Skip to Content

04. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம:

ஸ்ரீ அன்னையே துணை!

ஸ்ரீ அன்னையின் பாத கமலங்களில் பணிந்து இக்கடிதத்தைச் சமர்ப்பிக்கிறேன். நாங்கள் கடந்த 15, 16 ஆண்டுகளாக அன்னை பக்தர்களாக, ஸ்ரீ அன்னையை நினைத்து எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவோம். ஸ்ரீ அன்னை எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து காப்பாற்றி வருகிறார். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை அன்னையிடம் பிரார்த்திப்போம். பிரச்சினை இருந்த சுவடே இல்லாமல் போய்விடும். நாங்கள் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். நான், என் கணவர், எங்களுக்கு ஒரே மகள். ஸ்ரீ அன்னையின் துணையுடன் படிப்படியாக முன்னேறிக்கொண்டு வருகிறோம். எங்கள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி அன்னையிடம் சமர்ப்பணம் செய்தோம். ஸ்ரீ அன்னையின் கருணை எங்களுக்கு வெகு சீக்கிரமே கிடைத்தது. ஸ்ரீ அன்னை அவதாரம் எடுத்திருக்கும் புதுவையிலேயே வரன் அமைந்தது. படிப்படியாகக் கல்யாண வேலைகள் தொடங்கி நல்லபடியாக ஏப்ரல் 30ஆம் தேதி எங்கள் ஒரே மகள் திருமணம் ஸ்ரீ அன்னையின் ஆசீர்வாதத்துடன் இனிதே நடந்தேறியது. திருமணம் முடிந்து நானும் என் கணவரும் எங்கள் மகளைப் பிள்ளை வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு, அன்று இரவு அங்கே தங்கியிருந்துவிட்டு, அடுத்த நாள் காலை மே 1ஆம் தேதி மனநிறைவுடன் எங்கள் வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தோம். பிள்ளை வீட்டில் எங்களுக்குத் தாம்பூலத்துடன் புடவை, வேஷ்டி வைத்துக் கொடுத்திருந்தனர். அந்தப் பையுடன், என்னுடைய ஹேண்ட்பேக் இவைகளுடன் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தோம்.

நாங்கள் வந்த ஆட்டோ டிரைவர், தாம் 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருப்பதாக பேசிக்கொண்டே வந்தார். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. வீட்டிற்குமுன்னால் இறங்காமல் சற்று முன்பே இறங்கிவிட்டோம். மனசு நிறைய சந்தோஷத்துடன் நாங்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தோம். நாங்கள் எங்குச் சென்று வந்தாலும், புதிதாக எது வாங்கிக் கொண்டு வந்தாலும், முதலில் அன்னைக்கு சமர்ப்பித்துவிட்டு தான் மற்ற வேலைகளைப் பார்ப்போம். அன்றும் வீட்டிற்குள் நுழைந்து அன்னையின் அறையில் நாங்கள் கொண்டு வந்த பை மற்றும் ஹேண்ட்பேக்கை வைப்பதற்காக அன்னையின் படத்தின் முன் நின்றேன். கையில் பை மட்டும் தான் இருக்கிறது. ஹேண்ட் பேக்கை காணவில்லை. ஹேண்ட் பேக்கில் ஒரு ரூபி நெக்லஸ், கொஞ்சம் பணம், வெள்ளி குங்குமச்சிமிழ் இருந்தது ஞாபகம் வந்தது. நான் தடுமாறுவது என் கணவருக்குத் தெரிந்தது. வீட்டில் உறவினர்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. நானும் என் கணவரும் கொஞ்சம் தூரம் பஸ் ஸ்டாண்டு வரைப் போய் பார்த்தோம். ஆட்டோ டிரைவர் முகம் நன்றாக நினைவிருக்கிறது. வந்திருந்த உறவினர்களோ, "எந்த ஆட்டோக்காரன் திருப்பிக் கொண்டுவந்து கொடுப்பான். ஒன்றும் சாத்தியமில்லை. போனது போனதுதான்" என்றார்கள். கொஞ்சம் நேரம் ரோட்டில் போய் வரும் ஆட்டோக்களை பார்த்துவிட்டு, மறுபடியும் வீடு திரும்பினோம். எதுவுமே நினைக்கத் தோன்றவில்லை. வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை. சற்று நேரம் கழித்து குளித்துவிட்டு வந்து அன்னையின் படத்தின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அன்னையிடம் மனமுருக பிரார்த்தித்தேன். இப்படியும் நடக்குமா, இந்த காலத்தில்! இது சாத்தியமா! என்ற கேள்விக்குறி எல்லோர் மனதிலும் இருந்தது. ஆனால் ஸ்ரீ அன்னை ஒரு சில நிமிடங்களிலேயே நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அந்த அற்புதத்தை நிகழ்த்திக்காட்டினார், ஆட்டோக்காரர் ரூபத்தில். ஆட்டோக்காரருக்கு எங்கள் வீடு தெரியாது. ஏனென்றால் நாங்கள் வீட்டின் அருகில் இறங்காமல் கொஞ்சம் முன்பே இறங்கிக்கொண்டு விட்டதால் ஆட்டோக்காரருக்கு எங்கள் வீட்டை பற்றித் தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர் இரண்டு, மூன்று முறை எங்கள் ரோட்டில் அங்கும் இங்கும் போய் வந்துகொண்டிருந்தார். எதேச்சையாக வாசல் பக்கம் வந்த என் தங்கை கொஞ்சம் சந்தேகத்துடன் "ஆட்டோ, ஆட்டோ" என்று கூப்பிடவும், என் கணவர் அதைக் கேட்டுக் கீழே இறங்கிப் போய் பார்த்ததில் அந்த ஆட்டோக்காரர் இவரைப் பார்த்த உடனே வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் பரஸ்பரம் தெரிந்து கொண்டனர். ஆட்டோக்காரர் எங்களை விட்டுவிட்டு, ரொம்ப தூரம் சென்று, ஓர் இடத்தில் வண்டியை ஓர் 5 நிமிடம் வரை நிறுத்திவிட்டு, டிபன் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிவந்து ஆட்டோவில் ஏறியபோது பின்பக்கம் அந்த ஹேண்ட் பேக்கைப் பார்த்து இருக்கிறார். நடுவில் எந்த சவாரியும் ஏறவில்லை. அதுவரை ஹேண்ட்பேக் பத்திரமாக இருந்திருக்கிறது. இதை எப்படியாவது உரியவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், அவ்வளவு தூரத்திலிருந்து மறுபடியும் எங்கள் வீடு இருக்கும் இடத்திற்கு தேடிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தக் காலத்தில் இவ்வளவு சிரத்தையுடன் இன்னொருவர் பொருள் மேல் ஆசையில்லாத ஓர் உயரிய மனிதரை எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்ததில்லை. ஸ்ரீ அன்னையே ஆட்டோக்காரர் ரூபத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறார். அவரை உடனே வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்து, அவர் காலில் விழுந்து வணங்கினோம். அவரும், "ஹேண்ட்பேக்கில் எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று கேட்டார். நாங்கள் ஹேண்ட்பேக்கைப் பார்த்தவுடன், அதைத் திறந்து பார்க்கவேண்டும் என்று கூட எங்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் அவர் சொன்னவுடன் பார்த்தபோது, எல்லாப் பொருட்களும் சரியாக இருந்தன. உடனே ஸ்ரீ அன்னைக்கு நன்றி தெரிவித்து, காணிக்கை செலுத்தி, சமர்ப்பணம் செய்தோம். அந்த ஆட்டோக்காரருக்கு எங்களால் முடிந்த சன்மானத்துடன் அவருக்கு நன்றி தெரிவித்து, தாம்பூலம், பலகாரத்துடன் அவரை வழி அனுப்பி வைத்தோம். வீட்டில் இருந்த உறவினர்களும் பார்த்து ஸ்ரீ அன்னையின் மகிமையை நினைத்து மெய் சிலிர்த்தார்கள். எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு இது. இந்த நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீ அன்னையின் மேல் இருந்த நம்பிக்கை அதிகமானதுடன், நாமும் பொறுப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்ற நல்ல பாடம் எங்களுக்குக் கிடைத்தது. இனி எங்குச் சென்றாலும், இறங்கும்போது எல்லாப் பொருளையும் எடுத்துக் கொண்டோமா என்ற நினைவு வரும். அந்த அளவிற்கு எங்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு படிப்பினையாகவும், அன்னையின் மேல் இருந்த நம்பிக்கை இன்னும் பன்மடங்கு உயர்ந்தது.

எங்கள் வாழ்வில் ஸ்ரீ அன்னை நிகழ்த்திய இந்த அற்புதத்தை ஸ்ரீ அன்னை அன்பர்களிடம் பகிர்ந்துகொண்டு ஸ்ரீ அன்னையின் பாதகமலங்களில் பணிந்து, கோடானுகோடி நன்றியையும் வணக்கத்தையும் பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்.

- அன்னையின் பாதம் பணிந்து

கல்யாணி விஜயராகவன், பெங்களூர்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இறைவனோடு வாழும்பொழுது அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் நிலை அதிக நெருக்கத்தை அளிக்கிறது.
 
தன்னை அர்ப்பணம் செய்வதே பெறும் திறனை நிர்ணயிக்கும்.
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு முறை கண்டதில், உடலில் ஏற்பட்ட உணர்வை அறிவது மூட நம்பிக்கை. நடைமுறையில் ஒரு முறை கண்ட நிகழ்ச்சியைப் பொதுவான சட்டமாக மனம் ஏற்பது மூட நம்பிக்கை.
 
குறிப்பானதைப் பொதுவாக அறிவதும் மூட நம்பிக்கை.



book | by Dr. Radut