Skip to Content

02. பகவான் மற்றும் அன்னையினுடைய வாழ்வில் உள்ள சில சுவாரசியமான அனுபவங்கள்

பகவான் மற்றும் அன்னையினுடைய வாழ்வில் உள்ள சில சுவாரசியமான அனுபவங்கள்

N. அசோகன்

  1. இந்திய பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தாலும் அவருடைய தகப்பனாருடைய ஆங்கில மோகத்தின் காரணமாக தன்னுடைய தாய்மொழியான வங்காள மொழியைக்கூட கற்றுக்கொள்ளாமல் பகவான் வளர்ந்தார்.
  2. ஆங்கில சர்க்காரில் ஐ.சி.எஸ். ஆபீஸராவதற்குப் பகவான் விரும்பாத காரணத்தினால் அந்த அதிகாரிகளுக்குக் கட்டாயமாக இருக்க வேண்டிய குதிரை பயிற்சியை பகவான் மேற்கொள்ளாமல் விட்டதால் ஐ.சி.எஸ். அதிகாரியாகும் தகுதியை இழந்தார்.
  3. இங்கிலாந்தில் அவர் தங்கியிருந்த பொழுது கடைசி சில வருடங்களில் அவருடைய தகப்பனாரிடமிருந்து பணம் வருவது மிகவும் குறைந்து போனதால் பகவான் மிகுந்த வறுமையில் வாடினார்.
  4. ஆரம்பத்தில் ஆன்மீக நோக்கத்திற்காக அவர் யோகத்தை நாடவில்லை. மாறாக யோக சக்தியைப் பயன்படுத்தி நாட்டுக்கு விடுதலை வாங்கித் தர வேண்டும் என்பதற்காகத்தான் அவர் யோகத்தையே நாடினார்.
  5. அவருடைய சகோதரர் பரீனுக்கு வந்த காய்ச்சல் ஒரு வாரமாக குணமாகாமல் இருந்த பொழுது ஒரு நாக சன்னியாசி ஒரு மந்திரத்தை உச்சரித்து, சிறிது தண்ணீரை அவர்மேல் தெளித்து, ஒரு சில மணி நேரத்தில் அந்தக் காய்ச்சலை குணப்படுத்தினார். இதனால் ஆச்சரியப்பட்ட பகவான் இதன் காரணமாகவே யோகத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
  6. பரோடாவில் வசித்த பொழுது நர்மதை நதிக்கரையில் தங்கியிருந்த பிரம்மானந்தா என்ற யோகியைச் சந்தித்தார். பகவான் சந்தித்த பொழுது அவருக்கு 200 வயது என்று தெரிவிக்கப்பட்டது.
  7. பரோடாவில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய மேஜையில் நாலு பேருக்குத் தெரியும்படி தன்னுடைய பணத்தை எல்லாம் வைப்பாராம். எல்லோரும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விரும்பினார்போல் தெரிகிறது.
  8. சுப்ரமணிய பாரதியாரின் உதவியுடன் தமிழ் கற்றுக்கொண்டு, வைணவ பாசுரங்களைப் படித்தார். அதிலும் குறிப்பாக, நம்மாழ்வாருடைய பாசுரங்களில் தென்பட்ட ஆன்மீக ஸ்பரிஸத்தை அவர் பாராட்டினார்.
  9. புதுவையில் தங்கி, பகவான் ஸ்ரீ அரவிந்தருடன் பழகிய நாட்களில்தான் பாரதியாருடைய கவிதைப் படைப்பே உச்ச கட்டத்தில் இருந்தது.
  10. பகவான் புதுவைக்கு வந்த ஆரம்ப நாட்களில் கறி, மீன் சாப்பிட்டார். புகையும் பிடித்தார். ஆன்மீக தூய்மை என்பது நம்முடைய உள்மனநிலையைப் பொருத்ததே தவிர, தம் வெளிப் பழக்க, வழக்கங்களைப் பொருத்ததில்லை என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்தார். அன்னை வந்த பிறகு புகையிலை வாசனை அவருக்குப் பிடிக்காது என்று அவர் தெரிவித்த பின்புதான் பகவான் நிறுத்தினார்.
  11. புதுவையில் புயல் அடித்த பொழுது பகவானுடைய அறையின் ஜன்னல் கதவுகள் திறந்திருந்த பொழுதும் ஒரு துளி தண்ணீர் கூட அவருடைய அறைக்குள் நுழையவில்லை. வெளியில் கடுமையாகப் புயல் வீசிக் கொண்டிருந்த பொழுதுகூட அதைப் பொருட்படுத்தாமல் அமைதியாக பகவான் எழுதிக் கொண்டிருந்ததை அன்னை கண்டார்.
  12. சாவித்ரி காவியத்தின் முதல் படலத்தை எழுதி முடித்த பின்பு அவருடைய சீடராக இருந்த, கவிதை எழுதத் தெரிந்த ஒரு ஆசிரமவாசியிடமே படித்துப் பார்க்கும்படி அனுப்பினார். அந்த சீடர் "சத்தியவான் இறக்க வேண்டிய நாள் அது'' என்ற வரியைக் குறிப்பிட்டு, அந்த வரி நன்றாக இல்லை என்று விமர்சித்திருந்தார். பகவான் பதிலுக்கு அந்த வரிதான் அந்த படலத்திலேயே சிறந்த வரி என்று தான் நினைத்திருந்ததாக சீடருக்கு எழுதினார்.
  13. பகவானுடைய அறையை சுத்தம் செய்ய அன்னையால் நியமிக்கப்பட்ட ஆசிரமவாசிகள் சுத்தம் செய்யும் பொழுது அவரை நிமிர்ந்துகூட பார்க்கக் கூடாது என்று அன்னை உத்தரவிட்டிருந்தார். இவர்கள் அவரை பார்த்தால்கூட அவருடைய ஜீவிய நிலை இறங்கிவிடும் என்று அன்னை சந்தேகித்திருக்கலாம். பகவானும், ஆசிரமவாசிகளுடன் பேசும் பொழுது அவர்களை நேரடியாகப் பார்க்காமல், வேறெங்கோ பார்த்துக் கொண்டுதான் பேசுவார். தரிசன தினங்களில் மட்டும்தான் நேரிடையாக ஆசிரமவாசிகளைப் பார்த்து, ஆசி வழங்குவார்.
  14. ஆசிரமவாசிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை அன்னையிடம் அவர் விட்டிருந்தாலும், அவர்கள் எழுதுகின்ற கடிதங்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் பொறுப்பை பகவான் தானே ஏற்றுக் கொண்டார். மேலும் இரவு நேரத்தில்தான் அவர் அந்த வேலையைச் செய்தார். இதன் விளைவாக பகவானுடைய தூக்கம் கெட்டு, கண் பார்வையும் பாதிக்கப்பட்டதாக அன்னை தெரிவித்தார்.
  15. இரண்டாம் உலகப் போரின் பொழுது ஆங்கில அரசாங்கம் இந்தியாவிற்கு Dominion அந்தஸ்து வழங்க முன் வந்த பொழுது, அதை ஏற்றுக் கொள்ளும்படி பகவான் காங்கிரஸ் தலைவர்களிடம் அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. ஜெர்மனிக்கு எதிராக நேச நாடுகளுக்குப் பகவான் ஆதரவு அளித்த பொழுது, காங்கிரஸ்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், ஜெர்மனி தீமைக்குத் துணை போவதாகவும், மாறாக நேச நாடுகள் உண்மையைக் காப்பாற்றுவதற்காகப் போரிடுவதாகவும் பகவான் விளக்கம் அளித்தார்.
  16. சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள் ஜப்பானியர்களை அணுகி, ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற உதவி கேட்ட பொழுது, ஜப்பானிய ஆதிக்கம் ஆங்கிலேய ஆதிக்கத்- தைவிட மேலும் மோசமாக இருக்கும் என்று பகவான் எச்சரித்தார். ஏனென்றால் ஆங்கிலேயர்களைவிட ஜப்பானியர்- களுக்கு அரசியல் பக்குவம் குறைவு என்று பகவான் விளக்கமளித்தார்.
  17. ரவீந்தரநாத் தாகூர் அவர்கள் புதுவைக்கு வந்து பகவானைச் சந்தித்தார். அப்பொழுது பகவானிடம் பிரம்ம ஞானம் இருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார்.
  18. பகவான் அன்னையிடம் திருவுருமாற்றத்திற்குத் தன்னுடம்பை விட அன்னையினுடைய உடம்பு மேலும் தகுதி பெற்றது எனவும், அவர்கள் இருவரில் யாரேனும் போக வேண்டி- யிருந்தால் தான் முதலில் போக தீர்மானித்துள்ளதாகவும், அன்னை தொடர்ந்து இருந்து திருவுருமாற்றப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
  19. அன்னை அவர் அருகில் இருந்த பொழுது பகவான் உடம்பை விட்டு சமாதி அடைவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதை உணர்ந்து கொண்ட அன்னை கடைசி நேரத்தில் ஒதுங்கிக் கொண்டு, பகவான் சமாதி அடைவதற்கு வழி செய்தார்.
  20. அன்னை ஒரு தடவை தான் எந்தத் துறையிலும் விசேஷ திறமையையோ, மேதாவித்தனத்தையோ வெளிப்படுத்த முடியாமல் போனது ஏன் என்று பகவானைக் கேட்ட பொழுது ஒரு காரணமாகவே அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக பகவான் பதிலளித்தார்.
  21. பகவான் தன்னுடைய எழுத்துப் பணிகளை 1920 அளவிலேயே பெரும்பாலும் முடித்துவிட்டார். இருந்தாலும் சாவித்திரியை மட்டும் தன் வாழ்நாள் இறுதிவரை திருத்தம் செய்து கொண்டிருந்தார்.
  22. அவருடைய வாழ்நாளின் கடைசி மாதங்களில் சிறுநீரக பாதிப்பால் அவர் கோமாவில்தான் இருந்தார். இருந்தாலும் தான் விரும்பிய பொழுதெல்லாம் அந்த கோமாவிலிருந்து வெளி வந்து சாவித்திரியை திருத்தம் செய்தார்.
  23. பகவான் உடம்பை விட்டு சமாதி அடைந்திருந்தாலும் சூட்சும உலகில் அவர் தனக்கென்று ஒரு வீடு அமைத்துக் கொண்டார். அன்னை அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று, அவரை சந்தித்துப் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
  24. அன்னை தன்னுடைய அடிமனதைச் சுத்தம் செய்ய முயன்ற பொழுது, அது அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அவர் உடம்பே எரிவது போலவும் உணர்ந்தார். அப்பொழுது தான் பகவான் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்திருக்க வேண்டும் என்பதை அவரால் யூகிக்க முடிந்தது. இருந்தாலும் நெருப்பில் இருப்பது போல் தான் பட்ட வேதனையைப் பற்றி பகவான் பேசியதே இல்லை.
  25. சச்சிதானந்தத்தைத் தான் சுலபமாக அடைந்துவிட்டதாக பகவான் குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில் சச்சிதானந்தத்தின் வெளிவடிவமாக இருக்கின்ற சத்தியஜீவியத்தை அடைவதற்குப் பத்து வருடம் ஆகியது என்றும் சொல்லியிருக்கிறார்.
  26. பகவான் அன்னையை மிர்ரா என்று அவருடைய பெயரைச் சொல்லி அழைக்காமல் அன்னை என்றுதான் அழைத்தார். அன்னையும் பதிலுக்குப் பகவானைப் பிரபு என்றுதான் அழைத்தார்.
  27. அன்னை ஐந்து வயது இருக்கும் பொழுதுகூட அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். அவருடைய தாயார் ஏனிப்படி அடிக்கடி பகலிலேயே தூங்கிவிடுகிறாய் என்று கேட்பதுண்டு. அப்படி கேட்கும் பொழுது, தான் தூங்கவில்லை என்றும், உலகத்தின் நன்மைக்காக உள்ளே வேலை செய்வதாகவும் அன்னை பதிலளிப்பாராம். இத்தகைய பதிலைக் கேட்கும் பொழுது தன் மகளுக்குப் புத்தி பேதலித்துவிட்டது என்று அவருடைய தாயார் நினைப்பாராம்.
  28. அன்னை தன்னுடைய ஏழாவது வயதிலேயே அவரைவிட வயதில் பெரிய ஒரு முரட்டு மாணவனை வாயால் கண்டித்தே அடக்கினார்.
  29. அவர் தன்னுடைய பத்தாவது வயதில் ஜெர்மன் நாட்டு எல்லையில் இருந்த ஒரு வனப்பகுதிக்குச் சென்ற பொழுது ஆங்கிலத்தில் Gnomes என்று அழைக்கப்படுகின்ற குட்டி தேவதைகள் விளையாடுவதைப் பார்த்தாராம்.
  30. அன்னையினுடைய சகோதரருக்கு ஒரு நாள், "பெரிய கடவுளாக விரும்புகிறாயா?'' என்று ஒரு உள் அசரீரி கேட்டதாம். ஆனால் அவரோ மனித குலத்துக்குச் சேவைதான் செய்ய விரும்புகிறேன் என்று பதிலளித்தாராம். இப்படி வந்த வாய்ப்பை தவறவிட்டது சரியில்லை என்று அன்னை கருத்துத் தெரிவித்தார்.
  31. யூதர்களுடைய ஒரு திருமண வைபவத்தின் பொழுது ஒலித்த சங்கீதத்தை அன்னை கேட்ட பொழுது அவடைய மனநிலை உயர்ந்து மேலே சென்றது. சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே அன்னை ஒரு ஜன்னல் பக்கம் வந்து நின்றார். அப்பொழுது மின்னல் போல் வேகமாக ஒரு சக்தி அவர் உடம்புக்குள் இறங்கியது. அச்சக்தி இறங்கியபின் அவர் தானும் மிகவும் சக்தி வாய்ந்தவராக மாறியதாக உணர்ந்தார்.
  32. பிரஞ்சு தேசத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக ஒரு வங்கியின் அதிபராக விளங்கிய அன்னையின் தகப்பனாரும் வறுமையை அனுபவிக்க நேரிட்டது. இப்படி அன்னையின் குடும்பம் வறுமையில் வாடிய சமயத்தில் அன்னை ஒரு துணிக் கடையின் பக்கம் போனார். சில புதிய துணிமணிகளைப் பார்த்து, அவை தனக்குக் கிடைக்குமா என்று ஆசைப்பட்டார். கையில் பணம் இல்லாததால் வாங்க முடியாமல் போய்விட்டது. ஆனால், வெகு விரைவிலேயே அதே மாதிரியான புது துணிமணிகள் ஒரு டஜன் அன்னைக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது.
  33. எந்த உதவியும் இல்லாமல் தானே இறைவனைத் தேடிக் கொண்டிருந்த பொழுது விவேகானந்தருடைய ராஜ யோகத்தைப் பற்றிய புத்தகத்தின் பிரஞ்சு மொழி பெயர்ப்பு ஒன்று அன்னைக்குக் கிடைத்தது. அதைப் படித்த பின்பு பல வருடங்களில் சாதிக்கக்கூடியதை அன்னை ஒரு சில மாதங்களில் சாதித்தார்.
  34. தியான் என்பவரிடம் occultism என்று சொல்லப்படுகின்ற ஆன்மீகப் பயிற்சியை மேற்கொண்ட பொழுது முதல் நாளே அன்னை தியானிடம் தன்னுடைய சைத்திய புருஷன் தன்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்வதாகவும், அதனால் தனக்கு எந்த பயமுமில்லை என்றும் தெரிவித்தார்.
  35. இப்படி அல்ஜீரியாவில் லெம்சன் நகரில் தியான் தம்பதியருடன் தங்கியிருந்த பொழுது அன்னை தன்னுடைய உடம்பை விட்டு வெளியேறி வந்து பாரீஸ் நகரம் வரை வந்தார். அங்கே தன்னுடைய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களையும் சந்தித்து, பேனா, பேப்பர் எடுத்து எழுதவும் செய்தார். பாரீஸ் நகரத்தில் ரயிலில் பயணமும் செய்தார். இப்படி உடம்பை விட்டு வெளியில் வர முடியும் என்று வெற்றிகரமாக நிரூபித்த பின்பு, மேலும் இந்தத் திறனை வளர்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் சத்தியஜீவியத்தினின்று பிரிவதற்கு அறியாமை எனும் பிரிவினைக்குரிய தீவிரம். அதை அடுத்த நிலையில் உறுதிப்படுத்துவது அகந்தை.
 
அகந்தையும், அறியாமையும் மனத்தை சத்தியஜீவியத்தினின்று பிரிக்கின்றன.

 
 
*****
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
செயலைச் சமர்ப்பணம் செய்வதைவிட, அதன் விவரங்களைச் சமர்ப்பணம் செய்வது கடினம். இதற்கு நம்பிக்கை விவரமானதாக இருக்க வேண்டும்.
 
சமர்ப்பணம் விவரமானால் கடினமாகும்.
 
 
*****

 



book | by Dr. Radut