Skip to Content

10. அன்னை இலக்கியம் - நல்லதோர் வீணை செய்து

அன்னை இலக்கியம்

நல்லதோர் வீணை செய்து

(சென்ற இதழின் தொடர்ச்சி)

இல. சுந்தரி

சமூகத்தின் சங்கடங்களிலிருந்து விடுதலை பெற மனைவி என்ற தகுதியை அவர் எனக்குத் தந்தார். ஆர்த்தியைக் கருவில் சுமந்த காலத்தில் முற்றிலும் தெய்வீகமான சூழ்நிலை- யிலிருந்தேன். சேற்றில் செந்தாமரை முளைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். என்மகள் யாராலும் தீண்ட இயலாத கனலாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். என் கணவரிடம் என் விருப்பத்தைக் கூறினேன். அவர் ‘நீ ஏன் இந்தத் துறையை விட்டு விலகிவிடக் கூடாது?’ என்றார்.

ஆனால் பழகிவிட்டதால் என் கலைமீது எனக்குள்ள ஆர்வத்தை விட முடியவில்லை. அதேசமயம் நான் பட்ட ரணங்களும் மறக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை எதிர்நீச்சல் போடுவது என்று முடிவு செய்தேன். ஆனால் என் குழந்தை - அது ஆணோ, பெண்ணோ அதற்கு என் அவஸ்தைகளில்லாத தூய வாழ்வு அமைய வேண்டும் என்றாசைப்பட்டேன். எனவேதான் ஆர்த்தி கருவானது உறுதியானதும் முதலில் கருவைக் கலைத்துவிடத்தான் எண்ணினேன். ஆனால் இறைநியதி வேறுவிதமாய் இருந்தது. தெய்வாதீனம் என்பார்களே அது என் வாழ்வில் நிகழ்ந்தது. அதனால் ஒரு தெய்வீகச் சூழலில் தங்கி ஆர்த்தியைப் பெறும் பேறு பெற்றேன்.

‘ஆர்த்தியின் பிறப்பில் சுவையான நிகிழ்ச்சி ஏதோ நிகழ்ந்திருக்கிறதா?’ என்றாள் ஆர்வம் பொங்க.

‘ஆமாம் சுபா. அதைச் சொல்ல நேரம் வந்துவிட்டது. ஒரு வேளை என் குழந்தை என்னை அன்புள்ள அம்மாவாக ஏற்காமலேயே நான் இறக்க நேர்ந்தால் நீ இதை அவளுக்குச் சொல்லிவிடு. அப்போதுதான் என் பிராணன் அமைதியுறும்’ என்று உருக்கத்துடன் கூறினாள் சுமதி.

‘அப்படி ஒரு நாளும் நேராது சுமதி. இனிமேல்தான் அவள் உன்னை மிகவும் நேசிக்கப் போகிறாள்’ என்று உறுதியுடன் கூறினாள் சுபா.

‘நான் கருவைக் கலைப்பது என்று முடிவெடுத்ததும் என் நெருங்கிய தோழி டாக்டர் தேவிக்குப் போன் செய்தேன்’.

*****

‘ஹலோ! வசந்தி, ஏது இத்தனை தூரம்? என்னை உனக்கு நினைவுகூட இருக்கிறதா என்ன?’ என்று உரிமையுடன் வரவேற்றாள் டாக்டர் தேவி. இவள் M.B.B.S., M.D.,-யாவும் முடித்து ‘சூப்பர் ட்ரீட்மெண்ட் கிளினிக்’ என்ற அந்த மருத்துவமனையையும் கட்டி நிர்வாகம் செய்கிறாள்.

‘இங்கு சென்னையிலிருக்கும் என் பழைய மேலதிகாரி தமக்கு உடல்நலக்குறைவு என்று என்னை வரும்படி அழைத்திருந்தார். அதன் பொருட்டு வந்தேன். போகும்போது உன்னை நலம் விசாரிக்க வந்தேன். எப்படியிருக்கிறாய்? வீட்டில் யாவரும் நலந்தானே?’ என்றாள் வசந்தி.

யாவரும் நலந்தான். ‘நீதான் எங்கும் வருவதில்லையென்று சாமியார் போல் வாழ்கிறாய். வேடிக்கையைப் பார். நீ எம்.ஏ. படித்தாய். நானோ எம்.பி.பி.எஸ் படித்தேன். உடல் நலமில்லாதவர் என்னை அழைக்காமல் உன்னை அழைக்கிறார்’ என்று கூறிச் சிரித்தாள் டாக்டர் தேவி.

‘என்ன செய்வது தேவி. உன் மருத்துவத்திற்கு உடற்கூற்றினைப் பற்றிய அறிவு வேண்டும். என் மருத்துவத்திற்குச் சுயக்கட்டுப்பாடும், பூரண இறையார்வமும் வேண்டும். எல்லோரும் டாக்டரை மட்டுமே நம்புவதில்லை. சிலர் கடவுளை மட்டுமே நம்புகின்றனர்’ என்று வசந்தியும் பதிலுக்கு வேடிக்கையாய்க் கூறிச் சிரித்தாள்.

‘ஆனால், வசந்தி, டாக்டரை நோயாளிகள் நம்பினாலும், டாக்டர்கள் கடவுளைத்தான் நம்புகிறோம். நீ இங்கு வந்தால் இந்தச் சூழலில் ஒரு சக்தி வருகிறது. அதனால்தான் வீட்டிற்கு வராவிட்டாலும் கிளினிக்குக்கு மட்டுமாவது வந்துபோ என்கிறேன். உன் நம்பிக்கையும், முயற்சியும் எனக்கில்லை என்பது உண்மைதான்’ என்று பேசிக் கொண்டிருந்த போதே, தேவிக்குப் பிரபல திரைப்பட நடிகை சுமதியிடமிருந்து போன் வந்தது.

“ஹலோ தேவி! சுமதி ஹியர்” என்றாள்.

“யா, யா தேவிதான் சொல் சுமதி” என்றாள் தேவி.

“நான் கருவைக் கலைத்துவிட விரும்புகிறேன் தேவி” என்றாள் சுமதி.

இப்போது தேவிக்கு ஒரு யோசனை தோன்றியது. போனைக் கையால் மூடிக்கொண்டு, வசந்தியைப் பார்த்து, ‘வசந்தி! உனக்கொரு கேஸ் தரவா?’ என்றாள்.

‘உன்னால் குணப்படுத்த முடியாத கேஸா?’ என்றாள் விளையாட்டுச் சிரிப்புடன் வசந்தி.

‘உண்மையில் இது என்னால் குணப்படுத்த முடியாத கேஸ்தான். சொல் வசந்தி. இந்தப் பெண்ணை உனக்கு அறிமுகம் செய்து வைக்கவா’ என்று பேரார்வத்துடன் கேட்டாள். சுமதியின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரிய தோழி டாக்டர் தேவி. தேவியின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய தோழி வசந்தி. எனவே, முன்பே தன் கருவைப்பற்றிய ஆர்வத்தையும், வேதனையையும் தன்னிடம் கூறியுள்ள சுமதிக்கு நல்லது செய்ய டாக்டர் தேவி பெரிதும் ஆசைப்பட்டாள்.

‘இறைவனின் கருத்து எதுவோ அதற்கு நான் உடன்படுவேன்’ என்றாள் வசந்தி.

‘சரி! உன் இறைவனிடம் கேட்டுச் சொல்’ என்று கூறி அவள் சமர்ப்பணம் செய்து பதில் கூறட்டும் என்ற முடிவுக்கு வந்து, ‘ஹலோ சுமதி! ஒரு அரைமணி நேரம் பொறுத்துக் கொள்ள வேண்டும். உனக்காக இங்கொரு முக்கியமானவருடன் ஒரு ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறேன். மீண்டும் உன்னை போனில் கூப்பிடுவேன். எங்கும் போக வேண்டாம் ப்ளீஸ் சுமதி’ என்றாள்.

‘சரி தேவி, நான் உன் போன்காலுக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று போனை வைத்துவிட்டாள். ‘வசந்தி! இது என் ஆபீஸ் ரூம். இங்கு யாரும் வரமாட்டார்கள். நான் வெளியில் இருக்கிறேன். நீ சமர்ப்பணம், தியானம் இவற்றை முடித்துவிட்டு என்னைக் கூப்பிடு’ என்று கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தாள்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு மிகுந்த புத்துணர்வுடன் சமர்ப்பணம், தியானம் முடித்து எழுந்தாள் வசந்தி.

‘ப்ளீஸ் தேவி! கம் இன்’ என்று அழைக்கவே தேவி புஷ்டோரை மெல்லத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

‘என்ன வசந்தி, ஓ கே. வா? அந்தப் பெண்ணை நீ சந்திக்க ஏற்பாடு செய்யவா? உன்னைத் தனியே சந்தித்தால் அவள் மனம் திறந்து பேசுவாள்’ என்றாள் தேவி.

‘ஏற்பாடு செய் தேவி. அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசுகிறேன்’ என்றாள் வசந்தி.

‘ஹலோ சுமதி! ஐயம் தேவி ஹியர் என்றாள். ஹலோ தேவி! உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றாள் சுமதி. அவள் குரலில் கவலை, பதற்றம், குழப்பம் யாவும் தெரிந்தது.

‘பதற்றம் வேண்டாம் சுமதி. இங்கு ஒரு தெய்வீகமான பெண்ணை நீ சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். கிளினிக்கில் கூட்டமிருப்பதால் பக்கத்தில் லோட்டஸ் காம்ப்ளெக்ஸில் ரூம் புக் பண்ணிவிட்டேன். ரூம் நம்பர் பத்து. நீ உடனே புறப்பட்டுவா. ரூமில் வசந்தி மட்டும் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்’ என்றாள்.

‘தாங்க்யூ, தாங்க்யூ, சோ மச் தேவி, நான் உடனே புறப்பட்டுவிட்டேன்’ என்று கூறி புறப்பட்டு விட்டாள் சுமதி.

லோட்டஸ் காம்ப்ளெக்ஸின் பத்தாம் எண் அறைக் கதவைத் திறக்கும்வரை சுமதிக்கு ஒரே படபடப்பு. நான் யாரைச் சந்திக்கப் போகிறேன். தெய்வீகமான பெண் என்றாளே. யாரேனும் துறவியாய் இருக்குமோ, என்று எண்ணியவண்ணம் கதவைத்திறந்து ‘உள்ளே வரலாமா?’ என்று பணிவாகக் கேட்கிறாள்.

‘உள்ளே வரலாம்’ என்று அழைக்கும் அழைப்பே முன் எப்போதும் கேட்டிராத இனிமையாய், தெய்வீகமாய் இருந்தது. கோயில் கருவறைக்குள் சென்றது போல் போலியான புறம் கரைந்து, உண்மையான அகம் வெளிப்பட்டது போல் ஓருணர்வு எழுகிறது.

புன்னகை தவழும் முகத்துடன் சாந்தமே வடிவாய் எதிரே நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் அந்தப் பெண். கதவைத் திறந்து உள்ளே வந்த என்னை வரவேற்பதுபோல் சிரித்துக் கொண்டே தலையசைத்தாள். அவளுக்கெதிரே இருந்த நாற்காலியைக் காட்டினாள் உட்கார்வதற்கு. இருகரம் குவித்தேன். அவளும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தாள்.

அம்பாள் மானுடவடிவில் வந்தால் இப்படித்தான் இருப்பாளோ? எவ்வளவு தெய்வீகம் அவள் முகத்தில். அம்பாளாய் நடித்துப் பிறர் வழிபட ஆளாயிருக்கிறேன். மானுடமாய் நடிக்கும் ஈஸ்வரியை கண்டு நான் வணங்கினேன். என் வயது தானிருக்கும் எவ்வித மேக்கப்பும் இன்றி வரைந்த ஓவியம் போன்றிருந்தாள். முகத்தில் தெளிவு. கண்களில் அதீத ஒளி. அவள் கண்களில் கனிவிருந்தது. பிரமிப்புடன் நின்றேன்.

‘உட்காருங்கள்’ என்றாள் பரிவுடன். உடனே நான், ‘நீங்கள் என்னைச் சுமதி என்று ஒருமையில் அழைக்கவேண்டும். அப்போதுதான் என்னால் மனம் விட்டுப் பேசமுடியும்’ என்றேன்.

‘என் பெயர் வசந்தி. நீயும் என்னை அப்படியே அழைக்கலாம். உன்னிடம் உரிமையுடன் நடக்க எனக்கும் உதவியாக இருக்கும்’ என்றாள்.

திடீöரன கடந்த காலத்தில் நேர்ந்த சிறுமைகளை, அவலங்களை நினைத்து அழவாரம்பித்தேன். நான் அழுது முடிக்கட்டும் என்பதுபோல் காத்திருந்தாள். டேபிள்மீது மூடிவைத்திருந்த தண்ணீர் கிளாஸை எடுத்துக் கொடுத்தாள். குடித்தேன்.

‘என் தொழிலில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் தொல்லை வருவது தவிர்க்க முடியாததாயிருந்தது’, என்றேன். ‘என்ன தொழில் செய்கிறீர்கள்?’ என்றாள். பிறகுதான் அவள் உலகில் இருந்து கொண்டே தனக்குள் வாழும் வித்தியாசமான பெண் என்று தெரிய வந்தது. நான் ஒரு பிரபல நடிகை என்பதை அவள் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தது. என் அகந்தைகூடச் சிறிது ஆட்டம் கண்டது.

‘நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பதில்லையா?’ என்றேன்.

‘பொழுது போகாதவர்களுக்குத் தேவை அது. எனக்குப் பொழுது போதவில்லை’ என்றாள் மென்மையாகச் சிரித்துக் கொண்டு.

‘அழகும், திறமையும் இருந்ததால் திரைப்படத் துறைக்கு வந்தேன். இளமையும், பெண்மையும் பாதுகாப்பில்லாதவர்களுக்கு எதிரி என்பதைப் பல நேரங்களில் உணரச் செய்யும் நிகழ்ச்சிகளால் மனம் அடிபட்டது. முன் வைத்த காலைப் பின் வாங்க முடியாத நிலை ஒருபுறம். அரிதாரம் பூசி உள்ளத்து அழுக்கை மறைக்கும் அற்பர்களைச் சந்தித்தேன். கண்ணியமான கதாநாயகன் வேடத்திற்குள் பதுங்கியிருந்த கயவர்களைத் தவிர்க்க முடியாத அவலங்களை அனுபவித்தேன். எதிர்க்கத் துணிவின்றி, ஏற்க மனமின்றி நடிப்புத்துறைமீது கொண்ட பற்றினால் கறைபட்ட ஒரு வாழ்வு வாழ்ந்தேன். தெய்வத்தின் கருணையால் நீரையொதுக்கி பாலை மட்டும் பருகும் அன்னப்பறவை போல் என் அழுக்குகளைப் புறக்கணித்து என் அகத்தின் மென்மையை, உண்மையை நேசித்த ஒருவர் என்னை மணந்தார். மணவாழ்வின் பரிசாக கரு உருவானது. ஒரு புறம் மகிழ்ச்சி. இருந்தாலும், என் கசப்பான அனுபவங்கள் கருவை உருவாக்கி செம்மையாய் வளரவிடாதோ என்று மனம் அஞ்சுகிறது. அதனால் குறையான குழந்தையைப் பெற்றெடுப்பேனா என்று ஐயம் எழுகிறது. அதனால்தான் கலைத்துவிட நினைக்கிறேன்’ என்றேன்.

‘வேண்டாம் சுமதி! கருவைக் கலைக்க வேண்டாம். சொல்லப் போனால் ஒரு நல்ல ஜீவனை உலகுக்குக் கொண்டு வரும் வாய்ப்பு உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா? நீ வாழ்வின் அவலங்களை நேருக்கு நேர் சந்தித்திருப்பதால் அவற்றை அவற்றிற்கெதிரான நலங்களாக மாற்ற உடன் பட்டால் அது உயர்ந்த பயனைத்தரும். மனவமைதியற்ற நிலையில் ஒரு நல்ல குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதோ என்றஞ்சுகிறாய். உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை உயர்ந்த தன்மையுடைய குழந்தையாக உன் வயிற்றில் வளர ஒரு உபாயமிருக்கிறது. அதற்கு ஓருயர்ந்த சூழலை உன்னைச் சுற்றி உருவாக்க வேண்டும். அத்தகைய சூழலுக்கு நீ வரச் சம்மதித்தால் நான் உன்னை என்னுடன் அழைத்துப் போகிறேன். உன் கடந்த காலத்தை மறக்கவும், இப்போது நீ இருந்து கொண்டிருக்கும் சூழலை விட்டு நீங்கவும் அது உதவியாயிருக்கும். உன் தொழிலுக்குத் தற்காலிகமாகவாவது விடுமுறையளித்துவிட்டு என்னுடன் வா. குழந்தை பிறக்கும் வரை என்னுடனிருக்கலாம்’ என்றாள்.

எனக்கு அவள் பேச்சு நம்பிக்கையூட்டியது. என் குழந்தை என்ற என் ஆர்வம் நிறைவேறப்போகும் மகிழ்ச்சி கலக்கத்தைக் கவலையைப் போக்கிற்று. கையிலிருப்பதை எல்லாம் நடித்துக் கொடுத்துவிட்டு ஓராண்டு விலகியிருக்க முடிவு செய்திருப்பதாய்க் கூறி தொழில் தொடர்பான யாவற்றையும் விட்டுவிலகி பரசுராமின் ஒப்புதலுடன் வசந்தியுடன் சென்றேன்.

எந்த உலகைச் சேர்ந்த பெண்ணிவள் என்று வியக்கும் படியிருப்பாள். தெய்வீகம் மேற்கொண்ட மானுட வடிவமோ இவள்? அமைதிக்கும் ஓருருவம் உண்டென்றால், சாந்தம் ஓருருக் கொள்ளுமென்றால் அது இவள் உருவம்தான். துயரங்களால் தீண்ட முடியாத ஒரு மானுடப்பிறப்பு இருக்கும் என்றால் அது இவள்தான். உலகைத் துறந்த பின்னும் காட்டிற்கு ஓடாத துறவி உண்டென்றால் அது இவள்தான். பற்றுக்களால் பற்ற முடியாத பற்று அவள். வேலும், வாளும் ஏந்தாத வீராங்கணை. யாரைப் பார்த்தாலும் விருப்பு, வெறுப்பின்றிச் சிரிக்கும் குழந்தையின் கள்ளமில்லாச் சிரிப்பே அவள் அணிந்திருக்கும் அணிகலன். நெஞ்சத்து உறுதியே அவள் ஆயுதம். பகைமை, பொறாமை, சுயநலம், இவை இவளைச் சந்திக்க நேர்ந்தால் அவை அவள் தூய்மையின்முன் வலுவிழந்து வடிவிழந்து விடும். ஆண், பெண் சிறியவர், பெரியவர் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடுகளெல்லாம் இவள்முன் வேறுபாடழிந்து தம் சுய ஜீவனைத் தொட்டுவிடும்.

பிரபல நிறுவனமொன்றில் நல்ல வேலையிலிருந்தாள். ஆனால் அவள் ஒரு வீட்டில் யார் துணையுமின்றித் தனியாக இருந்தாள்.

அவள் வாழும் சூழலும் அவளைப் போலவே தெய்வீகம் மேற்கொண்டிருந்தது. நகரைவிட்டு விலகி உள்ளடங்கிய பகுதி பச்சிலைக்காடு. உள்ளே எளிமையும், புதுமையும் கலந்த வீடுகள். வீடுகள் இருப்பதே கண்ணில் தெரியாத அளவு மரஞ்செடி கொடிகள். வண்ணமும், வனப்பும், மணமும் கொண்ட பூக்களை ஆடையாய் அணிந்த, ‘மனோரஞ்சிதம்’ என்ற பெயர் கொண்ட குடியிருப்புப் பகுதியது. அதில் நடுநாயகமான வீடு அவள் வசிப்பது. ஒவ்வொரு வீடும் வரிசையாய் நடப்பட்ட செடிகளையே சுற்றுச் சுவராய்க் கொண்டிருந்தன. துளசியும், மல்லியும் இணைந்து மணம் பரப்பும் இடம் அது. தூய காற்று. ஆழ்ந்தகன்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டுவரும் குழாய் இணைப்புகள் எங்கும் இருந்தன. வளமான பகுதி. ஆதரவற்றதால் அவலங்களைச் சந்தித்த எனக்கு எப்படி ஒரு பெண் தனியாக இருக்கமுடியும் என்று வியப்பு. ஆரம்பகாலத்தில் நான்பட்ட துன்பங்களையெல்லாம் எண்ணிக்கொண்டேன்.

‘சுற்றத்தார் யாருமில்லையா?’ என்று அவளிடம் கேட்டேன்.

‘உலகமுழுதும் என் சுற்றமே’ என்பாள் சிரித்துக்கொண்டே.

‘தனியாக இருப்பதற்கு பயமாக இல்லையா?’ என்று கேட்டேன்.

‘நமக்குள் மறைந்திருக்கும் அந்த அற்புதப் பொருளைக் கண்டுபிடித்து அதனுடன் தொடர்பு கொண்டுவிட்டால் தனிமையேது? பயமேது?’ என்றாள். வெகுஇயல்பாக. எனக்கு அவள் செயல் ஒவ்வொன்றும் வியப்பளித்தது. பெருமிதமாகவுமிருந்தது.

அவளை மற்றவர் பார்க்கும் பார்வையில் மரியாதை தெரிந்தது. நம்பிக்கையுடன் அவளை நாடி வருபவர்கள் எத்தனை பேர். பரோபகாரம் என்ற பெயரில் அவள் எதுவும் செய்யவில்லை. மிக இயல்பாக இருந்தாள்.

என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டாள். நூலகம் போல் ஓர் அறையைப் பாதுகாத்தாள். சில நேரங்களில் இங்கு அமர்ந்து இனிமையாக வீணை வாசிப்பாள். அதிகாலையிலும், நடு இரவிலும் கூட தியானம் செய்வாள். ஆனால் சுவாமி அறை என்று ஏதுமில்லை. வீட்டின் தூய்மையில் கவனமாயிருப்பாள். ஆடம்பர அலங்காரப் பொருட்கள் ஏதுமிராது.

எனக்கு நேரத்தில் பரிவாக உணவளிப்பாள். என்னைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ எதுவும் பேசமாட்டாள். ஆனால் நான் என் குழந்தை மிக நல்ல முறையில் உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டதை வரவேற்கும்படியாக நடந்து கொள்வாள். அவளுடனிருந்தது குறுகிய கண்ணோட்டத்தை, அற்ப சிந்தனைகளைக் கடக்கச் செய்தது.

அவளுடன் சிறிது பேசினாலும் என் அறியாமை வெளிப்பட்டு, அவள் உயர்வுணர்வால் வெட்கப்பட்டு மறைந்துவிடும். ஒரு முறை நான் அவளிடம் ‘நீ எந்த மதத்தைப் பின்பற்றுகிறாய்?’ என்று கேட்டேன்.

‘ஏன் அப்படிக் கேட்கிறாய்?’ என்றாள். இந்த வீட்டில் எந்தக் கடவுள் படமும் இல்லை. வேறு வழிபாட்டு முறைகள் எதனையும் நீ பின்பற்றுவதில்லை. அதனால் கேட்டேன் என்றேன்.

‘மதம் என்பது நடைவண்டி போன்றது. நடக்கப் பழகும் வரைதான் நடைவண்டி தேவை. நடக்கத் தெரிந்தால் வண்டியைத் தேடுவதில்லை. விரைந்து நடக்கவும் ஓடவும் முயற்சி செய்ய வேண்டும்’ என்றாள்.

‘மதம் நடைவண்டி என்பது சரி. ஓடுவது, நடப்பது என்று எதைச் சொல்கிறாய்’ என்றேன்.

‘அடுத்த நிலை ஆன்மீகம்’ என்றாள். ‘ஆன்மீகம் பற்றி ஒன்றும் புரியவில்லை’ என்றேன்.

‘இது சொல்லிப் புரியவைப்பதைவிட ஆர்வத்தால் தானே விளங்குவதுதான் சிறந்தது’ என்றாள்.

‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டேயிருக்கிறாயே, எதைப்பற்றி?’ என்று கேட்டேன்.

‘இறைவனுக்கே என்னைத் தருவது எப்படி என்று படிக்கிறேன். இறைவன் என்னில் செயல்படுவது எப்படி என்பது பற்றிப் படிக்கிறேன்’ என்பாள் புன்னகை மாறாமல்.

அவள் சொல்லிலும், செயலிலும் தூய்மை இருந்தது. அவள் வசிக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்திருந்தாள். தேவையில்லாது ஒரு சொல்லும் பேசமாட்டாள். இயன்றவரைப் படிப்பு, செயல் இரண்டும் இருக்கும். என் முகக் குறிப்பறிந்து என்னை எதுவும் கேட்காமலேயே என் தேவைகளைப் புரிந்து கொள்வாள். நிறைய பேச வேண்டும் என்ற எண்ணம் தேவையற்றது என்றுணர்ந்தேன். திரைப்படத்தில் என் பார்வையையும் சிரிப்பையும் கண்டு மனம் பறிகொடுத்ததாய் எனக்கு வரும் கடிதங்கள் எத்தனை அர்த்தமற்றவை என்று தோன்றும். அவள் விழியிலும், சிரிப்பிலும் ஒரு காந்த சக்தியிருந்தது. அது நடிப்புக்காக முயன்று செய்யப்பட்டதன்று. இறைவன் தந்த வரங்களாக இயல்பிலேயே அமைந்திருந்தது.

அவள் என்னைப் பார்த்து மென்மையாகச் சிரிக்கும் போது எனக்குள்ளே கடந்தகால அவலங்கள் பொடிப்பொடியாய்ச் சிதறிவிடும். இலேசான ஓருணர்வு உள்ளே எழுந்து உடல் முழுதும் பரவும். அவள் உடனிருப்பது மனதிற்குத் திடமாகவும், உற்சாகமாகவுமிருக்கும். எதைப்பற்றியும் கவலையின்றி, நேர்மையாக அமைதி தவழும் வாழ்வு வாழ்ந்தாள்.

‘நீ சிறுவயதில் கூட திரைப்படம் பார்த்ததில்லையா?’ என்று ஒரு முறை கேட்டேன். எனக்குரிய துறை என்பதால் இப்படிக் கேட்கத் தோன்றியது போலும்.

‘சிறு வயதில் சில படங்கள் பார்த்திருக்கிறேன். ஏனோ எனக்கு அதில் ஈடுபாடே இருந்ததில்லை’ என்பாள்.

‘ஒரு திரைப்பட நடிகையை உங்கள் வீட்டில் வைத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்றும் ஒருமுறை கேட்டு விட்டேன். அவள் தூய்மையின்முன் என்னைப் பற்றிய தாழ்வுணர்வு ஏற்பட்டதால் அப்படிக் கேட்கத் தோன்றியது.

‘உன்னை ஒரு கருவைத் தாங்கியுள்ள தாயாக மட்டுமே பார்க்கிறேன்’ என்றாள்.

அவள் பரிவு எனக்கு அவளிடத்தில் நம்பிக்கையையும் ஒரு உரிமையையும் கூட அளித்தது. எனவே, ஒரு நள்ளிரவில் எனக்கு வயிற்றுவலி வந்தவுடன் அவளை எழுப்பி பதற்றத்துடன் கூறினேன். ஆனால் அவளோ பதற்றமோ, படபடப்போ இன்றி இயல்பாக, ஆனால் இதமாகச் செயல் பட்டாள். முதலில் அருந்தத் தண்ணீர்க் கொடுத்தாள். பிறகு என்னைப் படுக்கவைத்து என்னருகே அமர்ந்து ஒரு பருமனான புத்தகத்தை மௌனமாகப் படிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் சென்றபின் என்னையறியாமல் உறங்கிவிட்டிருக்கிறேன். நான் கண்விழித்தபோது பொழுது விடிந்திருந்தது. அவள் எனக்குச் சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தாள். இரவு வலி வந்ததே மறந்துபோய்விட்டது.

அதுபோலத்தான் உடல் நலக்குறைவாக நான் எந்தப் பிரச்சனையைச் சொன்னாலும் உடனே அந்தப் பருமனான புத்தகத்தைக் கொண்டுவந்து என்பக்கத்தில் அமர்ந்து படிக்கத் தொடங்கி விடுவாள். அந்தப் புத்தகத்தின் மேல்புறத்தில் ‘லைப் டிவைன்’ என்று எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

தெய்வீக வாழ்வு என்ற பொருளில் இப்புத்தகம் இருக்கிறதே. எது தெய்வீக வாழ்வு என்று சுருக்கமாகச் சொல்லும்படி ஒரு முறை கேட்டேன்.

நம் அகந்தைக்குப் பின்னால் நம் ஆன்மா மறைந்திருக்கிறது. மறைந்திருக்கும் ஆன்மா வெளிவந்து அகந்தையை அழித்து அதற்குப் பதிலாக தான் செயல்படுவது தெய்வீக வாழ்க்கை என்றாள்.

அதைப்பற்றி மேலும் அறிய எனக்கு ஆர்வமில்லை. என் கடந்த கால அவலங்களை எல்லாம் அவளிடம் சொல்லி அழுவேன். அவற்றையெல்லாம் மறந்துவிடுவது நல்லது என்று சொல்வாள். பழைய துன்பங்களை நினைப்பதால் துன்பம் வளரும். அதை அடியோடு புறக்கணித்துவிடு. இப்போதுதான் பிறந்தது போல இந்தக் கணத்திலிருந்து புத்துணர்வுடன் வாழத் தொடங்கு என்பாள். ஆனால் நானோ என் கடந்த கால பலவீனங்கள், குறைகள், கெட்ட எண்ணங்கள், வெறுப்புணர்வு, எரிச்சல், பொறாமை, போட்டி, இவற்றையெல்லாம் எண்ணி வெட்கப்பட்டு அவளிடம் மனம்விட்டுக் கூறுவேன்.

‘உனக்கு ஒன்று தெரியுமா? நல்லெண்ணம் உள்ளவர்களை விட, தீய எண்ணம் அதற்கெதிரான நல்லெண்ணமாக மாறியவர்களின் சக்தி பெரியது. திருடனுக்குத் திறமையதிகம். திருட்டுக்குப் பயன்படுத்தும் அறிவை நல்லதிற்குப் பயன்படுத்தினால் பலன் அதிகம். அதுபோல், நீ கூறிய குறைபாடுகள் அப்படியே வெளிப்பட்டால் தவறுதான். அவற்றை அவற்றிற்கெதிரான நல்ல குணங்களாக மாறச் செய்தால் அளவுகடந்த நன்மை பெறுவாய். சேற்றில் செந்தாமரை போல் உன் குழந்தை உயர்ந்த குணங்களைப் பெறும். பெற்றவர்களிடம் வெளிப்படாமல் அடங்கியுள்ளவை பிள்ளைகளிடம் வெளிப்படும் என்றொரு சட்டம் உண்டு’ என்றாள்.

என் குறைகள் ஒவ்வொன்றையும் உள்ளே குணங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். என் உள்ளத்து குறைபாடுகள் குறைந்து புத்துணர்வு எழுந்தது. எப்போதும் மகிழ்ச்சியாய் இனிமையாய் உணரவாரம்பித்தேன். புலம்பல், அழுகையாவும் ஓய்ந்தே போயிற்று. பழைய சோர்வுகள் சுத்தமாக அழிந்து போனது.

எவ்வித இடையூறுமின்றி இயல்பான முறையில் ஆர்த்தி பிறந்தாள். பிறந்த ஒரு மாதம் வரை அங்குதான் இருந்தேன். பிறகுதான் வந்தேன். வந்தவுடன் இறைவன் உன்னையும் என்னிடம் அனுப்பிவைத்தான். ஆர்த்தியை வளர்ப்பதில் இடையூறு ஏதுமில்லாதிருந்தது என்று கூறி முடித்தாள் சுமதி.

அத்தனை மாதங்கள் அங்கு தங்கியிருந்தாயே, உன் பிரிவை அந்தப்பெண் எப்படி உணர்ந்தாள்.

எனக்குத்தான் அவளைவிட்டுவர மனம் வரவில்லை. ஆனால் அவள் இயல்பாகவே இருந்தாள். அவளிடம் பிரிவின் பாதிப்பு ஏதுமில்லை. சாதாரண மனவுணர்வுகளையெல்லாம் அவள் கடந்திருந்தாள். இத்தனைக்கும் நான் அங்கிருந்த வரை குழந்தையைக் கொஞ்சுவாள். மடியில் வைத்துக்கொண்டு அதன் சிரிப்பை இரசிப்பாள். பூப்போன்ற பாதங்களைத் தொட்டு மகிழ்வாள். கடவுள் தரிசனம் என்பாள். ஆனால் பிரிவிற்கு அவள் எவ்வித மாற்றமும் தெரிவிக்கவில்லை. அன்புடன் வழியனுப்பினாள். கிடைப்பதை ஏற்கவும், போவதை விட்டுவிடவும் அவளால் முடிந்தது. ஒரு பெரிய தொகையைக் கொடுக்க மிகவும் விரும்பினேன். ‘என் பயிற்சிக்கு நீ ஒரு வாய்ப்புக் கொடுத்திருப்பதாய் கருதுகிறேன். இதைப் பெரிதுபடுத்தாதே’ என்றாள்.

‘ஏதோ பயிற்சி செய்கிறாள் என்றாயே, அது என்ன பயிற்சி என்று புரிந்ததா?’ என்றாள் சுபா. ‘ஒவ்வொரு செயலிலும் இறைவனை வெளிப்படுத்த முயற்சிப்பதாகக் கூறுவாள். அந்தப் பெரிய விஷயமெல்லாம் என்னால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் அவள் நம்மைப்போல சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படும் சாதாரண- மானவள் அல்லள் என்பது மட்டும் அவளுடன் ஓரிரு நிமிடம் பழகினாலும் புரிந்துவிடும்’ என்றாள் சுமதி.

‘அப்படியா? வித்தியாசமாகவும், விசித்திரமாகவுமிருக்கிறது. எனக்கே அந்தப் பெண்மணியைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது’ என்று சுபா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுமதியின் கணவர் அங்கு வரவே சுபா தன்னிடத்திற்குத் திரும்பிவிட்டாள்.

போர்வையை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாவனை செய்கிறாள் என்று ஆர்த்தியிடம் சென்றாள். ‘ஆர்த்தி!’ என்றழைத்த வண்ணம் போர்வையை விலக்கி முகத்தைப் பார்த்தாள் சுபா. முத்துமுத்தாய் வியர்த்திருக்க சிறு குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தாள். சற்றுமுன் இருந்த கோபம் இருந்த இடம் தெரியவில்லை. இவள் காட்டிய வெறுப்பில் கலங்கிப் போய் உறக்கமின்றி இருந்தாள் சுமதி. இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?

செல்வந்தர்களுக்குரிய சோம்பேறித்தனம் ஆர்த்தியிடம் சொந்தம் கொண்டாட முடியாமல் தோற்றது. அதிகாலையில் யாவரும் எழுந்திருக்கும் முன்பே எழுந்து விடுவாள். தொடக்கத்தில் இது சுபாவுக்கே தெரியாதிருந்தது. இத்தனை காலையில் எழுந்து என்னதான் செய்கிறாள்? வீடு பூராவும் அவளைத் தேடிக்காணாது இறுதியில் அவள் படிக்கும் அறையில் லேசான ஒளிவருவதைக் கண்டு மெல்லக் கதவைத் தட்டினாள். மெல்ல வந்து கதவைத் திறந்த ஆர்த்தி புன்னகையோடு நின்றாள். ‘இத்தனை காலையில் எழுந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்? படிக்கிறாயா?’ என்றாள்.

மெல்ல அவள் கையைப் பற்றி, உள்ளே அழைத்து கதவைத் தாளிட்ட பிறகு, நிறுத்தி வைத்திருந்த டேப்ரிகார்டரை ஆன் செய்து சிறிய அளவில் ஒலியைக் குறைத்து வைத்துத் தானும் உடன் பாடினாள். இனிய குரல்வளம் ஆர்த்திக்கு. என்ன இனிய பாடல்? மகிழ்ச்சி மேலிட கண் பனித்தது சுபாவுக்கு. ஆர்த்தியை அணைத்து உச்சிமோர்ந்தாள். முத்தமிட்டாள். சுபாவின் இந்த அன்பில் அடங்கிப் போனாள் ஆர்த்தி.

என்ன விந்தையிது? உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி; மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ என்ற பாடல் வரிக்குச் சுமதியின் பாவம் கண்டு பாராட்டியவர்கள் ஏராளம். ஆனால் அந்தத் தாயன்பை உண்மையான மகளிடம் வெளிப்படுத்த வாய்க்கவில்லையே அவளுக்கு.

‘ஆர்த்தி! இந்த இசையை நீ வெளியுலகிற்குத் தரப் போவதில்லையா?’ என்றாள் சுபா.

‘பெரியம்மா! இது புகழுக்குப் பாடும் பாட்டில்லை. இறைவனுக்கு நிவேதனமாய்ச் செய்யப்படும் இசையாராதனை. இதை வெளியில் பரப்பத் தேவையில்லை’ என்றாள் ஆர்த்தி.

‘அப்படியானால், அந்த பகுதியிலிருந்து ஒரு சுவாமி படமாவது கொண்டு வந்து இங்கு வைக்கட்டுமா?’ என்றாள் சுபா.

‘பெரியம்மா! இந்த அறையில் சுவாமி இல்லை என்றா நினைக்கிறீர்கள்?’ என்றாள் ஆர்த்தி. ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனாள் சுபா. இவளுக்குள் உள்ள இந்தக் கோணங்களை அவள் பார்த்ததில்லை.

‘அப்படியென்றால் சுவாமி படம் வைத்து ஆராதிப்பவர்களெல்லாம் ஒன்றும் தெரியாதவர்களா?’ என்று விளையாட்டாய்க் கேட்பதுபோல் அவள் உணர்வை எடை போட்டாள் சுபா.

‘அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது பெரியம்மா. நான் பாடும்போது மெய்மறக்கிறேன். என்னை மறந்து இறைவனோடு இணைகிறேன். அப்போது எனக்கு ஏதும் தேவைப்படுவதில்லை’ என்றாள் ஆர்த்தி.

அவள் தன்னறையையும், பொருட்களையும் மிக ஒழுங்காய் வைத்திருப்பாள். புத்தக அலமாரியைக் கவனமாகப் பாதுகாப்பாள். ஒரு புத்தகம் ஒழுங்கற்ற முறையில் செருகப்பட்டாலும் அவளுக்குப் பிடிக்காது. அவசரம், அவதியென்று பொருட்களை முறையற்றுக் கையாளமாட்டாள். பணிப்பெண்கள் செய்யட்டும் என்று அலட்சியமாக இருக்கமாட்டாள். அப்படிச் செய், இப்படிச் செய் என்று பணக்கார தோரணையில் எவரையும் ஏவமாட்டாள்.

இவள் புத்தகங்களை அழகுற அடுக்கி எடுத்துக்கொண்டு ஸ்கூல் யுனிபாரத்துடன் கண்குளிரக் கிளம்புவாள். டைனிங் டேபிளுக்கு இவள் வருவதற்குள் சுபா பலகாரத்துடன் இவளிடம் வருவாள். அப்படியே வாயைத்திற ஊட்டி விடுகிறேன் என்று இட்லி விள்ளலைச் சட்னி தோய்த்து எடுப்பாள், போ பெரியம்மா! இப்படிச் செல்லம் கொடுத்து என்னை சோம்பேறி ஆக்காதே என்று எத்தனை முறை சொல்வது என்று உரிமையாய்க் கடிந்து கொள்வாள் ஆர்த்தி.

‘என் கண்ணே! நீ சோம்பேறி ஆவதற்காக நான் இதைச் செய்யவில்லையடா. நீ ஸ்கூலுக்கு நேரத்தில் கிளம்ப உதவியாய் இதைச் செய்கிறேனடா’ என்பாள் சுபா. அந்த அன்பிற்குக் கட்டுப்படுவாள் ஆர்த்தி. ஆனால் உடனே தன் கருத்தைத் தெரிவிப்பாள். ‘பெரியம்மா, நீ சொல்வது போல் நேரத்தில் கிளம்ப முடியாமல் நானென்ன கடுமையான வீட்டு வேலைகளா செய்கிறேன்? இனிமேல் இந்தப் பணிவிடைகளையெல்லாம் நீ செய்யக் கூடாது’, என்று அன்புக் கட்டளையிடுவாள். சுபாவிற்குப் பெருமையாய் இருக்கும். பெண்ணைச் செல்லம் கொடுத்துச் சோம்பேறியாய் வளர்த்திருக்கிறாள் என்று யாரும் பேச முடியாதல்லவா?

தன் பெண் பள்ளிக்குச் செல்லும் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஆவலுடன் ஓரிரு முறை சுமதி அங்கு வந்த போது தன் ஆர்வமெல்லாம் சுருங்கி, வெறுப்புடன் புத்தகப்பையை தோளை விட்டு கழற்றி வைத்து, ஷூ, சாக்ஸை கழற்றி வைத்துவிட்டு அறையில் போய் படுக்கையில் படுத்து விடுவாள். ஆர்த்தி அத்தனை வெறுப்பிலும் அவள் தன் ஸ்கூல் பேக்கை விட்டெறிந்ததோ, ஷூ, சாக்ஸை விட்டெறிந்ததோ கிடையாது. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அம்மா வந்ததில் தனக்கு விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கும் முகமாக உள்ளே போய்விடுவாள். இதன் பிறகு சுமதி அங்கு வருவதை அடக்கிக் கொண்டாள். மனம் பாசத்தால் துடிக்கும். பால்கனியில் மறைந்து நின்று குழந்தை காரில் ஏறுவதைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடிப்பாள் சுமதி.

சுபா தன்மகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பி வரும்வரை (ஷூட்டிங் போகாத நாட்களில்) ஆவலோடு காத்திருந்து சுபா வந்ததும் அவள் கையைப் பற்றி தன் குழந்தையைப் பாதுகாப்பதற்கு நன்றி கூறுவாள். ஆர்த்தி பள்ளியிறுதி வகுப்பும் வந்து விட்டாள்.

‘சுமதி! உண்மையில் நான்தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். தங்கத்தில் பதுமை செய்து தெய்வீகத்தில் தோய்த்தெடுத்தாற் போல ஒரு பெண்ணைப் பெற்று என்னிடம் தந்திருக்கிறாய். நீ வெறும் தேவகி. நானல்லவா யசோதையாய்க் களிக்கிறேன்’ என்று ஆனந்தக்கண்ணீர் வடிப்பாள்.

‘பெரியம்மா! பப்ளிக் எக்ஸாம் டைம் டேபிள் கூட வந்துவிட்டது. இனி ஸ்கூல் போகத் தேவையில்லை. ஸ்டடி லீவ்தான். இங்கு தனியே படிப்பதை விட பாரதியுடன் அவள் வீட்டில் படித்தால் நன்றாக இருக்கும் பெரியம்மா’ என்று கெஞ்சுவது போல் கொஞ்சினாள்.

‘ஆர்த்தி! நீ தினமும் அங்குப் படிக்கப் போனால் அக்கம்பக்கம் கூடிவிடும். சுமதிக்கு இருக்கும் பிரபலம் உனக்குத் தெரியாதா?’ என்று நயமாய்க் கூறினாள் சுபா.

‘போ பெரியம்மா. நான் எக்ஸாம் எழுதப் போவதில்லை. எனக்குப் படிப்பு வேண்டாம்’ என்று கூறி செஸ் போர்டை பிரித்து வைத்துக் கொண்டாள்.

‘ஆர்த்தி! பெரியம்மா உன் விருப்பம் போல் நடக்கிறேனல்லவா. இப்போது நான் சொல்வதை நீ கேட்கக்கூடாதா?

படிப்பில்லையென்றால் என்ன பயன்?’ என்று மிகுந்த பரிவுடன் அருகில் வந்து கூறினாள்.

‘ஒன்றும் ஆகிவிடாது பெரியம்மா. உலகில் படிப்பில்லாதவர்கள் உயிர்வாழவில்லையா என்ன?’ என்று சர்வசாதாரணமாயக் கூறி காய் நகர்த்துவதில் கவனம் செலுத்தினாள்.

சுபா அவளையே பார்த்துக்கொண்டு புன்னகை செய்த வண்ணமிருந்தாள்.

‘என்ன பெரியம்மா அப்படிப் பார்க்கிறாய்?’ என்று அவளை ஒருமுறை பார்த்துவிட்டு விளையாட்டைக் கவனித்தாள்.

‘ஒன்றுமில்லை ஆர்த்தி. கல்வியின் இன்றியமையாமையைப் பற்றி பட்டிமன்றத்தில் பேசிப் பரிசு பெற்றாயே அதை நினைத்துச் சிரித்தேன். தெரிந்துதானே ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்று சொல்லியிருக்கிறார்கள்’ என்றாள் சுபா.

உடனே, செஸ் போர்டை எடுத்து அதன் இடத்தில் வைத்துவிட்டு படிக்கும் அறைக்குள் போய் புத்தகத்தை எடுத்துப் படிக்க உட்கார்ந்தாள். சிறிது நேரத்தில் இவள் அறைவாயில் நின்று கொண்டு ‘மே ஐ கமின்’, என்று பாரதி கேட்டது ஆர்த்திக்கு வியப்பாயிருந்தது. ‘ஹாய் பாரதி! உன்னுடன் சேர்ந்து படித்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டே படிக்க வந்தேன். நீயே வந்துவிட்டாய்.

வா வா’ என்று மிகழ்ச்சியுடன் அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துக் கொண்டாள்.

‘உன் பெரியம்மாதான் என் அப்பாவிற்கு போன் செய்து என்னை அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்டார்’ என்றாள்.

‘அப்படியா?’ என்றாள் ஆர்த்தி. வியப்புடன் ‘உனக்குத் தெரியாதா?’ என்றாள் பாரதி. என் பெரியம்மா எப்போது என்ன செய்வார் என்று சொல்ல முடியாது என்று அறைவாயிலில் வந்து நின்ற பெரியம்மாவைக் குறும்புடன் பார்த்தாள் ஆர்த்தி.

பாரதியின் வருகையை ஆர்த்தி மகிழ்வுடன் ஏற்றத்தைக் கண்டு நிம்மதியுடன் சென்றாள் சுபா.

இடையிடையே அவர்களுக்குத் தேநீர், பிஸ்கட் என்று கொடுத்து அவர்கள் படிப்பதை உற்சாகப்படுத்தினாள் சுபா.

‘ஆண்ட்டி நாளை ஆர்த்தியை எங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்’ என்று அன்புடன் கேட்டுக் கொண்டாள் பாரதி.

சுபாவால் மறுக்க முடியவில்லை. ‘நிச்சயமாக அனுப்புகிறேன் பாரதி’ என்று வாக்களித்தாள்.

நீண்ட நேரம் படித்தபின் இருவரும் உறங்கினர். காலையில் ஆறுமணிக்கு விழித்துக் கொண்ட சுபா அவர்களுக்குத் தொல்லைத் தரக்கூடாது என கவனமாய் இருந்தாள். புதிய இடமானதால் பாரதி உடன் விழித்துக் கொண்டாள். ஆர்த்தி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். சுபா என்ன செய்வது எனத் தயங்கிய போது, பாரதியே ‘ஆண்ட்டி அவளை எழுப்ப வேண்டாம். நான் வீட்டிற்குப் போய் அங்கு மீண்டும் தூங்குவேன்’ என்றாள் சுபா. உடனே டிரைவரை அழைத்துக் காரை எடுக்கச் சொல்லி தானும் உடன் சென்று பாரதியை வீட்டில் விட்டுவிட்டு வந்தாள்.

பாரதி, ‘ஆண்ட்டி மறக்காமல் இன்று இரவு ஏழுமணிக்கு ஆர்த்தியை அழைத்து வந்து விடுங்கள்’ என்றாள்.

தொடரும். . .

*********************

ஜீவிய மணி
**************
 
திறமை வந்தபின் பலன் வர நேரம் வர
வேண்டும். பலனை எதிர்பார்ப்பது அவசரம்.
நேரத்திற்காகக் காத்திருப்பது பொறுமை.
பொறுமையின் அவசியத்தை உணர்வது
நேரத்தை வரவழைப்பது.
 
 



book | by Dr. Radut