Skip to Content

10. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

கவிதா குமார், சிட்லபாக்கம்

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் கவிதா குமார். நான் சென்னையில் சிட்லபாக்கம் என்ற பகுதியில் வசித்து வருகிறேன். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை அவர்களின் பரிபூரண நல்லாசிகளுடன் நான் என் அனுபவத்தினை தங்களுக்கு கூற விரும்புகிறேன்.

அன்னை எனக்கு முதன்முதலில் அறிமுகமானது திண்டுக்கல்லில் உள்ள மையத்தின் மூலம்தான். என் அம்மாவின் வீடு திண்டுக்கல்லில் உள்ளது. அங்கிருந்து இரண்டு வருடங்களுக்குமுன் நான் B.Ed. படித்தேன். அப்பொழுது என் கணவர் சென்னையில் இருந்தார். நான் ஒருமுறை என் குழந்தையுடன் சென்னை வந்து திண்டுக்கல் திரும்பும் பொழுது குருவாயூர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தோம். இரவில் பயணம் செய்ததால் என் கணவர் என் சிறு கைப்பையை பெரிய பையில் வைத்திருந்தார். நாங்கள் விடியற்காலை மூன்று மணியளவில் திண்டுக்கல்லில் இறங்க வேண்டும் என்பதால், பெரிய பையில் தலையணை, போர்வையை மடித்து உள்ளே வைத்தார். அப்பொழுது கைப்பையை வெளியே எடுத்து வைத்தவர் பின் உள்ளே வைக்க மறந்து விட்டார். நாங்கள் train-னிலிருந்து இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து ஆட்டோவிற்கு பணம் கொடுக்க கைப்பையைத் தேடினோம். காணவில்லை.

எப்போதும் டென்ஷனாகும் என் கணவர் இப்பொழுது கோபப்படாமல் ‘நீ உள்ளேபோ, நான் ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் கொடுத்துவிட்டு வருகிறேன்’ என்று கிளம்பினார்.

என் தோழி ரம்யா மூலம் ‘அன்னையின் தரிசனம்’ என்ற புத்தகத்தினை அன்னையின் பக்தை ஆவதற்குமுன் நான் படித்திருக்கிறேன். அது எனக்கு நினைவில் வந்தது. உடனே நான் வீட்டில் ‘என் கைப்பை கிடைக்க வேண்டும். அதிலுள்ள என் கணவரின் License, Pan card, ATM Card, Mobile phone, Election ID card மற்றும் 450 ரூபாய் பணம் இருந்ததும்

பத்திரமாகக் கிடைக்க வேண்டும்’ என வேண்டினேன். பின் அன்னையே இவ்வேண்டுகோள் தங்களுக்கு சமர்ப்பணம். பை கிடைத்தவுடன் திண்டுக்கல் சென்டருக்கு வருகிறேன் என வேண்டி காணிக்கையையும் எடுத்து வைத்தேன்.

இதற்கிடையில் என் கணவர் திண்டுக்கல் ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்ததும், அவர் மதுரை ஸ்டேஷன் மாஸ்டரை தொடர்பு கொண்டு பேச, அவர் ரயில்வே போலீஸை அனுப்பி மதுரைரயில்வே ஸ்டேஷனில் குருவாயூர் எக்ஸ்பிரஸை சோதனை செய்ததில் அதில் என் கைப்பையை கண்டுபிடித்ததாகவும், வந்து அடையாளம் கூறி பெற்றுக் கொள்ளவும் என்று கூறினார். பின்பு என் கணவர் மதுரை சென்று என் கைப்பையை வாங்கி வந்தார். பின்னர் நான் பிரார்த்தனை செய்ததுபோல் நாங்கள் திண்டுக்கல் சென்டருக்குச் சென்று மனதார அன்னைக்கு நன்றி கூறினோம்.

இதுபோல் பலமுறைகள் அன்னை எங்களைக் காப்பாற்றி உள்ளார். ஒருமுறை மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தபோது அன்னையைப் பிரார்த்தனை செய்தேன். அப்பொழுது பெரிய நல்ல கல்லூரியில் எனக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் நல்ல பலன் பெற்று வருகிறேன். இதை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.

தற்பொழுது எங்கள் வாழ்க்கையிலும், என் குடும்பத்திலும் அன்னையும், பகவானும் அங்கமாகவும், குடும்பத்தினை நிர்வகிப்பவர்களாகவும், எங்கள் வீடு முழுவதும் நிறைந்துள்ளனர். அன்னையை நம்பியதால் இன்று எல்லாவிதமான நலன்களும், வளங்களும் பெற்று சந்தோஷமாக இருக்கிறேன் என்பதில் சந்தேகமேயில்லை.

********

 

ஜீவிய மணி

 

யார் மீது பிரியப்பட்டாலும், கோபப்பட்டாலும் நாம் யார் என அறியும் நேரம் அது.

 

********



book | by Dr. Radut