Skip to Content

11. அன்னை இலக்கியம் - மீன்கொடி

அன்னை இலக்கியம்

மீன்கொடி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

19. சிவசங்கரன்

தாத்தா வந்ததிலிருந்து அவரும், ஜமுனாவும் இடைவிடாது பேசிக் கொண்டே இருந்தனர். எனக்கு ஜமுனாவோடு பேச நேரமே கிடைக்கவில்லை. அந்த நேரத்தை சிவசங்கரனின் மென்பொருளைச் சீர் செய்வதில் செலவிட்டேன்.

‘என் அப்பாவால் நம் கம்பெனிக்குப் பெரிய நஷ்டம் வந்தது என்று பாட்டி கோபித்துக் கொண்டாராமே. அதன்பின் சமாதான- மானாரா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘யார் மேல்தான் அவள் கோபித்துக் கொள்ளவில்லை? உண்மை என்னவென்றால் உன் அப்பா செய்த காரியத்தால் கம்பெனியின் விற்பனை முப்பது சதவிகிதம் குறைந்து பின் முன்னூறு சதவிகிதம் அதிகமாயிற்று’ என்றார் தாத்தா.

‘அது எப்படி?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘பாண்டிச்சேரி வியாபாரி சாராயக் கடைகளுக்கு நம் பாட்டில்கள் போவதை மறைத்துப் பொய் சொல்லி விட்டான். அவன் சாராயக் கடைகளுக்குத் தந்ததைவிட நம்பிய என்னிடம் பொய் சொன்னதுதான் எனக்கு அதிக வருத்தத்தைத் தந்தது. நான் அவனுக்கு பாட்டில்கள் தர மாட்டேன் என்று சொன்ன ஒரு மாதம் கழித்து பாண்டிச்சேரிக்கு வந்த ஒரு பிரெஞ்சுக்காரன் கிளப்பிற்குப் போய் சாராயம் குடித்திருக்கிறான். அப்போது நம் பாட்டில், கண்ணாடி தம்ளர் தரத்தைப் பார்த்து அசந்து போய் விசாரித்து விட்டு, அடுத்த நாளே என்னைப் பார்க்க சென்னை வந்து விட்டான். அவன் பிரான்சில் பெரிய கம்பெனி வைத்திருக்-- கிறான். ‘என் யந்திரங்களுக்கு கண்ணாடி பாகங்கள் செய்து கொடு’ என்றான். சில நாட்கள் கழித்து இந்தியாவில் ‘எங்கள் யந்திரங்களை விற்றுக் கொடு‘ என்றான். சட்டென்று விற்பனை மூன்று மடங்காகி விட்டது. இதெல்லாம் நடப்பதற்குள் பாட்டி உன் அப்பாவைக் கோபித்துக் கொண்டாள். ஒரு வார்த்தை பொறுக்காத உன் ரோஷக்கார அப்பன் மதுரைக்குப் போயே போய்விட்டான். அப்போது அவன் சின்ன பையன். பதினெட்டு, இருபது வயதிருக்கும். சரியாக நினைவில்லை’ என்றார் தாத்தா.

‘நீங்கள் பாட்டியைச் சமாதானப்படுத்தவில்லையா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘நான் யாரையும் சமாதானப்படுத்துவதில்லை. சின்ன வயதில் உன் பாட்டியை ஓரிரண்டு முறை சமாதானம் செய்திருக்கிறேன். அவ்வளவுதான். யாராவது என்னை விட்டுப் போனால் நான் திரும்பக் கூப்பிடுவதில்லை. ஒரு தடவை ஓடியவன் அதையே திரும்பவும் செய்வான். ஆனால், உன் அப்பாவிற்கு வீடு வாங்க பணம் தந்தேன். வேண்டாம் என்று சொல்லி விட்டான். அதன்பின்னும் கஷ்டப்படுகிறானே என்று நான்கைந்து முறை பணம் தந்தேன். வாங்கிக் கொள்ளவில்லை. ஏதோ என் பிரியத்திற்காக பண்டிகை நாட்களில் ஜவுளி வாங்கித் தருகிறேன் என்றேன். பெரிய மனது பண்ணி அதை மட்டும் வருஷாவருஷம் வாங்கிக் கொள்கிறான். என் கம்பெனியில் ஒழுங்காக வேலை பார்த்த எல்லோருக்குமே எந்த ஊரில் இருந்தாலும் ஜவுளி வாங்கித் தருவேன். அது பாட்டிக்குத் தெரியாது. தெரிந்தால் எதிர்ப்புக் காட்ட பட்டினி கிடப்பாள். ஒருவருக்கும் ஒரு வாய் சாப்பாடு போடக்கூட மனசு வராத அற்பப் பிறவி’ என்றார் தாத்தா.

‘கம்பெனி வேலையை விட்டதும் அப்பாவிற்குப் பாண்டி வியாபாரி கடிதம் எழுதினாராம். ‘என்னால்தான் உங்கள் வேலை போய்விட்டது. பரிகாரம் செய்ய விரும்புகிறேன். எங்கள் கடையில் வேலைக்கு வாருங்கள்’ என்று எழுதியிருந்தாராம். அப்பா பதிலே போடவில்லை’ என்றாள் ஜமுனா.

தாத்தா பெருமூச்சு விட்டார். ‘இத்தனை வருஷம் உழைத்ததில் சொத்து சேர்ந்திருக்கிறது. வருமானத்தைதான் காணோம். யாருக்கும் எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. வருமானமில்லாத சொத்து, பிச்சைக்காரனுக்குக் கிடைத்த யானை போல. சொத்தைக் காப்பாற்ற நாம் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. ‘சுயதொழில் செய்’ என்று ஊருக்கெல்லாம் புத்திமதி சொன்னேன். என் பிள்ளைகள் வேலையே பார்த்ததில்லை. பேரர்கள் சம்பளத்திற்கு வேலைக்குப் போகிறார்கள். பரமனாவது சொந்தமாக ஏதாவது செய்யட்டும்’ என்றார்.

இப்படி ஏராளமான பழைய, புதிய கதைகளைத் தாத்தா ஜமுனாவிற்கு சொல்லிக் கொண்டேயிருந்தார். இவளும் ஏதோ துப்பறியும் கதை கேட்பது போல மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள். இதைச் சொன்னபோது ‘வாழ்க்கையில் மறைந்திருக்கும் மர்மத்தைத் துப்பறிந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினாள்.

தாத்தா வந்த அடுத்த நாள் என் மென்பொருள் வேலை முடிந்ததால், சிவசங்கரனைப் பார்க்கக் கிளம்பினேன். ஜமுனா இருநூறு ரூபாய் கொடுத்தாள். ‘மூன்றாயிரத்திற்கு ஷேர் வாங்க மறந்து விடாதீர்கள்’ என்றாள்.

‘எவரிடமும், எதையும் கேட்கக் கூச்சமாக இருக்கிறது’ என்றேன்.

‘ஜமுனா கேட்கிறாள் என்று சொல்லுங்களேன்’ என்று கூறி வழி அனுப்பி வைத்தாள் ஜமுனா.

சிவசங்கரன் மென்பொருளை இயக்கிப் பார்த்தான் ‘எல்லாம் சரியாகி விட்டது’ என்று கூறிவிட்டு காசோலைப் புத்தகத்தை எடுத்தான்.

‘எனக்குப் பணமாக வேண்டாம், பங்குகளாக வேண்டும்’ என்றேன்.

‘எப்போதிலிருந்து ஷேர்கள் வாங்குகிறாய்? யார் மூலம் வாங்குகிறாய்?’ என்று கேட்டான் சிவசங்கரன்.

‘இதுவரை வாங்கியதில்லை. இனிமேல்தான் உன் மூலம் வாங்க வேண்டும்’ என்றேன்.

‘என்ன திடீரென்று பங்கு சந்தையில் ஆர்வம் வந்து விட்டது? உன் அண்ணார்கள் சொன்னார்களா?’ என்றான் சிவசங்கரன்.

‘ஜமுனா வாங்கச் சொன்னாள். அண்ணார்கள் ஷேர்கள் வாங்குவார்கள் என்பதே எனக்குத் தெரியாது’ என்றேன்.

‘போன வருஷம் வரை ஏகப்பட்ட ஷேர்கள் வாங்கினார்கள். பெரிய நஷ்டம் வந்து கடனாளி ஆகி, சமீபத்தில்தான் எப்படியோ அந்தக் கடனைக் கட்டி முடித்தார்கள். வேறு என்னவெல்லாம் கடன் இருக்கிறதோ! இப்போது ஷேர்களோ, கடனோ வாங்குவதில்லை. இதெல்லாம் உனக்குத் தெரியாதா?’ என்றான் சிவசங்கரன்.

‘எனக்குத் தெரியாது. ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள இதென்ன நாவலா, சிறுகதையா?’ என்றேன்.

‘என்ன ஷேர் வேண்டும்?’ என்று கேட்டான் சிவசங்கரன்.

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்னையே வாங்கிக் கொடுக்கும்படி ஜமுனா சொன்னாள்’ என்றேன்.

‘மூன்றாயிரத்திற்கு என்ன வாங்குவது!’ என்ற சிவசங்கரன் சிறிது யோசித்து விட்டு ‘ஆதிசிஸ் சாப்ட்வேர் கம்பெனியின் ஷேர்களை வாங்கு. பெரிய சாப்ட்வேர் கம்பெனி பங்கு விலைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இன்போசிஸிலிருந்து வெளியே வந்த ஆறுபேர் ஆதிசிஸ் என்ற ஒன்றை சொந்தமாக ஆரம்பித்திருக்கிறார்கள். எவருமே வாங்காத ஷேர்கள். நீ வாங்கு’ என்றான்.

‘இன்போசிஸ் அவர்கள் மீது வழக்கு போடப் போவதாக செய்தி வந்ததே’ என்றார் ஒரு உதவியாளர்.

‘அது வதந்தி. ஆனால் அதன் பின்னால் ஏதோ ஒரு ரூபத்தில் உண்மை இருக்கும். வதந்தியை நம்பக் கூடாது. வதந்திக்குப் பின்னாலிருக்கும் உண்மையை நம்ப வேண்டும். இன்று ஆதிசிஸ் ஒன்றுமில்லாத கம்பெனி. எவருமே பொருட்படுத்தாத ஒன்றைப் பற்றி எல்லோரும் பொருட்படுத்திப் பேசுகிறார்கள் என்றால் அதைப் பற்றி ஏதோ நல்ல விஷயம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இன்போசிஸ் போன்ற பெரிய கம்பெனி ஆதிசிஸ் மீது வழக்கு போடப் போகிறார்கள் என்றால், பெரிய கம்பெனியின் நிர்வாகம் சிறிய கம்பெனியை ஆரம்பித்தவர்களின் திறமையைப் பார்த்து பதறுகிறது என்றுதானே அர்த்தம்?

உண்மையிலேயே இன்போசிஸ் வழக்குப் போட்டார்கள் என்றால் இன்று எவருக்கும் தெரியாமலிருக்கும் ஆதிசிஸ் உடனே உலகம் முழுவதும் பிரபலமாகிவிடும். அடுத்த நாளே ஷேர் விலை பல மடங்கு கூடி விடும். ஒருவேளை வழக்கு போடாவிட்டாலும், கம்பெனி மெல்ல வளரும்போது ஷேர் விலை மெல்ல மெல்ல உயரும்’ என்றான் சிவசங்கரன்.

‘அதையே வாங்கு’ என்றேன்.

எனக்காக முறைப்படி கணக்கு உருவாக்கி பங்குகளை என் பெயரில் வாங்க ஒரு மணி நேரமாயிற்று. சிவசங்கரன் கொடுத்த பல பக்கங்கள் கொண்ட படிவத்தில் அவன் சுட்டிக்காட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போட்டேன். என்ன படிவம் என்று தெரியவில்லை

வெளியே வந்தபோது சாலையோரமாக இளநீர் குடித்துக் கொண்டிருந்த சிவசங்கரனின் உதவியாளர் ‘சிவா உங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்’ என்றார்.

‘புரியவில்லை’ என்றேன்

‘என் மனைவியின் தங்கை சாப்ட்வேர் எழுதுபவள். இருபதாயிரம் ரூபாய்க்கு அவள் செய்திருக்க வேண்டிய வேலையை நீங்கள் ஐந்தாயிரத்திற்குச் செய்திருக்கிறீர்கள். என் மனைவி கேட்கப் போகும் கேள்விகளுக்கு நான் என்ன பதில் சொல்வது! ஏன் இவ்வளவு குறைவாக பணம் கேட்டீர்கள்?’ என்றார் உதவியாளர்.

‘நான் எதுவும் கேட்கவில்லையே. கொடுத்ததை வாங்கிக் கொண்டேன்’ என்றேன்.

‘வாழ்ந்தாற்போலத்தான். தானும் வாழாமல், அடுத்தவரையும் வாழ விடாமல். என்ன பிறவியோ!’ என்று எனக்குக் கேட்கும்படி முணுமுணுத்தார் உதவியாளர்.

கடைக்காரர் கேட்ட பணத்தைக் கொடுத்து இரண்டு இளநீர் காய்களை வாங்கிக் கொண்டேன்.

‘பரமன், சிவா உங்கள் நண்பர் என்பதால் குறைவான தொகைக்குச் செய்கிறீர்களா?’ என்று கேட்டார் உதவியாளர்.

‘அப்படியில்லை. என் வேலைக்கு எவ்வளவு வாங்குவது என்று தெரியவில்லை. அதனால் வேலை கொடுப்பவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன்’ என்றேன்.

‘என் மைத்துனிக்காக தெரிந்தவர்கள் மூலம் நான் பல வேலைகளை எடுக்க முடியும். கைவசமே மூன்று வேலைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவளால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. மாதம் முழுவதும் சின்னச் சின்ன வேலைகளாக என்னால் தர முடியும். செய்கிறீர்களா?’ என்றார் உதவியாளர்.

‘நான் செய்கிறேன். இப்போது கூட வேலையில்லாமல்தான் இருக்கிறேன்’ என்றேன்.

‘இருங்கள். நான் சிவாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன்’ என்றார் உதவியாளர்.

சிவாவின் உதவியாளரோடு அவர் வீட்டிற்குச் சென்றேன். அவரும், அவர் மைத்துனியும் நன்றாகப் பேசினார்கள்.

‘எனக்கு பெரும்பாலான வெளிநாட்டு வேலைகள் இன்டர்நெட் மூலம் கிடைக்கின்றன. நீங்கள் கூட முயற்சி செய்யலாம்’ என்றார் உதவியாளரின் மைத்துனி.

‘நீ பேசாமலிரு’ என்று தன் மைத்துனியிடம் கூறிய உதவியாளர் என்னிடம் ‘அது அவ்வளவு சுலபமில்லை. நேரம் வீணாகும்’ என்றார்.

உதவியாளர் ஏதோ போன் பேச அப்பால் சென்ற போது ‘நீங்கள் இன்டர்நெட்டில் முயற்சி செய்யுங்கள்’ என்றார் அவர் மைத்துனி.

‘எப்படி இன்டர்நெட்டில் வேலை வாங்குவது என்பது எனக்குத் தெரியாதே’ என்றேன்.

அதை எனக்குச் சொல்லித் தந்தாள் அந்தப் பெண்.

தன் மைத்துனியிடம் பேசிவிட்டு, உதவியாளர் எனக்கு இரண்டு வேலைகள் தந்தார். ஐந்தாயிரம் முன்பணம் தந்தார்.

‘ஒரு வாரத்தில் முடித்துத் தருகிறேன்’ என்று கூறி விடைபெற்றேன்.

அங்கிருந்து நேராக மயிலாப்பூர் சென்றேன். இசைக்கருவிகள் விற்கும் கடை ஒன்றினுள் நுழைந்தேன். எனக்கு வீணை பற்றி ஓரளவிற்குத் தெரியும். இரண்டாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் பலதரப்பட்ட வீணைகள் இருந்தன. ஒரு லட்சம் விலையுள்ள சரஸ்வதி வீணை பிடித்திருந்தது. இதற்கெல்லாம் பேங்கில் கடன் தருவார்களா என்று தினகரனைத்தான் கேட்க வேண்டும். வீணைக்காக கடன் வாங்க ஜமுனா ஒப்புக் கொள்வாளா என்று தெரியவில்லை. எல்லா வீணைகளையும் பார்த்துவிட்டு இறுதியில் நான்காயிரம் ரூபாய்க்கு வீணை ஒன்றை வாங்கிக் கொண்டேன். மூன்று முழம் மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டேன். பூக்காரி இரண்டரை முழம்தான் அளந்தாள் என்பது தெரிந்தும் அதை மனநிறைவோடு வாங்கிக் கொண்டேன்.

வீடு திரும்பியதும் பூவையும், வீணையையும் அவளிடம் தந்தேன். ‘ஏது பணம்?’ என்று ஜமுனா கேட்பாள் என்று நினைத்தேன். கேட்கவில்லை. ‘எவ்வளவு ஆயிற்று?’ என்று கேட்பாள் என்று நினைத்தேன். கேட்கவில்லை. வீணையைப் பற்றி ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

பூவை கூந்தலில் சூடிக் கொண்ட பின், சிறிது நேரம் வீணையை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அதை மார்போடு தழுவி முத்தமிட்டாள். என் நெஞ்சம் குளிர்ந்தது.

‘எனக்கு?’ என்று கேட்டேன்.

‘தாத்தா உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா. பின் அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு என் சட்டைக் காலரை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள். ‘எதையும் எவரிடமும் கேட்க மாட்டேன் என்று பெருமை அடித்து கொண்டீர்கள். முத்தம் மட்டும் கேட்கலாமா?’ என்றாள் ஜமுனா.

‘உன்னிடம் மட்டும் எதையும் கேட்பேன்’ என்றேன். பின் குற்ற உணர்வோடு ‘மலிவான வீணை’ என்றேன்.

‘இதன் மதிப்பு எனக்குத்தான் தெரியும்’ என்றாள் ஜமுனா.

சிவசங்கரன் தந்த ரசீதை ஜமுனாவிடம் தந்தேன். ‘ஆதிசிஸ் ஷேர்கள் வாங்கியதற்கு என்ன காரணம் சொன்னார்?’ என்று கேட்டாள். நான் சொன்னவற்றை கவனமாக கேட்டுக் கொண்டாள். இன்னொரு முறை கூறச் சொல்லி கேட்டுக் கொண்டாள்.

‘ஆதிசிஸ் சின்ன கம்பெனி, இன்போசிஸ் பெரிய கம்பெனி என்றீர்களே? நாமே இன்போசிஸ் போலவோ, அதை விட பெரிதாகவோ ஒரு கம்பெனி ஆரம்பித்தால் என்ன!’ என்றாள் ஜமுனா.

‘முதலில் இளநீர் சாப்பிடு. மூளைக் கொதிப்பு அடங்கும்’ என்று கூறி இளநீர் காய்களை அவளிடம் தந்தேன்.

‘தென்னந்தோப்பு இருந்தால் நன்றாக இருக்கும். இரண்டு காய்கள்தானா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘உனக்கொன்று, தாத்தாவிற்கொன்று’ என்றேன்.

‘உங்களுக்கு?’ என்றாள் ஜமுனா.

‘மறந்து விட்டேன்’ என்றேன்.

தாத்தாவிற்கு ஒரு காயைத் தந்துவிட்டு, இன்னொன்றை நானும், ஜமுனாவும் பகிர்ந்து கொண்டோம்.

சிவசங்கரனின் உதவியாளர் பற்றி சொன்னேன். வீணை வாங்கியது போக மீதியிருந்த பணத்தை அவளிடம் கொடுத்தேன்.

‘நல்ல பெண்ணா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘எனக்கே சுமாராகத்தான் சாப்ட்வேர் எழுதத் தெரியும். அவர் திறமையை என்னால் மதிப்பிட முடியாது. பழகினால்தான் குணம் தெரியும்’ என்றேன்.

‘அதைப் பற்றிக் கேட்கவில்லை. அழகியா என்று கேட்டேன்’ என்றாள் ஜமுனா.

‘நான் கம்ப்யூட்டரைத்தானே பார்த்தேன். பெண்ணைப் பார்க்கவில்லையே!’ என்றேன்.

‘அப்படியே எப்போதும் இருங்கள்’ என்றாள் ஜமுனா.

அன்றிரவு தூங்க வெகு நேரமாகிவிட்டது. இன்டர்நெட்டில் என் பெயரை சுயவேலை வாய்ப்பு தரும் பல வலைதளங்களில் பதிவு செய்த பின்தான் ஜமுனா என்னைத் தூங்க அனுமதித்தாள். தாத்தா கூடத்தில் படுத்தார்.

உள்ளறையில் நான் பாயில் சாய்ந்த பின் வீணையின் தந்திகளை மெல்ல வருடிக் கொண்டே இருந்தாள். அந்த மீட்டாத வருடலில் எனக்குள் மென்மையான காதல் கானம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

20. மீசை தாத்தாவின் துறவு

தாத்தா வந்த இரண்டாவது நாள் நானும், ஜமுனாவும் சித்தப்பாவின் வக்கீலைப் போய் பார்த்தோம். வக்கீல் இல்லை. வயதான உதவியாளர்தான் இருந்தார்.

அவருக்கு என்னைத் தெரிந்திருந்தது. ஜமுனாவைத் தெரியவில்லை. என் மனைவி என்றபோது உடனடியாக நம்பவில்லை. ‘எங்களுக்குப் பத்திரிக்கை வரவில்லையே. பின் உனக்கு எப்படிக் கல்யாணம் ஆகியிருக்க முடியும்? உண்மை- யிலேயே மனைவிதானா? ஆதாரமில்லையே?’ என்று சந்தேகப்பட்டார்.

நாங்கள் சித்தப்பாவை சந்தித்த மறுநாளே சித்தப்பா வக்கீலைச் சந்தித்து வழக்கை முடிக்கச் சொன்னாராம்.

‘கிட்டத்தட்ட ஜெயித்து விட்டோம். இப்போது போய் வழக்கை இனி நடத்த வேண்டாம் என்கிறாயே!’ என்று வக்கீல் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சித்தப்பா கேட்கவில்லையாம்.

‘வழக்கை முடித்து விட்டு, அது சம்பந்தமான எல்லா காகிதங்களையும் உன் சித்தப்பாவிடம் வக்கீல் தந்தார். அவர் எல்லாவற்றையும் இங்கேயே கிழித்துப் போட்டுவிட்டார்’ என்றார் உதவியாளர்.

எனவே எங்களுக்கு எந்த வேலையும் இருக்கவில்லை.

வாடகை ஸ்கூட்டரை மறுநாளே திருப்பிக் கொடுத்து விட்டேன். பெரும்பாலும் தாத்தாவின் சைக்கிளில் வெளியே சென்று வந்தேன். ஜமுனாவோடு போவதென்றால் மட்டும் மீண்டும் அரை நாள் அல்லது ஒரு நாள் கணக்கில் வாடகைக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொண்டேன். வாடகை ஸ்கூட்டர் கடை வரை சைக்கிளில் சென்று அதை நிறுத்தி விட்டு, ஸ்கூட்டரை எடுத்து வருவது எனக்குச் சிரமமாக இல்லை. ஜமுனாவோடு செல்லும் எண்ணம் உற்சாகத்தைத்தான் தந்தது.

மீசை தாத்தா மூன்று நாட்கள் எங்களோடு தங்கியிருந்தார். நான்காவது நாள் காலை போக் ரோடு வீட்டிற்குச் சென்றார்.

போகுமுன்பு ஜமுனாவிடம் கையெழுத்திட்ட காசோலைப் புத்தகம் ஒன்றை நீட்டினார். ‘பரமன் எவ்வளவு சம்பாதிப்பான் என்று எனக்குத் தெரியும். வசதியாக இரு’ என்றார்.

அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டாள் ஜமுனா. ‘இவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதற்குள் என்னால் வசதியாக வாழ முடியும்’ என்றாள் ஜமுனா.

அன்று மாலை தாத்தாவின் நண்பர் வாசுதேவய்யா ஒரு சிறு பெட்டியோடு வந்தார். அவருக்குத் தாத்தாவின் வயதாகிறது. சூளைமேட்டில் எங்கள் வீட்டருகே ‘நமது நகலகம்’ என்று ஒரு போட்டோ காபி கடை வைத்திருக்கிறார். அவர் பெயர் வாசுதேவன். நான் அவரை வாசுதேவய்யா என்று அழைக்க ஆரம்பித்து அந்த பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.

‘வெளியே போயிருந்தீர்களா?’ என்று கேட்டார்.

‘இல்லையே’ என்றாள் ஜமுனா.

‘கொஞ்ச நேரத்திற்கு முன்பு மீசைக்காரன், கடைக்கு வந்து இந்தப் பெட்டியை உன்னிடம் தரச் சொன்னான்’ என்று கூறி கையில் இருந்த சிறு பெட்டியையும், அதன் சாவியையும் ஜமுனாவிடம் தந்தார்.

‘வேறென்ன சொன்னார்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘பெரிய பெட்டியோடு ஆட்டோவில் வந்தான். ‘வெளியூர் போகிறேன்’ என்று மட்டும் சொன்னான். ஏதோ சரக்கு விற்கப் போகிறான் என்று நினைக்கிறேன்’ என்றார் வாசுதேவய்யா. அவருக்கு நன்றியோடு ஒரு காபியும் தந்து அனுப்பிய பிறகு ஜமுனா பெட்டியைத் திறந்தாள்.

பெட்டி நிறைய ஆவணங்களும், பத்திரங்களும், ஒரு கடிதமும் இருந்தன.

கடிதத்தை வாசித்துவிட்டு ஜமுனா என்னிடம் தந்தாள். தாத்தா கூட்டெழுத்தில் கடிதத்தை எழுதியிருந்தார்.

‘என் பிரியத்திற்குரிய ஜமுனா,

நம்மிடம் இருக்கும் எல்லாச் சொத்துக்களின் விவரங்களையும், பத்திரங்களையும் முக்கியமான காகிதங்களையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். பேரர்கள் கூட்டுக் குடும்பமாக சொத்துக்களை வைத்திருப்பதோ அல்லது பிரித்துக் கொள்வதோ அவர்கள் விருப்பம். பாகப்பிரிவினை செய்வதென்றால் அது சுமுகமாக நடக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அதற்கு ஆவன செய்யவும். பல வெற்றுக் காகிதங்களில், பத்திரங்களில் தேதி போடாமல் கையெழுத்து போட்டு வைத்திருக்கிறேன். சொத்து, கம்பெனி, குடும்ப விஷயங்கள் அனைத்திலும் எந்த முடிவும் நீ எடுக்க உனக்கு முழு உரிமையைத் தருகிறேன். மற்றவர்கள் உன் முடிவிற்குக் கட்டுப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

எனக்குரிய முழுமையைத் தேடிச் செல்கிறேன்.

அன்புடன்,

உன் தாத்தா.’

‘எத்தனை நாள் பயணம் என்று சொல்லவில்லையே’ என்றேன்.

‘அவருக்கே அது தெரியாது’ என்றாள் ஜமுனா.

‘கடிதத்தைப் பார்த்தால் துறவியாகி விட்டார் என்று தெரிகிறது’ என்றேன்

‘துறவியாகப் போகிறவர் பெட்டியோடா போவார்?’ என்றாள் ஜமுனா.

‘திரும்பி விடுவார் என்றா சொல்கிறாய்?’ என்றேன்

‘அவருக்குரிய முழுமையை தேடிப் போயிருக்கிறார். அது கிடைத்தால் திரும்பி விடுவார்’ என்றாள் ஜமுனா.

‘கிடைக்கவில்லையென்றால்?’ என்று கேட்டேன்.

‘கிடைக்கும்வரை தேடிக் கொண்டு இருப்பார். தேடிக் கொண்டே முன்னேறினால் கடைசியில் தேடுவது கிடைத்து-- விடும். தேடுவதை பாதியில் விட்டுவிட மாட்டார்’ என்றாள் ஜமுனா.

‘அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லையே?’ என்றேன்

‘உங்கள் அண்ணார்களிடம் சொல்லுங்களேன்’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம். அதைச் செய்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்’ என்றேன்

சிரித்தாள் ஜமுனா. அவள் சிரித்தது அசந்தர்ப்பமானதாக இருந்தது.

தாத்தா வைத்திருந்த பட்டியலையும் பத்திரங்களையும் ஒவ்வொன்றாக சரிபார்க்கத் தொடங்கினாள் ஜமுனா. இருட்டத் தொடங்கும் நேரத்தில் போக் ரோடு வீட்டிற்கு கிளம்பினோம்.

கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தாள் ஜமுனா.

‘பெட்டி?’ என்று கேட்டேன்.

‘இங்கேயே இருக்கட்டும். எல்லாவற்றையும் முழுவதுமாக வாசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘இதையெல்லாம் வாசித்தாலும் எனக்குப் புரியாது’ என்றேன்.

‘உங்களை யாராவது வாசிக்கச் சொன்னார்களா?’ என்று கேட்டாள் ஜமுனா.

(தொடரும்)

*********



book | by Dr. Radut