Skip to Content

07. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 1. கொடுங்கோலனை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வந்தது கிருஷ்ணாவதாரம். அதனால் இன்றும் பகவத் கீதையைப் படிப்பவர்கள் கிருஷ்ணன் ஜெயிலில் பிறந்து, வெளியேறி, பட்ட கஷ்டங்களுக்கொப்பானவற்றை அனுபவிக்க நேரிடுகிறது. தங்கள் ஜீவியத்தில் அதைக் கடந்தவர்கள் கீதையைப் படிக்கும் பொழுது அக்கஷ்டங்களை அனுபவிக்கத் தேவையில்லை.

  கீதைக்கு வியாக்கியானம் எழுதியவர் அனைவரும் சிறை சென்றவர்களே.

  விவேகானந்தர் பகவான் கையில் கீதையைக் கொடுத்தது அலிப்பூர் ஜெயிலில் தான். அதுவே குறிப்பிடத்தக்கது. மகாபாரதம் சண்டை நிறைந்த கதை. அதை ஒருவர் வீட்டில் படித்தால், வீட்டில் சண்டை வரும் என்பதால் பெரியவர்கள் சிறுவர்களை இராமாயணம் படிப்பதை ஏற்பார்கள்; பாரதம் படிப்பதை அனுமதிக்கமாட்டார்கள். இது ஒரு பெரிய சூட்சும உண்மை. காலரா, பெரியம்மை தொற்று வியாதியெனப் பொதுவாகத் தெரியுமானாலும், எப்படிப் பரவுகிறது என்பதை அறிய நாளாயிற்று.

  • இன்றும் எல்லா வியாதிகளும் சூட்சுமமாகத் தொற்றும் வியாதியென உலகம் அறியாது.
  • மேலும் வியாதி மட்டும் தொற்றுவதில்லை; குணம், செயலும் தொற்றி வரும்.
  • அதிர்ஷ்டம் தொற்றி வரும்.
  • தரித்திரம் தொற்றி வரும்.
  • உலகில் தொற்று நோயெனப் பரவாதது இல்லை என்பதை இன்று எந்த நாட்டிலும் எடுத்துக் கூற முடியாது.
  • ஆன்மீகரீதியில் அதுவே உண்மை.

  நீங்கள் கதை ஏராளமாகப் படிப்பவரானால், உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைச் சிந்தித்துப் பார்த்தால், அவற்றிற்கும் நீங்கள் விரும்பிப் படித்த கதைகட்கும் உள்ள தொடர்பு தெரியும். ஒருவர் செய்வது பரவினால், அவரை மற்றவர்கள் பார்த்து அதேபோல் செய்கிறார்கள் எனக் கொள்கிறோம். அது உண்மை. அந்த உண்மையில் அதன் தொற்றிவரும் அம்சம் மறைந்துவிடுகிறது. புதுப் பணக்காரர் 28 கார்கள் வாங்கினார். 3 பேர் கூட்டாளிகள். ஒருவருக்கு பென்ஸ் வாங்க ஆசை. சொல்லத் தைரியமில்லை. வாங்கிவிட்டார். கூட்டாளிகட்குச் சமாதானம் சொல்ல வேண்டும். இவர்கட்கு மந்திரிகள் பழக்கம் உண்டு. மந்திரிகள் பயன்படுத்த வாங்கினேன் என சமாதானம் கூறினார். எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எளிய நிலையிலிருந்து உயர்ந்துவரும் வேளையில் இப்படிச் செய்வது சரியில்லையென மற்ற பார்ட்னர்கள் மனம் நொந்தனர். வாங்கிய புதியகார் ஒரு விபத்திற்குள்ளாயிற்று. கொஞ்ச நாளில் 28 கார்களும் விபத்தில் சிக்கின.

  • விபத்தும் தொற்றி வரும் என நாம் அறிவதில்லை.

  சிதம்பரத்தில் உள்ளவர் செனட் மெம்பரானால், அவர் நண்பர்கள், உறவினர்கள் மதுரையிலும், டெல்லியிலும், கலிபோர்னியாவிலும் இருப்பவர் கல்லூரி நிர்வாகத்தில் உறுப்பினராவதும் அந்த நேரம் வியப்பாக இருக்கும். வாழ்க்கை உலகெங்கும் ஒன்றே. ஓர் இடத்தில் நடப்பது மற்ற இடங்களிலும் எழுகின்றன. புதுவையிலிருந்து கலிபோர்னியா சென்றார்கள். அங்கு தங்கியிருந்த வீட்டில் நிலம் நடுங்கியது. சான்பிரான்ஸிஸ்கோவில் பூகம்பம் வழக்கமானது. திரும்பி புதுவை வந்தனர். தென்னிந்தியாவில் நிலம் நடுங்குவதில்லை. நிலம் லேசாக நடுங்கியது.

  • பூகம்பத்தைப் போன இடத்தில் தொற்றிக் கொண்டு வந்தோம் என மனம் நினைப்பதில்லை.

  பல் டாக்டர், கல்லூரியில் முதல்வராகத் தேறியவர். உடன் பிறந்தவர் இன்ஜினீயர், கல்லூரி ஆசிரியர். பல் டாக்டர் தகப்பனார் ரைஸ் மில் வைத்திருந்தார். அதன் வருமானத்தைக் கருதி ரைஸ் மில்லை அவர்கள் வீட்டில் காமதேனு என்பார்கள். பல் டாக்டர் ஒரு ரைஸ் மில் ஆரம்பித்தார். அது உடன் உள்ளவர்க்கு வினோதமாகத் தோன்றியது. "எங்கள் குடும்பத்தில் எவரும் எந்தத் தொழிலில் இருந்தாலும் அங்கு ஒரு ரைஸ் மில் இருக்கும்'' என்றார்.

  • ரைஸ் மில் தொழிலும் தொற்றி வரும்.

  எது தொற்றி வரும்? தொற்றி வருவதற்கு (medium) வழி எது? எந்த அளவுக்குத் தொற்றி வரும்? அதைத் தடை செய்ய முடியுமா? என்றெல்லாம் ஆராய்ச்சியில்லை. 20 வருஷமாக இரு நண்பர்கள் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள். முதல்வரை சஸ்பெண்ட் செய்தார்கள். 125 ஆண்டு ஸ்தாபனம். இதுவரை இப்படி நடந்ததில்லை. இப்பொழுது நடக்கிறது. அதுவும் அபாண்டமாக நடக்கிறது. ஒரு வாரத்தில் ஆர்டர் ரத்தாயிற்று. இரண்டு ஆண்டுகட்குப்பின் அடுத்தவருக்கு ousting order வேலை நீக்கம் வந்தது. அதற்கு சட்டமேயில்லை. சட்ட விரோதமான செயல். 3 மாதம் கழித்து ஆர்டர் ரத்தாயிற்று.

  • வேலை நீக்கம் தொற்றி வரும்.

  பெண் வேலைக்குப் போனாள். திருமணம் தள்ளிப் போகிறது. நெடுநாள் தள்ளிப் போயிற்று. அவள் மனத்தில் திருமணமில்லை. திருமணமானவரிருக்கிறார். அந்த எண்ணம் எண்ணமாகவே இருந்தது. அவளைப் பார்க்கப் பல வரன்கள் வந்தனர். அத்தனை பேரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டனர். அவள் எண்ணம் பரவும் தன்மையுடையது. கல்லூரியில் படிக்கும் பொழுது மாமன் மகளை மணக்க விரும்பினான். குடும்பம் ஏற்கவில்லை. பெரிய இடத்துச் சம்பந்தம் வந்தது. நிச்சயதார்த்தத்திற்குப்பின் தகராறு. ஒருவாறு அடங்கியது. 3 ஆண்டுகள் கழித்து அப்பெண்ணிற்கு - மாமன் மகளுக்கு - நிச்சயமாயிற்று. தகராறு எழுந்தது. 6 மாதம் கழித்துத் தீர்ந்தது.

  • தகராறும் தொற்றி வரும்.

  பட்டம் பெற்று, பயிற்சி பெறாமல் ஒருவர் ஆசிரியர் வேலைக்கு வந்தார். பிரபலமானார். வக்கீல் பட்டம் பெற்றவர் கோர்ட்டில் வேலை செய்யாமல் பள்ளியில் வேலைக்கு வந்து அந்த ஆசிரியரிடம், "உங்களைப் போல் பிரபலமாக வேண்டும் என நானும் ஆசிரியர் ஆனேன்'' என்றார். அவர் பயிற்சி முடித்து அடுத்த ஊரில் வேலைக்குப் போனார். அதிகம் சம்பாதித்தார். கோர்ட்டில் வக்கீல்களும் அவ்வளவு சம்பாதிக்கவில்லையெனப் பேசிக் கொண்டனர். அந்த ஊரில் வக்கீல் பட்டம் பெற்றவர் ஆசிரியராகி, பல ஆண்டுகள் அதிகம் சம்பாதித்து, மீண்டும் கோர்ட் வேலையை ஏற்றார்.

  • வியாதி, குணம், செயல், அதிர்ஷ்டம், தரித்திரம் தொற்றும்.

  ஒன்று நடந்தால் அதைத் தொடர்ந்து பல நடக்கும் என்பது வழக்கு.

 2. பொதுமக்களிடமிருந்து எவ்வளவு விலகியிருக்கிறோமோ அந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

  நெருக்கமில்லாவிட்டால் நல்ல பெயர் எடுக்கலாம்.
  • பொதுமக்களுடைய அபிப்பிராயத்தைப்பற்றி இரண்டு முக்கிய உண்மைகள் உண்டு.
   • அடிப்படையில் அது உண்மையை வெளியில் கொணர்ந்துவிடும்.
   • மக்கள் அபிப்பிராயத்திற்கும் உண்மைக்கும் தொடர்பிருக்காது, எதிராகவுமிருக்கும்.
  • பொதுமக்களுடைய அபிப்பிராயம் என்பது ஓர் உணர்ச்சி, கருத்து இல்லை.
  • பொதுமக்களுடைய அபிப்பிராயம் அவர்களையே அதிகமாகப் பிரதிபலிக்கும்.
   விஷயத்தைவிட தங்கள் நிலையையே மக்கள் பாராட்டுவார்கள்.
  • மக்கள் விபரம் அறிய முயலமாட்டார்கள்; மனத்திற்கு இதமானதை ஏற்பார்கள்.
  • தூரத்திலுள்ளவரை பிரபலம் நிச்சயம். அருகே வந்தால் எதிராகப் போகும்.
  • விஷயம் தெரியாமல் பாராட்ட விழைவது எளியமனம். அது பொதுவானது.
  • நெருக்கமானவரை நல்லவராகக் கருத மனம் இசையாது.
  • தூரத்திலுள்ளவரைத் தவறாகக் கருத மனம் வாராது.
  • உயரத்திலுள்ளவர் உயர்ந்தோர் என்பது நினைவு.
  • அந்த நினைவு சிதையாமலிருக்க மனம் பெரும்பாடு படும்.
  • நல்ல அபிப்பிராயமுள்ள உயர்ந்தவரைப் பற்றி உண்மையான தவறு வெளிவந்தால் மனம் விரைவாக மறுத்துவிடும்.
  • தான் நேரில் பார்த்த பெரியவரைப் பெரியவராகவே நினைக்க மனம் துடிக்கும்.
  • டி.வி.இல் பார்த்தாலும், போட்டோவில் பார்த்தாலும், ஒரு முறை பார்த்து நல்ல அபிப்பிராயம் எழுந்தபின் மாற்றிக்கொள்ள இசைவது மனமில்லை.
  • நேரில் பார்த்த பெரியவர் பேசிய ஓரிரு சொற்கள் இதமாகக் காதில் ஒத்திருந்தால், அந்த நல்ல அபிப்பிராயம் மாறாது.
  • இலட்சியமான தலைவர்களின் இலட்சியம் அவர்கள் கண்களில் தெரியும். அது பட்டிருந்தால் நல்ல அபிப்பிராயம் எழும். அது மாறாது.
  • இலட்சியத் தலைவரின் இலட்சியம் கதிர்களாக உலகில் நடமாடுவது நம்முள்ளே நுழைந்தால், மாறாது.
  • ரேடியோ, டி.வி., பொதுக்கூட்டங்களில் கேட்ட குரல் பதிந்தது நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தியிருந்தால், மாறாது.
  • அபிப்பிராயம் விவரத்தால் ஏற்படுவதில்லை.
  • மனம் ஏற்க முடிவு செய்வது, ஏற்பது அபிப்பிராயம்.
  • எவருக்கும் நெஞ்சில் ஏக்கமிருக்கும். பூர்த்தியாகாத ஏக்கத்தை ஒரு தலைவர் பூர்த்தி செய்தால், அது கடைசிவரை நீடிக்கும்.
  • முகபாவம் முதல் முறை கண்டபொழுது நெஞ்சைத் தொட்டால், நிலையாக இருக்கும்.
  • குரலுக்குக் கவர்ச்சியுண்டு. கவர்ச்சி கடைசிவரை வரும்.
  • பிரபலத்திற்கும், பிரபலமானவர் அறிவுக்கும் சம்பந்தமில்லை.
  • பிரபலத்தை ஏற்பது பெருமிதம்.
  • அதிக பிரபலமானவர் சிலரிடையே எந்தப் பெரிய நல்லதும் இருப்பது இல்லை.
  • பிரபலம் பெருந்தோற்றம்.
  • பிரபலம் பிறர் பலம்.
  • கடந்த தலைமுறை பிரபலம், காரணமின்றி ஒருவரைப் பிரபலம் ஆக்குவதுண்டு.
  • தாயார், தகப்பனாரைச் சிறு வயதிழந்தவர் ஏக்கம், பிரபலமாக முடியும்.
  • வாழ்வில் முன்னுக்குவரும் ஆர்வம் ஒரு தலைவரை, அவர் பிரபலத்தை நாடும்.
  • பிரம்மச்சர்யம் பிரபலம் தரும்.
  • பிரம்மச்சாரிக்குப் பிறர் பிரபலத்தை ஏற்க அதிக விருப்பம் உண்டு.
  • நிறைவானவர் தன் நிறைவுவளர அடுத்தவரைப் பிரபலமாகக் கருதுவார்.
  • குறையுள்ளவர் தம் குறை நிறைவுபெற ஒருவர் பிரபலத்தை ஏற்பார்.
  • பிரபலத்திற்கு அடிப்படை old is gold கடந்தனவெல்லாம் கடவுள் போன்றன என்ற கருத்து.
  • பக்தி, விஸ்வாசம் பிரபலத்தை நாடும்.
  • ஒருவர் பிரபலத்தை மனம் ஏற்கும்பொழுது மனம் விசாலமடைகிறது. விசாலமான மனத்தை அனைவரும் விரும்புவர்.
  • நாட்டின்மீதுள்ள பற்று ஒருவரைப் பிரபலமாக ஏற்கிறது.
  • ‘காதில் நல்லசொல் விழ வேண்டும்’ என்பது மனத்தில் பிரபலமாகிறது.
  • நெடுநாளைய பிரபலம் உண்மையின் அடிப்படையில் ஏற்பட்டது.
 3. உன் சேவையின் பலனின் தரம் மக்கள் மனநிலையை நிர்ணயிப்பதில்லை. உன் ஆன்மவலிமை, வதந்தியைக் கடந்துவந்த அளவுக்கு நல்ல பெயர் எழுகிறது.

  வதந்தியைக் கடந்த வலிமைக்கு நல்ல பெயருண்டு.

  மனிதன் நம்மைத் தேடிவந்து, அவனுக்குக் கிடைக்காதது நம்மிடம் இருப்பதை அறிந்து, போற்றி, கிடைத்தாற் போதும் என நினைத்து, பணிந்து, பயந்து, கேட்கத் தயங்கி நிற்கும் பொழுது, அதைக் கொடுக்கும் நிலையில் உள்ளவர் நல்ல பெயர் எடுப்பார்.

  • ஏசுவைச் சிலுவையில் அறைந்தனர். அவர் தெய்வீக அன்பை உலகுக்குக் கொண்டு வந்தார். தெய்வீகபலம் முதலில் வந்திருந்தால், அன்பு அதனால் பாதுகாக்கப்படும். ஏசு கொண்டுவந்த அன்பிற்குப் பாதுகாப்பு இல்லை. அவர் வந்த காலத்தில் மனிதன் அன்பைத் தேடவில்லை. அவன் நாடாததை, அறியாததை அவர் ஏந்தி வந்தார். தன்னைப் பாதுகாக்கும் பலமும் அவரிடமில்லை. அவர் மக்களுக்குப் பலியானார்.
  • பணக்காரர் பெரும்பாலோருக்கு நல்ல பெயருண்டு. எவராவது இவர்களை எதிர்த்தால், குறை சொன்னால், பணபலம் அவர்களைப் பாதிக்கும். பாதிக்கப்படும் நேரத்தில் மக்கள் பணத்தை ஏற்று, அதன் நடைமுறையைச் சரி என்பர். ஏனெனில் அவர்கட்குப் பண பாதுகாப்புத் தேவை. அதைக் கண்டு பயப்படுகிறார்கள். பயம், பாதுகாப்பு வேண்டுமென்ற பயம், பணிவாக மாறி வாயால் நல்ல பெயராக வெளிவருகிறது.
  • பொய்யே சொல்லாதவரைக் காண்பதரிது. அப்படி ஒருவரிருந்தால் அவர் நல்ல பெயரெடுப்பார். அவர் வாழ்வில் பெரும்பலன் பெற்றால், உலகம் தான் ஏற்ற பொய்க்கு ஆபத்து என அறிந்து அவனை ஒழித்துக்கட்ட முயல்வர்.
  • மட்டமானவர், அல்ப புத்தியுள்ளவர், ஒரு விஷயத்தில் இலட்சியவாதியானால், உலகம் அவருடைய அல்பம், மட்டத்துடன் இணைந்து, அவர் இலட்சியம் தன் இலட்சியம் என அவரைப் போற்றும்.
  • அஹிம்சைக்குப் பாடுபட்ட மகாத்மாவைச் சுட்டுக் கொன்றனர்.
   உலகைக் காப்பாற்றிய சர்ச்சிலை எலக்ஷனில் தோற்கடித்தனர்.
   உலகுக்கு சுதந்திரம் அளித்த நெப்போலியனை எல்பா தீவிற்கு அனுப்பினர்.
   மக்களுக்கு அஹிம்சை தேவையில்லை. அந்த நேரம் வன்முறை ருசித்த நேரம்.
   அதற்கு காந்திஜி பலியானார்.
   சர்ச்சில் வெற்றியை உலகம் பாராட்டியது, அளவுகடந்து பாராட்டியது.
   அவர் கட்சியைப் பாராட்டவில்லை. அவர் M.P. எலக்ஷனில் வென்றார்.
   அவர் கட்சி தோற்றது.
   உலகம் நெப்போலியனுக்குக் கிரீடம் வைத்தது.
   அவன் அழித்த மன்னராட்சியின் பெருமையை அவன் தேடினான்.
   அதனால் மன்னர் கட்சி வலுத்து, அவன் தோற்றான்.
   உலகம் புத்தரைப் போற்றிப் பணிந்து பின்பற்றியது.
   ரூஸ்வெல்டை 4 முறை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தது.
  • உதவியை வலியக் கொடுத்தால் மனிதன் மறுப்பான். அவனுக்குப் போய்ச் சேராது.
   எந்த உதவிபெற அவன் தகுதியில்லையோ, அதைக் கொடுக்காவிட்டால் கேட்கமாட்டான்.
   கல்வியின் அவசியத்தை 1950இல் அவன் அறியவில்லை.
   பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
   1980இல், 1999இல் கல்வியின் மரியாதை புரிகிறது. பெரும்பணம் கொடுத்து அதைத் தேடுகிறான்.
   1940இல் இங்கிலீஷ் வைத்தியத்தை மக்கள் நாடவில்லை. டாக்டர் வீட்டிற்கு வந்தார்.
   இப்பொழுது அதன் மகத்துவம் புரிகிறது. பீஸ் ரூ.100/-. அப்பல்லோவில் ரூ.600/-.
   தமிழ்நாடெங்குமிருந்து அங்கு மக்கள் வருகின்றனர்.
   இன்றும் இன்ஷூரன்ஸ் மதிப்பு மக்கள் அறியாதது.
   200 ஆண்டுகட்குமுன் இங்கிலாந்தில் ஒரு பெண்ணை மணக்க முதல் செய்வது நிச்சயதார்த்தமில்லை. வரன் தன் ஆயுளை இன்ஷூர் செய்ய வேண்டும்.
   டாட்டா விமானக் கம்பனி ஆரம்பித்த பொழுது, விமானம் ஒரு பிரயாணியும் இல்லாமலிருந்த நாட்களுண்டு. போஸ்ட் ஆபீஸ் போய் தபால் மூட்டையைப் பெற்று இலவசமாக விமானத்தில் எடுத்துச் சென்றனர்.
  • தூர இருந்தால் நல்ல பெயர்.
   எதுவும் கொடுக்கப் பிரியப்படாவிட்டால் ரொம்ப நல்ல பெயர்.
   எல்லாம் வைத்திருப்பவர் கொடுக்க நினைக்காவிட்டால் அவர் பணத்திற்காக நல்ல பெயர்.
   கொடுக்கவில்லை என்பதால் அதிகப் பிரபலம்.
   கொடுக்க விரும்பினால் பெறுபவர், "ஏன் தருகிறார்?'' என்று கேட்பார்.
   அவர் சந்தேகப்படுவார்.
   தவறாக நினைப்பார்.
   இது மனித சுபாவம்.
   எதற்காக மனிதன் அலைகிறானோ அதை அவன் எவரிடம் வந்து கெஞ்சிக் கேட்கிறானோ அவனுக்குப் பல முறை கேட்டபின் பணமுள்ளவர் கொடுத்தால் அவன் அவர் பணத்திற்கு நல்ல பெயர் தருவான்.

தொடரும்.....

*****

 

ஜீவிய மணி
 
இல்லாத தொடர்பை இருப்பதாகக் கொள்வது குருடனின் பார்வை.

 book | by Dr. Radut