Skip to Content

10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

8. கடமையைச் செய்யாதபொழுது ஏற்படும் தடை

கடமைகள் பல பிரிவுகளை உடையன. அவை குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகள், நண்பர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், நம்மை அண்டியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், பெரியோர்களுக்கும், நாட்டுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் எனப் பல வகைப்படுவன. அவரவர்க்கு அமைந்த கடமைகளைத் தவறாது செய்ய வேண்டும். "வேண்டும்”என்றே கடமைகளைச் செய்யாமல் விட்டுவிடுவது பெரும் தவறாகும்.

இதற்குச் சான்றாக இங்கே ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கலாம். கடலூரில் வசித்த அவர் பெயர் போர் முதலியார். முதலியார்க்கு முன்னால் உள்ள "போர்' எப்படி வந்தது? அவர் செய்யும் தொழிலால் வந்தது. "போர்'க் கிணறு போட வேண்டுமானால், பூமிக்கடியில் நீர் ஊற்று இருக்கின்றதா என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உழைப்பும், பணமும் வீணாகிப்போகும். அதனால் "போர்"க் கிணறு எடுக்க முனைபவர்கள், முதலில் நிலத்தடியில் உள்ள நீரூற்றைக் கண்டுபிடிக்கக்கூடிய நிபுணர்களைத் தேடி அலைவார்கள். அவ்வகைப்பட்ட நிபுணர்களில் "போர்" முதலியார் கொடிகட்டிப் பறந்தார்.

அப்பொழுது அன்னை பூதஉடலில் இருந்தார். ஒரு நாள் "போர்' முதலியார் அன்னையைத் தரிசிப்பதற்காக ஆசிரமத்திற்கு என்னோடு வந்திருந்தார். பொதுவாக, பெரியோர்களைக் காணச் செல்லும் எவரும் காணிக்கையாக ஒரு தொகையைச் செலுத்திவிட்டு, அவர்களுடைய ஆசியைப் பெற்றுச் செல்வது வழக்கம். தெய்வப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட பெரியவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை அது. என்ன காரணத்தாலோ "காணிக்கை தேவை இல்லை” என்று கருதிய முதலியார், வெறுங்கையுடன் சென்று வேண்டிய அளவு அன்னையின் ஆசிகளைப் பெற்றுத் திரும்பினார்.

அதற்குப் பிறகு முதலியாருக்கு உட்காரவும், மூச்சுவிடவும் நேரம் இல்லை. பல அரசாங்க அமைப்புகளிலிருந்தும் நீரூற்றைக் கண்டுபிடித்து உதவும்படி அவருக்கு ஏராளமான அழைப்புகள் வந்து குவிந்தன. அவர் நிமிடத்திற்கு நிமிடம் பறந்தார். தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களுக்கும் சென்றார். ஊற்றுள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து, "போர்"க் கிணறுகள் வெட்டுவதற்கு ஆலோசனைகள் கூறினார்.

ஆனால் அழைப்புகள் வந்த வேகத்தில் அரசாங்கத்திலிருந்து பணம் வந்து சேரவில்லை. ஆங்காங்கே அவருக்குச் சேர வேண்டிய ஊதியத் தொகை குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தது.

முதலியாருக்கு, "என்ன செய்வது?" என்று புரியவில்லை. வர வேண்டிய தொகை அதிகம். பணம் வர வேண்டிய ஊர்கள் அதைவிட அதிகம். "ஒவ்வோர் ஊராகச் சென்று அலுவலகங்களை முற்றுகையிட்டுப் பணத்தை வசூலிப்பது' என்று ஆரம்பித்தால், அவருக்கு வர வேண்டிய தொகையைவிடச் செலவு அதிகமாகிவிடும். அதனால் பணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

இந்த நிலையில் அவர் என்னைச் சந்தித்தார். அப்பொழுது, "வேலை செய்துவிட்டு வந்த இடங்களிலிருந்து வர வேண்டிய தொகை வாராமல் அப்படியே தங்கிவிட்டது. செலவுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது'' என்று அலுப்பும், சலிப்புமாகக் கூறினார் அவர்.

எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. "நீங்கள் அன்னையைத் தரிசிக்கச் சென்ற சமயத்தில், "காணிக்கை தேவை இல்லை; ஆசிகள் மட்டும் கிடைத்தால் போதும்' என்று கூறி, அன்னைக்குக் காணிக்கை சமர்ப்பிக்காமல் வந்துவிட்டீர்கள். நீங்கள் அன்னையிடம் பெற்ற ஆசியினால் உங்களுக்கு ஏராளமான அழைப்புகள் வந்தன. நீங்கள் காணிக்கையைச் செலுத்தத் தவறியதால், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகைகள் வாராமல் தடைப்பட்டுவிட்டன'' என அவருக்கு விளக்கினேன் நான்.

"அப்படியா? இப்பொழுது அந்தத் தவற்றை நிவர்த்தி செய்துவிட்டால், வர வேண்டிய தொகை முழுதும் வசூலாகிவிடுமா?'' என்று கேட்டார் அவர்.

"வசூலாகிவிடும். அதில் சந்தேகமே இல்லை'' என்றேன் நான்.

உடனே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை என்னிடம் கொடுத்து, அதனை அன்னைக்குச் சேர வேண்டிய காணிக்கையாக ஆசிரமத்தில் சேர்த்துவிடும்படிக் கூறினார் முதலியார்.

செய்யாமல் விட்டுவிட்ட கடமையை நிறைவேற்றியவுடன், அதுவரை அவருக்கு வாராமல் தடைப்பட்டிருந்த தொகைகள் அனைத்தும் "மளமள'வென வசூலாகிவிட்டன. அதற்குப் பிறகு அவர் ஒரு கிராமத்தில் ஒரு வீட்டையும், சிறிது நிலத்தையும் விலைக்கு வாங்கிக்கொண்டு நிரந்தரமாகவும், நிம்மதியாகவும் தங்கிவிட்டார்.

"செய்ய வேண்டிய கடமையைச் செய்யாது விட்டால், அது தடையாக நின்று, பொருள் தட்டுப்பாட்டை உண்டாக்கி விடுகின்றது' என்பதை இதன் மூலம் உணரலாம்.

9. கணக்கால் பணம்

குடும்பத்தில் அவ்வப்போது பணம் வருகின்றது; வந்த பணமும் பல வகைகளில் செலவாகிக்கொண்டே இருக்கின்றது.

"வரவும் நமக்குத் தெரிந்தே வருகிறது; செலவும் நமக்குத் தெரிந்தே போகிறது. இதில் கணக்கு என்ன?' என்று விட்டேற்றியாக இருப்பது, பொருள் வரவுக்குத் தடையாகிவிடுகின்றது. வரவு, செலவுகளைக் குறித்துக் கணக்கு எழுதும்பொழுது, நம்முடைய கவனம் முழுதுமாகப் பணத்தில் ஈடுபாடு கொள்கின்றது. இந்தக் கவனம் மிகவும் முக்கியம். நாம் எந்த அளவிற்குக் கவனத்தைக் கொடுக்கின்றோமோ, அந்த அளவிற்குப் பொருள் நம்மைத் தேடித் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

முதல் பாகம் முற்றும்.

******

ஜீவிய மணி
 
திரும்பி வந்தால் தீவிரம் உண்டு.
ஆசையால் ஏற்பது நண்பர். ஆத்மாவால் ஏற்பது அன்பர்.
சரணாகதி சர்வ ஆரம்ப பரித்தியாகிக்குரியது.
தன்னை பிறருக்காகக் கருதும் பரநலம்.
அகத்தைப் புறமாக்கினால் அகம் அவனுக்குரியதாகும்.
கேட்பது ஜடம், தருவது ஆன்மா.
ஒருவரிடம் இருந்தால், அனைவரிடமும் இருக்கும்.
உள்ளது போனால் உலகம் வரும்.
 

*******book | by Dr. Radut