Skip to Content

09. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

P. நடராஜன்

ஸ்ரீ அன்னையை அறிந்தவுடன், அவரை எப்படி வழிபடுவது என்பதே நம்முள் எழும் கேள்வி. ஆனால் அன்னையோ, "I do not want to be worshipped. I have come to work, not to be worshipped" என்று கூறியிருக்கிறார்கள். ஸ்ரீ கர்மயோகி அவர்கள், தம் நூல்களில் அன்னை செயல்தெய்வம், இடையறாது செயற்படும் சிக்தி என்று எழுதியிருக்கிறார்கள். ஒழுங்கு, சுத்தம் முதலான வாழ்க்கை நெறிகளை அன்பர்கள் வழிபாடு என்ற தலைப்பில் பட்டியலிட்டு உள்ளார்கள்.

அத்தகைய அன்னையின் உயர் பண்பு நெறிகளை மேம்போக்காகப் பின்பற்றினாலோ, நம்மைச் சுற்றி உள்ளவர்களை அதிகாரம் செய்து, நான் அன்னை அன்பன் இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று பணித்தாலோ கிடைப்பது அடுத்தவர்களின் அருவருப்பும் அடியும்தான் என்பது என் அனுபவம்.

மாறாக, ஸ்ரீ அன்னையின் Do not pretend—be.
Do not promise—act.
Do not dream—realise என்ற வாக்கின்படி அந்நெறிகளை நம் இயல்பாக மாற்றிப் பக்குவமாக அன்றாட வாழ்வில் வானில் உள்ள நிலவு தரையிலுள்ள தடாகத்தில் பிரதிபலிப்பதைப் போன்று பிரதிபலித்தால் அன்னையின் அருட்தடங்களை அனைத்திலும் பார்க்க முடிந்தது.

அப்படி அன்னையின் முறைகளைப் பிரதிபலித்த அன்பர்கள் இருவரின் ஆரம்பக் கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

ஒழுங்கு -Orderliness என்பதை Token Act -ஆகச் செய்த அன்பரின் அனுபவம் அவர் கூறியது:

வீட்டில் இருந்த நியூஸ் பேப்பர்களை தமிழ்ப் பேப்பர் தனியாக, இங்கிலீஷ் பேப்பர் தனியாக அடுக்கினேன். மேலும் முழு மாதப் பேப்பரையும், தேதிப்படி வரிசையாக அடுக்கினேன். மேலும் ஒழுங்கை உயர்த்த வேண்டி, ஒவ்வொரு தேதிப் பேப்பரையும் பக்கப்படி வரிசைப்படுத்தி, மடிப்புகளைச் சீர்படுத்தி, சுருக்கமாகச் சொன்னால், புதிய பேப்பர் எப்படி இருக்குமோ அதுபோல் அடுக்கி வைத்தேன்.

அப்பா புத்தகத்தில் குறிப்பிட்டபடி நான்கு நாட்களுக்கு முந்தைய பேப்பர் என்றால், நாலாவது பேப்பரை வரிசைப்படி எடுத்தால் சரியாக இருக்கும்படி அடுக்கினேன்.

பொதுவாக தமிழ்ப் பேப்பர்களுக்கு பழைய பேப்பர் கடையில் விலை இல்லை. பொதுவாக அந்நாட்களில் தமிழ்ப் பேப்பரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சும்மாக் கொடுக்காமல் கிலோ ஐம்பது பைசா என எடுப்பார்கள்.

அதனால், மளிகைக் கடைக்குச் செல்லும்போது, மேற்சொன்ன படி அடுக்கிய பேப்பர்களை நன்கு கட்டி எடுத்துக்கொண்டு, சும்மாக் கொடுப்பதைத் தெரிந்த கடையில் கொடுப்போம் என்ற எண்ணத்தில் போனேன். மளிகை சாமான்கள் பில்லில் பேப்பருக்கு என்று விலை குறிப்பிட்டு கழித்து மீதம் இருந்த பணத்தை மட்டும் கடைக்காரர் வாங்கிக் கொண்டார்.

இது பேப்பர் கடையில் கிடைக்காத விலை. மளிகைக் கடை ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தரத்திற்குப் பெயர் எடுத்த கடை. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், நான் அடுத்த முறை மளிகைக் கடைக்குச் சென்ற போது, கடைக்காரர், சென்ற முறை கொடுத்த பேப்பருக்கு அடுத்தவருக்கு பில் போட்ட நினைப்பில் குறைவாகக் கொடுத்துவிட்டேன். அதனால் இந்தாருங்கள் என்று மேலும் ரூ.30-ஐக் கொடுத்தார். அன்னையின் முறையின் சிறப்பை உணர்ந்த விஷயங்களில் இதுவும் ஒன்று.

மேற்சொன்ன அதே அன்பர் ஒழுங்கைத் தமது தொழிலகத்தில் கடைப்பிடித்த அனுபவம்:

மரம் அறுக்கும் தொழிலகத்தில், மரங்களை அறுக்கும் பொழுது பெரிதும் சிறிதுமாகத் துண்டுகள் விழுவது வழக்கம். அன்னையின் சுத்தம், ஒழுங்கு என்ற முறைகளைச் சிரத்தையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட தருணம் அது. அப்படி எஞ்சிய மரத்துண்டுகளை assorted ஆக இருக்கிறது, என்ன செய்வது, என்று தொழிலகத்தை நிர்வகிக்கும் மகன் கேட்டதற்கு, அவற்றை தேக்கு, பூவரசு என்று make it sorted எனக் கூறி வெளி வேலைக்காகச் சென்றுவிட்டேன்.

அவ்வாறு அவர்கள் செய்ததில், நினைத்ததைவிட அதிகமான மரத்துண்டுகள் மரத்தூள் கலந்த மண்ணில் புதையுண்டு இருந்ததை எடுத்து சுத்தம் செய்து size மற்றும் மரம் எனப் பிரித்து அடுக்கி வைத்தனர்.

வெளியில் சென்று திரும்பிய என்னிடம் என் மகன் வந்து கூறியது எனக்கு ஆச்சிரியம் அளித்தது. அவர், நீங்கள் சொன்னபடி அடுக்கி வைத்தவுடன், மூன்று பேர்கள் வந்தனர். என்ன வேண்டும் என்று கேட்டதற்கு நாங்கள் அடுக்கி வைத்த மரத்துண்டுகளைப் பார்த்து, இப்படிப்பட்ட மரத்துண்டுகளைத்தான் நாங்கள் தேடி வந்தோம் எனக் கூறி விலைப்பேசிச் சென்றுள்ளனர் என்றார். விலையும் நாங்கள் எதிர்பாராத விலை.

Scrap-ஆக இருந்தாலும் அன்னையின் முறையில் ஒழுங்காக அடுக்கி வைத்தவுடன் அப்பொருள் தா@ன அதனை வாங்குபவர்களை அழைத்துக் கொண்டு வந்து நல்ல விலை தந்ததை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

*********

மற்றும் ஒரு நண்பர், இளம் வயதில் தந்தையின் தொழிலை ஏற்றவர். கடந்த வருடம் தந்தையின் திடீர் மறைவிற்குப்பின், லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலை முழுவதும் நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது அனுபவம் அவரது மொழியில்:

கடந்த 5 வருடங்களாகவே எனது தந்தை கூடவே இருந்து பழக்கி இருப்பினும் நட்போடும் பாசத்தோடும் எனது அருகிலேயே இருந்த அவரது தீடீர் மறைவு என்னை நிலைகுலையச் செய்தது. அச்சிமும் கவலையும் சேர்ந்தன.

தியான மையத்தில் ‘ஜீவனுள்ள எண்ணம்’ (Real Idea), ‘தொழிலின் ஜீவன்’ குறித்த விவரங்களையும், அவற்றை நடைமுறைப்படுத்தத் தேவையான வழிமுறைகளையும் கேட்டுக் கொண்டேன். ‘தொழிலின் ஜீவன்’ புத்தகம் வாங்கிப் படித்து, அதில் உள்ள சிலவற்றைப் பின்பற்றத் தொடங்கினேன்.

சுத்தம், தினமும் கணக்கு எழுதுவது என இரண்டையும் எடுத்துக் கொண்டேன்.

அனுபவத்தில், புத்தகத்தில் குறிப்பிட்டவை சாதாரண முறைகள் அல்ல; சத்தியமானவை என்பதை உணர்ந்தேன். செய்ய வேண்டியது நம் பங்கு என்பதும் தெளிவானது. சுத்தத்தைவிட, தினமும் கணக்கு எழுதுவதைத் தவறாமல் செய்து வந்தேன். கண்கூடாகக் கண்டவை:

  1. வசூலாகாத தொகை (no pending payments) என்பது இல்லை. பொதுவாக எங்கள் தொழிலில் கிரெடிட்டுக்கு லோடு வைத்து விட்டுப் பிறகுதான் கொடுப்பார்கள்.
  2. ஒரு ரூபாய்கூட விடாது கணக்கு எழுதுவதால் நேர்மை உயர்ந்துள்ளது. டிரைவர் மற்றும் கொடுக்க வேண்டியவர்களுக்குக் குறைக்காமல் கொடுத்து விடுவேன். இதனால் டிரைவர்களும் கணக்கு கொடுக்கும் போது ரூபாய் குறையாது சரியான தொகையைக் கொடுத்து விடுகின்றனர்.
  3. பணத் தட்டுப்பாடு என்பது இல்லை. நண்பர்கள், தொழில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள், நான் கேளாமலேயே அவ்வப்போது பெரிய தொகையைக் கொடுத்து பத்து நாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனத் தருகிறார்கள். நன்றியுடன் பெற்றுச் சொன்னபடியே திருப்பிக் கொடுத்து வருகிறேன். என் தந்தை நடைமுறை செலவுகள் செய்ய, ஒரு நபரிடம் அவ்வப்போது பணம் பெறுவது வழக்கம். அவருக்குப் பிறகு, நான் அவ்வாறு செய்யாது இருந்ததால், அந்த நபர் வந்து, யாருடைய உதவியும் இல்லாது தொழில் நடத்தலாம் எனப் பார்க்கிறாயா எனச் சொல்லி, பார்க்கலாம் எனக் கூறுகிறார்.
  4. டீஸல் திருட்டு என்பது இல்லை. மற்றவர்கள் கூறினாலும் எங்கள் டிரைவர்களை நான் சந்தேகப்படுவதில்லை.
  5. சம்பள பாக்கி வைப்பது இல்லை. வேறு இடத்திற்கு வேலைக்குப் போகிறேன் எனச் சொன்னால், அன்றே கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்து விடுவேன். மற்ற இடங்களிலெல்லாம் பிறகு வந்து வாங்கிக்கொள் எனச் சொல்லி அனுப்பி விடுவார்கள். நீங்கள் இப்படி நடப்பது வித்தியாசமாக உள்ளது எனக் கூறக் கேட்கிறேன்.
  6. நாம் கொடுக்க வேண்டியதை நான் கொடுக்கும் போது, கேட்டால்தான் வரும் என்ற payments, அவர்களே போன் செய்து வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
  7. நாங்கள் இறக்கும் லோடு எடை சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பூரண நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைக் கவனமாகக் கொண்டுள்ளேன். ரெகுலர் லோடு இருப்பதைக் காண்கிறேன். மற்ற டிரான்ஸ்போர்ட்காரர்கள், உங்களுக்கு மட்டும் எப்படி லோடு தொடர்ந்து கிடைக்கிறது என்கிறார்கள்.
  8. பேங்க் லோனில் வாங்கிய லாரிக்கு மாதம் ரூ. 56,000/- கட்ட வேண்டும். ஒரு மாதம் தவணை செலுத்த பணம் சேரவில்லை. மனத்தில் அமைதியை வரவழைத்துக் கொண்டு இருந்து விட்டேன். எதிர்பாராது வெளி agent லோடு வேண்டி அணுகி, கையில் ரூ. 26,600 தொகைக் கொடுத்து ஆர்டர் கொடுத்தார். முன்பணம் தந்து லோடு எடுப்பது என்பது எங்கள் தொழிலில் அசாதாரணமான ஒன்று.

மேலும், ‘தொழிலின் ஜீவன்’ புத்தகத்தைப் படித்ததால் சில முறைகளையும் பின்பற்றி வருகிறேன்.

  • பத்து நாட்களுக்கு ஒருமுறை கணக்கு பார்ப்பதை மாற்றி, டிரைவர்களை அன்றே கணக்கு கொடுக்கச் சொல்லி அன்றே முடித்து விடுகிறேன். இதனால் நேர்மை உயர்ந்துள்ளது. பத்து நாட்கள் என இருக்கும்போது, செலவுகள் மறந்து கொடுக்க வேண்டுமே என அட்ஜஸ்ட் செய்து கணக்கு கொடுப்பது மாறி, சரியான கணக்கு நடைமுறை வந்துள்ளது.
  • கவனம் செலுத்தினால் அது வளரும் எனப் படித்தேன். இதுவரை இல்லாத order-register maintain செய்து வருகிறேன். வண்டி லோடு எதுவுமில்லாமல் நிற்பதேயில்லை. அப்படியே நின்றால் மற்ற transport agents லோடு தருகிறார்கள்.
  • தினமும், தொழில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள், டிரைவர் என அனைவருக்கும் மானசீகமாக நன்றியைக் கூறி வருகிறேன்.
  • தொழிலில் நாணயத்தைக் கொள்கையாகக் கொண்டு ஜல்லி, மணல் போன்றவை ஏற்றும் போது அளவு குறையாமல் கொண்டு சேர்க்கிறேன்.
  • தொழிலில் ஆர்வமும் உற்சாகமும் முக்கியம் என்பதை உணர்ந்து அவ்வண்ணம் இருக்கிறேன்.

தொழிலின் ஜீவன்’ புத்தகத்தில் உள்ள முறைகள் தவறாது பலன் தரும் சிஸ்டம், நாம்தாம் செய்யத் தவறுகிறோம் என்பதைக் கடந்த வருடங்களில் அனுபவமாகக் கண்டு வருகிறேன்.

*******

மேற்சொன்ன அன்பர் அவர் இயல்பாக ‘தொழிலின் ஜீவன்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முறைகள் பலவற்றையும் கடைப்பிடித்து வருகிறார். உதாரணமாக, நாள் தவறாமல் கணக்கெழுதாமல் படுக்கப் போவதில்லை, கேட்டுப் பெறும் பழக்கத்தைக் கைவிடுதல், நம்மைச் சோர்வடையச் செய்யும் தேவையில்லாத உறவுகளை அகற்றுவது போன்ற முதல் நிலை முறைகளையும் கடைப்பிடித்து வருகிறார்.

‘தொழிலின் ஜீவன்’ புத்தகம் கூறும் தம் பங்குக்குரியவற்றை பக்தன் முடித்த நேரம், அன்னையை அழைத்தால், உடனே உரிய நேரம் வரும் என்பது அனுபவ உண்மை.

*******



book | by Dr. Radut