Skip to Content

09. அஜெண்டா

Agenda

Volume I, P. 80

இறங்கி வரும் சத்திய ஜீவியத்தால் எனக்கென்ன பலன் எனக் கேட்கும் உரிமை சாதகர்கட்கில்லை.

What right the sadhak has to benefit by the descending Supermind.

நம்மிடையே அன்னை வாழ்ந்த காலத்தில் அவர்கள் ஏற்காத நம் பழக்கங்கள் பல.

  1. ஒருவரைப் பற்றி மற்றவர்கள் பேசும் வம்புப் பேச்சு.
  2. ஒருவருக்கு அன்னை ஒன்று செய்தால் அதையே அடுத்தவரும் எதிர்பார்ப்பது.
  3. இதனால் எனக்கென்ன பலன் என்ற மனப்பான்மை.

வம்புப் பேச்சு : மனிதன் சாப்பாட்டுக்கும், உடைக்கும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லாவிட்டால் இறைவனை எந்நேரமும் நினைக்க முடியும் என்று ஓரிடத்தை ஏற்படுத்த முனைந்து வெற்றி பெற்றேன். நான் கண்டது என்ன? பேச்சு, பேச்சு, பேச்சு என அன்னை மனம் வருந்தினார்கள்.

எனக்கும் அதுவே வேண்டும் : டாக்டரிடம் ஒரு நோயாளியை இருவர் அழைத்துப் போனால் நோயாளிக்கு ஊசி போடுகிறார் எனில் அடுத்த இருவரும் எங்களுக்கெல்லாம் ஊசி போடவில்லை எனக் குறைப்படுவதில்லை. பத்து பேர் ஆசிரமம் வந்தால், அவர்களில் ஆன்ம விழிப்புள்ள இருவரை அன்னை அழைத்து தரிசனம் தருகிறார். மற்ற 8 பேரும் எங்களைப் பார்க்கவில்லை எனக் குறைப்படுதல் அன்னைக்குத் தொந்தரவான மனப்பான்மை.

எனக்கு என்ன பலன் : பாண்டியில் ஆசிரமம் இருப்பதால் பாண்டிக்கு என்ன பயன் எனப் பலரும் அன்னையைக் கேட்டுள்ளனர். நாம் ஓரூரில் குடியேறினால் எவரும் நீங்கள் வருவதால் எங்களுக்கென்ன இலாபம் எனக் கேட்பதில்லை. அன்னை இந்தியாவுக்கு வந்தார், தமிழ்நாட்டில் குடியேறினார், புதுவையில் வசிக்கிறார் எனில் புதுவையும், தமிழ்நாடும் எப்படி அன்னைக்குச் சேவை செய்யலாம் என்று கேட்பது நம் பங்கு. நாம் அதைக் கேட்கவில்லை, ஆசிரமத்தால் எங்களுக்கு என்ன பலன் என்று கேட்பது முறையாகாது.

சத்திய ஜீவியம் உலகுக்கு வந்துள்ளது என்றால், அது என்ன? எப்படி வந்தது? அது புவியில் இறங்கியுள்ளதால் நம் கடமை என்ன? என்பவை உரிய கேள்விகள். மேற்சொன்ன கேள்வியை அன்னையிடம் சிலர் கேட்டுள்ளனர். அது சரியான மனப்பான்மை இல்லை.

ஸ்ரீ அரவிந்தர் 1910இல் புதுவை வந்தபொழுது நாட்டின் பல பாகங்களிலிருந்து அரசியல் தொண்டர்கள் அவரை நாடி வந்தனர். அவரைத் தரிசிக்க அனுமதியில்லை என்றபொழுது ஜன்னல் வழியாக ஏறி வந்து எட்டிப் பார்த்தனர். அவரது வேண்டுகோளை எவரும் பொருட்படுத்தவில்லை என்றபொழுது The Hindu பத்திரிகை மூலம் "நான் தனித்திருக்க விரும்புகிறேன். எவரையும் சந்திக்க விரும்பவில்லை. எவரும் என்னை சந்திக்கும் நோக்குடன் புதுவை வரவேண்டாம்'' என ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதுபோல் அன்னை விடுத்த வேண்டுகோள்கள் பல, இதுவும் அவற்றுள் ஒன்று.

*****



book | by Dr. Radut