Skip to Content

06. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே.

ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தாய நமஹ.

நான் 1994 செப்டம்பர் முதல் அன்னையை வழிபட்டு வருகிறேன். அன்னையால் எனக்கு என் வாழ்வில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. நான் 1 வருடமாக அன்னையை மட்டும் வழிபட்டு வருகிறேன். 1998இல் என் மாமியார் நடக்க முடியாமல் ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நான் அப்போது அன்னையிடம் என் மாமியாரின் உடல்நிலை குணமாக வேண்டும். அவர் மீண்டும் நடக்க வைப்பது நீங்கள் தான் என கேட்டுக் கொண்டு உறங்கிவிட்டேன். ஆனால் அன்னை அன்று இரவு என் கனவில் எனக்குத் தெரிந்த ஒருவர் வடிவத்தில் வெள்ளை உடை அணிந்து ஸ்படிகமாலையும் அணிந்திருந்தார், கையில் செம்பருத்திப் பூ, தட்டு நிறைய (ஆரஞ்சுக் கலரில்) கொண்டு வந்து கொடுத்துவிட்டு என் மாமியார் உடலைத் தடவிவிட்டு இனி ஏதும் இருக்காது, நாளை நன்றாகி விடும் என்று கூறினார். மறு நாள் நான் மாலை ஆபீஸிலிருந்து வீட்டுக்கு சென்றபோது என் மாமியார் சமையலறையில் தானே டீ போட்டுக் குடித்துக் கொண்டிருந்தார். இது அன்னையால் தான் நடந்தது.

2000ஆம் வருடம் ஜுன் மாதம் நான் சில நகைகளை மீட்க வேண்டியிருந்தது. அதற்குப் பணம் கிடைக்காமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அன்னையிடம் ஜுன் 10ஆம் தேதிக்குள் எனக்குப் பணம் வந்து நான் நகைகளை மீட்க வேண்டும் மதர், நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன்படி என்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் அந்தப் பணத்தை தந்து உதவினார். நானும் நகைகளை மீட்டுவிட்டேன்.

2001ஆம் ஆண்டு நான் குடியிருக்கும் வீட்டை விட்டுப் பக்கத்து போர்ஷன் ஒன்றிற்குச் செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் ஏற்கனவே அது விஷயமாய் நான் நினைத்துப் பார்த்து கிடைக்காது என விட்டுவிட்டேன். ஆனால் இப்போது அந்தப் போர்ஷனுக்கே மீண்டும் செல்ல வேண்டும் என்று எண்ணம் உறுதியாகி விஷயத்தை மதரிடம் சமர்ப்பித்தேன். ஆனால் ஏற்கனவே அதிக வாடகை தந்துவிட்டுச் சென்ற அந்தப் போர்ஷன் நமக்குக் கிடைக்குமா, என்று நினைத்து மதரிடம் சொல்லிவிட்டு அந்த வீட்டுச் சொந்தக்காரரை வாடகை தரும்போது கேட்கலாம் எனக் கேட்டபோது ஆமாம் நாங்களும் அதை தான் நினைத்தோம். ஆனால் நீங்கள் அந்த வாடகை தரவேண்டாம். நீங்கள் தர நினைத்த வாடகையைத் தந்தால் போதும், உங்கள் மகன் வேலைக்குச் சென்றபிறகு அந்த வீட்டின் வாடகையை உயர்த்தித் தந்தால் போதும் எனக் கூறிவிட்டார்கள். என்னுடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை. உடனே மதரிடம் என் மகன் விரைவில் வேலைக்குச் செல்ல நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும் எனச் சமர்ப்பித்துவிட்டு அந்த வீட்டிற்கு ஜுன் 2ஆந்தேதி குடிபோய் விட்டேன். இப்போது என்னுடன் மதரும், மதருடன் நானும் அந்த வீட்டில் குடித்தனம் செய்கிறோம்.

ஓம் நமோ பகவதே.

*****



book | by Dr. Radut