Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/28. கேட்டுப் பெறுவது பலன்
கேளாமல் பெறுவது அருள்
கேட்க முடியாதவன் பெறுவது இறைவ
ன்.

  • கேட்பது இயல்பான செயல், கேட்டது கிடைப்பதும் இயல்பான செயல். அது நாமறிந்த ஊரின் செயல்.
  • யார் யாரை, எதை, எப்பொழுது, ஏன் கேட்பது என்ற சட்டம் வழங்குகிறது.
  • கேட்டுப் பெறுவதை இனிய செயலாக்கும் ஊர் உண்டு. நட்புண்டு. ஒருவர் கேட்டதைக் கொடுக்க முடியவில்லை என மனம் புழுங்கும் பண்புள்ள மக்கள் உள்ள ஊர் அது.
  • மேடையில் பேசுபவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லப் பிரியப்படுவார். பதில் சொல்ல முடியாதது வருத்தம்.
  • கேட்கக் கூடாததைக் கேட்பவரும் உண்டு. அது எந்த ஊருக்கும் புதியது. அரிபொருளாக இருக்கும்.
    அத்தை மகன் “உன் வீட்டை எனக்குக் கொடு” என்றார். வந்த விருந்தாளி “உங்கள் காரை எனக்குக் கொடுங்கள்” எனக் கேட்டுப் பெற்றவன் தரவில்லை.
    டிராலப் கதையில் பிரபுவிடம் ஏழை வந்து “உங்கள் சொத்தையும் பெண்ணையும் கொடுங்கள்” என்றான். கேட்டவர் உயிர் பிரிந்தது.
    மானேஜராக நியமிக்கும்பொழுதே “இந்தப் பாக்டரியை எனக்குத் தர வேண்டும்” என மூவரைக் கேட்ட பெரிய உள்ளமுடையவர் ஒருவர்.
    இவை உலக நடைமுறைக்கும் பண்பிற்கும் புறம்பானவை.
    ஆனால் அரிதாகக் கண்ணில் படும்.
  • அமெரிக்கர் ஒருவர் இங்கு வந்து சில மாதம் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க வட நாட்டார் ஒருவர் வந்தார்.
    அமெரிக்கருக்கு வந்தவரைத் தெரியவில்லை
  • “என்னை உங்களுக்குத் தெரியாது. அது பாதகமில்லை
  • அடுத்த முறை வரும்பொழுது எனக்கு ரேடியோ வாங்கி வர வேண்டும். என் மனைவி டேப் ரிக்கார்ட் கேட்கிறாள். மகனுக்கு வாட்ச் வேண்டும்” என்றார். அமெரிக்கர் அதிர்ந்து போனார். இதன் மூலம் அந்த அமெரிக்கர் இந்தியர்களை “அறிந்தார்”.
    நாடு இப்படியில்லை. ஆனால் ஒருவர் செய்வதும் உலகைப் பாதிக்கும்.
  • ஹோட்டல் மூலையில் கடைசி பெஞ்சில் தனியாக வந்து உட்கார்ந்தவர் போண்டா சாம்பார் சாப்பிடுவார் என அறிந்து கேட்காமல் கொண்டு வரும் சர்வர் சீக்கிரம் முதலாளியாகி விடுவான்.
  • வீடு கேட்டுப் பெறும் இடமில்லை. கேட்காமல் வீட்டில் எதையும் பெறுவதால், கேட்கும் பழக்கமே அற்றுப் போகிறது.
  • மேல் நாட்டுப் பழக்கம் எதற்கும் விண்ணப்பிக்க வேண்டும். நோபல் பரிசுக்கும் நியமனம் தேவை.
    அதையும் கேட்க முடியாதவருண்டு, கேட்காமல் பெறுவதும் உண்டு.
  • அழுத பிள்ளை பால் குடிப்பதும் உலக வழக்கம்.
  • எலிசபெத் தன் திருமணத்தைப் பற்றி நினைப்பதைவிட அக்காள் திருமணத்தை நினைத்தாள், விரும்பினாள், உருகி வருந்தினாள்.
    டார்சி வந்து அவளை “என்னை மணந்து கௌரவிப்பாயா?” எனக் கேட்டபொழுது “என் தமக்கை திருமணத்தைக் கெடுத்தவனாயிற்றே” என்றாள்.
    லிடியாவுக்கு உதவி, திருமணம், விக்காமை நல்வழிக்குக் கொண்டு வருவது, அதற்குப் பணம் தேவை என்பவை எலிசபெத் அறியாதது. ஒன்றிரண்டு தெரிந்தாலும் பிறரைக்
    கேட்கத் தோன்றாது. தோன்றினாலும் அவளால் கேட்க முடியாது. அவள் கேட்கவில்லை.
    கேட்க நினைக்கவில்லை.
    அவள் பெற்றவை லிடியா திருமணம், விக்காம் வேலை, பிங்கிலி திருமணம் (அதாவது தமக்கை திருமணம்) தனக்குப் பெம்பர்லியுடன் டார்சி.
    அவளைப் பொறுத்தவரை அவை சொர்க்க லோகம்.
    கேட்காமல் கிடைத்தவை.
  • உலகம் நல்லெண்ணம் பெற்றதால் இன்ஷுரன்ஸ் வந்து தனிப்பட்டவர் அவதியை ஊர் காப்பாற்றுகிறது.
  • ஏழ்மையின் கொடுமையை அறிந்தவர் பதவிக்கு வந்தால், தன்னைப் போல் அவதிப்பட்ட மக்களுக்கு மான்யம், பென்ஷன், விதவைப் பென்ஷன் உத்தரவாகிறது.
  • வாழ்க்கை நல்லெண்ணத்தால் மனம் விரிந்தால் 1000 ரூபாய் பெறுமான ஏழையின் குடிசை ஐந்து இலட்சம் விலை போகிறது.
  • இறைவன் நம்மை இதமாக நினைப்பது அருள். அனுதினமும் நினைப்பது பேரருள்.
  • கேட்காதவர், கேட்க முடியாதவரைப் பேரருள் வலிந்து வந்து ஆட்கொள்ளும்.

**********

ஜீவிய மணி

முழுமுயற்சி அறிவுடைய நேர்மையானதானால் அன்றே பலன் தெரியும் என்பதை அனுபவிக்க முன்வர வேண்டும். இது அறிவின் பங்கு. உணர்வுக்குரிய பங்கு உத்தமமானது. அது நல்லெண்ணம். உயர்ந்த நல்லெண்ணம் மனிதனை உத்தமனாக்கும். நாமறிந்த அனைவரும் நாட்டிலுள்ள அத்தனை நல்லதற்கும் உரியவர். அவர் அதைப் பெறுவது என் அதிர்ஷ்டம் என்பது உயர்ந்த நல்லெண்ணம்.

*********



book | by Dr. Radut