Skip to Content

05.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                                                                       கர்மயோகி


 

821) சேவை உணர்வுள்ள குடும்பத் தலைவனுள்ள இடத்தில் வேலைக்காரர்கள் இனிமையான சேவை செய்வார்கள். தன்னை மறந்து அழித்து, பிறர் நினைவாக இனிமையான சேவையை அறிவோடு ஆரம்பித்து இதமாக முடிப்பது

உண்மையான சேவை.

தன்னையழித்த பிறர் இனிமையான நினைவு சேவை.

முதலாளியைப் போற்றும் வேலைக்காரர்கள் உண்டு. வேலை செய்பவர்களை எக்காரணத்தாலும் மாற்ற சம்மதிக்காத முதலாளிகள் உண்டு. சேவை உணர்வுள்ள குடும்பத் தலைவன், மனிதாபிமானம் உள்ளவர், எவரையும் மனிதனாகக் கருதும் பாங்குடையவர்களிடம் இவற்றைக் காணலாம். இதுபோன்ற இடங்களில் வேலை செய்பவர்கள் தங்களை மறந்து சேவை செய்வதையும், பிறர் நினைவை இனிமையாகக்கொள்வதையும் காணலாம். அதுவே சேவை.

****

822) கல்லூரிப் படிப்பு மூடநம்பிக்கையை ஒழிக்கும். அறிவால் ஏற்பட்ட உணர்வை, பண்பை மாற்றும்பொழுது அழிக்கலாம். ஜீவியம் மாறி நோக்கம் மாறினால் திருவுருமாற்றம் ஏற்படும்.

கண்ணோட்டம் மாறினால் ஜடமும் திருவுருமாறும்.

இக்கருத்து The Life Divineஇல் Knot of Matter என்ற அத்தியாயத்தில் உள்ளது. ஜடமான உடல் தெய்வீக உடலாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம். மனம் இன்று ஜடம் என்று அறிவதை மாற்ற முடியுமானால், உடல் தெய்வீக உடலாகும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். படிப்பு உயர்ந்தால் மூடநம்பிக்கை அழியும். தாயார் இரத்தமும், குழந்தையின் இரத்தமும் ஒன்றே என்பது ஒரு மூடநம்பிக்கை. படிக்காதவர்களுக்கு விளக்க முடியாது. இரத்தம் என்பது groupஆக பாகுபாடு செய்யப்பட்டுள்ளது என்று படித்தவர்க்கு அது புரியும். ஜாதி உயர்ந்தது என்பதைப் பலரும் நம்புகிறார்கள். அதுவும் திருமண விஷயத்தில் அதிகமாக நம்புகிறார்கள். ஜாதி என்பது மூடநம்பிக்கை என வேறு ஜாதியில் திருமணம் செய்துகொண்டவர்களை 60 வயதில் சந்தித்தால், "நான் செய்த தப்பை நான் அனுபவிக்கிறேன். இன்று என் பெண் அடங்கமாட்டேன் என்கிறாள், பையன் என்னை மடையன் என நினைக்கிறான். என்னுடனிருந்தவர்கள் எல்லாம் உச்சிக்குப் போனபின் நான் தரைமட்டத்திலிருப்பது இந்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால்தான். எனக்கு inferiority complex வந்துவிட்டது'' என்பார். இவரை லேசில் சமாளிக்க முடியாது. இவர் சொல்வது அவ்வளவும் உண்மை. ஆனால் அவை மூடநம்பிக்கையான உண்மைகள். ஜாதியைக் கைவிட்டவர் மூடநம்பிக்கையைக் கைவிடவில்லை என்பதே உண்மை.

ஜாதி, மதம், மணம், படிப்பு, இனம், பதவி, போன்ற இடங்களில் ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. அன்னையை ஏற்றுக்கொண்டபின் மூடநம்பிக்கைகளை விடாதவர் பலர். அவர்கள் மனநிலையும் அதுவே. வருமானம் 10 மடங்காகும் என்றால் நம்பமுடியவில்லை. உண்மையில் அது 100 மடங்கில்லை, அளவில்லாமல் பெருகும். இதுவரை இதை நம்பியவர் ஒருவர்கூட இல்லை. ஒரு சிலர் வாழ்வில் இது நடந்தபின்னும் நம்பமுடிவதில்லை. மனத்தை மாற்றி எவரும் சோதனை செய்யலாம். எவரும் முன்வருவதில்லை.

மனம் மாறினால் எதுவும் மாறும்.

400 ரூபாய் சம்பாதிப்பவர் அதுபோல் மனம் மாறியதால் 6ஆம் மாதம் 10இலட்சம் பெற்றார். 650 ரூபாய் சம்பளம் 8ஆம் நாள் 2000 ரூபாய் சம்பளமாயிற்று. நடக்கும் வியாபாரம் சரிந்துவரும்பொழுது 100% உபரியாயிற்று. ஆயினும் நம்பிக்கை வருவதில்லை. ஆயிரம் மடங்கு வருமானம் பெருகியபின்னும் அதை ஆயிரம் பேர்கள் வாழ்வில் கண்டபின்னும், "அதெல்லாம் வேறே. நான் நம்பமாட்டேன்'' என்பது மனம்.

****

823) கொடுமை, கடுமை, பொறாமை, துரோகம், வெறுப்பு, அறிவால் ஏற்படும் உணர்வு, தவறான அபிப்பிராயம் ஆகியவை பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்திற்கு

அவசியமானவை. யோகமே இதுபோன்ற ஒரு முயற்சியாகும். பரம்பொருளுக்குத் தேவையற்ற ஒன்றாகும்.

மனிதனுக்குத் தேவைப்படும் கடுமையும், வெறுப்பும் யோகத்திற்குத் தேவையில்லை.

நடப்பவனுக்குள்ள பிரயாண அலுப்பு இரயில் பிரயாணம் செய்பவனுக்கில்லை. மேலும், கப்பல், இரயில் பிரயாணம் வெகு சௌகரியமாக அமைவதுண்டு. ஆயுர்வேத மருந்து கசப்பு. இன்றைய மருந்தில் அநேகமாகக் கசப்பில்லை. நிலத்தில் வேலை செய்து சம்பாதிப்பவனுக்கு வேலை கடுமையாக இருக்கும். பாங்கில் உட்கார்ந்துகொண்டு பணத்திற்கு வட்டி சம்பாதிப்பவனுக்கு அக்கடுமையில்லை. சம்பாதிப்பது சந்தோஷம் தரும். வாழ்வில் சந்தோஷம் ஓரளவுக்குண்டு. அதைவிட அதிக சந்தோஷம் வேண்டுமானால் அது வெறுப்பாக மாறும். வெறுப்பில்தான் "சந்தோஷத்தை' மனிதன் தலைகீழே அனுபவிக்க முடியும். தத்துவப்படி வெறுப்பு என்பது சந்தோஷத்தின் மறு உருவம். இது வாழ்வுக்குரிய சட்டம். யோகம் என்பது வாழ்வு நிலையைத் தலைகீழே மாற்றியமைப்பது. அதனால் வெறுப்பால் வாழ்வில் பெறும் தீவிர சந்தோஷத்தை யோகத்தில் தீவிர சந்தோஷமாகவே நேரடியாக அனுபவிக்கலாம்.


 

தொடரும்.....

****


 



book | by Dr. Radut