Skip to Content

10. அன்னை இலக்கியம் - எது நியாயம்

“அன்னை இலக்கியம்”

எது நியாயம்

(நவம்பர் இதழ் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

இன்று ஊர் திரும்பியாக வேண்டும். பார்சல் பில் கொடுக்கவும், சரக்கு எடுக்கவும் ஊர் போயாக வேண்டும். நம்பிக்கையின் பேரில் இவனைக் கம்பெனி அனுப்பியிருந்தது. சத்தியத்தைத் தரிசிக்காமல் போக மனமில்லாது போனான். முன்பின் கண்டிராத அந்த ஸ்ரீ அன்னையை வடிவமறியாது தரிசித்தான். ஓயாது அதே நினைவு.

ஊர் திரும்பிய கணவன் திடீரென உற்சாகமாய் இருப்பது கண்டாள். என்றுமே வாய்விட்டுக் கேட்டறியாதவள், அவனே முன்வந்து சொன்னாலல்லது இவள் கேட்கமாட்டாள்.

கண்ணம்மா திடீரென நான் உற்சாகமாகி விட்டேன் தெரியுமா? என்றான்.

"அப்படியா? கேட்க மகிழ்ச்சியாயிருக்கிறது'' என்றாள்.

"காரணம் என்னவென்று நீ கேட்கவில்லையே?'' என்றான்.

"சொல்லக் கூடியதானால் நீங்களே சொல்வீர்கள் என்றுதான் கேட்கவில்லை'' என்றாள்.

சொல்லக் கூடியது மட்டுமில்லை கண்ணம்மா சொல்ல வேண்டியது. என் இன்ப துன்பங்களில் பங்கேற்க வந்தவள் நீ. ஆனால் இதுவரை இன்பங்கண்டறியாதவள். உன் கணவனால் நீ தினமும் துன்பத்தைத்தான் சந்தித்திருக்கிறாய்.

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? துன்பப்பட்டது நீங்கள். என்னால் எதுவுமே செய்ய முடிந்ததில்லையே'' என்றாள் அடக்கமாக.

"இல்லை கண்ணம்மா அப்படியில்லை. நீ இந்த வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளாய் எனக்குப் பெரிய ஆறுதல் கிடைத்தது. சிறு வயதிலிருந்தே அக்கிரமங்களைக் கண்டால் ஆத்திரப்படும் புத்தி எனக்கு. யாரேனும் ஆதரவு தேடி வந்தால் அவர் பொருட்டு எதையும் செய்வது என் குணம். அதனால் பலர் என்னை நாடி வருவதுண்டு. அதைப் பலன் கருதியோ, பெருமைக்காகவோ நான் செய்யவில்லை. என் இயல்பிலேயே நான் இப்படியிருந்தேன். தகப்பனில்லாத என்னைத் தன் அன்பு முழுதும் என் மீது வைத்த என் தாய்க்கு இந்த என் செயல் ஓயாத தொல்லையாக இருந்து வந்திருக்கிறது. அப்போதெல்லாம் என் அம்மா, "நீ பெரிய விக்ரமாதித்த மகாராஜா, உன்னிடம் நியாயம் கேட்டு வருவதும், நீ அவர்களுக்குப் பரிந்து பேசுவதும், பலமுள்ளவன் உன்னைப் பகைப்பதும் எனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது' என்பாள். சத்தியம் என் பக்கமிருக்கும் போது என்னை அநியாயக்காரர்கள் ஏன் அடிக்கிறார்கள், பொய்யும், புரட்டும் பேசி அவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள், என் மனதில் ஓயாது இதே சிந்தனைதான். நேர்மையை, நல்லதை எங்காவது பார்க்கமாட்டோமோ என்று மனம் ஏங்கியது. யாராவது கீழே கண்டெடுத்த பொருளை இது யாருடையது என்று விசாரித்துக் கொடுத்துவிட்டாலும் எனக்குரிமையில்லாதது வேண்டாம் என அடுத்தவர் பொருள் மீது ஆசைப்படாதிருந்தாலும் எனக்குப் பூரிப்பாயிருக்கிறது. நேற்று கம்பெனிக்குச் சரக்கு வாங்க பாண்டியில் பிரபல நிறுவனம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் அறிந்த செய்திகள் எனக்கு மிகவும் இனிப்பாய் இருந்தது. அங்கு வேலை நிறுத்தம், கூலியில் ஏமாற்றம் எதுவும் கிடையாதாம்''.

"அப்படியா? கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறதே. நிர்வாகி மிகவும் நல்லவர் போலும். தொழிலாளர்களை அனுசரித்துப் போகின்றவர் போலும்'' என்றாள்.

"நிர்வாகி நல்லவர்தாம். ஆனால் அனுசரித்துப் போவது நிர்வாகியல்லர். தொழிலாளிகள்தாம்'' என்றான்.

"என்ன விந்தையான செய்தியிது?'' என்றாள்.

அந்தத் தொழிற்சாலையை ஸ்ரீ அன்னை என்ற ஒருவர் நடத்துகிறாராம். அங்கு இறைவனுக்குச் செய்யும் சேவை என்று எண்ணி வருபவர்க்குத்தான் வேலையாம். எனவே, வேலை அதிகம், கூலி குறைவு என்ற பேச்சிற்கே இடமில்லை. அதில் வேலை செய்வது பாக்கியம் என்று நினைக்கிறார்களாம். எனவே சோர்வும் சுயநலமும் இருப்பதில்லையாம். அதனால் உற்பத்தியும் மிகுதியாம். தரமும் நிரந்தரமாம். உழைப்பவர்களை மகிழ்விக்க வேண்டும் என அவர்கள் தேவைகள் நன்கு கவனிக்கப்படுகிறதாம். அதைக் கேட்டது முதல் அந்த ஸ்ரீ அன்னையைத் தரிசிக்க ஏனோ மனம் ஆர்வமுறுகிறது'' என்றான்.

"கேட்கவே ஆரோக்கியமாயிருக்கிறது'' என்றாள். சத்யம்தான் இவன் தாரக மந்திரம் அது ஓருருக்கொண்டு வந்திருப்பதைத் தரிசிக்க வேண்டாமா? அதே சிந்தனை.

கம்பெனிக்குப் புறப்பட்டான். போகும் வழியினில் ஓர் அழகான கார். திடீரென நின்றது. டிரைவர் இறங்கி ஏதோ சோதனை செய்தார்.

ஏதேனும் இடையூறாக இருக்குமோ? உதவி தேவைப்படுமோ என்று தன் இயல்பான உந்துதல் காரணமாய் அருகில் சென்ற குமரன், "வண்டியில் ஏதேனும் தொந்தரவா?'' என்று அக்கறையுடன் விசாரித்தான். டிரைவர் மிகவும் கலவரமடைந்தவர்போல் காணப்பட்டார். "ஆமாங்க. வண்டி ரொம்பப் புதுசு, ரிப்பேருக்கு அவசியமில்லை. நல்ல செக்அப் பண்ணிதான் எடுத்தேன். அம்மாவுக்கு ஒழுங்கீனம் பிடிக்காது'' என்றார் அச்சத்துடன்.

கவலைப்படாதீங்க, உங்களுக்குத் தடையில்லையென்றால் நான் வண்டியைப் பார்க்கட்டுமா என்றான் உதவி செய்யும் நோக்கத்துடன். டிரைவர் வண்டிக்குள்ளே பின் சீட்டில் எஜமானியம்மாள்போலும் ராஜ கம்பீரமாய் வீற்றிருந்தவரைப் பணிவுடன் பார்த்தார். அவர் இவனைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்தார். அந்தச் சிரிப்பு, அதன் வசீகரம், அதன் கம்பீரம், இதற்கு முன் அதுபோல் எங்கும் பார்த்திராதது. உடம்பெல்லாம் சிலிர்த்தது. அந்தக் கண்களில் அப்படியொரு காந்த சக்தி. அதை உள்ளுணர்வோடு ஒரு முறை சந்தித்துவிட்டால் வாழ்வின் இலக்கு எட்டப்பட்டுவிடும் போலும். கோபத்தை எதிர்பார்த்த டிரைவர் சிரிப்பைக் கண்டு வியந்தான். தெய்வீகத்தில் கோபம் எது, குணம் எது, யாவுமே கடந்ததன்றோ அது. நம் உள்ளுணர்வின் பிரதிபலிப்பன்றோ நாம் காண்பது. முன்புற பானெட்டைத் திறந்து உள்ளே சரியாக ஒரு முறை பார்த்தான். பழுதேயில்லை. வலம் வருவதுபோல் வண்டியை ஒரு முறை சுற்றி வந்து முன்புறத்து சக்கரத்தில் டயரில் பாதிப்பை, நுட்பமாக இருந்ததைக் கண்டுபிடித்தான். டிரைவர் தான் சற்று முன் சோதித்தபோது இது ஏன் என் கண்ணிலே படவில்லை என்று விழித்தான்.

இறுதியில் டிக்கியிலிருந்த ஸ்டெப்னியை இருவரும் உரிய கருவிகளின் துணையுடன் பொருத்த கார் புறப்படத் தயாரானது. குமரனுக்குப் பெருத்த மகிழ்ச்சி. டிரைவருக்குப் பெரு வியப்பு. உள்ளேயிருந்தவர் மனங்கடந்தவர். இரண்டு பக்கமும் அறிந்தவர். வியப்பையும் மகிழ்வையும் உற்பத்திச் செய்தவர். டிரைவர் குமரனுக்கு நன்றி சொன்னார். இதற்கெல்லாம் நன்றி எதற்கு என்றான் குமரன். மீண்டும் உள்ளே நோக்கினான். உள்ளே கம்பீரமாய் வீற்றிருந்த மகாராணி போன்றவர் இவனைப் பார்த்து அழகுறச் சிரிக்கிறார். அது நன்றி கூறும் சிரிப்பன்று. கர்வமான சிரிப்பன்று, குழந்தைகள் சிரிக்குமே கள்ளமில்லாத ஒரு சிரிப்பு அந்தவகைச் சிரிப்பு. மென்மையாக முதுகில் தடவிக் கொடுப்பதுபோல ஒரு சிரிப்பு. மீண்டும் சிலிர்த்தது. பார்த்துக் கொண்டேயிருக்கலாம்போல் ஒரு தவிப்பு. எல்லாம் சில கணப்போதுகள்தாம். கார் நகர்ந்தது. யார் என்னவென்று கூடக் கேட்கத் தோன்றவில்லை. தனக்காகவே இளமை முதல் வாழும் தன் தாயிடத்தும், தன்னை ஆளாக்கிக் கொண்டிருக்கும் கண்ணம்மாவிடம், மழலையால் மகிழ்விக்கும் தன் பிள்ளைகள் இடத்தும் இதுவரை அப்படியொரு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. அவர் யார்? ஏன் அப்படிச் சிரித்தார். அவரோடு எனக்கு என்ன தொடர்பு? என்றெண்ணியவண்ணம் சென்றான்.

கம்பெனியின் சூழல் மிக மகிழ்ச்சிகரமாயிருந்தது. செய்யும் பணிகளெல்லாம் சிறந்தன. மனம் நிறைந்திருந்தது. ஒரு சண்டை சச்சரவில்லை. அந்த மகிழ்வுடன் வீடு திரும்பினான்.

கண்ணம்மா! இன்று எனக்கு ஓர் இனிய அனுபவம் ஏற்பட்டது. அதை உன்னிடம் கூற வேண்டுமென்று ஆவலோடிருக்கிறேன். காபியெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் வா வா என்றான்.

காலையில் கம்பெனிக்குப் போகும் வழியில் ஒரு புத்தம்புது கார் திடீரென நின்றுவிட்டது. அதில் கோளாறு வரவே வாய்ப்பில்லை. டிரைவர் மிகவும் அச்சப்பட்டார். நான் உதவிக்குப் போனேன். என்னை அனுமதிக்க உள்ளேயிருந்த அவர் எஜமானியம்மாளிடம் உத்தரவு கேட்டார். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையசைத்தார். அந்தக் கணம் நான் கற்பூரமாகி காற்றில் கரைவதுபோல் மிக மகிழ்ச்சியாயிருந்தது. அந்தச் சிரிப்பிற்குரியவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சி இப்போது மட்டுமன்று எப்போதுமே என்னை விட்டகலாது என்றான்.

அப்படியொரு மகிழ்ச்சியைத் தர சக்தி தேவியால்தான் முடியும். அது அம்பாளின் அவதாரமோ என்னமோ? என்றாள் கண்ணம்மா.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏதோவொரு பெரிய சக்தி அவரிடம் இருப்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது. ஆனால் அந்தப் புதுக் கார் எப்படி ரிப்பேராக முடியும்? என்றான்.

உங்களுக்குக் காட்சிக் கொடுக்க எண்ணி கடவுள் அப்படிச் செய்தாரோ என்னவோ? என்று விளையாட்டாகச் சொல்வதுபோல் கண்ணம்மா சொன்னாலும் அதிலும் உண்மையிருக்குமோ என்றது மனம். அன்று முதல் உள்ளத்தில் எப்போதும் மகிழ்ச்சிப் பிரவாகம்.

வெளியில் எது நடந்தாலும் பாதிப்பில்லை. அந்தச் சிரிப்பு, கம்பீரம், கண்களில் கண்ட வசீகரம், அதுவே அவன் மனக் காட்சியாயிருந்தது.

ஏப்ரல் 24ஆந்தேதியும் வந்தது. முதல் நாளே மனைவி, குழந்தைகள், அம்மாவுடன் பாண்டியில் வந்து தங்கினான்.

மறுநாள் தரிசனத்திற்கு வரிசையில் நின்றனர். பக்தர் கூட்டம் வரிசையாக முன்னேறி ஸ்ரீ அன்னையிடம் ஆசியும், பிரசாதமும் பெற்று மலர்ச்சியும், மகிழ்ச்சியுமாய்ச் சென்றது. வரிசையில் தன் வாய்ப்பு வரும்வரை பொறுமையாக அமைதியாக அதே நேரம் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தான் குமரன்.

வரிசை நகர நகர தன் வாய்ப்பு வருமுன் சற்று அருகில் அங்கு வீற்றிருந்தவரைப் பார்த்தவுடன் இனந்தெரியாத இன்பப் பரவசம். உடம்பெல்லாம் சிலிர்த்து கண் நீர் தளும்பியது. ஆகா, இவர் வேறு யாருமல்லர். அன்று புதிய காரொன்றில் வந்து டயர் மாற்றச் செய்த அதே மகாராணியார். இந்த வடிவத்தை எண்ணி அவன் இன்புற்றது எவ்வளவு பொருத்தம். அருகே நெருங்கியதும் சொல்லொணாப் பரவசம். மீண்டும் அந்தச் சிரிப்பு. அதே கனிவான பார்வை. நான் உம்மிடம் வந்தேனா? நீர் என்னைத் தடுத்தாட் கொண்டீரா? என்றெண்ணியவண்ணம் அவர் ஆசியும், மலர்ப் பிரசாதமும் பெற்றான். அந்தச் சிரிப்பு, இத்தனை நாள் நீ தேடியது என்னைத் தானா? அகப்பட்டேனா? என்பது போலிருந்தது. "நீங்கள்தான், உங்களைத்தான்'' என்றது உள்ளம். உடல் நகர்ந்தது. உணர்வு அவரைப் பற்றிக் கொண்டது.

தரிசனம் முடித்து எல்லோரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து அந்த நினைவை அனுபவித்தனர். அம்மா உனக்கு என்ன தோன்றுகிறது? என்றான் குமரன்.

"நீ இப்படியெல்லாம் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றாள்.

"கண்ணம்மா தரிசனம் எப்படியிருந்தது?'' என்றான்.

"மனம் மிகவும் நிறைவாக இருக்கிறது'' என்றாள்.

அப்பா! என்று பிள்ளைகள் இருவரும் ஒரே மகிழ்ச்சியுடன் அழைத்தனர். அப்பா அவங்க என் தலையில் கைவைத்து ஆசி கூறியது ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது அப்பா என்றான் ஒருவன். அப்பா பிளெசிங் பாக்கெட் கொடுக்கும்போது என்னைப் பார்த்துச் சிரித்தார்கள் அப்பா எனக்கும் ஒரே சந்தோஷமாய் இருக்கிறதப்பா என்று மற்றவன் கூறினான். உண்மையில் அந்தச் சிரிப்புதான் இவன் உள்ளுக்குள் உறங்கிய எதையோ விழித்தெழச் செய்ததாக இவன் உணர்ந்தான். அந்தச் சிரிப்புக்கு ஈடு எடுப்பு உண்டா? இல்லை. "இப்போ நாம பார்த்தோமா ஒத்தங்கள அவுங்க யாருப்பா?'' என்றனர் பிள்ளைகள்.

"அவுங்கதாம் சத்யம் என்ற கடவுள்'' என்றான்.

"அப்படி ஒரு கடவுள் இருக்காப்பா?'' என்றனர்.

"அப்படி ஒரே ஒரு கடவுள்தான் உலகத்துல இருக்கு'' என்றான்.

"இன்னும் எவ்வளவோ கடவுள்ளாம் இருக்காங்களே அவுங்கள்ளாம்?''

"எல்லாக் கடவுள்களும் இந்தக் கடவுளுக்குள்தான் இருக்கிறார்கள்'' என்றான் குமரன்.

"எனக்கென்னவோ இப்படியே உட்கார்ந்து அந்தத் தரிசனத்தை நினைத்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கு கண்ணம்மா'' என்றான்.

"ஒரே இடத்தில் இருக்கவே பிடிக்காதும்பீங்களே இப்படி நினைக்கிறதே பெரிய மாற்றம்தான்'' என்றாள்.

உண்பது, உறங்குவது, உழைப்பது தவிர வேறு பரவச உணர்வுகள் அவனுக்கு அனுபவமில்லை. இவனுக்காக இவன் அம்மா அடிக்கடி கோயிலுக்கு நேர்ந்து கொள்வாள். இவன் கோயில், குளம் எங்கும் போவதில்லை. ஏதாவது பூஜை, விரதம் என்றால் கடவுள் கொடுத்த உடம்பால் உழைத்து உண்பதே விரதம்தான், கடவுள் படைத்த உயிரினங்களை நேசிப்பதே பூஜைதான் என்பான். ஆனால் அவன் ஒரு கடவுளைக் கண்ணால் காண்கிறான். மேலும் மேலும் காண விரும்புகிறான். அந்தத் தெய்வத்தின் கோட்பாடுகளை விரும்பினான். அவர்களைப் பற்றிய நூல்களையெல்லாம் வாங்கி வந்து இரவெல்லாம் விழித்துப் படித்தான். ஏதோ தான் தன் இலக்கை நெருங்கிவிட்டதுபோல் உணர்கிறான். அந்தத் தெய்வத்தின் சான்னியத்தில் தானிருக்க என்ன செய்யவேண்டும் என்று எண்ணிய வண்ணம் வேலைக்குப் போனான்.

எதைத் தொட்டாலும் அந்த முகம், அந்தச் சிரிப்பே நினைவில் வந்தது. திடீர் திடீரென தன்னையும், வேலையையும் மறந்து நிற்கும் இவனை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

திடீரென மறுநாள் லீடு எடுத்துக்கொண்டு பாண்டி சென்றான். வழியில் லெவல் கிராசிங்கில் பஸ் நின்றது. எல்லோரும் இறங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். எப்படியும் 15 நிமிடங்கள் ஆகுமென்றனர். இறங்கியவன் கேட்டுக்கு அந்தப் பக்கத்தில் அன்று பார்த்த அதே கார் நின்றது. அன்று தரிசித்த அவர் இருப்பாரோ என்று ஆவல் மிக விறுவிறென கேட்டைச் சுற்றி அப்பால் சென்றுவிட்டான். அதே கார்தான். பின் சீட்டில் அதே மகாராணியார் போன்ற கம்பீரத்துடன் வீற்றிருப்பதும் அவர்தாம். அவர் பார்வையில் படுமாறு காரின் பக்கத்தில் சற்று தள்ளி நின்று மௌனமாய்க் கைகூப்பினான். அதே தலையசைவுடன் புன்னகைத்தார். அந்தக் கண்களில் ஏதோவொரு வசீகரம் இருந்தது. இன்னது செய்வது என புரியாது மகிழ்ந்திருந்த வேளையில் கேட் திறந்தது. வண்டிகள் இங்கும், அங்கும் விரைந்து இடம் மாறின. அந்தக் கார் கண்ணில் மறையும்வரை இவன் அதையே நோக்கியவண்ணம் நின்றான். ஓரளவு ஓடியதுபோல் தோன்றி பிறகு பறப்பதுபோல் மறைந்துவிட்டது. திரும்பி பஸ்ஸில் இறங்கிய இடத்திற்கு வந்தான். இவன் வந்த பஸ் சென்றுவிட்டிருந்தது. அங்கு மரத்தடியில் ஒரு பெட்டிக்கடையில் ஒரு முதியவர் இவன் செயலைக் கவனித்துக் கொண்டிருந்தவர், ஏனுங்க நீங்க ஏறி வந்த பஸ் அப்போதே போய்விட்டது. யாரையாச்சும் தேடிட்டுப் போனீங்களா? பஸ்ஸில் ஏதேனும் சாமானை விட்டுட்டீங்களா? என்றார்.

பஸ்ஸில் எதையும் விடவில்லை. அந்தப் பக்கம் மிகவும் வேண்டியவர் ஒருவர் கார் போலிருந்தது. அதுதான் பார்க்கப் போனேன் என்றான்.

முக்கியமா வந்த வேலையை விட்டுட்டு பாதியிலே பாத்தவங்களைத் தேடிப் போயிட்டீங்களே என்றார்.

வந்ததே அவங்களைத் தேடித்தான் என்றால் இவர்க்குப் புரியுமா? சிரித்துக் கொண்டான்.

என்ன கண்ணம்மா அப்படிப் பார்க்கிறாய்? இன்று கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்பதுபோல் நான் தேடிப் போன தெய்வம் எதிரே வந்து காட்சி தந்துவிட்டது என்றான் மகிழ்ச்சி பொங்க.

சாமி பூதமெல்லாம் நம்பிக்கையில்லை என்றவன் கணத்திற்குக் கணம் கடவுட்காட்சிக்கு ஏங்குவது வியப்பாக இருந்தது. ஆனாலும் பழைய அமைதியின்மை மாறி புதிய உற்சாகமும் தெய்வீகமும் மனநிறைவைத் தந்தது.

மகனின் மகிழ்ச்சியைக் கண்ட நிறைவிலேயே வள்ளியம்மை பிறவிப்பிணி நீங்கிவிட்டாள். இறைவன் அவளை பொறுப்பினின்றும் கண்ணம்மா வந்தவுடனேயே மீட்டுவிட்டான். தாயின் பிரிவு குமரனை எவ்வித சோகத்திலும் ஆழ்த்தவில்லை. அதையும் இயல்பாகவே ஏற்றுக் கொண்டான். குழந்தைகள்தாம் பாட்டியின் பரிவிற்கு ஏங்கின. வளர வளர அன்னையின் சூழலால் அவர்களும் அப்பிரிவை ஏற்றனர்.

ஆனால் குமரனுக்கு அடிக்கடி ஆஸ்ரமம் செல்லவும் அந்தத் தெய்வத்தைத் தரிசிக்கவும் ஏற்பட்ட ஆவல் அவன் வேலைக்குத் தடையானது. அடிக்கடி சம்பளக் குறைவு ஏற்பட்டு வேலையே போய்விட்டது. அப்போதும் குமரனின் மனம் அன்னையின் தரிசனத்திற்குத்தான் ஏங்கியதே தவிர இழந்ததற்கு ஏங்கவில்லை. அவன் மனதிற்குள் அவன் அன்னை இன்பத்தில் திளைக்கத் தொடங்கிவிட்டான். புற வாழ்வு ருசிக்கவில்லை.

கண்ணம்மா! உலகில் பணம் போனால் பலம் போகும் என்பார்கள். எனக்கு வேலையும் பணமும் போய்விட்டது. ஆனால் உள்ளத்தில் புதுத் தெம்பும், ஆழ்ந்த இன்பமும் ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை என்றான்.

"வேண்டாதது போய் வேண்டியது வருகிறது போலும்'' என்றாள்.

வேலையும் கூலியும் இல்லாதவனை உலகம் மனிதனாகவே மதிப்பதில்லை. குடும்பம் குழந்தை என்றிருப்பவருக்கு இவை மேலும் அவசியமல்லவா? இல்லானை இல்லாளும் வேண்டாள் என்பர். கண்ணம்மாவின் நிலை என்ன?

ஆசிரமம் செல்வதோடில்லாமல் அங்கு நிலையாக ஏதேனும் தொண்டு புரியக் கூடுமா என்று எண்ணத் தொடங்கினான். இப்பூச் செடிகளுக்கு நீருற்றி இவை அன்னையின் பொருட்டுத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளமைக்கு நன்றி செலுத்த முடியுமா என்று சிந்தித்தவண்ணம் நின்றிருந்தான்.

ஒரு சாதகர் இவனை அணுகி, "இங்கு தொண்டு செய்ய ஆவல் உண்டா?'' என்று கேட்டார்.

அந்த ஆர்வத்தில்தான் தினமும் இங்கு வருவதாக இவன் கூறினான்.

"நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? என்ன வேலை தெரியும்?'' என்றார்.

"பட்டப்படிப்பு படித்திருக்கிறேன். பிரபல கம்பெனி ஒன்றில் பணிபுரிந்திருக்கிறேன். எந்திரங்களை பழுது பார்க்கும் திறமையும் அனுபவத்தால் உண்டு'' என்றான்.

"இங்கு சாப்பாட்டுக் கூடத்தில் உணவுத் தட்டு சுத்தம் செய்யும் (எச்சில் தட்டு கழுவும்) பணிதான் உள்ளது. உமக்குச் சம்மதமா?'' என்றார்.

"கழிப்பறை சுத்தம் செய்யும் பணியானாலும் தயங்கமாட்டேன்'' என்றான்.

அந்தச் சாதகருக்குத் தம்மைத் தலையில் யாரோ ஓங்கி அடித்தது போலிருந்தது. இவர் ஏதோ அவனைச் சோதனை செய்வதாக எண்ணி கேட்கவும் அவன் அப்படிப் பதில் சொல்லவும், இங்கேயே இருங்கள் என்று கூறி உள்ளே சென்றார்.

என்ன வந்திருப்பது பக்தன்தானா? என்றார் அன்னை வழக்கமான குறும்புச் சிரிப்புடன்.

என்னை மிகவும் மன்னித்தருள வேண்டும். என் இயல்பான சுபாவத்தினால் அப்படிப் பேசிவிட்டேன் என்றார் சாதகர்.

சுபாவங்களை மாற்றத்தானே நான் வந்திருக்கிறேன் என்றார் அன்னை. என்ன பேசினார் என்று நாம் அறியவேண்டும் அல்லவா. சற்றுமுன் அங்கு நடந்த உரையாடலைக் கவனியுங்கள்.

.....

தம்முடைய அறையில் தமக்குள் ஆழ்ந்திருந்த அன்னை திடீரென விழித்து ஒரு சாதகரை அழைத்து, வெளியில் புதிதாக வந்திருக்கும் (சில புறஅடையாங்களை கூறி) பக்தனை இங்கு அழைத்து வா என்றார்.

"அவர் பக்தர் என்பதற்கு என்ன அடையாளம்?'' என்று கேட்டுவிட்டார் சாதகர்.

உன்னால் இயன்ற சோதனையைச் செய்து கண்டுபிடித்து அழைத்து வாயேன் என்றார். அன்னை பக்தர் என்ற சொல்லை பயன்படுத்திய உடனேயே அவர் பக்தர் என்று உணராது என்ன அடையாளம் என்ற கேட்ட தன் அறியாமைக்கு நாணினார். இதுதான் நடந்தது.

குமரன் அன்னையின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டான்.

ஆகா! இது கனவா? நனவா? என் ஆவல் நிறைவேறிவிட்டது. இந்தச் சான்னித்யம் எனக்கு நிலைக்க வேண்டும் என்று மனமார எண்ணினான்.

உன் வேலையும் வருமானமும் போய்விட்டதே. எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்றுவாய்? என்றார் அன்னை.

என்னை ஆதரிப்பவரே என் குடும்பத்தையும் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன் என்றான் நெகிழ்ந்து.

தொடரும்....

*****



book | by Dr. Radut