Skip to Content

11.இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

"அன்னை இலக்கியம்''

இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                                                    (சென்ற இதழின் தொடர்ச்சி....)      இல. சுந்தரி

மாமிக்குக் கவலையேற்பட்டது. ஆசைக்குச் சில நாட்கள் வைத்துக்கொள்வதாய் அவளை அழைத்து வந்தார்கள். ஏதோ குழந்தை ஆசைப்பட்டது என்று பிரெஞ்சு கற்கவும் ஏற்பாடு செய்தாயிற்று. திடீரென்று அவள் பெற்றோர் வந்து அழைத்துப் போவதானாலும் இவர்களால் மறுக்கமுடியாது. நடுத்தரக் குடும்பங்களில் அக்காலங்களில் பெண்களை அதிகம் படிக்க அனுப்புவதில்லை. ஒருவேளை படித்துவிட்டாலும் திருமணம் செய்து மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிடுவதைத் தலையாய கடமையாய்க் கருதினார்கள். வேலைக்குப் போகும் பெண்ணை மாமியார் வீட்டார் விரும்புவதில்லை. உமாவின் தாய் உமாவிற்கு விரைவில் மணம் செய்விக்க ஆசைப்படுகிறாள். இந்நிலையில் இவள் டீச்சராவேன் என்கிறாள். உமாவின் பெற்றோர் என்ன சொல்வார்களோ என்ற பயம் மாமிக்கு.அன்னையைப் பற்றி அறிந்துகொள்ளவே அவள் பிரெஞ்சு கற்கிறாள். அதன்பொருட்டு அவள் தன் வாழ்வு முழுவதையுமே அர்ப்பணிக்கவும் ஆசைப்படுகிறாள் என்பது வெளியில் ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

"உமா! நீ இங்கு வந்து நாட்களாகிவிட்டன. எதற்கும் ஒருமுறை சென்னைக்குப் போய் உன் அம்மாவைப் பார்த்துவிட்டு வரலாமா?'' என்கிறாள் மாமி.

"இங்கேயே இருக்கும் அம்மாவை அங்கு போய் ஏன் பார்க்கவேண்டும்?'' என்றாள் உமா.

மாமி குழம்பிப் போனாள். "என்ன உமா சொல்கிறாய்? அம்மா

சென்னையிலிருப்பதை, நீ அங்கிருந்து வந்ததை மறந்துவிட்டாயா?'' என்றாள்.

உமா செல்லமாய்ச் சிணுங்கினாள். "நான் எதையும் மறக்கவில்லை. அம்மாவின் நினைவு என் இதயத்திலேயே இருக்கும்போது ஏன் அங்கு போகவேண்டும் என்றுதான் அப்படிச் சொன்னேன். நானிங்கிருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?'' என்று தேம்ப ஆரம்பித்தாள்.

மாமி பாசத்தால் தவித்துப் போனாள். "என்ன உமா? உன்மீது அன்பில்லாமலா உன் அம்மாவிடம் கெஞ்சி உன்னை இங்கே அழைத்து வந்தேன். நீ இப்போதெல்லாம் முன்போல் கலகலப்பாகச் சிரித்துப் பேசுவதில்லை. தனியே வந்து உட்கார்ந்துவிடுகிறாய்.

அதனால் ஊர் நினைவு வந்துவிட்டதோ என்று நினைத்தேன்'' என்றாள் மாமி. அன்புடன் அணைத்துக்கொண்டு, "சரி, சரி, சாப்பிட வா. சந்தோஷமாய் இரு'' என்று பரிவுடன் அழைத்துப் போனாள்.

"ஏன் இன்றும் ப்ரீத்தி வகுப்பிற்கு வரவில்லை. அவள் வந்தால் அல்லவோ இனிய செய்திகள் வரும்''. உலகமே தனக்கு வெறுமையாய் தோன்றுவதை உணர்கிறாள் உமா. "தோழியின் பிரிவு இத்தனை ஏக்கம் தருமா என்ன? மறுநாள் எப்படியாவது போய் ப்ரீத்தியைப் பார்க்க வேண்டும்'' என்று எண்ணிக்கொண்டாள்.

காலையில் மாமா அலுவலகம் புறப்பட்டதும் மாமியிடம், அடுத்த தெருவில் இருக்கும் தன் தோழியிடம் முக்கியமான நோட்ஸ் ஒன்று வாங்கிவருவதற்காக உத்தரவு கேட்டாள்.

"சீக்கிரம் வந்துவிடு உமா'' என்றாள் மாமி நயமாக.

"கவலைப்படாதீர்கள் மாமி. கொஞ்சம் சந்தேகம் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்துவிடுவேன்'' என்று அழகுறச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

ப்ரீத்தியின் வீட்டில் அவள் சகோதரிகள் போலும், இரண்டு இளம் பெண்களிருந்தனர். தன்னை ப்ரீத்தியின் பிரெஞ்சு கிளாஸ் தோழி என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவர்கள் அன்புடன் இவளை வரவேற்று உள்ளே தம் அக்காவிடம் தெரிவித்தனர்.

ப்ரீத்தி குளித்து தூய ஆடை அணிந்து எங்கோ புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள். உமாவைப் பார்த்தவுடன் அன்புடன் விரைந்து வந்து, "வா உமா! இப்போது உன்னைப் பற்றித்தான் நினைத்தேன். நீயே வந்துவிட்டாய்'' என்று கையைப் பற்றினாள்.

"என்னை நினைத்தாயா? எதன்பொருட்டு நினைத்தாய்?'' என்றாள் உமா.

"சரியான நேரத்திற்கு வந்திருக்கிறாய். நாங்கள் இப்போது அன்னையைத் தரிசிக்கும் நேரமல்லவா! அன்னையிடம் ஆசீர்வாதப் பூக்கள் வாங்குவோம். ஆஸ்ரமத்திற்கு என்னுடன் நீயும் வருகிறாயா?'' என்றாள் ப்ரீத்தி.

"ஆகா! என் ஆவல் இத்தனை விரைவில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கவில்லை. வருகிறேன் ப்ரீத்தி! அந்த அற்புதமானவரைத் தரிசிக்க எனக்கு மிகவும் ஆவலாய் இருக்கிறது'' என்றாள் உமா.

"நீ இங்கு வருவது உன் வீட்டினர்க்குத் தெரியுமா உமா?'' என்றாள் ப்ரீத்தி.

"இல்லை ப்ரீத்தி. அடுத்த தெருவில் ஒரு தோழியிடம் நோட்ஸ் வாங்கப் போகிறேன் என்று சொல்லிவந்திருக்கிறேன்'' என்றாள் உமா.

"ஏற்பாடாக நீயே புத்தகமும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாயா?''என்று கேலிசெய்தாள் ப்ரீத்தி.

இருவரும் அமைதியாக மனதில் அன்னையைப் பற்றிய ஆர்வத்துடன் புறப்பட்டனர். இருவரும் எதுவும் பேசவில்லை. ஆஸ்ரமத்தில் அன்பர் குழாம் தரிசனத்திற்குக் காத்திருந்தது. உமாவை ப்ரீத்தி தனக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டாள்.

பிரகாசமான முறுவலுடன் அன்னை வந்து தமக்கு இடப்பட்ட ஆசனத்தில் கம்பீரமாய் அமர்ந்தார். ஒவ்வொருவராய் அமைதியாய்ச் சென்று பணிந்து வணங்கி, அன்னையிடம் மலர் பெற்றுச் சென்றனர். ப்ரீத்தியும் மலர் பெற்று நகர்ந்தாள். உமா ஆவலுடன் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்னை அவளைப் பார்த்துப் புன்னகைகூட செய்யவில்லை. ப்ரீத்தி, தான் அன்னையிடம் எப்படியெல்லாம் பேசிய அனுபவங்களைச் சொல்வாள். ஆனால் அவரோ அவளைப் பார்க்கக்கூட இல்லையே! என்று எண்ணினாள். அடுத்தது இவள் முறை முன்னே நகர்ந்து அன்னையின் திருமுன் சென்றாள்.

அன்னை இவளைத் தம் பார்வையால் துளைத்துவிட்டார். உடம்பெல்லாம் என்னமோ செய்கிறது. பரமஹம்சர் முதன்முதலில் விவேகானந்தரின் தலைமீது கை வைத்ததும், "என்னை என்னவோ செய்கிறீர்கள், விட்டுவிடுங்கள்! விட்டுவிடுங்கள்!'' என்றதாகப் படித்தது நினைவிற்கு வந்தது. தன் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும்போது ஏனிப்படி என்னவோ செய்கிறது. இது அச்சமா? ஆனந்தமா? என்று குழம்பினாள். அவள் கையிலிருந்த புத்தகத்தை மதர் உற்றுப் பார்த்தார். "அது என்ன கையில்?'' என்று கம்பீரமாய்க் கேட்டார்.

"புத்தகம்'' என்ற சொல் அவள் நாவில் அச்சத்துடன் புறப்படுமுன் புத்தகம் கை தவறி கீழே விழுந்தது. அதில் அவள் நேற்றிரவு அன்னையைப் பற்றி ஒரு கருத்துக்கோவை எழுதி அந்தத் தாளை அழகாக பார்டர் வரைந்து பூக்கள் வரைந்து அழகுபடுத்தி வைத்திருந்தாள். புத்தகத்திற்குள்ளிருந்து அந்தத் தாள் வெளியே விழ, "என்ன அது?'' என்றார் அன்னை அதிகாரமாய்.

தயங்கியவண்ணம் அந்தத் தாளை எடுத்து அவரிடம் சமர்ப்பித்தாள்.

வாங்கிப் படித்த அன்னையின் புருவம் மேலேறியது. கண்கள் அவளைத் தழுவிக்கொண்டன. அவள் உருகிப்போனாள். மலர்க்கொத்தை அவளிடம் கொடுத்து, ஒரு புன்னகை வீசினார்.சரேலென்று எழுந்து போய்விட்டார்.

அவள் அறியாமையும், அகந்தையும் வீசி எறியப்பட்டனவோ? சில்லென்று உணர்ந்தாள். எப்படி இனித்தது அந்தப் புன்னகை. கற்பகோடி காலமும் மறக்க முடியாத புன்னகையல்லவா அது?

"உமா! என்ன மலைத்துப்போய் நிற்கிறாய்?'' என்று தோளில் கை வைக்கிறாள் ப்ரீத்தி.

"ப்ரீத்தி! நீ பாக்கியசாலி. இந்த ஒரு புன்னகையே இப்படி இனிக்கிறது. நீ தினமும் அவரைத் தரிசிக்கிறாய். ஆனால் அன்னை உன்னைப் புன்னகையுடன்கூடப் பார்க்காமல் பூவைக் கொடுத்தனுப்பினாரே. உனக்கு வருத்தமில்லையா?'' என்று மிகுந்த தயக்கத்துடன் கேட்டாள்.

"உமா! ஆரம்பத்தில் நானும் உன்னைப்போல் இதை அலட்சியம் என்றுதான் புரிந்துகொண்டு துன்புற்றேன். நாம் நம் மானுட இயல்பில் அவர் செயல்களுக்குப் பொருள் கற்பிக்கிறோம். ஆனால் அவர் செயல் ஒவ்வொன்றும் நம்மைப் பூரணப்படுத்துவதற்கு என்பது போகப்போகப் புரியும். நேற்று என்ன நடந்தது என்று தெரிந்தால் அன்னையின் செயலுக்கு வருந்தமாட்டாய்'' என்றாள் ப்ரீத்தி.

"நேற்று அப்படி என்னதான் நடந்தது?'' என்றாள் உமா.

"நான் மீண்டும் ஏன் வகுப்பிற்கு வரவில்லை தெரியுமா? மறுபடியும் வலக்கை தோள்பட்டைக்குக் கீழ் கட்டி வந்துவிட்டது.

பெரிய கட்டி. வலிதாங்கவில்லை. அன்னையிடம் சென்று கதறி அழுதுவிட்டேன். என்னைப் பற்றியவண்ணம் தியானம் செய்தார்.பிறகு எனக்குக் கிரகிக்கும் பிராண சக்தியில்லை என்றும் பன்னீர் மரத்தைப்போல் ஆதாரம் உறுதியில்லாதிருக்கிறது என்றும் கடிந்துகொண்டார். "நீ ஊருக்குப் போய்விடு. நாளைக்கே புறப்படு. உனக்குப் பயணச் சீட்டு வாங்கித் தருகிறேன்'' என்று கடுமையாகக் கூறினார்.

அவரைப் பிடித்துக்கொண்டு கதறினேன். எங்கே போவது? உம்மைப் பிரிந்து நான் எப்படி இருப்பது? போகமாட்டேன். நான் உம்மைப் பிரிந்து எங்கும் போகமாட்டேன் என்று அழுதேன். தெருவெல்லாம் அழுதுகொண்டே வந்தேன். படுக்கையில் வந்து விழுந்தேன். நேற்றிரவெல்லாம் படுக்கையில் ரத்தமும் சீழும் சிதற என் தங்கைகள் படுக்கையைச் சுத்தப்படுத்தி, எனக்கு ஒற்றடம் கொடுத்து பக்கத்திலேயே இருந்திருக்கிறார்கள். ஒரே இரவில் அத்தனை வலியும்,வேதனையும் மாறிவிட்டிருந்தது. வேதனையிலிருந்து விடுபட்டிருப்பது எத்தனை நிம்மதி தருகிறது தெரியுமா? இந்தப் பிறப்பின் அருமை புரிகிறது தெரியுமா?'' என்றாள்.

"அது சரி ப்ரீத்தி, உன்னை ஊருக்குப் போகும்படி கடுமையாய் கூறியதாய்ச் சொல்கிறாய். இப்போதுகூட உன்னைத் திரும்பிப் பாராமலேயே பூவைக் கொடுத்து அனுப்பினார். அதற்கு என்ன பொருள்?'' என்றாள் உமா.

"அவர் அன்பை, அருளை என் அகந்தை எடுத்துக்கொண்டு தான் வளர்ந்தது. அவர் விரட்டியது என்னை அன்று. என் ஜடத்தன்மையை. என் ஆன்மாவை மூடிய அகங்காரத்தை. சிறிதும் விழிப்பற்ற என் ஜடத்தன்மை நீங்கவே அன்னை தன் ரௌத்திர கருணையைப் பயன்படுத்தியிருக்கிறார். அவருக்கு ஏது விருப்பு, வெறுப்பு? அவருக்கு யார் வேண்டியவர், யார் வேண்டாதவர்? கொடியவனைப் பற்றிக் கூறினால், "அவனும் என் குழந்தையல்லவா ' என்பார்'' என்று உருகிக் கூறினாள் ப்ரீத்தி.

"என்ன சொல்கிறாய் ப்ரீத்தி? இப்படியெல்லாம் நீ எவ்வாறு புரிந்துகொள்கிறாய்?'' என்றாள் உமா.

"ஸ்ரீ அன்னை நம்மிடையே இப்படி மானுட வடிவில் ஏன் வந்திருக்கிறார் என்று நினைக்கிறாய்? நம்மை வழிநடத்தி அழைத்துச் செல்லவே வந்திருக்கிறார். பகவான் எழுதிய "தி மதர் ' புத்தகம் படித்தால் நீ அவரைப் பற்றி ஓரளவு புரிந்துகொள்வாய்'' என்றாள் ப்ரீத்தி.

"அப்படியா? அது இப்பொழுது எனக்குக் கிடைக்குமா? ப்ரீத்தி! எனக்கு அந்தப் புத்தகம் இருந்தால் கொடேன். படித்துவிட்டு கவனமாய் திருப்பித் தந்துவிடுகிறேன்'' என்று கூறினாள்.

"இத்தனை ஆர்வமாய் கேட்கும் உனக்குத் தாராதிருப்பேனா? பொறுத்துக்கொள். எப்படியாவது நளினி மாமாவிடம் கேட்டு வாங்கித் தருகிறேன்'' என்றாள்.

விடை பெற்றாள் உமா, எல்லையில்லாக் களிப்புடன்!


 

தொடரும்.....

****
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனத்தின் எழுச்சியைப் பூர்த்தி செய்வதை விட்டொழித்தால் மனிதன் தெய்வமாகலாம்.

எழுச்சியழிந்த மனிதன் தெய்வம்.

****
 


 


 


 


 



book | by Dr. Radut