Skip to Content

11. சொல்லி சாதிப்பதும், சொல்லாமல் சாதிப்பதும்

சொல்லி சாதிப்பதும், சொல்லாமல் சாதிப்பதும்

கர்மயோகி

சொல்லி சாதிப்பது சிறியது. சொல்லாமல் சாதிப்பது பெரியது. சொல்லி சாதிக்கும்பொழுது சொல்லின் திறமை செயல்படும். சொல்லாமல் சாதிக்கும்பொழுது சொல்லில் புதைந்துள்ள மௌன சக்தி செயல்படும். அதன் சாதனை உலகளவு. சொல்லும்பொழுது செயல்படுவது பேச்சு, அறிவு, விவாதம்.

சொல்லாமலிருந்தால் பேச்சுக்குப் பதில் நினைவும், அறிவுக்குப் பதில் விவேகமும், விவாதத்திற்கு பதில் கருத்தும் செயல்படும். அடுத்த உயர்ந்த கட்டத்தில் நினைவழிந்த லயமும், விவேகமும் உயர்ந்து அறிய முடியாததாகி, விவாதம் அடங்கி வெற்றியாகும்.

  • சொல்லியும், சொல்லாமலும் மனிதன் சாதனையை நாடுகிறான்.
  • சாதனையை நாடாதவன் யோக சித்தியைத் தேடுகிறான்.
  • எதையும் நாடாத, தேடாத மனநிலை கனிந்து ஆத்ம நிலையாகும்.
  • அது சமாதி நிலையான லயத்தில் முடியும்.
  • லயம் ஆத்மா குருடான நிலை என பகவான் கூறுகிறார்.
  • லயத்தில் விழிப்பு, விழிப்பில் சமாதி நிலை - பூரண யோகத்திற்குரியது.
  • இதன் பவர் உலகையும், பிரபஞ்சத்தையும் கடந்தது.
  • சாதகனாக முயலும் அன்பனுக்கு இதன் அம்சம் சித்திக்கும்.
  • முழுமையான சமர்ப்பணம், இடைவிடாத நினைவு, இதயத்தின் அழைப்பு இந்த அம்சத்தைத் தரும்.
  • இந்த அம்சம் பலிக்க, இதன் அடிப்படைத் தத்துவம், விவரம், விளக்கம் அறிந்து ஆழ் மனம் எந்த நேரமும் அதையே இலக்காக நினைத்து அங்கேயே நிலைக்க வேண்டும்.
  • அம்முயற்சி சிறிதளவாவது பலனின்றிப் போகாது.
  • அதை ஏற்று வளர்ப்பது முறை.
  • அது வளர்வதும், வளர்வதின் விளைவும் புறத்தில் செயலாகவும் அகத்தில் உணர்வாகவும் தெரியும்.
  • இதுபோல் கடமையைச் செய்தவருக்குக் கல்லூரி ஆசிரியர் வாழ்வு படிப்படியாக உயர்ந்து, மூன்று முறைகள் கவர்னராகி, ஜனாதிபதிக்கு நியமனம் செய்யும் நிலைக்கு வந்தார்.
  • வேறொருவர் இதே மனநிலையில் நேர்மையாகச் செயல்பட்டு ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின் ஜனாதிபதியானார்.
  • ஒரு ஏக்கர் சொந்த நிலமில்லாதவர்க்கு இம்மனநிலை இருநூறு ஏக்கர் நிலம் பெற்றுத் தரும்.
  • திறமைக்குரியது வாழ்க்கைப் பலன்.
    நேர்மைக்குரியது வாழ்வில் பெரும் பலன்.
    திறமையும், நேர்மையும் இணைந்து மனத்தைக் கடந்தால் யோகப் பலனுண்டு.
  • ‘பலன்’ என்ற அளவில் அதையும் நாடாத மனம் பற்றற்றானை அடையும்.
  • மௌனம், அமைதி, சாந்தம், பொறுமை இம்மனநிலைக்கு உறைவிடம்.

**********

ஜீவிய மணி
 
அடுத்தவருடன் ஐக்கியமானால் மனிதன்
விஸ்வமானவனாவான். அடுத்தவருடனும் 
ஆண்டவனோடும் பெறும் ஐக்கியம்
பரமாத்மாவாகும் ஜீவாத்மாவாகும்.
 



book | by Dr. Radut