Skip to Content

08.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

முடிவில்லாத பணம் :

பணம் வருமுன் உபரி சக்திக்கு உபயோகமில்லை. பணம் வந்தபின் அது பயன்படுகிறது. தவணை முறை வந்தபின் எதிர்கால உழைப்பைப் பணமாக்கியது. கடன் கடந்த கால உழைப்பால் வந்த சொத்து பணமாகியது. பணம் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும், நிகழ்காலத்திற்குள் கொண்டுவந்து வாழ்வை விரிவுபடுத்தியுள்ளது.

  • அப்படிச் செய்ததில் மனிதத்திறன் (potentials of man) ஓரளவு வசதியாகியுள்ளது.
  • நாமறியாத திறமைகள் ஏராளம்.
  • அவற்றைப் பணமாக்கும் வழிகளும் ஏராளம்.
  • இன்றுள்ள பணம்போல் அது ஆயிரம், லட்சம் மடங்கு.
  • நாகரீகம் தன்னையறியாமல் அப்பணத்தை உற்பத்தி செய்துள்ளது.
  • அறிந்து செய்தால் ஆயிரம் மடங்கு பணம் உற்பத்தியாகும்.
  • கல்வி, பிரயாணம், மருந்து, விஞ்ஞானம், வசதி ஆகியவை அதுபோல் இன்று ஆயிரம் மடங்கு பெருகியுள்ளன. இனியும் ஏராளமாகப் பெருகும். பணமும் அந்தச் சட்டத்திற்குட்பட்டதாகும்.

செலவுக்குப் பணம் வரும், சேமிப்புக்கு வாராது :

சேமிப்பு என்பது பழங்காலத்திற்குரியது. ஜாதி அழிய வேண்டும், மூடநம்பிக்கை அழியவேண்டும் என்பதில் எதிர்காலத்தில் சேமிப்பும் சேரும். சேமிப்பு அர்த்தமற்றதாகிவிட்டால், பணத்திற்கு என்ன செலவு? பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய மனிதன் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. பொருள்கள் விலை இறங்குவதால் பணம் உபரியாகும்.

தானே பெருகும் பணம் :

இயற்கையில் பிராணிகளும், தாவரங்களும் பெருகுகின்றன. மனித குலம் தானே பெருகி வருகிறது. இது வேறு தலைப்பு. அதேபோல் சமூகத்தில் உற்பத்தியாகும் எந்த அம்சமும் - கல்வி, கலை, பொருள்கள் - தாமே பரவுகின்றன. பணமும் அதுபோல் பரவுகிறது. ஒரு கட்டத்தில் தாமே அவை பெருகுகின்றன (self-multiplying). பணம் கொஞ்ச நாட்களாக அந்நிலையை அடைந்துள்ளது.

இயற்கையிலும், சமூகத்திலும், ஆன்மீகத்திலும் இவ்வுண்மையைக் காண்கிறோம் (One becomes the many). இறைவன் சிருஷ்டியாவதால் குறைவதில்லை. பரமாத்மா, ஜீவாத்மாக்களை குறைவின்றி உற்பத்தி செய்கிறது. அதனால் பரமாத்மா குறைவதில்லை. குறையாத தன்மை (infinity) மனம், வாழ்வு, ஜடத்திற்குண்டு. எல்லாவற்றிற்கும் உண்டு என்பது தத்துவம். சக்திக்கும், ரூபத்திற்கும் முடிவில்லாமல் வளரும் குணம் உண்டு. பணம் அதற்கு விலக்கன்று.

பணம் முடிவில்லாமல் வளரும் தன்மையுடையது.

மனித வாழ்வு மற்றவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. கண்மூடியுள்ளவரை சூழல் வாழ்வை நிர்ணயிக்கும். நாம் நம்மையறிந்தால் (conscious) நம் சூழலை நிர்ணயிக்கலாம். இன்று பணம் தானே பெருகுகிறது. நாம் கண்ணைத் திறந்தால் பணத்தை முடிவின்றிப் பெருக்கலாம்.

சமூகத்திற்கு உடல் உண்டு. ஜடமான பொருள்கள் - வீடு, ரோடு - சமூகத்தின் உடல். பணம் சமூகத்திற்கு உயிர். உடல் மந்தமானது, உயிர் வீர்யமானது. உடலும் பெருகும், மெதுவாகப் பெருகும். உயிர் வேகமாகப் பெருகும். பணம் வேகமாகப் பெருகும்.

வளர்ச்சிக்கு இரு நிலைகள் உள்ளன. (multiplication, self-multiplication) உணவால் வளர்வது வளர்ச்சி, உணர்வால் வளர்வது தானே பெருகுவது. தானே பெருகுவது உள்ளுணர்வின் தன்மையைப் பொருத்தது.

சமூகத்தின் திறமை :

நாளுக்கு நாள் சமூகத்தின் திறமை அதிகரிக்கிறது. அதை மனிதனுக்கு சமூகம் கொடுக்கிறது. அதனால் சமூகம் மனிதனைக் கட்டுப்படுத்தியது. நாகரீகம் வளரும்பொழுது கட்டுப்பாடு தளர்ந்து, சுதந்திரம் வருகிறது. முன்னேறிய நாடுகளில் சுதந்திரம் அதிகம். தன்னிஷ்டப்படி வெளிநாடு போக, தான் விரும்பிய கடவுளை வணங்க, தான் இஷ்டப்பட்டதை கற்க, பல நாடுகளில் சுதந்திரம் உண்டு. பல நாடுகளில் இல்லை.

  • சமூகம் எந்தப் புதியதை ஏற்றாலும், மனிதனுக்கு அவ்வசதி வரும்.
  • அது பணத்தைப் பெருக்கும்.

உலகில் நாகரீகம் வளர்வதால் மனிதன் பெறும் வசதிகளும், சுதந்திரமும் பெருகுகின்றன. இவை தாமே நடப்பவை. அதற்குப் பதிலாக மனிதன் தன்னையறிந்து செயல்பட்டால், வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அந்தச் சட்டம் எல்லா அம்சங்களுக்கும் உண்டு.

  • நம் கருத்து பணம். பணம் பெருகக் கூடிய அளவில் சிறு அளவே பெருகியுள்ளது. முயன்றால் அளவுகடந்து பெருகும்.

சூட்சும ஞானம் தரும் பாதுகாப்பு :

வசதியும், இலாபமும், அதிகாரமும் ஏராளமாக உள்ள இடத்தில் ஆபத்து, ஏமாற்றுதல் ஏராளமாக இருக்கும். எந்தத் துறையில் இலாபம் இருந்தாலும் அதே துறையில் உள்ளவர்க்கே அது பயன்படும். மற்றவர்க்குப் பயன்படாது. ஏனெனில் அதே துறையில் உள்ளவர்க்குத்தான் அத்துறையின் சூட்சும ஞானமிருக்கும். சூட்சும ஞானமிருந்தால்தான் பாதுகாப்பிருக்கும். பொதுவாக இதை அனுபவம் என்போம்.

மேடைப் பேச்சிலிருந்து சமையல்வரை துறை தெரியாதவர் அதிக நாள் அங்கிருக்க முடியாது. மேடைப் பேச்சின் நுணுக்கமறியாதவர்களைக் கேலி செய்து அனுப்பிவிடுவார்கள். சமையலில் அஜாக்கிரதையாக இருந்தால் கை காலில் சூடு விழும், சமையல் வாராது. எல்லாத் துறைகளிலும் அனுபவம் உண்டு. அனுபவத்தின்மூலம் சூட்சும ஞானம் உண்டு. அதில்லாதவர்க்கு அத்துறை தன் பரிசைத் தாராது.

நாம் பணத்தை அபரிமிதமாக உற்பத்தி செய்யலாம் என்கிறோம். உற்பத்தி செய்வது திறமை. திறமை மட்டும் போதாது. பணத்திற்குச் சூட்சும ஞானமில்லாவிட்டால் அது பாதியில் தோற்கும். அது முழுவதும் பலித்த பிறகு தொந்தரவாக முடியும். பொதுவாக சூட்சும ஞானம் என்பதையும், பணத்தில் அது என்ன என்பதையும் அறிவது அவசியம்.

எந்த வேலையையும் சொல்லிக் கொடுக்கலாம், காட்டிக் கொடுக்கலாம், பயிற்சி அளிக்கலாம். சொல்லையும் பயிற்சியையும் கடந்து நாமே கற்றுக்கொள்ளக்கூடியன எல்லா வேலைகளிலும் உண்டு. அவற்றை சூட்சுமம், ரகஸ்யம் என்கிறோம். அரசியல் திறமை, நிர்வாகம், தலைமை என்பவற்றைக் கடந்து பிரபலம் என்பது இப்படிப்பட்டது. எழுத்தாளருக்கு நடை, சமையல் பதம், சங்கீதத்தில் பிரபலம் போன்றவை சூட்சுமத்தைச் சேர்ந்தன.

  • சூட்சும ஞானமில்லாவிட்டால் பலிக்காது.
  • சூட்சும ஞானமிருந்தால்தான் பலித்தாலும் பாதுகாப்பிருக்கும்.

பொதுமக்கள் இதை இராசி என்பார்கள். இராசி என்பது சூட்சுமத்தின் பகுதி. இதைப் பலவகைகளாகக் கூறலாம்.

  • நம் நிலைக்கு மேம்பட்ட ஞானம்.
  • நம் சூட்சும நிலைக்குரிய ஞானம்.
  • அனுபவ ஞானம்.
  • பகுதியை அறியும் முழுமையின் ஞானம்.
  • சாரத்தை அறியும் ஞானம்.
  • உணர்ந்து அறியக்கூடிய ஞானம் என விவரிக்கலாம்.

ஏராளமாக விவரம் தெரிந்தால் அதன் மூலம் இதைப் பெறமுடியும். பணம் முதலில் பொருளாக இருந்தது. பிறகு வேலையாயிற்று. முடிவாகப் பண்பாயிற்று. இவை ஒவ்வொன்றிற்கும் சூட்சுமப் பகுதிகள் உண்டு. அவற்றை எல்லாம் அறியவேண்டும்.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்தம்

எதுவும் முடியாத பொழுது நம்பிக்கையை நாடுகிறோம். எல்லாம் முடியும் என்ற பொழுது நம்பிக்கையை நாடும் ஆன்மா, உயர்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அத்துடன் அன்னையின் உறவை அனுபவிக்கிறது. இனி வரும் எச்செயலும் அன்னையிடம் நெருங்கிவரும் சந்தர்ப்பமாக அறிகிறது.

எதுவும் முடியாத பொழுது அழைத்த அன்னையை எல்லாம் முடியும் பொழுது அழைப்பது அன்னையை நெருங்குவதாகும்.

******

Comments

அபரிமிதமான செல்வம்செலவுக்குப்

அபரிமிதமான செல்வம்

செலவுக்குப் பணம் வரும், சேமிப்புக்கு வாராது :

para 1, line 3 - சேமிப்புஅர்த்தமற்றதாகிவிட்டால் -

சேமிப்பு அர்த்தமற்றதாகிவிட்டால்

தானே பெருகும் பணம் :

para 4, line 4 -  from வளர்ச்சிக்கு to பொருத்தது. - separate para.

சூட்சும ஞானம் தரும் பாதுகாப்பு :

para 2, line 6 - மேடைப் பேச்சிலிருந்து to அனுப்பிவிடுவார்கள். - 2nd para

      from சமையலில் to தன் பரிசைத் தாராது. - to be joined to the above 2nd paragraph.



book | by Dr. Radut