Skip to Content

08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

விற்க நினைத்ததைப்போல் 3 மடங்கு விலைக்குப் பேரம் படிந்து, அக்ரிமெண்ட் பாதி எழுதியபின், தடை வந்தது. வந்த நல்ல விலை போய்விட்டது என்று கவலையடைந்தவர், “வந்தது போகாது. அதுவும் தரிசனம் மூலமாக வந்தது போகாது.

முயன்றால் மீண்டும் கிடைக்கும். சமாதி தரிசனம் செய்தால் போதும்” என்ற எண்ணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஏற்றுக்கொண்டவுடன் தீராத கவலை மனதை விட்டு விலகியது; நம்பிக்கை ஒளி புறப்பட்டது. 4 மணி நேரத்தில் போனது திரும்பி வந்துவிட்டது. ஓர் உயர்ந்த கருத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததால் கவலையழிந்து, நம்பிக்கை ஏற்பட வழி ஏற்பட்டது. உயர்ந்த கருத்துக்கு அந்தத் திறனுண்டு. டிபார்ட்மெண்டில் இரண்டு சான்ஸ் கொடுத்தும் அக்கௌண்ட் டெஸ்டில் தவறி, மேலும் இரு சான்ஸ் ஸ்பெஷலாக வாங்கி, அதிலும் பெயிலாகி, டிபார்ட்மெண்டிற்குத் தேவையான டெக்னிக்கல் பரீட்சையை இரு முறை எழுத, அதிலும் பெயிலானவர்க்கு, புதிய உத்தியோகத்தில் சேர்வதற்கு முன் பழைய உத்தியோகத்தில் அதிக சம்பள உயர்வைச் சர்க்கார் ஏற்படுத்தியுள்ளார்கள் என்ற நிலையில், இக்கருத்தை ஏற்றால் பலனுண்டு என்று சொல்லியபொழுது, அவர் மிகவும் தயங்கினார். “வந்தது போகாது. அதுவும், ஸ்ரீ அரவிந்தர் அறையைத் தரிசனம் செய்தபின் வந்தது போகாது” என்ற கருத்தை அவர் ஏற்றுக்கொண்டால், 4 முறை பெயிலான அக்கௌண்ட் டெஸ்டை அடுத்தாற்போல் ஒரே முறையில் பாஸ் செய்ய முடியும். அடுத்த டெக்னிக்கல் டெஸ்டையும் ஒரே முறையில் பாஸ் செய்ய முடியும். அவரால் அந்த உயர்ந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இரண்டு பரீட்சைகளையும் பாஸ் பண்ண முடிந்தது. உயர்ந்த கருத்தை மனம் ஏற்றுக்கொண்டால் கவலை கரையும்; நிம்மதி ஏற்படும்; பிரச்சனை தீரும்.

நல்ல சம்பளத்தையும், உத்தியோகத்தையும் விட்டுவிட்டுத் தொழில் (industry) ஆரம்பிக்க முயன்று, 6 வருஷ காலமாக உழன்றவர், கதிகலங்கிய நிலையில், இனி உருப்பட வழியேயில்லை என்ற நிலையில், “நீ உன் காணிக்கையை இந்தக் கஷ்டக் காலத்திலும் தொடர்ந்து தருகிறாய்; குறைக்காமல் செலுத்துகிறாய். எது கை விட்டாலும் காணிக்கை தன் கடமையைப் பூர்த்தி செய்யும், கவலையை விடு” என்ற கருத்தை ஊன்றிக் கேட்ட அவரால் கண்ணீரைத் துடைத்துக்-கொண்டு அன்னையை நினைத்துச் சிரிக்கவும் முடிந்தது. 7 நாளில் 3 புதிய வாய்ப்புகள் உற்பத்தியாகி கைகொடுத்தன. கவலை போய், நிம்மதி வந்தது. அவரும் பெரிய தொழிலதிபராகி விட்டார்.

ஒரு தொழிலதிபருக்கு 3 தொழில்கள். எல்லாத் தொழில்களும் நல்ல முறையில் நடந்துவருகின்றன; ஆர்டருக்குக் குறைவில்லை; பணத் தட்டுப்பாடில்லை; உற்பத்தியில் தடையில்லை. தொழில் இலாபம் வருவதைப் பார்த்த தொழிலாளர்கள் வேறுவிதமாக நினைத்தார்கள்; நினைவைச் செயல்படுத்தினார்கள்; சிறிய சிக்கல் ஏற்பட்டு, பெரிய சிக்கலாயிற்று; ஒன்று போனால் மற்றொன்று. லேபர் என்றால் அலர்ஜி என்ற நிலைமைக்கு வந்துவிட்டார். தொழிலை மூட மனமில்லை. வேறு வழியில்லாமல் நித்திய அவஸ்தையுடன் நிம்மதி இழந்த நிலையில், அவர் எடுக்காத முடிவைத் தொழிலாளர்கள் எடுத்து, எல்லாத் தொழில்களையும் மூடிவிட்டார்கள். இனி கவலைக்கே இடமில்லை. தொழில் இருந்தால்தானே கவலையை உற்பத்தி செய்யும்! நம் கையில் உள்ள பிடியைப் பெரிய மனது செய்து விட்டுக்கொடுப்பது அன்னை முறைகளில் ஒன்று என்று அறிந்து, அந்தத் தொழில் அதிபர் ஸ்டிரைக் நேரத்தில் வந்த ஒரு சந்தர்ப்பத்தில் தைரியமாக அம்முறையைக் கையாண்டார். ஸ்டிரைக் முடிந்தது. ஒரு மாதம் கழித்து அவர் எழுதினார். ‘இதுவரை லேபர் என்றால் எனக்குத் தலைவலி; இன்று லேபர் பிரச்சனையில்லை. இனி லேபர் பிரச்சனையாக வழியும் இல்லை. கவலை ஒழிந்து, பூரண நிம்மதி ஏற்பட்டுவிட்டது” என்று அவர் எழுதினார்.

என் தொழில் வருமானம், மழையை பொறுத்தது; மழை பெய்தால் உண்டு, பெய்யாவிட்டால் ஒன்றுமில்லை. அதனால் எனக்கு நிம்மதி என்பது எப்பொழுதுமே இருந்ததில்லை என்று ஒருவர் சொன்னால் அது முழு உண்மை. அவர் மழைக்குக் கட்டுப்பட்டவர். மழை அவர் கையில் இல்லை. அதனால் அவருக்கு நிம்மதி ஏற்பட வழியில்லை. இது ஒருவருடைய தொழில் நிலை. இவருக்கு நிம்மதி ஏற்பட முடியுமா? அன்னை நிம்மதி அளிப்பாரா? அப்படிப்பட்ட வழி ஒன்று இருந்தால் தெரிந்துகொள்ள எல்லோரும் விரும்புவார்கள் இல்லையா?

அவர் சொல்வது உண்மை. வாழ்க்கையில் அந்த உண்மை நின்று நிலைபெறுகிறது. அன்னையின் வாழ்வில், அதாவது அன்னை பக்தர்களுக்கு அளிக்கும் வாழ்வு அந்த உண்மைக்குக் கட்டுப்படாது. அன்னை வாழ்வில் நிம்மதி நிலையானது. மழைக்குத் தொழில் கட்டுப்படலாம். அன்னை வாழ்வு மழையாலோ, மற்றதாலோ நிர்ணயிக்கப்படக்கூடியதில்லை. அன்னை வாழ்வு தன்னையே நிர்ணயித்துக்கொள்ளும் திறனுள்ளது. மழையால் நிர்ணயிக்கப்படக் கூடிய வருமானம், அன்னை வாழ்வில் நம் நம்பிக்கையால் நிர்ணயிக்கப்படும்.

இந்த உண்மையை அந்த அன்பர் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்ற பல அன்பர்களுடைய வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் விளக்கினால், அந்த அன்பர் அதை ஏற்றுக்கொண்டால், அவருக்கு நம்பிக்கை பிறக்கும். 45 வருஷமாக இல்லாத நிம்மதி அந்த நம்பிக்கை மூலம் ஏற்படும். தொழிலில் மழை என்பது முக்கியம். என்றாலும் மற்ற விஷயங்களாக விலை கிராக்கி, சர்க்கார் மான்யம் போன்ற வேறு பல அம்சங்கள் இருப்பதால், அன்னை ஓர் அம்சம் பொய்த்த காலத்து, மற்றோர் அம்சத்தின் மூலம் அதே வருமானத்தைக் கொடுப்பார். அன்பருக்குத் தேவையானது நம்பிக்கை. மழை மீதுள்ள நம்பிக்கையைத் தடம்புரட்டி அன்னை மீது வைக்க வேண்டும். அன்னை பல வகைகளில் செயல்பட முடியும். பலனை அன்னை நிர்ணயிப்பதால், அன்னை மீது நம்பிக்கையுள்ளவரை பலனுண்டு; நிம்மதிக்குப் பங்கம் வாராது.

“எனக்கும் வயதாகிறது. என்னைப் பார்த்தபின் எந்த வரனும் திருமணத்திற்குச் சம்மதித்ததில்லை” என்று நம்பிக்கையை இழந்தவருக்கு நம்பிக்கையை இடம் மாற்றி வைத்தால் நல்லது என்ற எண்ணம் இதமாகப்பட்டது. தன் அழகை நம்புவதைவிட, அன்னையை நம்புதல் நல்லது என்ற எண்ணத்தை அவர் ஏற்றுக்கொண்டார். நம்பிக்கையும், நிம்மதியும் பிறந்தன; கவலை அழிந்தது. அடுத்த வரன் சம்மதித்தார். அவர் மிராசுதாரர். திருமணம் நடந்தேறியது.

“என் வேலை நிலையில்லை. ஏனெனில் என்னுடைய டிபார்ட்மெண்டே தற்காலிகமானது. நான் எப்படி நிம்மதியுடனிருக்க முடியும்?” என்றவர் டிபார்ட்மெண்ட், சட்டம், இவற்றிலிருந்து நம்பிக்கையை அன்னையிடம் மாற்றியவுடன், டிபார்ட்மெண்டைக் கலைத்து விட்டார்கள். அவருடைய ஆரம்ப பயம் பலித்துவிட்டது. செய்வதறியாது திகைத்திருந்த நேரத்தில், நம்பிக்கையை இழக்காத காரணத்தால், டிபார்ட்மெண்டிலிருந்து எதிர்பாராதவிதமாகக் கடிதம் வந்தது. மாநில சர்க்கார் இந்த மத்திய சர்க்கார் டிபார்ட்மெண்ட் கலைக்கப்படுவதால், இதிலுள்ள எல்லா ஆபீசர்களையும் அதே சம்பளத்தில் தன் இலாக்கா ஒன்றில் எடுத்துக்கொள்ள சம்மதித்து இருப்பதாகவும், அதனால் புது போஸ்டிங் வரும் என்று கடிதம் கூறியது. அன்னையை முழுவதும் நம்பிய அன்பருக்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கும் நேரத்தில், அவரை கெஜட் பதவிக்குத் தேர்ந்தெடுத்து விட்டதாக மற்றொரு தகவல் கிடைத்து, நிலைமை மாறி உயர்ந்தது.

(தொடரும்)

**********



book | by Dr. Radut