Skip to Content

11. அற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது

அற்புதம் சமர்ப்பணம் செயலில் மலர்வது

ஸ்ரீ கர்மயோகி

பூரண சமர்ப்பணத்தை ஒரு நிமிஷமாவது கண்டவர், அதை வாழ்வில் முழுமையாகப் பெற முடிவு செய்வது அவர் மனம் ஆத்மாவாகத் தயாராகும் நிலை. முடிவை எடுப்பது முதல் நிலை, நிறைவேற்றுவது முடிவான நிலை. சாதகனாக விரும்பும் அன்பன் மனநிலை முதற்கட்டம். அன்பன் சாதகனாகும் வாய்ப்பை அன்னை அனுமதிப்பது இரண்டாம் கட்டம். சமர்ப்பணம் பூரண சமர்ப்பணமான நேரம் பெரிய நேரம், வாழ்வு மனிதனை யோகம் செய்ய அழைக்கும் நேரம். இக்கட்டத்தை எட்டியவர், அதை இழக்காமல் பாதுகாக்க விரும்பும் மனநிலையில் மேலும் செய்யக்கூடியதை இங்கு கூறுகிறேன்.

ஏசுவின் வாழ்நாளில் மேரி என்பவர் இருந்ததாகச் சரித்திர நிகழ்ச்சியை ஆராய்ந்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. “புவியில் பரிணாமம் கனத்து சிக்கலான நேரங்களில் பகவானும், நானும் இருந்திருக்கிறோம்” என அன்னை கூறியுள்ளார். இந்த மேரி என்ற பெயர் ஏசுவின் தாயார், அவருடனிருந்த ஒரு பெண் இருவருக்கும் உண்டு. பகவானிடம் அன்னை இக்காலத்தைப் பற்றிக் கூறியதை Agenda-வில் குறிப்பிட்டுள்ளார். பகவான் அதற்குரிய ஆன்மீக விளக்கம் கொடுத்ததாக அன்னை கூறியுள்ளார். சூட்சும உலக வாழ்வின் அம்சம் அது. இன்று நமக்கு செல்போன் போன்ற பெரும் வசதிகள் வந்தபடியிருக்கின்றன. நாம் எழுதும் பேனா, பயன்படுத்தும் டம்ளர், சாப்பிடும் வாழைப்பழம் போன்ற எளிய பொருள்களை மனிதன் பெற அறிஞர்கள், சாஸ்திரிகள், விஞ்ஞானிகள் ஏராளமான பேர் ஏராளமான வழிகளில் செயல்படுகிறார்கள். ஜடலோக வாழ்வு அது போல் சூட்சும லோகத்தால் ஆளப்படுகிறது.

பூரண சமர்ப்பணம் கிட்டும் முதல் நிலைக்கும், கிட்டிய முடிவான நிலைக்கும் இடைவெளி தீவிர சாதகனுக்குச் சில நாட்கள், எளிய அன்பனுக்கு நீண்ட நெடிய ஜென்மங்கள். அன்னையை அறியாதவர் கேள்விப்பட முடியாத நிலையது. வாயிலில் நிற்பவர் வாய்ப்பை அறிந்து போற்றினால், வாய்ப்பு சூட்சுமத்தில் பலித்ததா இல்லையாயென அறியலாம். அதை ஜட வாழ்வில் fuse-ஆன பல்ப் சமர்ப்பணத்தால் பிரகாசமாக அதற்குரிய காலத்தையும் கடந்து எரிவதால் காணலாம். பரம எதிரி அந்நியோந்நியமான நண்பராக மாறுவதை வாழ்வில் (vital) காணலாம். நம் அறிவுக்கு எட்டாத விஷயம் எளிமையாகப் புரிவது மனத்தில் அதைக் காண்பதாகும். பல்ப் fuse ஆனால் மாற்றுகிறோம். போட்டு நாளாயிற்று, அதற்குரிய காலம் முடிந்து விட்டது என்பது சட்டம். மனம் இச்சட்டத்தை ஏற்றதை உயர்ந்த அறிவு ஆன்மாவில் சிறந்து அன்பனுக்கு அச்சட்டமில்லை எனக் கூற முடியும். சமர்ப்பணம் அதே மனநிலையில் பலிக்க தெம்பு, உறுதி, விடாமுயற்சி, தீவிரம், எதிர்பாராத மனநிலை, முழு முயற்சியால் பலிக்கும். பல்ப் வழக்கத்திற்கு மாறாக அதிகப்பிரகாசமாக எரியும், தொடர்ந்தும் எரியும். ஜடத்தில் செய்த சோதனையைவிட பிராணன், உயிரில் செய்யும் சோதனை கடினம். ஒருவர் பரம எதிரியானார். அவரை நான் மன்னித்து விட்டேன். மனம் மன்னிக்கவில்லை என்றால் அவருடன் உள்ள அனைத்து தொடர்புகளிலும் நம் சிறு குறையிருப்பது தெரியும். அவற்றை அகற்றினால் கோபம் எழும். கோபத்தை விலக்கினால் எரிச்சல், விரக்தி நிற்கும். அவருள் இறைவனைக் கண்டால் ஆனந்தம் எழும் என்பது தத்துவம். அந்நிலையில் தொடர்ந்த இடைவிடாத தீவிர அழைப்பு அதையும் சாதிக்கும். பருவம் season முடிந்த பிறகு பழம் பழுக்காது. தவறி ஒன்று இரண்டு பழுக்கலாம். பருவம் பலன் தரும். பருவத்தைக் கடந்தபின் பலனில்லை என்பது மனம் கண்ட அறிவு. பருவம் பருவ காலத்திற்குரியது. சமர்ப்பணம் காலத்தைக் கடந்தது என்ற எண்ணத்தை மனம் ஏற்காது. புரிந்தால் ஏற்கலாம், புரியாது. எண்ணத்தை மனம் ஏற்பது ஒரு கட்டம். மரம் பழுப்பது முடிவான பெரிய அற்புதம் ஆச்சரியமாக மலர்வது. முதற்கட்டமே இங்கு கருதப்படுவது. அடுத்தது யோக சித்தி. நான் அதைக் குறிப்பிடவில்லை. சமர்ப்பணம் மனத்தில் நிறைந்து அதனால் நெஞ்சம் நெகிழ்ந்து உடல் ஒரு நிமிஷம் புல்லரித்தால் மனம் அக்கருத்தை ஏற்கும். ஏற்று மகிழும். இறைவன் ஆனந்தத்திற்காக உலகைப் படைத்தார் எனில், அதன் முடிவில் ஆனந்தம் பெறுவார் எனப் புரியும். எந்த நேரமும், எந்தச் செயலிலும், எந்த அசைவிலும் இறைவன் அவர் தேடும் ஆனந்தத்தை அனுபவிக்கிறார் என அன்னை கூறுகிறார். நான் கூறிய இம்மனநிலையில் காணும் எவரும் அவர் கோணத்தில் ஆனந்தம் பெறுகிறார் எனத் தெரியும். மண்ணில், சகதியில் விளையாடும் குழந்தையின் ஆனந்தம் நமக்கு உணர்வாகப் புரியும். ஒரு நிமிஷமானாலும் இது பெரியது. இதைக் காப்பாற்றி, வளர்த்து, முழுப்பலன் பெறுவது யோகப் பயிற்சி.

**********



book | by Dr. Radut