Skip to Content

12. அன்னை இலக்கியம் - அன்னையின் முத்திரை

அன்னை இலக்கியம்

அன்னையின் முத்திரை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

"சில மாதங்களுக்கு முன் நான் பெரிய ஆபத்திலிருந்து அன்னையால் காப்பாற்றப்பட்டேன். எனக்குப் பின்னால் என்னை எமன் துரத்திக்கொண்டு வருவதை அறியாமல் வந்து கொண்டிருந்தேன். நான் இந்தத் தியான மையத்தைக் கடக்கவிருந்த அதே நேரம் என்னைத் துரத்தி வந்த எமனை அன்னை வீழ்த்தினார். சிவனின் காலைக் கட்டிக் கொண்ட மார்கண்டேயனுக்கு அவன் ஆயுள் முடியும் நேரம் தெரியும். சிவனின் காலையும் பற்றிக் கொண்டான். ஆனால் எனக்கு என் ஆயுள் முடியும் நேரம் தெரியாது. நான் அன்னையை அறிந்து, அவர் திருவடிகளைப் பற்றிக் கொள்ளவுமில்லை. இந்த மையம் இருக்குமிடமாய்ச் சென்றேன், அவ்வளவுதான். பின்னால் துப்பாக்கிச் சுடும் ஓசை கேட்டுத் திரும்பினேன். எனக்குக் காலனாய் வந்து கொண்டிருந்த முரடர் தலைவனைக் காவல் துறை அதிகாரி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியிருக்கிறார். உடம்பெல்லாம் சிலிர்த்தது எனக்கு'' என்று விஷால் கூற,

"அவன் ஏன் உங்களைத் துரத்த வேண்டும்?''

"என் விதிதான். இது நடப்பதற்கு முன் தினம் என் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த இந்த முரடர் தலைவன் என் நண்பன் வீட்டிற்குள் புகுந்தான். என் நண்பன், தயவுசெய்து வெளியே போகும்படிக் கெஞ்சினான். என்ன விஷயம் என்று தெரியாமலேயே நான் அவசரப்பட்டு, "வீட்டிற்குள் நுழைபவனை அடித்துத் துரத்தாமல், கெஞ்சிக் கொண்டிருக்கிறாயே!” என்று கோபமாய்ப் பேசினேன். முரடன் என்னை முறைத்தான். "என்ன முறைக்கிறாய்?” என்று கோபமாய்ப் பேசினேன். என் நண்பர், "விஷால், பேசாமலிரு; உனக்குத் தெரியாது" என்று என்னிடம் தணிவாய்க் கூறிவிட்டு, மீண்டும் அவனிடம் கெஞ்சினான். "ஏனிப்படி இந்த ஆளுக்கெல்லாம் பயப்படுகிறாய்"என்று மேலும் நான் கூறவே, வந்தவன், "உன் வேலையை பார்த்திட்டு ஒழுங்காய்ப் போய்ச் சேரு” என்று எச்சரித்தான். "போகலைன்னா என்ன செய்வே?" என்று சீறினேன். நண்பன் தவித்தான். அவன் என்னை அடிக்க வந்தான். ஆத்திரத்தில் நான் அவனை அடித்துவிட்டேன். அவமானத்தால் கொதித்துப்போன அவன், "உன்னையெல்லாம் உசிரோடு விடக்கூடாது. நாளைக்கு நீ இருக்கமாட்டே!” என்று உறுமிவிட்டுச் சென்றான்.

அவன் சென்றதும் என் நண்பன் என்னிடம், "நீ அவசரப்பட்டுவிட்டாய் விஷால். அவன் எதற்கும் துணிந்தவன். என் சித்தப்பா அவனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறார். நாங்களே செய்வதறியாது தவிக்கிறோம். எங்கள் மீது தப்பு இருக்கிறது. அவனிடம் பணம் வாங்கிய என் சித்தப்பா எங்கோ ஓடிவிட்டார். நாங்கள் எப்படியாவது பணம் சேர்த்து அவன் கடனை அடைத்து, எங்கள் சித்தப்பாவைக் காப்பாற்ற அவனைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். விஷயம் தெரியாமல் நீ அவனிடம் மோதிவிட்டாய். அவன் அவமானம் தாங்கமாட்டான். உன்னை எந்த நேரம் என்ன செய்வானோ என்று பயமாயிருக்கிறது. நீ எச்சரிக்கையாய் இரு' என்று சொல்லி- யனுப்பினான். நடந்தது எதுவும் தெரியாமல், நானொன்றும் பயங்கொளியில்லை என்ற இறுமாப்பில் அவனை அடித்துவிட்டேன்.

அவன் என்னைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, நான் இந்த வழியே வந்து கொண்டிருந்தபோதுதான் அவன் என்னைத் தொடர்ந்து வந்திருக்கிறான். அதே நேரம் அவனுக்கு வலை வீசிக் கொண்டிருந்த காவல் துறை என்கவுண்டரில் அவனைச் சுட்டுத் தள்ளியிருக்கிறது. இன்னும் சில கணங்கள் அவன் தப்பியிருந்தால் என் கதை முடிந்திருக்கும். தெருவே கூடி அமர்க்களமாயிற்று.

நான் அப்போது கடக்கவிருந்த இடம் இந்த தியான மையம்தான். தியானமையம் பற்றி எனக்கெதுவும் தெரியாது. ஆனால் அந்த நேரம் நான் என்னையறியாமல் ஒன்று நினைத்தேன். அதாவது அவன் என் பின்னே தொடர்கிறான் என்பதே எனக்குத் தெரியாது. ஆனால் நேற்று என் நண்பன், "நீ அவசரப்பட்டுவிட்டாய் விஷால்” என்று கூறியது நினைவில் வந்தவண்ணமிருந்ததால், நான் செய்தது தவறு. அவசரமும், முன்கோபமும் சரியில்லை. இனிமேல் ஏதாவது என்றால், நிதானம் இழக்காமல், அவசர புத்தியால் செயல்படாமல், முன்கோபம் கொள்ளாமல், விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என் மனத்தை நான் மாற்றிக் கொள்ள முடிவு செய்திருந்தேன். இதுவே அன்னை முறை என்பதையும், மனமாற்றம் எதையும் சாதிக்க வல்லது என்பதையும் நானப்போது அறிந்திருக்கவில்லை.

அதே நேரம் மையத்தில் வழக்கம்போல தியானம் முடித்து வெளியே வந்த என் அப்பாவின் நண்பர் என்னைப் பார்த்தார். சற்றுத் தொலைவில் காவல் துறையால் தேடப்பட்ட முரடன் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதையும் கேட்டறிந்தார். அவருக்கு என்னைப் பற்றியும் தெரியுமாதலால் எனக்கு வந்த ஆபத்து விலகியதைப் புரிந்து கொண்டிருக்கிறார்.

"விஷால் உள்ளே வா. இது அன்னை தியான மையம். உனக்கு நேரவிருந்த பேராபத்திலிருந்து அன்னைதான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறார். அன்னைக்கு நன்றி சொல். நமஸ்கரித்துவிட்டுச் சிறிது நேரம் உட்கார்' என்றார்.

எனக்கு எதுவும் விளங்கவில்லை. ஏதோ பெரியவர் சொல்கிறாரே என்று கேட்டுக் கொண்டேன்.

சற்று முன் கேட்ட துப்பாக்கிச் சத்தம், கண் முன்னே அந்த முரடன் துடித்து விழுந்தது, அவனைத்தான் நேற்று நான் அடித்தேன் என்பது, யாவும் என் மனத்திரையில் ஓடி, ஒரு அமைதி இன்மையை ஏற்படுத்தியிருந்த அந்நேரம், உள்ளே வந்து ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் முன் அமர்ந்ததும் பேரமைதி வந்து என்னைச் சூழ்ந்தது போல் உணர்ந்தேன். அதன் பிறகு அந்தப் பெரியவர் பானுவை அழைத்து, அன்னைக்குச் சமர்ப்பித்த புஷ்பப் பிரசாதம் உள்ள பிளெஸிங் பாக்கெட் ஒன்றை எனக்குத் தரச் சொன்னார். அதை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டு சென்றேன்.

அதன் பிறகு அந்தக் குடும்ப நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்து என் பெற்றோரிடம் எனக்கு நேரவிருந்த ஆபத்தையும், அன்னையைப் பற்றியும் பேசினார். நானப்போது, தியான மைய இடத்திற்கு வரும்போது நான் என் முன்கோபம் தவறு என உணர்ந்ததைச் சொன்னேன். அதுவே அன்னை முறை என்றும், மனமாற்றம் சாதிக்க வல்லது என்பதையும் எடுத்துச் சொன்னார்.

அதன் பிறகு தியான மையம் வர உள்ளூர தூண்டுதல் இருந்ததை உணர்ந்தேன். எனவே, தியான மையத்திற்காக தியான மையம் வந்தேன். தியானக் கூடல்களில் பங்கு கொண்டேன். கூடல்களில் நிகழ்த்தப்பெற்ற சொற்பொழிவுகளில் அன்னையை ஏற்று, பல அனுபவங்கள் பெற்ற பேரன்பர் ஒருவரின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். பல அன்பர்களின் பிரச்சனைகள் ஸ்ரீ அன்னையால் தீர்ந்த அனுபவங்களையும் கேட்டறிந்தேன். அதன் பிறகு இங்கு ஈடுபாட்டுடன் வருகிறேன்.

நீங்கள் எப்படி அன்னையிடம் வந்தீர்கள்?''

"எனக்கு உங்களைப் போன்ற அனுபவமில்லை. என் திருமண விஷயமாய்ச் சில சோர்வூட்டும் நிகழ்ச்சிகளால் சோர்ந்துபோனபோது என்னை பானுதான் இங்கு அழைத்து வந்தாள்''.

"ஏன் உங்கள் காதலை உங்கள் வீட்டினர் ஏற்கவில்லையா?'' என்றான் விஷால்.

"காதல், கீதல் எதுவுமில்லை. என் தாயின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை என் திருமணம் வரை வந்து தடுக்கிறது. அந்தணர் மரபைச் சேர்ந்த என் தாய் வேற்று சாதியரான என் தந்தையை நேசித்திருக்கிறாள். அவர்கள் படிப்பும், பக்குவமும் ஒத்துப்போனாலும் என் பாட்டி, தாத்தாவுக்கு இதில் விருப்பமில்லை. எனவே, அவர்கள் அனுமதி தரவில்லை. என் அப்பாவின் அப்பாவிற்கு இதில் பூரண சம்மதம். எனவே, அவர் இவர்களுக்குத் திருமணம் செய்வித்துத் தன் வீட்டிற்கு அழைத்துப் போய்விட்டார். அந்த வேதனையில் என் அம்மாவின் அப்பா இறந்துவிட்டாராம். எனக்கு 2 வயது ஆகும்போது என் தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டாராம். அப்போதிருந்த மனநிலையில் என் அம்மா என்னைத் தூக்கிக் கொண்டு தன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். என் அப்பாவின் அப்பா மீது பாட்டிக்கு வெறுப்பு. இருந்தாலும், என் பிஞ்சு முகத்தைப் பார்த்து எங்களை ஏற்றுக் கொண்டாளாம். அதன் பிறகு என் அப்பாவின் அப்பாவான தாத்தாவின் தொடர்பு விட்டுப்போயிற்று.

என் அப்பா அவர் பெற்றோர்க்கு ஒரே பிள்ளையாம். அப்பாவின் அம்மா அவர் சிறுவனாய் இருந்தபோதே இறந்துவிட்டாராம். தாத்தா சிறந்த பண்பாளர். அவர் தம் மகனை நன்கு படிக்க வைத்துப் பண்பாளராய் வளர்த்திருக்கிறார். தன் பிள்ளையின் மரணத்திற்குப் பிறகு என் அம்மாவின் நலன் கருதி அவர் எங்கள் வீட்டிற்கு வருவதில்லையாம். ஏனென்றால், அவர் வந்தால் பாட்டி அம்மாவைக் கடிந்து கொள்வாளாம்.

என் அம்மாவின் அம்மா வீட்டில்தான் நானும், என் அம்மாவும் இருக்கிறோம். என் பாட்டிதான் என் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்தார். என் மீது கொண்ட பாசத்தால்தான் என் அம்மாவை மன்னித்து ஏற்றுக் கொண்டதாய் அடிக்கடி சொல்வார். என்னிஷ்டப்படி என்னைப் படிக்க வைத்தார். நானாவது அவர் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெரிதும் ஆசைப்படுகிறார்.

வரும் வரன்களுக்கு என்னழகும், அறிவும் பிடித்திருந்தாலும், என் ஜாதகம் பிடிக்கவில்லை. பெரிய வரதட்சணை கொடுக்க முடியாதது பிடிக்கவில்லை.

கடைசியாக என் ஜாதகம், வரதட்சணை எல்லாவற்றையும் புறக்கணித்து, எனக்காக என்னைப் பிடித்து, நிச்சயமாகும் தருணத்தில் என் தாத்தா (அப்பாவின் அப்பா)வின் வருகையால் நிச்சயம் நின்றுவிட்டது. என்னைப் பிடித்தவர்களுக்கு இறந்துபோன என் அப்பாவின் ஜாதி பிடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் பானு என்னை தியான மையம் அழைத்து வந்தாள்'' என்று கூறி முடித்தாள் நித்யா.

"நித்யா, உங்கள் கதை சற்று வித்யாசமாய் இருக்கிறது. ஆனால் ஒன்று தெரியுமா, எதைக் காட்டி உலகம் நம்மை மறுக்கிறதோ, அதை அன்னை ஏற்க வைப்பார். உங்கள் திருமணம் நல்ல முறையில் நிகழும் என்று நான் நம்புகிறேன்'' என்றான் விஷால்.

சில தினங்களுக்குப் பிறகு நித்யா மிகுந்த மகிழ்ச்சியுடன் தியான மையம் வந்தாள். நீண்ட நேரம் தியான மையப் பணிகளில் ஈடுபட்டாள். நீண்ட நேரம் தியானம் செய்து, அன்னைக்கு நன்றி கூறியவண்ணமிருந்தாள்.

வெளியூர் சென்றிருந்த பானு அப்போதுதான் வந்தாள்.

"பானு, அன்னைக்கு நன்றி சொல்லத்தான் காலையிலேயே வந்துவிட்டேன். நீ ஏன் இவ்வளவு தாமதம்?''

"நான் புத்தகங்கள் எடுத்து வருவதற்காகப் புதுவை சென்றிருந்தேன். அது சரி, உன் சந்தோஷத்திற்கு என்ன காரணம்?'' என்றாள் பானு.

"இதோ பார், என் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்'' என்று ஒரு கவரை அவளிடம் கொடுத்துவிட்டு, "அன்னையிடம் ஒன்று தவறினால் அடுத்து வருவது அதைவிட உயர்ந்ததாயிருக்கும் என்று சொன்னாயல்லவா! அது பலித்துவிட்டது'' என்றாள் நித்யா.

அமெரிக்க நிறுவனம் ஒன்று இவள் விண்ணப்பித்த கல்லூரியில் நிராகரிக்கப்பட்ட மாணவர்களில் தங்களுக்குத் தேவையான தகுதியுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அழைப்பு அனுப்புமாம்.

அதன் மூலம் நித்யாவிற்கு விசா ஏற்பாடு செய்து, பிரயாணச் செலவை ஏற்று, வேலைக்கு அழைத்திருக்கிறது. தங்க இடம், முன்பணம், யாவும் அவர்களே பொறுப்பேற்கும் நிறுவனம் அது. பருத்தி புடவையாய்க் காய்த்தது போல், படித்த பிறகு தேடிப் போகும் வேலை முன்பே அவளைத் தேடி வருகிறது.

விஷாலும் சிறிது நேரத்தில் அதே அழைப்புடன் வந்தான். அன்னைக்கும், அன்னையை அறிமுகப்படுத்திய பானுவுக்கும் இருவரும் நெகிழ்ந்து நன்றி கூறினர்.

அதன் பிறகு ஒரே நிறுவனத்தின் அழைப்பு என்பதால், முதன்முதலில் வெளிநாடு செல்வதால், அன்னைக்குச் சமர்ப்பணம் செய்த பின், இருவரும் கலந்து பேச எண்ணினர்.

"விஷால், நீங்கள் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும். உங்களை எங்கள் வீட்டாருக்கு அறிமுகம் செய்ய வேண்டும். என்னைத் தனியாக வெளிநாடு அனுப்ப அவர்களுக்குத் தயக்கம்'' என்றாள்.

"நான் உங்கள் வீட்டாரிடம் பேசுகிறேன்'' என்றான் விஷால். விஷாலை இவள் வீட்டாருக்குப் பிடித்துவிட்டது. முதல்முதலில் தங்கள் குடும்பத்தில் நித்யா அமெரிக்கா செல்கிறாள். அது பற்றி ஒரு புறம் மகிழ்ச்சியிருந்தாலும், திருமணம் செய்விக்காமல் அனுப்புவது மனம் தடுக்கிறது.

"கவலைப்படாதீர்கள். நித்யாவின் நல்ல குணத்திற்கு யாவும் நலமாக அமையும். எனக்குத் தெரிந்த அமெரிக்க மாப்பிள்ளை ஒருவர் இருக்கிறார். அமெரிக்கா செல்லுமுன் நித்யாவின் திருமணம் நடக்க நானும் முயற்சி செய்கிறேன்'' என்றான் விஷால்.

"இப்போது நான் நித்யாவை எங்கள் வீட்டிற்கு அழைத்துப் போக ஆசைப்படுகிறேன். என் வீட்டில் நித்யாவிற்கும் வேலை கிடைத்த விஷயம் கூறி, அறிமுகப்படுத்த வேண்டும். நித்யாவைப் பார்த்தால் என் வீட்டினர் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். பிறகு உங்களிருவரையும் என் வீட்டாருக்கு அறிமுகப்படுத்துகிறேன்'' என்றான் விஷால்.

விஷால் மீது இவள் வீட்டாருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படவே, அவளை அவனுடன் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

"நித்யா, என் நெருங்கிய உறவினர் ஒருவர், அமெரிக்காவில் நல்ல வேலையில் இருப்பவர். நாம் அமெரிக்கா செல்வதற்கும் அவர் உதவி செய்வார். நான் அவரையும் உனக்கு அறிமுகப்படுத்துகிறேன்'' என்று கூறி, அழைத்துச் சென்றான்.

அன்னையை நன்றியுடன் நினைத்து முன்னே அனுப்பிவிட்டு, விஷாலுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றாள்.

அவன் வீட்டில் விஷாலின் பெற்றோர் மிகுந்த ஆர்வத்துடன் இவளை எதிர்பார்த்தவண்ணமிருந்தனர். இவளைப் பார்த்தவுடன் அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி, தன்னைப் பற்றி விஷால் நிறைய சொல்லி வைத்திருப்பார் போலும் என்று எண்ணத் தோன்றியது.

அன்னையை நினைத்து வீட்டு வாயிற்படியை மிதித்தாள். உடனே விஷாலின் தாய் அவள் கையைப் பிடித்து, "வாம்மா'' என்று பரிவுடன் உள்ளே அழைத்துச் சென்றாள். வீடு வசதியாகவும், அழகாகவும் இருந்தது. உள்ளே வந்தவுடன் விஷாலின் பெற்றோரை நிற்க வைத்து நமஸ்கரித்தாள். வெளிநாடு செல்லுமுன் இவர்கள் ஆசி தனக்கு நல்லது என்று தோன்றியது.

விஷாலின் பெற்றோர் திருப்தியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதை அவள் கவனிக்கவில்லை. அவளை அருகில் உட்கார வைத்து அன்புடன் விசாரித்தார்கள். அவள் திருமண அனுபவம் குறித்து விஷால் முன்பே கூறியிருந்ததால், அவள் மனம் புண்படாதவாறு பேசினார்கள்.

"நித்யாவிற்குக் காபி போட்டுக் கொடம்மா'' என்றான் விஷால்.

"இல்லை, விஷால். நான் காபி குடிக்கமாட்டேன்'' என்றாள்.

"வேறு ஜூஸ் ஏதேனும் சாப்பிடுகிறாயா?'' என்றாள் விஷாலின் அம்மா.

"இல்லை ஆண்ட்டி. இந்த நேரம் எதுவும் வேண்டாம்'' என்றாள்.

"நித்யா, நீ வந்ததும் இவள் உனக்குக் காபி போடுவாள்; நாங்கள் குடிக்கலாம் என்று காத்திருந்தேன், ஏமாற்றிவிட்டாயே'' என்றார் விஷாலின் தந்தை. நெடுநாள் பழகியவர்கள் போல் அவர்கள் அவளிடம் காட்டிய பரிவு அவளுக்கு இதமாயிருந்தது.

"சாரி அங்கிள். நான் வேண்டுமானால் உங்களுக்குக் காபி போட்டுத் தருகிறேன், ஆண்ட்டி என்னை கிச்சனில் அனுமதித்தால்'' என்றாள்.

அவர்களுக்கும் இவளை மிகவும் பிடித்துவிட்டது. "இந்த வீட்டில் உனக்கில்லாத உரிமையா! தாராளமாய் நீ கிச்சனைப் பயன்படுத்தலாம்'' என்று முதுகில் வருடிக் கொடுத்தாள் விஷாலின் அம்மா.

"அம்மா, இது என்ன நியாயம்! இப்போதுதான் முதலில் நம் வீட்டிற்கு நித்யா வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம் வீட்டில் எது எங்கிருக்கிறது என்று எப்படித் தெரியும்?'' என்றான் விஷால்.

"பரவாயில்லை விஷால். அம்மாவுக்கு என் மீது நம்பிக்கையிருப்பதால் பொருள்களைக் கண்டுபிடித்து காபி தயாரித்துவிடுவேன்'' என்று சமையலறைக்குச் சென்றாள். அப்போதும் விஷாலின் பெற்றோர் அவள் மீது திருப்தி கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

தொடரும்....

******



book | by Dr. Radut