர்ச்சிலும், காந்திஜியும் இதே பாஷையைப் பேசினால் எப்படிப் பிரச்சனை தீரும். யார், ராஜா நிர்வாணமானவர் எனக் கூறப் போகிறார்கள். அன்னையை மூன்று தலைமுறையாய் அறிந்தவர் வீட்டில் 30 படம் வைத்திருப்பவருக்கு 10 ஆண்டான பிரச்சனையை அன்னையிடம் கூறத் தோன்றுவதில்லை. ஏன்? ஏன் என்பதைவிட இனி அத்தவற்றைச் செய்யக்கூடாது என்று கூற முடியுமா? இன்று நினைக்க முடியுமா?

சிறுவர் 1 நிமிஷத்தில் 118 முறை சுடும் துப்பாக்கியுடன் விளையாட ஆசைப்படுவதை அடிப்படை மனித உரிமை என்று கொண்டு ஆண்டில் சில முறை பலர் சுட்டுக் கொல்லப்பட்டபின் “நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்ற அதிகம் படித்த மக்களிடையே அறிவுக்குரிய செயலைப் பேசாமலிருப்பது அறிவுடை செயல். எவரும் தம் சொந்த வாழ்வில் அவரைச் சுற்றி அதுபோன்ற 10 பிரச்சனைகளைக் காண்பர். தன் சொந்த விஷயத்தில் 20-ஐக் காண்பர். உலகில் இதுபோன்ற பெரிய பிரச்சனைகள் பல உண்டு. அங்குத் தேவைப்படுவது சிந்தனை, தீர்வு இல்லை. செயல் அணுகுண்டை என்ன செய்வது எப்படிச் செய்வது யார் செய்வது என்பவை விதண்டாவாதமானவை. செய்ய முடிந்ததை க்ஷணம் தாமதிக்காமல் செய்வது அறிவுடமை. பெர்லின் சுவர் அழிந்ததை அறியாத உலகம் அணுகுண்டை ஒழிக்க வழி கேட்பது ஆச்சரியமில்லை.

விஞ்ஞானம் முன்னேறும்பொழுது அறிவும், செல்வமும் அபரிமிதமாக முன்னேறின. விஞ்ஞானம் மனத்தின் செயல். மனம் இரண்டாகப் பிரிந்து செயல்படும். விஞ்ஞானத்தால் வரும் செல்வம் இரு முனைகளில் பெரும் செல்வமாகவும் அதற்கெதிரான ஏழ்மையாகவும் பலன் தரும். ஆன்மிகம் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் செல்வம் உலகில் அனைவரும் பெறும்படி உற்பத்தியாகும். அத்துடன் ஆன்மிகச் செல்வம் அனந்தமானதால் விஞ்ஞான செல்வத்தை அது அளவுகடந்து தாண்டிச் சென்றது. பூமி சூடாவதை ஆன்மிகம் தடுக்கும். விஞ்ஞானம் இன்றுவரை அதற்குரிய விடையை எழுப்பவில்லை. பிரச்சனையைத் தீர்க்க விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்கிறது. ஆராய்ச்சியெனில் ஒன்றைப் பலவாகப் பிரித்து சிந்தனை செய்வது. ஆன்மிகம் தொகுத்து உணர்கிறது. அமெரிக்கர் இன்று உலகை ஆள்வது அவர்கள் செல்வம் பலமானதாக இருப்பதால். வாழ்வில் அனந்தத்தைக் கண்டதால் அமெரிக்க வாழ்வு இன்று செல்வம் நிறைந்ததாக இருக்கிறது.

ஆன்மிக முறைகள் அனைத்தும் அனந்தத்தைக் காணும் முறைகள். மெஷினைப் பின்பற்றினால் உள்ள வேலைகள் அழிகின்றன. மனிதனைப் பின்பற்றினால் மனித வாழ்வு ஆன்மிக வளம் பெறும். ஆதி மனிதன் விழித்த நேரம் எல்லாம் வேலை செய்தான். நாமறிந்தவரை மனிதன் 12 மணி, 14 மணி வேலை செய்தவன் இப்பொழுது 8 மணி வேலை செய்கிறான். 8 மணி 3 மணி 1 மணியானால் நாகரிகம் வளரும், பண்பு செழிக்கும், மனவளம் அதிகப்படும். மனிதன் பிறந்த பயனடைவான். ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஏராளமான பணம் உற்பத்தி செய்து 1% மக்கள் உலகில் அனைத்துச் செல்வத்தையும் பெற்றுள்ளனர் எனப் பேசுவது அறிவுக்குப் பொருத்தமானது.

ஓலையும் எழுத்தாணியும் போய் பேனாவும் பேப்பரும் வந்தது நாகரிகச் சின்னம். அதை மனிதன் மறுக்கவில்லை. கோடிக்கணக்கான பனைமரங்களை வளர்த்து ஓலையையும் எழுத்தாணியையும் மனிதன் போற்றவில்லை. விஞ்ஞானம் economic நோபல் பரிசு தருவது அதுபோன்ற செயல். அறிவுக்குப் புறம்பானது. விவசாயம் உணவு தந்தது. 6 மாத ஓய்வளித்தது. வியாபாரம் மனித வாழ்வை விசாலப்படுத்தியது. பணத்தை உற்பத்தி செய்தது. உணவைத் தானே உற்பத்தி செய்த மனிதனைப் பணம் என்ற புதிய ஒன்றை உற்பத்தி செய்ய வியாபாரம் உதவியது. பணம் நாகரிகச் சின்னம். கல்வி, கலை, இலக்கியம், நாடகம், பண்பு ஆகியவை எழ உதவியது பணம். பாங்க் அதை அதிகமாக வளர்த்தது. அதுவே மனிதனுக்குரியது.

உலகில் அபரிமிதமான இயற்கை அமைப்பு காற்று. நமக்குத் தேவையானது சிறிதளவு. உள்ளது பெருமளவு. மனிதன் பயன்படுத்தும் பணம் அளவில் சிறியது. உலகில் “வெளிப்படாத” பணம் அளவுக்குட்படாது. உலகம் அதை இன்று அறியவில்லை. “கல்லாதது உலகளவு” என்பது பணத்திற்கும் வாய்ப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் பெரிதும் பொருந்தும். கடற்கரையில் வாழ்பவனும் வீடுகட்டி நான்கு பக்கமும் சுவரால் அடைத்து Fan போட்டு காற்றை அனுபவிப்பது நம் இன்றைய நிலை. மொட்டை மாடியில் இயற்கையாக வீசும் காற்றை எல்லோரும் அனுபவிப்பதில்லை. ஏழை நாடுகளில் பணமில்லையென்பதும் மேலை நாடுகளில் வேலையில்லை என்பதும் சூழல் சூடு வளர்க்கிறது என்பதும் மனிதன் தன் அறியாமையை பல்வேறு கோணங்களில் அனுபவிப்பதாகும். இவை அர்த்தமற்ற அறியாமை. நமக்கு எதைச் செய்வது எனத் தெரியாது. முடிந்ததைச் செய்வோம். பிரியமானதைச் செய்வோம். போன் வந்து 50 ஆண்டானபின் போனில் பேச விருப்பப்படாத பேரறிஞர்களை உலகம் அறியும். அறியாமை அனைவருக்கும் உரியது. அறியாமையை அற்புதமான தெய்வமாக வர்ணித்து வழிபட்டு அளவுகடந்து அப்படிச் செயல்பட்டு கஷ்டம் வந்து கெட்டது தீர்க்க முடியாத பிரச்சனையிருக்கிறது என்று மனிதன் ஓலமிடுவது நாகரிகமாகாது. உடனே மனிதன் கைவிட வேண்டிய காரியம். அதை இன்று உயர்ந்த உலக மேடைகளில் கூற எவருக்கும் தைரியமில்லை. கூறினால் துப்பாக்கியால் அறிஞர்கள் சுடுவார்கள்.

குலுக்குசீட்டு, லாட்டரி, இன்ஷுரன்ஸ் ஆகியவை பலருடைய வலிமை ஒருவருக்குப் பயன்பட ஏற்பட்ட முறைகள். லாட்டரியில் பலன் ஒருவருக்கே வரும். அது சான்ஸ். குலுக்குச்சீட்டில் பலன் அனைவருக்கும் வரும். ஒரே சமயத்தில் வராது, ஒன்றன்பின்னால் ஒன்றாக வரும். இன்ஷுரன்ஸில் நஷ்டம் ஈடு செய்யப்படும். நஷ்டம் வராதவரை இலாபமில்லை. வீடு கட்டும் சொஸைட்டி என்பதும் இதுபோன்ற ஒரு திட்டம். ஆனால் அங்கு எல்லோருக்கும் முடிவான பலன் சேர்ந்தவுடன் கிடைக்கும். எப்படி? முதல் மூன்று முறைகளும் பயன்படுத்துவது அவர்களுடைய பணம். அதற்கு அளவுண்டு. அதனால் ஒன்றன்பின் ஒன்றாய் வருவது நஷ்டம் ஏற்பட்டால் மட்டுமே பலன் பெறுவது. ஒருவருக்கு அனைவர் பணம் போகும் நிலை. வீடு கட்டும் சொஸைட்டி திட்டத்தில் 1000 பேரிருந்தால், கோடி பேருள்ள சமூகம் 1000 பேருக்கு உதவ முன் வருகிறது. அடுத்த உயர்ந்த நிலையான சமூகம் சிறிய சொஸைட்டிக்கு உதவ முன்வருவதால் அளவுகடந்த உதவி அனைவருக்கும் காலதாமதமின்றி கிடைக்கிறது. விஞ்ஞானம் மனித அறிவால் மனித குலத்திற்கு உதவுவது குலுக்குச்சீட்டு போல் அமைகிறது. ஆன்மிகம் மனித நிலையைவிட உயர்ந்தது என்பதால் அதன் உதவி அளவு கடந்தது. அத்துடன் அது கடனைச் சொத்தாக மாற்றவல்லது. சீட்டு, இன்ஷுரன்ஸ் உள்ளதைக் காப்பாற்ற உபயோகப்படுத்த முயல்வது. வீடு கட்டும் திட்டம் (creative and productive) மனையை வீடாக மாற்றுவதால் மனைக்கு இல்லாத விலையைப் புதியதாக ஏற்படுத்துகிறது. நான்கு லட்ச ரூபாய்க்கு வீடு கட்ட ஆரம்பத்தவர் வீட்டைக் கட்டி முடிக்கும்பொழுது அதனை நான்கு லட்சத்திற்கு மேலும் மதிப்பிடுவார்கள். அது ஆறு லட்சமாகவும் மாறும் பத்தாகவும் உயரும். இது ஆன்மிக சட்டத்தின் அற்புதம்.

கடன் வாங்கி கொடுக்க முடியாதவர் தம் மனநிலையை மாற்றிக் கொண்டால், கடனளவு சொத்து சேரும் என்பது இந்த அம்சத்தால் எழுவது. செல்வம் மனநிலையைப் பொறுத்தது. செல்வத்தை மட்டும் பொறுத்ததில்லை. மனத்தை மட்டும் பொறுத்ததில்லை. மனநிலையைப் பொறுத்தது. நிலை தாழ்ந்திருந்தால் கடன் எழுகிறது. நிலை உயர்ந்திருந்தால் கடன் சொத்தாக மாறும்.

சூழல் பாதிக்கப்படுவது தாழ்ந்த மனநிலையால் ஏற்படுவது. பெட்ரோல், கரி பயன்படுபவை. நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அது சுயநலமான மனப்போக்கு. பரநலமான மனப்போக்கு அதற்கு எதிரானது. கரியை எரித்தால் புகை எழும். சூழல் கெடும். மின்சாரத்தைப் பயன்படுத்தினால் சூழல் அந்த அளவுக்குக் கெடாது. சூழலின் நிலை உயர நாம் என்ன செய்யலாம் எனக் கருதினால், மனிதனுக்கு வசதி செய்வதாக அமையும். எலக்ட்ரிசிட்டி எலக்ட்ரானிக்ஸ் ஆனால் செல்போன் கட்டணம் குறையும். சூழல் அமைதியாக அழகாக இருக்க நினைப்பது ஆன்மிகப்போக்கு. அது மனித மனநிலையை உயர்த்தும். மனநிலை உயர்ந்தால் சூழல் கெடாது, உயரும். ரோடு போட்டால் வசதி வரும். தென்னை மரத்தை ரோடு ஓரத்தில் நட்டால் தோப்பில் உள்ள மரத்தைவிட அதிகமாகக் காய்க்கும். மனிதனுக்குச் செய்யும் வசதி, அவன் மனநிலையை உயர்த்தி அதனால் சூழலை உயர்த்துவது என்பது ஆன்மிக சட்டம். Lord of Snow, Fir மரங்கள் நட்டவுடன் அவ்விடம் தேடி வருவது போல், மனம் ஆத்மாவில் உறைவதால் மனநிலை உயரும் பொழுது ஆத்மா அதிகமாகச் செயல்பட்டு சூழல் கெடுவதைத் தடுத்து, சூழலை உயர்த்தும். சுத்தமான ஊர்களில் வியாதி வருவதில்லை என்பதை இந்தத் தத்துவப்படி அறியலாம். மனிதனைக் கருதி, மெஷினை இரண்டாம் பட்சமாக்கினால், அளவு கடந்து வேலை உற்பத்தியாகும். வேலையில்லை என்ற நிலை எழாது. ஆங்கிலேயரால் இந்தியா கல்வி, போக்குவரத்து, சுத்தம், சுகாதாரம் பெற்றதை சாதகர்கள் எடுத்துக் காட்டிய பொழுது பகவான் அவையில்லாமலிருப்பதே நமக்கு உயர்வு என்றார். ஆன்மிக உயர்வுக்கு அந்த முக்கியத்துவம் உண்டு.

1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த ஆண்டு ஜனவரி மாதம் பெரியவர்கள் பேசும்பொழுது “சுதந்திரம் வருமா? அப்படி வந்தால் நம் வாழ்நாளுக்குள் வருமா?” எனப் பேசினார்கள். கோர்பஷாவும் Kohl-உம் பெர்லினைப் பற்றிப் பேசியது போன்றது இது. நேருவும் பட்டேலும் காந்திஜி பேச்சைத் தட்டினர் என்பதை அதுவரை எந்த இந்தியனாலும் நம்பியிருக்க முடியாது. March 22-க்குப்பின் அது நடந்தது. இந்திய வைஸ்ராயை எவரும் Your Excellency என்றே அழைப்பார்கள். ஓராண்டுக்கு முன் நேரு 1946-இல் சிங்கப்பூர் போன பொழுது மௌண்ட்பேட்டனை முதலில் சந்தித்தார். அவர் பெயர் ஃணிதடிண். நெருக்கமானவர்கள் Dicky என அழைப்பார்கள். காங்கிரஸில் நேருவை ஜவஹர் என அழைப்பவர் அவருக்கு மூத்தவரான காந்திஜி, பட்டேல், ஆசாத், பிரசாத், ராஜாஜி, B.C. ராய் மட்டுமே. மௌண்ட் பேட்டனுக்கு 38 வயது. ஆங்கிலேயர் என்பதால் ஜவஹர்லால் என சிங்கப்பூரில் சந்தித்ததிலிருந்து அழைப்பது அவர் பழக்கம். அதுவரை காங்கிரஸ் தலைவர்களுக்கும் வைஸ்ராயிற்குமிடையே பரஸ்பர சுமுகமான நம்பிக்கையில்லை. அரசியல் அதற்கு வழி செய்யாது. Dicky, ஜவஹர்லால் என வைஸ்ராயான பிறகும் இருவரும் ஒருவரையொருவர் அழைத்ததால் நம்பிக்கை   மிக நெருக்கமாயிற்று. சர்க்கார், அரசியலில் இப்படிப் பழக முடியாது. சர்க்காரும், அரசியலும் விஞ்ஞானம் போன்ற துறைகள். நட்பு ஆன்மிகமயமானது. ஆன்மிகம் புது வழியை உற்பத்தி செய்து குறுகிய காலத்தில் சுதந்திரம் வந்தது. பிரம்மத்தை அறிந்தால் எதையும் அறியலாம் என்பது உபநிஷதம். அது அக்ஷர பிரம்மம், அசையாதது. விஞ்ஞானம் அது போல் பேச வழியில்லை. அக்ஷர பிரம்மமும், க்ஷர பிரம்மமும் இணைந்து முழுப் பரப்பிரம்மமாவதை பகவான் கூறுகிறார். பரப்பிரம்மத்தை அறிந்தால் எதையும் செய்யலாம் என்று நாம் இப்பொழுது அறிவோம். இன்று வெனிசுலாவில் விஞ்ஞானிகளை துன்புறுத்துகிறார்கள் எனச் செய்தி. விஞ்ஞானி உலகில் முன்னோடி. அவனை சமூகமோ, சர்க்காரோ துன்புறுத்தினால் அது முன்னோடியான இலட்சியங்களைப் பாதிக்கும். உலகெங்கும் எதிர்ப்பு எழுகிறது. இதனுள் ஓர் உண்மையுள்ளது. அது பேருண்மை. எந்த உயர்ந்த இலட்சியமும் உயர்வாக இருக்கும்வரை அதற்கு இறைவனின் பாதுகாப்புண்டு. பெரும் இலட்சியம் தன்னிலையினின்று இழிந்தால் அது சமூகத்தால் தாக்கப்படும். மதக்கோட்பாட்டின் மூட நம்பிக்கைகளை எதிர்த்து எழுந்தது விஞ்ஞானம். அதுவே அதன் பெருமை. பெருமை பிரபலமானபின் வழக்கம்போல் மூடநம்பிக்கையை எதிர்த்த விஞ்ஞானம் மூட நம்பிக்கையின் உறைவிடமாகும். பல ஆண்டுகளாக இம்மாறுதல் கொஞ்சம் கொஞ்சமாக எழுவதால், இன்று வெனிசுலாவில் இந்த நிலை. இதை எதிர்கொள்ளும் விஞ்ஞானிகள் தங்கள் இலட்சியத்தை சோதனை செய்து மூட நம்பிக்கைகளை அகற்றினால் விஞ்ஞானமும், விஞ்ஞானிகளும் விடுதலை பெறுவர்.

வாழ்வின் பிரச்சனை களையெல்லாம் விஞ்ஞானியால் தீர்க்க முடியும். இன்று அவனுள்ள நிலையில் அவனே அவனுக்கும் பிரச்சனை யாகிறான். வாழ்வு உடலாலும் உயிராலுமானது. விஞ்ஞானம் அறிவின் கருவி. சிறியலோக உடல், உயிர் எழுப்பும் பிரச்சனையை பெரியலோக அறிவு எளிதில் தீர்க்கலாம். விஞ்ஞானம் அறிவுலகக் கருவி. பெரியது ஓரளவு குறையானால் எதிராக மாறும் என்ற இரஸவாத சட்டம் உலகில் செயல்படுவதால், விஞ்ஞானம் மூட நம்பிக்கையை சிறிதளவு பாராட்டினாலும் சிறுலோகப் பிரச்சனைகளையும் தீர்க்கும் திறனிழந்து விடுகிறது. விஞ்ஞானம் பெரியது. ஆன்மிகம் அதைவிடப் பெரியது. விஞ்ஞானம் தீர்க்க முடியாத பிரச்சனைகளை ஆன்மிகம் தீர்க்கும். விஞ்ஞானம் தீர்க்கும் பிரச்சனைகளை ஆன்மிகம் அதைவிட எளிமையாகத் தீர்க்கும். சிறுநீரகக்கல்லை பிரார்த்தனை கரைத்தது அது போன்றது.

வாழ்க்கையில் பிள்ளைகள் பெரிய வாய்ப்பு. அத்துடன் மாபெரும் தலைவேதனை. மேல் நாட்டாருக்கு பிள்ளைகள் சிம்ம சொப்பனம். அற்புதமான மகனை படித்த பெற்றோர் புரிந்து கொள்ள முடியாமல் வேதனையுற்றனர். எந்த விஞ்ஞானமும் விளக்கமுடியாத விடையை ஆன்மிகம் கூறுகிறது: “நீயே உன் மகன். அவன் திருந்த வேண்டுமானால் நீ திருந்த வேண்டும்.” இது அற்புதமான விடை. விஞ்ஞானத்திற்கு இந்தப் பிரச்சினை என்னவென்றே விளங்கவில்லை. இதை ஏற்றுப் பலன்பெற பூரணயோகத்தை ஏற்க வேண்டும். மேலும் கூறவேண்டுமானால் மகனுக்கு தன்னையறியுமுன் தன் பெற்றோரை அறிய வேண்டும். இந்த ஞானம் இன்று உலகில் இல்லை. எலிசபெத் விக்காம் சொன்ன அவதூற்றை நம்பினாள். டார்சியின் நடத்தை அதற்குதவியது. ஆனால் டார்சி அவளுடைய தவற்றுக்கு அவள் பெற்றோர் எப்படிப் பொறுப்பு என்பதை எடுத்துக்காட்டியதை அவளால் பெரும் போராட்டத்திற்குப்பின் ஏற்க முடிந்தது. டார்சி தன் பெற்றோரால் சுயநலமாக வளர்க்கப்பட்டதை அறிந்து எலிசபெத் கூறிய உண்மையை ஏற்க முன் வந்ததால், அவன் மனம் மாறி தாயார், தந்தையை அறிய முடிந்தது. Pride and Prejudice-ஐ நாவல் என நாம் அறிகிறோம். உலகில் அறிவு பகுத்தறிவாக வளர்ந்து ஓரிருவரில், அதுவும் ஒரு பெண்ணில் அழகான காதலன் விஷயத்தில் அது செயல்படுவது, இந்த நாவல் an epoch making piece of literature சமூகம் மனவளர்ச்சி பெற்றதை சுட்டிக் காட்டும் இலக்கியமாகத் திகழ்கிறது என்று கூறலாம். குழந்தை வளர்ப்பிலும், கல்வி முறையிலும் விஞ்ஞானம் உலகுக்கு அளித்தவை ஏராளம். ஆனால் விஞ்ஞானத்தால் அளிக்க முடியாத அம்சங்கள் பல உள்ளன. இது மனித சுபாவத்தைப் பற்றிய உண்மைகள். விஞ்ஞானம் இத்துறைக்கு வரவேயில்லை.

தவறு செய்பவனை மக்கள் தலைவனாகப் பெறுவது அதிசயம். அவன் செய்த தவற்றை அதிகமாகச் செய்யும் பொழுது அவனை மேலும் பாராட்டி அமோகமாக ஆதரிக்கும் சுபாவத்தைப் பற்றி விஞ்ஞானம் நினைக்கவேயில்லை. ஆன்மிகம் அதை அஞ்ஞான ருசியெனக் கூறுகிறது. ஆச்சரியத்தை எழுப்பும் வீரச்செயலுக்கு (Surprise and Adventure) அஞ்ஞானம் அரங்கமாக இருப்பதால், ஆத்மா அவற்றை நாடியது என பகவான் கூறுகிறார். கொடுமை செய்தவரை விட்டகன்று வாழ்வில் பெரும் அளவுக்கு உயர்ந்தவன் அதே கொடுமையை அதே உறவினர்களிடம் தொடர்ந்து அதிகமாகப் பெற முயல்வது மனித சுபாவம்.

எட்மண்ட் டாண்டே ஜெயிலை விட்டு வந்து, மெர்சடஸ் பெர்ணான்டை மணந்து பிரபுத்துவ வாழ்வை நடத்துவதைக் கேட்டு வெலவெலத்து விட்டான். அவள் தெளிவானவள், சிறந்தவள், உன்னதமான குணம் படைத்தவள், உயர்ந்த நடையுடைபாவனையுடையவள். இயல்பாக மகாராணி போன்ற சுபாவம் உடையவள். அவள் மனம் பெர்ணான்ட் போன்ற அயோக்கியனால் புண்படவில்லை. டாண்டேக்கு கணவன் செய்த துரோகத்தைக் கேட்டு அவனுடைய பெரும் பணத்தை 1.3 மில்லியன் பிரான்க்கை தொட மறுத்தவள் புனிதவதி. பெண்மையின் அவ்வுயர்ந்த மனமும் கணவனின் துரோக மனப்பான்மையால் கசந்து புண்படவில்லை என்பது பெண்ணின் சுபாவம். டாண்டே வெள்ளை மனமுடைய திண்மையான தூய இளைஞன். அவன் திறனும் திண்மையும், தூய்மையும் நாடியது பெண்ணின் பிரியம் என அவன் தீர்க்கமாக நம்பினான். அவன் நாடியது உச்சகட்ட அறிவு, அதற்குரிய அந்தஸ்து. அதைத் தன் தகுதியால் பெறும் பெண் அரேபியாவில் பிறந்திருப்பதை அவன் அறியவில்லை. அவன் மனத்தூய்மைக்கு உரியவள் தூய்மையின் பிழம்பான அரசகுமாரி என அவனுக்குத் தெரியவில்லை. இவை ஆன்மிக விளக்கங்கள்.

விஞ்ஞானத்திற்கு மனித சுபாவமும், இலக்கியமும், வரலாறும் இன்று விலக்கு. இவை விஞ்ஞானத்துள் வந்தால் துறை வளம் பெறும். ஆழ்ந்து முதிர்ந்து அகன்று உயரும். ஞானம் முழுமையடையும். இன்றைய மனநிலையில் விஞ்ஞானி விஞ்ஞானத்தை டெக்னாலஜியாகக் கருதும் நிலை உருவாகி வேரூன்றும் பக்குவத்தை நாடுகிறது. விஞ்ஞானம் பகுத்தறிவைக் கேலி செய்து மூட நம்பிக்கையின் மகுடமாகப் பெருமைப்படுகிறது.

**********

ஜீவிய மணி

உதவி பழைய கருத்து, தீட்சை பழைய மரபு. உதவியை அன்னை தீட்சையாகப் பெற்றால் பெற்றவர் ஜீவன் பிரபஞ்ச ஜீவனாகும். அன்னையின் அருளுக்குக் கருவியாக இருந்தவர் பிரபஞ்சமாகிறார். அன்னை பக்தி எண்ணத்தை நல்லெண்ணமாக்கும். மனிதனுக்குப் பொதுவாக நல்லெண்ணமிருப்பதில்லை என்பது மனித சுபாவத்தை அறிந்தவர் கூறுவது. எண்ணம் என்பதே கெட்ட எண்ணம் என்பது அன்னை கூறுவது. நல்லெண்ணமுள்ளவரும் உண்டு. அவருக்கு உதவிசெய்யும் வாய்ப்பு நல்லெண்ணத்திற்குச் சேவை செய்யும் வாய்ப்பாகும். அந்தச் சேவை பிரபஞ்ச லோகத்திற்குரியது. கிருஷ்ண பரமாத்மா சாப்பிட்ட ஒரு பருக்கை அனைத்து அதிதிகளின் பசியைப் போக்கியது. நல்லெண்ணமுள்ளவர்க்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைப்பதே அருள். அவர் மனம் உவந்து பெற்ற ஒரு மணி அரிசி கொடுத்தவர்க்கு ஒரு மூட்டை அரிசியைப் பெற்றுத்தரும். நடைமுறையில் பல மூட்டை அரிசி விளையும் பல ஏக்கர் நிலம் வரும். வியாபார உலகில் இந்த அம்சம் செயல்படுவதைக் காணலாம். ஒரு பிரபலம் பெற்றவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து அவர் பெயரை விளம்பரத்திற்கு ஏற்றவர் பல ஆயிரம்கோடி பெறுகிறார்.

பழையதும் புதியதும் இணையும் ஆன்மிக சட்டமிது.

*********



book | by Dr. Radut