Skip to Content

05.அன்பரும் - நண்பரும்

அன்பரும் - நண்பரும்

அன்பர் - கடந்த 2 வருஷமாக எனக்குப் பல நடந்துள்ளன. வேலையில் சேர்ந்து 10 வருஷமாகக் கிடைக்காதது எல்லாம், இந்த 2 ஆண்டாகக் கிடைத்து உள்ளது. இதுவரை கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை. இப்பொழுது அப்படித் தவறிய அனைத்தும் கிடைத்துவிட்டன. நான் எதிர்பாராதது, என் ஜாதகத்தில் இல்லாதது, என் அந்தஸ்திற்கு மேற்பட்டது எனப் பல விஷயங்கள் தொடர்ந்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது. அதில் எதுவும் பலிக்கவில்லை. வருகின்றது, நடக்கும் போலிருக்கிறது, இல்லை என்றாகிறது.

நண்பர் - இந்த அனுபவம் அன்பர்களுக்குண்டு. பலர் கவனிப்பதில்லை.

அன்பர் - வந்தது பலிக்க வழியுண்டா? ஜாதகம் அடிக்கடி பார்க்கிறேன். அவன் சொல்வதற்கும், நடப்பதற்கும் சம்பந்தமில்லாமலிருக்கிறது. எனக்குப் பிரமோஷன் வந்த பிறகு ஜாதகம் பார்த்தேன். இன்னும் 3 ஆண்டுகட்குப் பிரமோஷனில்லை என்றான். என் மாமனார் ஒரு புதிய தொழில் செய்யச் சொன்னார். எனக்கு ஒரே பயம். ஜாதகம் பார்த்தேன். ஜாதகத்தில் அப்படி எதுவும் தெரியவில்லை என்கிறான்.

நண்பர் - ஜாதகம் 10 முறை பார்த்தீர்களே. அன்னை என்ன சொல்கிறார் என எத்தனை முறை படித்தீர்கள்?

அன்பர் - எனக்கு அது தோன்றவில்லை. விஷயம் என்றால் ஜாதகம் பார்ப்பேன்.

நண்பர் - ஜாதகம் பார்க்கும்வரை எதுவும் பலிக்காது. வருவது ஜாதகப்படி வரவில்லையே.

அன்பர் - எப்படி ஜாதகம் பார்க்காமலிருப்பது? நிறுத்திவிடட்டுமா?

நண்பர் - பார்ப்பது, பார்க்காதது விஷயமில்லை. ஜாதகத்தை மனம் நம்பும்வரை எந்தப் பெரிய நல்லதும் அன்னை மூலம் வாராது. ஜாதகம் தவறில்லை. அது பார்ப்பவர்க்கு சரி.அன்பர்கட்குச் சரி வாராது. சம்பளத்திற்கு வேலை செய்வது தவறு என்று கூற முடியுமா? தொழில் ஆரம்பித்தபின் சம்பளத்திற்கு வேலை செய்வது தவறு என்று கூறமுடியுமா? தொழில் ஆரம்பித்த பின் சம்பளத்திற்குப் போகமுடியுமா? உங்களுக்கு ஜாதகம் போல பல வேலைகள் அன்னைக்கு ஒத்து வாராதன இருக்கின்றன. சூழல் பலமாக இருப்பதால் பல வாய்ப்புகள் வருகின்றன. சுபாவம் சூழலைவிட வலிமையாக இருப்பதால், வந்தது பலிக்கவில்லை.

அன்பர் - அது எனக்கு முதலிலிருந்து தெரியுமே. எனக்குக் கல்யாணம், விசேஷம் என்றால் உயிர். ஒன்று விடாமல் போய்வருவேன். நான் ஒரு நோட்டு வைத்திருக்கிறேன். எந்தக் கல்யாணத்திற்குப் போனாலும், புதியதாய் அறிமுகமான சொந்தக்காரர்கள் பெயரையும், விலாசத்தையும் குறித்துக் கொள்வேன். ஆபீசில் யாருக்காவது ஒன்று என்றால் நான்தான் முன் நிற்பேன். அன்பர்கள் அப்படியில்லை. என்னை ஒன்றும் சொல்வதில்லை. நான் ஜீவனோடு அனைவரிடமும் கலந்துகொள்வேன். வாரம் 2, 3 முறை கடைக்குப் போனால்தான் மனம் நிம்மதியாக இருக்கும். இதெல்லாம் நல்லதில்லையா?

நண்பர் - Your are a perfect social person, popular too. சமூகத்துடன் நீங்கள் ஒன்றி வாழ்பவர். இதில் என்ன தவறு? நல்லதுதானே.

அன்பர் - வரும் வாய்ப்புகள் தவறுவதற்கும், இந்த வாழ்விற்கும் தொடர்புண்டா?

நண்பர் - சற்று யோசனை செய்து பார்த்தால் 2 ஆண்டுகளில் நீங்கள் சுமார் 18 திருமணங்கட்கு போயிருந்தால், அன்னையிடம் வந்தபின் 2 ஆண்டுகளில்....

அன்பர் - 50க்கு மேற்பட்ட திருமணங்கட்குப் போனேன்.

நண்பர் - உங்கள் விருப்பம் வளர்ந்துள்ளதே. அந்நிலையிலுள்ள வாய்ப்புகள் அனைத்தும் பலித்திருக்குமே.

அன்பர் - அது உண்மைதான். என் சம்பளம் ரூ.21,000. என் மாமனார் நண்பர் 8 கோடியில் தொழில் ஆரம்பிக்கிறார். அங்கு ஜெனரல் மேனேஜராக என்னைக் கூப்பிட்டார். 35,000 சம்பளம். பிறகு டைரக்டராக்குகிறேன் என்கிறார். இதுபோன்று வந்த வாய்ப்பு எதுவும் பலிக்கவில்லை.

நண்பர் - உங்கள் சுபாவமும், இந்த வாய்ப்பும் மாறுபட்டவை.

அன்பர் - இந்த வாய்ப்புப் பலிக்குமா? அதற்கு நான் என்ன செய்யவேண்டும்.

நண்பர் - பலிக்க வேண்டும் என நினைத்தால் ஜுரம் வரும்.

அன்பர் - இப்பொழுது நினைவுக்கு வருகிறது. மாமனார் சொல்லியவுடன் எனக்குப் பல நாள் ஜுரம். அப்படியெனில் பலிக்காதா?

நண்பர் - பலிக்க வேண்டும் எனப் பிரியப்பட்டால் ஜுரம் வந்தது போகாது.

அன்பர் - ஏன்?

நண்பர் - நீங்கள் social personality நாலு பேருடன் கலந்து பிரியமாகப் பழகுபவர். 8 கோடி கம்பனி மானேஜர் பொறுப்பு அதிகம். உங்கள் நிலைமைக்கு மீறிய பொறுப்பை ஏற்றால் உடல் புண்ணாக வலிக்கும். 6 மாதம், 10 மாதம் வலி விடாது.

அன்பர் - அது என்ன தத்துவம்?

நண்பர் - You are a light person. It is a serious work. நீங்கள் கலகலப்பான சுபாவம் உள்ளவர். இந்த பாரம் தாங்காது.

அன்பர் - அன்னையிடம் எதையும் பெறலாம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேனே.

நண்பர் - பெறலாம், முயற்சி வேண்டும், மனக்கட்டுப்பாடு வேண்டும்.

அன்பர் - இந்த மானேஜர் வேலையை நான் ஏற்றுக் கொள்ள முடிவு செய்கிறேன். கூடிவர யோசனை சொல்லவும்.

நண்பர் - கடைக்கு, கல்யாணத்திற்கு அவசியமானால் மட்டும் போகவேண்டும். கடமையை மட்டும் செய்யவேண்டும். கலகலப்பாக மலரக்கூடாது. இதை ஏற்றுக் கொண்டாலே தலை சுற்றும்.

அன்பர் - தலை சுற்றாமல், ஜுரம் வாராமல் இதை ஏற்க முடியாதா?

நண்பர் - அதற்கு அன்னை மீது அடுத்த கட்டத்தில் நம்பிக்கை வேண்டும்.

அன்பர் - எனக்குள்ளது எல்லாம் நம்பிக்கையில்லையா?

நண்பர் - இன்றுள்ள சுபாவத்திற்குரிய நம்பிக்கையிருக்கிறது. அதிக நம்பிக்கை வேண்டும்.

அன்பர் - நம்பிக்கை என்றால் என்ன?

நண்பர் - அன்னையை நம்பி பெரிய காரியத்தை ஏற்றால் மனமும், உடலும் சந்தோஷப்படுவது நம்பிக்கை. வலியும், ஜுரமும் வந்தால் அது நம்பிக்கையில்லை.

அன்பர் - நான் ஜெனரல் மானேஜர் பதவியை ஏற்க முடிவு செய்து விட்டேன்.

அன்பருக்கு கம்பனி, உத்தியோகம், லீவு, வீடு மாற்றம், ஊர் மாற்றம் என்று புது வேலை சம்பந்தமான அத்தனையும் சுமுகமாகத் தொடர்ந்து கூடிவருகிறது. தலைவலி, உடல் முழுவதும் வலி , டாக்டர் உடம்பில் ஒன்றும் குறையில்லை என்கிறார். மாத்திரைக்கு வலி கட்டுப்படவில்லை. மாதம் 1½ ஆயிற்று. வலி தாங்கவில்லை. மீண்டும் அவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர்.

அன்பர் - வலி சிரமம் அதிகம்.

நண்பர் - கொஞ்ச நாளானால் சரியாகிவிடும்.

அன்பர் - எத்தனை நாள்?

நண்பர் - தானே சரியாவது 10 அல்லது 20 நாளிலும் நடக்கும், 5 அல்லது 6 வருஷத்திலும் நடக்கும்.

அன்பர் - நாளானால் உயிரிருக்காது.

நண்பர் - பிரியப்பட்டுத் தெரிந்து ஏற்றுக் கொண்டதன்றோ!

அன்பர் - வலி போக வழி சொன்னால் பரவாயில்லை.

நண்பர் - இரண்டு வழி எனக்குத் தெரியும்.

  1. வேலையைப் பொறுப்புடன், பிரியமாக, சந்தோஷமாக மனதால் ஏற்றுக் கொண்டால் உடனே வலி நின்று விடும்.
  2. கம்பனி சம்பந்தமாகத் திருமணம் போன்ற கம்பனி விழாக்களை அடிக்கடி ஏற்படுத்தி, நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் வலி விழா ஆரம்பித்தவுடன் நின்று போகும்.

அன்பர் - புது வேலையில் பழைய வாழ்வு இரண்டாவது.

நண்பர் - முதல் முறை நேரானது, சிறந்தது. அடுத்தது இரண்டாம்பட்ச முறை. இரண்டில் எதுவும் வலியை நீக்கும். உங்களால் முடியுமானால், இரண்டையும் செய்யலாம்.

அன்பர் - வலி போக வழியிருக்கிறது என்று கேட்க சந்தோஷமாக இருக்கிறது. வலியே போய்விட்டது போன்ற உணர்வு எழுகிறது.

அன்பர் ஓரளவு திருப்தியாக வீடு திரும்பினார். அன்று நிம்மதியாகத் தூங்கினார். காலையில் எழுந்தவுடன் வலியே இல்லை. ஆச்சரியமாக நண்பரிடம் போனில் சொன்னர். வலி அதுபோல் உடனே போகாது என நண்பர் அறிவார். எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டார். அன்பர் கம்பனியில் போய் பொறுப்பாகச் செயல்பட நினைக்கும் பொழுதெல்லாம் வெறுப்பு வருவதைக் கண்டார். மனத்துடன் கொஞ்ச நாள் போராடி, நண்பருடன் கலந்து முடிவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்று மாலை வலியிருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அன்றே முதலாளி இவருக்கு டைரக்டர் பதவியும், பங்கும் கொடுப்பதாகச் சொன்னார். உடனே நண்பரிடம் வந்து கலந்து ஆலோசனை செய்தார்.

நண்பர் - நீங்கள் கம்பனியில் எடுத்த முயற்சி உங்கள் சொந்த முயற்சி. இவையெல்லாம் தொடர்ந்து நடக்க சட்டங்களை ஏற்படுத்தி காரியங்கள் தானே நடந்தால், உங்கள் முயற்சி இந்த அளவில் பலித்துப் பலன் கொடுத்துவிட்டது எனப் பொருள். டைரக்டர் பதவி, பங்கு அதன்பிறகு பெற்றால் பலிக்கும், நீடிக்கும்.

அன்பர் - முதலாளிகள் சம்பளம் தருவார்கள். பங்கு தரமாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் நேரம் வாங்கிக் கொள்ளாவிட்டால், மனம் மாறிவிடுவார்கள். இரண்டு மூன்று மாதம் சம்பளத்திற்கே நல்ல வேலை செய்தால், முதலாளி இதுவே சௌகரியம் என விட்டு விடுவார். பிறகு டைரக்டர் பதவியை மறந்துவிடுவார்.

நண்பர் - நீங்கள் சொல்வதுதான் உண்மை. அது திறமை மிகுந்த மானேஜருக்கு. இந்த மானேஜர் பதவியில் வெற்றி காண்பதற்கே வலிவந்து மனமாற்றத்தால் போயிருக்கிறது. உங்களுக்கு இந்த சட்டம் உண்மையில்லை.

அன்பர் - எனக்குரிய சட்டம் எது?

நண்பர் - பொறுப்பை நாளுக்கு நாள் அதிகமாக ஏற்றுக் கொண்டு மனத்துள் பாரம் கரைந்து லேசாகி சந்தோஷம் வருவது உங்களுக்குரிய சட்டம். அந்த சந்தோஷம் வந்தால், டைரக்டர் பதவி தானே தேடி வரும். உலகத்துச் சட்டம் உங்களுக்கில்லை. வேலை நடக்க வேண்டும்.

மனம் விரும்பி பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஏற்றபின் அது பாரமாக இல்லாமல் லேசாக இருக்க வேண்டும்.

லேசான மனம் சந்தோஷப்பட வேண்டும்.

அன்பர் - நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு சரி எனப்பட்டாலும் உடனே டைரக்டர் பதவியை ஏற்பது முறை, நாள் தள்ளக் கூடாது என நான் நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?

நண்பர் - எனக்கு என்று எந்த அபிப்பிராயமும் கிடையாது. என் அனுபவத்தைக் கூறினேன். உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்.

அன்பர் - ஆபீசிலிருந்து அன்பருக்கு போன் வந்து ஒரு முக்கிய பைல் தொலைந்து போய்விட்டதால் இருவர் சண்டையிடுகிறார்கள் என்று செய்தி வந்தது. அதுவே அன்பர் முடிவு சரியில்லை எனக் காட்டுகிறது என்று அன்பர் அறியவில்லை. அவசரமாக அவர் ஆபீசுக்கு போய்விட்டார்.

10 நாள் கழித்து வந்த அன்பர் கவலையோடு பேசினார். தாம் பழைய வேலையை விட்டு இங்கு வந்ததே தவறு என்றார். பழைய வேலையில் எல்லாம் அவருக்கு பழக்கமானது. தவறு வர வழியில்லை. நிலையானது. ஆட்டம் காண எதுவுமில்லை. இது புது இடம். முதலாளி எந்த நேரம் என்ன சொல்வார் என்று தெரியவில்லை.மனம் கலங்கியிருந்தார்.

அன்பர் - அன்பர் நாம் பேசியதிலிருந்து 10 நாளாகச் சரியாக இல்லை.

நண்பர் - மனம் ஒரு நிலையாக இருந்தால் எதுவும் சரியாக இருக்கும்.

அன்பர் - மனம் ஒரு நிலையிலில்லை. அது சரி, அன்று நீங்கள் டைரக்டர் பதவியைப் பற்றிக் கூறியதை மீண்டும் ஒரு முறை சொல்வீர்களா?

நண்பர் மறுமுறை விளக்கம் கூறினார். நண்பர், விளக்கமாகக் கூறினாலும் அன்பர் இதுபோன்ற நேரம் அனைவரும் எழுப்பும் எல்லாக் கேள்விகளையும் எழுப்பினார். ஒருவாறு சமாதானமடைந்தார்.

அன்பர் - நான் வீட்டுக்குப் போய் சில நாள் யோசனை செய்து நீங்கள் சொன்னபடியே நடக்க முடிவு செய்து மீண்டும் வருகிறேன்.

அப்படிச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போனவர் சற்று நேரம் கழித்து வந்தார். முதலாளி அவரைப் போனில் கூப்பிட்டு, "டைரக்டர் பதவியையும், பங்குகளையும் நான் உங்களை ஏற்கச் சொன்னேன். அடுத்த போர்ட் மீட்டிங் 3 மாதம் கழித்து வருகிறது. உங்கள் முடிவுக்கு அவசரமில்லை. அடுத்த மீட்டிங்கிற்குள் சொன்னால் போதும். தற்சமயம் உள்ள வேலையைக் கவனிப்போம்'' என்று கூறியதாக, சந்தோஷமாகச் சொன்னார்.

அன்பர் - அது எப்படி நடந்தது?

நண்பர் - முடிவு என்பது வலுவானது. வாயால் பேசுவது சொல். அபிப்பிராயம் சொல்லை ஏற்றுப் பேசுவது. முடிவு என்பது மனம் பொறுப்பை ஏற்று அதன் பின் பேசுவது. அதனால் முடிவுக்கு உடனே பலன் உண்டு.

அன்பர் - இனிக் கவலையில்லை.

நண்பர் - கவலையில்லை என்பது சரி. ஆனால் காரியம் முடிந்துவிட்டது என்பதால் மனம் பொறுப்பை இழப்பதுண்டு. பொறுப்பை ஏற்றால், ஏற்றதை மனம் நிறைவேற்ற முடிவு செய்தது நிரந்தரமானால் கவலையில்லை.

அன்பர் - எந்த நேரமும் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பது தான் நிலையா?

நண்பர் - வாழ்வு அடிப்படையான எல்லா விஷயங்களிலும் அப்படித் தானே, இது மட்டுமா? சுதந்திரம் வந்து 55 ஆண்டாக சர்க்கார் நிலையாகத்தானே இருக்கிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை கண்டம் வந்து தானே போகிறது. எது அப்படியில்லை?

அன்பர் - தத்துவமெல்லாம் சரி. இனி ரிடையர் ஆகும்வரை எந்தப் பிரச்சினையும் வாராமலிருக்க வழியுண்டா?

நண்பர் - உண்டு.

அன்பர் - என்ன அது?

நண்பர் - பழைய பர்சனாலிட்டி போய் புது பர்சனாலிட்டி வந்தது நிலையானால் இனி பிரச்சினையே வாராது.

அன்பர் - அல்ப ஆசை கூடாதா?

நண்பர் - அதுவே பொருத்தமான சொல்.

அன்பர் - உத்தியோகத்திற்குத் தகுந்த மனநிலை, பழக்கம் வேண்டும் என்று கூறலாமா?

நண்பர் - அது இருந்தால் ஆட்டம் காணாது.

**** 

Comments

அன்பரும் - நண்பரும்para 1,

அன்பரும் - நண்பரும்

para 1, line 4 - from நான் எதிர்பாராதது, to  வருவது ஆச்சரியமாக இருக்கிறது. - to be highlighted.

para 3. line 2 - சம்பந்தமில்லாமலி ருக்கிறது -

சம்பந்தமில்லாமலிருக்கிறது

para 10, line 1 : -Your are : - You are

do.   18,  do.  - பலி க்க வேண்டும் - பலிக்க வேண்டும்

do.   25 : -பெறலாம் : - பெறலாம்

do.   29 : -அதற்கு : - அதற்கு

do.   34 - Between the 1st and second sentences double line space is needed.

do.   34, line 4 - தலைவலி , - தலைவலி,  

do.   44,  do. 2 - வலியை   - வலியை 

do.   46,   do. 2 - வலியே  - வலியே

    do.      do.  7 - வலி யிருந்த  - வலியிருந்த  

   do.      do.   8 - பதவியும்,பங்கும் - பதவியும், பங்கும்

  do.  47, do.   3 - பத்துப் - பலித்துப்

  do.  48, do.  4 - விடுவார்.பிறகு  - விடுவார். பிறகு

  do.  49 - After 2nd line - extra space is there.

 do.   51, line 4 - from மனம் விரும்பி to வேண்டும். - separate line.

After the above, the next two sentences are two separate two lines.

para 52, line 2, - after உங்கள்  - extra space is there.

do.   53, line 1 -  அன்பர் - ஆபீசிலிருந்து :  அன்பர் ஆபீசிலிருந்து 

do.   57,  do.   - நிலையில்லை - நிலையிலில்லை 

do.   67, line 2 - வாராமலி ருக்க - வாராமலிருக்க  



book | by Dr. Radut