Skip to Content

12. அன்னை இலக்கியம் - எம்.எஸ் பிறந்தார்

அன்னை இலக்கியம்

எம்.எஸ் பிறந்தார்

இல. சுந்தரி

எம்.எஸ் அவர்களின் இசையில் சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டு நாள்தோறும் அவர்கள் பாடல் பதிவுகளைக் கேட்டு, பக்தியில் உருகி, பாசத்தால் நெகிழ்ந்து ஆனந்தத்தில் மிதப்பதற்கு அம்மாவிற்கு நன்றி சொல்லும் முகமாக ‘எம்.எஸ் பிறந்தார்’ என்ற கதையினை எழுதும் பேறு பெற்றேன்.

அம்மாவிடம் அன்பு கொண்டவர், அவர் பாடலில் இன்புற்றுத் திளைத்தவர் அனைவரும் இக்கதையினைப் படித்து மகிழ அவாவுகிறேன்.

இக்கதையெழுத காரணமாய் என் கண்ணில் கண்ணீர் வரச்செய்த அந்தப் பாடல்:

சராசரம் உன்னை யாவும் தேடுமே..
மறைகளும் மகிழ்ந் துன்னைப் பாடுமே ஏ பிரபோ
நிராசையால் நைந்த என் நெஞ்சம்
பராவும் உன் பாதார விந்தமே ஏ ஏ
உன்னையே எனதுயிர் துணையென்று
உவந்ததென் தவறோ ஐயா
கனவிலும் உன்னையன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா? இரங்குவதறிந்திலையா?
மறந்திடலாகாதையா!
இரவெலாம் கண்ணின் நீரருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரி என நாவும் கதறும்
இதயமும் பதறும் ஐயா!
பாதமலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடினேன் கண்டாய்
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !

இனிய அன்னையே,

இசைப் பேரரசி, பக்திப் பழரசம், அன்புச்சுடர், அமரதீபம், நின்னுடைய, குருநாதருடைய அருளாசி பெற்ற அமுதச்செல்வி திருமதி. எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் இசை மீது எழும் தூய அன்பால் இங்கொரு குயில் கூவ விரும்புகிறது அருள்வாய்.

***

அது ஒரு அடுக்குமாடிக் கட்டடம். அங்கு நடுத்தரவர்க்க மக்கள் குடியிருந்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு புறாக் கூண்டு வீட்டில்தான் நம் கதாநாயகி மீரா தன் தந்தையாருடனும், சிற்றன்னையுடனும் ஒரு அடிமை வாழ்வு வாழ்ந்து வந்தாள்.

அவள் அப்பாவும், சித்தியும் ஏதோ குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போய்விடுவர். இவள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் அவர்கள் வீடு திரும்பும் முன்னதாகக் கிடைக்கின்ற சிறிது ஓய்வில் மேலே மொட்டை மாடியில் நின்று சுற்றி உள்ள உலகை ரசித்து சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பாள். இசை ரசனையே இல்லாத இவள் அப்பாவும், சித்தியும் இவள் மெல்லப் பாடல் வரியை முணுமுணுத்தாலும் கோபப்படுவார்கள். “அங்கே என்ன சத்தம்” என்பார் அப்பா. இராகத்திற்கும், சத்தத்திற்கும் வேறுபாடு தெரியாத இவருடன் எப்படித்தான் அம்மா குடித்தனம் செய்தாளோ. அம்மாவிற்கு மிக இனிமையான குரல் வளம். பாட்டென்றால் உயிர், இசையருமை தெரியாத அப்பா அவளைச் சுதந்தரமாகப் பாட அனுமதித்ததில்லை. அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் வாய்விட்டு அம்மா பாடுவாள். எத்தனை நயம் அந்தக் குரலில். எப்படியம்மா நீ இத்தனை நன்றாகப் பாடுகிறாய் என்பாள் இவள். ஓ அதுவா? எனக்கு மிகவும் பிடித்த இசையரசி ஒருவர் இருக்கிறார். அவர் பாட்டைக் கேட்டுக் கேட்டு நான் இப்படிப் பாடப் பழகினேன் என்பாள் அம்மா. யாரம்மா அவங்க? அவங்க பெயர் எம்.எஸ். சுப்புலட்சுமி என்றாள் அம்மா. இந்தப் பாட்டை அவங்ககிட்ட இருந்துதான் கத்துக்கிட்டீங்களா?

ஆமாம். அவங்க அவங்களோட சின்ன வயசுல பக்த மீராவா நடிச்சிருக்காங்களாம், எங்கப்பா சொல்வார். ஒருதரம் அவங்க பாட்டுக் கச்சேரிக்கு நானும் போயிருந்தேன் அப்ப கூட்டத்தில் எல்லாரும் மீரா பாட்டுப் பாடணம்னு சீட்டெழுதிக் கொடுத்தாங்க. அப்பதான் இந்தப்பாட்டை அவங்க பாடி நான் கேட்டேன். அதிலிருந்து அவங்க கச்சேரி எங்க நடந்தாலும் நானும் அங்க போக எங்க அப்பாகிட்ட கெஞ்சுவேன்.

தாயில்லாப் பெண் என்று அப்பா என்னை ரொம்ப செல்லமா வளர்த்ததால என் விருப்பம் போல கச்சேரிக்கு அழைச்சிட்டுப் போவாங்க. அப்படிப் போய் போய்தான் இந்தப் பாட்டைக் கத்துக்கிட்டேன் என்பாள். அதனாலதான் எனக்கு மீரான்னு பேர் வெச்சயா? என்பாள் மீரா. ஆமாம், அது மட்டுமில்ல. இந்தப் பாட்டையும் நீ கத்துக்கிட்டுப் பாடணும், அதைக் கேக்க எனக்கு ரொம்ப ஆசை என்று இவளுக்கும் கற்றுக் கொடுத்தாள். அப்பா வீட்டில் இல்லாத போது இவளும் அம்மாவும் சேர்ந்து இந்தப் பாட்டைப் பாடுவார்கள்.

ஒருமுறை மீரா பள்ளிக்கூடப் பாட்டுப் போட்டியில் இந்தப் பாட்டைப்பாடி பரிசும், பாராட்டும் பெற்றாள். அதுதான் அவள் வாய்விட்டுப் பாடிய கடைசி வாய்ப்பு. அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அப்பா மறுமணம் புரிந்து ஒரு அரக்கியை சின்னம்மாவாய்க் கொண்டு வந்தார். இவள் வாழ்வு அடிமை வாழ்வாயிற்று. பள்ளிக்கூட நேரம் தவிர விளையாடக்கூட வெளியே போக முடியாது.

வீட்டு வேலை முடித்து அப்பாவும், சித்தியும் வருவதற்குள் மொட்டை மாடியில் சுதந்தரமாக பத்து நிமிடமாவது சுற்றியுள்ள உலகைக் கண்டு மகிழ்ந்து, சுதந்தரக் காற்றைச் சுவாசித்து அம்மா கற்றுத் தந்த பாட்டை மெல்ல முணுமுணுத்து விட்டு வீட்டிற்குள் வந்துவிடுவாள். இந்தக் குடியிருப்பைச் சுற்றி நிறைய வீடுகள் தனி பங்களா வீடுகள் உண்டு. சற்றுத்தள்ளி 4-ஆவதாக ஒரு புது வீடு சில மாதங்களாக உருவாகியது முடிவடைந்திருந்தது. சில தினங்களுக்கு முன்னதாக லாரியில் சாமான்கள் வந்திறங்கின.

இன்று மாடிக்கு வந்தபோது புதிதாக ஒரு தேவகானம் செவியில் பாய்ந்தது. இயல்பாக இசைஞானம், இசையார்வம் மிகுந்த இவள் அதை உற்றுக் கேட்டாள். சில வீடுகள் தள்ளி ஒரு வீட்டிலிருந்துதான் அந்தக் கானம் வந்திருக்க வேண்டும் அப்பா வரும் நேரமானதால் மேற்கொண்டு தாமதியாமல் கீழே வந்துவிட்டாள். செவியில் விழுந்த அந்த இனிய இசைமட்டும் உள்ளே தங்கி ஆர்வமூட்டிய வண்ணம் இருந்தது. தொடர்ந்து தினமும் அந்த இசை மாடியில் வந்தபோது கேட்டது. எப்படி- யாவது அது வருமிடத்தைக் கண்டுபிடிக்க ஆவல் உந்தித்தள்ள இன்று மொட்டை மாடிக்குப் பதில் தெருவில் இறங்கி ஆராய்ச்சியைத் தொடர்ந்தாள். அந்தப் புது வீட்டிலிருந்துதான் இசை பாய்ந்தோடி வந்து கொண்டிருந்தது. அம்மாவைப் போலவே இவளுக்கும் இசையின்மீது ஆர்வம். மெல்ல அந்த வீட்டின் திறந்திருந்த கேட்வழியே நுழைந்து மூடியிருந்த கம்பிக்கதவுக்கு வெளியே படிவரை வந்து நின்று விட்டாள். துல்லியமான இனிய இசை அவளை மெய்ம்மறக்கச் செய்தது. கண்ணைமூடி விரல்களால் தாளம் இசைத்த வண்ணம் நின்றாள். அப்போது ஒரு கார் உள்ளே வந்ததையோ அதிலிருந்து வீட்டுச் சொந்தக்காரர் இறங்கி வந்து இவளருகில் நின்றதையோ இவள் உணரவே இல்லை. திடீரென்று இசை நின்றது. உடன் சுயநினைவு பெற்றபோது பக்கத்தில் நின்றவரைப் பார்த்து திடுக்கிட்டாள். அயலார் வீட்டு வாசல்வரை வந்த தவறு புரிந்து தவித்தாள். ஆனால் அவரோ இவளை இதமாகப் பரிவாகப் பார்த்தார்.

யார் பாப்பா நீ? என்று அன்புடன் கேட்டார். நான் இதே தெருவில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவள். இரண்டு மூன்று நாட்களாய் புதிதாய்ப் பாட்டுக்குரல் கேட்டது. அந்தக் குரலைத்தேடி தெருவில் வந்தபோது இந்த வீட்டிற்குள்ளிருந்துதான் அந்தப்பாட்டு வருவதைக் கண்டுபிடித்தேன். ஆர்வத்தால் யாரையும் கேட்காமல் இதுவரை வந்து விட்டேன். மன்னிச்சிடுங்க சார் என்று பயந்து அழுதுகொண்டே சொன்னாள்.

அழாதே பாப்பா. ஒன்றும் பயப்பட வேண்டாம். உன் இசையார்வம் புரிகிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. நீ பாட்டுக் கற்றுக் கொண்டிருக்கிறாயா?

எங்க வீட்ல அதுக்கெல்லாம் விடமாட்டாங்க என்றாள்.

அப்போது அவர் அவள் குடும்ப விபரம் அவள் அடிமை வாழ்வு யாவும் கேட்டறிந்தார்.

இவர் தொழிலதிபர் சுந்தரம். இவர் மனைவி இசைப் பேரரசி மீனாட்சி. இவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர் மனைவி தன்னிசைக் குடும்பம் வளர வாரிசில்லையே என்று ஏங்க, இங்கு ஒரு இசைப்பிரியை புறக்கணிக்கப்படுவதை உணர்கிறார்.

நீ இங்கு வந்து பாட்டுக் கற்றுக்கொள்கிறாயா? உன் வீட்டில் வந்து கேட்கச் சொல்லவா? என்றார்.

ஐயய்யோ வேண்டாங்க. என் அப்பா மோசமானவர். என் சின்னமாவும் வரவங்ககிட்ட மரியாதையில்லாம பேசுவாங்க. நா வீட்டு வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டுமென்று வேலைக்கு இடம் பார்க்கிறார் அப்பா. அவங்களுக்கு என்னைவிட காசுதான் பெரிசு. காசு கெடைச்சா என்னையே வித்துடுவாங்க என்றழுதாள்.

இந்தக் கலைவாணியை விற்பதா? விடுவாரா அவர்? அவர் மனைவியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் தருணம் இது என்றுணர்ந்தார்.

சரிபாப்பா. நீ எதுவும் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல் இரு. நான் தந்திரமாக உன்னை மீட்டு விடுகிறேன் என்றார். அவர் கூறியது ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை.

மறுநாள் வீட்டு வேலைக்கு ஒரு சிறுமி வேண்டுமென்றும், நல்ல சம்பளம் தருவதாயும் இவள் தந்தைக்கு மூன்றாம் மனிதர் மூலம் செய்தி எட்டச் செய்தார். இவள் தந்தை உடனே இவர் வீடு தேடி வந்துவிட்டார். அந்த வேலை தன் மகளுக்கே கிடைக்க வேண்டும், வேறு யாரேனும் வந்து விடக்கூடாதே என்ற பதற்றம்.

வந்தவரை, “யார் நீங்கள்?” என்றார் சுந்தரம். பெரிய மனுஷ தோரணையில் இருந்த சுந்தரத்தைப் பார்த்து மரியாதையுடன் கைகூப்பினார் மீராவின் அப்பா வேலாயுதம்.

உங்க வீட்டுக்கு வேலைக்குச் சிறுமி வேணுமின்னு கேள்விப்பட்டேன். என் மக மீரா பத்தாவதுவரை படிச்சு நின்னிடுச்சு சும்மாத்தானிருக்கு வீட்ல.உங்க மாதிரி நல்லவங்க வீட்ல வேலை கெடச்சா நல்லதுன்னு தேடி வந்தேன் என்றார்.

வீட்டு வேலை கொடுத்தா நல்லா செய்யுமா? என்றார் சுந்தரம்.

ரொம்ப நல்லாச் செய்யுங்க. சொன்னாப்பல செய்யும். ரொம்ப சாது என்றான்.

சரி! அழைச்சிட்டு வாங்க, நல்லா நடந்துகிட்டா தொடர்ந்து இருக்கலாம், வீட்டு நினைவா கவனமில்லாம இருந்தா திருப்பி அனுப்பிடுவேன் என்றார்.

அதெல்லாம் ஒழுங்கா நடந்துக்குங்க, இதோ அழைச்சிட்டு வந்திடறேன். மூணாவது வீடுதான் எங்க வீடு என்று கூறி விரைவாகச் சென்று, மீரா இங்க வா என்றான். பாதி வேலையா இருக்கேன்ப்பா என்றாள். அதெல்லாம் நா பாத்துக்கறேன் நீ வா என்று அவளை இழுத்து வந்து சுந்தரத்தின் வீட்டில் சேர்த்த பிறகுதான் நிம்மதியடைந்தான்.

சரி வேலாயுதம். பாப்பா இங்க இருக்கட்டும். பார்ப்போம் என்று ஒரு ஆயிரம் ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினார்.

நன்றிசார். நா வறேன் என்று பரம சந்தோஷத்துடன் போய்விட்டார். அவர் போனபிறகு, பாப்பா! உன்னை நான் எப்படி வரவழைத்தேன் பார்த்தாயா? என்றார் சுந்தரம்.

ரொம்ப நன்றிசார் என்று அவர் காலில் நமஸ்கரித்த மீராவை எழுந்திரு, எழுந்திரு என்று தூக்கிவிட்டுச் சரிவா என்று உள்ளே அழைத்துப் போனவர், ஒரு அறை வாசலில் நின்று மெல்லக் கதவைத் தட்டினார்.

இதோ வந்துட்டேங்க என்ற இனிய குரலைத் தொடர்ந்து ஓரன்பு தெய்வம் வெளிப்பட்டது.

மீனா! உன் மகள் வந்துவிட்டாள் பார் என்று மீராவைக் காட்டினார்.

இவளுக்குப் புரியவில்லை. இவர்கள் இழந்துவிட்ட பெண்போல் நானிருக்கிறேன் போலும் என்று நினைத்தாள்.

மீனா நான் சொன்னேனே உன் பாட்டைக் கேட்டு நம்வீட்டு வாசலில் மயங்கி நின்றாள் என்று அவள் இந்த மீராதான் என்று மீராவைத் தன் மனைவிக்கு அறிமுகம் செய்தார்.

வா மீரா வா என்று சிறு குழந்தையை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டும் தாயைப் போல் கையை நீட்டி அழைத்தாள்.

மீனா என்ற இசைப் பேரரசி!

மீரா தயங்கினாள். வீட்டு வேலைக்கு வந்த பெண்ணைத் தான் பெற்ற பெண்ணை அழைப்பது போல் அழைக்கிறாரே, நான் வேலைக்கு வந்தவள் என்று தெரியாதோ என்று தயங்கி நின்றாள். மீரா! நீ மயங்கி நின்று கேட்ட பாட்டைப் பாடியது இவங்கதான் என்றார் சுந்தரம்.

அவ்வளவுதான் விழிகள் மலர்ந்து ஓடிப் போய் அவர்களின் கால்களைப் பற்றினாள்.

அன்புடன் அவளை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் மீனாட்சி. கலைவாணி என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்துவிட்டாள். நான் தேடிய என் இசைக் குடும்ப வாரிசு என்னைத் தேடி வந்துவிட்டது என்றாள். மீராவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இவங்க என்ன சொல்றாங்க என்று மீரா விழித்தாள்.

மீரா! அதுவொன்றுமில்லை. தனக்குப் பிறகு இசையுலகிற்கு ஒரு வாரிசு தயாரிக்க அம்மாவுக்கு ஆசை. எங்களுக்குக் குழந்தை இல்லை. விளம்பரம் செய்தால் தேவையற்றவர்களும் தேடி வருவார்கள். அம்மாவின் கனவில் கலைவாணி ஒரு குழந்தையைக் கொடுத்தது போல் கண்டாள். அன்றிலிருந்து இவள் தன்னைக் தேடிவரும் குழந்தைக்காகக் காத்திருந்தாள். நீ தான் இசையார்வத்தோடு இந்த வீட்டைத் தேடி வந்து உன் இசையார்வம் வெளிப்பட மயங்கி நின்றாய். நீதான் கலைவாணி தந்த பரிசு என்றார் சுந்தரம்.

சரிங்க நான் இப்ப என்ன வீட்டு வேலை செய்யணும்னு சொன்னா செய்வேன் என்றாள் மீரா.

வேலையா? நீ இந்த வீட்டு வேலைக்காரி இல்லை. உன் அப்பாவிடம் சொன்னது அவர் விருப்பப்படி உன்னை அவரிடமிருந்து மீட்கத்தான். நீ இந்த வீட்டு இளவரசி என்றார். அவளுக்கு ஒரே குழப்பம்.

சரி, சரி வா முதலில் சாப்பிடுவோம். பிறகு உனக்கு இசைப் பயிற்சி ஆரம்பிக்க வேண்டும் என்று சுந்தரமும் மீனாட்சியும் அவளுடன் சேர்ந்து உணவருந்தினர். இத்தனை சுவையான உணவை இத்தனை பரிவாக அவளுக்கு அவள் அம்மாவைப் போல உண்ணச் செய்தனர். கண்கலங்கியது. எதைப் பற்றியும் நினைக்காமல் சந்தோஷமாய்ச் சாப்பிடு என்றனர்.

பிறகு மீனாட்சி சங்கீத அறை என்ற அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள். பிரமிப்பால் விழிகள் விரிய நின்றாள். அத்தனை அழகாக அந்த அறை வடிவமைக்கப்பட்டிருந்தது. மேடையில் அழகான கலைவாணி சிலை. அதன் விழிகள் பேசின. தம்புரா, வீணை, ஆர்மோனியம் என பல இசைக் கருவிகள். அதற்கு முன் எதிரே உட்கார்ந்து பாட அழகான தரை விரிப்புகள். இவற்றைக் கண்டு மெய்சிலிர்த்தது அவளுக்கு. தன் அம்மாவை, அவள் இசையார்வத்தை, தானும் எம்.எஸ். அவர்களைப் போல் பாட வேண்டும் என்று ஆர்வப்பட்டதை எல்லாம் நினைத்து கண்ணீர் பெருக கலைவாணியை நமஸ்கரித்தாள்.

மீனா அவளை அணைத்துக் கொண்டு தன் புடவைத் தலைப்பால் அவள் கண்ணீரைத் துடைத்து அழக்கூடாது, இனி உனக்குத் துன்பமில்லை. மகிழ்ச்சி மட்டும்தான் என்றாள்.

எங்க அம்மா ரொம்ப நல்லாப் பாடுவாங்க அவங்க இஷ்ட தெய்வமே எம்.எஸ் என்ற இசையம்மாதான். எம்.எஸ் அம்மா கச்சேரி எங்க நடந்தாலும் எங்க தாத்தாவோட போய் முன்வரிசையில் இருந்து ரசிப்பாங்களாம். அவங்க குரல கேட்டாலே எங்க அம்மா சந்தோஷமா உணருவாங்களாம். அவங்க மேல ஒரு பக்தியே வந்ததாம். ஒரு முறை கச்சேரி முடிந்த பிறகு நீண்ட நேரம் காத்திருந்து அவங்களை கிட்டப் போய்ப் பார்த்து பேசினாங்களாம். உங்களையும், உங்கப் பாட்டையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும், நீங்க பக்த மீரா பாட்டைப் பாடும்போதெல்லாம் உங்களை மீராவாகவே பார்க்கிறேன். எனக்குப் பெண் குழந்தை பிறந்தா மீரானு பேர் வெச்சு உங்க பாட்டைக் கத்துக் கொடுப்பேன்னு சொன்னாங்களாம். கடவுள் அருளால் உன் ஆசை நிறைவேறும் என்றுகூறி அன்று மேடையில் அவருக்குப் போர்த்திய பொன்னாடையை அம்மாவுக்குக் கொடுத்தாங்களாம். அதை என் அம்மா பத்திரமா வெச்சிருந்து, நீ எம்.எஸ் அம்மா மாதிரி பாடும்போது இதை உனக்குப் போர்த்தி விடுவேன் என்று என்னிடம் பேராவலுடன் சொல்வாங்க. அதை நானும் பத்திரமா வெச்சிருக்கேன். ஒருநாள் அதைக் கொண்டுவந்து காட்டுகிறேன், என்றாள்.

இசைப்பயிற்சி காலையில் சங்கீத அறையில் நடந்தது. வெளியில் யாருக்கும் தெரியாது. மீனாட்சிக்கு இவள் இசை ஞானம் பிரமிப்பூட்டியது. சென்ற பிறவியிலேயே இசை பயின்றிருப்பாளோ என்று வியப்பாள். முதற் கட்டப் பயிற்சியை அப்போதே கடந்து விட்டாள். குறைந்த பட்சம் ஒரு வாரமாவது ஆகும் இக்கட்டத்தை ஒரே முறையிலே தாண்டிவிட்டாள்.

உங்க அம்மா ரொம்ப நல்லாப் பாடுவாங்கன்னு சொன்னாயே அவங்க யார்கிட்ட சங்கீதம் கத்துக்கிட்டாங்க.

அதுதானே ஆச்சர்யம். அவங்களுக்குப் பாட்டுக் கத்துக்க வாய்க்கவேயில்லையாம். எம்.எஸ். அம்மா பாட்டைக் கேட்டுக் கேட்டுப் பாடுவாங்களாம். அம்மாவோட ஆசைய நிறைவேத்த தாத்தா தனக்குப் தெரிந்த பெரிய மனுஷங்கக்கிட்டயிருந்து டேப் ரிகார்டரும் கேஸட்டும் வாங்கி வருவாராம். அதைப் போட்டுப் போட்டுப் பாடிக் கத்துக்கிட்டாங்களாம். அதெவிட பெரிசா ஒண்ணு சொல்லுவாங்க. புதுச்சேரி அன்னை அரவிந்தர் சமாதியிலே வேண்டினா பலிக்கும்னு கேள்விப்பட்டு தாத்தாவோட புதுச்சேரிக்கே குடிபோயிட்டாங்களாம். தாத்தாவும் அங்க ஒரு கடையில கணக்கெழுதற வேலையில சேர்ந்திட்டாராம். அப்போ அன்னை அரவிந்தர் ஆசிபெற்று அவர்களையே தன் இலட்சியமா ஏத்துக்கிட்டு ஆன்மிகத்தில வாழ்ந்த குருவைப் பத்தி கேள்விப்பட்டு அவங்கள தினமும் போய்க் கும்பிடுவாங்களாம், கல்யாணம் நிச்சயமானதும் அவர்கிட்ட ஆசி வாங்க போனாங்களாம். எனக்குப் பெண் குழந்தை பிறந்து அது எம்.எஸ். அம்மாவைப் போல் பாடுமான்னு குருகிட்ட கேட்டாங்களாம். அப்ப, “பெண் உண்டாயிருக்கிறப்ப எப்படி இருக்கணும்னு மதர் (ஸ்ரீ அன்னை) சொன்னது போல நீ இருந்தா அப்படியே ஆகும்னு” சொன்னாராம். மதர் என்ன சொல்லியிருக்காங்கன்னு சொன்னீங்கன்னா அதுபோலவே செய்வேன்னு சொன்னாங்களாம் அம்மா. அப்ப குரு கேட்டாங்களாம், நீ ஏன் எம்.எஸ் மேல இவ்வளவு பிரியமா இருக்கேன்னு. அதுக்கு அம்மா, மொதல் மொதல்ல மேடையில அவங்கள பாத்தப்ப எல்லாரும் மீரா பாட்டை பாடணும்னு சீட்டு எழுதி கொடுத்ததையும் அப்ப அவங்க பாடின மீரா பாட்டுதான் (சராசரம் உன்னை யாவும் தேடுமே. மறைகளும் மகிழ்ந்-துன்னை ப் பாடுமே) அம்மாவை எம்.எஸ். பைத்தியம் ஆக்கிடுச்சின்னு சொன்னதோட அந்தப் பாட்டை குருநாதர் கேக்கணும்னு அந்தக் @கஸட்டை வாங்கி குருவுக்குச் சமர்ப்பிச்சாங்களாம். குருவும் அந்தப் பாட்டைக் கேட்டு எம்.எஸ்.

அம்மாவைப் புகழ்ந்தாங்களாம். அப்போதான் எம்.எஸ் அம்மாவுக்குப் ‘பாரத ரத்னா’ விருது அறிவிச்சாங்களாம்.

உடனே அம்மா குருநாதர் காலில் விழுந்து வணங்கி இந்தப் பாட்டை நா ஒங்ககிட்ட சமர்ப்பிச்ச வேளை எம்.எஸ்.

அம்மாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது கெடச்சுடுத்து. நமக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் அருள் கிடைத்தால்தான் எல்லாம் நடக்கும்னு எங்க அப்பா சொன்னாங்க என்று கூறி ஆனந்தப்பட்டாங்களாம். குரு சிரித்துக் கொண்டாராம். இதையெல்லாம் எங்க அம்மா பக்தியோட எங்கிட்ட சொல்வாங்க.

கடைசியா என்னை உண்டான போதுதான் குருவை தரிசிச்சாங்களாம். “இப்போ நீ எந்த மன நிலைல இருக்கணும்னு அன்னை சொன்னதெல்லாம் நினைவில் வெச்சுசெய்” என்று சொன்னாராம். அது போலவே எங்க அம்மா என்னை கருவுற்ற போது தன் வயிற்றைத் தடவிக் கொடுத்து உள்ளே உள்ள என்னிடம் பேசுவாங்களாம். நீ எம்.எஸ்.அம்மா போல நல்லா பாடணும். பக்தியா இருக்கணும். அவங்க சம்பாதிச்ச பணத்தையெல்லாம் தானே வெச்சுக்க நினைக்காம நிறைய நல்ல காரியத்துக்கெல்லாம் கொடுத்தது போல நீயும் நல்ல மனசோட வாழணும்னு சொல்வாங்களாம். நானும் எம்.எஸ். அம்மா போல பாடுற மாதிரி என்னைக் கற்பனையிலே பாப்பாங்களாம் என்று மீரா தன் அம்மாவைப் பற்றி உணர்வுடன் கூறுகிறாள்.

இதையெல்லாம் கேட்ட மீனாட்சி, “மகான்களின் வாக்கு பொருள் பொதிந்த வாக்கு என்பார்கள். உன் அம்மா குருவருள் பெற்றிருக்கிறார். அவர் கற்பனையில் கண்டது போல் நீயும் இசையரசி ஆவாய். அப்போது அந்தப் பொன்னாடையை உன் அம்மாவின் நிலையிலிருந்து நானே உனக்கு அணிவிப்பேன்” என்று கூறுகிறாள். மேலும் அதற்கு உன்னைத் தயாரிக்க நீ எங்களுடன் இங்கேயே இருந்தால் நல்லது. உன் அப்பா அதற்கு விடுவாரா? என்றாள் மீனாட்சி.

தெரியல அம்மா. மாலைல வீட்டுக்குப் போனதும் சின்னம்மா நெறய வேல வெச்சிருக்கும் என்று வேதனையுடன் சொன்னாள்.

சுந்தரம் வந்தார். என்ன மீனா. குழந்தை என்ன சொல்கிறாள்? என்றார்.

பாவம்ங்க இவ. வீட்ல போய் வேற சின்னம்மா வேல செய்யச் சொல்றாங்களாம். இவ இங்க நம்ப கூடவே இருந்தா இவள தயாரிக்க வசதியா இருக்கும். இவ்வளவு சங்கீத ஞானம் உள்ள குழந்தையை அர்த்தமில்லாமல் வாழ விடக்கூடாதுங்க என்று மீனா வேதனையுடன் கூறினாள். அவ்வளவு தானே நாளைக்குப் பார் என்றார் சுந்தரம்.

ஐயய்யோ எங்க அப்பாவைக் கேட்டீங்கன்னா எங்க சின்னம்மா என்னை விடக்கூடாதுன்னு வேலைய விட்டு நின்னுடச் சொல்லும் என்று அழுதாள் மீரா.

கவலைப்படாதே மீரா. உன்னை எப்படி மீட்பது என்று எனக்குத் தெரியும். வழக்கம் போல் நீ எதையும் காட்டிக் கொள்ளாமல் இரு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

மறுநாள் வேலாயுதத்தைக் கூப்பிட்டனுப்பினார். அவரும் வந்தார். வேலாயுதம் உங்கள் மகளை இதுவரை அனுப்பியதற்கு ரொம்ப நன்றி. ஆனா எங்களுக்கு வீட்டோட இருக்கிற மாதிரி குழந்தைதான் தேவைப்படுது. அதனால நா அநாதை ஆஸ்ரமத்திலேந்து ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது என்று முடிவு செய்து விட்டேன். இந்தா இந்தப் பணத்தை வைத்துக் கொள் என்று பத்தாயிரம் பணத்தைக் கொடுத்தார். உம் மகளை அழைத்துப் போய்விடு என்றார். மீனாவும், மீராவும் மறைந்து நின்று இதைக் கேட்டுத் திடுக்கிட்டனர்.

ஐயா! மீராவை முழு நேரமும் ஒங்க வீட்லயே வெச்சுக்கங்க எனக் கொண்ணும் ஆட்சேபணை இல்லை என்றார் வேலாயுதம்.

அதெல்லாம் சரி வராதுப்பா. நா கஷ்டப்பட்டு வளத்து ஆளாக்கினா, நாளை எம்மகள எங்கூட அனுப்புங்க என்பாய்.

அநாதைக் குழந்தைனா பிரச்சனை வராது, சட்டப்படி தத்தெடுத்திடுவேன் என்றார்.

எம்மகளும் ஒரு விதத்துல அநாதை போலதான். அதன் அம்மா இறந்திடிச்சு. வீட்ல இருக்கறது என் ரெண்டாவது சம்சாரம். அதுனால எம் மகளையே தத்தெடுத்துக்கங்க. நாதிருப்பிக் கேக்கல. கேக்கற எடத்துல கையெழுத்துப் போட்டுத் தாறேன். உங்களால அது வாழ்க்கை நல்லா அமையட்டும் என்றார்.

நாளைக்கு ஏதாவது நீ பிரச்சனை செய்தா நா சும்மாயிருக்க மாட்டேன். சட்டப்படி அவளை எங்களுக்குத் தத்துக் கொடுத்தா நீ வந்து தொந்தரவு செய்யக் கூடாது.

ஐயா! என்னெய நம்புங்க. நல்லவங்க தெரிஞ்சவங்க நாலு பேரை சாட்சி வெச்சு கையெழுத்துப் போட்டுத் தறேன் என்றார்.

உன் சம்சாரம் ஏத்துக்குமா? அவளை நா பேசிக்கிறேன். இது எம்மவ, அவ ஒண்ணும் சொல்ல முடியாது என்றார்.

மீராவுக்கு இப்போதுதான் அப்பா மீது நன்றி எழுந்தது. இந்தப் பேச்சை மறைவில் நின்று கேட்ட மீனாட்சி மீராவைக் கட்டியணைத்துக் கொண்டாள்.

இத வெச்சுக்கங்க என்று பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து நாளைக்குக் கூப்பிட்டனுப்புகிறேன் என்றார். பொறுப்புவிட்டது என்று அவர் போய்விட்டார்.

மறுநாள் சட்டப்படி சுவீகாரமும் செய்து மீராவை மீனாட்சி சுந்தரம் தம்பதியர் மகளாக்கிக் கொண்டனர். வேலாயுதத்தைப் பார்க்கும் போதெல்லாம் அருமையான குழந்தையைப் பெற்ற தந்தை என்ற முறையில் மனதில் நன்றியோடு அவருக்குப் பணமும் கொடுத்தார் சுந்தரம். வேலாயுதத்தின் மனைவிக்குப் பணி மாற்றல் வந்து அவர்கள் ஊரைவிட்டே போய்விட்டதாக செய்தி.

மீரா! இனி நீ இந்த வீட்டின் இளவரசி. என் இசைக்குடும்ப வாரிசு. பாத்ரூமில் ஷாம்பு, சோப் புதிய ஆடை எல்லாம் வைத்திருக்கிறேன். பழைய வாழ்வை தலை முழுகி விட்டு என் மகளாய் வா என்றாள் மீனாட்சி.

மீராவுக்கு மகிழ்ச்சி, சுதந்தர உணர்வு. அழகான பாத்ரூம். மணமுள்ள உயர்தர ஷாம்பு, சோப், ஆசை தீர ஷவரைத் திறந்து விட்டு அம்மாவின் மீரா பாட்டை வாய்விட்டுப் பாடிய வண்ணம் நீராடினாள். பாட்டுக் குரல் கேட்டதும் மீனாட்சி, பாத்ரூம் கதவுக்குப்பின் வந்து நின்று கொண்டு ரசித்தாள். எத்தனை இனிமை குரலில் எப்படியெல்லாம் தூக்கி எடுத்து பிசிர் இல்லாமல் லயம் தப்பாமல் பாடுகிறாள். கலைவாணியே நீ எனக்கு அரிய இசைப் பொக்கிஷத்தைக் கொடுத்திருக்கிறாய் இசைக் குடும்பத்தை வளர்ப்பதே நான் உனக்குச் செய்யும் நன்றி என்று மனம் உருகினாள். தலையில் துண்டைச் சுற்றிக் கொண்டு புதிய ஆடைகளுடன் கதவைத் திறந்த மீரா, மீனாட்சியைப் பார்த்தவுடன் வெட்கத்துடன் நாக்கைக் கடித்துக் கொண்டாள். அதீத உரிமையுடன் சப்தமாகப் பாடிவிட்டோமோ என்று, சாரிம்மா. இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆசை சுதந்தரம் கிடைத்தவுடன் வெளிப்பட்டுவிட்டது. தவறு செய்ததாய் எண்ணி மன்னிப்பு வேண்டினாள்.

இப்படியெல்லாம் பேசினால் நான் மன்னிக்க மாட்டேன். எதன் வளர்ச்சிக்கும் தேவை சுதந்தரம்தான். நீ எப்போதும் வாய்விட்டுப் பாடலாம். இந்த வீடு முழுவதும் உன்னிசையால் நிரம்பி மகிழ வேண்டும் என்றாள்.

காலை வேளையில் தினமும் மீராவிற்கு முறையான சங்கீதப் பயிற்சி. மதியமும் இரவும் மீனாட்சியின் மேடைக் கச்சேரிக்கான பயிற்சி. மீனா பாட வேண்டிய பாடல்களை பிரிண்ட் எடுத்துத் தரும் வேலை மீராவுடையது. மீனா சாதகம் செய்யும் போது மீரா வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பாள். இருந்தாலும் கவனம் மீனா பாடும் பாட்டிலிருந்தது பாட்டில் அவள் செய்யும் ஸ்வரஜாலங்கள் மீராவை மிகவும் கவர்ந்தது. இவளின் இசையார்வத்திற்கு அளவேயில்லை.

முதலில் தன் கச்சேரிக்கு மீராவைத் தம்புரா மீட்ட அழைத்துப் போனாள். அந்த இளம் அழகிய மீரா தம்புராவுடன் பக்கத்தில் அமர்ந்திருந்தது பக்த மீராவாகவே காட்சியளித்தாள். இழை பிசகாமல் தம்புரா மீட்டினாள். மீனாட்சி வழக்கம்போல் ரசிகர்களைத் தன் இனிய குரலாலும், இசை நயத்தாலும் பரவசத்திலாழ்த்திக் கொண்டிருந்தாள். மத்தியமாவதி பாடுவதற்கு முன் அன்று வித்தியாசமாக, ‘சராசரம் உன்னை யாவும் தேடுமே’ என்ற பக்தமீரா திரைப்படப் பாடலைப் பாடினாள். மீனாட்சி தன் கச்சேரி நிகழ்ச்சியில் முதன்முதலாகத் திரைப்படப் பாடலைப் பாடுவதால் ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் சபையை நிறைத்தது. உணர்ச்சி மேலிட உருகிப் பாடிய மீனாவிற்கு ஒரு கட்டத்தில் அடுத்தவரி பாடமுடியவில்லை. அவள் பாடும் போது கவனமாக அவளைப் பின்பற்றும் மீரா இப்போது இடைவெளி தோன்றாமல் சட்டென்று அடுத்த வரியைப் பாட சபையினரின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. முதல் ஆரம்பத்திலேயே மீரா தன் இனிய குரல் வளத்தாலும், இசை ஞானத்தாலும் ரசிகர்களை வசீகரித்து விட்டாள். மீனாட்சி மிகுந்த பெருமிதவுணர்வுடன் மீராவைத் திரும்பிப் பார்க்க மீரா இயல்பாகச் சிரிக்கிறாள். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியதும் சமையல்கார அம்மாள் ஆரத்தி எடுக்கிறாள்.

மீனாட்சியோ மீராவுக்குத் திருஷ்டி கழிக்கிறாள். அப்போதுதான் உள்ளே வந்த சுந்தரம் என்ன விசேஷம் இன்று? என்கிறார். ஏங்க இன்று பார்த்து நீங்கள் வராது போனீர்கள். நம் குழந்தை மேடையில் பாடி பெரிய பாராட்டு வாங்கி விட்டாள் என்றாள் மீனாட்சி. சுந்தரம் பெரும்பாலும் மீனாவுடன் கச்சேரிக்கு வந்து முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிப்பார். ஏதேனும் முக்கிய மீட்டிங் இருந்தால் வரமுடியாது போகும். அன்றும் அப்படித்தான் வரமுடியாமற்போனது. அதுசரி குழந்தை இன்று பாடப் போகிறாள் என்று நீ ஏன் சொல்லவில்லை. முறையாக அரங்கேற்றம் செய்ய வேண்டாமா? என்றார். அவள் அம்மா குருவருள் பெற்று மீராவிற்கு ஆசி, வரம் வாங்கியிருக்கிறாள். அரங்கேற்றம் என்ற சடங்கு சம்பிரதாயமெல்லாம் அவளுக்குத் தேவையில்லை என்று தோன்றுகிறது என்றாள் மீனா. என்ன சொல்கிறாய் நீ? ஆமாங்க. இறையருள் துணையிருந்தால் சந்தர்ப்பம், சூழ்நிலை யாவும் தானே அமைந்துவிடும். அவளைக் கருவில் தாங்கியபோது அவள் குருவிடம் வரம் வாங்கி இருக்கிறாள். கருவுற்றபெண் அன்னை கூறியபடி எப்படியிருக்க வேண்டுமென குருவிடம் அறிவுரை பெற்று அதன்படி மீராவை வயிற்றில் சுமந்த காலத்தில் இலட்சியவுணர்வோடு இருந்திருக்கிறாள்.

என்ன சொல்கிறாய்? எந்த அன்னை என்ன கூறியிருக்கிறார்?

புதுச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரோடு பூரணயோகம் மேற்கொண்ட ஸ்ரீ அன்னையைச் சொல்கிறேன். கருவுற்ற பெண் தன் சிந்தனைகள், எப்போதும் அழகானவையாகவும் தூயதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அவள் தன் உணர்ச்சிகள் உயர்ந்தவையாகவும், பண்பு நயமுடையதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அதோடு அவளால் எண்ணிப் பார்க்க முடிந்த அளவு மிகவுயர்ந்த இலட்சியத்தின்படி குழந்தையை உருவாக்க வேண்டும் என்ற திட்டவட்டமான உணர்வுள்ள இச்சா சக்தியும் அவளிடம் இருந்தால் அப்பொழுது அக்குழந்தை அதிகபட்ச வாய்ப்புகளுடன் இவ்வுலகில் வந்து பிறப்பதற்கு வேண்டிய மிகச் சிறந்த நிலைமை அளிக்கப்பட்டதாகும் என்று அன்னை கூறியதை மீராவைக் கருவுற்றிருந்த போது குருநாதரிடம் ஆசி பெறச் சென்றபோது அவர் சொன்னாராம்.

அம்மா! மிளகாயெல்லாம் வைத்துச் சுற்றினீர்களே அது என்ன?

அதுவா? இன்று அத்தனை பேர் கண்களும் உன்மேலதான். உனக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று கண்ணேறு (திருஷ்டி) கழித்தேன் என்றாள்.

அடுத்த மேடை நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் கைதட்டல் அதிர்ந்தது. மீராவும் பாடுவாள் என்று அனைவரும் எதிர்பார்த்து கைதட்டினர். ஆனால் மீரா தம்புரா மட்டுமே மீட்டினாள். அவளும் பாட வேண்டுமென சீட்டெழுதி அனுப்பினர். பாடிக்கொண்டே பின்னால் திரும்பி சீட்டை மீராவிடம் கொடுத்து என்ன செய்வது என்று கேட்பதுபோல் பயத்துடன் பார்த்தாள். கவலை வேண்டாம் என்பதுபோல் கண்ணால் பேசிய மீரா அவளுடன் இணைந்துபாட ஆரம்பித்து விட்டாள். கூட்டத்தினர்க்கு வியப்பில்லை, மகிழ்ச்சி. மீனாட்சிக்குப் பெரும் வியப்பு. பக்த மீரா பாடல் மீரா அவள் அம்மாவிடம் கற்றது. தான்தன் இசை நிகழ்ச்சிக்குச் சாதகம் செய்யும் போது அவளையும் உடன் வைத்துக் கொண்டதில்லை. அவள் ஏதேனும் செய்து கொண்டிருப்பாள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியமாயிற்று. தனக்குப் பாடல்கள் பிரிண்ட் எடுத்துக் கொடுப்பது அவள்தான். ஆனால் அதனால் மட்டும் பயிற்சி இல்லாமல் எப்படிப் பாடமுடியும்? உண்மையில் இவள் தவமியற்றிப் பெற்ற குழந்தைதான். கலைவாணி கொடுத்த பரிசுதான். ஆனந்த மிகுதியில் பாடமுடியாமல் ஆனந்தக்கண்ணீர் வர, மீரா தன்னை மறந்து பாடிக்கொண்டிருக்கிறாள். இசை நிகழ்ச்சி முடிந்ததும் இவ்வளவு விரைவில் ஓரிளம் பெண்ணைத் தயாரித்து விட்டதாக மீனாட்சியைக் கூட்டமே பாராட்டிப் பேசியது. இந்த மாயப் பெண்ணைத் தான் தயாரிக்கவில்லை கலைவாணியே தயாரித்தாள் என்பது மீனாட்சிக்குத் தெரிந்தது. வீட்டிற்குப் போனதும் முதல் வேலையாக மீராவைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு ‘உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ’ என்று பாடினாள் மீனாட்சி. மீரா சிரித்துக் கொண்டே, அம்மா! நல்லவேளை வீட்டிற்கு வந்து முத்தமிட்டீர்கள். எங்கே மேடையிலேயே கட்டியணைத்து முத்தமிட்டு விடுவீர்களோ என்று பயந்தேன் என்றாள்.

நல்லவேளை மீரா, இன்று மேடையில் நீ உன் அம்மாவுடன் சேர்ந்து பாடியதை நானும் கேட்கும் பேறு பெற்றேன். அதுசரி எதற்கு பயந்தேன் என்றாய்?

அதுவொன்றுமில்லையப்பா, காலையில் எனக்கு ஸ்வர வரிசை கற்பிக்கும்போது பாதி பயிற்சியிலேயே கட்டியணைத்துக் கொள்வார். அதுபோல் அங்கும் பாதியில் செய்துவிடுவாரோ என்று பயந்தேன் என்று அம்மாவைக் கேலி செய்தேன் என்றாள்.

நன்றாகச் செய். இப்படி ஒரு குழந்தையை எண்ணித்தானே அவள் ஏங்கினாள். அவள் சந்தோஷமாய் இருந்தால் சரிதான் என்றார் சுந்தரம்.

இதற்குப் பிறகு காலையில் வழக்கமான முறையான பயிற்சியும் கொடுத்தாள். தன் மேடை நிகழ்ச்சிக்குச் சாதகம் செய்யும் போதும் அவளை உடனிருத்தி இருவரும் சேர்ந்தே சாதகம் செய்தனர். (இதை இங்கு எழுதும் போது எம்.எஸ். அவர்களும், அவர் மகள் ராதா விஸ்வநாதனும் சேர்ந்து அவர்கள் வீட்டில் சாதகம் செய்த காட்சி என் மனக் கண்ணில் வந்து ஆனந்தக்கண்ணீர் வருகிறது).

இப்படி இவர்களிருவரும் மேடையில் ஒருங்கிணைந்த குரலில் ஸ்வரம் லயம் தவறாமல் பாடும் அழகு பரவி இவர்கள் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது.

குறிப்பாக முரளிதரன் என்ற இளைஞன் சிறிது சங்கீதப் பயிற்சியும், பெரும் சங்கீத ஞானமும் உள்ளவன் தவறாது இவர்கள் இசை நிகழ்ச்சியைக் கேட்க வருவான். ஒருநாள் மீனாட்சியைத் தேடி வீட்டிற்கே வந்தான். தனியாக அல்ல, இவனை வளர்த்த அநாதை ஆஸ்ரமத் தலைவருடன். அவன் இசையார்வம், இசை ஞானம்பற்றி எடுத்துக் கூறிய ஆஸ்ரமத் தலைவர் பூபதி, அவனுக்கு இசைப் பயிற்சி தர வேண்டும் எனப் பணிவாக வேண்டினார். காலையில் மீராவின் பயிற்சி நேரத்தில் அவனுக்கும் பயிற்சி கொடுத்தாள். நாளடைவில் மீராவும் முரளியும் இணைந்து பாடும் அளவு அவர்கள் பயிற்சி வளர்ந்து சிறப்பானது.

மீராவிற்குத் திருமண வயது வந்துவிட்டது என்று எண்ணிய மீனாட்சி அவள் இசையை ஆதரித்து வளர்க்கும் மாப்பிள்ளை வேண்டுமென்றும், மீராவைப் பிரிந்திருக்க இயலாததால் தங்களுடன் சேர்ந்தே மீராவும் மாப்பிள்ளையும் இருக்க வேண்டுமென்றும் ஆசைப்பட்டு, கணவரிடம் இதுபற்றி கலந்தாலோசித்தாள்.

முரளியை மணக்க மீரா விரும்பினால் ஆஸ்ரமத் தலைவருடன் பேசலாம் என்றார் சுந்தரம். அவர்கள் விருப்பமும் அறிய வேண்டும் என்று நினைத்தனர்.

மீராவை அழைத்து, மீரா உனக்குத் திருமணம் செய்விக்க மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம். உனக்கு எப்படிப்பட்ட வரன் வேண்டும் என்று சொல் என்றாள் மீனாட்சி.

உங்கள் விருப்பம் தானம்மா என் விருப்பம் என் இசை வீணாவதை நீங்கள் சம்மதிக்க மாட்டீர்கள். எனக்கு அது போதும் என்றாள் மீரா. தன் இசையை நேசிப்பவன் தான் வேண்டுமென்று சூட்சுமமாகச் சொல்லிவிட்டாள்.

முரளி உன்னிடம் ஒரு கேள்வி. அது உன் பர்சனல் பற்றியது. கேட்கலாமா? என்றாள் மீனாட்சி.

என்ன ஆன்ட்டி, என் பர்சனல் என்கிறீர்கள். என்னை உங்கள் இசைக் குடும்பத்தில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளவில்லையா? என்றான் முரளி.

அந்த உரிமையில்தான் உன்னிடம் ஒன்று கேட்கப் போகிறேன் என்றாள் மீனா.

தாராளமாய்க் கேளுங்கள் உங்களுக்கில்லாத உரிமையா? நான் தாய் தகப்பன் யார் என்றே அறியாமல் அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன். உங்கள் உரிமை, அக்கறை எனக்குத் தேவை என்றான்.

உன் திருமணம் பற்றிய கேள்வியிது. எப்படிப்பட்ட பெண்ணை மணந்து கொள்வாய்?

இதில் எனக்குத் தனி விருப்பம் ஏதுமில்லை. ஆஸ்ரமத் தலைவர் என் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். அவர்தான் முடிவு செய்வார். என் இசையார்வம் புரிந்த பெண் வேண்டும் என்று இறைவனிடம்தான் பிரார்த்திப்பேன் என்று அவனும் சூட்சுமமாகத் தன்னிசைப் பாதுகாப்பைக் கூறினான்.

நல்லதாயிற்று என்று மீராவை அழைத்து “மீரா உனக்கு முரளியை மணக்கச் சம்மதமா? என்றாள். முதலில் நீங்கள் அவரையல்லவா கேட்க வேண்டும்?” என்றாள் மீரா. முரளி உனக்கு மீராவைப் பிடித்திருக்கிறதா? என்று கேட்டதற்கு “அவர்களுக்குப் பிடித்திருக்கிறதா?” என்றான். சரி உங்களுக்கு இதில் விருப்பம் இல்லையென்றால் நான் வற்புறுத்தவில்லை என்றதும், இருவரும் ஏககாலத்தில் எனக்கு விருப்பமில்லை என்று நான் சொல்லவில்லையே என்றதும் மீனாவிற்குச் சிரிப்பு வந்தது. இருவரும் என்னிடம் மாட்டிக் கொண்டீர்களா என்று வம்பு செய்ய, இரண்டு இளம் உள்ளங்களும் அன்பும், ஆனந்தமும் பூரிக்க நாணத்துடன் சிரித்து நின்ற காட்சியை நீங்களே கற்பனை செய்து மகிழ்ந்து கொள்ளுங்கள். ஒருவாறு திருமணம் முடிவாயிற்று. பதிவுத் திருமணம் செய்தனர். மீனாட்சியும், சுந்தரமும் ஆஸ்ரமத் தலைவரும் ஆசி கூற ஆஸ்ரமத்தில் அங்குள்ளோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டனர். ஜீவனற்ற சம்பிரதாயச் சடங்குகள் ஏதுமின்றி ஆஸ்ரமத்திலுள்ளோர் அனைவர்க்கும் புதிய ஆடைகள் கொடுத்து அவர்களோடு சேர்ந்து மணமக்களும், மற்றவர்களும் விருந்து உண்ண ஏற்பாடு. ஆஸ்ரமவாசிகள் யாவரும் அன்று மாலை தங்களுக்காக மீராவும் முரளியும் அமுதகானம் வாசிக்க விரும்பிக் கேட்டனர். மணமக்களை வாழ்த்தி மற்றவர் இசை நிகழ்த்தும் பரம்பரை பழக்கம் மாறி மணமக்களே இசை நிகழ்த்தும் புதுமை நிகழ்ந்தது. அன்றைய இசை நிகழ்ச்சி இவர்களின் பொருத்தத்தை உலகிற்கு உணர்த்திற்று எனலாம்.

திருமணத்திற்குப் பிறகு உடனே குழந்தை, குடும்பம் என்று ஆகிவிடாமல் வாழ்வு தந்த இசைக்கு நன்றி செலுத்தும் முகமாக இருவரும் இரவுபகலாக பிற இசை (கர்நாடக சங்கீதம் அல்லாத) இந்துஸ்தானி போன்றவற்றையும் பயின்று ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிந்து அந்தந்த ராகங்கள் தரும் ரசம், பயனுக்கேற்றவாறு பாடல்களை முரளி இயற்ற அவற்றை மீரா பாடிக்காட்ட, பிறகு உலக அளவில் பிரச்சனையாக உள்ள சுமுகக் குறைவை நீக்குவதே குறிக்கோளாக பாடல் இயற்றி அவற்றைக் கேள்வி பதில்களாக அமைத்து ஒருவர் கேள்வியைத் தக்க இசையில் பாட, ஒருவர் பதிலைத் தக்க இசையில் பாட, நடுநிலை கருத்தை மீனாட்சி பாட இசையில் “சுமுகத்தை” பட்டிமன்றமாக அமைத்து மேடையேற்ற அமோக வரவேற்பு. இதன் பயனாய் சுமுகமும் வளரவாரம்பித்தது. இரண்டாண்டுகள் ஓயாது புதுப்பாடல்களை இயற்றி ராகம் பொருத்தமாக அமைத்து இடையில் இருவரும் ஸ்வரம் பாடும் அழகான அமைப்புகளுடன் இவர்கள் கச்சேரி களை கட்டியது. இவ்வாறு மீராவும் முரளியும் சேர்ந்து பல இசை நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் பரப்ப அயல்நாடுகளிலிருந்தும் அழைப்பு வர உலக ஒருமைப்பாடே குறிக்கோளாக எல்லா மொழிகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். இளம் வயதில் இசையில் சாதனை படைத்து பல விருதுகளை வென்ற முதல் தம்பதியினர் என்று அனைவரும் பாராட்டினர். எம்.எஸ். அவர்கள் நூற்றாண்டு விழாவின் சிறப்பு இசை நிகழ்ச்சியாக எம்.எஸ் அவர்களின் குரல்வளம், பக்தியுணர்வு அடக்கம் யாவும் குறித்த பாடலை முரளி இயற்றி மீனாட்சியே இசையமைத்து மீரா தன் அம்மா எம்.எஸ். அவர்கள் மீது கொண்ட அன்பின் அடையாளமாக ஓரிசை நிகழ்ச்சியில் பாட மீராவிற்குப் பாராட்டும் பரிசும் மேடையில் குவிய யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக மீனாட்சி சபையில் மீராவுக்கு எம்.எஸ் அவர்களிடம் மீராவின் தாய் பெற்ற எம்.எஸ்-இன் பொன்னாடையைப் போர்த்தி எம்.எஸ். அவர்களும், மீராவைப் பெற்றவளும் இச்சபையில் சூட்சுமமாக மீராவை வாழ்த்தியதாகக் கூற எல்லோரின் கண்களும் பனித்து நெஞ்சங்கள் நெகிழ்ந்தன.

மீரா கலைத்துறையில் சாதித்தாய். அதற்கு அளவில்லை. என் காலம் முடியும் முன் இந்த இசை குடும்ப வாரிசுகளை எப்போது பெற்றுத் தரப் போகிறாய் என்றாள் மீனாட்சி. மறவாமல் ஸ்ரீ அன்னையின் அருளுரைகளை மனத்தில் இருத்தி இலட்சியக் குழந்தையைப் பெற்றுத்தா என்றனர் மீனாட்சி தம்பதியினர்.

திருமணமான மூன்றாம் ஆண்டு மீரா கருவுற்றாள். குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. மீராவின் வயிற்றுப் பிள்ளைக்கு மீனாட்சி காலையில் பூபாளம் இசைத்தாள். முரளி இரவில் நீலாம்பரி இசைத்தான். பகல் வேலைகளில் எல்லாவகை உணர்வுகளும் ஊட்டவல்ல சங்கராபரணம் பாடினாள் மீரா. சந்தோஷத்திற்கும், உற்சாகத்திற்கும் உகந்த பிலஹரி ராகத்தைச் சுந்தரம் பாட அனைவரும் வியந்தனர். சுந்தரம் இதுவரை வாயைத் திறந்து பாடியதேயில்லை. எப்படிங்க இது? என்று மீனாட்சி வியக்க கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமாமே. மீனாட்சி வீட்டுக் கைத்தடியும் பாடுகிறது என்று சுந்தரம் கூறிச் சிரிக்க வீடு ஆனந்த மயம் ஆயிற்று. ஒரு சுபயோக சுபதினத்தில் மலர்ந்தும் மலராத காலைப் பொழுதில் மீராவின் மகளாக, இசைக் குடும்ப ஏக வாரிசாக எம்.எஸ். பிறந்தார். தொட்டில் இட்டு குழந்தைக்கு இராகமாலிகா என்று பெயரிட்டு எம்.எஸ். (Mதூ குதீஞுஞுtதூ) என்றே அழைத்தனர். ஐந்தாம் வயதில் குழந்தை மீரா முரளியின் இசை நிகழ்ச்சியின் நடுவே மழலையில் ஸ்வரம் பாடி அசத்தினாள்.

(விளையாட்டுப் பருவத்திலேயே எம்.எஸ். மேடையில் தன் அம்மாவுடன் பாடுவாராமே).

மீனாட்சி மனம் நிறைந்தாள். இசைக்கு ஒரு பள்ளி அமைத்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டாள். மீராவும் முரளியும் அதை இசைக் கல்லூரியாக வளர்த்து நாத பிரம்மத்திற்கு நாதத்தால் நன்றி செலுத்திய வண்ணம் உள்ளனர். குழந்தை எம்.எஸ்-இன் பேச்செல்லாம் இசை வாயிலாகவே நடை பெற்றது. இவளுக்காக இவளுடன் பேச ஆசைப்படுபவர்கள் இசையில் பேச (பாட) முயற்சி செய்தனர். இசை நயம் புரிந்தால் நாமும் எம்.எஸ். உடன் பேசலாம். முயற்சி செய்வோம் வாருங்கள்.

நன்றி அன்னையே.

*********



book | by Dr. Radut