Skip to Content

09.லைப் டிவைன்- -கருத்து

The Life Divine - கருத்து

Himself the Play, Himself the Player, Himself the Playground

ஆட்டமும் அவனே, ஆடுபவனும் அவனே, அரங்கமும் அவனே.

மரபில் உலகை லீலை என்கிறார்கள். அவர்கள் ஆனந்தத்தை நாடுபவர்கள். நாத்திகவாதிகள் உலகம் யதார்த்தமானது என்கிறார்கள். அவர்கள் லீலையை மறுக்கிறார்கள். ஆனந்தத்தை நாடுபவர்கள் நாத்திகத்தை மறுக்கிறார்கள். இதரர் இவ்விரண்டையும் மறுத்து, உலகமே பரமன் என்கிறார்கள். ஸ்ரீ அரவிந்தம் மூன்றும் ஒன்றே, மூன்று பார்வைகட்கு மூன்று அம்சங்கள் தெரிகின்றன. அவற்றுள் முரண்பாடில்லை என்று கூறுகிறது.

ஒரு ஸ்தாபனத்தில் தலைவருக்குப் பரம எதிரியொருவன் மிரட்டல் கடிதம் எழுதுவான். அவன்தான் எழுதியது என அவன் மீது நடவடிக்கை எடுக்க அவன் கையெழுத்து இருக்காது. இது பல ஆண்டுகளாகத் தொந்தரவு. நிலைமை மாறியது. இதுநாள்வரை எதிரியாக இருந்தவனுக்குத் தலைவரால் காரியம் ஆக வேண்டியிருந்தது. எப்படிப் போவது? என்ன செய்வது என யோசனை செய்தான். ஸ்தாபனத்தில் கூட்டம் போட்டார்கள். தலைவர் உணர்ச்சி வசப்பட்டவர். எதிரி ஒரு மாலையை வாங்கி வந்து அவர் கழுத்தில் போட்டான். மாலை போடும் பழக்கமோ, சந்தர்ப்பமோ இல்லாத இடத்தில் உணர்ச்சி வசப்பட்ட தலைவர் கழுத்தில் மாலை விழுந்தவுடன் தழுதழுத்துப் போனார். எழுந்தார், பேசமுடியவில்லை. தொண்டை அடைத்தது. அவருக்கு எதிரி தெரியவில்லை, மாலை தெரியவில்லை, அவன் ஆதாயம் நாடுகிறான் என நினைக்க முடியவில்லை. பேச முயன்றார், முடியவில்லை. உட்கார்ந்தார், மீண்டும் எழுந்தார். சமாளித்துக்கொண்டு பேசினார், "சகோதரர் இப்படி செய்துவிட்டார்'' என்றார். அதற்குமேல் பேச்சு வரவில்லை. தலைவர், மிரட்டல் கடிதம், எதிரி, ஆதாயம் எல்லாம் போய் உணர்ச்சியே மேலோங்கி நின்றது. உணர்ச்சிக்கு முழுமையுண்டு, ஒருமையுண்டு, ஐக்கியம் உண்டு, பாகுபாடு, பிரிவினை, பகுதியான நிலையில்லை.சிந்தித்தால் இவன் எதிரி எனத் தெரியும். உணர்ச்சிவசப்பட்டால் எதிரியின் செயல் எரிச்சல்மூட்டும். நான் தலைவர் எனக் கருதினால் அதிகாரம் வரும், ஆர்டர் பிறப்பிப்பார்.

பார்வை உணர்ச்சியால் முழுமையாகிவிட்டதால், பகுதிகள் மறைந்தன. முழுமையான உணர்ச்சி எஞ்சியது. பார்வை ஆனந்தத்தால் முழுமையானால் யதார்த்தம், ஆட்டம், அரங்கம் மறைந்து, ஆனந்தம் மிஞ்சும். உலகை நாம் எண்ணத்தால் கண்டால் மாயையாகவும், செயலால் கண்டால் பிரகிருதியாகவும், உணர்வால் காணும்பொழுது லீலையாகவும் தெரிகிறது. ஆனந்தத்தால் உலகைக் காணும்பொழுது ஆட்டம் ஆனந்தமாகவும், ஆடுபவன் ஆனந்தமாகவும், அரங்கம் ஆனந்தமாகவும் தெரியும்.
 

. தன்னையறியாத முழுமை விலங்குக்குரியது.

. தன்னையறிந்த முழுமை தெய்வத்திற்குரியது.

. மனிதனுக்குக் கீழேயும், மேலேயும் இரண்டும் உண்டு.

. எது வேண்டும் (choice) என்பதை நிர்ணயிப்பது மனிதனே.

. முழுமையை வாழ்வில் நாடும் மனிதன் பெறுவது அதிர்ஷ்டம், யோகத்தில் நாடுவது அருள்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தொட முடியாதவரை உடல் நாடுவதில்லை.

இலட்சியம் இதயத்தைத் தொடுவதில்லை.

****
 


 



book | by Dr. Radut