Skip to Content

1. குரு மருந்து

குரு மருந்து

இந்த மாநிலத்திலுள்ள எல்லாக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகத் திட்டத்தை அமலாக்கினாலும் ஒரு சில கல்லூரிகட்குச் சிறப்பான பெயருண்டு. கற்பிக்கும் பாடம் ஒன்றேயானாலும் பயிலும் சூழலுக்கு சக்தியுண்டு. ஒரே ஊரில் பிறந்த பலரும் பல அளவில் முன்னேறுகிறார்கள். வாய்ப்பு ஒன்றே, பலன் வேறு. வீணை ஒன்றேயானாலும் பாடகிக்குத் தகுந்த பலன் எழுகிறது நாம் அறிவது. வைத்தியர் பல வியாதிகட்குப் பல மருந்துகள் தயார் செய்தாலும் ஒரு துளி குரு மருந்து சேர்ப்பார்.

அதுவே மருந்தின் வீரியத்தை நிர்ணயிக்கும்.
கல்லூரியின் குரு மருந்து கல்விச் சூழல்.
குடும்பத்தின் குரு மருந்து குடும்பப் பண்பு.
கலையின் குரு மருந்து கலையை வணங்கும் பாங்கு
.

அன்னையின் அன்பராக அவர் முறைகளை ஏற்கிறோம்.

அத்துடன் மனம் பக்குவமாகிக் கெட்டதை விலக்குகிறோம், கெட்ட எண்ணத்திலிருந்து விடுபடுகிறோம், பொறுமையைப் பாராட்டுகிறோம்.

இது போன்ற பழக்கம் மனத்தைக் கடந்து ஆத்மாவில் நிலைக்க முயலும் மனநிலை.

மனத்தை மௌனத்தால் கடந்து, அடக்கத்தால் வென்று, அமைதியால் நிலைபெறச் செய்வது அன்னை வழிபாட்டிற்குரிய குரு மருந்து.

குரு மருந்து சிறு பிரயோகத்திற்கு மலை போன்ற பலன் தருவது.

 

********



book | by Dr. Radut