Skip to Content

11. மனிதனுடைய சாதனை

மனிதனுடைய சாதனை

கர்மயோகி

அருள் முடித்ததை மனிதன் பெறுவது மனிதனுடைய சாதனை.

கடையில் நாம் துணிவாங்கினால், துணியை நாம் நெய்யவில்லை.

துணி உற்பத்தியாகி கடைக்கு வந்ததை நாம் விலைக்குப் பெறுகிறோம்.

நாமே துணியை நெய்ததாக நாம் நினைப்பதில்லை.

ஆனால் வீடு கட்டும் பொழுது நாம் கட்டியதாக நினைக்கிறோம்.

அருள் சூட்சுமத்தில் செயல்படுகிறது.

வீடு சூட்சுமத்தில் உருவாகி, கட்டி முடிக்கப்பட்டபின், நமக்கு வீடு கட்டத் தோன்றுகிறது.

நம் பங்கு கல், மண், சிமெண்ட் போன்றவற்றை வீடு கட்டும் இடத்திற்குக் கொண்டுவந்து, சூட்சுமத்தில் உருவான வீட்டை, வீடாக ஏற்பது.

கடையில் துணிக்கு விலை தருவதுபோல், வீடு கட்ட நாம் பல வேலைகளைச் செய்கிறோம்.

துணி ஏற்கனவே உற்பத்தியாகாவிட்டால், நாம் கடையில் அதை வாங்க முடியாது.

வீடு சூட்சுமத்தில் தயாராக இல்லாவிட்டால், நம்மால் கல், சிமெண்ட் சேகரிக்க முடியாது.

சேகரித்தாலும், அது வீடாகாது.

ஒருவாய் தண்ணீர் சாப்பிடவும் சூட்சுமத்தில் ஏற்கனவே அது முடிந்திருக்க வேண்டும்.

இல்லையேல் அத்தண்ணீர் கிடைக்காது.

இறக்கும் தருவாயில் ஒருவாய் தண்ணீர் கிடைக்காத பெருந்தனவான் ஒருவர்.

அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது இவ்விளக்கம்.

மேற்கூறியது பொது விதி.

சிறப்பான நிலைகளுண்டு.

அதைப் பேரருள் எனவும், அருள் காத்திருக்கிறது எனவும் மகான்கள் அறிவார்கள்.

நாம் தேடுவதை அருள் முன்கூட்டி முடித்து வந்து, பெறக்காத்திருப்பது அது.

வேலை முடிந்துவிட்டது என அறியாமல், நாம் நம் வழக்கப்படி அதற்காக நமக்குத் தெரிந்த வழிகளில் முனைந்து, அதனால் கால தாமதமாகிப் பெறும் நிலையில், "நீங்கள் வர நாங்கள் காத்திருந்தோம்" எனக் கேள்விப்பட்டு ஆச்சரியப்படுகிறோம்.

கர்மத்தை நம்பினால், கர்மம் செயல்படும்.

கர்மத்தை நம்பாவிட்டால், கர்மம் விலகும்,

அருள் செயல்படும்.

அருளின்செயலை நம் திறமையால் பெறமுயன்றால், நம் திறமைக்குரிய காலமும், பலனும் வரும்.

நம் திறமையை நம்பாமல், அருளை மட்டும் நம்பினால், அருள் பேரருளாகி, முடிவான பலன் முதலிலேயே, க்ஷணத்தில் கிடைக்கும்.

நம்மால் கர்மத்தை நம்பாமலிருக்க முடிவதில்லை.

நம் திறமையை நம்பாமலிருக்க முடிவதில்லை.

அறிவால் செயல்பட்டால், திறமை தேவைப்படும்.

ஆத்மாவால் செயல்பட்டால், திறமை தானே விலகும்.

நாம் எதுவும் அறியாதநேரம் அறிவை நம்ப முடியாது என்பதால், பேரருள் செயல்பட்டு, தொண்டன் M.L.A, மந்திரியாவதைக் காண்கிறோம்.

"இதெல்லாம் நான் நினைக்கவில்லை" என்று அந்தநேரம் கூறுகிறார்கள்.

விஷயம் தெரியாத பொழுது அறிவு செயல்படுவதில்லை என்பதுபோல், விஷயம் முழுவதும் தெரியும் பொழுது அறிவு அதை எள்ளளவும் நம்ப மறுப்பது பேரருள் செயல்பட உதவும்.

  • தொடர்ந்த அழைப்பால் பேரருள் செயல்படுகிறது.

     தொடர்ந்த நினைவு அருளை அழைக்கிறது.

    அழைப்பு நினைவை செயல்படச் செய்து, அருள் பேரருளாகிறது.

  • அந்நிலையில் ஏற்கனவே காரியம் முழுவதும் முடிந்து, காத்திருப்பது தெரியும்.
  • நினைவு இனித்து, அழைப்பாகமாறி, உணர்வு உருக்கமாகமாறி, உடல் சிர்க்கும்நேரம், பேரருள் செயல்படும் நேரம்.
  • பிரார்த்தனையால் முடிந்த காரியங்களில் நாம் இதைக் காண்கிறோம்.

    வரன் கூடி வந்தபின், 6 மாதம் முன்பே வரன் இம்முடிவை எடுத்துக் காத்திருந்தது தெரிய வருகிறது.

    அன்பர் வரவுக்காக பாலைவனத்தில் பிரம்மாண்டமான நீரூற்று அடிமட்டத்தினின்று மேலேவந்து, கிணறு தோண்டக் காத்திருந்தது.

    எந்தப் பதவியை நினைக்க முடியாதோ, அப்பதவியை அன்பருக்கு அளிக்க முடிவுசெய்து, அவர் விண்ணப்பத்திற்காகக் காத்திருப்பது அருளின் வழக்கம்.

    படிப்பு வாராதவர், படிக்கப் பிடிக்காதவர், படிக்க மறுப்பவர் அருள் சூழல் வந்தபின் படிக்கவேயில்லை என்பதையும்மீறி, அருள் அவருக்குப் பட்டமும், பதவியும் கொடுக்கக் காத்திருந்தபொழுது, பரீட்சையில் 60 பக்கம் எழுத வேண்டிய இடத்தில் 2 பக்கம் எழுதினார். இத்தனையையும்மீறி அருள் அவருக்குப் பட்டமும், பதவியும் அளித்தது என் சொந்த அனுபவத்தில் கண்டது.

  • மனிதன் சாதிக்க வேலை செய்ய வேண்டும்.

     வேலை பலன் தர அனுபவம் வேண்டும்.

    அனுபவம் திறமையானால், திறமைக்குத் தகுந்த பலன்வரும்.

    அனுபவம் தருவது உழைப்பு.

    உழைப்பின் அனுபவம் திறமையாகி, திறமை செயல் பலன் தருவது ஆர்வத்தைப் பொருத்தது.

    ஆர்வம் ஏற்பட உழைப்பு இனிக்க வேண்டும்.

    உழைப்பு, திறமையாவதை உள்ளம் ஏற்க வேண்டும்.

    ஆர்வம் உழைப்பைவிட அதிகப் பலன் தரும்.

    ஆர்வம் ஏற்பட அறிவு வேண்டும்.

    அறிவு ஆர்வத்தைவிட அதிகப் பலன் தரும்.

    அதிகம் என்பது அபரிமிதம்.

    அறிவு தரும் பலன் தெளிவைப் பொருத்தது.

    தெளிவு நிதானத்தைப் பொருத்தது.

    நிதானம்தரும் பலன் பண்பைப் பொருத்தது.

    பண்பு ஆன்மாவுக்குரியது.

உழைப்பு அனுபவத்தால் திறமையாகி, ஆர்வத்தால் பூரித்து, அறிவால் அபரிமிதமாகி, தெளிவாலும், நிதானத்தாலும், பண்பாலும் பூரணம் பெறுகிறது.

அதனால் ஆர்வமுள்ளவன் மேஸ்திரியாகிறான்.

உழைப்பவன் கூலிக்காரனாகிறான்.

அறிவுள்ளவன் முதலாளியாகிறான்.

நிதானமும், தெளிவுமுள்ளவன் பெருமுதலாளியாகிறான்.

உழைப்பை மனம் விரும்பிஏற்றால், உடனே உழைப்பைக் கடந்து ஆர்வம் எழும்.

ஆர்வத்தை அறிவு ஏற்றால், ஆர்வத்தின் பலன் வரும்.

நிதானமும், தெளிவும், அறிவின் பலனைத்தரும்.

எல்லாப் பண்புகளையும் தன்னுட்கொண்ட பண்பு அடக்கம்.

உழைப்புக்குத் தயாரான ஆர்வமுள்ளவன் அறிவாளியானால், அவனுக்கு அடக்கம் இயல்பாக இருந்தால் - அல்லது முயன்று பெற்றால் - அவன் எந்த முயற்சி எடுத்தாலும், பலன் முன் கூட்டி முடிந்து, காத்திருப்பது அவனது சூட்சுமப் பார்வைக்குத் தெரியும்.

தன்னை நம்பாமல், அடக்கமாக, ஆர்வமாகச் செயல்பட்டால், சிறிதளவு உழைப்புக்குப் பெரும்பலன் உடனே வரும். ஒரு மணிஅரிசி கிருஷ்ண பரமாத்மா சாப்பிட்டது, வந்த ரிஷிகள் அனைவர் பசியையும் போக்கியது, அன்பர் வாழ்வில் இன்று காணக்கூடியது.

  •  அருள் கண்ணுக்குத் தெரிய வேண்டும்.

    பேரருள் சூட்சுமத்திற்குப் புரிய வேண்டும்.

    அருளையும், பேரருளையும் கடந்த அன்னை நெஞ்சத்தைத் தொடுவார்.

    அன்னை ஸ்பர்சம் ஆன்மீகஅடக்கம்.

  • அடக்கம் அன்னையுள் நம்மை அடக்கம் செய்யும்.

    அன்னையுள் அடங்கியவர் அடக்கம் பெற்றவர்.

    அடக்கம் அன்னை என்றால் மிகையாகாது.

    அன்னை அடக்கம் தருவார் என்பது உண்மையென்றாலும், நடைமுறையில் அன்னை நம் அகந்தைக்கு உயிர் கொடுப்பார் என்பது அனுபவம்.

    It is the human choice.

    மனிதன் அன்னையை அடக்கமாகப் பெறுவது அவன் பங்கு.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு கட்சி தன் பரமவைரியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது அன்னையின் சக்தி செயல்படுவதாகும். அது போன்ற செயல்கள் அன்னையின் ஆட்சியில் ஆன்மீக உண்மையைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்.
 
ஆன்மீக உண்மையைச் சுட்டிக்காட்டும் அன்னையின் அறிகுறி.

****



book | by Dr. Radut