Skip to Content

11.இலட்சியத் திருமணம்

"அன்னை இலக்கியம்"

இலட்சியத் திருமணம்

இல.சுந்தரி

மாலை 5.30 மணியைத் தாண்டிவிட்டது பறவைகளும், கறவைகளும் கூடும், கொட்டிலும் திரும்பும் நேரம். காலையில் புது மலராய்க் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் சென்றவர்கள் அலுத்துச் சலித்து வீடு தேடி வரும் நேரம். மலர்தலும், கூம்பலும் இல்லாத மலர் போல உமா வந்து கொண்டிருக்கிறாள். தெருவை அடைந்ததும், நேற்றுப் புதிதாய்த் தியான மையத்தில் அறிமுகமான பாட்டி வீட்டு வாசலில் மிகுந்த கவலையோடு இருப்பதைக் கண்டாள். உமாவைக் கண்டதும் ஏதோ ஆதரவு கிடைத்ததுபோல், உமாப்பெண்ணே! இப்போதான் ஆபீஸ் முடிஞ்சு வர்றியா? என்றாள்.

ஆமாம் பாட்டி. நீங்கள் ஏன் என்னவோபோல் இருக்கிறீர்கள்? குழந்தைகள் எங்கே? என்று உள்ளே நோக்கியவண்ணம் கேட்டாள்.

அவ்வளவுதான், அடக்கிய துக்கத்தைக் கிளறிவிட்டாற் போலாகிவிட்டது பாட்டிக்கு.

அதையேன் கேக்கற போ. தாத்தாவுக்கு இன்று போஸ்டாபீஸில் யாரையோ பார்த்துவர முக்கியம் என்று குழந்தைகளைத் தானே வரச்சொல்லி விட்டுப் போனார். ஆனால் குழந்தைகளைக் காணோம். எனக்கோ ஊர் புதுசு. ஒன்றும் தெரியாது. தாத்தாவே அழைத்து வருவாரா? வழி தெரியாமல் குழந்தைகள் தவிக்கிறதா என்று புரியாமல் அன்னையை வேண்டிக் கொண்டேயிருக்கேன் என்றாள் கவலையாக.

சரி சரி! அன்னையிடம் சொல்லிவிட்டீர்களல்லவா? என்னை அனுப்பிவிட்டார் என்று சிரித்தவண்ணம் கூறி, கவலைப்படாதீர்கள் ஒரு நொடியில் நான் போய் பார்த்து வருகிறேன் என்று அலுப்பில்லாமல் கூறிவிட்டு வீட்டிற்குப் போகாமல் வந்த வழியே திரும்பினாள்.

பாட்டி சற்று நிம்மதியாகி வாசலிலேயே உட்கார்ந்தாள். நேற்று தியான மையத்தில் கிடைத்த அறிமுகம், சமயத்தில் தெய்வம்போல் வந்தாள்.

உமா குழந்தைகளை அழைத்து வருமுன் நேற்றைய சம்பவங்களைக் கூறிவிடுகிறேன். அடுத்த தெருவிலுள்ள தியான மையத்திற்கு உமா வழக்கம்போல் சென்று திரும்பும்போது, இந்தப் பாட்டி 3 வயது நிரம்பிய சிறுவன், 6 வயதுச் சிறுமி ஆகிய தம் பேரக்குழந்தைகளுடன் வெளியே வந்தார். நேற்று ஆண்டுவிழாச் சிறப்புக் கூட்டமாதலால் நிரம்பக் கூட்டம். இவள் எப்போதும் சரியான நேரத்திற்கு வந்து முதல் வரிசையில் அமர்ந்து விடுவாள். தியானம் முடிந்தவுடன் அமைதியாகத் திரும்பிவிடுவாள். எல்லோருக்கும் ஒரு புன்சிரிப்புதான் இவள் பேச்சு. அதிகம் யாருடனும் பேசமாட்டாள். வீண்பேச்சு பேசும் நேரத்தில் அமைதியாய் அன்னையை நினைப்பது எவ்வளவு நல்லது என்று நினைப்பாள். சிறிது நேரம் கிடைத்தாலும் அன்னையின் அமுத மொழிகளைப் படிப்பதில் செலவழிப்பாள்.

நேற்று எல்லோரும் சென்றபின் இந்தப் பாட்டி தன் பேரக் குழந்தைகளை அழைத்துப் போவதில் சிரமப்பட்டாள். சிறுவன் எதற்கோ சிணுங்கினான். வீட்டில் கிடந்தால் வேதனையாயிருக்கிறது. அன்னையிடம் வருவோம் என்றால் ஏதாவது தொல்லை செய்கிறாயே. என்னால் உங்களுடன் போராட முடியுமா? என்று கடுமையில்லாத முறையில் லேசாகத் தன் இயலாமையை வெளியிட்டாள். சிறுவன் ஏதோ சிணுங்கினான். பின்தொடர்ந்து வந்த உமா பாட்டியின் பரிதாபத்தால் சற்று பாதிக்கப்பட்டாள்.

ஏன் பாட்டி குழந்தை அழுகிறான்? நடக்க முடியவில்லையென்றால் நான் தூக்கிக் கொள்ளட்டுமா என்று அருகில் சென்றாள். வட்டமுகமும், கரிய பெரிய விழிகளும், சுருட்டை முடியும் ரோஜாப் பூப்போலிருந்தான் சிறுவன்.

வயது நாலாகப் போகிறது. இவனைத் தூக்க முடியுமா? அதெல்லாம் ஒன்றுமில்லை - அவன் இப்படித்தான் காரணமில்லாமல் படுத்துவான் என்றாள் பாட்டி.

தொடரும்.....

****

Comments

இலட்சியத் திருமணம் இல.

இலட்சியத் திருமணம் 

இல. சுந்தரி - author's name not in order.  

para 1, line 6 - வாசல் - வாசலில்

do    5, line 1 - சொல்லி விட்டீர்களல்லவா -

சொல்லிவிட்டீர்களல்லவா

para 9, line 3 - from வயது to பாட்டி. - separate paragraph.book | by Dr. Radut