Skip to Content

11. அன்னை இலக்கியம் - பொறுமையால் வென்றாயோ?

அன்னை இலக்கியம்

பொறுமையால் வென்றாயோ?

இல. சுந்தரி

கழுத்து மாலையின் மலர் மணம் மாறாத நிலையில், புதுமணத் தம்பதிகளான வாசுவும், பத்மாவதியும் காரை விட்டு இறங்கி வீட்டு முகப்பிற்குவர, அவர்களை வரவேற்க செட்டியாரும், அவர் மனைவி மாதரசி அம்மாளும் ஆவலுடன் காத்திருந்தனர். மாதரசியம்மாள் மங்கல ஆரத்தி சுற்றி மகனுக்கும், மருமகளுக்கும் நெற்றித் திலகமிட்டு திருஷ்டி கழித்து மனங்கொள்ளா மகிழ்வுடன் ‘வலது காலை எடுத்து வைத்து வாருங்கள்’ என்கிறாள். செட்டியார் விலகி நிற்கிறார். பத்மாவதி புன்னகை தவழ வாசுவின் கரம்பற்றி உள்ளே வந்தவுடன் மாமன் மாமியை நமஸ்கரிக்க வேண்டும் என கணவனை ஜாடையில் தூண்டுகிறாள். இருவரும் மாதரசியம்மாளை நமஸ்கரிக்க, அவர் அன்புடன் அவர்களை வாழ்த்துகிறாள். “செட்டியாரை நீயே கும்பிட்டுக் கொள்” என்று கூறிய வாசு விடுவிடென்று மாடிப் படியேறுகிறான்.

செட்டியார் முகம் வாட, கண்கலங்க தம் அறைக்குள் சென்று விடுகிறார். ஒன்றும் புரியாது பத்மாவதி நிற்க, மாதரசியம்மாள் அவளிடம், “அவனுக்கு அப்பாவிடம் சிறு வருத்தம். வேறொன்றுமில்லை. மற்றபடி அவன் தங்கம். நீ அவன் மனம் கோணாமல் நடந்து அவனை மகிழ்வுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அன்புடன் கூறி, ஆதரவாய் தலையை வருடி அனுப்பி வைக்கிறாள்.

எவ்வளவு அன்பான மாமன், மாமி என்று பத்மாவதி மனம் குளிர்கிறாள். மாடிக்குச் சென்று தன் கழுத்து மாலையைக் கழற்றும்முன் வாசுவை நமஸ்கரிக்க குனிகிறாள். ‘வேண்டாம் பத்மா என் மனைவி என் காலில் விழுவது எனக்குப் பிடிக்காது. பெண்கள் அடிமைத் தளையில் சிக்குவது சரியல்ல. நாமிருவரும் சமமானவர்கள். என்னிடம் ஏதேனும் குறை கண்டால் நீ அஞ்சாது எடுத்துரைத்து என்னைத் திருத்த வேண்டும். பயந்து, என் தவறுகளுக்கு நீ உடன்படக்கூடாது’ என்றான்.

‘அப்படியென்றால் என் மனதில் பட்டதைச் சொல்லவா?’ என்றாள்.

‘நிச்சயமாகச் சொல், தயங்க வேண்டாம்’ என்றான். ‘நீங்கள் உங்கள் அம்மாவை வணங்கி விட்டு, அப்பாவை நிராகரித்தது தவறு. அவர் கண்கலங்கி நின்றது என்னை வேதனைப்படுத்தியது. பெற்றவர் மனம் கலங்க நாம் நலமாக வாழ முடியுமா?’ என்றாள்.

‘உண்மை தெரிந்தால் நீ என் செயலைத் தவறு எனக் கூறமாட்டாய்’.

‘என்னிடம் கூறத்தக்கது என்றால் கூறுங்கள்’ என்றாள்.

‘உன்னிடம் மறைக்கத் தேவையில்லை. கணவன் மனைவிக்குள் இரகஸ்யம் நான் விரும்பாதது’ என்றான்.

நாம் வீட்டிற்குள் வந்ததும், “முதலில் அவர்களைக் கும்பிட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்களே, அந்தப் படத்திலிருந்தவர் யார்? என்றாள்.

‘அவர்தாம் என்னைப் பெற்ற தாய். செட்டியாரும் மாதரசியம்மாளும் என்னைப் பெற்றவர்கள் அல்லர்’.

‘அப்படியா? ஆனால் அத்தை அவ்வளவு பாசம் காட்டுகிறார்களே நம்மிடம்’.

‘ஆம்! அந்தப் பாசம்தான் என் அன்பிற்கும் என் கோபத்திற்கும் காரணம்’.

‘அது எப்படி? ஒரே விஷயம் அன்பிற்கும், கோபத்திற்கும் காரணமாகும்?’

‘நான் பணக்காரச் செட்டியாரின் மகனில்லை ஏழை பிராமணனின் மகன் என்ற உண்மை தெரிந்தபின் நீ என்னை நேசிப்பாயா?’

‘என்ன கேள்வியிது? நான் நேசித்தது உங்களை.

பணத்தையல்ல. என் தெய்வத்தின் மீது எனக்குள்ள பக்தி என்றும் மாறாது’.

‘உண்மையில் உன்னை மனைவியாகப் பெற்ற நான் பாக்யசாலி. ஆனால் இந்த உயர்வை என் தாய் காணக் கிடைக்காமல் செய்த பாவி நான்.’ (என்று கூறி கண் கலங்கினான்)

தாய் என்பவள் என்றுமே நம்மை அன்புடன் நோக்குவாளே தவிர பாவியாய்க் காணமாட்டாள்.

எனக்குள் ஒரு சோகக் கதையுண்டு. அதை நான் யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பியதில்லை. ஆனால் நீ என் வாழ்வில் முக்கிய பங்கேற்பவள் என்பதால் நீ அதைத் தெரிந்து கொள்வது நல்லது. நீ காண்பது போல் நான் மாதரசியம்மாள் செட்டியார் தம்பதிகளுக்குப் பிறந்த மகனில்லை.

ஆனால் அத்தை உங்களிடம் அவ்வளவு அன்பு காட்டுகிறார்கள். மாமாவும்தான்.

மாதரசியம்மாவின் குழந்தைபாசம்தான் நான் அவர்கள் மகனாக வளரக் காரணம். புருஷோத்தம ஐயர் மீனாட்சியம்மாளின் குழந்தையாகப் பிறந்தேன். உண்மை தெரியாத நிலையில் நானே என் தாய் இறக்கக் காரணம் ஆனேன். என் வரலாறு நான் அறிந்திருக்கவில்லை. செட்டியார் தம்பதிகளின் சொந்த மகன் என்றே என்னை நினைத்தேன்.

ஒரு நாளிரவு செட்டியார் என்னையீன்றவளிடம் தகாத முறையில் நடக்க முயன்ற போது தற்செயலாக அதை நான் காண நேர்ந்தது. இளம் வயது. தாங்க முடியாத அவமான உணர்வால் துடித்துப் போய் கூச்சலிட்டேன். அப்போதுகூட செட்டியார் நல்லவர். என்தாய்தான் கெட்டவள் என்று எண்ணத் தோன்றியது. அதன் பிறகு அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சினந்தேன். மாதரசியம்மாளோ மிகவும் வேதனைப்பட்டார். “அவசரப்பட்டு எதுவும் சொல்லாதே வாசு. அவள் மிகவும் நல்ல பெண்மணி. ஏதோ வறுமை காரணமாக நம் வீட்டில் வேலை செய்கிறாள். இதுவரை அவள் நமக்கு எந்தக் கெடுதலும் செய்ததில்லை. நல்லதுதான் செய்திருக்கிறாள்”. என்றார்.

“ஆமாம் ரொம்பவும் நல்லதுதான் செய்திருக்கிறாள்.

உனக்கே அவள் துரோகம் செய்கிறாள்” என்று மனவலி தாங்காமல் கத்தினேன்.

காதைப் பொத்திக் கொண்டாள். “சப்தமாகப் பேசாதே. அவள் காதில் விழந்தால் தாங்க மாட்டாள்” என்று அவளுக்குப் பரிந்து பேசினார். எனக்கு வியப்பாக இருந்தது. தன் கணவன் ஆசைப்படும் ஒரு பெண்ணைத் தன் எதிரியாக நினைக்காமல் எப்படி அவளுக்குப் பரிந்து பேசினார் என்று வியப்படைந்தேன். “அம்மா! நீ மிகவும் அப்பாவியாய் இருக்கிறாய். உன் வாழ்வு பறி போகிறது என்றதுடன் (செட்டியாரே என் அப்பா என்று எண்ணி) நீ என் தாய்க்கு (மாதரசியம்மாளுக்கு) துரோகம் செய்கிறாய். உன்னை அப்பா என்று சொல்லவே அவமானமாயிருக்கிறது. நீயும் ஒரு மனிதனா? என்று அவர் மீது ஆத்திரப்பட்டேன்.

அன்று அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டவள்தான் என் தாய். மறுநாள் கதவைத் திறந்த போது பிணமாகியிருந்தாள். என் ஆத்திரம் அடங்கியது.

மாதரசியம்மாளோ, “மீனாட்சி, என் மகன் தெரியாமல் ஏதோ பேசி விட்டான். அவனை மன்னித்துவிடு. எழுந்து வா. எங்களை விட்டுப் போகாதே என்றுகூறி அழுதார்கள்” சீ! இவளுக்குப் போய் நீ ஏனம்மா அழுகிறாய், போகிறாள் விடு” என்றேன். “ஏங்க மீனாட்சியிடம் மன்னிப்புக் கேளுங்க” என்று செட்டியாரை அழைத்தார்.

அவரோ முகத்தைத் துண்டால் மூடிக் கொண்டு பெரிதாக அழுதார்.

நல்லதாயிற்று. இந்தப் பிணத்தை இழுத்து வெளியே எறியுங்கள். வீட்டைக் கழுவிய பிறகு சொல்லுங்கள். நான் பிறகு வருகிறேன் என்று வெளியேற முனைந்த போது செட்டியாரும், மாதரசி அம்மாளும் என் காலில் வந்து விழுந்தார்கள். எனக்குப் புரியவில்லை. செட்டியார் தம் தவற்றுக்கு மன்னிப்பு வேண்டுகிறார், அவரை மன்னிக்க வேண்டி மாதரசியம்மாளும் காலில் விழுகிறார் என்று நினைத்து, “நீ ஏனம்மா என் காலில் விழுகிறாய்? இவர் என் காலில் விழுந்தாலும் இவரை நான் மன்னிக்க மாட்டேன். ‘அப்பா’ என்று கூப்பிடவும் மாட்டேன். யாரந்த சமையற்காரி? அவளை ஏன் வீட்டுக்குள் சேர்த்தீர்கள்? உண்ட வீட்டிற்கே இரண்டகம் நினைத்தவள்” என்று கத்தினேன்.

மேலும் என் கால்களை இறுகப் பற்றிக் கொண்டு இருவரும் அழுதனர். மானப் பிரச்சனை வெளியில் தெரிய வேண்டாமென நினைக்கிறார்கள் என்று கருதினேன்.

“வாசு, நாங்களே குற்றவாளிகள் எங்களை மன்னிக்க வேண்டாம். தண்டித்து விடு. நீ வெறுக்கும் மீனாட்சி மாசற்ற தங்கம், அவளை எதுவும் சொல்லாதே. நீதான் அவளுக்கு ஈமக்கடன் செய்ய வேண்டும்” என்றனர்.

அநாதை பிணமானாலும் அனுதாபம் காட்டுவேன்.

இவளைப் போன்ற நடத்தை கெட்டவளுக்கு இரங்க மாட்டேன் என்று கூறும் போதே மாதரசியம்மாள் என் வாயைப் பொத்தினார்கள்.

“உண்மை தெரியாமல் பேசாதே மகனே. அவள்தான் உன்னைப் பெற்றவள். நான் உன்னைப் பெறவில்லை” என்று கூறி அழுதார்கள்.

“சீ! இத்தனைக் கேவலமானவளா என் தாய்? அவள் என்தாய் என்றால் மன்னித்து விடுவேன் என்று நினைத்தீர்களா?

நல்லவேளை. அவளாகவே இறந்தாள். இல்லையென்றால் நானே அவளைக் கொன்றிருப்பேன்” என்றேன்.

“இல்லை வாசு. உண்மை தெரிந்தால் நீ எங்களைத்தான் கொன்று விடுவாய்” என்றார் செட்டியார்.

இத்தனை காலமாக இரவுபகல் பாராது எனக்காகவே பாசம் காட்டி வளர்த்த அவர்களை குறிப்பாக மாதரசியம்மாவை என்னால் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற மனமில்லை.

‘என்னம்மா சொல்கிறாய்?’ என்று அதிர்ந்தேன்.

‘கண்ணா! நான் சொல்வதைப் பொறுமையாக முதலில் கேட்டுவிடு. பிறகு நீ என்ன முடிவு செய்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம்’ என்றார்கள்.

“நீ ஆறுமாத கைக் குழந்தையாய் இருந்த போதே உன் தந்தையார் காலமாகிவிட்டார். ஏழையான உன் குடும்பம் உன் தந்தையின் பிரிவால் வாடியது. நிற்க நிழலின்றி, இளம் குழந்தையான உனக்குப் பாலூட்டவும் வசதியின்றி உன் தாய் பல கொடுமைகளுக்கு ஆளாகி, ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு உன்னையும் கொன்று விட ரயிலில் விழப் போன போது, பயணத்திலிருந்த செட்டியார் உங்களைக் காப்பாற்றி இங்கு அழைத்து வந்தார். மலடியான நான், ஒரு குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்த நான், பச்சிளம் குழந்தையான உன்னைப் பார்த்தவுடன் பாசத்தால் துடித்து உன்னை உன் தாயின் கையிலிருந்து பறித்துக் கொண்டேன்.

அவள் எவ்வளவோ கெஞ்சியும் நான் உன்னைத் தர மறுத்தேன்.

என் ஆவல் நிறைவேறியதில் செட்டியார்க்கும் மகிழ்ச்சிதான்.

குழந்தையைச் சொந்தம் கொண்டாடாமல் எங்களுக்கே கொடுத்து விட்டால் நாங்களே உன் பிள்ளையைச் சிறப்பாக வளர்ப்பதை நீயும் மூன்றாம் மனுஷியாக இங்கு இருந்து கொண்டே பார்க்கலாம்.இல்லை என்றால் நீ கொலை முயற்சி செய்ததாக போலீஸில் புகார் கொடுப்பேன் என்று செட்டியார் மிரட்டவே, வேறு வழியின்றி உன்தாய் மனம் விரும்பாமலேயே உன்னை விட்டுக் கொடுத்தாள். ஆரம்பத்தில் நல்ல எண்ணத்துடன்தான் உங்களை இங்கு அழைத்து வந்தார். உன் அம்மாவின் இளமையும் அழகும் கவர தவறாக நடக்க முயன்றிருக்கிறார். நான் அப்போது உறுதியாய் நின்று, உன்னை விட்டுக் கொடுக்க முன்வந்திருந்தால் உன் தாய் உன்னுடன் எங்காவது போய் பிழைத்திருப்பாள். நான்தான் குற்றவாளி.

உன்னைப் பார்த்தது முதல் உன்னை என் குழந்தையாக்கிக் கொள்ளத் துடித்த என் ஆசைதான் காரணம். உன்தாய் நல்லவள் அவள் வெளியேறிவிடத்தான் துடித்தாள். உன்மீது கொண்ட பாசத்தால்தான், நீ வளரும் சிறப்பைக் கண் குளிரக் காணத்தான் அவள் இங்கேயே தங்கினாள்” என்றார் மாதரசியம்மாள்.

“வாசு! உன் அம்மா மிகவும் நல்லவள். கற்புக்கரசி. என் விருப்பத்திற்கு என்றும் அவள் உடன்படவில்லை. கடைசி வரை அவள் தன்னைக் காத்துக்கொண்டாள். தாயே மீனாட்சி என்னை மன்னித்துவிடு. என் தவற்றை நான் உணர நீ உயிர்த் தியாகம் செய்துவிட்டாய். நான் திருந்தி விட்டேனம்மா” என்று கதறி அழுதார் செட்டியார்.

“வாசு நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். உன் தாய்க்கு நீதான் ஈமக்கிரியை செய்ய வேண்டும். அவள் உனக்காகவே வாழ்ந்து உயிரையும் விட்டுவிட்டாள்” என்றார்.

என் இளம் பருவத்து நினைவுகள் மனத்திரையில் விசுவரூபம் எடுத்தது.

நான் எட்டுவயதுச் சிறுவனாக இருந்த போது பெரிய பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். தெருவிற்குப் போகக்கூடாது என்று கேட்டை மூடியிருந்தார்கள். பலூன் பறந்து கேட்டைத் தாண்டி தெருவில் உருண்டது.

கேட்டின் மேல் ஏறிக் குதித்து பலூனைப் பிடிக்கப் போனேன்.

எப்போதும் என் மீதே கண்ணாயிருந்த மீனாட்சியம்மாள் கேட்டைத் திறந்து கொண்டு ஓடி வந்து என்னைப் பிடித்துக் கொண்டு கார் விபத்திலிருந்து காப்பாற்றி, “வாசு உனக்கொன்றும் ஆகவில்லையே” என்று பதறினாள். சத்தம் கேட்டு ஓடி வந்த மாதரசியம்மாள், என்னை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு, “என் பிள்ளை விஷயத்தில் தலையிடாதேயென்று எத்தனை முறை சொல்வது?” என்றார். அப்போது அவர் மனம் என்ன பாடுபட்டிருக்குமென்று நான் உணரவில்லை. மாதரசியம்மாளின் பாசம்தான் பெரிதாகத் தெரிந்தது.

பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையுடன் ஓடி வந்து “மாதரசி! உன் பிள்ளையைப் பார்” என்று மகிழ்வுடன் கூவினேன். ( எனக்குக் கோபமோ சந்தோஷமோ எது வந்தாலும் மாதரசி என்று பெயர் சொல்லித்தான் அழைப்பேன். மிகுந்த உரிமையுடன் அதை ஏற்றுக் கொள்வார்.) ஓடி வந்து என்னை கட்டியணைத்து திருஷ்டி கழித்தார். மீனாட்சியம்மாள் ஆவலுடன் என்னைப் பார்த்தபோது மாதரசி கடிந்து கொண்டார். ‘உள்ளே போ’ என்று கோபப்பட்டார். தானீன்ற மகனைக் கொஞ்ச முடியாத என்னையீன்றவள் துயரம் எனக்கு அப்போது தெரியாது.

ஒவ்வொரு செயலின்போதும் என் தாயை ஒதுக்கி மாதரசி வந்ததை அப்போது நான் உணரவில்லை.

ஒருநாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது புரையேறியவுடன் மீனாட்சியம்மா தண்ணீர்க் குவளையுடன் ஓடி வந்து என் தலையில் மெல்லத் தட்டி தண்ணீர்க் குவளையை என் வாயில் வைக்க வந்த போது, மாதரசியம்மாள் குவளையை அவர்கள் கையிலிருந்து பறித்து அவர்கள் கையை வெடுக்கென்று தள்ளிவிட்டு, “பிள்ளை சாப்பிடும்போது உள்ளே வராதே என்று எத்தனை முறை சொல்வது?” என்று கடிந்து கொண்ட போது என்னையீன்றவள் முகம் வாடிய காட்சி அன்று எனக்குப் பெருமையூட்டியது. இன்று வேதனையளித்தது. அம்மா! உன்னருமை தெரியாது போனேனே. எனக்காக நீ எத்தனை அவலங்களைச் சுமந்தாய். உன் பொறுமையால் நீ இவர்களை வென்றுவிட்டாய். பாவியைப் பெற்றவள் நீ. உனக்கு மழலையின்பம் தராத மாபாவி நான். நான் பெரியவன் ஆன பிறகும் நீ ஏன் உண்மையைக் கூறவில்லை. எத்தனை முறை எனக்கு வரவிருந்த ஆபத்துகளிலிருந்து இந்தக் கையால் என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்.

“மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே”

என்று பட்டினத்தாரே உருகவில்லையா? நான் சாதாரண மனிதன். வாய்க்கரிசி இடவே என்னைப் பெற்றாயோ என்று அழுதிட்டேன்.

அன்று முதல் செட்டியாரை அப்பா என்றழைப்பதை விட்டுவிட்டேன். அதுதான் அவருக்கு நானளித்த தண்டனை என்று கூறி முடித்தான் வாசு.

‘இப்போது நான் ஒன்று சொல்லலாமா’ என்றாள் பத்மாவதி.

‘சொல். உன் பேச்சில் உண்மை இருந்தால் நிச்சயம் அதை நான் ஏற்று நடப்பேன்’ என்கிறான் வாசு.

‘உங்கள் தாய் அத்தையையோ, மாமாவையோ தண்டிக்க எண்ணியிருந்தால் என்றோ செய்திருக்கலாம். உங்களுக்கு உண்மையை அறியச் செய்திருக்கலாம். உங்களைப் பாசமாக வளர்க்கும் அவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணாத காரணத்தால் தான் பொறுமையாக எல்லாத் துன்பங்களையும் தாங்கியிருந்திருக்கிறார். எனவே, நீங்கள் அவர்களைத் தண்டிப்பதை விரும்ப மாட்டார்கள். பழிவாங்கும் மனப்பான்மை உயர்ந்தவர்களுக்குரியதன்று. உயர்ந்தவர்கள் எப்போதும் இன்னா செய்தாரை அவர் நாண நன்னயம் செய்து விடுவார்கள் என்று நாம் படிக்கவில்லையா? அதுமட்டுமன்று. மாமாவோ அத்தையோ கெட்டவர்களாக இருந்திருந்தால் உங்கள் தாய் இறந்தபின் உண்மைகளை மறைத்திருப்பார்கள். அவர்கள் எதையும் மறைக்காது கூறியதுடன் நடந்த தவறுகளுக்குத் தாங்களே காரணம் எனப் பொறுப்பேற்கிறார்கள். மன்னிப்பும் கேட்காமல் தண்டிக்கக் கேட்கிறார்கள். நீங்கள் கொடுத்த தண்டனையை ஏற்று வேதனையும் அனுபவிக்கிறார் மாமா.

இவ்வளவு நடந்த பின்னும் அத்தை உங்கள் மீது வைத்த பாசம் சிறிதும் குறையாமல் நீங்கள் சந்தோஷமாய் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவர்களை ஒதுக்கி தண்டிப்பது முறையல்ல’.

‘உங்கள் வளர்ச்சியை, மகிழ்ச்சியை விரும்பும் உங்களைப் பெற்றவர் எங்கும் போக மாட்டார். நம் குழந்தையாக நம்மிடமே வந்து விடுவார்கள்’ என்று பரிவுடன் பத்மா கூற இப்போது ‘நான் என்ன செய்ய வேண்டும்’ என்றான் வாசு.

‘கீழே வாருங்கள். வந்து உங்கள் வளர்ப்புத் தந்தையை நமஸ்கரிப்போம்’ என்று மிகுந்த பரிவுடன் அவன் கையைப் பற்ற, அவள் உயர்ந்த உள்ளத்தை எண்ணி பெருமிதவுணர்வுடன், ‘அம்மா நீ உன் மருமகளைப் பார்க்க எங்களிடமே வந்துவிடு’ என்று எண்ணிய வண்ணம் கீழே வந்தான். பத்மா மனம் மகிழ்ந்து உடன் வந்தாள். இருவரும் இறங்கி வருவதைக்கண்ட மாதரசியம்மாள் ‘என்னம்மா’ என்று பதறி ஓடி வந்தாள்.

வாசுவோ, ‘அம்மா! அப்பாவைக் கூப்பிடுங்கள்’ என்றான்.

அப்பாவா? இவன் யாரைச் சொல்கிறான். அவன் தாய் இறந்த நாள் முதலாக அவரை அப்பா என்றழைக்கமாட்டேன். அதுதான் நான் அவர்க்குத் தரும் தண்டனை என்று கூறியதுடன் அவரைச் செட்டியார் என்றல்லவோ குறிப்பிடுவான் என்று சிந்தித்தாள்.

‘மாமாவைக் கூப்பிடுங்கள் அத்தை’ என்று பத்மாவதியும் கூறவே, மாதரசி தம் அறைக்குள் அழுது கொண்டிருந்த செட்டியாரை அழைத்து வந்தாள்.

‘வாங்க மாமா. நாங்கள் உங்களையும் அத்தையையும் சேர்த்து வணங்கி ஆசி பெற வேண்டும்’ என்றாள் பத்மாவதி.

‘இல்லையம்மா வேண்டாம். எனக்கு அந்தத் தகுதியில்லை’ என்று கலங்கி நின்றார் செட்டியார்.

‘வாசுவோ, அப்பா! வாருங்கள்’ என்று அவரைத் தொட்டு அழைக்க, செட்டியார் உருகிவிட்டார்.

‘வாசு! என்னை அப்பா என்றா அழைத்தாய்? என்னை மன்னித்து விட்டாயா’ என்று அவனைத் தழுவிக் கொண்டார்.

‘இல்லையப்பா நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள்.

இல்லையென்றால் என்னையீன்றவள் என்னை மன்னிக்க மாட்டாள். என்னைப் பெற்றவள் மீண்டும் இங்கு எங்கள் குழந்தையாய் உங்கள் பெயர்த்தியாய் நம்மனைவரின் அன்பையும் பெற்று நம்மை மகிழ்விப்பாள்’ என்று கூறி இருவரையும் இருவரும் நமஸ்கரிக்க செட்டியாரும் மாதரசியும் ஆனந்தக் கண்ணீருடன் இருவரையும் வாழ்த்தினர்.

அவ்வாறே பத்மாவதி வாசுதேவனின் அருமைப் புதல்வியாய் மீனாட்சி பிறந்து அனைவர் அன்பையும் பெற்றாள்.

செட்டியாரோ, “தாயே மீனாட்சி” என்று குழந்தையைக் காணும் தோறும் கையெடுத்துக் கும்பிடுவார்.

ஏன் என்று யாரேனும் கேட்டால் தங்கள் குலதெய்வம் மீனாட்சியாய்க் குழந்தையைக் காண்பதாய்க் கூறுவார்.

பழிவாங்கும் நோக்கம் அன்னை வழியன்று.
பொறுமை தீமை தானே விலக வழி செய்யும்.

ஸ்ரீ கர்மயோகி

*******



book | by Dr. Radut