Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

121. செய்த தவற்றிற்குப் பரிசு கிடைத்தால் அவருக்கு யோகம் பலிக்கும்.

  • இது ஆபத்தான சொல். ஏனெனில் இதைக் கண்டவுடன் மனிதன் தவறு செய்ய ஆரம்பிப்பான். அது சரியில்லை. அதுவும் முடிவில் தண்டனையாகாது.
  • சரி X தவறு என்பது மனித மனப்பான்மை.
  • மேற்சொன்னபடி ஒருவர் தம் வாழ்வில் கண்டால், அவர் உள்ளத்தில் மனித நிலையைக் கடந்தவர், புறச்செயலில் மனித மனநிலையை விட முடியாதவர்.
  • பெரிய எழுத்தாளர்கட்கு இந்தப் பக்குவம் உண்டு.
  • லூசி 19 வயது சிறு பெண். அழகி எனக் கூற முடியாது. துடியாக இருப்பாள். துடி எனில் காலம் கனிந்து கன்னியாகும் துடிப்பு. சொத்து இல்லை. லுப்டனுடன் தமையன் வேலை செய்கிறார். லுப்டனுக்கு லூசியைப் பெண் எனப் பிடிக்கும். தனிப்பட்ட ஆசை, அன்பு, பிரியம், காதல் போன்ற உணர்ச்சிகளை அறியாதவன். சந்தர்ப்பத்தால் அவளை மணக்கும்படி கேட்கிறான். லூசிக்கு அத்திருமணம் ஆபத்து என்பதுடன், இளைஞன் இளைஞனாகப் பேசுவதையும் அறிந்து தன் ஆழ்ந்த ஆசையையும் மீறி மறுக்கிறாள். மறுப்பு விருப்பாகிறது. மீண்டும் கேட்கிறான். லூசிக்குப் புரிகிறது. இந்த ஆசை அரைமணிக்கு மேல் நீடிக்காது எனப் புரிகிறது. உள்ளபடி மறுக்கிறாள். ஆனால் அவளுக்குப் “புரிகிறது”. அவள் மறுத்ததால் வேகம் வந்து லுப்டன் அவள் மறுப்பை மீறி மணக்கிறான். மணமானபின் “ஏன் என்னை மறுத்தாய்?” எனக் கேட்கிறான். “அது உங்களுக்கும் சந்தோஷம் கொடுத்ததை அறிவேன்” என்றாள்.
  • சரி, தவறு செயலிலில்லை, மனத்தில் மட்டும் உண்டு.
  • மனத்தை மனிதன் கடந்தவனில்லை. கடந்ததாக நினைப்பவர் பலர்.
  • இது போன்ற ஆபத்தான சொற்களைப் பதிலாக வரவழைக்க சாதகர்கள் பகவானைக் கேள்வி கேட்டால், அவர் கூறும் பதில் அமர இலக்கியமாகும். நான் இதை எழுத மாட்டேன். 1938-இல் பகவான் சாதகர்களுடன் பேசும்பொழுது “அசுரர்கள் இனி தேவையில்லை” என்றார். அன்னையின் கணவர் ரிச்சர்ட் இரு உலகப் போர்களை எழுப்பிய சக்தி. 1914-இல் பகவான் அவருக்குக் கொடுத்த மௌனத்தை ஓலமிட்டு உதறி விட்டார். “எனக்கு அப்பொழுதெல்லாம் பொறுமையில்லை” என்றார். ரிச்சர்ட்டும் மௌனம் பெற்று திருவுருமாறலாம் என்ற வாய்ப்புண்டு என இந்நிகழ்ச்சி காட்டுகிறது.
  • தவறு செய்து பூரண யோக வாயில் திறந்தால் முதற்காரியமாக செய்த தவற்றை, தவறான மனநிலையை கடந்தகால சமர்ப்பணத்தால் திருவுருமாற்ற வேண்டும். தவறினால் அது ஆழத்திலிருந்து எழுந்து வந்து தன் “சொரூபத்”தைக் காட்டும் நேரம் தவறாது வரும்.
  • கடந்தகால சமர்ப்பணம் பகவானோ, அன்னையோ முக்கியமாகக் கூறாதவொன்று.
  • அவர்கள் தியானத்தையே முக்கியமாகக் கருதவில்லை.
  • Sincerity உண்மை. சமர்ப்பணம், ஆழ்ந்த மனம் விழிப்பதே அவர்கட்கு முக்கியம். அவை முடியாதவர்க்கு கடந்த கால சமர்ப்பணம் பேருதவி செய்யும்.

     

    *********

    ஸ்ரீ அரவிந்த சுடர்

    கேள்வி எழும் வரை செயல்படுவது மனம். கேள்வி எழாவிட்டால் செயல்படுவது சத்திய ஜீவியம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ சத்திய ஜீவியம் செயல்பட்டால் கேள்வி எழாது.

    ********



book | by Dr. Radut