Skip to Content

08.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி

"அன்பர் உரை"

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி

                                                                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)

(இராணிப்பேட்டை தியான மையத்தில் 15.8.2003 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மி நாராயணன் நிகழ்த்திய உரை)

கடவுள் கனவில் காட்சி அளித்தால் அந்தராத்மாவின் குரல் நமக்குத் தெரிந்தால் கடவுள் ஜோதிமயமாக மனரூபத்தில் தெரிகிறார். அந்தராத்மாவின் குரல் தமிழில் கேட்கிறது. அதனால் கடவுளின் உருவம் மனிதனின் உருவம் என்று ஆகாது. அவர் உருவமே இல்லாதவர். கடவுளின் தாய்மொழி தமிழ் என்றாகாது. இறைவன் மோனத்தில் இருப்பவன். அவர் நம்மைப்போல் இருப்பார் என்று நாம் வைத்துக்கொள்வதால் தரிசனம் மனித உருவில் தெரிகிறது. நமக்குத் தமிழ்தான் தெரியும் என்பதால் அவர் நம்மிடம் தமிழ் பேசுகிறார். மனிதன் தன்னைப்போல் மற்றவற்றை நினைப்பதால் தனக்குத் தெரிந்தது பிறருக்குத் தெரியும் என்று வைத்துக்கொள்கிறான். தனக்குத் தெரியாதது பிறருக்குத் தெரியாது என்று வைத்துக்கொள்கிறான். அது மனிதர்களிடையே உண்மை இல்லை என்று தெரியும். ஆனால் நம் அறிவிற்கு எட்டாதது ஆண்டவனின் அறிவிற்கு எட்டாது என்று கூறுகிறார்கள். நடைமுறையில் அவர்கள் அப்படிச் சொல்வது இல்லை. நம் அறிவிற்கு எட்டாததை இல்லை என்றும், மாயை என்றும் கூறுகிறார். நமக்குப் புரியாத விஷயங்கள் உலகில் இருக்கலாம் என்று மனிதன் ஏற்பது இல்லை. யானையைப் பார்த்த குருடர்கள் தூண்போல் இருக்கிறது, சுவர்போல் இருக்கிறது, கயிறுபோல் இருக்கிறது என்றனர். அடுத்த கட்டத்திற்கும் போய் தூண்போல்தான் இருக்கிறது, சுவர்போல் இல்லை என்றும் கூறினர். இன்றுவரை உலகம் கூறுவது அதுவே. தூணாகவும், சுவராகவும், கயிறாகவும் இருக்கலாம் என்று மனிதனுக்குத் தோன்றவில்லை. அவை எல்லாம் சேர்ந்த ஒன்றாக இருக்கவும் கூடும் என்று இன்றுவரை மனித அறிவிற்கு எட்டவில்லை.

ஆத்மாவைப் பொருத்தவரையில் மனிதன் பிறவிக் குருடனாக இருக்கிறான். பிறவிக் குருடனுக்குக் கண் கொடுப்பது ஸ்ரீ அரவிந்தம். அந்தக் கண்ணின் பெயர் சைத்தியப்புருஷன். மனிதன் இக்கண்ணைப் பெற பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்ற ஸ்ரீ அரவிந்தர் அதை உடனேயும் பெறலாம் என்றும் கூறினார். அவர் கருத்து, பகவான் ஸ்ரீ அரவிந்தர்மீது முழு நம்பிக்கையும் பக்தியும் உள்ளவர், பூரணச்சரணாகதியை மேற்கொண்டால், ஸ்ரீ அரவிந்தருடைய கொள்கை அன்னையின் அருளாக உடனே பலித்துவிடும் என்றும்,நமக்கு அவரே கொடுத்துவிடுவார் என்றும் கூறவில்லை. ஆனால் அதுவே உண்மை. இந்த உண்மையின் தத்துவ அம்சத்தை இந்த அத்தியாயத்தில் கூறுகிறார்.

36 வகைகளாக பிரம்மத்தைப் பகுதியாக விவரித்தாலும் 36 பகுதிகளும் ஒன்றாகப் பார்க்கும்பொழுது மனத்தில் அவை ஒன்று சேர்ந்தால் அந்த நேரம் இறைவன் இதயத்தில் எழும் தருணம். ஏன் இந்தப் பகுதிகள் முழுமையாகவில்லை? மனித மனத்தின் குறை என்ன? அந்தக் குறையை நிறை ஆக்குவது எப்படி? என்பவற்றை 15வகைகளாகக் கூறுகிறார்.

வாழ்வு முழுமையானது. வாழ்வை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் வாழமுடியாது. பகுதியான மனிதன் முக்கியமான நேரங்களில் தன் பகுதியான பழக்கவழக்கங்களை விட்டு வாழ்வின் முழுமையை ஏற்றுக்கொள்வதை நாம் அறிவோம். ஆனால் அதை அப்படிப் புரிந்துகொள்வது இல்லை. பள்ளிக்கூடம் போகாத குழந்தையைக் கண்டிக்கவும், படித்துவிட்டு வேலைக்குப் போகமாட்டேன் என்ற பையனை வேலைக்குப் போக நிர்ப்பந்தம் செய்வதும், கையில் பணம் வந்தபிறகு தறுதலையாகச் சுற்றுபவனை வீடும், ஊரும் வற்புறுத்தித் தடுப்பதை நாம் அறிவோம். வாழ்வின் முழுமையை ஏற்றுத் தன்னை அதற்குக் கட்டுப்படுத்திக்கொள்வது மனிதன்.

ஆத்மாவின் முழுமையை அறியமுடியாதபோது அறியாமையால் ஆத்மாவை மனிதனாக மாற்றி ஏற்றுக்கொள்கிறோம். அப்படி மாறும் இடங்கள் ஏராளம். அந்த இடங்களில் எது அறிவு, எது ஞானம் என்று பிரித்து அறிவை எப்படி ஞானத்திற்கு உட்படுத்துவது, அப்படி உட்படுத்தினால் ஞானம் ஆத்ம ஞானமாகி ஆத்மா மனதைத் திறந்து பிரம்மம் வெளிப்பட்டு நாமே பிரம்மம் என்று அறிந்து பிரம்மம் ஆத்மாவில் சித்திக்கும். பூரணயோகத்தில் அது முதல் சித்தி. ஆத்மாவில் சித்தித்த பிரம்மம், மனத்திலும் வாழ்விலும் சித்தித்து, உடலையும் அது ஏற்றுக்கொண்டால் பூரணயோகம் பூர்த்தி பெறும். அறிவு ஞானத்தின்மூலம் ஆத்மதரிசனம் பெறும் அம்சங்கள் நிறைந்தது இந்த அத்தியாயம்.

ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதைச் சுற்றிப் பல விஷயங்கள் இருக்கும். அந்த விஷயங்கள் தங்களைப் பூர்த்தி செய்துகொள்ள முயலும். அந்த விஷயங்கள் நம் கண்ணெதிரே இருந்தாலும் கண்ணில்படாது. அவை இரு வகையானவை என்கிறார் பகவான்.ஒன்று அரைகுறையானவை, பூர்த்தியை நாடுவது அடுத்தது. பூர்த்தியான சிறியவை பெரியதாகப் பூர்த்தியாக முயலும். அவை நம் கண்ணில் படுவது இல்லை. நிகழ்ச்சியே முழுவதும் கண்ணில் படாது என்கிறார் பகவான். நிகழ்ச்சியின் பலன் மட்டும் படும் என்கிறார்.

இதை Pride&Prejudice என்ற கதையில் காணலாம். நெதர்பீல்ட் டான்ஸ் என்பது ஒரு நிகழ்ச்சி. அங்கு வந்தவர்களுக்கு அந்த டான்ஸ் தெரிகிறது. அதைச் சுற்றி என்ன நிகழ்ச்சிகள் இருக்கின்றன? எப்படி நடக்கின்றன? என்று பார்ப்போம்.
 

1. Mrs.. பென்னட்டிற்கு தன் முதல் இரண்டு பெண்களும் பிங்கிலி, காலின்ஸைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அபிப்பிராயம்.

2. எலிசபெத்திற்கு விக்காமை பார்த்து அவனைத் திருப்தி செய்யவேண்டும் என்பது நோக்கம்.

3. இந்த டான்ஸிற்குப் போனால் தன் சாயம் வெளுத்துவிடும் என்பது விக்காமின் அபிப்பிராயம்.

4. சார்லஸ் லூக்காசிற்கு ஊருக்கு வந்துள்ள பெரிய மனிதர்களை மரியாதையாக நடத்தவேண்டும் என்பது முக்கியம்.

5. டார்சி, எலிசபெத்துடன் டான்ஸ் ஆடி அவள் மனதை மாற்றவேண்டும் என்று நினைக்கிறான்.

6. கரோலின் பிங்கிலிக்கு டார்சியும் எலிசபெத்தும் நெருங்கக்கூடாது என்று அபிப்பிராயம்.

7. லிடியாவிற்கும் கிட்டிக்கும் officerகளைச் சந்திக்கவேண்டும் என்பது நோக்கம்.

8. மேரிக்குப் பாடுவது முக்கியம்.

9. Mr.. பென்னட்டிற்குத் தன் குடும்பம் அவமானப்படாமல் இருக்கவேண்டும் என்பது அவசியம்.

10. ஜேன் தனக்கு பிங்கிலி மீது இருக்கக்கூடிய அபிப்பிராயத்தைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறாள்.

இவை எல்லாம் உண்மை, ஆனால் பகுதிகள். இந்தப் பகுதிகளைக் கொண்டு நாம் மற்றப் பகுதிகளையோ, முழுமையையோ அறிந்துகொள்ள முடியாது.

மனிதனுக்கு மனத்தில் இரு நிலைகள் உண்டு என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். கோளவடிவமான பூமியில் நாம் நிற்கும்போது செங்குத்தாக நிற்க முடியாது. தரைமட்டமாகத்தான் நிற்கமுடியும் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நாம் நடக்கும்போது தரைமட்டமாகத்தான் இருக்கிறோம் என்று கற்பனை செய்யமுடியவில்லை. செங்குத்தாக நடக்கிறோம், ஓடுகிறோம். தண்ணீரிலுள்ள பென்சில் உடைந்து தெரிகிறது, அதை எடுத்துப் பார்த்தால் உடையாமல் தெரிகிறது. உடையவில்லை என்று அறிவிற்குத் தெரிந்தாலும் கண் உடைந்ததாகக் காண்கிறது. தென் துருவத்திலுள்ள மனிதன் தலைகீழேதான் நிற்கிறான் என்றாலும் அதை அவன் அறிவு தெளிவாகப் புரிந்துகொண்டாலும் கண் உடைந்த பென்சிலைக் காண்பதுபோல் மனம் அவன் செங்குத்தாக நடப்பதாகக் கூறுகிறது. மனம் அதிக வருத்தம், கவலை இருந்தாலும் பிறரிடம் அதைக் காண்பிக்காமல் நடந்துகொள்ளும் நேரம் உண்டு. நாம் கலந்துகொள்ளும் விசேஷம் பெரியதானால் அதன் ஈடுபாடு நமக்கு முழுமையானால் நமக்கே நம்முடைய கவலை மறந்துவிடுவதும் உண்டு. கவலை இருப்பது உண்மை. மறந்ததும் உண்மை. அதுபோல் ஒரு நிலையில் முழுவதும் மறந்து அடுத்த நிலையில் மனிதனால் நடக்கமுடியும்.

ஜோஸ்யம் என்ற சாஸ்திரமே வான சாஸ்த்திரத்திற்குத் தலைகீழே எழுதியது. அதனால் பெரும்பாலான விஷயங்களைக் கூறமுடிகிறது. மனிதனுக்கு மனத்தில் இரு நிலைகள் இருந்தாலும் ஒன்றை அறவே மறந்து அடுத்த நிலையால் சிறப்பாக நடக்கமுடியும் என்பவற்றிற்கு மேற்கூறியவற்றை உதாரணமாகக் கூறுகிறார். வாழ்வு, தவம், ஸ்ரீ அரவிந்தம் என்ற மூன்று நிலைகளில் வாழ்வு (புறம்), தவம் (அகம்), ஸ்ரீ அரவிந்தம் (புறத்தின் அகம்). மனிதன் வாழ்வில் இருக்கிறான். துறவி அகத்தில் இருக்கிறார். பூரணயோகத்தை மேற்கொண்டவன் புறத்தின் அகத்தில் இருக்கவேண்டும். புறத்தின் அகத்தில் இருக்கும்போது மனிதன் ஒரே சமயத்தில் புறத்திலும் அகத்திலும் இருப்பான். இரு நிலைகளிலும் ஒரே சமயத்தில் இருக்க மனிதனால் முடியும். அப்படி இருக்கின்றவனுக்கு பிரம்மத்தின் முழுமை தெரியும்.

பூரணயோகம் மனிதனுக்கு இந்த இரு நிலைகளையும் தருகிறது.
 

1. (Double consciousness).

2. மனிதன் மனத்தில் வாழ்கிறான். மனத்தின் ஆதி சத்தியஜீவியம். மனத்திற்கு உரியது ஒரு நிலை, சத்தியஜீவியத்திற்கு உண்டானவை பல நிலைகள். மனத்தின் ஆதியைக் கண்டால் சத்தியஜீவியத்தை அடையலாம். அத்திறனை பூரணயோகம் கொடுக்கிறது.

3. நம் ஐந்து புலனுக்கும் உள்ள மையங்கள் மனத்திற்கு உண்டு. உடல் உயிருக்கு உள்ள மையங்களும் உள்ளன. ஆனால் சத்தியஜீவியத்திற்கு உண்டான மையம் ஜீவனில் இல்லை. அதை இனி உற்பத்தி செய்யவேண்டும். அதை உற்பத்தி செய்யும் திறனை பூரணயோகம் பெறுகிறது.

4. சிறிய ஊர், பெரிய ஊர்களிலுள்ள office சர்க்காரின் branch office. அதிகாரம் branch officeஇல் இல்லை. அதிகாரம் தலைமை officeஇல் இருக்கிறது. புலன்கள், உடல் உறுப்புகள், உயிர், மனம் ஆகியவை பகுதிகள். ஆண்டவன் எந்தப் பகுதியிலிருந்தும் செயல்படவில்லை. ஆண்டவன் முழுமையிலிருந்து செயல்படுகிறான். முழுமைக்குரிய மையம் சத்தியஜீவியம். அதன் இன்றைய உருவம் சைத்தியப்புருஷன். பூரணயோகம் பகுதியிலிருந்து முழுமைக்குப் போகும் திறன் அளிக்கிறது.

5. முழுமை இருந்தாலும் முழுமையைப் பார்க்கும் அறிவு இருக்காது. நாம் அறிவு இருந்தாலும் அறிவை உபயோகப்படுத்தாமல் செயல்படுகிறோம் அல்லவா? அதேபோல் முழுமை வந்தபிறகு அதைப் பார்க்க நமக்குத் தோன்றவில்லை. பார்வையைப் பகுதியிலிருந்து மாற்றி முழுமைக்குச் செலுத்தும் திறனைக் கொடுப்பது இந்த யோகம்.

6. நாம் காலத்தில் பிரகிருதியில் இருக்கிறோம். முழுமை காலத்தினுள் கடந்ததில் இருக்கிறது. மேல்மனத்திலிருந்து காலத்தைக் கடந்து அடிமனத்துள் கடந்த நிலையை அடையும் திறனை பூரணயோகம் தருகிறது.

7. சித்திலிருந்து சக்தி பிரிந்து சக்தி உலகமாக இயங்குகிறது. பரிணாமத்தால் சக்தி உயர்ந்து சென்று மீண்டும் சித்துடன் இரண்டறக் கலக்க வேண்டும். இதைச் செய்யும்பொழுது தனி மனிதனுடைய உலகம் பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. பூரணயோகம் அதைச் செய்யும்.

8. மனிதன் மேல் மனத்தில் காலத்தால் கட்டுண்ட மனத்துள் சிறியவனாக இருக்கிறான். இதை நிர்வாகம் செய்வது அகந்தை. அகந்தையிலிருந்து வெளிவந்து அதன்மூலம் காலத்தையும், மனத்தையும் கடந்து பிரபஞ்சம் முழுவதும் பரவுவதால் உள் மனத்தைக் கடந்து அடி மனத்திலுள்ள சைத்தியப் புருஷனை அடையவேண்டும். இது பூரணயோகத்தின் சுருக்கம்.மேல் மனம், உள் மனம், அடி மனம் என்பவை அடுக்கடுக்காக உள்ளன. சைத்தியப் புருஷனை வெளிப்படுத்துவது இந்த யோகம். அவன் அடி மனத்தில் ஒரு குகைக்குள் ஒளிந்துள்ளான். மேல் மனத்தின் அம்சங்கள் ஐந்து, 1. மேலெழுந்தவாரியானது 2. அகந்தை 3. மனம் 4. காலம் 5. சிறியது.

அகந்தை மேல் மனத்திற்குரியது.

சைத்தியப்புருஷன் பிரபஞ்சத்திற்குரியது.

அகந்தையிலிருந்து விடுபட்டால், பிரபஞ்சம் முழுவதும் நாம் பரவுகிறோம். மனம் காலத்தால் கட்டுண்ட சிறியது. மனத்தையும், காலத்தையும் கடந்தால் சிறியதான அகந்தை விரிந்து அழிந்து பிரபஞ்சம் முழுவதும் பரவும். இதைச் செய்வது சமர்ப்பணம். சமர்ப்பணத்தால் அகந்தையை அழித்து மனத்தையும் காலத்தையும் கடந்து பெரியதாகி மேல் மனத்திலிருந்து உள்மனம் வழியாக அடிமனத்தையும் அதன் குகையில் உள்ள சைத்தியப்புருஷனையும் அடைவது பூரணயோகச் சுருக்கம்.

9. பூரணயோகத்திற்கு ஆன்மீகப் பரிணாம யோகம் என்று பெயர். நாம் பிரகிருதியில் வாழ்கிறோம். பிரகிருதிக்குப் புருஷன் உண்டு. அது நமக்குத் தெரிவது இல்லை. பிரகிருதி புருஷனிலிருந்து உற்பத்தி ஆனது. பிரகிருதியுள் மறைந்துள்ள புருஷனை அறியாமல் பிரகிருதியின் ஆதியான புருஷனை நாடி தவம் செய்து மோட்சம் பெறுகிறோம். பூரணயோகம் பிரகிருதியுள் மறைந்துள்ள புருஷனை நாடுவது. தவத்தால் வெளியிலுள்ள புருஷனை நாடுவதற்குப் பதிலாக, சமர்ப்பணத்தால் உள்ளே உள்ள புருஷனை நாடுவது பூரணயோகம்.

10.பிரம்மத்தை வர்ணிப்பவை பல. அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் பிரம்மம் தட்டுப்படும்.

. ரூபங்களும் சலனங்களும் பிரம்மத்தில் உறைகின்றன.

. மனம் பிரம்மம்.

. வாழ்வு பிரம்மம்.

இதுபோன்ற சுமார் 30 கூற்றுகளை தொகுத்துப் பார்த்தால் பிரம்மம் தெரியும். ஒரு மெஷினின் பகுதிகளைச் சேர்த்தால் மெஷின் உண்டாகும். சேர்த்துப் பார்த்தல் என்றால் ஒரு கூடையில் அந்தப் பகுதிகளை வாரினால் அது மெஷின் ஆகாது. மெஷினில் சேர்ந்து இருப்பதுபோல் சேர்த்துப் பார்க்கும் தெளிவு இருந்தால் அவை சேர்ந்து மெஷினாகும்.


 

தொடரும்....

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

"பொறுமையில்லை'' என்பதை இழந்ததால் என்னால் தாமதிக்க முடியாது.

பொறுக்க முடியாதவன் அவசரத்தால் துடிப்பான்.

பொறுமையுள்ளவன் அவசரமில்லாமல் துடிப்பான்.

****
 


 


 


 


 


 


 



book | by Dr. Radut