Skip to Content

09. நிலையான சமர்ப்பணம் – நெடு நாளைய யோகம்

நிலையான சமர்ப்பணம் – நெடு நாளைய யோகம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

சமர்ப்பணம் நல்லது கெட்டதைக் கடந்தது. நல்லதைவிட நல்லது சமர்ப்பணம். கடன் கொடுத்தால் கேட்பதில்லை என்பவரும் கடனை வருமானமாகக் கருதி வாழ்நாள் முழுவதும் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்க நினைக்காமல் வாழ்பவரும் நண்பர்களாக இருந்தாலும் சமர்ப்பணமான கடன் தவறாது திரும்பி வரும். ஒருவர் சமர்ப்பணத்தின் திறனைக் கண்டு விட்டால் அவர் சூட்சுமத்தில் அன்னை தரிசனம் பெற்றவராகும். சமர்ப்பணம் உலகில் தவறாது, சூட்சுமத்திலும் தவறாது. காரணலோகச் செயல் சமர்ப்பணம்.

Hourly consecration-னின் பல கட்டங்களை ஏற்கனவே எழுதியுள்ளேன். 17 அல்லது 18 மணி விழிப்பில் ஒரு முறையும் தவறாது மூன்று நாட்கள் ஒருவர் செய்தால், நிமிஷம் தவறாது வினாடி தவறாது செய்தால், அவர் மேலும் செய்யக்கூடியது ஒன்றுண்டு. தூக்கத்தில் ஒவ்வொரு மணியும் சில நிமிஷம் முன் விழித்து சமர்ப்பணம் செய்து பின் தூங்குவது அது. இது ஒரு முறையான அல்லது தேவையான பயிற்சியில்லை. ஆனால் ஒருவர் இதைச் செய்து வென்றால் அவருக்குப் பூரண சமர்ப்பணம் பலிக்கும். இந்த யோகம் 30,000 ஆண்டு அனுபவத்தை இன்றே தர வல்லது. ஓரளவு முறையாக இதைப் பின்பற்றுபவர் சமூகத்தில் எங்கிருந்தாலும் சமூக உச்சியிலுள்ளவர் நிலைக்கு எளிதில் வரலாம். அதுவே நிலையான சமர்ப்பணம் தருவது. அதையும் சோதனை செய்து பார்க்கலாம். விளையாட்டு, டிரஸ், மேடைப்பேச்சு, போன்ற பல செயல்கள் 10 அல்லது 20 ஆண்டு பயிற்சியில் பெறுவது. சமர்ப்பணம் நிலையானதாகி, முழுமையானால், அந்தப் பல ஆண்டு பலன் சில மாதங்களில் வரும். நாம் நம் புலன்களால் செயல்படுகிறோம். புலன்கள் நம்மைச் சுற்றியுள்ளதை ஒலி, ஒளி, மனம், ருசி, தொடு உணர்ச்சியால் அறியும். புலன் உதவியின்றி மனம் நேரடியாக வெகுதூரம்வரை அறியும். அது யோக சக்தியால் பிரபஞ்ச முழுவதும் தேவைப்படும்பொழுது அறியும். அதன் வளர்ந்த நிலை கிருஷ்ணாவதாரம். ஆத்மா அதையும் கடந்த பிரம்மத்தையும் தேவைப்படும்பொழுது அறிய வல்லது. முழுமையான சமர்ப்பணம் இவற்றுள் எதையும் நமக்குத்தரும்.

ஓர் யோகி தானுள்ள இடத்தினின்று எங்கு வேண்டுமானாலும் தன் சக்தியை அனுப்ப முடியும் என்று பகவான் கூறுகிறார். பகவான் வரலாற்றை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகட்குப் புரியும்படிச் சொல்ல வேண்டும் என்கிறார் அன்னை. ஓர் நிகழ்ச்சியை அறியும்பொழுது அது நிகழும் வகை மனத்தைத் தொடும். நம் அனுபவத்தில் நிகழாதவை நிகழ்வதை ஆத்மா அறியும். அது பகவானை அவருள்ளபடி அறியும் வாயில். மாஜிக் எப்படி நடக்கிறது என்று அறிய இயலாமல் ‘இது மாஜிக். அறிவுக்குரியதல்ல’ என்று விலக்குதல் அறிவுடைமையாகாது. ஐரோப்பாவில் சூன்யக்காரிகளிருந்தனர். அவர்கள் ஒதுங்கி வாழ்ந்தனர். உலகம் அவர்களைக் கண்டால் உயிரை எடுத்து விடும். ஒருத்தியை சூன்யக்காரி எனக் குற்றம் சாட்டினால் நதியில் போட்டு விடுவார்கள். அவள் நீந்திப் பிழைத்தால் அவள் சூன்யக்காரி என்று நிரூபிக்கும். அவளை எரித்து விடுவார்கள். மூழ்கி விட்டால் குற்றச்சாட்டு தவறாகும். இது என்ன மனநிலை? எப்படியும் ஒருவரை அழிக்கும் மனநிலை. சூன்யக்காரி விஷயத்தில் மட்டும் செயல்படுத்த முடிகிறது. அடிப்படையில் மனிதன் அடுத்தவரை அழித்துக் கொண்டாட முனைவது சுமார் 100 ஆண்டுகட்கு முன்வரை இருந்த மனநிலை. இன்ஷுரன்ஸ் 200 ஆண்டுகட்குமுன் வந்தது. ஒருவர் நஷ்டத்தை அனைவரும் சேர்ந்து சரி செய்யும் அமைப்பு அது. அடிப்படையில் சுயநலமான எண்ணம். சொந்த சுயநலம் பரநலமாகும் ஸ்தாபனம் இன்ஷுரன்ஸ். குடும்பம் பரநலத்தை முதன்மையாக விழைவதால் வீடு குடும்பமாவது சுயநலம் தெய்வ நலமான பரநலமாகும் கோயில் எனப்படும். சட்டம் என்பது அனைவரையும் அடாவடிக்காரனிடமிருந்து காப்பாற்றும் முறை. சட்டம் சமூகத்தின் அருள் எனப்படும் அமைப்பு. சட்டம் உயர்ந்து சிறந்து நாகரிகமாகவும் வீட்டில் பண்பாகவும் மாறுகிறது. நாகரிகம் சமூகப் பண்பு. பண்பு குடும்ப நாகரிகம். ஆன்மிகம் அவற்றைக் கடந்தது. அது தனி மனித நாகரிகம் பண்பாகி, பக்குவமாவது. ஆன்மிகம் ஆத்மாவின் சட்டமான நாகரிகம். பண்பைக் கடந்த பக்குவம்.

பூரண சமர்ப்பணத்தைப் பயின்றவர் அது முழு திருப்தியளித்த பொழுது கால் பாகம் கூடப் பலிக்கவில்லையென அறிவார். இரு கைகளிலும் நிறைய பொருள் உள்ளபொழுது யாரைக் கதவைத் திறக்கச் சொல்வது என நினைக்கிறோம். அந்த நேரம் சமர்ப்பணம் தோன்றாது. தோன்றினால் கதவு திறந்து கொள்ளும். இதை ஒரே நேரம் செய்ய நெடுநாளாகும். தொடர்ந்து செய்வது உசிதம், சிறப்பு, பெரியது. தொடர்ந்த முயற்சி அவசியம். தொடர்ந்த சமர்ப்பண முயற்சி மேல் மனத்திற்குரியது. அம்முயற்சி ஆழ்ந்த மனத்தில் அமைதியை வளர்க்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த மனம் எழுந்து மேலே வரும். ஒருமுறை இச்சமர்ப்பணம் செய்ய ஒரு நாள் எனர்ஜி தேவை. தொடர்ந்து செய்தால் ஆழத்திலிருந்து இதுவரை இல்லாத புது எனர்ஜி எழும். எதுவும் பிடிக்காமல் விரக்தி எழும் நேரம் உண்டு. அதுபோன்ற நேரம் சமர்ப்பணம் மறந்து விடும். நினைவு வந்தால் எரிச்சல் அதிகமாக வரும். அந்த நேரம் சமர்ப்பணம் செய்யத் தோன்றுவது சிறப்பான சாதகருக்குரியது. நேரம் சரியில்லை, விரக்தி, எரிச்சல், நம்பிக்கையற்ற நேரம் சமர்ப்பணத்தை ஏற்றவருக்கு வராது. இயலாமை, முடியாத நிலை, தோல்வி மனப்பான்மை எழும் நேரம் சமர்ப்பணம் தோன்றாது. மறந்தே போய் விடும். அந்த நேரம் சமர்ப்பணம் புனர்ஜென்மமாகப் பலிக்கும். மயக்கம் வரும் நேரம் சிந்தனை நின்று விடும். சிந்தனை மறந்த நேரம் சிந்தனையழியும். அது கோமா (coma). அவரருகில் ஒருவர் உட்கார்ந்து அன்னையை அழைத்தால் coma தெளியும். தெளிந்தவர் சமர்ப்பணத்தை நினைத்தால் coma மறந்து போகும். மனிதன் மறப்பதுண்டு. சமர்ப்பணம் மறக்காது, தவறாது. சமர்ப்பணம் நம்மையறியாமல் நாளுக்கு நாள் வலுவடையும். சற்று சமர்ப்பணம் ஆழ்ந்தவுடன் நம் பொதுவான சட்டம் மன நிலையை அப்புதிய நிலைக்கு நிலையாக உயர்த்த வேண்டும். முயன்று அதைச் செய்தால் அதன் பலன் நமக்கு நாளடைவில் தெரியும். நம்மைப்பற்றி நாம் தெளிவாக அறியாததில் இதுவும் ஒன்று. நமக்குள்ள வலிமை, திறமை, தலைமை, ராசி நமக்குச் சில சமயம் தெரியும். பல சமயம் தெரியாது. ஆன்மிக நாட்டமுள்ளவர்க்கு அது பொதுவாகத் தெரிவதில்லை. பெரும்பாலும் பல்வேறு அம்சங்கள் தானே வெளிப்படும்பொழுதுதான் தெரியும். ஒரு அன்பரிடம் அவர் நண்பர் ‘உங்கள் வார்த்தை பலிக்கிறது’ என்றார். அவர் சொல்லும்வரை அன்பர் கவனிக்கவில்லை. அவர் சொல்லி- யதை மறந்தார். பல ஆண்டுகள் கழித்து நினைவு வந்தது. மற்றொருவரிடம் வருபவர்கள் ‘உங்களிடம் பேச பயமாக இருக்கிறது. ஏதாவது சொல்ல நினைத்து வந்தால் நீங்கள் அதைப்பற்றிப் பேசுகிறீர்கள்’ என்றார். மனிதன் தனக்குள்ள திறமைகளைப் பொதுவாக அறிய மாட்டான். இல்லாத திறமைகளைப் பெற்றிருப்பதாக நினைப்பான்.

ஆன்மிகம், துறவறம், தவம், யோகம் என்பவை பெரிய துறைகள். மனிதன் தன்னையறிந்து, தன் செயலையும் கடமையையும் அறிந்து திறமையுடனும், பொறுப்புடனும் செயல்படுவது குடும்பம். சுதந்திரம் வரும்வரைபெரும்பாலோர் அது போல் வேலையில் இருந்தனர். தொழிலில் என்றும் அந்த நோக்கம் உண்டு. ஊர், உலகம், அரசியல் கட்சி, சர்க்கார், பொது வாழ்வில் தோற்றமே முக்கியமாக உள்ளது. நேரம் வரும் பொழுதுதான் ஒருவருடைய நேர்மை, திறமை, தலைமை தெரியும். பெரிய நேரம் நல்ல நேரமானால் நல்லது வெளிப்படும். திறமையற்றவர், நேர்மையற்றவர் குறையும் நேரம் வந்தால் வெளிப்படும். அன்பர்கள் வாழ்வில் அன்னை அது போன்ற நேரத்தை அடிக்கடி ஏற்படுத்துவார். யோகம் ஆரம்பித்தால் அது உடனுக்குடன் வரும்.

(தொடரும்)

***********

ஜீவிய மணி

வீடு கோயிலாக மனைவி தெய்வமாக வேண்டும்.

பணியிடம் கோயிலாக பணி யோகமாக வேண்டும்.

**********



book | by Dr. Radut