Skip to Content

09. ஆத்மாவின் இருமுனைகள்

ஆத்மாவின் இருமுனைகள்

கர்மயோகி

  • மனிதனுடைய ஆயுள் முடிய அவனுடைய சம்மதம் தேவை. மனிதனாகிய ஜீவாத்மா முடிவு செய்யாமல் உயிர் உடலை விட்டுப் பிரியாது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
  • மேலும் பரமாத்மாவின் உத்தரவும் தேவை.
  • பரமாத்மாவும், ஜீவாத்மாவும் சம்மதிக்காமல் உயிர் உடலை விட்டுப் போகாது.
  • எந்த சிறு காரியத்திற்கும் பிரபஞ்ச சட்டம் இதுவே.
  • ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஆத்மாவின் இரு முனைகள் என்பதால் ஒன்று சம்மதப்பட்டால், இரண்டும் சம்மதப்படுவதாக அர்த்தம்.
  • உலகிலும், பிரபஞ்சத்திலும் உயிருடையது ஆத்மா மட்டுமே.
  • மற்ற அனைத்தும் ஆத்மாவுடன் தொடர்பு கொள்வதால் உயிர் பெறுகின்றன.
  • ஆத்மாவின் ஒருமுனை பிரம்மம். அடுத்த முனை வாழ்வு.
  • ஆத்மா அறிவாலும், அறிவின் திறனாலும் செயல்படுகிறது.
  • பிரம்மமே முதல், அதுவே முடிவு என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  • மேலிருந்து கீழே வருவது சிருஷ்டி. கீழிருந்து மேலே போவது பரிணாமம்.
  • இவற்றிடையே ஆயிரம் இடங்கள் அனந்தமான வீச்சுடனிருக்கின்றன.
  • மனிதன் தானுள்ள இடத்திலிருந்து மேலே போகலாம். கீழே போகலாம். வலது பக்கமோ, இடது பக்கமோ, எந்த பக்கமோ முடிவில்லாமல் போகலாம்.
  • இது பிரம்மத்தின் சுதந்திரம். மனிதன் பிரம்மம் என்பதால், அவன் பெற்ற சுதந்திரம்.
  • தவம், துறவறம், மோட்சம் மேலே போவது. உள்ளதுபோல் சீரழிந்து அவல வாழ்வில் ஒதுக்கப்பட்டு ஜடமாவது கீழே போவது. வலது பக்கம் போவது சமூகத்தில் சிறப்புடன் வாழ்வது. இடது பக்கம் போவது சமூகத்தில் தவறான செல்வத்துடன் வாழ்வது. இதுபோல் மனிதனுக்குரிய பாதைகள் முடிவற்றவை.
  • உள்ளேபோய் மேலே போவது பரிணாமம். சத்திய ஜீவனாவது.
  • ஆண்டவனும், அன்னையும் மனிதன் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை.
  • ஆத்மா அறிவால் உணர்ந்து, திறனால் செயல்பட்டால் எதையும் சாதிக்கும்.
  • உணர்வது அருள், செயல்படுவது சாதனை.
  • அருள் தன்னை அன்னையாக நாடுவதை அறிவது பேரருள்.
  • நல்லவனும், கெட்டவனும், தோல்வியடைபவனும், வெற்றியடைந்தவனும் தன் இச்சைப்படியே சாதிக்கிறான்.
  • மறைந்த பிரம்மம் மறந்தது ஜடம். நினைவுபடுத்துவது அருள். ஏற்பது அறிவு. நடப்பது யோகம்.

*******

 

ஜீவிய மணி

நாம் பிறர்மீது கொள்ளும் அக்கறை அவர்மீது நம் ஆதிக்கத்தைச் செலுத்துவதாக இருக்கக் கூடாது. இது அகந்தையாகும். அருளை வற்புறுத்தித் தருவதாகவும் இருக்கக்கூடாது. அளவுக்கும் கடமைக்கும் உட்பட்டு, பொறுப்புணர்ச்சியும் உழைப்பும் உள்ளவர்க்குச் செய்யும் உதவியும் கொடுக்கும் ஆலோசனையும், அபரிமிதமாகப் பலிக்கும். இத்தகு அகந்தையற்ற அக்கறையே அடுத்தவர்க்குப் பயன்படும். பொறுப்புணர்வால், அளவுடன் செயல்பட்டு, பிறருக்கு உதவுதல், அன்னையின் பெரும் பலனைத் தரும்.

******



book | by Dr. Radut