Skip to Content

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

614) மனத்தைப் பிடித்து உலுக்கும் எண்ணத்தை (pre occupation) விடாமல், ஒருநிலைப்படுதல், சமர்ப்பணம், சரணாகதி, ஆர்வம் ஆகியவை நிரந்தரமாக நிற்கா.நாமே உவந்து அவற்றை விடுவது கடினம்.உயர்ந்த எண்ணத்தை ஏற்று, அங்கு மனம் நிலைத்தால், உலுக்கும் பேயின் ஆட்டம் குறையும்.

எழுத்தாளர்கள் எழுதும் உற்சாகத்திற்காகக் காத்திருப்பார்கள். அனுபவசாலிகள் எழுத ஆரம்பித்தால் உற்சாகம் வரும் என்பார்கள். உற்சாகம் எழுந்து பிறகு எழுதுவதே நாம் அறியக்கூடியது.ஆனால் எழுத ஆரம்பித்தபின், ஓரிரு பக்கங்கள் எழுதியவுடன் உற்சாகம் வருவதுண்டு. இதுபோன்ற இயற்கை அமைப்புண்டு.பல வருஷங்களாகப் பிரிந்துள்ள நண்பர்கள், கணவன், மனைவி எதிரிகளாக நினைத்தாலும் பழக ஆரம்பித்தபின் துவேஷம் மறைந்து, பழைய பிரியம் எழுவதுண்டு.பள்ளியை முடித்தபின் காலேஜில் சேர்ப்பார்கள்.முடிக்காமல் சேர்க்கமாட்டார்கள்.மனம் உலுக்கப்படுவதை நிறுத்தாமல், யோக அம்சங்களான சரணாகதி போன்றவை நிலைக்காது என்பது உண்மை.பள்ளியை முடித்து கல்லூரிக்கு வருவதுபோல் சட்டத்தைத் திட்டவட்டமாகப் போட்டால், எல்லையைக் கடந்து வரும் திறமையுள்ள பலருக்கு இது தடையாக அமையும்.உலுக்கும் எண்ணத்தை விலக்க முயன்றால், விலக்க முடியாது எனத் தெரியும்.சில சமயங்களில் அது வலுப்படும்.எனவே உலுக்கும் எண்ணத்தை சற்றுப் புறக்கணித்து உயர்ந்ததை ஏற்று அதனுடன் நெருங்கி வந்தால், உலுக்கும் எண்ணம் வலுவிழந்து மறைவதைக் காணலாம்.இதுபோல் எல்லைக்கோட்டைத் தாண்டுதல் முடியும்.

குளத்தில் அடிமட்டத்தில் சேறுள்ளது.நீர்மட்டம் உயர்ந்தால் நீர் தெளிவாக இருக்கும்.அதனால் சேறு போய்விட்டது என்று பொருளன்று. நம்மை உலுக்கும் எண்ணங்கள் யோகசித்தி அளவுகடந்து முதிர்ந்து கனிந்த பிறகும் அடியில் குளத்துச் சேறுபோல் இருக்கும்.பூரணயோகம் திருவுருமாற்றத்தை நாடுவது.முதலில் மனமும், பிறகு உணர்வும், முடிவில் உடலும் திருவுருமாற்றம் அடைய வேண்டும்.இங்கு நாம்

பேசுவது திருவுருமாற்றமில்லை.அதற்கு ஆரம்ப நிலையான ஆர்வம், சரணாகதி, சமர்ப்பணம் ஆகியவை.மனத்தை நிலைப்படுத்தி ஒரு சில யோக அம்சங்களைப் பெறுதல் முதல் நிலை.அதனால், உலுக்குவதைப் புறக்கணித்து, சமர்ப்பணத்தை நாடுதல் பெரும் பலனைத் தரும்.அடுத்த நிலையில் மனம் திருவுருமாற்றமடைய இதே முறை பலன் தரும் எனினும், இந்த அளவு பலன் இருக்காது.அடுத்தாற்போல் உணர்ச்சி திருவுருமாற்றமடையும்பொழுது பலன் மேலும் குறைவாக இருக்கும். அன்னை, இவையிரண்டும் எüயவை என்கிறார்.முடிவான உடல் திருவுருமாற்றத்தில் இம்முறை எதிரான பலன் தரும்.ஏனெனில் உடலே சேறு.சேற்றை விலக்கி, மனத்தில் திருவுருமாற்றத்தை நாடினோம். உடலில் சேற்றையே திருவுருமாற்றம் செய்ய வேண்டும்.

கொலை, கொள்ளை, நடந்ததைப்பற்றிப் படிக்கும்பொழுது மனம் அருவெறுப்பு அடைகிறது.நம்மூரில், நம் குலத்தினரைக் கொலை செய்த விவரத்தைப் படித்தால், மனம் சலனமற்றுக் கேட்டுக்கொண்டிருந்தால், மனம் திருவுருமாற்றமடைந்ததாகப் பொருள். உடலில் ஊசியால் குத்தினால், தேள் கொட்டினால், வலி தெரியாமல், வலிக்குப் பதிலாக ஆனந்தம் எழுந்தால் உடல் திருவுருமாற்ற மடைந்ததாகும்.

நாமிருப்பது முதல் நிலையின் முதற்படி.இங்குச் சில உபாயங்களைப் பயன்தரும் வகையில் பின்பற்றலாம்.யோக வாழ்வை மேற்கொள்ள இந்த உபாயமும், இதுபோன்ற எந்த உபாயமும் அதிகப் பலன் தரும்.யோகத்தை மேற்கொண்டால் பலன் குறையும்.யோகம் முதிர்வதால், உபாயங்கள் பயன் தாரா.தடையாகவுமிருக்கும்.அந்நிலையில் நமக்கு ஒன்றே ஒன்றுதான் உதவும், அது sincerity உண்மை என்கிறார் அன்னை.

***********

615) இறைவனின் செயலை ஸ்பர்சிக்கும் உணர்வு நன்றியறிதலாகும்.

கண் ஒளியை ஸ்பர்சிப்பது பார்வை.பிறர் குரல் ஒலியாகக் காதில் விழுவது காது பிறரைக் கண்டு கொள்வதாகும்.வெளியில் உதவியிருப்பதையோ, ஆபத்திலிருப்பதையோ மனம் கண்டுகொள்வது அறிவு எனப்படும்.உலகமே இறைவன்.உலகில் இருப்பவை அனைத்தும் இறைவன்.அசைவெல்லாம் அவன்.அணுவெல்லாம் அவன் என மனம் அறிகிறது.ஆனால் நிதர்சனமாக இல்லை.ஆன்மாவுக்கே அது நிதர்சனமாக இருக்கும்.ஆன்மவிழிப்புற்று - சைத்தியப்புருஷன் வெளிவந்து - இறைவனை அவன் செயல்களில் காணும்பொழுது இறைவனின் ஸ்பர்சத்தை உணர்கிறது.அந்நேரம் கருணை உள்ளே எழுகிறது.அவ்வுணர்வை நன்றியறிதல் என நாம் அறிகிறோம்.

ஓர் ஊரில் ஒரு பள்ளி  சிறப்பான ரிஸல்ட் கொண்டுவந்தால் அது மாணவர்கட்குச் செய்யும் சேவை.அது அனைவருக்கும் தெரிந்தது.எவரும் அதற்காகப் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியுடையவராக இருப்பதில்லை.அப்பள்ளியைப்பற்றிப் பேச நேர்ந்தால் நல்ல அபிப்பிராயம் சொல்வார்கள்.சமூகத்தில் நமக்கு கடை, வக்கீல், காய்கறித்தோட்டம், முனிசிபாலிட்டி, பள்ளி , போலீஸ் ஸ்டேஷன் மற்ற ஊர்களிலில்லாத நல்ல சேவையைச் செய்வதுண்டு. அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என நமக்குத் தோன்றுவதில்லை. நல்ல கடையோ, கெட்ட கடையோ, கடை வீதி மக்களுக்குச் செய்யும் சேவை பெரியது.ஒரு நாள் கடையில்லை எனில் சிரமம்.சிறப்பான இடங்களுக்கே நன்றி சொல்லத் தோன்றாதபொழுது, கடை வீதிக்கும், ரோடுக்கும் நன்றி சொல்லவேண்டும் என்ற கருத்தே வியப்பாக இருக்கும்.கடை வீதியில்லாத குக்கிராமம், ரோடில்லாத ஊர், நல்ல பள்ளிகளில்லாத டவுன், திறமையான வக்கீல் இல்லாத கோர்ட், போலீஸ் ஸ்டேஷனில்லாத இடத்தில் அவை தேவைப்படும் நேரம், அவற்றின் அருமை தெரியும்.இருந்தால் அவற்றைப் போற்றுவதில்லை.

கண்ணுக்கு நேராகத் தெரியும் சமூகஸ்தாபனங்களை நாம் பொருட்படுத்துவதில்லை.நகரத்திலிருந்து ஒருவர் கொஞ்சநாள் கிராமத்தில் தங்கியிருக்கும்பொழுது, கிராமப்பஞ்சாயத்துக் கூடி ஒரு குடும்பப்பாகப் பிரிவினையில் அண்ணனுக்கு 8 காணியும், தம்பிக்கு 11 காணியும் கொடுக்க அநியாயமாகத் தீர்ப்பளிக்கிறார்கள்.தம்பியால் அதை மீற முடியவில்லை என்றபொழுது நகரப்புறத்தில் இது நடக்காது.அது நாகரீகம் உள்ள இடம்.அதர்மம் நடக்காது என அறிகிறோம்.நாகரீகமான இடங்களில் பொதுவான பாதுகாப்பு எந்த அளவு இருக்கிறது எனத் தெரிய நாகரீகமில்லாத இடங்களில் வசித்தால் தெரியும்.தமிழ்க் குடும்பம் பீகாரிலிருந்தபொழுது, அக்குடும்பப் பெண்ணை ஒருத்தி வந்து வேலை கொடுப்பதாக அழைத்துப்போய் விபசார விடுதியில் சேர்த்ததைப் போலீஸில் சொன்னால், "இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடு. தொடர்ந்தால் உன் உயிருக்கு ஆபத்து'' என்று போலீஸ் சொல்லவே அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஓடி வந்துவிட்டார்கள்.நம்மூர் போலீஸ் ஆதரவு அளித்து ஊருக்குப் போகப் பணம் கொடுத்தது.வெளியூர் போனால் உள்ளூர் அருமை தெரிகிறது.சமூகம் மனிதனுக்கு அளிக்கும் ஆதரவு, பாதுகாப்பு வெள்ளிடை மலையாக உள்ளது.நாம் அதை அறிவதில்லை. அறிந்தால் நன்றி சொல்வதில்லை.

"நீ இன்று வாழ்வில் உயர்ந்துவிட்டால், ஏதோ ஒரு காலத்தில் உனக்கு உதவியவரை நினைவுபடுத்திக் கொள்'' என்ற சொல்லை Lions club இல் பிரபலப்படுத்தினார்கள்.குடும்பம் செய்தது ஆயிரம் உதவிகள்.நண்பர்களும், உறவினர்களும், ஊராரும் அன்றாடம் உதவிகளைச் செய்தபடியிருக்கிறார்கள் என்பதை நாம் உணருவதில்லை. பிறர் வாழ்வில் நாம் எப்படிப் பங்கு கொள்கிறோம் என்றறிந்தால், அதன் மூலம் நம் வாழ்வில் தினமும் எத்தனை ஆதரவுகள் வருகின்றன என்றறியமுடியும்.இவற்றையெல்லாம் காணும் தெளிவு நமக்கிருப்பதில்லை.

இறைவன் செயலை அறிவதும், காண்பதும், அதனால் தீண்டப்படுவதும் மனிதனுக்கில்லை, ஆன்மாவுக்குண்டு.அதுவே நன்றியறிதலுக்கு விளக்கம் என்கிறார் அன்னை.

*********

616) புதுமை பொங்கி உணர்வைக் கடந்தால், நிறைவு ஏற்படும்.வெளியிலிருந்து அது வந்தால் தற்காலிகமாகவும், உள்ளிருந்து எழுந்தால் நிரந்தரமாகவுமிருக்கும்.

 மனிதனுக்குரிய நிலைகள் பல.பொதுவாக நாம் நன்றாக இருக் கிறோம் (நல்லா இருக்கேன்), நன்றாக இல்லை, எதுவும் சரியில்லை, சுறுசுறுப்பாக இருக்கிறது, எல்லாம் நன்றாக இருக்கிறது இப்படியே இருந்தால் தேவலை, ஏதோ இருக்கிறேன், பிரச்சினை என்று ஒன்றும் இல்லை ஆனால் சுரத்தில்லை, நல்ல காலம் வரும் போலிருக்கு, நல்ல காலம் நமக்கும் வந்துவிட்டது, அதிர்ஷ்டமே வந்துவிட்டது, சப்பென்றிருக்கிறது, ஒரே எரிச்சலா இருக்கிறது, விரக்தியாக இருக்கிறது, ஏன் பொழுது விடிகிறது என்றிருக்கிறது, நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பன போன்ற மனநிலைகளை நாம் அறிவோம்.விளக்காமல் தெüவாகும் நிலைகள் இவை.

அவசியமான தேவைகள் (உணவு, உடை, வீடு, செலவுக்குப் பணம்) உள்ள நிலையொன்று, இல்லாத நிலை மற்றொன்று.தேவைகளைப் பெறும் திறமையிருந்து தேவை பூர்த்தியாவது, அத்திறமையின்றி வேறு வசதிகளை நம்பி அவை பூர்த்தியாவது; தேவையில் பிரச்சினையில்லாமல் பிரியம் உள்ள நிலை, இல்லாத நிலைகள் அடுத்தவை; தேவையும், பிரியமும் குறைவில்லாமல், நம் திறமை, அறிவால் செய்வது கூடிவருவதால் வெற்றிபெறும் நிலை, அவை குறைந்து கூடிவாராத நிலை; தேவை, பிரியம், திறமை, அறிவு இருந்து பிறர் நம்மை ஏற்கும் நிலை, போற்றும் நிலை, அவையிருந்தும் பிறர் ஏற்காத நிலை, போற்றாத நிலை; அடிப்படைத் தேவையில் ஆரம்பித்து பிறர் போற்றும் நிலைவரை இருப்பதும், இல்லாததும் கலந்த பல்வேறு நிலைகளில் மனிதனிருப்பதை முதலில் சொன்ன வழக்குச் சொற்களால் நாம் குறிப்பிடுகிறோம்.

தேவை உடலுக்கும், திறமை அதன் வெளிப்பாடாகவும்; பிரியம் உணர்வுக்கும்; பிறர் ஏற்பது சமூக உணர்வுக்கும் உரியவை.மனமும், அறிவும் இவற்றைக் கடந்தவை.அதை நாடுபவர்களும், அது உள்ளவர்களும் மிகக் குறைவு.

புதுமை என்பது உடல், உணர்வு, சமூகம், மனம், ஆன்மா ஆகிய எல்லா நிலைகளுக்கும் உரியது.இவ்வளவு நாள் நாம் அறிந்தது போக, புதியதாக எழுவது புதுமை.புதுமை எழுந்தால் புது உணர்வு ஏற்படும்.புது உணர்வு புதிய தெம்பை அளிக்கும்.வெளி நிகழ்ச்சியோ, உள்ளுணர்வோ இதை ஏற்படுத்த முடியும்.புது தெம்பு அதிக அளவில் எழுந்து உணர்வை மீறிய நிலையில் நிறைவைக் காண்கிறோம்.

தினமும் 3 மைல் நடந்து பள்ளிக்குப் போகும் பையனுக்கு, சைக்கிள் உடல் அளவில் நிறைவைத் தரும்.சிறிய தாயார் வீட்டில் பல வருஷம் அன்பில்லாத சூழ்நிலையில் வளர்ந்த பிள்ளை தாய் வீட்டிற்கு வந்தபொழுது உணர்வில் நிறைவு ஏற்படும்.கம்பனி பல வருஷமாக நஷ்டத்திலிருந்து, புதுச் சௌகரியத்தால் இலாபம் கண்டால்; மானேஜ்மெண்ட் நம் திறமையைப் பாராட்டினால்; கணவன் தன்னைப் பிரிந்திருந்த காலத்து வாடிவிட்டான் என்று மனைவி புரிந்துகொண்டால் உணர்வில் புதிய நிலை ஏற்பட்டு நிறைவு எழும்.பத்து வருஷமாகத் தனக்குப் புரியாத பாடத்தை M.A. வகுப்பில் நடத்திச் சமாளிப்பவருக்கு அது புரிந்தால் மனநிறைவு ஏற்படும்.ஏற்படும் புது நிலை அளவு கடந்திருந்தால், உணர்வு எழுவதற்குப் பதிலாகப் பொங்கி எழும்.பொங்கி எழுந்தால் ஏற்படுவது நிறைவு.பிறரை நம்பிய சூழ்நிலையிலிருந்து வருவது தற்காலிகம்.நமக்கே உள்ளே திறமை, தெளிவு ஏற்பட்டு அதனால் ஏற்படும் நிறைவு நிரந்தரமானது.

************

617) வெளியிலிருந்து ஒரு நிகழ்ச்சி மூலம் வரும். உள்ளிருந்து வரும்பொழுது ஓர் இலட்சியம், அல்லது தெய்வீக ஆர்வத்தி-ருந்து வரும் (Refer 627)

புற நிகழ்ச்சி, உள்ளுறை இலட்சியம் நிறைவு தரும்.

இந்த course படிப்பை மாற்றப்போவதால், பரீட்சை எழுதியவர்க்கெல்லாம் பாஸ் போட்டுவிட்டார்கள்.சர்க்கார் கண்ட்ரோல் வந்துவிட்டதால் நம் சரக்குக்குக் கிராக்கி வந்துவிட்டது; பெரிய இடத்துப் பெண் நம் பிள்ளையை விரும்புவதால் நம் நிலை உயருகிறது; உள்ளூருக்குக் காலேஜ் வருவதால் மகன் படிப்புக்குச் செலவில்லை என்பவை வெளி நிகழ்ச்சி மூலம் வரும் சௌகரியம்.சௌகரியத்தை அனுபவித்து அதனால் புது உணர்வு பொங்கி நிறைவு வந்தாலும், மனதில் நம்மைப்பற்றி நமக்குள்ள அபிப்பிராயம் உயர வழியில்லை என்பதால், இந்த நிறைவு நாளடைவில் கரைந்துவிடும்.

குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞன், கொள்கைக்காக உயிரைக் கொடுக்கும் தொண்டன், கணவனுடைய திருப்திக்காக வாழும் மனைவி, ஒரு ஸ்தாபனத்தை நிறுவும் முயற்சியை மேற்கொண்ட சேவை, தியானத்தை நாடும் ஆர்வம், மௌனத்தை விழையும் மனம், அன்னைக்குச் சேவை செய்ய எழும் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் உற்சாகம் போன்றவை உள்ளிருந்து எழுபவை. உள்ளிருந்து எழும் ஆர்வம் தரும் நிறைவு நிரந்தரமானது.

தாமிறக்கும் தருணத்தில் "வாழ்நாள் முழுவதும் ஒரு இலட்சியத்திற்காகச் செலவிட்டேன் என்ற நிறைவு எனக்குண்டு'' என்று லெனின் கூறினார்.தம்மைச் சுட்ட எதிரியையும் தண்டிக்க வேண்டாம் என மகாத்மா காந்தி சொன்னபொழுது, கடைசி மூச்சுள்ளவரை தம் கொள்கையைப் பின்பற்றிய நிறைவை அவர் வெளிப்படுத்தினார்.

லெனினுக்கும், மகாத்மாவுக்கு மட்டும் உள்ளதன்று இந்நிறைவு. என்னைக் கொடுமைப்படுத்திய மாற்றாந்தாய்க்கு, வேலைக்குப் போனவுடன் முதற்காரியமாகப் பெரிய நகை செய்து கொடுத்தேன், அவருடைய பிள்ளைகளைப் படிக்க வைத்தேன் என்பவர், "நான் என் கடமைகளைத் தகப்பனாருக்கும், தம்பிகளுக்கும் செய்வதற்கு எந்தத் தடையையும் அனுமதிக்கமாட்டேன்' என்ற இலட்சியத்தைக் கொண்டார். அவருக்கும் இம்மனநிறைவு மகாத்மாவுக்கு எற்பட்டதுபோல் ஏற்படும்.

நாமிருக்கும் நிலை நம் நிறைவை நிர்ணயிக்காது.நம் ஆர்வமும், இலட்சியமும் நிறைவை நிர்ணயிக்கும்.உடலெல்லாம் எரியும் மெழுகுவர்த்தியைப் பொறுத்தியபின்னும் இலட்சியத்தை விட்டுக்கொடுக்காதவர், அதுவே தம் வாழ்நாளில் மிகப் பெரிய நிறைவான நேரம் என்றார்.

குழந்தைக்குக் கடமையைச் செய்வதும், பெற்றோர் பொறுப்பைப் பிரியமாக ஏற்பதும், தன் வாழ்விலுள்ள எந்த நிலைமைக்கும் உரிய இலட்சியத்தைச் செலுத்துவதும், ஆழ்ந்த மன நிறைவைக் கொடுக்கும்.அம்மன நிறைவு, புதுத் தெம்பை அளிக்கும், புதுமையை எழுப்பும்.உள்ளம் புதுமையானால், உணர்வு புது மெருகு பெறும்.

சர்க்கார் ஆபீசில் 1 1/4 ரூபாய் கட்டிப் பெற வேண்டிய செய்தியைக் கட்சிக்காரன் நண்பர்மூலம் ரிஜிஸ்டரைப் பார்த்து தெரிந்து கொண்டான்.அதனால் ஆபீசுக்குச் சேரவேண்டிய 1 1/4 ரூபாய் நஷ்டமாகிவிட்டது, அதுவும் தம் ஆபீசில் நடந்தது என்பதால், ஆபீசர் அந்த 1 1/4 ரூபாயைக் கட்டி அந்த விஷயத்தை தம் பெயரில் எடுத்துக் கொண்டார்.ஆயுள் முடியும்வரை இவர் மனத்தின் நேர்மை இவருக்கு இலட்சிய உணர்வையும், புதுமையையும், புத்துணர்வு பொங்கும் நிறைவையும் அளிக்கும்.

**********

618) நிறைவு செறிந்து வளமான உணர்வு தோன்றும்.

பல தலைமுறைகளாகச் செல்வமுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகள் உடல் நலம் நிறைந்திருப்பதுடன், உடலே செழிப்பாக இருக்கும்.இதைச் செல்வச் செழிப்பு என்கிறோம், அதேபோல் பல தலைமுறைகளாக சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் பயின்ற குடும்பங்களில் குழந்தைகள் முகம் பிரகாசமாக இருக்கும்.அதே போல் பரம்பரையான பக்திமான் குடும்பங்களில் குழந்தைகள் முகம் "தளதள'' என உணர்வின் செழிப்பு நிறைந்திருக்கும்.பரம்பரையாக எந்தத் திறமை, வளம், கலை, நுணுக்கம், செல்வம், சங்கீதம், சொத்து, தைரியம், தொழில் நுணுக்கம் நிறைந்திருந்தாலும், அந்தக் குடும்பக் குழந்தைகளின் முகம் அதைக் காட்டும்.

புதுமை, அதனால் எழும் சக்தி, அது உணர்வைக் கடக்கும் நிலையில் நிறைவு என்பது ஒரு நிலை பூர்த்தியாவது.அந்நிறைவு செறிந்து தோன்றும் உணர்வு, விறுவிறுப்பான உணர்வாகவோ, உற்சாகம் நிறைந்த உணர்வாகவோ, வேகம் நிறைந்த உணர்வாகவோ இருக்கா.அது வளம் நிறைந்ததாகும்.வளம் நிறைந்த உணர்வு நிதானமான இனிமையுடையதாகும்.இத்துடன் அந்நிலை முடிகிறது.பிறகு எழும் அடுத்த நிலைக்குரிய கட்டங்களும் -புதுமை, சக்தி, உணர்வைக்கடத்தல், நிறைவு, செறிவு, வளமான உணர்வு - அவையேயாகும்.

வாழ்வின் முன்னேற்றம் உழைப்பில் ஆரம்பிக்கின்றது.அது சிறந்து skill திறனாகிறது.அது உணர்வால் சக்திபெற்று, அறிவால் சிறந்து அறிவை உணர்வு மீண்டும் ஏற்றால் பூர்த்தியாகிறது.

ஒரு தலைமுறையில் உழைத்துப் பெறுவதை அடுத்த தலை முறையில் குழந்தைகட்குப் பெற்றோர் அறிவாகவும், பொருளாகவும் தர முடிகிறது.அதேபோல் ஒரு நிலையிலுள்ளவர் சிரமப்பட்டுப் பெறுவதை அடுத்த நிலையில் சிரமமில்லாமல் பெற முடிகிறது. படிப்பாலும், வாழும் இடத்தாலும், வயதாலும், குடும்பத்தின் நிலையாலும், வாழும் சமூகத்தின் பண்பாலும், அனுபவத்தாலும், நாட்டின் வளம் நிர்ணயிப்பதாலும், நாம் பல்வேறு நிலைகளில் இருக்கிறோம்.படிப்பு அதிகமான குடும்பம், படிக்காத குடும்பம் சிரமமாகச் சாதிப்பதை எளிதாகப் பெறுகிறது.நகரத்திலுள்ளவர் எளிதாக இயல்பாகப் பெறுவதைப் பெற கிராமத்தார் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது.பண்பான குடும்பம் இயல்பாகப் பெறுவதை பண்பில்லாத குடும்பம் இன்றும் இரு தலைமுறைகளுக்குப் பெற முடியாது.நாட்டிலுள்ள நிலைகள் பல.மனிதனுள்ள நிலைகள் பல. அவற்றுள் நாம் ஏதோ ஒரு நிலையிலிருக்கிறோம்.அதிகபட்சம் நம்மால் ஒரு சமயம் ஒரு நிலையைத்தான் தாண்டமுடியும். சமூகத்திலுள்ள சூழ்நிலை உதவியாலும், நம் முயற்சியாலும் அதைச் சிலர் பெற முடிகிறது.பலர் பெற முடிவதில்லை.பெரும்பான்மையோர் முயல்வதில்லை.தாமுள்ள நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போக முடியும் என்று பெரும்பாலோர் நம்புவதில்லை.

அன்னை வாழ்வைக் கடந்த நிலையிலிருப்பவர்.அத்துடன் வாழ்வின் எல்லா நிலைகளையும் தம்முள் சாரமாகக் கொண்டவர். அன்னையை அறிந்து, உணர்ந்து, ஏற்றுக்கொண்டால் நாமுள்ள நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போக முடியும்.அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள தொடர்ந்து முனைந்தால், தொடர்ந்து அடுத்த நிலைக்குப் போய்க் கொண்டேயிருக்கலாம்.

புதுமைபொங்குவதில் ஆரம்பித்து............வளமான உணர்வுவரை உள்ள சங்கிலித்தொடரை அறிந்துகொண்டால், அது நம் வாழ்வில் செயல்படும்படி நடந்தால் மேற்சொன்ன முன்னேற்றம் விரைவாக நடைபெறும்.நாம் செய்ய வேண்டியது புதுமையை நாடுவதேயாகும். நிறைவைத் தேடுவதாகும், அறிந்ததை உணர்வால் ஏற்றுக்கொள்ள முனைவதாகும்.

********

619) ஆன்மாவை வாழ்வில் அறிந்தாலும், வாழ்வை உள்ளே கண்டாலும், அது பரம்பொருள் வெளிப்படும் தருணம். அதுவே ஆன்மீக நிறைவு. வாழ்வில் காணும் பரமனும் உள்ளே தெரியும் வாழ்வும் பரமனே.

மனம் இரு பகுதிகளாக உள்ளது.நாம் மனம் என அறிவது மேல் மனம்.மேல் மனம் வாழ்வுக்குரியது.முழு வாழ்வும் இதனுள் அடங்கியது. நாம் நினைப்பது, கேட்பது, பார்ப்பது, அனைத்தும் மேல் மனத்தைச் சார்ந்தன.இறைவன் இதனுள் வருவதில்லை.உள்மனம் என ஒன்றுண்டு. இதன் பகுதிகள் பல.இது பரந்து விரிந்தது.நாம் ஒரு கட்டத்திலிருந்தால் ஆயிரம் ஒலியில் சிலவற்றைக் கேட்கிறோம்.உள்மனம் அந்த ஆயிரம் ஒலியையும் கேட்கும்.பதிவு செய்து கொள்ளும்.தேவைப்பட்ட நேரத்தில் அது மேலே வரும்.இது யோகத்தால் விடுபட்டால், பிரபஞ்சம் முழுவதும் பரவக்கூடியது.இறைவனை மேல் மனத்தில் சாதாரண மனிதன் காணமுடியாது.தவத்தாலும், யோகத்தாலும் இறைவனைக் காணும்பொழுது, ஆன்மாவைக் காணும்பொழுது, நாம் உள்மனத்திலேயே காண்கிறோம்.

பூரணயோகம், அனைத்தையும் பூரணப்படுத்த முனையும். பூரணயோகத்திற்கு மேலேயும், உள்ளேயும், இறைவனையும், வாழ்வையும் காணவேண்டும்.உள்ளே போனால் நிஷ்டை, தவம், சமாதி என்பதால் புலன்கள் அவிந்து வாழ்வைக் காணமுடியாது.வாழ்வும், வாழ்வுக்குரிய எண்ணங்களும், செயல்களும் உள்மனத்தில் காணமுடியாது.

மேல் மனம் இறைவனுக்கில்லை, உள்மனம் வாழ்வுக்கில்லை என்பது மனிதநிலை.மேல் மனத்திலும், உள்மனத்திலும் இறைவனைக்கண்டு, அதேபோல் இரு இடங்களிலும் வாழ்வைக் கண்டால் பூரண யோக நிபந்தனை பூர்த்தியாகிறது.

இதன் ஒரு பகுதியை மேலே குறிக்கின்றேன்.அதுவே பரம்பொருள் வெளிப்படும் தருணமாகும்.அது ஆன்மீக நிறைவைத் தரும்.

உடல் ஜடமானது.அதற்குத் தொட்டுப் பார்த்தால்தான் புரியும். புலன்கள் ஓரளவு சூட்சுமமானவை.தூரத்திலிருந்து வரும் வாசனை, உள்ள காட்சி, எழும் சத்தம் ஆகியவை புலன்களுக்கு உணரமுடியும். மனம் முழுவதும் சூட்சுமமானது.அதனால் எங்கும் சஞ்சாரம் செய்யமுடியும்.மேகமண்டலத்தையும் எட்டமுடியும்.ஆன்மா பிரம்மம். அது சிருஷ்டி முழுவதும் பரவும்.உடல் நிறைவுபெற, செயல் பூர்த்தியாக வேண்டும்.புலன்கள் நிறைவுபெற, கண்டு, கேட்டு நிறைய வேண்டும்.மனம் நிறைய எண்ணம் சிறக்க வேண்டும்.ஆன்மா நிறைவுபெற, ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் ஒரு க்ஷணம் பரவவேண்டும்.அந்த நேரம் நாம் இறைவனை மின்னலாகத் தரிசனம் செய்கிறோம்.பெரிய கவிகளுக்கு இந்த ஆண்டவன் தரிசனம் கிடைத்த பின்னரே புது வாழ்வு ஏற்பட்டு, பேரிலக்கியம் சிருஷ்டிக்கின்றார்கள்.

எழுத்தாளர், கவி, பாடகி, விளையாட்டு வீரன், அரசியல்தலைவன், கற்புக்கரசி என எந்தத் துறையிலும் சிறந்தவர், இந்த இறைத் தரிசனம் கண்டால் அவர் சிருஷ்டிகர்த்தாவாகி, பேரிலக்கியம், பெரிய சாம்ராஜ்யம், நிறுவுவார்கள்."கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா''' எனக் கேட்ட கற்புக்கரசிக்கு, வந்த பிரம்மச்சாரியின் கோபம், அவர் வாழ்வில் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் காண்பித்தது.உள்மனம் பரந்து விரிந்தது.கடந்த காலத்தையும் தழுவுவது.அதனால் தெரியமுடிகிறது.

பலன் கருதாத கடமையைக் கீதோபதேசப்படி செய்தால் பலனைக் கருதும் மனப்பான்மை அறவே அழியும் நேரம் திரை விலகி, தெய்வம் தெரிவது, ஆன்மாவை வாழ்வில் காணும் நேரமாகும்.

************

620) வளர்ச்சிக்குத் தேவையானதுபோக அதிகசக்தி குழந்தைகட்கும், வாலிபர்கட்கும் உள்ளிருந்து உற்பத்தியாவதால் அவர்கள் உடல் அளவில் ஒரு நிறைவு பெறுகிறார்கள்.தொடர்ந்து வெற்றி பெறுபவர் ஒருவர், தமக்குத் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளிலிருந்து தமக்குத் தேவைக்கு மேல் சக்தி பெறுவதால், மனநிறைவு பெறுகிறார்.புதிய கருத்து மனதில் தொடர்ந்து ஏற்பட்டால், பழைய மனநிலைகள் அதில் மூழ்கி, புத்துணர்ச்சி எழுகிறது.

தேவைக்கு அதிக சக்தி உடல் நிறைவையும், மனநிறைவையும் தரும்.

குழந்தையின் உடல் வளருகிறது.அதற்குத் தேவையானது physical energy உடலின் சக்தி, உற்சாகம் வளர வேண்டிய சக்தியை உணர்வு அளிக்க வேண்டும்.மனம் வளர mental energy மனோசக்தி வேண்டும்.ஆத்மா வளர ஆன்மீகச் சக்தி தேவை.

குழந்தை வளர சக்தி எப்படி வருகிறது?உணவிலிருந்து வருவது உண்மை.ஏன் அதேபோல் 50ஆம் வயதில் உணவிலிருந்து அதே போன்ற அபரிமிதமான சக்தி கிடைக்கவில்லை?சோர்ந்திருப்பவனுக்கு நண்பன் கிடைத்துவிட்டால் சோர்வு போகிறது, தோல்வியால் சோர்வடைந்தவனுக்கு வெற்றி கிடைத்தால் சோர்வு, தெம்பாக மாறுகிறது.இது எப்படி?உணர்வு உடலைவிட உயர்ந்தது.மனம் உணர்வைவிட உயர்ந்தது.மனத்தை உணர்வு நாடினால் உணர்வில் சக்தி எழுகிறது.நம் நிலையைவிட அதிகமான உயர்ந்த நிலையை நாடினால் உயர்ந்த நிலையிலுள்ள அதிக சக்தி நம்மை நாடி வருகிறது.உலகில் சக்தி (energy) காற்றைப்போல், வெளிச்சத்தைப்போல் எங்கும் நிறைந்துள்ளது.காற்று நிறைந்த வெளியில் குறைகிறது.மொட்டைமாடியில் காற்று அபரிமிதமாக வீசுகிறது.குழந்தைப் பருவத்தில் குழந்தை புறச்சூழ்நிலையோடு இரண்டறக் கலந்துள்ளது. குழந்தை சாப்பிடும் உணவு, குழந்தையின் உடலைச் சூழ்நிலையோடு இணைப்பதால், அளவிறந்த தெம்புச்சூழலிலிருந்து உள்ளே வந்து குழந்தை வளருகிறது.நாளாக நாளாக குழந்தை மனிதனாகிப் பல கருத்துகளை ஏற்பதால், சூழ்நிலை அவன் ஏற்ற கருத்தின் மூலமே உள்ளே வரமுடியும் என்பதால், நமக்கு குழந்தைபோல் அதிகமான தெம்பு வருவதில்லை.

மேல் நிலைக்கு அதிகத் தெம்பும், கீழ்நிலைக்குக் குறைந்த தெம்புமிருப்பதால், ஒரு நிலை அதனுடைய மேல் நிலையோடு உணர்வு, மனத்தோடு - தொடர்பு கொண்டால், அதிக சக்தியுள்ளே வர முடிகிறது. வாய்ப்பு, புறச்சூழலைச் சேர்ந்தது.வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், நம் உணர்வு புறச்சூழலை அதிகமாக ஏற்கிறது.அதனால் அதிகத் தெம்பு பெறுகிறது.

புதியன சூழலை அனுமதிக்கும் கதவு.பழையவை மூடிய கதவு. எனவே புதிய கருத்தை ஏற்றால், சூழல் தன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரமுடிகிறது.அதனால் உற்சாகம் பெருகுகிறது.

அதிக சக்தி வளர்ச்சிக்கு உதவும், நாமுள்ள நிலையில் சாதிக்க உதவும்.நிறைவுபெற்று, மேலும் சக்தி பெருகினால் அடுத்த நிலைக்குப் போக உதவும்.குழந்தையும், பெரியவர்களும் வளருவது அவர்கள் உள்ள நிலையில்.கலைஞன், விளையாட்டுவீரன், எழுத்தாளர் போன்றவர்க்கு அடுத்த நிலைக்குப் போகும் வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பு,‘ புதியன எழுந்தால் கிடைக்கும்.

தொடரும்...

*********

ஜீவிய மணி

ஞானியும், யோகியும் பிரம்மத்தை

சச்சிதானந்தமாக அறிவார்.

********book | by Dr. Radut