Skip to Content

10. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

பிரச்சனையின் பூர்வோத்திரம்:

பிரார்த்தனை முறையுள்ளதாகவும், அதற்குரிய எல்லா அம்சங்களைப் பூர்த்தி செய்திருந்தாலும் சில சமயங்களில் பலன் இருப்பதில்லை. அதனால் பிரார்த்தனை பலிக்கவில்லை என்று பொருளில்லை. நாம் செய்தது குறையானது என்றும் அர்த்தமில்லை. பிரச்சனை என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் அதற்கு ஒரு பூர்வோத்திரம் இருக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலும் கொஞ்சம் யோசனை செய்தால் அது விளங்கும். விளங்கிய காரணத்தை விலக்கியவுடன் இதுவரை செய்த பிரார்த்தனை எதிர்பார்த்த முழுப் பலனை அளிக்கும். ஒரு செல்வருடைய மகன் சிறப்போடும், செல்வாக்கோடும் இருக்கும் நிலையில், அவரை நம்பி அவருடைய நிழலில் வாழ்க்கையை நடத்தும் அவருடைய தமக்கை புருஷர் இவரைக் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார். கேலி, நையாண்டி எல்லாம் கேலிக்கூத்தாக மாறி, பொறுக்க முடியாத அளவுக்கு வந்து-- விட்டது. முறையாகச் செய்யும் பிரார்த்தனையால் இந்தப் பிரச்சனையை அவரால் தீர்க்க முடியவில்லை. அவர் கவலைக்குரியவராக இருந்த நேரத்தில் இந்தக் கருத்துப்படி அவர் பிரச்சனை தீரும் என்பதை உணர்ந்தார். கருத்தை விளக்கிய அன்பர், செல்வர் மகனைத் தன் வாழ்க்கையை நினைவுபடுத்தும்படி கூறினார். உடனே நினைவுக்கு வந்தது அவருடைய பள்ளிப் படிப்பு. சிறு வயதில் பிறரைக் கேலி செய்வதில் கெட்டிக்காரன் என்று தான் பெயர் வாங்கியதும், தான் செய்த கேலி பொறுக்க முடியாமல் பள்ளியை விட்டு ஒரு மாணவன் நின்றதும் நினைவுக்கு வந்தது. இன்றைய பிரச்சனையின் ஆணிவேர் அன்றைய நிகழ்ச்சி என்பது தெரியவந்தவுடன், இனி மனத்தளவிலும் அந்த மனப்பாங்கு கூடாது என்று அவர் உணர்ந்து, பழைய நிகழ்ச்சிக்காக முழு மனதுடன் வருந்தி, புதிய மனப்பாங்கை ஏற்றுக் கொண்டார். எட்டாம் நாள் கடையிலும், வீட்டிலும், உறவிலும், ஊரிலும் உள்ள நிலைமைகள் பல்வேறு காரணங்களால் பல்வேறு விதங்களாக மாறிக்கொண்டிருந்தன. தமக்கை புருஷர் செல்வர் மகனைத் தேடி வந்தார். (இதுநாள்வரை இருந்த கேலியைக் காணோம்). மனிதர் மாறியிருந்தார். இனி தாம் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதை அவர் விவரித்ததும் செல்வர் மகனால் நம்ப முடியவில்லை. முழு அடக்கத்திற்கு உரியவரானார். பூர்வோத்திரம் புரிந்தவுடன் பிடிபடாத பிரார்த்தனை பிடிபட்டுப் பூரணமடைகிறது.

நம்முடைய அவசரம் வேலையைக் கெடுக்கிறது. கோபம் நண்பர்களை எதிரியாக்குகிறது. சோம்பேறித்தனம் நஷ்டத்தைக் கொடுக்கிறது. குத்தலாகப் பேசும் பழக்கத்தால் வந்த நல்ல வரன் தவறிப் போகிறது. நமக்குப் பல குறைகள் இருக்கின்றன. நாமே முயன்று பல குறைகளை நீக்கலாம். நீக்க முயன்ற பின்னும், தீராத குறைகளுண்டு. என்னால் முடிந்தவரை என் குறையை நீக்கி விடுகிறேன். மீதியை நீங்களே நீக்க வேண்டும் என்று அன்னைக்குப் பிரார்த்தனை செய்து பலன் அடைவதுண்டு.

சிறிய பிரார்த்தனையின் ஆன்மிக உயர்வு:

தெய்வத்திடம் போய் பாஸ் வேண்டும், பிரமோஷன் வேண்டும் என்றெல்லாம் கேட்பது தவறு, குறைவு, நல்ல பழக்கமில்லை என்று கருதும் மனப்பான்மை உயர்ந்தது. என்றாலும் இரகஸ்யமான ஒரு நுணுக்கம் இதில் பொதிந்துள்ளது. எந்த அளவு சிறிய காரியங்களை நாம் தெய்வத்திடம் கேட்கிறோமோ அந்த அளவுக்கு நாம் உயர்ந்த பக்தராவோம். கேட்கும் மனப்பான்மை காரிய சித்தியானால், கேட்பது குறைவு, தவறு. கேட்கும் மனப்பான்மை சமர்ப்பணமானால், கேட்பது நல்லது, உயர்ந்தது. மனப்பான்மையே செயலின் தன்மையை நிர்ணயிக்கும். ரயிலில் போவதா, பஸ்ஸில் போவதா என்பதையும், தகப்பனாரைக் கேட்டபின் செய்யும் 50 வயது அதிகாரி, தாம் தகப்பனாரிடம் கொண்டுள்ள பிரியத்தையே அச்செயல்கள் மூலம் தெரிவிக்கின்றார். எதில் போவது என்று அறியாதவரில்லை அவர். அவ்வளவு சிறு காரியங்களையும் தகப்பனார் இஷ்டப்படி செய்யும் அளவுக்கு உயர்ந்த மனப்பான்மையுள்ள மகன் அவர் என்று நாம் உணர்கிறோம்.

மனப்பான்மையைக் காரியவாதத்திலிருந்து மாற்றி பக்தியாகவும், பவித்திரமாகவும், சமர்ப்பணமாகவும் செய்துவிட்ட பின்னர், எவ்வளவுக்கெவ்வளவு சிறு காரியங்களை அன்னையிடம் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்ந்தது நம் பக்தியும், ஈடுபாடும்.

மூன்று நாள் பிரார்த்தனை:

பொதுவாக ஒரு முறையைக் கையாண்டு பலன் பெறலாம். அம்முறையின்படி நாம் தினமும் செய்யும் தியானத்திற்கு முன் 10 நிமிஷ பிரார்த்தனையை மேற்கொள்ளலாம். நமக்குக் குறையாக இருக்கும் எல்லாக் காரியங்களையும் வரிசைப்படுத்தி தியானத்திற்கு முன் அன்னையிடம் பிரார்த்தனையாகத் தினமும் ஒரு முறை அல்லது காலை, மாலை இரு முறை சொல்வது இம்முறையாகும். நாளடைவில் பார்த்தால், நம் பட்டியலில் உள்ள பிரச்சனைகள் ஒவ்வொன்றாய்த் தீர்ந்துவருவது தெரியும். வாடகைக்கு நல்ல வீடு வேண்டும், பரீட்சையில் முதல் மார்க் வாங்க வேண்டும், அடிக்கடி வரும் தலைவலி போக வேண்டும் என்பன போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. அவை இங்கு இடம்பெறும்.

34ஆம் வயதிலும் திருமணமாகாத பெண், 4 வருஷமாகத் தீராத கோர்ட் கேஸ், நீண்ட நாளைய வியாதி, குடும்பத்திற்கே பரம்பரையான உரிமையுடைய வறுமை வெகுநாட்களாகச் சிலரை வாட்டுவதுண்டு. தீராக் கடன் அதைப் போன்றது. இவற்றை நம் தினசரி பிரார்த்தனையில் சேர்த்துக்கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சனை அசைந்துகொடுத்து, இழை இழையாகத் தீர்வதைப் பார்க்கலாம். ஆனால் இவற்றுக்குரிய முறை வேறு. பிரச்சனை கடுமை நிறைந்தது, நாள்பட்டது, சுலபத்தில் அசையாது, எப்படியாவது தீர்ந்தால்போதும் என்ற கொடூரத்தை எட்டிவிட்டது என்றால், பிரார்த்தனைக்குரிய அனைத்து இலக்கணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் நம்மை நாம் தயார் செய்துகொண்டு, மனத்தை ஒருநிலைப்படுத்தி, தீர்வு காண தீவிர ஆர்வம்கொண்டு, நம்முடைய சக்தி முழுவதும் அதைத் தீர்ப்பதில் (force) முனைந்து, பிரச்சனை உருவம் பெற்ற வழியை அலசி ஆராய்ந்து, அதன் கூறுகளை விளக்கமாகப் புரிந்து-கொண்டு, அதில் நம் இன்றைய பங்கைக் கண்டு விலக்கி, பூர்வோத்திரமிருந்தால் அதையும் விலக்கி, மனத்தை அமைதி செய்து ஓரளவு மௌனத்தை வரவழைத்து, மனத்தில் ஓடும் குறுக்குப் பேச்சுகளை அகற்றி, பிரார்த்தனையை ஆரம்பிக்க முடிவு செய்தால் 3 நாள் இடைவிடாமல் 72 மணி நேரம் அதுவே குறியாக இருந்தால், பிரச்சனை முழுவதும் பிடிபட்டு, புற நிலைமை மாறி, புதிய சூழ்நிலைகள் ஏற்பட்டு, நிகழ்ச்சிகள் விரைந்து செயல்பட்டு, தீர்வு ஏற்படுவதைக் காணலாம்.

தீராத பிரச்சனையாக வருஷக்கணக்காக நம்மை வாட்டுவதால், 3 நாள் பிரார்த்தனை முயற்சி இதைப் பொறுத்தவரை அதிகமில்லை. தினசரி ஒரு முறை அன்னையிடம் சொன்னால் 6 மாதத்தில் 180 முறையோ அல்லது 360 முறையோ சொல்கிறோம். தொடர்ந்து இதே வேலையாக அன்னையிடம் முறையிட்டால் 3 மணி நேரத்தில் 300, 400 முறை சொல்லி, 6 மாதத்திய பலனை 3 மணியில் பெறுகிறோம். 3 நாள் தொடர்ந்து பிரார்த்திக்க ஒருவர் சம்மதித்தால் அதுவே அவருடைய தீவிர தீர்மானத்திற்கு அறிகுறி. அதனால் நல்ல முடிவு வரும் என்பது முதலிலேயே தெரிந்துவிடும்.

(தொடரும்)

**********

ஜீவிய மணி

மந்திரம் பழைய வாழ்வின் மணம்.

தியானமும் லயமும் புது வாழ்வின் புதுமை.

************



book | by Dr. Radut