Skip to Content

11. அன்னை இலக்கியம் - கல்லணை

அன்னை இலக்கியம்

கல்லணை

சமர்ப்பணன்

திவ்யாவாலும், அவள் கணவன் சேகராலும், திருச்சியில் வேணு மாமாவிற்கும், கஸ்தூரி அத்தைக்கும் நடந்த அறுபதாம் கல்யாணத்திற்குப் போக முடியவில்லை. தாமதமானாலும் நேரில் போய் வர வேண்டிய அவசியத்தை முன்னிட்டு - மாமாவும், அத்தையும் மிகவும் வசதியானவர்கள் - தம்பதியர் நான்கு நாட்கள் திருச்சிக்கு விஜயம் செய்தனர். மாமா கொஞ்சம் ஆன்மீகப் பைத்தியம். அத்தை உலக நடைமுறை விவகாரங்களில் கெட்டியானவர். "ஏன் தம்பி, சென்னையிலேயே வளர்ந்த திவ்யா, காவிரியையும், கல்லணையையும் பார்த்தால் சந்தோஷப்- படுவாள். போய் வருவோமா?'' என்று இரண்டாம் நாள் விருந்துபசாரங்கள் முடிந்த பின் கேட்டார் கஸ்தூரி அத்தை. "போகலாமே, நான் கூட காவிரியைப் பார்த்து ரொம்ப காலமாகி விட்டது'' என்றான் சேகர்.

சிறிது நேரத்தில் அனைவரும் தயாராக, கார் கல்லணையை நோக்கிப் புறப்பட்டது. காவிரி பாலத்தைத் தாண்டும் போது காரை நிறுத்தச் சொன்னார் வேணு மாமா. அனைவரும் பாதுகாப்புக் கைப்பிடி சுவரோரமாக நின்று பூரித்துப் பொங்கி ஓடும் காவிரியை வேடிக்கை பார்த்தனர். உற்சாகமாக இருந்த வேணு மாமா தம் வயதை மறந்து கைப்பிடிச் சுவரில் ஏறி உட்கார, "பார்த்து சார், இப்படி உட்காருவது ஆபத்து'' என்று எச்சரித்துவிட்டுப் போனார் ஒரு பொது நல விரும்பி.

"திவ்யா, உன் அதிர்ஷ்டம் இன்று நதி நிறைய நீர் ஓடுகிறது'' என்றார் கஸ்தூரி அத்தை.

"நன்றாக இருக்கிறது. இதுதான் கல்லணையா?'' என்று கேட்டாள் திவ்யா.

"இது பாலம்தான். இன்னும் கொஞ்ச நேரம் பிரயாணம் செய்தால் கல்லணை வந்துவிடும். அதைச் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டினான். இன்னமும் கூட உபயோகத்தில் இருக்கிறது. எந்தத் தொழில் நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் காவிரிக்குக் குறுக்காக ஆயிரம் அடி நீளமும், அறுபது அடி அகலமும், கொண்ட அணைக்கட்டைக் கட்டி பல இலட்சம் ஏக்கருக்கு நீர்ப் பாசன வசதி செய்வதென்றால் சாதாரணமான காரியமா?'' என்றார் வேணு மாமா.

"கரிகாலன் அந்தக் காலத்திலேயே அவ்வளவு பெரிய அணையைக் கட்டியிருக்கிறானே. ஆச்சரியமாக இருக்கிறது!'' என்று தன் மூதாதையரின் சாதனையை எண்ணி வியந்தாள் திவ்யா. "இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. அவனைப் போல ஆள், அம்பு, அதிகாரம் நிறைந்த பெரிய இராஜாவானால் நான் கூடத்தான் எதையும் செய்வேன்'' என்றான் சேகர்.

"நீங்கள் இராஜாவானால் அந்தப்புரம் நிறைய இராணிகளை வைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு வேறு என்ன உருப்படியாகப் பண்ணத் தெரியும்? சும்மா வீண் பெருமை பேசாதீர்கள்'' என்றாள் திவ்யா.

"ஏனம்மா அப்படி மட்டமாகச் சொல்லி விட்டாய்?'' என்று கஸ்தூரி அத்தை சிரித்துக் கொண்டே தூண்டில் வீச, திவ்யா அதில் வசமாக மாட்டிக் கொண்டாள். "அத்தை, இவர் ஒரு வேலையும் செய்வதில்லை. உட்கார்ந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. சதா புத்தகங்கள் படிப்பது அல்லது கம்ப்யூட்டரில் ஏதாவது பார்ப்பது தவிர வேறு ஒன்றுமே செய்வதில்லை. நண்பர்கள் கிடையாது. ஒரு விருந்து விசேஷம் கிடையாது. மாதத்திற்கு ஒரு முறை வீட்டை விட்டு வெளியே போனால் அது அதிசயந்தான். திருச்சிக்கு வருவதற்குக் கூட எத்தனை தடவை இவரிடம் கெஞ்ச வேண்டியதாகி விட்டது'' என்று படபடத்தாள் திவ்யா.

"ஆனால் நம் சேகருக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. அவன் ஒரு வேலையும் செய்யாவிட்டாலும், அவன் காரியங்கள் தானாக நடந்து விடும். சேகர் படிக்கும்போது எதிர் வீட்டுக் விமலா, பக்கத்து வீட்டு பத்மா, மேல் வீட்டு மைதிலி என்று எத்தனை பெண்கள் இவனுக்காக விழுந்து விழுந்து வேலை செய்தார்கள் தெரியுமா? நான் கூட மாமாவிற்கு அத்தனை வேலை செய்ததில்லை'' என்று பொடி வைத்துப் பேசினார் கஸ்தூரி அத்தை.

திவ்யா சேகரைப் பார்த்து கண்களால் கேள்விகள் கேட்க, அவன் வானத்தில் எத்தனை பறவைகள் பறக்கின்றன என்று கணக்கு போட ஆரம்பித்தான். "இத்தனை வருடங்கள் கழித்தும் இந்தப் பெயர்களை நீங்களே ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள் என்றால், எல்லோரும் கவனிக்கும் அளவிற்கு அவர்களுக்குள் ரொம்பவும் நெருக்கமான பழக்கம்தான் போலிருக்கிறது'' என்றாள் திவ்யா.

"அதிலென்ன சந்தேகம்? சேகருக்குக் கதைகளில் ஆர்வம் உண்டு என்பதால் விமலா சதா புத்தகங்களை வாசித்து இவனுக்குக் கதை சொல்வாள். இவனுக்கு செஸ் பிடிக்கும் என்பதால் பத்மா தன் வேலையை விட்டு விட்டு இவனோடு ஓயாமல் செஸ் விளையாடுவாள். இவனுக்காக கடைக்குப் போவது, சினிமாவிற்கு டிக்கெட் வாங்கி வருவது எல்லாம் மைதிலியின் கடமை. இன்னொரு பெண் தினமும் ஏதாவது விசேஷமாக சமைத்துக் காரில் கொண்டு வந்து பரிமாறி விட்டு, கைச்செலவுக்குப் பணமும் கொடுத்து விட்டுப் போவாள். நல்ல இலட்சணமான பெண். அவள் பெயர் என்னப்பா?'' என்று கேட்டார் கஸ்தூரி அத்தை.

"மறந்து போய் விட்டது'' என்று சொன்ன சேகர், பேச்சின் போக்கில் எச்சரிக்கையாகி, அவர்களை விட்டு சிறிது தள்ளி உட்கார்ந்து கொண்டு, கதிரவனின் ஒளிக் கரங்களின் தழுவலால் பளபளத்த நதிப்பெண்ணின் நீருடலில் மனம் மயங்கினான்.

"இப்போதும் அப்படியேதான் இருக்கிறார் அத்தை. அந்த நான்கு பெண்கள் செய்த வேலைகளை நான் இப்போது ஓர் ஆளாகச் செய்து கொண்டிருக்கிறேன்! ஏதோ நான் ஓடியாடி காரியங்களைப் பார்ப்பதால் குடும்பம் நடக்கிறது. நான் எதைச் சொன்னாலும், "நீ சும்மா இரு. எல்லாம் தானாக நடக்கும்'' என்று என் வாயை மூடி விடுகிறார். வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டாமா? வீடு, வாசல், கார், நகை, நட்டு என்று வாங்க எனக்கும் ஆசை இருக்காதா? மாதாமாதம் வீட்டுச் செலவிற்கு சம்பாதித்தால் மட்டும் போதுமா? அவர் போலவே நானும் இருந்தால் குடும்பம் எப்படி நடக்கும்?'' என்றாள் திவ்யா.

"உன் கவலையில் நியாயம் இருக்கிறது. காலம் எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடாது. நாளைக்கே சேகருக்கு ஏதோ ஒன்றாகி விட்டால் நீயும் குழந்தைகளும் என்ன செய்வீர்கள்? வயதும், சக்தியும் இருக்கும் போதே சுறுசுறுப்பாக பல காரியங்களைச் செய்து பணம் சேர்க்க வேண்டும். ஊரோடு ஒத்து வாழ வேண்டாமா? நீதான் கண்டிப்பாக இருந்து சேகரை ஒரு வழிக்குக் கொண்டு வர வேண்டும். நான் சொல்கிறபடி நீ கேட்டால், எல்லாம் சரி ஆகிவிடும். சேகரும் மற்றவர்களைப் போல மாறி விடுவான்'' என்றார் கஸ்தூரி அத்தை.

"சொல்லுங்கள் அத்தை, செய்கிறேன்'' என்றாள் திவ்யா. "இனிமேல் வெளி வேலை எதையும் நீ செய்யாதே. உதாரணத்திற்குத் தொலைபேசிக்குப் பணம் கட்ட நீ போகவில்லை என்றால், இன்டர்நெட் எப்படி வேலை செய்யும்? அவன் தானாகவே போய் பணத்தைக் கட்டிவிடுவான்'' என்றார் கஸ்தூரி அத்தை.

"அப்புறம் அவர் சாப்பிடாமலே இருப்பாரே'' என்று கவலைப்பட்டாள் திவ்யா. "இந்த அன்புதான் பெண்களின் பலவீனம். இதை ஆண்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது போன்ற இடங்களில் நாம் கறாராக இருந்து விட்டால் வெற்றி நமக்குத்தான். ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும்? நீ இனி ஒரு வேலையும் பண்ணாதே. ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள். கிடுக்குப்பிடி போடு. தாகத்திற்குத் தண்ணீர் கேட்டால் கூட கொடுக்காதே. அவனாகவே எழுந்து வந்து குடிக்கட்டும். அப்போதுதான் உடம்பு வணங்கும். புத்தி வரும்'' என்றார் கஸ்தூரி அத்தை.

"சரி அத்தை'' என்று திவ்யா சொல்ல, குறுக்கிட்ட வேணு மாமா, "திவ்யா, உன் அத்தை பேச்சைக் கேட்காதே. சேகர் சொல்வதைக் கேள். நீ விரும்புவது கிடைக்கும்'' என்றார். "எனக்குச் சொந்த வீடு வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. எப்படிக் கிடைக்கும்? மனை விலையைப் பார்த்தால் எங்களால் குடிசை கூட வாங்க முடியாது என்று தோன்றுகிறது. மற்றவர்களைப் போல நீக்குப்போக்காக ஏதாவது முனைந்து முயற்சி செய்தால்தானே சம்பாதிக்க முடியும்? ஒன்றும் செய்யாமல் பலன் எப்படி வரும்?'' என்று கேட்டாள் திவ்யா.

"நமக்கு வரும் பலன் நம் அகநிலையைப் பொருத்தது. அது நாம் செய்யும் காரியங்களைப் பொருத்து வருவதில்லை. பயங்கரமான குற்றங்கள் செய்யும் கடத்தல்காரர்கள் அதிகாரத்தோடும், அந்தஸ்தோடும் வசதியாக வாழ்வதைப் பார்க்கிறோம். கோவிலே கதி என்று மூன்று வேளையும் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வறுமையில் சிரமப்படுவதையும் பார்க்கிறோம். எந்தப் படிப்பும் இல்லாதவர்கள் பெரிய தொழில்களைச் செய்வதையும், அவர்கள் கீழ் பெரிய படிப்பு படித்தவர்கள் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பதையும் தினமும் பார்க்கிறோமே!'' என்றார் வேணு மாமா.

"புரியாத புதிர்தான்'' என்றாள் திவ்யா.

"வாழ்வு என்று ஒன்று இருக்கிறது. அது நமக்கு முன்னும் இருந்தது, நமக்குப் பின்னும் இருக்கப் போகிறது. அந்த வாழ்விற்குப் பிற ஜீவன்களைப் போலவே குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களும் உண்டு. அது மனிதர்களின் தர்ம நியாயங்கள், சட்ட திட்டங்கள், நம்பிக்கைகளைப் பொருத்து செயல்படுவதில்லை. அதற்கென்று சட்டங்கள் உண்டு. தன் பாணியில் வாழ்வு பலன் தரும். அதை எதிர்க் கொண்டு நம் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வைப்பது சாதாரணமான காரியமில்லை. அகநிலை உயர்ந்தாலும், தாழ்ந்தாலும், அதற்கு வாழ்வு உடனே பலன் தந்து விடும். அகநிலைக்கு ஏற்பத்தான் வாழ்க்கை அமையும். அதைப் புரிந்து கொண்டு, உயர்ந்த பண்புகளை அகத்தில் ஏற்றுக் கொண்டு எதிர்பார்ப்பில்லாமலிருந்தால் நம் வாழ்க்கை வளமாகி விடும்'' என்றார் வேணு மாமா.

"இது அநியாயம். திவ்யா அருமையான பெண். அவளுக்கு நல்ல மனிதப் பண்பில்லை, அதனால்தான் வசதி குறைவாக இருக்கிறது என்று சொல்கிறீர்களே?'' என்று கேலியாகக் கேட்டாள் கஸ்தூரி அத்தை. "நான் பேசுவது ஆன்மீகப் பண்புகளைப் பற்றி. நம் அகநிலையை ஆன்மீகப்பண்புகள் மூலம் உயர்த்திக் கொண்டால், அந்தப் பண்புகள் மூலமாக நாம் பிரபஞ்சத்தையே கூட அடையலாம்'' என்றார் வேணு மாமா.

"எனக்கு அவ்வளவு பெரிய பேராசை எல்லாம் இல்லை. அக நிலை என்றால் என்ன? அதை எப்படி உயர்த்துவது? நான் உடனே பண்ணக் கூடியது ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் மாமா'' என்று கேட்டாள் திவ்யா.

"நமக்குள் ஏராளமான பகுதிகள் உண்டு. உடல் மட்டுமே நாமில்லை. மனம், உள்மனம், ஆழ்மனம், உணர்வு, ஆன்மா என்று எத்தனையோ விஷயங்கள் நமக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன. அவற்றின் மொத்தத் தொகுப்புதான் நாம். இந்த எல்லாப் பகுதிகளையும் நமக்குள் ஓர் இடத்தில் ஒன்று சேர்க்க முடியும். அதை அகநிலை என்று சொல்லலாம். அவ்வளவு பெரிய சிக்கல் நமக்கெதற்கு? நீ உடனே செய்யக் கூடியதைச் சொல்கிறேன். ஒவ்வொரு பகுதிக்கும் சில பண்புகள் உண்டு. அந்தந்தப் பகுதிக்கு உரிய உயர்ந்த பண்புகளை நாம் ஏற்றுக் கொண்டால் போதும். அக நிலை தானாகவே உயர்ந்து விடும்'' என்றார் வேணு மாமா.

"எரிச்சல் படாமல், இனிமையாக இருப்பது உணர்விற்கான பண்பு. என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பின்றி, கண்டபடி யோசிக்காமல் இருப்பது மனதிற்கான பண்பு. சுத்தமாக இருப்பது உடலுக்கான பண்பு. இவர் சொல்லி இருக்கிறார். உயிருக்குப் பயப்படாத தைரியசாலிகளான கடத்தல்காரர்கள் தங்களுக்குள் அளவு கடந்து நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்- களாமே. ஒரு வேளை அந்தப் பண்புகள்தான் அவர்களுக்கு உதவுகின்றன போலும்'' என்றாள் திவ்யா.

"வேறு காரணங்களும் இருக்கலாம். அந்த ஆராய்ச்சியை விடு. எல்லாப் பண்புகளையும் ஏற்பது உயர்ந்தது என்றாலும், அது கஷ்டமான காரியம். ஏதோ ஒரு பண்பை முழுமையாக ஏற்க முயற்சி செய்யலாம் அல்லது பல பண்புகளைக் கொஞ்சம் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யலாம். இரண்டில் எதைச் செய்தாலும் பலனுண்டு. சுமுகம் பலமான பண்பு. குடும்பத்தில் கணவனோடு அல்லது மனைவியோடு இணக்கமாகவும், சுமுகமாகவும் குற்றங்கள் கண்டுபிடிக்காமல் கடமையில் எந்தக் குறையும் வைக்காமல் இப்போது செய்யும் வேலைகளைத் தொடர்ந்து செய்தால், எல்லா நன்மைகளும் தாமாகவே நம்மைத் தேடி வரும்'' என்றார் வேணு மாமா.

"இவருக்கு எந்த உருப்படியான பண்பும் இருப்பது போல எனக்குத் தெரியவில்லையே, எப்படி எல்லோரும் தாங்களாகவே வந்து இவருக்கு உதவி செய்கிறார்கள்?'' என்று திவ்யா கேட்டாள். "ஒருவரது அகநிலையை அவரது வெளி வாழ்க்கை முகம் பார்க்கும் கண்ணாடி போல பிரதிபலித்துக் காட்டும். என்ன பண்புகள் சேகருக்கு உண்டு என்பது அதற்குரிய நேரம் வரும்போது செயலாகத் தெளிவாகத் தெரியும்'' என்றார் வேணு மாமா.

"நாம் நான்கைந்து இடத்துக்கு அலைந்து, நான்கைந்து பேர்களைப் பார்த்து பல முயற்சிகள் செய்தால்தானே முன்னுக்கு வர முடியும்?'' கடைசி சந்தேகத்தைக் கேட்டாள் திவ்யா.

"அகநிலை மாறினால் தேவைப்படும் சந்தர்ப்பங்களை வாழ்க்கை தானாகவே உருவாக்கித் தரும். அகநிலையை உயர்த்துவது மட்டுமே நாம் செய்ய வேண்டிய முயற்சி'' என்றார் வேணு மாமா.

"திவ்யா, அசட்டுத்தனமாக அகநிலையை மாற்றுகிறேன் என்று நேரத்தை வீணடித்து விடாதே'' என்று எச்சரிக்கை செய்தாள் கஸ்தூரி அத்தை. "இல்லை அத்தை. நான் மாமா சொல்வது போல செய்து பார்க்கப் போகிறேன். இனி இவரைப் பற்றிக் குறை சொல்வதை விட்டு விட்டு, என்னால் முடிந்த வரை சுமுகமாக இருக்கப் போகிறேன்'' என்றாள் திவ்யா. "இருந்திருந்து எனக்கு ஒரு சிஷ்யை கிடைத்தாள். அதையும் நீங்கள் கெடுத்து விட்டீர்களே! ஆமாம், இப்படியே தத்துவம் பேசிக் கொண்டிருங்கள். எனக்கு எத்தனை நாட்களாக முட்டி வஇருக்கிற து? உங்களால் சரி செய்ய முடிந்ததா? சிறு தெய்வங்களைக் கும்பிடக் கூடாது என்ற உங்கள் பேச்சை மீற முடியாமல், ஆசை இருந்தாலும், இருபது வருடங்களாக நான் குல தெய்வத்திற்குப் பொங்கல் வைக்கவில்லை. அதனால்தான் இப்படிக் கஷ்டப்படுகிறேன். ஏதாவது சொன்னால் அறிவிலிகளுக்கு ஆன்மீக ஞானம் தர முடியுமா என்று கேசெய்வீர்கள்'' கஸ்தூரி அத்தை மிகவும் வருத்தத்துடன் சொன்னாள்.

"சரி, சரி, புலம்ப ஆரம்பிக்காதே. ஆன்மீகம் வேறு, சாரமற்ற சம்பிரதாயம் வேறு. என்னால் விளக்கம்தான் தர முடியும். அவரவர் நோயை அவரவர்தான் தீர்க்க முடியும். நீ வருத்தப்படுவதைப் பார்த்தால் எனக்குச் சங்கடமாக இருக்கிறது. உன் திருப்திக்காக அடுத்த வாரமே நம் குல தெய்வத்திற்குப் பொங்கல் வைத்து விடலாம்'' என்று வரம் தந்த வேணு மாமா, கஸ்தூரி அத்தையின் மலரும் முகத்தைப் பார்த்துக் கொண்டே, புன்சிரிப்புடன் இரண்டு கைகளையும் தூக்கி சோம்பல் முறிக்க, அந்த விபரீதம் நிகழ்ந்தது.

கைப்பிடி தவறியதாலோ, விதியின் விளையாட்டாலோ பின்புறமாகச் சாய்ந்து விட்ட வேணு மாமா தலை கீழாக மேலிருந்து தண்ணீருக்குள் விழுந்தார். என்ன நடந்தது என்பது ஓரிரு வினாடிகளுக்குப் பின்புதான் கஸ்தூரிக்கும், திவ்யாவிற்கும் அறிவில் உறைத்தது. "ஐயோ, காப்பாற்றுங்கள்!'' என்று இரண்டு பெண்களும் அலற, அடுத்த சில கணங்களுக்குள் ஒரு பெரிய கூட்டம் அங்கே கூடி விட்டது.

இரத்தக் கொதிப்பு சட்டென்று உயர்ந்து தலை சுற்றி கஸ்தூரி அத்தை மயங்கிச் சாய, அவரை திவ்யா தாங்கிப் பிடித்துக் கொண்டு, "யாராவது மாமாவைக் காப்பாற்றுங்களேன்'' என்று கூட்டத்திலே இல்லாத வீரனுக்குக் குரல் கொடுத்தாள். அவள் தன்னைப் பார்த்து அப்படிச் சொல்லவில்லை என்று கூட்டத்திலே இருந்த ஒவ்வொருவரும் மனப்பூர்வமாக நம்பினர்.

"நீரில் மூழ்கும்போது நீருக்கு மேலே மூன்று தடவை தலை தெரியுமாம். அதற்கப்புறம் உடல்தான் கிடைக்குமாம். இதுவரை ஒரு தடவைதான் தலை தெரிந்திருக்கிறது'' என்று எண்ண ஆரம்பித்தார் ஒருவர். "அதெல்லாம் விஞ்ஞான பூர்வமாக நிரூபணமாகாத கட்டுக்கதை'' என்று அபிப்பிராயம் தெரிவித்தார் ஓர் அறிவியல் ஆர்வலர். "ஏம்பா, நிறைய இரத்தம் வருமா?'' என்று ஒரு சிறுவன் சந்தேகம் கேட்டான். "சேச்சே, நீரில் மூழ்கினால் இரத்தம் வராது. நீருக்குள் கல், கட்டை இருந்து அடிபட்டால் இரத்தம் வரலாம்'' என்று மகனுக்குத் தந்தை ஞானோபதேசம் செய்தார். "யாராவது போலீசுக்கு அல்லது ஆபத்துதவிக்குப் போன் பண்ணுங்களேன்'' என்று ஒரு பெண்மணி உருப்படியான யோசனை சொல்ல, "பண்ணியாகி விட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்'' என்றார் இன்னொரு பெண்மணி.

இந்த ஆரவாரங்கள் எதுவும் காதில் விழாமல், காவிரி நீரலைகளிலும், அவை எழுப்பி விட்ட நினைவலைகளிலும், தன்னை இழந்து காவிரி நீரையே பார்த்துக் கொண்டிருந்த சேகரின் கண்களில் திடீரென்று உயிருக்கு மன்றாடும் முகமொன்று ஒரு வினாடி தோன்றி பின் மீண்டும் நீருக்குள் மறைந்தது.

அடுத்த கணம் பாதுகாப்புக் கைப்பிடிச் சுவரில் ஏறிய சேகர், காவிரியில் குதித்தான். தண்ணீரில் ஏதோ விழுந்த சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த கூட்டத்தினரை, அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பும், ஆர்வமும் தொற்றிக் கொண்டது. சிலர் சேகரின் தைரியத்தைப் பாராட்டினர். சிலர் அது அறிவற்ற முரடனின் குருட்டு தைரியம் என்றனர். சேகர் ஆழமான நீர்ப் பகுதியில் குதித்ததைக் கண்டு நெஞ்சமெல்லாம் பதறிய ஒரே ஜீவன் அவன் மனைவி திவ்யா மட்டுமே.

சிறிது நேரம் தண்ணீருக்குள் தடுமாறிய சேகர், தத்தளித்துக் கொண்டிருந்த வேணு மாமாவைப் பார்த்து விட்டான். அவரை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு கரையை நோக்கி சிரமப்பட்டு மெல்ல நீந்தினான். பத்து நிமிடப் பெரும் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக இருவரும் கரை சேர்ந்தனர். நல்ல வேளையாக வேணு மாமா நீரைக் குடிக்காததினாலும், சுய நினைவை இழக்காததினாலும், அவராகவே தட்டுத் தடுமாறி எழுந்து, கைத்தாங்கலாக சேகரைப் பிடித்துக் கொள்ள, இருவரும் மெல்ல படிகளில் ஏறி மேம்பாலத்திற்கு வந்து சேர்ந்தனர்.

"ஆழம் அதிகமில்லை. அதனால்தான் தப்ப முடிந்தது'' என்றார் ஒருவர். "இன்று நீரோட்டம் மெதுவாகத்தான் இருந்தது'' என்றார் மற்றொருவர். "கெட்டது எதுவும் நடக்காது என்று நான் அப்போதே நினைத்தேன்'' என்றார் இன்னொருவர்.

"ஈரத் துணியை அப்புறம் மாற்றிக் கொள்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, யாரிடமும் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்த ஒரு கல் பெஞ்சில் சாய்ந்து படுத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டார் வேணு மாமா.

சேகரின் உடைகளைக் கழற்றி, நன்றாகப் பிழிந்து உலர வைத்தாள் திவ்யா. யாரோ ஒரு பெண் நீட்டிய துண்டால் தன் தலையை துவட்டிய வண்ணம், பழைய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்ட சேகர் மீண்டும் காவிரி நீரையே பார்க்கத் தொடங்கினான்.

மயக்கம் தெளிந்த கஸ்தூரி அத்தைக்கு, வேணு மாமா உயிரோடு இருப்பதைப் பார்த்த பின்தான் மீண்டும் உயிரே வந்தது. அவர் அருகில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்த அத்தை, எழுந்து காருக்குச் சென்றார். ஒரு கோப்பை நிறைய தேநீரையும், வேணு மாமாவிற்காக விசேஷமாக தயார் செய்து சூடு காக்கும் பாத்திரத்தில் கொண்டு வந்திருந்த இரவா கேசரியையும், மசால் வடைகளையும் ஒரு தட்டில் நிறைத்துக் கொண்டு, வேணு மாமாவைத் தாண்டி நடந்தார் கஸ்தூரி அத்தை.

"இப்படிக் கொடு. நான் இங்கே படுத்துக் கொண்டிருக்- கிறேன்'' என்று குரல் கொடுத்தார் வேணு மாமா.

"நான் சேகருக்கு இவற்றைக் கொடுத்து விட்டு வருகிறேன். நம்மால் இந்த மாதிரி பொருட்களைத்தான் பிறருக்குத் தர முடியும். சேகர் போன்ற அகநிலை இருப்பவர்களுக்குத்தான் மற்றவர்களுக்காக உயிரையும் தர முடியும். தங்கமான பையன்! சென்னையில் நம் வீட்டைப் பத்து வருடங்களாக சும்மாத்தானே பூட்டி வைத்திருக்கிறோம்? அதை சேகருக்கு வாங்கிய விலைக்கே கொடுத்து விட்டால் என்ன? சும்மா கொடுத்தாலும் தப்பில்லை. அதைப் பற்றி யோசித்துக் கொண்டு நீங்கள் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருங்கள். வடைக்கும், கேசரிக்கும் என்ன அவசரம் உங்களுக்கு?'' என்றவாறு விடுவிடுவென்று சேகரை நோக்கி நடந்தார் கஸ்தூரி அத்தை.

வேணு மாமா திவ்யாவைப் பார்க்க, இருவரும் மனநிறைவுடன் புன்னகைத்துக் கொண்டனர்

முற்றும்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமர்ப்பணம் சரணாகதியில் முடியும்.
 
******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாம் அன்னையை அழைப்பது மனித முயற்சி.
தானே அன்னை நினைவு வருவது அருள்.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நினைவு அழைப்பைத் தரும்.
 
*******book | by Dr. Radut