Skip to Content

08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

 1. தனக்குத் தகுந்த குருநாதர் கிடைப்பதோ, அல்லது சீடர் அமைவதோ சுலபமான காரியம் இல்லை. இரண்டு பேரிடத்திலும் உண்மையான ஆர்வம் இருந்தால் இருவரும் சந்தித்துக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்தது ஒன்று, கிடைத்தது வேறு என்று ஆகிவிட்டால் தனக்கு அமைந்தவர் தன்னுடைய பிரதிபலிப்பு என்று எடுத்துக்கொண்டு குரு-சிஷ்ய உறவை கூடுமானவரையிலும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
 2. எந்த நேரத்தில் என்ன விதமான கட்டுப்பாட்டை அளிப்பது என்ற உரிமை குருநாதருக்கு உண்டு. அந்த உரிமையை குருநாதருக்கு அளிக்க விரும்பாத சீடர்கள் அவரிடம் நெருக்கமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்க கூடாது. அவர்கள் முதலிலிருந்தே விலகி இருக்க வேண்டும்.
 3. ஆன்மீகத் துறையில் தனக்கிருக்கும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் குருநாதர்கள் தம்முடைய ஆன்மீக நிலையிலிருந்து இறங்கிவிடுவார்கள். இந்த ஆபத்திலிருந்து அந்த நிலையில் இருப்பவர்கள் தங்களை எந்நேரமும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
 4. குருநாதருடைய ஆசீர்வாதங்கள் சீடருடைய வாழ்க்கையில் செல்வ வளமாக கிடைக்கலாம். அப்படி ஆசீர்வாதம் ஐஸ்வர்யமாக மாற சீடருக்கு இருக்கின்ற மனோபாவம் பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டும். ஐஸ்வர்யம் ஆன்மீகத்திற்கு ஒவ்வாதது என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும்.
 5. வெளித்தோற்றத்தை வைத்து ஒரு குருநாதருடைய உள் பக்குவத்தை நிர்ணயிப்பது சுலபமில்லை. வெளித்தோற்றம் போயாக இருந்தால் ஏமாற்றம் வர வாய்ப்புள்ளது.
 6. குருநாதர் காலில் விழுந்து வணக்கம் செலுத்துவது சீடனுடைய சரணாகதியை அதிகரிக்க உதவும். ஆனால் மனதில் அந்தச் சரணாகதி இல்லாதபட்சத்தில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாலும், அது ஜீவனற்ற செயலாகவே இருக்கும்.
 7. குருநாதருக்குக் கொடுக்கின்ற காணிக்கைகளை, சீடன் உடனடியாக மறப்பது நல்லது. அதை ஞாபகம் வைத்துக்கொள்வதென்பது காணிக்கையின் புனிதத்தைக் கெடுத்துவிடும்.
 8. சீடனுடைய வயது குறைவாக இருக்கும்பட்சத்தில் குருநாதரால் சீடனை மேலும் பக்குவப்படுத்த முடியும். இளமையில் இருக்கும் வளையும் தன்மை வயது ஆக ஆகக் குறைந்துகொண்டே வரும்.
 9. இறைவனுடன் உள்ளே தொடர்புகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களுக்குக் குருநாதருடைய வழிகாட்டல் தேவையில்லை. ஆனால் அந்தப் பக்குவம் இல்லாதவர்க்கு ஒரு குருநாதருடைய வழிக்காட்டுதல் தேவைப்படுகிறது.
 10. குரு-சிஷ்ய உறவென்பது ஆன்மீகத்தோடு நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும் என்றில்லை. அந்த உறவில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அறிவுரைகள் கேட்கலாம்.
 11. சீடர்கள் எல்லோரையும் சமமாக பாவிப்பதென்பது சாத்தியமில்லை. ஏனென்றால் ஒருவருக்கு எது நல்லதோ அது அடுத்தவருக்கும் நல்லது என்பது வைத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு சீடரையும் குருநாதர் தனிப்பட்ட முறையில் புரிந்துகொண்டு அதற்கேற்றப்படி அவரை நடத்த வேண்டும்.
 12. பெண் சீடர்கள் ஆண் சீடர்களைவிடப் பார்வைக்கு அதிக பவ்யமாக நடந்துகொள்வார்கள். ஆனால் உண்மையான சரணாகதி என்று எடுத்துக்கொண்டால் ஆணுக்கு எவ்வளவு கடினமோ அதே அளவுக்குத்தான் பெண்ணுக்கும் கடினம்.
 13. சீடர்களுக்கிடையே குருநாதருடைய அபிமானச் சீடர் யார் என்று பேர் வாங்குவதில் பலத்த போட்டியிருக்கும். ஆனால் இந்தப் போட்டி, பொறாமைக்கெல்லாம் இடம் கொடுக்காமல் குருநாதர் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
 14. குருநாதருக்குத் தொந்தரவாகச் செயல்படுவதாகப் பெயர் வாங்கும் சீடர்கள் தாமே அவரைவிட்டு விலகித் தம் மனநிலையைச் சரி செய்துகொண்டு தொந்தரவான அம்சங்களைக் களையெடுக்க வேண்டும்.
 15. சீடர்கள் குருநாதருக்குத் தீய சக்திகளினுடைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் அரணாகச் செயல்படலாம். இப்படிப்பட்ட சேவை செய்ய விரும்புகின்ற சீடர்கள் பய உணர்விலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு சமநிலையில் இருக்க வேண்டும்.
 16. குருநாதர் தவறு என்று கருதுகின்ற விஷயங்களை, சீடன் செய்யக்கூடாது. தம்முடைய தவறான செயல்பாடுகளுக்கு குருநாதருடைய ஆதரவைக் கேட்கின்ற சீடர்கள் இந்த இடத்தில் குரு-சிஷ்ய உறவைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
 17. பக்தர்களும் சீடர்களும் தரத்தில் வித்தியாசப்பட்டவர்கள். பக்தர்கள் பொதுவாக வாழ்க்கை முன்னேற்றத்திற்காக குருநாதருடைய ஆசியை நாடுவார்கள். சீடர்கள் ஆன்மீகமுன்னேற்றத்திற்காக குருநாதருடன் தொடர்புகொள்வார்கள். பக்தர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சீடர்கள் சமூகத்தைத் தாண்டி ஆன்மீகத்திற்கு வந்தவர்கள்.
 18. ஹெர்மன் எஸ்சா என்ற ஜெர்மானிய எழுத்தாளருடைய நாவல் வருகின்ற சித்தார்த்தன் என்ற கதாப்பாத்திரம் குருநாதருடைய வழிகாட்டலே இன்றி ஆன்மீகத்தில் முன்னேறிய ஒருவருக்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் இப்படித் தாமே ஆன்மீகத்தில் முன்னேறுகின்ற நபர்கள் அரிது.
 19. சீடர்களுடைய பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்து கண்டு பிரமிப்படையாத குருநாதர்கள் உண்மையில் ஆன்மீகப் பக்குவம் நிறைந்தவர்கள். தம்முடைய பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தை வலியுறுத்தாத சீடர்களும் பக்குவம் நிறைந்தவர்கள்.
 20. சமூகத்தில் பொதுவாக நம்மோடு சமநிலையில் இருப்பவர்களுடன் தான் நாம் பழகுவோம். நமக்குமேல் இருப்பவர்களிடம் நெருங்க நாம் தயங்குவோம். நமக்குக் கீழ் இருப்பவர்களிடம் இருந்து நாம் சற்று தள்ளி நிற்போம்.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அருளால் நடந்ததைக் காரணத்தால் விளக்குபவர், நடப்பதற்கு முன் அதுபோன்ற விளக்கமளிக்க முன்வருவதில்லை.
 
காரணம் கற்பிப்பவர் காரியத்திற்குமுன்னால் பேசுவதில்லை.book | by Dr. Radut