Skip to Content

11. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

G. மகேஷ், சென்னை

ஆகஸ்ட் 15 தரிசன நாளன்று, தியான மையத்தில் புத்தகங்களை வரிசையாக ஒழுங்குபடுத்தி, இருக்கைபோல் அமைத்து, அதில் பகவானது திருவுருவப்படம் வைத்திருந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து, புத்தகங்களை எடுத்துவைக்கும்பொழுது, அதிக எண்ணிக்கையில் இருந்தது பரம்பொருள் I, II மற்றும் III. பரம்பொருள் புத்தகங்கள் அன்பர்களுக்குப் பயன்பட வேண்டும், அதற்கென அன்பர்களை அழைத்து வருமாறு அன்னையினை ஆழ்ந்து பிரார்த்தித்தேன்.

மறுநாள் வழக்கம் போல, தியான மையத்தில் சேவை செய்துகொண்டிருந்தேன். வயதான தம்பதியர் மையத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

பிரார்த்தனை முடிந்ததும், அவர்கள் கவனம் என் பக்கம் திரும்பியது. என்னைப் பார்த்தவுடன் அழ ஆரம்பித்து விட்டனர்.

ஏன் அழுகை, என கேட்டதற்கு, எங்களுக்கு உன்னைப் போல ஒரு மகன் இல்லையே என வருத்தப்பட்டனர்.

அன்னையே உங்களுக்குக் குழந்தையாக இருப்பார் கவலைப்படாதீர்கள் எனக் கூறினேன்.

சிறிது நேரம் கழித்து பேச ஆரம்பித்த அவர்கள், தங்களுக்கு 28 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், அவன் இருந்தும் இல்லாதது போல் உள்ளதாகவும் கூறினர்.

அவர்களது ஊரில் மூன்று தலைமுறைகளாக நன்கு செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனம் அவர்களுடையது. செல்வ வளம் நிறைந்த குடும்பம். மகனின் குணம் மற்றும் நடத்தை அவர்களுக்கு மிகவும் வருத்தம் தரக்கூடியதாக இருந்தது.

அவர்கள் மேலும் கூறியவை:

மகனை நெறிப்படுத்த அனைத்து வகையிலும் முயன்றும் எதுவும் பலிக்காத நிலையில், அவனது ஜாதகத்தைக் கொண்டுபோய் ஒரு ஜோசியரிடம் காண்பித்தபோது, ‘உங்கள் மகனின் ஜாதகம் மிகவும் மோசமானது. அவரை மாற்ற இயலாது. விதியே என்று நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்’ எனக் கூறிவிட்டார்.

பின் எங்களது ஜாதகத்தைக் காண்பித்@தாம். அதைக் கணித்த பிறகு அவர், இது எங்களின் மூதாதையர் கர்மபலன். எந்த ஒரு பரிகாரமும் இதற்கு இல்லை. அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறினார்.

வருத்தம் அதிகமாகிவிட்டது. இப்போது அன்னையே கதி என்று வந்திருக்கிறோம் என்றனர்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய The Life Divine படித்தால் கர்மம் கரையும் என நான் படித்திருக்கிறேன். தமிழில் விளக்கம் ‘பரம்பொருள்’ என்ற புத்தகமாக வந்துள்ளது. நம்பிக்கையோடு அந்த புத்தகத்தைப் படித்தால் நல்ல வழி பிறக்கும் என்றேன்.

இரண்டு செட் புத்தகங்களை பக்தியுடன் வாங்கிச் சென்றனர்.

தினமும் பரம்பொருள் புத்தகத்தை வாசிப்பதைத் தொடர்ந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களின் பிரச்சனை அதிகமானது. மகன் தினமும் மது அருந்திவிட்டு வருவது, வீட்டில் பணம் திருடுவது, பிரச்சனைகளில் ஈடுபடுவது என மதுவுக்கு அடுத்தபடியான தவற்றையும் செய்வதாக அவனது போக்கு இருந்தது.

அவர்களது வளர்ப்பு முறையைக் கண்ணீர் மல்க அன்னையிடம் சமர்ப்பணம் செய்தனர்.

பின்னர் ஒரு நாள் அவர்களது மகனை, நிறுவனம் தொடர்பாக வெளியூர் அனுப்ப வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. கையில் 1 இலட்ச ரூபாய் பணமும் அத்துடன் பரம்பொருள் புத்தகங்களையும் வைத்து அனுப்பி வைத்தனர்.

அவர்களின் மகனோ, வழக்கம் போல அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மீதம் இருந்த தொகையை எடுத்துக் கொண்டு தன் நிறுவனம் தொடர்பான வேலையைக் கவனிக்க நண்பர்களிடம் விடைபெற்றுச் சென்றார்.

மயக்கமாக இருந்ததால், நிறுவனத் தொடர்பாக சந்திக்க வேண்டியவரைச் சிறிது நேரம் கழித்து சந்திக்கலாம் என்று   எண்ணி கடற்கரைக்குச் சென்று, கையிலிருந்த பையைக் கரையில் வைத்துவிட்டு சிறிது நேரம் குளித்தார்.

குளித்து முடித்துவிட்டு கரையில் வந்து பார்த்தால், பையில் வைத்திருந்த தொகை, செல்போன், லேப்டாப் அனைத்தும் திருடு போய்விட்டன.

பெற்றோர் பாதுகாப்பெனக் கொடுத்த பரம்பொருள் மூன்று பாகங்கள் மட்டும் பத்திரமாக இருந்தது.

அந்த நிலையில் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேலும் குடி போதையில் இருந்ததால் யாரும் உதவ முன்வரவில்லை. பசியும் களைப்பும் அதிகரிக்க கையில் பரம்பொருள் புத்தகங்கள் அடங்கிய பையோடு ஈர உடையுடன் அங்கும் இங்குமாய் அலைந்தார். ஒரு ஆட்டோக்காரரிடம் தன் நிலையை எடுத்துக் கூறி, பெற்றோருக்கு அவரது செல்போனிலிருந்து அழைத்துப் பேசினார்.

பெற்றோர் மகனது நிலைமை அறிந்து, முதலில் கவலையடைந்தனர். மகன் கையில் பரம்பொருள் புத்தகம் பத்திரமாக இருக்கிறது என்று நம்பிக்கைக் கொண்டனர்.

பிறகு ஆட்டோக்காரரின் வங்கிக் கணக்கில் ரூ. 10,000/- போட்டு, அதை எடுத்துக்கொடுத்து உதவச் சொன்னார்கள்.

ஆட்டோக்காரர் அவரை ஒரு ஹோட்டலில் அமர்த்தி சாப்பிட வைத்துவிட்டு ATM -இல் பணம் எடுக்கச் சென்றுவிட்டார். அவர் பசியடங்க சாப்பிட்டுவிட்டுப் பார்த்தால், பணம் எடுக்கச் சென்ற ஆட்டோக்காரர் திரும்பி வரவேயில்லை. சிறிது நேரம் சென்ற பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

வீட்டில் பலமுறைகள் பணம் திருடி ஊதாரித்தனமாக செலவு செய்தது நினைவுக்கு வந்தது. ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையுடன் இருந்தார்.

அந்த நேரம் அங்கு வந்த ஹோட்டல் முதலாளியிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறினார். முதலாளி ஷீரடி சாய்பாபாவின் பக்தர்; அன்று வியாழக்கிழமையாய் இருந்ததால், யாரேனும் ஒருவருக்கு உண்ண உணவு தந்து, உடுக்க உடையும் தருவது வழக்கம் என்று கூறி காசு வேண்டாம் என்றதுடன் உடுக்க உடையும் கொடுத்து அனுப்பினார்.

உடையை மாற்றிக் கொண்டு, ஹோட்டல் முதலாளிக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து பேருந்து நிலையம் வந்து அமர்ந்து, தன் பையில் இருந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். கண்ணீர் மல்க உட்கார்ந்திருந்தார்.

அந்தப் பக்கமாக வந்த கூலித் தொழிலாளி இவரைப் பார்த்து அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். நிலைமையைப் புரிந்து கொண்ட அத்தொழிலாளி, ‘என்னால் உங்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவ முடியாது. ஆனால் நீங்கள் விரும்பினால் என்னுடன் வேலை செய்ய வாருங்கள். வேலையை முடித்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு அதை வைத்துக் கொண்டு ஊர் திரும்புங்கள்’ என்று கூறினார்.

வேலை செய்து பழக்கம் இல்லாவிட்டாலும் மிகுந்த சிரமத்துடன் செய்தார். ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.

பெற்றோர் விரும்பிய மகனாக திருந்திய நிலையில் தற்போது நிறுவனப் பொறுப்பில் உள்ளார். முன்னர் பெண் தர யோசித்தவர்கள், இன்று பெண் தர போட்டியிடுகின்றனர்.

அனைத்தும் கைவிட்ட நிலையில், ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீ அன்னையையும் நம்பிக்கையுடன் ஏற்ற பெற்றோரின் ‘பரம்பொருள்’ புத்தக வாசிப்பு மகனைத் தலைகீழாக திருவுருமாற்றம் செய்ய உதவியது அற்புதத்திலும் அற்புதம் அன்றோ!

***********

ஜீவிய மணி

நல்லது, நியாயம் என ஒருவருக்குப் புரிந்தால் அதை பிறருக்காகவோ, ஊரார் ஆட்சேபணைக்காகவோ விட்டுக் கொடுக்காமல் செய்பவர் தனித்தன்மையுடையவர். அவர் அன்பரானால் அவர் செய்யும் வேலைகட்கு உதவி பெரும் அளவில் பெருகி வருவதைக் காணலாம்.

***********



book | by Dr. Radut