Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - 18 வால்யூம்களில் அன்னை பேசியவை வெளிவந்துள்ளன.அன்னை நூற்றாண்டு, 1978க்கு முன் இவையில்லை.இந்நூலை வாங்குபவர் குறைவு. வாங்கினாலும் படிப்பவர் குறைவு.இந்தியாவில் எந்த ஆசிரமப் பரம்பரைக்குமில்லாத வசதி, பாக்கியம், நமக்கிருக்கிறது.அனுபவிப்பவர் எத்தனை பேர்?

தம்பி - படிப்பவர்களில் எத்தனை பேர் நுணுக்கத்தை அறிகின்றனர்?ஏற்கனவே தமிழில் புத்தகங்களில்லை. இப்பொழுது பல வந்துள்ளன.படிப்பவர் குறைவு. வாழ்வில் அடிப்படை மாற்றம் வாராமல் அன்னை நம்மிடம் நிரந்தரமாகத் தங்க மாட்டார்.

அண்ணன் - சாதாரண மக்களுக்குப் புத்தகம் பயன்படாது.ஒரு குடும்பம், ஒரு நண்பர் குழாம் இதுபோல் ஜீவனோடிருந்தால் அதைப் பார்த்துத் தெரிந்து கொள்வார்கள்.அதுபோன்ற Mothers family அன்னை குடும்பமில்லையே.படித்தவர்களே, படித்துப் புரிந்துகொள்வதைவிட, பார்த்துப் புரிந்து கொள்வது அதிகம்.ஆசிரமத்தில் அப்பழக்கங்களை நம்மவர்கள் காண்பதில்லை.சொஸைட்டிக்கு வருபவர்கட்கும் கண்ணில் நல்ல பழக்கங்கள் படுவதில்லை.மனிதர்கள் அன்பர்களாக அன்பாயிருப்பதைவிட வக்ரமாக, கர்வமாகப் பாராமுகமாக, எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் பழகுகிறார்கள்.சண்டை போடுகிறார்கள்.பொருள்கள் திருடு போகிறது. பொறுப்பில்லாமலிருக்கிறார்கள்.வருபவர்கள் இவற்றையே காண்பதால், அன்னையின் சிறப்பை அறிய வழியில்லை.

தம்பி - ஆபீசிலிருப்பவர்களை கண்டித்தும் இது நடக்காது. சம்பளம் வாங்குபவர்கள் கணக்கில் சேரமாட்டார்கள். அன்பர்களைக் கண்டிக்கக் கூடாது.அப்புறம் என் செய்வது?இந்த நிலையில் சமூகத்தின் பழக்கங்கள் வந்து விடுகின்றன.பணக்காரன் முக்யமாகிவிடுகிறான். அது நமக்கு உதவாது. பணக்காரன் முக்யமானால், அன்னை அங்கில்லை.

அண்ணன் - அது மட்டுமன்று.நம் சமூக வாழ்வுக்குரிய குறைகள் ஏராளம்.அவை அன்பர்களிடம் வரக்கூடாது. நம்மிடையேயுள்ள நல்லன ஏராளம்.அதுவே அன்னைக்கு ஒத்து வாராது.பின் எதுதான் ஒத்து வரும்?எப்படிச் சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்கள்!படித்துப் புரிந்து கொள்ளலாம்.அதைப் பலரும் செய்வதில்லை. படிப்பாலும் பல விஷயங்கள் புரிவதில்லை.பார்த்துப் புரிந்து கொள்ள உதாரணமில்லை.நம் வீட்டைப் பார்த்து யாராவது இது அன்பர்கள் வீடு என்பார்களா? படங்கள்தானிருக்கின்றன.வேறெந்த அன்னைக்குரிய சுவடு இங்குள்ளன? இனிமையான சொல், நல்லெண்ணம் நிறைந்த செயல் நம் வீட்டில் காணமுடியுமா?

தம்பி - பல விஷயங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. தவறவிட்டு விடுகிறோம்.அதில் Mother's joy அன்னையின் ஆனந்தம் ஒன்று.வருத்தமாக இருக்கும் பொழுது அன்னையை அழைத்தால் வருத்தம் குறைந்து மறைகிறது.அதுவே போதும் என்றிருந்து விடுகிறோம்.

அண்ணன் - Mother's joy என்பது அதில்லையே.அது வருத்தத்திற்கு எதிரான சந்தோஷம், மனிதனுக்குரியது. அன்னைக்குரியதன்று.வருத்தம் போனபின், வருத்தம் திருவுருமாறி சந்தோஷமாவதே Mother's joy அன்றோ?

தம்பி - நானும் அதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.நாம் வருத்தம் வரும்பொழுது அது போனால் போதும் என நினைக்கிறோம்.தொடர்வதில்லை.எல்லாப் பக்தர்களும் அதை அனுபவித்துள்ளார்கள்.அதுதான் இது என அறிவதில்லை.விபரமும் தெரிவதில்லை.பொருட் படுத்துவதுமில்லை.

அண்ணன் - நம் வீட்டில் அன்னை அறையில் சூழலைப் பார்த்தவர் எத்தனை பேர் அதைப் பாராட்டியுள்ளனர்?அதுபோலிருந்தால் தியானம் நன்றாக இருக்கிறது என்றுதான் நான் நினைப்பது வழக்கம்.ஒரு புண்ணியாத்மாவால் எனக்கு அந்த ஞானம் ஏற்பட்டது.நான் என் பிறந்த நாளைக்கு அன்னையைப் பார்க்கச் சென்றால் கூடவே எதிர் வீட்டு மாமா அந்த நாளில் வருவார்.அது தரிசனமாக இருக்காது. சப் என்றிருக்கும்.சில சமயங்களில் தொந்தரவும் வரும். அவர் பெரியவர் என்பதால் உதறவில்லை.

தம்பி - உங்களுக்கு ஒரு மாமா.மையம் நடத்துபவருக்குப் பல நண்பர்கள்.தரிசனம், தரிசனமாக இருக்காது.ஏதோ கல்யாணத்திற்குப் போவது போலிருக்கும்.

அண்ணன் - எதிர்வீட்டு மாமா தம் சொத்தை அழித்தவர்.அவரை அவர் உறவினர்கள் எவரும் சேர்ப்பதில்லை.அவர்கள் வீட்டிற்குப்போனால், சாப்பிடும்வரை உபசாரம் செய்வார்கள்.சாப்பாடு முடிந்தவுடன் ""வீட்டிற்குப் போய் காரியத்தைக் கவனி.இங்கெல்லாம் வராதே'' என்பார்கள். எவரும் அவரைச் சேர்ப்பதில்லை.நம்மை வந்து தொந்தரவு செய்கிறார்.இதற்கு அன்னை என்பது சாக்கு.

 தம்பி - இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதற்கு மேலே அவருக்கு நல்ல பழக்கம் அதிகம்.மனம் நேர்மாறு.கெட்ட எண்ணம், விஷம்.அவர்களைச் சேர்ந்தவருக்குத் தெரியும் என்பதால் எங்கேயும் வர அனுமதிப்பதில்லை.

அண்ணன் - ஒரு பிறந்த நாளைக்கு நான் அன்னையைத் தரிசிக்க முடியவில்லை என்பதால் எதிர்வீட்டு மாமா ஊருக்குப் போய்விட்டார்.நான் நம் வீட்டிலேயே நாள் முழுவதும் தியானம் செய்தேன்.அன்னையின் தங்கமயமான ஜோதியைக் கண்டேன்.அன்னையை நேரில் தரிசித்தபொழுது கூட நான் அதைக் கண்டதில்லை. இது மாமா கொடுத்த பரிசு.இதனால் அன்னையைத் தரிசிப்பதைவிட நம் வீடே உயர்ந்தது என்று கூற முடியுமா?இதிலுள்ள உண்மையை நாம் காண முடிகிறதா?கண்டால் பாராட்ட முடியுமா?

தம்பி - உங்களுக்கு ஒரு மாமா தொந்தரவு செய்தார்.இந்த மையம் நடத்துபவருக்கு இதேபோல் தொந்தரவு வந்து ஆசிரமமே போகமுடியவில்லை.அவர் துர்அதிர்ஷ்டம், அவரிடம் பலரும் பழக ஆரம்பித்தனர்.இவருக்கு முதலில் புரியவில்லை.அன்னையோடு நெருங்கியவர் இவரிடம் பழக ஆரம்பித்ததைப் பேர் அதிர்ஷ்டமாகக் கொண்டார்.ஆனால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது.அவர்களில் பலர் வீட்டிற்குச் சாப்பாட்டிற்கு அழைத்தனர்.இவரால் எங்கும் போக முடியவில்லை. எவர் வீட்டிலும் சாப்பிட முடியவில்லை.இவர்களில் யாருக்கும் அன்னை மீது நம்பிக்கையில்லை எனத் தெரிந்து மனவேதனைப் பட்டார்.இவர்கள் அன்னையை ஸ்தாபனத் தலைவராகப் பேசுகிறார்களே தவிர, நமக்கெல்லாம் உள்ள நம்பிக்கையுமில்லை.யாருக்குமே அன்னை அனுபவமில்லை.பிரார்த்தனை பலித்தது என்பதே இவர்களுக்கு குறைவு, இல்லை எனலாம்.எவர் முகத்திலும் களையில்லை.சிலர் முகம் கோரமாக இருக்கிறது.

அண்ணன் - மைய நிர்வாகி ஏன் இவர்களை நாடுகிறார்?அது அவசியமில்லையே.சமாதிக்குப் போய் வர வேண்டியதுதானே?

தம்பி - அதுதான் இவரால் முடியவில்லை.இவர்கள் தொடர்பை இவர் விட்டாலும், அவர்கள் விடுவதாயில்லை.ஒரு நாள் வீட்டில் தியானம் செய்யும் பொழுது சமாதி தெரிந்தது.சமாதியைச் சுற்றிக் கோர உருவங்கள் வலம் வருகின்றன.இவர் பயந்து போய்விட்டார்.இவரைத் தாக்குகின்றன.இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்? எப்படி நாம் செயல்படுவது என்று தெரியாமல் தவித்தார்.

அண்ணன் - எனக்கும் அந்த அனுபவமுண்டு.மாமா உடன் வரும் பொழுது - அவர் ஒரு நாள் தவறாமல் என்னோடு வருவார் - சமாதிக்குப் போனால் மயக்கம் வருகிறது. அப்படியானால் சமாதி மயக்கம் தருகிறதா? புரியவில்லையே.

தம்பி - எனக்கு இவையெல்லாம் தெரியாதே.அப்புறம் என்ன செய்தீர்கள்?

அண்ணன் - மயக்கம் மாமாவிடமிருந்துதான் வருகிறது என்று எனக்குப் புரிய நாளாயிற்று.புரிந்தபின் மாமா என்னை விட்டுப்போகப் பிரார்த்தனை செய்தேன், போய்விட்டார்.

தம்பி - ஏன் மாமாவிடமிருந்து மயக்கம் வருகிறது?

அண்ணன் - நான் சமாதிக்குப் போவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்தக் கெட்ட எண்ணம் எனக்கு மயக்கமாக வருகிறது.

தம்பி - மைய நிர்வாகியால் அது முடியவில்லை.சமாதியை சுற்றி இவரை எதிர்பார்த்து பலரிருக்கிறார்கள். அவர்கள் தியானத்தில் கருப்பாகத் தெரிகிறார்கள். இந்த ஆராய்ச்சி எல்லாம் நமக்கெதற்கு?என்று அவர் சமாதிக்குப் போவதில்லை.

அண்ணன் - ஸ்தாபனம் வேறு, அன்னை வேறல்லவா?பெரிய லட்சியங்களை நிலைநிறுத்த ஏற்பட்ட ஸ்தாபனங்கள் - மதம், அரசியல் கட்சி - லட்சியத்திற்கு எதிராகப் போவது சரித்திரம்!எல்லா மதஸ்தாபனங்களும் அதுபோல் உலகில் கறுப்பு சக்திகட்கிரையாயின என அன்னை கூறுகிறார்.அதுவே இங்கும் நடந்தால், நமக்கு ஸ்தாபனத்தோடு தொடர்பு கொள்ள முடியாது.நமக்கு அன்னை வேண்டும்.அன்னையைப் பெற ஆசிரமம் செல்வது சரி.ஏதாவது காரணத்தால் அங்கு போக நமக்குத் தடையாக இருக்கிறது என்றால் அன்னையை வீட்டிலிருந்தே வழிபடுவோம்.இந்தக் கறுப்பு சக்திகளுக்கு நாம் பலியாகக் கூடாது. அன்னை அருளாகும்.சுற்றியுள்ள கறுப்பு ஆபத்து, அன்னையை வீட்டிலிருந்தே வழிபடுவோம் என்பதே என் முடிவு.

தம்பி - நமக்கு நேர் எதிரிகளையும், அன்னைக்குத் துரோகம் செய்தவர்களையும், அன்னைமீது நம்பிக்கையில்லாத வரையும், முகம் பேயறைந்தது போலுள்ளவரையும் காண்பது ஆபத்து.எக்காரணத்திற்காகவும் அவர்கள் பார்வையில் படுவது ஆபத்து.தவிர்க்க வேண்டும்.

- தொடரும்.

********



book | by Dr. Radut