Skip to Content

அஜெண்டா

Vol I p.79. The descending Supermind can be known only by those who have the Supramental Consciousness

சத்திய ஜீவியம் புவியில் இறங்குவதை ஏற்கனவே சத்தியஜீவியத்தை ஓரளவு பெற்றவர்களாலேயே உணரமுடியும்.

இறைவன் என்பது சச்சிதானந்தத்தைக் கடந்த பிரம்மம். நிர்விகல்பசமாதியில் இதை ரிஷிகள் அடைந்துள்ளனர். மனம் என்னும் கருவியால் இதை எட்டும்பொழுது இது க்ஷர பிரம்மமாகவோ, அக்ஷர பிரம்மாகவோ தெரியும். பக்தியால் அணுகினால், புருஷனாகவோ, புருஷோத்தமனாகவோ காட்சியளிக்கும். ஸ்ரீ அரவிந்தர் விவேகாநந்தர் காண்பித்த சத்தியஜீவியத்தை எட்டினார். அத்துடன் அது புவியில் வந்து மனிதனைத் தெய்வமாக்கும் எனவும் அறிந்தார். அவருடைய யோக முயற்சியால் 1956இல் அச்சக்தியை புவிக்குக் கொணர்ந்தார். இந்த யோகத்தை மேற்கொண்டவர்க்கு அல்லது பிறவியில் அம்சம் உள்ளவர்க்கு சத்தியஜீவியம் சிறிது இருக்கலாம். அப்படியுள்ளவர் 1956இல் வந்த சத்தியஜீவியத்தை அறிவர். அப்படி 3 பேர் உலகில் உணர்ந்தனர் என்றார் அன்னை.

இன்றுவரை சத்திய ஜீவியசக்தி உலகில் வந்துள்ளதை நம்மால் உணரமுடியவில்லை. 4 ஆண்டுக்கு ஒருமுறை Feb. 29இல் அதன் நிறைவு விழா வரும்பொழுதும் நமக்கு அது தெரியவில்லை எனில், நம்முள் அச்சக்தி சிறிதுமில்லை என்று பொருள்.

பெரிய பாடகர் கச்சேரி செய்தால் பாட்டுத் தெரிந்தவர்களாலேயே அதை ரசிக்க முடியும். தெரியாதவர்க்கு ஏதோ பாடுகிறார் எனத் தெரியும். நாம் வெளிநாட்டுக்குப் போனால், அவர்கள் கேலியாகப் பேசும் நேரம் அனைவரும் சிரித்தால், நமக்கு அந்த ஹாஸ்யம் புரியாது. சிரிப்பு வாராது அவர்கள் ஊர் விஷயம் தெரிந்தவர்க்குத்தான் அது புரியும்.

கிரிக்கெட் என்ற விளையாட்டை முதன் முறையாகப் பார்ப்பவர்க்கு எதுவும் தெரியாது. எல்லோரும் ஆரவாரம் செய்வது ஏன் என விளங்காது.

நமக்கு சத்திய ஜீவியத்தால் வரும் பலன் தெரியும். சத்திய ஜீவியம் தெரியாது. பார்லிமெண்ட்டில் காரசாரமான விவாதம் படிக்காதவனுக்குப் புரியாது. அதன் முடிவாக அவன் பெறும் பலன் விளங்கும்.

நம் நாட்டுக் கோயில்களில் உள்ள சிற்பங்களை வெளிநாட்டார் கண்டு வியந்து, ரசிப்பதுபோல் நம்மால் உணர முடியவில்லை. அது நம் நாட்டுச் சிறப்பு என்றாலும், கலை, சிற்பம் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கே அது புரியும்.

எந்தத் திறமை, பக்குவம் ஒருவரிடம் உள்ளதோ, அதை அவர் பிறரிடம் கண்டால் ரசிக்க முடியும். எதை ரசிக்கிறாரோ, அது அவரிடம் இருக்கும். நம்மால் ஒரு இலட்சியத்தை ஏற்றுப் பாராட்ட முடியுமானால், நாம் அதுவாக ஆகலாம் என்ற கீதையின் வாக்கில் உள்ள தத்துவம் இது.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

புரியாதவரையில் மனிதனுக்குப் பிரச்சினையுண்டு. புரிந்தால் பிரச்சினையிருப்பதில்லை. புரியாதவரையில் பிரச்சினையாக இருந்தது, புரிந்தவுடன் பிரச்சினையாக இருப்பதில்லை. பார்வை மாறினால் பிரச்சினை கரைகிறது.

மாறிய பார்வை, கரையும் பிரச்சினை.

********



book | by Dr. Radut