Skip to Content

03. சிறு குறிப்புகள் - தத்துவக் கல்லூரி

"சிறு குறிப்புகள்"

தத்துவக் கல்லூரி

நம் நாட்டில் 270 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அமெரிக்காவில் 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சில உலகப் பிரசித்தி பெற்றவை. 20,000 முதல் 75,000 வரை மாணவர்கள் இருப்பார்கள். பேர் பெற்ற பல்கலைக்கழகங்களில் சில நோபல் பரிசு பெறுமிடங்களாக அமைந்துள்ளன. இவற்றின் தரம் அதிகம். அட்மிஷன் கிடைப்பது கடினம். நம் நாடுபோல் அங்கு சிபார்சில்லை.

அவற்றுள் சில classical schools எனப்படும். லத்தீன், கிரேக்க, சமஸ்கிருத மொழிகட்கு classical மொழிகள் எனப் பெயர். இன்றைய பாடங்களை முக்கியமாகக் கருதாமல் சாக்ரடீஸ், மார்க்கஸ் ஒரேலியஸ், டான்டே, அரிஸ்டாடில் போன்ற அறிஞர்கள் எழுதியவை, அக்காலத்து மொழிகள், ஆகியவற்றை 500 ஆண்டுகட்கு முன் படித்ததுபோல் படிக்க விரும்பும் மாணவர்கள் சேரும் கல்லூரிகள் இவை. நாம் மெடிகல் காலேஜ் என்பதை அவர்கள் மெடிகல் ஸ்கூல் என்பது போல் இவற்றை classical ஸ்கூல் என்பார்கள். அந்நாட்டில் 10 அல்லது 12 கல்லூரிகள் இது போன்றவை. வாழ்க்கை, வேலைக்கு சம்பந்தமான படிப்பு இல்லை என்பதால் பொதுவாக மாணவர்கள் இக்கல்லூரியை விலக்கி விடுவார்கள். படிப்பு வேண்டும், அறிவு வளர வேண்டும் என்று வசதியும், புத்திசாலித்தனமும் உள்ள மாணவர்கள் இக்கல்லூரிகளை நாடுவர்.

இடம் கிடைப்பது அரிது, மிகவும் சிரமம்.

புரொபசர் மாணவனை நேரில் கண்டு தரமானவன் என முடிவு செய்தாலன்றி கல்லூரியில் இடம் கிடைக்காது. நம் அன்பர் இந்தியா வந்து திரும்பினார். இங்கிருக்கும் பொழுது சில மாதங்கள் The Life Divine பயின்றார். அதில் முக்கியமான,

  1. Process of creation சிருஷ்டியின் இரகஸ்யம்.
  2. Theory of creation சிருஷ்டியின் தத்துவம்.
  3. Secret of creation சிருஷ்டி ஏற்பட்ட காரணம்.
  4. Spirit, Supermind, mind, life, matter ஆன்மா, சத்திய ஜீவியம், மனம், வாழ்வு, ஜடம் உற்பத்தியான வகை.
  5. பிரபஞ்சச் சிருஷ்டி, பிரம்ம சிருஷ்டி

பகுதிகளைப் பயின்றார். அவற்றில் சிலவற்றைக் கட்டுரைகளாக எழுதினார். அவர் விமானத்தில் அடுத்தாற்போல் அமர்ந்தவர் இது போன்ற classical schoolஇல் பயின்றவர் என்று தெரிந்தவுடன் மேற்கூறிய கருத்துக்களைப் பற்றிக் கூற முயன்றார். ஆர்வத்துடன் கேட்டதால் தொடர்ந்து பேசினார் அன்பர். பயணம் முடிந்த பின் அவர், "நீங்கள் கூறுவதெல்லாம் நான் படித்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை. மிக உயர்ந்தவையாக இருக்கின்றன. எப்படி இவற்றை அறிந்தீர்கள்?" எனக் கேட்டார். "நான் இவற்றை எல்லாம் The Life Divine என்ற நூலில் கண்டேன்" எனப் பதிலளித்தார்.

"4½ மணி பேசினேன். கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார். அளவு கடந்த புத்திசாலி. நன்றாகப் புரிவதை நான் கண்டேன். 4½ மணியும் 4½ நிமிஷமாகப் போயின" என்றார் அன்பர்.

 *****



book | by Dr. Radut