Skip to Content

15. பிரச்சினைகளை மறக்கும்பொழுது அவை மறைகின்றன

பிரச்சினைகளை மறக்கும்பொழுது அவை மறைகின்றன

N. அசோகன்

பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய ஆன்மீகச் சிந்தனைகளில் ஓர் ஆன்மா அதை பிடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை மறக்கும் பொழுது அவை மறைந்துபோவதைக் கண்டு, அந்த ஆன்மா அதிசயப்படுகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார். ஏன் மறக்கும் பொழுது பிரச்சினை தீர்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய பொதுவான பழக்கம் என்னவென்றால், நம்மைப் பாதித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். அப்படி நாம் கவலைப்படும் பொழுது அந்தப் பிரச்சினைக்கு நாம் மேலும் எனர்ஜியைத் தான் கொடுக்கிறோம் என்று ஸ்ரீ கர்மயோகி அவர்கள் சொல்கிறார். ஆனால் நாம் பிரச்சினையை மறக்கும் பொழுது அந்த பிரச்சினையிலிருந்து விடுபடக்கூடிய மனோதிடம் நமக்கு இருப்பதாக அர்த்தமாகிறது. அந்த மனோதிடத்தை வாழ்க்கை மதிக்கிறது. அதனால் நம் பிரச்சினைகளைத் தீர்க்க அது நடவடிக்கை எடுக்கிறது.

இதை நாம் கருதிப் பார்க்கும் பொழுது தம்முடைய ஏழ்மை, வியாதி, கடன், தோல்வி, போன்றவற்றைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்தப் பிரச்சினையில் மேலும் மேலும் மூழ்கிப்போகிறார்கள் என்றாகிறது. மாறாக, தம்முடைய ஏழ்மை, வியாதி, கடன், தோல்வி, ஆகியவற்றை மறந்துப் போகின்றவர்கள் தம்முடைய மனோபலத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள் என்றாகிறது. தம்முடைய மனோபலத்தை அதிகரித்துக் கொள்ளும் பொழுது அந்தப் பிரச்சினையும் அவர்களுக்குத் தீர்ந்துபோகிறது.

அப்பிரச்சினையைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்றால், நாம் அப்பிரச்சினையை அன்னையிடம் ஒப்படைக்கவே இல்லை என்றாகிறது. நல்ல வேலை தமக்கு வேண்டும் என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்கின்ற ஒருவர் பிரார்த்தனை செய்த பிறகும் தொடர்ந்து, "தமக்கு வேலை கிடைக்குமா?" என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அன்னை மேல் அவருக்கு முழு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். மாறாக, அன்னையிடம் பிரார்த்தனை செய்தபிறகு "வேலை இல்லை" என்ற பிரச்சினையை அவர் மறந்துவிடுகிறார், அவருக்கு சந்தோஷம் வருகிறது என்றால், அவர் உண்மையிலேயே அப்பிரச்சினையை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டார் என்று அர்த்தமாகிறது. இப்பொழுதே வேலை கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கை அவருக்கு வருகிறதென்றால், அந்நம்பிக்கை அவருக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

இதிருந்து கவலை என்பது நம்பிக்கையின்மைக்கு ஓர் அறிகுறி என்று தெரிகிறது. கவலைப்படுகின்றவர்கள் தங்களுடைய அறிவைத்தான் நம்புகிறார்களேயொழிய அன்னையின் அருளை நம்புவதில்லை. அன்னைக்கு பிரார்த்தனை செய்தவுடன் அந்தப் பிரச்சினையை நாம் மறந்துவிடுகிறோமென்றால், அருள் நம் பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்த்துவைக்குமென்ற நம்பிக்கை நம் மனதில் பிறந்துவிட்டதாக அர்த்தம்.

நன்றாக ஆர்கனைஸாகியிருக்கின்ற மனிதனுடைய பர்சனாலிட்டி மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் எதிர்க்கிறது என்று ஸ்ரீ கர்மயோகி சொல்யிருக்கின்றார். ஒரு கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் பொழுது ஆர்கனைஸேஷன் நல்லது என்று தெரிகிறது. அதே சமயத்தில் ஆர்கனைஸேஷன் இறுகிப்போகும் பொழுது இந்த இறுக்கமே மாற்றத்திற்குத் தடையாக இருக்கிறது. பல பழமை வாய்ந்த ஸ்தாபனங்கள் இப்படி இறுகிப்போய் மாற்றத்தை எதிர்க்கின்றன. அப்படி ஆர்கனைஸேஷன் மாற்றத்திற்கு எதிரியாகும் பொழுது மனிதனுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்றால், ஆர்கனைஸேஷன் என்ற கட்டுப்பாட்டிற்குள் வாராத இடங்கள் அவனுடைய பர்சனாலிட்டியிருந்தால், அவற்றின் மூலம் தான் அதிர்ஷ்டம் வரும் என்று ஸ்ரீ கர்மயோகி அவர்கள் கூறியிருக்கிறார்.

*****



book | by Dr. Radut