Skip to Content

12. அன்னை இலக்கியம் - பார்வைகள்

அன்னை இலக்கியம்

பார்வைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

19. பூரணியின் பார்வை

களங்கமோ, குறையோ இல்லாத மனிதரை சந்தித்த சந்தோஷத்தோடு வீடு திரும்பினேன். அணையா விளக்கொன்று என் இதயத்தில் ஏற்றப்பட்டுவிட்டது போலிருந்தது.

‘என்னடி, முகமெல்லாம் சிரிப்பாக இருக்கிறது? யாரையாவது காதலிக்க ஆரம்பித்திருக்கிறாயா?’ என்று அம்மா கேட்டார்.

அம்மாவால் இப்படித்தான் பேச முடியும். சில வருடங்களுக்கு முன்னால் என்றால் சண்டை போட்டிருப்பேன். இப்போதெல்லாம் ஒருவர் எப்படி இருக்கிறாரோ, விமர்சனம் எதுவும் செய்யாமல் அவரை அப்படியே ஏற்றுக் கொண்டு முழுமையாக மதித்து நடக்கிறேன். அதனால் சந்தோஷம்தான் உண்டாகிறது. ‘ஏன் நான் காதலிக்கக் கூடாதா?’ என்று கேட்டேன்.

‘தாராளமாகச் செய். ஆனால் பணக்காரனாக, செல்வாக்குள்ளவனாக பார்த்து காதலி!’ என்றார் என் அம்மா.

‘நான் பிரம்மத்தைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பிரம்மத்தை விட பெரிய ஆள் யாராவது உனக்குத் தெரியுமா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

அம்மா குழப்பத்துடன் என்னைப் பார்த்தார்.

‘புத்தி கெட்டவள் போல பேசாதே. ஆனால் நீ சிரிப்பதைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. காலையில் நீ வீட்டை விட்டுப் போன வேகத்தைப் பார்த்தபோது திரும்பி வராமல் எங்கேயாவது போய் விடுவாயோ என்று பயந்துவிட்டேன்’ என்றாள் அம்மா.

காலையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரி வீட்டிற்கு வந்தார். பெயரெழுதிக் கொள்ளும் போது என் பெயரின் முன்னெழுத்தைக் கேட்டார். அம்மா ‘கே’ என்றார்.

‘அம்மா என் சான்றிதழில் ‘வி’ என்றிருக்கிறது’ என்றேன்.

‘சரி, ஏதோ ஒன்று. ‘வி’ என்றே போட்டுக் கொள்ளுங்கள்’ என்று அம்மா அதிகாரியிடம் கூறினார்.

என் மொத்த ஜீவனும் அவமானத்தால் சுருங்கியது. எதுவும் புரியாமல் அதிகாரி சென்ற பின் ‘அம்மா, நான் அநாதையாக இருந்திருக்கலாம்’ என்றேன்.

‘உனக்கென்னடி குறை? பழங்காலத்து இளவரசிகள்கூட உன்னைப் போல வளர்ந்திருக்க மாட்டார்கள்’ என்று கூறியபடி என் முகத்தைப் பார்த்தார் அம்மா. பயந்து விட்டார்.

நான் பதில் எதுவும் பேசாமல் வேகமாக வெளியேறி காரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றேன். வெயிலில் காய்ந்து உடலைச் சுடும் மணலில் அமர்ந்து கடலையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் மீண்டும் மீண்டும் பல உயரங்களில் எழும் அலைகளைப் போல என் மனதில் கேள்விகள் எழுந்து பதிலின்றி அடங்கி மீண்டும் எழுந்தன.

நான் யார்? ஏன் பிறந்தேன்? ஏன் வாழ்கிறேன்? என் எதிர்காலம் என்ன? எனக்கும் உலகிற்கும் என்ன உறவு? உலகம் என்பது என்ன? யார் அதை உருவாக்கியது? எதற்காக? அதில் என் பங்கு என்ன? எத்தனையோ காலமாக விரிந்து கிடக்கும் கடலையும், வானத்தையும் பார்த்ததும் என் அகம் விரிந்தது. கூடவே காலம் என்றால் என்ன? வெளி என்றால் என்ன? என்ற கேள்விகளும் எழுந்தன.

எனக்குத் தோழிகளோ, தோழர்களோ எவருமில்லை. என் அம்மாவோடு நகரத்தில் இருக்கும் எல்லா பெரிய மனிதர்களின் வீட்டு விசேஷங்களுக்கும் போவதுண்டு. இப்போது நிறுத்திவிட்டேன். எல்லோரும் மரியாதையோடு பழகுவார்கள். ஆனால் எவருமே நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள்.

அப்படியே நெருங்கிப் பழகியிருந்தாலும் எத்தனை பேர் என் நட்பை தொடர விரும்பியிருப்பார்கள்?

புதிய ஆடைகள், நகைகள், வீடு, கல்யாணம், குழந்தை, வேலை, சினிமா, ஊர் வம்பு திரும்பத் திரும்ப இவைதான் எவர் பேச்சிலும் இருக்கும். ஆழமான சிந்தனை எதுவுமில்லாமல் மேம்போக்காக இவற்றைப் பற்றிப் பேசிவிட்டு அப்போதே மறந்தும் விடுகிறார்கள். ஆனால் சந்தோஷமாக இருப்பது போல நடந்து கொள்கிறார்கள். எனக்கோ ஊர்வம்பைக் கேட்டால், புரளி பேச ஏன் மனிதன் விரும்புகிறான்? சமூக வளர்ச்சியில் அதற்கு பங்கு உண்டா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. இதனால்தா@னா என்னவோ, சில காலமாக நான் முழுக்க முழுக்க அகவயப்பட்டுவிட்டேன்.

பாவம், அம்மா மீது ஏன் கோபப்படுகிறேன்? தனக்கு அமைந்த வாழ்வை எதிர்ப்பெதுவுமின்றி ஏற்றுக் கொண்டு, அதன் போக்கில் செல்கிறார். தானும், நானும் நன்றாக இருக்க வேண்டுமென பிரியப்படுகிறார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார். ஆனால் எவருக்கும் கெடுதல் செய்யமாட்டார். எவரையும் புண்படுத்த மாட்டார். அவர் தன்னளவில் முழுமையானது என்று தான் நினைக்கும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறார்.

எவரையும் அவருள்ள நிலையில் ஏற்க வேண்டும் என்று விரும்பினாலும் அக ஆழத்தில் உள்ளவை சீண்டப்படும்போது நான் சினவயப்பட்டு விடுகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா.

மனம் நெகிழ்ந்து கனமிழந்து காற்றில் மிதக்கும் வெற்றுக் காகிதமாகியது.

மழைத்துளிகள் சடசடவென்று என் மீது விழுந்தபோதுதான் வெகு நேரமாக என்னை மறந்து கடற்கரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். மதியமாகி விட்டிருந்தது.

வீடு திரும்பும் வழியில்தான் துரியபுத்திரனை சந்தித்தேன்.

‘நீங்கள் சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது. வேறு சூழ்நிலையில் சிறிது காலம் இருந்தால் எனக்கு நல்லது என்று தோன்றுகிறது’ என்றேன் அம்மாவிடம்.

‘யாரடி உன் மனதைக் கலைத்தவன்?’ என்று அம்மா கேட்டார்.

அம்மாவிடம் நான் எதையும் மறைத்ததே இல்லை.

நான்தானே என் அம்மா?

‘துரியன் எதையும் கலைக்கவில்லை, சிதறிக் கிடந்த என் பகுதிகளை ஒன்று சேர்க்கும் வழியைச் சொன்னார்’ என்றேன்.

துரியனை சந்தித்த விவரங்களைக் கூறினேன்.

‘என்ன தொழில் செய்கிறான்? எவ்வளவு சொத்து தேறும்?’ என்று ஆர்வத்துடன் கேட்டார் அம்மா.

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நல்ல மனிதர். அநேகமாக உன் பார்வையில் அன்றாடங்காய்ச்சியாகத்தான் இருப்பார். ஆன்மீகவாதி. பூரணயோக சாதகர்’ என்றேன்.

‘ஆன்மீகமும் நல்ல தொழில்தான். மடமோ, ஆசிரமமோ ஆரம்பித்துவிட்டால் கோடிகோடியாக குவித்துவிடலாம். எனக்குத் தெரிந்த பெரிய மனிதர்கள் எல்லோரையும் அங்கே அனுப்பி வைக்கிறேன்’ என்றார் அம்மா.

‘அவர் ஆன்மீக முயற்சியை ஆண்டவனுக்காக செய்கிறார்’ என்றேன்.

‘பிழைக்கும் சாமர்த்தியம் இல்லாதவனாக்கும்?’ என்று எள்ளல் தொனிக்கும் குரலில் கேட்டார் அம்மா.

‘அம்மா, சமூகத்தோடு ஒத்து வாழ்பவர்கள்தான் பெரும்பாலானவர்கள். சமகாலத்துச் சூழலில் இருந்து கொண்டு, அதில் பிழைத்திருக்கத் தேவையான திறமைகளை மட்டும் வளர்த்துக் கொண்டு, பணமும் புகழும் சம்பாதிப்பதை வெற்றியாகவும், அதைச் செய்யாதவர்களை தோற்றவர்களாகவும் நினைக்கிறார்கள். தோற்றவர்கள் தங்கள் சுயத்தை, தனித்துவத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வென்றவர்களைப் போல வாழ்வது வெற்றி என்று நினைக்கிறார்கள். அது அவர்களது   சொந்த விருப்பம். சமூகத்தோடு ஒத்துப் போகாதவர்களில் ஒரு சிலர் சுய அழிவையும், சமூக அழிவையும் தரும் காரியங்களைச் செய்கிறார்கள். அவர்களது பலத்தைப் பொறுத்து, அவர்கள் மீது மற்றவர்கள் கொள்ளும் பயத்தைப் பொறுத்து வெற்றியும் பெறுகிறார்கள்’ என்றேன்.

‘உன் துரியன் எந்த ரகம்?’ என்று கேட்டார் அம்மா.

‘சமூகத்தோடு ஒத்துப் போகாதவர்களில் இன்னொரு பிரிவு இருக்கிறது. இவர்கள் சமூக முன்னேற்றத்தைப் பற்றி, மனித குலத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்கள். அதற்காக மட்டுமே உழைப்பவர்கள். பணமோ, புகழோ இவர்களுக்கு முக்கியமில்லை. ஆர்வமும், லட்சியமுமே முக்கியம். தாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை தாங்களே முடிவு செய்வார்கள். பெரும்பான்மையோரின் பார்வையில் இவர்கள் உதவாக்கரைகள், வீணர்கள், திறமையற்றவர்கள். ஆனால், சமூக வளர்ச்சியை, முன்னேற்றத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். கலைக்கும், தத்துவத்திற்கும், அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் தங்களை முழுமையாக சுயார்ப்பணம் செய்து கொண்ட இவர்கள் இடும் பிச்சையால்தான், பெரும்பான்மை பிழைத்திருக்கிறது. பெற்ற பிச்சை அகங்காரத்தைச் சீண்டுவதால், லட்ச ரூபாய் சம்பாதிப்பதை எளிய மூடன் பெரிய தகுதியாக நினைத்துக் கொண்டு லட்சியவாதிக்கு எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறான். துரியன் ஆன்மீக லட்சியவாதி’ என்றேன்.

‘லட்சியவாதிக்கும் பசி உண்டு, குடும்பமும், அதை நடத்த வருமானமும் அவனுக்குத் தேவை’ என்று சிறிது உரத்த குரலில் அம்மா சொன்னார்.

‘அப்படி நினைத்திருந்தால் ஸ்ரீ அரபிந்தோ பரோடா மகாராஜா தந்த வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்காக சிறைக்குப் போயிருக்க மாட்டார். மனைவி மிருணாளினியை விட்டுவிட்டு பாண்டிச்சேரிக்குச் சென்று உலக நன்மைக்காக பட்டினி கிடந்து யோகம் செய்திருக்க மாட்டார்’ என்றேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தார் அம்மா. பின் சாந்தமான குரலில் ‘நீ சந்தோஷமாக இருப்பதுதான் என் லட்சியம். உனக்குப் பிரியமானதைச் செய். நீ எப்போது சொல்கிறாயோ அப்போது துரியனைப் பற்றி விசாரித்துவிட்டு, திருப்தியாக இருந்தால், உனக்கும், அவனுக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என்றார் அம்மா.

‘அம்மா. நான் காதல் மயக்கத்திலோ, கல்யாண நினைப்பிலோ இல்லை. என்னுடைய ஆர்வம் ஆன்மீகத்திலும், யோகத்திலும்தான் இருக்கிறது. துரியன் அதற்கு வழிகாட்டி உதவுவார் என்று தோன்றுகிறது, எனக்கு வழிகாட்ட துரியனிடம் எதுவுமில்லை என்றால் அவராகவே என் வாழ்விலிருந்து விலகி விடுவார். வேறு வழிகாட்டி வருவார். அவரைப் பற்றிய வேறு எந்த எண்ணமும், சலனமும் என்னிடம் இல்லை. அவரிடமும் இருக்காது’ என்றேன்.

‘ஆண்களின் சஞ்சல புத்தியைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியவில்லை’ என்று முணுமுணுத்துக் கொண்டே அம்மா நகர்ந்து விட்டார். சிறிது நேரத்தில் வெளியே கிளம்பிச் சென்று விட்டார்.

அம்மா கேட்ட கேள்வியிலிருந்த நடைமுறை யதார்த்தத்தைப் பற்றி யோசித்தேன். அம்மா முன்பு சம்பாதித்துச் சேர்த்த பணத்தில் நான் வசதியாக வாழ்ந்து கொண்டு, அவரது வழி சரியில்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறேன். என் மனம் ஏற்கும் வழியில் என்னால் சம்பாதிக்க முடியுமா? எவ்வளவு சம்பாதிக்க முடியும்? அதைக் கொண்டு இத்தனை வசதியாக வாழ முடியுமா? இலக்கிய பட்டப்படிப்பிற்கு என்ன வேலை கிடைக்கும்? தனியார் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஆசிரியை வேலைக்குச் சேர்ந்தால் என் மனம் விரும்பும் வழியில் பாடம் சொல்லித் தர அனுமதிப்பார்களா?

பொன்னொளிபுரத்திற்குப் போய் சிறிது காலமாவது இருக்க-வேண்டு ம் என்று தோன்றுகிறது. இங்கிருக்கும் வசதிகள் அங்கே இருக்காதுதான். வசதிகள் இல்லாமல் என்னால் வாழ முடியாதா? லட்சியவாதி என்றால் உடனே வசதிகளைவிட வேண்டும், யோக அழைப்பை ஏற்க வறுமையை விரும்ப வேண்டும் என்பன போன்ற அபத்தமான எண்ணங்கள் என்னிடம் இல்லை. ஆனால் வசதியையும், வசதியின்மையையும் சமமாகக் கருதும் மனப் பக்குவம் என்னிடம் இருக்கிறதா?

துரியன் பேசுவது பிடித்திருக்கிறது என்பதற்காக பொன்னொளிபுரம் போனால், ஆன்மீக முன்னேற்றம் தடைபடும்.

எதையும் விலக்காமல், எதிர்முனைகளையும் சமப்பிரியத்துடன் ஏற்கவேண்டிய பூரண யோக ஆன்மீக அழைப்பை ஏற்கும் பக்குவம் எனக்கு உண்டா என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும். அம்மாவின் பணத்தில் வாழ்ந்து பழகிவிட்ட என்னால் சொந்தமாகச் சம்பாதித்து அதில் வாழத் தெரிய வேண்டும். அடுத்தவர்களுக்கு உத்தரவிட்டே வாழ்ந்து பழகிவிட்ட என்னால் பிறர் உத்தரவிட்டால் அதை அகந்தையின்றி நிறைவேற்ற முடியுமா?

அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்யவேண்டும். எண்ணங்களை, உந்துதல்களை இறைவனிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு, தானே வருபவற்றை இறைவனுக்காக ஏற்க வேண்டும் என்று துரியன் சொன்னாரே? என்முன் இறைவன் ஒளிமயமாக நிற்பதாகக் கற்பனை செய்து கொண்டு என்னுள் எழுந்த கேள்விகளை அவனிடம் எனக்குப் புரிந்த வகையில் சமர்ப்பணம் செய்தேன். மனதில் எழுந்த எல்லாவற்றையும் மௌனமாகக் கூறிவிட்டு, நீ இனி செய்வதை விருப்பத்துடன் ஏற்பேன் என்ற வாக்கைக் கொடுத்தேன். அமைதி என்னை சூழ்ந்த உணர்வு உண்டாயிற்று.

அம்மாவை வருத்தப்படுத்தி விட்டேன். சமாதானப்படுத்த நினைத்தேன். அம்மா எப்போதும் பிரியமுள்ள அம்மாதானே? அது மாறாத உண்மை என்றபோது, பிரியத்தை ஏன் கோபமாக மாற்ற வேண்டும்?

பால்பாயசம் அம்மாவிற்குப் பிடிக்கும். விதவிதமாக சமைக்க எனக்குப் பிடிக்கும். அம்மாவிற்காகச் செய்யலாம் என்று நினைத்தேன். அம்மாவிற்காக அல்ல, அவருக்குள் இருக்கும் இறைவனுக்காகச் செய்யலாம் என்று தோன்றியது.

உடை மாற்றிக் கொண்டு வடையும், பாயாசமும் செய்து கொண்டிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது. அம்மா வந்துவிட்டாரா? கையில் கரண்டியோடு கதவைத் திறந்தேன்.

சற்று பருமனாக இருந்த வாலிபர் ஒருவர் என்னைப் பார்த்து கரம்குவித்து வணங்கினார். ‘அம்மாவைப் பார்க்க வந்தேன். நான் வீட்டு விசேஷங்களுக்குச் சமையல் செய்பவன். பெயர் பிசிபேளா பிரசாதப்பா. அம்மா சிபாரிசு செய்தால் நிறைய வேலை கிடைக்கும் என்று என் நண்பர் சொன்னார்’ என்றார்.

‘அம்மா வெளியே போயிருக்கிறார். எப்போது வருவார் என்று தெரியவில்லையே’ என்றேன்.

‘நான் ஒரு மணி நேரம் கழித்து திரும்ப வருகிறேன்’ என்று கூறி திரும்பியவர் என்னைப் பார்த்து தயக்கத்துடன் ’நீ இங்கே சமையல்காரியாக வேலை பார்க்கிறாயா? நல்ல திறமைசாலிதான். பால்பாயசமும், வடையும் அபாரமான சுவையோடு இருக்கின்றன’ என்றார்.

திகைத்தேன். ‘வாசனையை வைத்து தோராயமாக பாயசம், வடை என்று கண்டுபிடித்தது சரிதான். சுவை எப்படி வாசனை மூலம் தெரியும்?’ என்று கேட்டேன்.

‘அருமையாக சமைக்கிறாய். சமையலில் சில ரகசியங்கள் இருக்கின்றன. தெரிந்து கொள். எதை வேண்டுமானாலும் எந்த புலனாலும் தெரிந்து கொள்ளலாம். புலன்கள் இல்லாமலும் தெரிந்து கொள்ளலாம். கண் பார்க்கும். காது கேட்கும் என்று விஞ்ஞானி சொல்கிறார். அது மனம் பழகிக் கொண்டுவிட்ட பொது உண்மை. மனதின் பழக்கத்தை மாற்றிவிட்டால் மூக்கால் சுவைக்கலாம். நாக்கால் முகரலாம். அசைவ சமையலின் சுவையை முகர்ந்து பார்த்தே கணிக்கும் சைவ சமையல்காரர்கள் பல பேர் உள்ளனர். அடுத்த ரகசியம், எதைச் சமைத்தாலும் பகவானுக்குச் செய்யும் பாவனையில் சமைக்க வேண்டும். இன்னொரு ரகசியம், பரிமாறும்போது பகவானுக்குப் பரிமாறுவதாக பாவனை செய்து கொள்வது. உன் சமையல் பாராட்டப்படுவது முக்கியமல்ல. சாப்பிடுபவருக்கு உணவு சுவையாக இருப்பது முக்கியம் என்று எப்போதும் நினைத்துக் கொள்’ என்றார் பிஸிபேளா பிரசாதப்பா.

‘அவசியம் பின்பற்றுகிறேன். மிகவும் நன்றி’ என்றேன்.

‘நன்றி சொன்னால் போதுமா? எனக்கொரு உதவி செய்தால் தேவலை’ என்றார் பிரசாதப்பா.

‘சொல்லுங்கள், செய்கிறேன்’ என்றேன்.

‘சூளைமேட்டில் கல்யாணமாகாத நான்கு வாலிபர்களுக்கு சமையல்காரி வேண்டுமாம். உன்னைப் போல அற்புதமாக சமைக்கும் தோழியோ, அக்காவோ, தங்கையோ இருந்தால் அங்கே போகச் சொல்’ என்று கூறிக் கொண்டே ஒரு விலாச அட்டையை நீட்டினார் பிரசாதப்பா.

‘நான் போகக் கூடாதா?’ என்றேன்.

‘இங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய். அதை கெடுப்பேனா? பங்களாக்காரர்கள் கொடுக்கும் சம்பளத்தை அடுக்குமாடி வீட்டுக்காரர்கள் கொடுக்க முடியுமா?’ என்றார் பிரசாதப்பா.

‘உங்களுக்கு மிகவும் வேண்டியவர்களோ?’ என்று கேட்டேன்.

‘இல்லை. நான் சமையல்காரன். உணவு தேவை என்று ஒருவர் வேண்டியபின் என்னால் உதவி செய்யாமல் இருக்க முடியாது. நாம் கணக்கு வைத்துக் கொள்ளாவிட்டாலும் நம் எல்லா செயல்களுக்கும் வாழ்வு கணக்கு வைத்துக் கொள்ளுமே’ என்றார் பிரசாதப்பா.

பிரசாதப்பா சென்றபின் சிரித்துக் கொண்டே சமையலை முடித்தேன். சமையல்காரி வேடம் எனக்குக் கச்சிதமாக பொருந்துகிறதோ? மறுநாளே துரியனை சந்தித்துவிட்டு சூளைமேடு சென்று வேலை கேட்க முடிவெடுத்தேன்.

மறுநாள் காலையில் துரியனின் அறைக்குச் சென்றபோது அவருடைய நண்பர்கள் பலர் அங்கிருந்தனர். எல்லோரும் பல லௌகீக விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். துரியன் மிகவும் குறைவாகத்தான் பேசினார். பின் அவரையும், அவர்களது நண்பர்கள் இருவரையும் என் காரில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டேன். ‘விரைவில் மீண்டும் சந்திப்போம்’ என்று இருவரும் பரஸ்பரம் கூறி விடை பெற்றுக் கொண்டோம்.

காரை வீட்டில் நிறுத்திவிட்டு, பஸ் பிடித்து சூளைமேடு சென்றேன். சமையல் வேலையில் சேர்ந்து விட்டு, அம்மாவிடம் சொல்லிவிட்டுச் செல்ல வீடு திரும்பினேன்.

அம்மா அழ ஆரம்பித்தார். ‘ஏனிப்படி கஷ்டப்பட ஆசைப்படுகிறாய்? சமைக்க பிரியம் என்றால், உனக்காக நட்சத்திர உணவு விடுதி கட்டித் தருகிறேன். பத்து பெரிய சமையல்காரர்களை வைத்து அதை நடத்து. அன்னக்காவடி பயல்களுக்கு என் பெண் சமைத்துப் போட வேண்டுமா? அதற்காகவா உன்னை சீராட்டி வளர்த்தேன்?’ என்று புலம்பினார்.

‘அம்மா, சிறுவயதில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி எனக்குத் தெரியும். என்னை ஒரு கஷ்டமும் இல்லாமல் மிகவும் வசதியாக வளர்த்து விட்டீர்கள். அதனால்தான் உங்களையே குறை சொல்லும் துணிச்சல் வந்தது. இப்படி ஏதாவது வேலை பார்த்தால்தான் எனக்கு அனுபவமும், புத்தியும் வரும்’ என்றேன்.

‘அனுபவமும், புத்தியும் வர வேறு வழிகளா இல்லை? என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள், எவ்வளவு குறை வேண்டுமானாலும் சொல்லிக்கொள். என் மேலிருக்கும் வெறுப்பினால் நீ கஷ்டப்பட வேண்டாம்’ என்றார் அம்மா.

அம்மாவை இறுக அணைத்துக் கொண்டேன். ‘உங்கள் மீது எனக்கு ஒரு வெறுப்புமில்லை. பிரியம் மட்டும்தான் இருக்கிறது. உங்களைப் போன்ற பெரிய ஆத்மாவிற்கு மகளாகப் பிறந்ததற்கு இன்று பெருமைதான் படுகிறேன். சில நாட்களில் திரும்பி வந்துவிடுவேன்’ என்று கூறினேன்.

‘நீ மனதில் வேறென்னவோ வைத்திருக்கிறாய். நீ என்னைப் போல அறிவற்றவள் இல்லை என்று எனக்குத் தெரியும். தினமும் ஒரு முறையாவது போனில் பேசு. சிறு பிரச்சினை என்றாலும் எனக்குப் போன் செய்துவிடு. நான் வந்து விடுகிறேன். சீக்கிரமாக வீடு திரும்பிவிடு’ என்றார் அம்மா.

(தொடரும்)

********

ஜீவிய மணி

அன்னையின் வாழ்வெனும் யோகம் முழுவதும் சத்தியம் - பொய்யின் கலப்பற்றது என்பதால் இழப்பிற்கு இடம் இருக்க முடியாது. அன்னை நஷ்டம் தருவது இல்லை. நஷ்டமும் தோல்வியும் எவருக்காவது வந்தால் அவர் வாழ்வில் அன்னை இல்லை என்பதே பொருள். நஷ்டம் ஏற்பட, நமக்குப் புரிந்த புறக் காரணங்களும், புரியாத அகக் காரணங்களும் உள்ளன. நமது மனதில் இயலாமை, ஈடுபாடின்மை ஆகியனவே இத்தகு நஷ்டத்தைத் தோற்றுவித்த அகக் காரணங்களாகும். இவற்றை அறிந்து, மனம் உண்மையிலேயே மாறி, மாறியபடி அது செயல்பட்டால், பயன் அந்தக் கணமே கிட்டும் இழந்ததைப் பெறுவது மட்டும் அல்ல. அதனினும் பெரியதாகப் பெறுவோம்.

*********book | by Dr. Radut