Skip to Content

அன்னை இலக்கியம்

ரௌடியின் மனம்

இல.சுந்தரி

நாளை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்விற்குப் பணம் கட்ட கடைசி நாள்.இதுவரை தோழிகளுக்குப் படிப்பில் உதவுவதன் மூலம், புத்தகங்கள் இரவல் பெற்றும், சிறு வகுப்புப் பயிலும் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பதால் சம்பாதித்தும், தன் படிப்புத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டாள்.இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேறினால் நல்ல எதிர்காலம் உண்டு என்று ஆசிரியைகள் கூறுவர். நல்ல முறையிலே பெற்ற பணத்தைக் கட்டவேண்டும் என்ற ஆவல் இவளுக்கு.பணக்காரத் தோழிகளின் கர்வப்பணத்தைக் கடன் வாங்க விருப்பமில்லை.எதிர் வீட்டுக் கபாலியண்ணனுக்குத் தெரிந்தால் பணம் கொடுத்துவிடும்.ஆனால் எந்த வழியிலாவது வரும் பணம் அது. அதைப் பெற்றால் விளைவு நன்றாயிராது.பெற மறுத்தால் அண்ணன் கோபப்படும்.எனவே டியூஷன் பணத்தை முன் பணமாகக் கேட்கப் போன இடத்தில் பணம் கிடைக்க 2 நாட்களாகும் என்றனர்.எனக்குப் பணம் வேண்டும்.ஆனால் அது இரவலாகவோ, தவறான வழியிலோ வந்தது வேண்டாம்.நாய் விற்ற பணம் குரைக்காது என்பார்கள். அதை இவள் ஏற்கவில்லை.அதது அதன் குணத்தைக் காட்டும்.நல்ல வழியிலே பணம் வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வந்தாள்.

"நீலா, நானும் உன்னை எத்தனை நாட்களாக எங்கள் வீட்டிற்கு அழைக்கிறேன்.எங்கள் வீட்டிற்கு நீ விருந்தாளியாக வரவேண்டாம். தியானமையம் வைத்திருக்கிறோம்.அதன் மூலம் எத்தனை அற்புதமான செயல்கள் கேள்விப்படுகிறோம்.உயர்ந்த புத்தகங்கள் படிக்கிறோம். நேர்மையாளர்களுக்கு அது மிகவும் பிடிக்கும்.நேர்மையற்றவர்களை அது மாற்றும்.அதைச் சாக்கிட்டாவது வாயேன்'' என்று வலிய அழைத்தாள் கீதா.இதுவே அன்னையின் அழைப்பு என்பது அறியாமலேயே சென்றாள்.தியான மையம் என்ற போதே என்ன? ஏது?என்று கேட்க நினைத்தேன்.சோம்பேறித்தனத்தால்

 கேட்கவில்லை.இப்போது தேவை என்றதும் அறிய ஆசைப்படுகிறேன். தேவையும் அன்னையே.தேவையை நிறைவேற்றுபவரும் அன்னையே. இது நமக்குத் தெரியாதது.பரவாயில்லை நீலா அன்னையை ஏற்றுப் பயனடைந்த நாளாய் மற்றவரும் இதை உணர்ந்து பயன்படவேண்டும் என்றே ஆசை.

"இன்று அந்த ஆசையை நிறைவேற்ற அன்னை தந்த வாய்ப்பு இது.பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பூரண யோகம் மேற்கொண்டு அதன் மூலம் சத்திய ஜீவியம் என்ற சக்தியைப் பூமிக்குக் கொண்டு வந்தனராம்.அந்தச் சக்தி புவிமீது இயங்கிக்கொண்டும் இருக்கிறதாம்.அந்தச் சக்தி வலியது.எதையும் சாதிக்கவல்லது.இதனை பெற்றுத் தந்த ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் சூட்சும வடிவில் பாண்டிச்சேரி அரவிந்தாஸ்ரமம் மூலம் நமக்கு வழங்கிக் கொண்டிருப்பினும் நம் போன்றோர் அதனைச் சிறிதும் அறியாதிருக்கிறோம்.அதனை அறிந்தவர் தாம் பெற்ற இன்பம் இவ்வையமும் பெறவேண்டுமென தியானமையம் மூலம் ஆஸ்ரமச் சூழலும், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரைச் சூட்சுமமாகக் காணவும் கூடும் என்பதை உணர்ந்து உணர்த்தினார்.என் குடிகாரத் தந்தையை மாற்ற என் தாய் இதை மேற்கொண்டாள்.இதன் மூலம் என் தந்தை மாறியதோடு பலரையும் மாற்றினார்.எங்கள் குடும்பம் பெற்ற அற்புதம் இது.அன்னை சக்தி அளவு கடந்தது.ஏற்பவர் திறன்தான் குறைவு. இவற்றையெல்லாம் சொல்வதைவிடச் சொந்த அனுபவத்தில்தான் நன்கு புரியும்' என்றாள் கீதா.இப்போது எனக்குத் தேவை பரிட்சைக்குக் கட்ட நேரியவழியில் பணம்.எனவே அவளுடன் செல்வேன் என்று சென்றாள் நீலா.தியான அறையின் உள்ளே நுழைந்தவுடன் ஏற்பட்ட பரவசம் அப்பப்பா!முதல் பலன் அதுதான்.மற்றவை பிறகே.

என்ன கீதா ஒரே மலரலங்காரம்.மலர்க் கண்காட்சி போன்றல்லவா உள்ளது?என்றாள் நீலா.

ஆமாம், ஒவ்வொரு மலரும் அன்னையிடம் ஒவ்வொரு திறனைப் பெற்று வெளியிடும் சக்தியுள்ளது.ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு பயனுண்டு.தேர்வில் வெற்றிபெற வேண்டிக்கொண்டு இந்த வெற்றி

 மலரை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்.பிறகு பார், என்றாள். முதலில் பணம் கட்டிய பிறகல்லவா வெற்றி.எனவே எனக்கு குழந்தை வேண்டும் என வரம் கேட்ட சாவித்திரியைப்போல நானும் தேர்வில் வெற்றி வேண்டும் என வேண்டினேன்.உடனே அன்னை வெற்றிக்கு வாய்ப்பை, தேர்வுக்குக் கட்ட பணத்தை ஏற்பாடு செய்துவிட்டார்.எப்படி என்கிறீர்களா?

பிரார்த்தனை முடித்து வீட்டிற்குப் போகும் வழியில் மீனாட்சி மாமி (இவரை நவீன சாவித்திரி என்பேன்) தன் கணவர், பிழைக்க வேண்டும் (நோய்வாய்ப்பட்டதால்) என்று எண்ணி ஓர் இளம் பெண்ணிற்கு அவளைச் சக்தியாகக் கருதி வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் மஞ்சள் குங்குமம் சேர்த்து ஒரு தொகையைக் காணிக்கையாகக் கொடுக்க விரும்பி எடுத்து வைத்துவிட்டு வாசல்பக்கம் வந்தவள் கண்ணில் பட்டேன்.வா நீலா உள்ளே வா. இன்று அம்பாள்தான் உன்னை அனுப்பியிருக்கிறார் என்றார்.எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.உள்ளே சென்றேன்.வெற்றிலைப்பாக்குடன் பணம் வைத்துக் கொடுத்து இன்று உன்னை அம்பாளாய் எண்ணி இதைக் கொடுக்கிறேன்.இதை நீ ஏற்றால் எனக்கு நல்லது என்றார். கடவுள் அருளைப்பெற்று கடவுள் அருளைத் திருப்பித் தருவது, என்ன விந்தை!நாளை பணம் கட்ட அன்னை வகுத்த வழி மட்டுமன்று என் பிரார்த்தனையை ஏற்றார், என் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார், என்னை நன்றியால் நிரப்பினார்.

இந்த அற்புத அன்னையை நான் மட்டும் பெற்றால் போதுமா? மற்றவர்க்குத் தரவேண்டாமா?அடுத்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புக்கூடல்.கீதா வீட்டிற்குச் சென்றேன்.அன்றைய பேச்சுத் தலைப்பு "நம்பிக்கை' என்பதாகவிருந்தது.எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. என் படிப்பறிவு ஓரளவு அந்தப் பேச்சை புரிந்துகொள்ள, ஏற்றுச் சோதிக்கத் தயாராகவுமிருந்தது.நம்பிக்கையைப்பற்றிக் கூறும்போது, எüய மூடநம்பிக்கை - இது பாமரர்களுடையது - பெரும்பாலும் பலிக்கக்கூடியது, இரண்டாவது தைரியமாக இருப்பதால் ஏற்படும் நம்பிக்கை - இது இத்தனை நாள் நடந்ததால் இனியும் நடக்கும் என்ற எண்ணத்தால் வரும் நம்பிக்கை - வெளியில் சுற்றப் போகும் பையன்

 எப்படியும் வீட்டிற்கு வருவான் என்று அன்றாடம் பார்த்த அனுபவத்தில் நம்பும் நம்பிக்கை.மூன்றாவது தன்னம்பிக்கை, தன் திறமையால் சாதிக்க முடியும் என நம்பும் நம்பிக்கை.நான்காவது தெய்வநம்பிக்கை, தெய்வத்திற்குள்ள சக்தியை ஏற்று நம்புவது.இது தன்னம்பிக்கை போனபின் எழுவது.முடிவான உயர்ந்த புனித நம்பிக்கை.மலையையும் நகர்த்தக்கூடிய பெரிய அதாவது ஆங்கிலத்தில் Faith என்று கேப்பிட்டல் F போட்டு எழுதி இதனைக் கூறுவார் பகவான்.இதன் சிறப்பு உங்கள் நம்பிக்கையால் அடுத்தவர் காரியம் (அவருக்கு நம்பிக்கையில்லாத பொழுது) கூடி வருவது, என்றெல்லாம் பேசினார்.இதை உடனே என் மனம் சோதித்தது.தேர்விற்குக் கட்ட பணத்தை எப்படியாவது முயன்று பெறுவோம், என்றது தன்னம்பிக்கை.இனி வழியில்லை என்றதும் என்னால் முடியாது என்று அன்னையிடம் வேண்டிய நம்பிக்கை தெய்வநம்பிக்கை.இதற்கு மேலும் மலையை அசைப்பது போன்ற நம்பிக்கையைச் சோதித்துப் பார்த்துவிட மனம் ஆர்வம் கொண்டது.

தியானம் முடிந்து மலர்ப் பிரசாதம் பெற்று வீடு திரும்பினேன். அஞ்சலையம்மா - எதிர்வீட்டுக் கபாலியண்ணன் தாய் வருத்தமாய் அமர்ந்திருந்தாள்.என்னம்மா எப்படியோ இருக்கீங்க?என்றேன். எல்லாம் ஒங்கண்ணன் கபாலி கவலைதான்.அவன் திருந்துவானா என்றுதான் கவலை என்றாள்.கவலைப்படாதீங்க அம்மா.இந்தாங்க இது ஒரு பூ.அன்னைங்ற தெய்வத்தோட பிரசாதம் .இதை நம்பி வேண்டுங்க.அண்ணன் மாறிடும் என்றாள்.இத்தனை சுலபமா ஒரு வழியிருக்கா.சரி, சரி என்று ஆர்வமாகப் பெற்றுக் கொண்டாள்.

பரட்டைத் தலையும், கடினமான முரட்டு லுங்கியும், முண்டா பனியனும், பெரிய மீசையும், காதுவரை நீண்ட கிருதாவும், நான்தான் இந்தப் பேட்டையின் பெருந்தலைவன் என்று தன்னைக் காட்டிக்கொள்ள கபாலி மேற்கொண்ட கொடுங்கோலம்.இவன் தாய் அஞ்சலை, ""கபாலி இந்தா டீத் தண்ணி'' என்று குவளையை நீட்டினாள்.

"ஆமா பெரிய டீத் தண்ணி.இதக் கொடுத்துட்டு பெரிசா அலுத்துக்குவ.இத நா கடயில குடிக்கமாட்டனா?'' என்றான். உனக்கென்ன?நீ பெரிய வஸ்த்தாது.ஒன்னப் பார்த்ததும் நாயர்

 பயந்தடிச்சு டீத் தரும்.நீ அப்பால போகங்காட்டியும் இவன் நாசமா போக மாட்டானான்னு சாபங் கொடுக்கும்.எம்புள்ளய ஏன் மத்தவங்க பழிக்கணும்?என்றாள்."இப்ப காலைலங்காட்டியும் எதுக்குப் புலம்பற?'' என்றான்.

"கபாலி நீயும் நாலெழுத்துப் படிச்சு நல்லவனா வளந்திருந்தா, நாலு காசு நாணயமா சம்பாரிச்சா, ஒனக்கும் ஒரு கல்யாணங்காட்சி செய்யலாமில்லையா'' என்று வருந்திக் கூறினாள்.

"இப்ப என்னண்ற?நாலெழுத்தும், நாணயமும் இல்லாமலே சம்பாரிக்க முடியும்.நீ பொண்ணப் பாரு.அத வச்சு நா காப்பாத்துறனா இல்லயான்னு நீயே தெரிஞ்சுக்குவ'' என்றான் அலட்சியமாக."உனக்கு யார்ரா பொண்ணு தருவாங்க?' என்றாள்."ஏன் அதையும் வேணா திருடிக் கொணாந்திடட்டுமா?'' என்றான்.

"அறிவில்லாதவன்றது சரியா இருக்கு.பொருளைத் திருடி அனுபவிக்கலாம்.பெண்ணோட மனச திருட முடியாதுடா'' என்றாள். "நீ மட்டும் படிச்சு கண்ணியமா இருந்தா ஒங்கக்கா மவ மல்லிகா ராசாத்தி கணக்காயிருக்காம்.காலேஜி எல்லாம் படிச்சு உத்யோகம் பாக்குதாம்.நல்லா சம்பாரிக்குதாம்.பொண்ணு கேக்க நமக்கு என்ன கௌரதையிருக்கு'' என்று பெருமூச்சு விட்டாள்.

"அட நம்ம அக்காவுக்கு அம்மாம் பெரிய மக இருக்கா.நா அதோட மாமன்ற கௌரதை போறாதா?'' என்றான்.ஆமா, அன்னைக்கே பத்துகிளாஸ் படிச்சுப்போட்டு படிச்சவனுக்கு வாக்கப்பட (வாழ்க்கைப்பட) ஒங்க அக்கா ஆசைப்பட்டா.ஒங்குடிகார அப்பனுக்கு அறிவில்ல.தனக்கு வேண்டியவன்னு எவனோ ஒரு தறுதலைய மாப்ளே பேசினாரு.அவ தாங்காம வீட்டைவிட்டு ஓடி படிச்சபுள்ளய கட்டிக்கிட்டு மாலையுங்கழுத்துமா வந்தா.அப்பவாச்சும் பொண்ணு வாழட்டும்னு விட்டிருந்தா நீயும் நல்லா படிச்சு இன்னிக்கு நல்ல நெலமல இருப்ப.என்ன பிரயோசனம், நீ உருப்பட்டா தன்னை யாரு கவனிக்கறதுன்னு சொயநலமா உன்ன ஒங்கப்பன் படிக்கவுடல. படிப்பில்லாம, பொழப்பில்லாம ஒன்ன நிக்க வச்சு போனாரு'' என்று ஒரு பாட்டம் சொல்லி முடித்தாள்.

 "சரி, சரி.ஒப்பாரி வைக்காத.அவனவன் தலையெழுத்து.நா இப்படி போனதுக்கு வருந்துறயே.ஒம் பொண்ணு கையில சொல்லி அந்த மகளை எனக்குக் கட்டி வைக்க முடியாதா?''

"எப்டிடா முடியும்?அவ மவளை பெரிய படிப்பு படிக்க வச்சு உத்யோகம் பாக்க வச்சுட்டாளாம்.இப்படி படிப்பில்லாம, பழக்கமில்லாம ஊரச்சுத்துற ஒனக்கு அவ தம் பொண்ணத் தருவாளா?கடவுள் எழுதின எழுத்தை மாத்த ஏலாது.கர்மத்தை கரைக்கவும் ஏலாது'', என்றாள்.

ஆகா நல்ல வாய்ப்பு.நேத்துதான் தியான மையத்துல அன்னை கர்மத்தையே கரைப்பார் என்று படித்தாள்.நம்பிக்கையால மலையையும் நகர்த்தலாம்னு பேச்சு கேட்டிருந்தாள் நீலா.இவர்கள் வெளித் திண்ணையில் உட்கார்ந்து சப்தமிட்டுப் பேசுவதைக் கேட்டு நீலா ஓடி வந்தாள்."அஞ்சலயம்மா எதை மாத்தணும், நா மாத்தற வழியைக் காட்டறேன்.எதைக் கரைக்கணும், அதுக்கும் வழியிருக்கு' என்றாள்.

"வாடியம்மா படிச்ச பொண்ணு, ஒன் அண்ணனுக்கு புத்தி சொல்லு' என்றாள் அஞ்சலை.

தியான மையம் பற்றி அறிந்த நீலா இந்த அஞ்சலை வீட்டினர் எதிர்வீட்டுப் பெண்.அவள் தகப்பன் இரண்டு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து போனான்.ஆண் துணையின்றி இவளும் இவள் தாயும் தனித்துத் தவித்தபோது கபாலி தன் முரட்டுத்தனங்களை மீறி இவர்களுக்குப் பிணம் எடுக்கவும், காரியங்கள் முடிக்கவும் உதவினான்.தவித்து நின்ற நீலாவை அழாத தங்கச்சி என்று தேற்றினான்.எல்லோருக்கும் வலிய கல்போன்ற அவன் இவளுக்கு ஈரமுள்ள அண்ணனானான்.

"என்னண்ண அம்மா சொல்லுது?'' என்றாள்."ஆமாஞ் சொல்லுது ஒனக்கொரு அண்ணி வரவேணுமின்னு சொல்லுது'' என்றான் கேலி-யாக.

"ஏன் வரக்கூடாது?வரத்தான் போகுது என்ன மாதிரியே படிச்ச பொண்ணுதான் எங்கண்ணனை கட்டிக்கப் போவுது நீ கவலய விடண்ணே'' என்றாள் கலகலப்பாக.

 "ஆமா ஒங்கண்ணன் படிச்ச படிப்புக்கும், சம்பாரிக்கிற பணத்துக்கும் படிச்ச பொண்ணு வரும்'' என்று ஏக்கத்தை வெளியிட்டாள்.

"ஏன் அஞ்சலயம்மா படிச்ச மாப்ளய படிக்காத பொண்ணு கட்டிக்கிடலயா?அதுபோல படிச்ச பொண்ணை படிக்காத மாப்ள கட்டிக்கிட கூடாதா?'' என்றாள்.

"அப்டி சொல்லு தங்கச்சி'' என்றான் கபாலி."அண்ணே நெசமாவே நா ஒனக்கொரு நல்ல வழி சொல்லுவேன், எம் பேச்சைக் கேளு'' என்றாள்.

அன்று மாலையே தோழி வீட்டு தியான மையத்திற்குச் சென்றாள். தீவிரப் பிரார்த்தனை மேற்கொண்டாள்."அன்னையே நேற்று முன் தினம் ஒருவர் பேசினாரே Faith என்ற பெரிய நம்பிக்கை - உயர்ந்த புனித தெய்வ நம்பிக்கை - அதை நம்பி வந்திருக்கேன்.கபாலி அண்ணனுக்குப் படிப்பில்ல.தொழிலில்ல.சமூகம் அதுக்குப் படிச்ச பொண்ண, உத்யோகம் பாக்குற பொண்ணை கட்டிக்கிட ஒப்பாது. ஆனால் அது உம்மால் முடியும் என்று நா நம்புறேன்.உன்னருளால எல்லார்க் கண்ணிலும் கல்லாத் தெரியற அண்ணனைக் கனியா மாத்திடு அன்னையே' என்று வேண்டிக்கொண்டு நம்பிக்கையுடன் சென்றாள்.

அஞ்சலையின் கணவன் சரியான குடிகாரன்.ஆனால் அவன் மகள் சுமதி நல்லவர்களைப் படிப்பறிவு உயர் பழக்கமுள்ளவர்களைப் பார்த்து தானும் நல்ல முறையில் வாழ ஆசைப்பட்டாள்.தந்தையின் கட்டுப்பாடுகளை நயமாக உடைத்தெறிந்து பத்து வகுப்புவரை பிடிவாதமாகப் படித்துவிட்டாள்.படிப்பறிவு அவளைப் பண்படுத்தியிருந்தது.தன் தந்தையின் பழக்க வழக்கங்களை, அவனைப் போலவே பொறுப்பற்றுத் திரிந்த அவன் நண்பர்களை அவள் வெறுத்தாள்.எங்கே அவள் தன் மகனையும் தனக்கு ஆதரவில்லாது ஆக்கி விடுவாளோ என்றெண்ணி சிறுவனாயிருந்த இவள் தம்பியைத் தனக்கேற்றாற்போல் பயன்படுத்திக் கொண்டான்.இவளையும் தன் விருப்பப்படி ஒருவனுக்குக் கட்டி வைக்க முடிவு செய்தபோதுதான் இவள் தன் பண்புகளையும் தன் தந்தையால் நேர்ந்த அவலங்களையும் நன்கறிந்த ஒரு பண்பாளனைத் தன் விருப்பம்போல் மணந்து கொண்டாள்.தன்னிடம் ஆசி பெறவந்த மகளை தன் மானம் இவளால் போய்விட்டது என்று ஆர்ப்பாட்டம் செய்து இவளைத் துரத்திவிட்டு மனைவியையும், மகனையும் தன் விருப்பப்படி ஆட்டுவித்தான் தகப்பன்.தன் தம்பியின் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கியவண்ணம் சுமதி வெளியேறினாள்.

அறியாப்பருவமாதலாலும், தந்தையின் விருப்பப்படி வளர்ந்துவிட்டதாலும் தவறென்று அறியாமல் தவறுகளைச் செய்தான். உழைக்காமல் உண்பதைப் பெரிய பெருமையாகச் செய்தான். எüயவர்களை மிரட்டினான்.மற்றவர்களைச் சீண்டி சந்தோஷப்பட்டான். நீலா ஒருத்திக்குத்தான் இவன் மரியாதைக்குரிய அண்ணன். மற்றவர்களின் வெறுப்பைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருந்தான்.

தன் மகனின் இருண்ட எதிர்காலத்தை எண்ணினாள் அஞ்சலை.சில தினங்களுக்கு முன் தன் மகளையும், பேத்தியையும் ராஜேஸ்வரி பார்த்ததையும், இவள் பேத்தி அறிவும், அழகும், செல்வமுமாய் இருப்பதையும் கூறியதை எண்ணி ஒருபுறம் மகிழ்ச்சியும், தன் வயிற்றில் பிறந்த இன்னொரு ஜீவன் படிப்பும், பழக்கமுமில்லாத குறையை எண்ணித் துயரமுமாகத் தெருத் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.அந்தப் பேட்டையில் பெரிய மளிகைக்கடையின் சொந்தக்காரர் வரதராஜநாயுடு எளிமையாகக் கையில் மாட்டிய குடையுடன் சென்று கொண்டிருந்தவர் "என்ன அஞ்சலையம்மா வெசனமா குந்தியிருக்கீங்க போலிருக்கு?' என்று விசாரித்தார்.(இவர் மனிதாபிமானம் மிக்கவர்.கபாலியின் குடிகாரத் தந்தை இறந்தபோது யாரும் உதவ முன்வரவில்லை.அவனால் பாதிக்கப்பட்ட வேதனை அவர்களைத் தடுத்தது.அப்போது நாயுடு கபாலியை ஒரு பொருட்டாக மதித்து உதவி ஆறுதல் கூறினார்.)"எல்லாம் மவன் கவலைதான் சாமி' என்று எழுந்து நின்று மரியாதையாய்க் கூறினாள். "கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்.கபாலி வந்தாக் கடப்பக்கம் அனுப்பி வை' என்று கூறிச் சென்றார்.பொறுமை, நிதானம், உழைப்பு, எளிமை யாவும் நிறைந்தவர்.

"அண்ணே மாலை 6 மணிக்குப் பாரதி தெருவுல 68ஆம் நம்பர் வீட்டுக்கு வரியா?" என்றாள் நீலா.

"ஏன்?அங்கதான் எனக்குப் பொண்ணு பாத்திருக்கியா?" என்று நையாண்டிச் செய்தான்.

"ஆசையப் பாரு.இனிமதான், அப்ளிகேஷனே போடணும் அப்பறந்தானே அண்ணி கெடைக்கும்" என்றாள்.

"அது சரி.எதுக்குன்னு நீ சொல்லவேயில்லையே'' என்றான். அது என் தோழி வீடு.அங்கொரு விசேஷம் நடக்கப்போவுது. நீ அங்க வா.அப்புறம் எல்லாம் புரியும் என்றாள்.

யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதவன். மனம் போகும் போக்கில் வாழ்பவன்."சரி சரி வரேன் போ'' என்றான், பொதுவாக இவன் குணம், நடவடிக்கை நல்ல இடத்திற்குப் பொருந்தாது.எதற்கும் உடன்படாத இவன் அதெல்லாம் நமக்குச் சரிப்படாது. நீ போ தங்கச்சி என்று சுருட்டும் புகையுமாய்த் திரியும் இவன் எப்படி ஒப்புக்கொண்டான்? நீலாவிற்கு அவள் தோழி மூலம் பணம் கட்டும் பிரச்சினை தீர்க்க அன்னை அழைப்பு விடுத்ததை ஏற்றுச் சென்றாள். பிரார்த்தித்தாள். உடனே பிரார்த்தனை பலித்து பணம் கிடைத்தது. நன்றியுணர்வால் மேலும் தியானமையம் சென்றாள்.நம்பிக்கையின் மூலம் தாம் செயல்படப்போவதை அன்றைய சிறப்புப் பேச்சின் வாயிலாக அன்னை சூட்சுமமாக அறிவித்தார்.நீலாவிற்குச் சூட்சுமம் புரியவில்லையெனினும் அன்னையின் சக்தி மீது அபாரப் பற்று நேர்ந்தது. நம்பிக்கையைக் கபாலியின் நன்மைக்குப் பயன்படுத்த ஆசைப்பட்டாள். உடன் பிறவாதவன், யாருக்கும் பிடிபடாதவன், எல்லோரின் வெறுப்பிற்கும், சாபத்திற்கும் ஆளாகின்றவன், ஆனால் இவளுக்குத் தக்க சமயத்தில் (அப்பாவின் இறப்பில்) கருணை காட்டியவன். எனவே, அவனை நல்லவனாக்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல், நிறைவேற வாய்ப்பில்லாத ஆவல் நிறைவேற அன்னையை நம்பினாள்.அன்னை வாய்ப்புகளை உற்பத்திச் செய்வார் என்பதைப் பற்றிக் கொண்டாள்.எங்கும் நல்ல இடங்களுக்குச் செல்லாதவன் வரச் சம்மதித்ததே முதல் வெற்றி.

 "அண்ணே எங்கனா சுத்திக்கிணு நிக்காம கரெக்டா வந்துரு அண்ணே'' என்று மீண்டும் வேண்டுதல் விடுத்தாள்."ஆங் கரீட்டா வரேன் போ'' என்றான்.

"வரக்குள்ள ரவுடி கணக்கா வாராமெ வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டு சுத்தமா கோயிலுக்கு வராப்பில வாண்ணே'' என்றாள்.

"என் வேஷத்தையே மாத்துறியே.சரி, சரி போ உனக்காக இன்னிக்கி மட்டும் வரேன்.என்னால எதுனா வம்பு வந்தா நா பொறுப்பல்ல'' என்றான்."ஒண்ணும் வராது.நீ வா' என்று சொல்லிச் சென்றாள்.தங்கைக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற கபாலியின் நல்லெண்ணத்தை அன்னையின் சக்தி இடமாகக் கொண்டு இயங்கியது.

- தொடரும்.

 

*********
"கிரீஸ் கூட போடமாட்டோம்''

பரம்பரை விவசாயி, புதியதாக விவசாயம் ஆரம்பித்தவரை வழியில் சந்தித்தார்.‘ "கையில் என்ன" என்றார். "மோட்டார் பெல்ட்க்கு போடும் கோந்த" என்று பதில் கூறினார். பரம்பரை விவசாயி பெரிய மிராசுதார். பெல்ட்க்கு கோந்து போடுவது பாக்டரி மோட்டாரில் செய்வது வழக்கம். பெல்ட் சுருங்கி மோட்டார் வேகமாக ஓடும்.நிலத்து மோட்டார் கவனிக்கப்படாதது."நீங்கள் புதிசு.இப்படித்தான் ஆரம்பிப்போம். நாளானால் மோட்டாருக்கு கிரீஸ் கூட போடமாட்டோம்'' என்றார் பெரிய விவசாயி.

வயதான அமெரிக்கர் வீட்டிற்கு இந்தியர் ஒருவர் போனார்.கணவன், மனைவி இருவர்.கணவனுக்கு 82 வயது, மனைவி 1 1/2 வயது மூத்தவர், வேலைக்காரரில்லை.6,7 ரூம் உள்ள வசதியான சிறு வீடு." "தரை பளிங்கு போலிருக்கிறது.இந்தியாவில் எங்கும் அப்படிப் பார்க்க முடியாது.தூசி, அழுக்கு என்பதை எங்குமே பார்க்க முடியவில்லை.எப்படி இவ்வளவு மெதுவாக நடக்கும் இவர்கள் இவ்வளவு தூய்மையாக வீட்டை வைத்துக் கொள்கிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது'' என்றார்.அவரை அந்த ஆண்டு அன்பர்கள் 4,5 முறை சந்தித்தனர்.அவரிடம் $600,000 பெறுமான Procter & Gamble Shares இருந்தன.1 வருட முடிவில் அவை $1 மில்லியனானதாக சந்தோஷமாகக் கூறினார்.அவருக்கு தெய்வபக்தி குறிப்பாக இல்லை.அன்னையைப்பற்றி கேள்விப்பட்டதுண்டு.

  • அன்பர் வருகை அருளைக் கொண்டு வந்து, தூய்மை இருப்பதால் பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுத்ததை அந்த அமெரிக்கரோ, அவரைச் சந்திக்கும் அன்பர்களோ அறியவில்லை.
  • "கிரீஸ் கூட போடமாட்டோம்' என்ற பெருமையை விட்டு எப்பொருளையும் சுத்தமாக, பளிங்குபோல் வைத்திருப்போம் என்ற அன்பர்கள் வாழ்வில் அன்னையும், அருளும் தவறாது அதிர்ஷ்டமாகச் செயல்படும்.

*********

 இன்டர்நெட் தரிசனம்

"அன்னையை நேரில் தரிசித்தவர்கள் என்ன பேறு பெற்றிருக்க வேண்டும்?கண்களில் என்ன கருணை.எப்படி பக்தர்களை குனிந்து கவனிக்கிறார்கள்.உடலெல்லாம் சிலிர்க்கிறது.நெஞ்சு பூரிக்கிறது.இந்த கேஸட் கிடைக்க என்ன பாக்கியம் செய்திருப்பேன் நான்.அன்னையின் டிரஸ் காற்றில் அலைவது என்ன அழகு.எனக்கு எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை.அப்பப்பா, ஆயிரம் கோடி நன்றி தெரிவிக்கவேண்டும்.யாருக்கு எனத் தெரியவில்லை''' என்று இன்டர்நெட்டில் அன்னையைத் தரிசித்த பக்தர் நெஞ்சுருகினார்.இந்த அனுபவம் நெஞ்சு விழிப்பானவர்க்கேயுண்டு. அன்னையை அன்று காணாதவர் இன்டர்நெட்டில், கேசட்டில் இன்று காணும்பொழுது எல்லோர்க்கும் இந்த அனுபவம் இருப்பதில்லை.அன்பர்கள் அன்றும், இன்றும் பெற்ற சில அனுபவங்கள்.

  1. ஜீவன் இரண்டாகப் பிளந்து அன்னையை உள்ளே அனுமதித்த அன்பர் பல நாள் பேச்சிழந்து, செயலிழந்து, அசைவிழந்து, அன்னையோடு ஐக்கியமான உணர்வு பெற்றார்.
  2. அன்னையின் அகவுருவங்களைச் சூட்சுமப்பார்வையால் கண்டவர் பலர்.
  3. சற்றுத் தூரத்திலிருக்கும்பொழுது "ஷாக்" அடிப்பது போலிருந்ததால் ஓடி வந்தார் ஒருவர்.
  4. எதையும் உணராது அன்னையின் டிரஸ்ஸை விமர்சனம் செய்தவர் ஒரு பக்தர்.
  5. அன்னை முன் தரையில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தவர் எழுந்திருக்க விருப்பமில்லாமலிருந்தார்.
  6. அன்னைக்கு நமஸ்காரம் செய்ய பிரியமில்லாமல் திரும்ப வருபவர்கள் சிலர்.
  7. நமஸ்காரம் செய்யாமல் தலை வணங்குபவர்கள் பலர்.
  8. தரிசனம் செய்தபின் இனி அன்னையே எல்லாம் என ஊருக்கும் போக மறுத்து இங்கேயே தங்கியவர் பல பேர்.
  9. ஒரு மகானைத் தரிசனம் செய்வதுபோல் செய்தவர்களும் உண்டு.
  10. தரிசித்த நாள் முதலாய் தினமும் தியானத்தில் அக்காட்சியை இன்று வரை பெற்றவர் ஒருவர்.
  11. ஒருவர் உடல் "கரைந்து' ஒளிமயமாயிற்று. 

********



book | by Dr. Radut