Skip to Content

12. அன்னை இலக்கியம் - படகு

"அன்னை இலக்கியம்"

படகு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

விடை பெற்று வீட்டிற்குச் சென்றாள். அவர்கள் வாழும் ஆரோக்கியமான வாழ்வு மேன்மேலும் மனத்திரையில் ஓடி மகிழ்வு அளித்தது. அவர்களைப் பற்றி எண்ணிப் பார்த்தாள். அவர்களில் யாரும் சாப்பாட்டிற்கு இல்லை என்று அங்கு வேலைக்கு வரவில்லை. யாரும் படிப்பறிவு இல்லாதவர்களும் இல்லை. வயது வித்தியாசம் எதுவும் பாராட்டவில்லை. வெளியுலகின் போட்டி, பொறாமை, அகங்காரங்களிலிருந்து விடுபட்டு, வேலையை அர்ப்பணமாகச் செய்து, இலாப நோக்கம் ஏதுமின்றி, தம்மைப்பற்றிய கர்வம் ஏதுமின்றி, தம்மை இறைவனின் கருவி என்றுணர்ந்து வாழ்ந்து, உயர்உணர்வு ஒன்றே குறிக்கோளாய் ஓரினமாய்த் தோன்றுவதே இவர்கள் இலட்சியமாயிருந்தது.

ஏனோ அந்த அமைப்பு அவளை மிகவும் கவர்ந்தது. மறுநாள் மாலையும் சென்றாள். இப்போது சிலர் இரவுநேர உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

ஆண்டாளம்மா தோட்டத்திலிருந்தார். உள்ளே சென்ற இவள் யாரை அழைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த லதா இவளைப் பார்த்துவிட்டு, "வா, பவானி. அம்மா தோட்டத்திருக்கிறார். போய்ப்பார்க்கலாம், போ'' என்றாள்.

நேரே பின்புறத் தோட்டத்திற்குச் சென்றாள். பின்புறம் கூரை இறக்கி, இரண்டு புறமும் சிறுதிண்ணைகள் இருந்தன. அங்கு ஆண்டாளம்மா உட்கார்ந்திருந்தார்.

"வா, பவானி. நீ தோட்டத்தைப் பார்த்ததில்லையல்லவா? சுற்றிப் பார்'' என்றாள்.

அழகழகான பூஞ்செடிகள் வரிசையாய் நடப்பட்டு நீரூற்ற பாத்தி இருந்தது. சில நிழல்தரும் மரங்களும் ஆங்காங்கே இருந்தன. அவையும் கொத்துக்கொத்தாய் சிவப்பும் மஞ்சளும் நீலமுமாய்ப் பூத்திருந்தன. தோட்டத்தின் இரண்டு கோடியிலும் சிறுசிறு மண்டபம் போன்ற அமைப்புகள் இருந்தன. அவற்றுள் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் புனிதச்சின்னங்கள் இடம்பெற்றிருந்தன. சற்று உயரிய மேடைபோன்ற அமைப்பில் தண்ணீர் ஊற்றி பூக்கள் இட்டு வைக்க ஏதுவாய் குழிவான அமைப்பு ஒன்று சின்னங்களுக்கு முன்பு இருந்தது. அதில் சில அல்மலர்கள் இடப்பட்டிருந்தன. அழகிய நீண்ட தரையும் மேல் கூரை அமைப்பும் உட்கார்ந்து தியானம் செய்ய பொருத்தமாய் இருந்தது.

மணம் வீசும் செடிகளுக்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தனர் சிலர். சிலர் பூக்களை ஒருதட்டில் வைத்துக்கொண்டு, அதன் முன்னமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். அமைதியும் தூய்மையான அழகும் திகழும் நந்தவனமாய்க் காட்சியளித்தது தோட்டம். எத்தனை அழகான சூழல்கள் இங்கு என்று வியந்தாள். சில நிமிடங்கள் தியானம் செய்துவிட்டுத் திரும்பினாள்.

மறுநாள் காலையும் வந்தாள். சில புதியஅன்பர்கள் சமையற் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவள் அறிந்த பிரேமா, லதா, சுகுமார், பரிமளம் இவர்களைக் காணவில்லை.

நேரே தோட்டத்திற்குச் சென்று சிறிது தியானம் செய்தாள். பிறகு மரம், செடி, கொடிகளை ஒருமுறை ஆவலுடன் பார்த்தாள். பக்கத்தில் ஓர் இரும்புக்கதவு தெரிந்தது. அதன் வழியே பக்கத்துக் கட்டடத்திற்குச் செல்ல முடியும். இப்போதுதான் கவனித்தாள், அழகான கட்டடம் தெரிந்தது. ஆவலுடன் பார்த்தாள்.

அங்கு வந்த ஆண்டாளம்மா, "என்ன பவானி, பார்க்கிறாய்? பள்ளிக்கூடக் கட்டடத்தையா? அதுதான் நம் பள்ளிக்கூடம். போய்ப் பார்த்து வருவோமா?'' என்றாள்.

"ஆமாம், அம்மா. போய்ப் பார்க்கலாம், வாருங்கள். எனக்குப் பள்ளிக்கூடம், சிறு குழந்தைகள் மிகவும் பிடிக்கும்'' என்றாள் ஆவல் பொங்க.

கம்பிக் கதவின் மேல் கொக்கியை விலக்கிக் கதவைத் திறந்த ஆண்டாளம்மா, "வா பவானி. வந்துபார்'' என்றாள். சுற்றிலும் திறந்த வெளி. நான்கு புறமும் தூண்கள் போல் விரிந்து பரந்த ஆலமரம்.

”ப” வடிவில் நடுவே வகுப்பு அறைகள். அறைகளில் கரும்பலகை உண்டு. ஆசிரியர் அமர நாற்காலி, மாணவர்களுக்கு மேசை, பெஞ்சு எதுவும் இல்லை. பெரிய பாய்விரிப்புகள் தரையில். 2 முதல் 3 வயதுடைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பிரேமா அவர்களை விளையாட்டில் ஆர்வமூட்டி உடனிருந்து பார்த்துக் கொள்கிறாள். குழந்தைகள் அவளையும் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்கின்றனர். நான்கு முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் வட்டம், சதுரம், கட்டம் போன்ற பல பொருட்களைப் பிரித்தும் சேர்த்தும் ஆர்வமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆறு வயது முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகள் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்தனர். சில பிரிவினர் எழுத்துகள் எழுதிப் பயின்றனர். இன்னும் சிலர் சொற்களை எழுதிப் பயின்றனர். சில குழந்தைகள் எழுத்துகளை எழுத, சில குழந்தைகள் அவற்றின் பெயர்களைக் கூற, சில குழந்தைகள் சரியா, தவறா எனக் கண்டுபிடிக்க, உற்சாகமாய் அதை ஒரு விளையாட்டுப் போல் செய்தனர். சொற்களைப் பயிலும் மாணவர்கள் "சொற்கட்டடம்” என்னும் விளையாட்டினை விளையாடுவதன் மூலம் அதிக சொற்களைப் பயின்றனர். பக்கத்தில் சுகுமார், லதா, பரிமளம் இவர்கள் அமர்ந்து வழிகாட்டினார்கள். அது ஒரு விளையாட்டுப் போலிருந்ததே தவிர கடினமாய் உழைப்பது போல் குழந்தைகளுக்கு அலுப்பூட்டவில்லை. தெய்வஅன்பு, தெய்வநம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றின் நன்மைகளைச் சிறுசிறு பாடல்களாக அமைத்து எளிய இசையில் பாடினர். எப்போதுமே குழந்தைகளுக்குப் பாட்டும், இசையும் விருப்பமுடையனவானதால் கோரஸாகப் பாடி, அபிநயம் செய்தனர். இன்னும் சில குழந்தைகள் கதை சொல்வதன் மூலம் தம் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வதுடன் நாட்டுப்பற்று, நட்பு, இறையன்பு பற்றியெல்லாம் தம்தம் ஆர்வங்களை வெளிப்படுத்தினர். அன்பர்கள் அக்குழந்தைகளுடன் தாமும் ஒருவராகக் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினரேதவிர "கற்பித்தல்-ஆசிரியர்” என்ற வடிவமே இல்லை.

அவர்களுக்குச் சுத்தம், ஒழுங்கு, உண்மை போன்றவை திணிக்கப்படாமலே தாமே ஏற்கும்படித் தாங்கள் நடந்து கொண்டு அன்பர்கள் வழிகாட்டினர். அதுவொரு புதிய தெய்வீக உலகமாய் இருந்தது.

தெய்வஉணர்வில் எதையும் சாதிக்க முடியும் என்பது இங்கு மையக் கருத்தாக இருந்தது. குழந்தைகள் இயல்பாக வரிசை முறையைப் பின்பற்ற அறிந்திருந்தனர். இடத்தை அசுத்தம் செய்யாது இருந்தனர். சப்தமிட்டுப் பேசாமலும், கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தாமலும், அழகாக நடந்துகொண்டனர். வகுப்பறைகளை அழகாக வைத்துக்கொண்டனர்.

பவானிக்கு மனநிறைவாக இருந்தது. இந்தக் குழந்தைகளில், கள்ளமில்லாத அன்பில் தானும் கலந்துவிட ஆசைப்பட்டாள்.

"அங்கு மெஸ்ஸில் அன்பர்கள் பணிசெய்வது, இங்கு, பள்ளியில் குழந்தைகளை அழகுற நடத்துவது, யாவுமே மிகவும் அழகாக இருக்கிறதம்மா. இந்தப் புதுயுகம் விரிந்து பரவ வேண்டும் என்று மனம் ஏங்குகிறது'' என்றாள் பவானி.

"இங்குப் பள்ளிக்கூடத்திலும், அங்கு மெஸ்ஸிலும் நாங்கள் அன்னையைப் பின்பற்றுகிறோம். செய்யும் பணியைத் திருத்தமாகவும், அர்ப்பணிப்பாகவும் செய்யும் முறையில் மெஸ் நடக்கிறது. நம் நாட்டின் செல்வங்கள் குழந்தைகள். அவர்கள் அன்னை முறையில் உருவானால், எதிர்காலம் உலகிற்கே வழிகாட்டியாக நம்மை ஏற்கும். ஸ்ரீ அன்னை குழந்தைகளைப் பற்றிக் கூறும்போது, "ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பனைத் திறன், புதிய சொற்களை அறியும் ஊக்கம், நாடகத் திறன், கருத்துச்செறிவு ஆகியவை இயல்பாகவே உண்டு. இந்தத் திறமைகளையெல்லாம் ஊக்குவித்து, இலக்கியத்திலும் நாட்டு வரலாற்றிலும் அவனை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பருவத்தில் தான் தார்மீகப்பண்பு, சிந்தனாசக்தி ஆகியவை முழுமை எய்துவதற்கான முயற்சியைத் தொடங்க வேண்டும். சுவைபடப் பேசுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வீரநாயகன் மீது (Hero worship) அபிமானம் ஏற்படும் பருவமிது. நாட்டுப்பற்றும் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு. குழந்தையுள்ளம் வினாக்களுக்கு விளைநிலம். புதிய கண்டுபிடிப்பில் ஆர்வம் கொண்டவன் குழந்தை. நிர்தாட்சண்யமான விமரிசகன் அவன். பொருள்களை அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்துப் பார்ப்பதில் துடிப்பாக இருப்பவன். இத்தகைய குழந்தையை அவனுடைய இப்பண்புகளைக்கொண்டே ஊக்குவித்து, அவன் அறிவியல் வல்லுநனாக ஆவதற்குத் துணைபுரியலாம். நுண் பொருள்களை ஆராயும் மனப்பான்மையுள்ள சிறுவனை உலகின் நுணுக்கங்களை ஆராயும் அறிஞனாக உதவலாம். கற்பனைத் திறன்மிக்கவனைக் கலைஞன்ஆக ஊக்குவிக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் அவர்களை இங்குப் பயிற்ற ஆர்வப்படுகிறோம்'' என்றாள் ஆண்டாளம்மா.

"ஆமாமம்மா, நான்கூட நேற்று பகவானின் புத்தகம் ஒன்றைப் படித்தேன். அதிலும், "வளருகின்ற ஒரு ஜீவன் தனது சிறப்பம்சத்தை வெளியே கொண்டுவந்து, அதனை உன்னத நோக்கத்திற்காகப் பயன்படச் செய்ய உதவுவதுதான் கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்" என்று படித்தேன்'' என்றாள் பவானி.

"நாங்கள் குழந்தைகளுக்குப் புரியவைக்க நினைப்பனவெல்லாம் மூன்று கருத்துகள். அதாவது,

  1. எந்தச் சூழ்நிலையிலும் பொய் பேசுதல் கூடாது,
  2. வன்முறை, ஆத்திரம், கோபம், இவற்றை அடக்கத் தெரிய வேண்டும்,
  3. தெய்வத்தினிடம் பூரணபக்தி வேண்டும்,

என்பதே'' என்றாள் ஆண்டாளம்மா.

இதற்கிடையில் வீட்டில் இவள் சகோதர, சகோதரிகள் வந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இவள் முப்பது வயதை எட்டிவிட்டதால் இவளை இரண்டாந் தாரமாகக் கேட்டனராம். இவர்களும் ஒப்புக்கொண்டனராம். இதில் பவானிக்கு வருத்தம் என்னவென்றால் மணக்கப்போகும் ஆண்மகன் இவள் ஆர்வத்திற்கும், இவளுடன் ஆன்மீகப்படியில் ஏறுவதற்கும் துணைவர விரும்பவில்லை. இவள் காசும், இவளிடம் காமமுமே அவன் தேவையாயிருந்தது என்பதுதான்.

அவள் இதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டாள். பிள்ளை வீட்டார், "இவளுக்குத் திமிர்'' என்று பேசிவிட்டுப் போயினர். உடன்பிறப்புகள் இவளால் தங்களுக்கு அவமானம் என்று ஏசிவிட்டுப் போயினர். அவள் நலத்தில் உரிமையுள்ள அவர்கள் பேச்சைக் கேட்காததனால் துன்பப்பட நேரும் என்று அச்சுறுத்தினர்.

தனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று நயமாகக் கூறினாள் பவானி.

"உனக்கொரு கல்யாணத்தை முடித்து, உன்னை ஒருவன் கையில் ஒப்படைத்துவிட்டால் நாங்கள் நிம்மதியாகப் போவோம்'' என்றனர்.

மறுநாள் காலை ஆண்டாளம்மா வீட்டிற்குச் சென்றாள். மெஸ் வாயில் சார்த்தியிருந்தது. வீட்டுவாயில் திறந்திருந்தது. உள்ளே சென்று முன்புறம் நின்றுகொண்டு, "அம்மா'' என்றழைத்தாள் பவானி.

லதா வந்தாள். "வா, பவானி'' என்றாள்.

"ஏன் மெஸ் வாயில் சார்த்தியிருக்கிறது?'' என்றாள் பவானி.

"ஓ! அதுவா, இன்று முதல் தேதியல்லவா? இன்று சுபிட்ச தினம். இன்று மெஸ் கிடையாது. வீடு, கடை, யாவற்றையும் முழுச் சுத்தம் செய்து, மாலையில் தியானம் செய்வோம்'' என்றாள் லதா.

"முழுச் சுத்தம் என்றால் என்ன செய்வீர்கள்?'' என்றாள் பவானி.

"தினமும் வீட்டையும் கடையையும் பெருக்கித் துடைப்பது போல் மட்டுமல்லாது, ஒவ்வோர் இடத்தையும், ஒவ்வொரு பொருளையும் சுத்தம் செய்வோம். வீடு, கடை ஒட்டடை நீக்குவோம். புக் ஷெல்ப் துடைத்து, ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்துத் துடைத்து வைப்போம். அடிக்கடி பயன்படுத்தாத பொருட்களையும் எடுத்து சுத்தம் செய்து வைப்போம். மெழுகுதல், கழுவுதல் எல்லாம் உண்டு'' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

புத்தக அறைக்கு வந்தாள். எல்லாப் புத்தகங்களையும் அலமாரியிலிருந்து கீழே இறக்கும் வேலையில் சுகுமாரும் பிரேமாவும் ஈடுபட்டிருந்தனர்.

"உங்களிடம் ஒரு கருத்துக் கேட்கவேண்டும். இடைஞ்சலாக எண்ணமாட்டீர்களே?'' என்று மெல்லக் கேட்டாள் பவானி.

"தைரியமாய்க் கேள் பவானி. ஓர் இடைஞ்சலுமில்லை'' என்றாள் பிரேமா.

தானும் அவர்கள் பணியைப் பகிர்ந்துகொண்டு, "நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதற்கு என்ன காரணம்? ஆர்வமில்லை என்பதாலா, அமையவில்லை என்பதாலா?'' என்று கேட்டாள்.

"என்னைப் பொருத்தவரை "திருமணம் செய்து கொண்டு தான் வாழவேண்டும், இல்லையென்றால் துன்பம்" என்ற கருத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்று திருமணம் செய்து கொள்ளவில்லை'' என்றாள் பிரேமா.

"என்னைப் பொருத்தவரை வாழ்க்கையை இரண்டு விதமாக வாழக்கூடும். சாதாரண ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு, பெருமையுடன் வாழும் சாதாரண வாழ்க்கை. அசாதாரணமான உயர் உணர்வுகளுடன் வாழும் ஆன்மீகவாழ்க்கை. சாதாரணவாழ்விற்கு ஜோடி அமைவது சுலபம். பொருத்தமில்லையென்றாலும் சண்டை, சச்சரவுடன் வாழ்வது இயல்பாகிவிடும். ஏனென்றால் அவர்கள் சாதாரணமானவர்கள். ஆனால், அசாதாரணம் என்பதற்கு ஏற்ற ஜோடி அமைவது கடினம். மேலும் ஆண்டவனை நோக்கும் அந்த ஆன்மீக வாழ்வில் ஆண்டவனே நமக்கு ஜோடியாக அமைந்துவிடுவதால் திருமணம் என்றவொன்று தேவையில்லாதது. இதுதான் என் கருத்து'' என்றான் சுகுமார்.

"என்றாவது, "அதை இழந்துவிட்டோமே என்ற ஏக்கம் வருமோ?” என்ற பயம் இல்லையா?'' என்றாள் பவானி.

"இல்லை பவானி. திருமணமே வாழ்வில்லை. அது வாழ்வில் ஒரு பகுதிதான். அதற்கென ஏற்பட்டுள்ள சம்பிரதாயங்களும் சடங்குகளும் மனிதனே ஏற்படுத்திக்கொண்டவைதாம். ஒழுக்கக் கேடு நேருமோ என்ற அச்சவுணர்வுதான் திருமணத்திற்குக் காரணம். திருமணம் என்ற போர்வைக்குள் புகுந்துகொண்டு ஒழுக்கக்கேடு விளைவிக்கின்ற மனிதர்களில்லையா என்ன? ஒவ்வொருவரும் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழ முடிவுசெய்தால் திருமணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திராது. அந்த வாழ்வை விரும்புகின்றவர்களுக்கு அது உரியதே. வேண்டாதவர்களுக்குக் கட்டாயமில்லை. என்னைப் பொருத்தவரை ஸ்ரீ அன்னை கூறிய திருமணப் பொருளை உணர்ந்து செய்துகொள்ளும் திருமணமே சிறந்தது'' என்றான் சுகுமார்.

"ஸ்ரீ அன்னை என்ன கூறியிருக்கிறார்?'' என்றாள்.

"பிறந்தகுலம், நாடு, சூழ்நிலை, கற்ற கல்வி, இவற்றால் தீண்டப்படாது, ஜீவனின் ஆழங்களில், ஜீவனின் மையத்தில், ஜீவனின் சிகரத்தில் ஒரு பரமசத்தியம் உள்ளது. ஒரு நித்தியஜோதி உள்ளது. அதன் உணர்வில் ஒன்று சேருவதுதான் உண்மையான ஒன்று சேருதல். ஆர்வத்திலும், ஆன்மீகப்படிகளில் ஏறுவதிலும் ஒன்றாக இருக்க வேண்டும். நிலைத்த திருமணத்தின் ரகசியம் இதுவே என்று ஸ்ரீ அன்னை ஓரிடத்தில் கூறியிருக்கிறார்'' என்றான் சுகுமார்.

"நம் திருமணங்கள் பெரும்பாலும் அழகு, அந்தஸ்து, காம நுகர்ச்சி இதனடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. அது சரி, இதெல்லாம் எதற்குக் கேட்கிறீர்கள்?'' என்றான் சுகுமார்.

"சில தினங்களாக, இங்கு வந்து இந்த அன்னை குடும்பத்தைப் பார்த்ததில் எனக்கு இதில் ஈடுபாடு வந்தது. நானும் உங்களில் ஒருத்தியாய் இந்தத் தவவாழ்வு வாழ ஆசைப்பட்டேன். என் உறவினர்கள், "திருமணம் அவசியம். இல்லையென்றால் பாதுகாப்பு இராது" என்று வற்புறுத்துகின்றனர். என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால் உங்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டால் ஒரு வழிபுரியும் என்றெண்ணிக் கேட்டேன்'' என்றாள் பவானி.

"இப்போது என்ன வழி புரிந்தது?'' என்றாள் பிரேமா.

"இறைவன் எனக்களித்த அற்புத ஜீவனை, உணர்ச்சிகளுக்கு இரையாக்கி வீணாக்க விரும்பவில்லை. ஸ்ரீ அன்னை கூறியதுபோல் ஆன்மீகப்படிகளில் ஏறத் துணைவரும் ஆடவரைத்தான் மணப்பேன். இல்லையென்றால் ஆண்டவனையே துணைக்கழைப்பேன்'' என்றாள் பவானி.

"ஆன்மீகவாழ்வில் நாட்டம் இருக்குமளவிற்கு மனோதிடம் இல்லாததுதான் குறைபாடு. அந்தத் திடமும் செயல்பாடும் உடைய உங்களில் ஒருத்தியாக வாழ முடிவு செய்துவிட்டேன்'' என்றாள்.

வீட்டில் எல்லோரும் இவள் பதிலுக்குக் காத்திருந்தனர். இவள் அன்னை குடும்பத்தில் சேரப் போவதாகக் கூறிவிட்டாள்.

அனைவரும் அதிர்ந்தனர். "நீ எல்லாவற்றையும் துறந்து ஒரு தெய்வீகவாழ்க்கை வாழ்வதானால் உனக்கெதற்கு இந்தச் சொத்து? அதையேனும் எங்களுக்குப் பகிர்ந்தளித்தால் என்றேனும் உனக்குக் கஷ்டம் வந்தால் நாங்கள் உனக்கு உதவுவோமே'' என்றனர்.

அதற்கும் அவள் ஒரு பதில் வைத்திருந்தாள்.

"நீங்கள் நினைப்பதுபோல் பணம் என்பது நம் விருப்பத்திற்குச் செலவு செய்வதற்காக ஏற்பட்டதன்று. அதன் வடிவம்தான் மனிதன் அமைத்தது. அதற்குள் மறைந்திருக்கும் ஆற்றல் இறைவனால் பூவுலகிற்கு அனுப்பப்பட்டது. தெய்வசக்தியை ஏற்று, அவற்றை வெளிப்படுத்துவதற்கு இந்த உலகைத் தயாரிக்கும் பணிக்காக இறைவனால் அனுப்பப்பட்ட விஸ்வசக்தியது. மிக உண்மையான, மிக விரிவான எண்ணமுடையவர் கைக்கே பணம் போகவேண்டும் என்பது ஸ்ரீ அன்னையின் கருத்து. அன்னை குடும்பத்து ஆண்டாளம்மா மிக விசாலமான எண்ணமுடையவர். குழந்தைப் பருவத்திலேயே அன்னையின் வழியில் ஜீவர்களைப் பக்குவப்படுத்த பாலர் பள்ளி நிறுவி, அதன் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள். அத்தை தன் இறுதிக் காலத்தை அன்னை குடும்பத்தில் கழிக்கப் போவதாய்க் கூறுவார்கள். எனவே, அவர்கள் சொத்து அதன் பணிகளுக்குப் பயன்படுவதே முறை. எனவே, இதை நான் அங்குக் கொடுத்துவிடப்போகிறேன். "பிள்ளை இல்லா சொத்து கொள்ளை போகிறது" என்ற சொல்லுக்கே இடமில்லை'' என்றாள்.

"நீ பணத்தைக்கொண்டு அங்குக் கொடுத்தாலும் அவர்கள் அதை நன்முறையில் பயன்படுத்துவார்கள் என்று எப்படி நம்ப முடியும்?'' என்றனர் சகோதரர்கள்.

"அங்கிருப்பவர்கள் யாரும் பிழைக்க வந்தவர்களிலர். எல்லோருமே பெரும்பாலும் செல்வர்கள் தாம். பணத்தைத் தங்களுக்கென்று வைத்துக்கொள்ளாமல் பள்ளி வளர்ச்சிக்கு, மெஸ்ஸின் தேவைகளுக்கு என்று முதலீடு செய்துவிட்டு, வரும் லாபத்தை மேன்மேலும் அன்னை முறைக்கே செலவிட்டுவிட்டு, தங்களுக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல், பிறர் கூறும் குற்றங்களைப் பொருட்படுத்தாமல், பாராட்டுகளையும் எதிர்பாராமல் அழகானதொரு வாழ்வு வாழ்கிறார்கள். அங்கு அமைதியைத் தவிர பூசல் இல்லை. சூழல் நாளுக்குநாள் வலுக்கிறது. அன்னை விரும்பும் புதிய இனத் தோற்றத்திற்கு உரிய வழி அது என என் உள்ளம் நம்புகிறது'' என்றாள் பவானி.

"நீ சொல்வது எல்லாமே சரிதான். என்றாலும், நன்றி கெட்டதனமாக, நாங்கள் உன்மீது வைத்துள்ள பாசத்தை உதறிவிட்டு, உன் சிறுபருவத்தில் உன் அக்காள்களும், அண்ணியரும் உனக்குச் செய்த பணிவிடைகளையெல்லாம் மறந்துவிட்டுப் போகிறாயே, இந்த நன்றியில்லாத செயல்தான் உன் அன்னை முறையா?'' என்று கோபித்துக் கொண்டு போயினர்.

ஒருவாறு மனம் தேறி, நல்ல வழியைக் கண்டுபிடித்த பவானி இந்தக் கோபத்தால், பேச்சால் மீண்டும் குழப்பத்திற்கு ஆளானாள். காரணம், சிறு பருவத்தில் பெற்றோர், சகோதர, சகோதரியர் என்ற சூழல் வளர்ந்த வாழ்வு. இவள் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அத்தனை பேரும் பதறிப்போய் இவளைக் குணப்படுத்த பட்டபாடுகள் எத்தனை! அதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்தது.

அன்று மாலை ஐந்து மணியிருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து பிள்ளைகள் கூட்டமாகவும் தனியாகவும் அவரவர் வீடுகளை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர். பவானியும் தன் தோழியர்கள் அவரவர் தெரு வழியே பிரிந்தவுடன் தன் வீடிருக்கும் தெருவிற்குத் தனியே வந்துகொண்டிருந்தாள். வழியில் ஒரே கூச்சல், குழப்பம். இரண்டு தரப்பினர் தங்களுக்குள் வாய்ப்பேச்சு முற்றி அடிதடியில் இறங்கினர். இரண்டு பக்கமும் ஆட்கள் கூடி சண்டை வலுத்தது. இடையில் வருவோர்க்கெல்லாம் அடி. சிறுமியான பவானி செய்வதறியாது அச்சத்தால் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்து வீட்டருகே பேச்சு, மூச்சின்றி விழுந்தாள். உறவினர், தெருவினர் கூடி இவளை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிர் பிழைப்பதே பெரும்பாடாயிற்று. இரவு, பகல் உறக்கமின்றி, உணவின்றி பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் இவள் பிழைப்பதற்காகக் காத்துக் கிடந்தனர். உயிர் பிழைத்துவிட்டாள். உடல் தேறவில்லை. இதயம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் பஞ்சிற்குள் வைத்துக் காப்பதுபோல் மிக மென்மையாக இவளைக் கையாள வேண்டியிருந்தது. பாசம் காரணமாக இவர்கள் இவளை நீராட்டி, சோறூட்டி ஒரு சிறு குழந்தையைப்போல் காப்பாற்றினர். ஆனால் இந்தப் பணிவிடைகள் ஒரு முடிவிற்கு வருவதாய் இல்லை. புதிய புதிய மருத்துவ முறைகள், புதிய புதிய சோதிடப் பரிகாரங்கள் செய்துசெய்து அலுத்துப்போகும் அளவிற்கு ஆகிவிட்டது. சகோதரிகள் திருமணத்தால் செலவு. சகோதரர்கள் தத்தம் குழந்தை வளர்ப்பு, குடும்பப் பொறுப்பு என்று ஆனவுடன் இவளுக்குச் செலவிட முடியவில்லை. வருமானமில்லாத தந்தை. வீட்டிற்கே இவள் பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருந்த போதுதான் கைம்பெண் கோலத்துடன் அத்தை வந்தாள். இவள் தன் பெற்றோர்க்குச் சுமக்க முடியாத பாரமாய் ஆகிக்கொண்டிருந்த நேரம். அத்தை இவளைத் தன் மகளாய்ச் சுவீகரித்துக் கொண்டாள். பொறுப்பு விட்டதாலோ என்னவோ பெற்றோர் நிம்மதியாய்ப் போய்ச் சேர்ந்தனர்.

அத்தை தன் கைம்மைக் கோலத்தைப் புனிதப்படுத்த ஆன்மீகத்தில் ஈடுபட்டபோது ஸ்ரீ அன்னை கிடைத்தார். அன்னையின் அருளால் பவானி நலமடைவாள் என்று நம்பி அவளை தியான மையம் அழைத்துச் சென்று, காணிக்கை சமர்ப்பித்து, பிரார்த்தனை செய்து, பவானியை ஸ்ரீ அன்னையின் திருவடிகளில் சமர்ப்பித்த போதுதான் பவானி நலமடையத் தொடங்கினாள். பேசினாள், நடந்தாள், தன் தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொண்டாள். இளம் வயதில் பற்றிய நலக்குறைவு இளமை கடந்தபின் இவளை விட்டு ஓடியது. அன்னையின் அற்புதம் மலர்ந்தது. அத்தையும் மறைந்தாள்.

இன்று தன் சகோதரர்கள் தன்னை நன்றி கெட்டவள்என்று கூறுவதும் பொருத்தம் தான். ஆரம்பத்தில் அவர்கள் தன் பொருட்டு பணத்தையும் பாசத்தையும் கொட்டவில்லையா? தான் நீண்ட காலம் நோயாளியாக இருந்ததால் அவர்களுக்கும் சிறிது அலுப்பு வருவது இயல்புதானே? மற்றபடி அவர்கள் பாசம் பொய்யாகுமா? என்று சிந்தித்தாள். சுயமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலத்தில் அவள் பாசத்தின் அரவணைப்பில் கிடந்தாள். அதன் விளைவே இந்தக் குழப்பம்.

எப்படியும் இன்று ஒரு சரியான முடிவு எடுத்துவிட வேண்டும் என்றெண்ணி மீண்டும் ஆண்டாளம்மாவின் அன்னை குடும்பத்திற்குப் போனாள்.

பவானியின் முகத்தில் குழப்பம், ஆண்டாளம்மாவுக்குப் புரிந்தது.

அங்குள்ளவர் ஒவ்வொருவர் முகத்திலும் தெளிவிருந்தது. செயல் நேர்த்தியிருந்தது. எதனோடும் ஒட்டிக் கொள்ளாமலும், எதனையும் வெறுத்தொதுக்காமலும் இயல்பாக இருந்தனர். சாதனை புரிந்த பெருமிதமோ, இழந்தோம் என்ற ஏக்கமோ எதுவுமில்லை. சமநிலை என்பது இதுவோ? அவரவர், அவரவர்க்கு இயன்ற வேலையை எதிர்பார்ப்பு எதுவுமின்றி அமைதியாகச் செய்து கொண்டிருந்தனர். இந்தச் சமநிலை தனக்கும் வருமா? என்று எண்ணினாள் பவானி.

"வாம்மா, பவானி'' என்றாள் ஆண்டாளம்மா.

"அம்மா, நீங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டவர். இந்த அன்னை வழி வாழ்வை ஏற்றபின் உங்கள் கடந்த கால நிகழ்ச்சிகள் எதையும் நினைப்பதில்லையா? அவை உங்கள் மனதைப் பாதித்த போது எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிந்தது?'' என்றாள் பவானி.

"உறவு, நட்பு, சமூகத்தின் விசேஷங்கள், பரம்பரைப் பழக்கம், பாசம், நாலுபேர் என்ன சொல்லுவார்கள் என்ற நினைவு, வெற்றியைப் பாராட்டுதல், தோல்வியால் துவளுதல், போட்டி மனப்பான்மை, செல்வம், செல்வாக்குப் போன்றவற்றைப் பாராட்டுதல், யாவுமே பழைய வாழ்வின் பகுதிகள். அவை நம்மை ஈர்க்கும். அதற்கு இடம் கொடுத்தால் பழைய வாழ்வு திரும்பும். அவற்றைக் கடப்பவர்க்கே அன்னைவாழ்வு. கடந்த காலப் பழக்க வழக்கங்கள் கடைசிவரை பக்தனைத் தொடரும். கடைசிவரை அவற்றை உதறித் தள்ள வேண்டும். ஆன்மாவின் வழிப்படி நடப்பது தான் அன்னை வாழ்வு. வாழ்வு மையத்திலிருந்து அன்னை மையத்திற்கு வருவதே ஜீவியம் மலரும் வழி என்பதைத் தியானமையச் சொற்பொழிவில் கேட்டறிந்தேன். அது மட்டுமன்று, பயமும் சந்தேகமும் அன்பர்களை என்னிடமிருந்து விலகச் செய்யும் வழிகள் என்று அன்னை கூறியிருக்கிறார். எனவே, அதற்கெல்லாம் இடம் கொடுப்பதில்லை எனத் தள்ளிவிட்டோம்'' என்றார் ஆண்டாளம்மா.

திகைத்து நின்றாள் பவானி.

"பவானி, நான் ஒரு கதை சொல்லட்டுமா?'' என்றான் சுகுமார்.

"சொல்லுங்கள்'' என்றாள் பவானி.

"நீந்தத் தெரியாத ஒருவன் ஆற்றில் விழுந்துவிட்டான். கரையேறத் தவித்தான். கடவுளே என்னைக் காப்பாற்று என்று கதறினான். ஒரு படகு அருகில் வந்தது. அதன் மூலம் கரையேறினான். படகின் மீது நன்றியும் பிரியமும் எழுந்தது. இந்தப் படகைத் தனியே விட்டுவிட்டுச் செல்வது சரியா? என்று வருந்தினான். அப்போது கரையில் ஒரு தெய்வம் தோன்றி இவனைப் பார்த்துச் சிரித்தது.

"ஏன் சிரிக்கிறீர்?” என்றான் கரையேறியவன். "கரையேற வேண்டும் என்று என்னை வேண்டினாய். படகு அனுப்பினேன். அனுப்பிய என்னை விட்டுவிட்டுப் படகை எண்ணிக் கொண்டிருக்கிறாய்” என்று கூறியது.

இதுதான் கதை. என்ன புரிந்தது உங்களுக்கு?'' என்றான் சுகுமார்.

"நன்றி சுகுமார். மிகவும் நன்றி. என் குழப்பத்திற்குச் சரியான தெளிவு கிடைத்துவிட்டது. காப்பாற்றுபவர்களும், காப்பாற்றப்பட்டவர்களும் கடவுளின் கருவிகளே. அவை தாமே இயங்கவில்லை. அவற்றை இயக்குபவர் இறைவனே. எல்லாம் இறைவனுக்கே உரியன என்று புரிந்து கொண்டேன். இம்முறை நான் திரும்பிப் போகமாட்டேன்'' என்று கூறியவண்ணம் தோட்டத்திலுள்ள தியான மண்டபத்தை நோக்கிச் சென்றுவிட்டாள் பவானி.

அவள் அன்னை குடும்பத்தில் சேர்ந்துவிட்டாள்.

முற்றும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பரிசுத்தமானவரை, சுத்தம் குறைந்தவன் துரோகம் செய்கிறான் என நாம் நம்புவது உண்மையன்று. உண்மையில் ஒரு வகையான குறைவை, அடுத்த வகையான குறைவு சந்திக்கிறது. நிலைமை தெளிவாக உள்ளது. குருட்டு அகங்காரம் தன் பெருமையை இவ்வகையில் நிலைநிறுத்த முயல்கிறது.
 
வேறுபட்ட குறைகளை நல்லது, கெட்டது என்கிறோம்.

 *****book | by Dr. Radut