Skip to Content

07. அமெரிக்க வாழ்வின் நிறைவுகளும் குறைபாடுகளும்

அமெரிக்க வாழ்வின் நிறைவுகளும் குறைபாடுகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் மற்றும் சொற்பொழிவு: திரு. அசோகன்

சொற்பொழிவாற்றிய தேதி: 15. 08. 2014

5. அமெரிக்கர்கள் மிகவும் Informal-ஆக இருப்பார்கள்:

இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் formalities மற்றும் பட்டங்கள் மிகவும் முக்கியம். பிரபு வம்ச குடும்பங்களில் தந்தையாரையே சார் என்றுதான் அழைக்க வேண்டும். தாயாரை M’am என்றுதான் அழைக்க வேண்டும். அங்கே பட்டம், படிப்பு, டிகிரி, டைட்டில் எல்லாம் மிகவும் முக்கியம். இங்கிலாந்து அரசரை Your Majesty என்றுதான் அழைக்க வேண்டும். வேறு எந்தமாதிரி யார் அழைத்தாலும் அவர் அங்கிருந்து உடனே வெளியேற்றப்படுவார். Edward VIII என்ற இங்கிலாந்து அரசர் விவாகரத்துப் பெற்ற ஒரு அமெரிக்கப் பெண்மணியை மணந்தார். அதனால் அவர் பதவியை இழக்க நேரிட்டது. பதவி இழந்தபின்கூட அவர் தம் மனைவியை Your Highness என்றுதான் மற்றவர் கூப்பிட வேண்டும் என்று விரும்பினார். முறைகளை இந்தளவிற்கு வலியுறுத்தும் இங்கிலாந்து நாட்டிற்கு வந்த அமெரிக்கர் ஒருவர் இங்கிலாந்து அரசனுடன் விருந்துண்டுவிட்டு, Your Majesty என்று சொல்லாமல் வெறுமனே ‘ஏ! அரசரே உங்களுக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஐரோப்பிய நாடுகளில் பேராசிரியர் பதவியெல்லாம் டாக்டர் பட்டம் வைத்திருப்பவருக்குத்தான் கிடைக்கும். ஆனால் அமெரிக்காவில் Ph.D. இல்லாதவர்கள்கூட பல்கலைக்கழகங்களில் அதிபர்களாகப் பணியாற்றுவதுண்டு. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முறையாக திருமணம் செய்து கொள்ளாமல், ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்துவது அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக உள்ளது. அதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படிக் குடும்பம் நடத்தும் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, முறையாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மரியாதை கிடைக்கிறதோ அதே மரியாதை கிடைக்கும். 1960-க்குமுன் வெள்ளைக்கார குழந்தைகள் பள்ளிகளில் கறுப்பின குழந்தைகளுடன் சரியாகப் பழகாமல் தனியே நிற்பார்கள். ஆனால் இதன்பின் இதெல்லாம் மாறிவிட்டது. கலர் வித்தியாசம் தெரியாமலேயே பழகுகிறார்கள். Academic கருத்தரங்குகளும் மாநாடுகளும் ஐரோப்பாவில் நடைபெற்றால் கலந்து கொள்பவர்கள் கோட், சூட் மற்றும் டை அணிந்து கொண்டுதான் வர வேண்டும். அது இல்லாமல் வந்தால், கருத்தரங்கில் கலந்து கொள்வது கடினமாகும். ஆனால் அமெரிக்காவில் இதையெல்லாம் எளிமைப்படுத்தி விட்டார்கள். ஐரோப்பாவில் கருத்தரங்கில் கலந்து கொள்வதை அமெரிக்காவில் workshop என்று மாற்றிச் சொல்கிறார்கள். நம் நாட்டில் workshop என்றால் ரிப்பேர் வேலை செய்யும் இடமாகும். ஆனால் அமெரிக்கர்கள் அதற்கான பெயரை கருத்தரங்கிற்கு பயன்படுத்தும் அளவிற்கு informal-ஆக இருக்கிறார்கள்.

நம் நாட்டில் சிறியவர்கள், பெரியவர்களை பெயர் சொல்லி அழைத்தாலே, பெரியவர்கள் அதை மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அங்கே அப்படி எடுத்துக் கொள்வதில்லை. இம்மாதிரியே கணவர்களை மனைவிகள் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கமும் அங்கே உண்டு. அதை கணவர்களும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. நம் நாட்டுக் கம்பெனிகளில் மேலதிகாரிகள் ஊழியர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால், என்ன வேலை நடக்கிறது என்பதைப் பார்க்கத்தான் வருவார்களே தவிர ஊழியர்களோடு சகஜமாக உறவாடமாட்டார்கள். ஆனால் அமெரிக்கக் கம்பெனிகளில் அவ்வாறு பழகினால்தான் ஊழியர்களை உற்சாகப்படுத்த முடியும் என்று மேலதிகாரிகள் புரிந்து கொண்டுள்ளதால், அந்தஸ்து வித்தியாசமின்றி work spot-க்கு வரும்போது ஊழியர்களிடம் பழகுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதிகள்கூட சம்பிரதாய முறைகளையெல்லாம் அனுசரிப்பதுண்டு. ஒரு ஜனாதிபதியின் பதவி முடிவிற்கு வந்து அடுத்த ஜனாதிபதி பதவி ஏற்கும்போது புதியவர், பழையவருக்கு தேநீர் விருந்து தரும் பழக்கமுண்டு. ஆனால் எல்லா ஜனாதிபதிகளும் இதைக் கடைப்பிடித்தனர் என்று நாம் சொல்வதற்கில்லை. உதாரணமாக Truman என்ற அதிபர் போய் Eisenhover என்ற புதிய அதிபர் பதவி ஏற்றார். ஆனால் புதியவர் பழையவருக்கு வழக்கமாக தரும் விருந்து தரவில்லை. நம் நாட்டில் இம்மாதிரியான தவறு நிகழ்ந்திருந்தால், அதை முதல் பக்கத்தில் பெரிய செய்தியாக வெளியிட்டிருப்பார்கள். இம்மாதிரி பல நிகழ்ச்சிகள் அமெரிக்க அதிபர்கள் வாழ்க்கையில் நடந்துள்ளது. Carter பதவி இழந்து Reagan என்பவர் பதவிக்கு வந்தார். Carter வெள்ளை மாளிகையைக் காலி செய்வதற்கு இன்னும் பல நாட்கள் இருந்தபோதே Reagan-இன் மனைவி Carter-ன் மனைவியை அணுகி நீங்கள் இப்பொழுதே காலி செய்தால் தேவலாம். நான் வெள்ளை மாளிகையை எனக்குப் பிடித்த வகையில் அலங்கரிக்க விரும்புகிறேன் என்று சொன்னாராம். Roosevelt அவர்கள் ஜனாதிபதியாக வெற்றி வாகை சூடியபோது இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் அவருக்கு வாழ்த்து தந்தி அனுப்பினார். வாழ்த்தியதற்கு நன்றி தெரிவித்து பதில் தந்திகூட Roosevelt அனுப்பவில்லை. இம்மாதிரி ஒரு அலட்சியத்தை எந்த ஆங்கிலேயனாலும் ஏற்கவே முடியாது. முறை என்று பார்த்தால், ஐரோப்பாவில் அவைகளெல்லாம் சட்டம்போல் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தளவிற்கு முக்கியத்துவம் முறைகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படாதது ஐரோப்பியர்களுக்குப் பெரும் குறையாகி விட்டது. Iacocca Chrysler Car கம்பெனியில் அதிபராகப் பதவி ஏற்றபோது கார் விற்பனையை அதிகரிக்க அவரே டி.வி, கார் விளம்பரங்களில் தோன்றி வாடிக்கையாளர்களிடம் ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். ஆனால் ஐரோப்பிய கார் கம்பெனிகளின் சேர்மென்கள் அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்தளவிற்கு அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே வித்தியாசமுள்ளது.

6. அமெரிக்கர்கள் மாற்றத்தைப் பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் மற்ற நாட்டு கலாச்சாரங்கள் மாற்றங்களை அனுமதிப்பதேயில்லை:

மற்ற நாடுகளில் கருத்தரங்குகள் என்று சொல்வதை அமெரிக்கர்கள் workshop என்று சொல்கிறார்கள். அதையும் இப்பொழுது மாற்றி கருத்துப் பரிமாற்றம் brain storming என்று சொல்கிறார்கள். ஒரு காலத்தில் இதே அமெரிக்கர்கள்தான் பணம், வசதி, மாடர்ன் டெக்னாலஜி என்று பைத்தியமாக இருந்தார்கள். அவர்களே இப்பொழுது பணத்தைத் தேடி அலைவதில் அர்த்தமில்லை. அதைவிட உயர்ந்தது எதையாவது தேடவேண்டும், இந்திய ஆன்மீகத்தில்தான் நாம் தேடுவதற்கெல்லாம் விடையுள்ளது என்று இந்திய குருமார்களை அவர்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். 1960-வரை அமெரிக்கர்கள், நீக்ரோக்களைத் தள்ளி வைத்திருந்தார்கள். ஆனால், இன்று அவர்களே ஒரு நீக்ரோவை இரண்டுமுறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எந்தளவிற்கு அமெரிக்கர்கள் மாற்றத்தை வரவேற்கிறார்களோ அந்தளவிற்கு அது அவர்களை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் எந்தளவிற்கு stability-யை வலியுறுத்துகிறார்களோ அந்தளவிற்கு நமக்குத் தெம்பு அதிகரிக்கிறது. குறிப்பாக வேதம் போன்ற புத்தகங்களில் நாம் எந்த மாற்றத்தையும் அனுமதிப்பதே இல்லை. ஸ்ரீ அரவிந்தர் காயத்ரி மந்திரத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆசாரம் மிகுந்தவர்கள் இன்னும் அந்த மாற்றங்களை ஏற்காமல்தான் உள்ளார்கள். 19-ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேய அறிஞர் திருக்குறளில் ஒரு குறிப்பிட்ட குறளில் வார்த்தைகளை மாற்றினால் நன்றாக இருக்கும் என்றொரு கருத்துத் தெரிவித்தார். அதைக் கேட்ட தமிழ் பண்டிதரோ என்ன அபச்சாரம் இது என்று அலறினார். ஆங்கிலேயன் ஆண்டபோது நீதிமன்றங்களில் நீதிபதிகளை Your Honour, Your Lordship என்று விளிப்பதுண்டு. அந்தப் பழக்கத்தையே இன்னமும் மாற்றாமல் நாம் கடைப்பிடித்துக் கொண்டுதான் உள்ளோம். ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்தாலும், Mr. President என்றுதான் எளிமையாக விளிக்கிறார்கள். Your Highness, Your Excellency என்றெல்லாம் விளிப்பதில்லை. சம்பிரதாயத்தை மாற்றுவது பொதுவாக எல்லா கலாச்சாரங்களிலும் எதிர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை வலுவான எதிர்ப்பு ஒன்றுமில்லை. ஐரோப்பிய நாடுகளில் வெளியூர் வேலை என்றாலே பொதுவாக கசங்குவார்கள். ஐம்பது மைல்கள் அப்பாலுள்ள ஊர் என்றாலும்கூட யோசிப்பார்கள். சொந்த ஊர்ப் பற்று அவர்களுக்கு அவ்வளவு அதிகமாக இருக்கும். அமெரிக்காவில் இந்தச் சொந்த ஊர்ப் பற்று என்பது மிகவும் குறைவு. ஒரு சராசரி அமெரிக்கர் தன்னுடைய வாழ்நாளில் 13 தடவைகள் குடியிருக்கும் ஊரை மாற்றுகிறார் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கிழக்குக் கடற்கரையில் குடியிருப்பவர்கள் 3000 மைல்களுக்கு அப்பாலுள்ள மேற்குக் கடற்கரைக்கு எந்தவித தயக்கமுமில்லாமல் இடம் மாறுவார்கள். ஆனால் நம் நாட்டிலோ டில்லிக்கோ, கல்கத்தாவிற்கோ குடும்பம் இடம் பெயர வேண்டும் என்றால், அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு மிகவும் தயங்குவார்கள். நம் நாட்டில் செய்தித்தாள்களுக்குக்கூட ஒரு பாரம்பரியம், சம்பிரதாயமுள்ளது. வழக்கமாக முதல் பக்கத்தில் வருகின்ற செய்திகளைத் தவிர விளம்பரங்களைக் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கே ஆட்சேபணை எழும். ஆனால் அமெரிக்காவில் செய்தித்தாள்களை அவர்கள் சௌகரியம்போல் design, font என்று எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறார்கள். நாவல்களைச் சினிமாப் படங்களாக மாற்றும்போது ஐரோப்பாவில் நாவலிலிருப்பதற்கும், சினிமாவில் வருவதற்கும் வித்தியாசமில்லாமல் ஐரோப்பியர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அமெரிக்காவில் திரைப்பட டைரக்டர் தம் இஷ்டம்போல் கதையைத் திரைப்படத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்.

7. அமெரிக்கர்களின் குடும்ப வாழ்வில் பந்தபாசங்கள் மிகவும் குறைவு:

இதுவரையிலும் அமெரிக்க வாழ்வின் சிறப்புகளைப் பார்த்தோம். இனி அந்நாட்டு மக்களுடைய வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளைப் பார்ப்போம். முதலில் நமக்கு பளிச்சென்று நினைவிற்கு வருவது அமெரிக்கர்களுடைய குடும்ப வாழ்க்கைதான். கணவன் மனைவி என்றால் திருமண நாளிலிருந்து சாகும்வரை பிரியாமல் இருப்பார்கள் என்பதுதான் நாம் கண்டது. ஆனால் அமெரிக்காவில் திருமணங்கள் இவ்வாறு நிலைத்து நிற்பதில்லை. நடக்கும் திருமணங்களில் சரிபாதி 15 வருடங்களுக்குமேல் நீடிப்பதில்லை. இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்று விவாகரத்தில் முடிகிறது. இப்படி விவாகரத்து செய்வதால், குழந்தைகள் எந்தளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்று தாயாரோ, தகப்பனாரோ கருதுவதில்லை. அவரவர் சுதந்திரம்தான் அவரவருக்கு முக்கியமாகி விடுகிறது. பிறந்த நாளிலிருந்தே குழந்தைகளைத் தனியாகத்தான் படுக்க வைக்கிறார்கள். நம் நாட்டில் தாய்மார்கள் பெற்ற குழந்தையைத் தம் பக்கத்தில்தான் படுக்க வைப்பார்கள். இதைக் கேள்விப்படும் அமெரிக்கத் தாய்மார்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இப்படிப் பிறந்த நாளிலிருந்தே தனியாக படுக்க வைக்கும்போது தாயாரின் அரவணைப்புக் குறைந்து குழந்தைக்கு ஒரு insecurity உண்டாகிறது. இதையெல்லாம் எடுத்துக் கூறினால், அமெரிக்கத் தாய்மார்கள் கேட்பதேயில்லை. குழந்தைகள் அப்படித் தனியாகப் படுத்தால்தான் independent and self reliant-ஆக இருப்பார்கள் என்று வாதம் செய்கிறார்கள். நம் நாட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவு மற்றும் பெண்களின் திருமணச் செலவு ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். மெடிக்கல் காலேஜில் பையனைச் சேர்க்க நாற்பது, ஐம்பது லட்சம் செலவாகும் என்று தெரிந்தால், அதற்கெல்லாம் பெற்றோர் இங்கே தங்களுக்குள்ள வீடு, நிலத்தை விற்பதை பார்க்கின்றோம். ஆனால் அமெரிக்கப் பெற்றோர்கள் இப்படிப்பட்ட பெரிய செலவுகள் செய்வதில்லை. பிள்ளைகளே education loan போட்டு அது கிடைத்தால், அதை வைத்துக் கொண்டு அவர்கள் படித்துக் கொள்ள வேண்டியதுதான். மற்றபடி non-professional course-ல் சேருவதாக இருந்தால், பெரும்பாலான பிள்ளைகள் மாலை நேரங்களில் ஹோட்டல் வெய்ட்டர், கடைகளில் சேல்ஸ்மென், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடுபவர், நியூஸ் பேப்பர் போடுபவர் என்று சில்லறை part time வேலைகளில் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கல்லூரிப் படிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி 18 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி சொந்தக் காலில் நிற்க வேண்டிய நிலை வரும்போது பிள்ளைகளுக்குக் குடும்பப் பாசம் என்பது இல்லாமல் போகிறது. நம் நாட்டில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்கள் படாதபாடு படுவதாகத் தெரிகிறது. திருமணச் செலவிற்காக வீட்டையே விற்கும் பெற்றோர்கள் பலர் உள்ளனர். தீபாவளி, பொங்கல் சீர் என்று கூடுதல் சீர் செய்யப் பெற்றோர்கள் சிரமப்படுவதைப் பார்க்கலாம். ஆனால் அமெரிக்கப் பெற்றோர்கள் இப்படிச் சிரமப்படுவதே இல்லை. Church-க்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்து, அதிகமாக ஒரு lunch வழங்குவார்கள். வசதியான பெற்றோராக இருந்தால், மேற்கொண்டு தன்னுடைய பெண்ணிற்காக நகையெல்லாம் செய்து போடுவார்கள். அவ்வாறு வசதி இல்லாத பெற்றோராக இருந்தால், போடாமலும் விட்டுவிடுவார்கள். அவர்கள் போட்டுதான் ஆக வேண்டும் என்று மணமகன் வீட்டார் கட்டாயப்படுத்த முடியாது. இப்படிப் பெற்றோர் பிள்ளைகளுக்குப் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை என்ற நிலை உள்ளபோது, அந்தளவிற்கு அவர்களுக்கு அதிகாரமும் குறைந்து போகிறது. இங்கே கல்யாணச் செலவிற்கு முழுப் பொறுப்பு பெற்றோர்கள் ஏற்பதால், மகள் யாரைக் கல்யாணம் செய்யவேண்டும் என்பதில் முழு அதிகாரத்தைப் பெற்றோர்களே செலுத்துகிறார்கள். பெற்றோர்களின் அதிகாரத்திற்குப் பெண்களும் பயந்து பெரும்பாலும் பெற்றோர் விருப்பத்தையே பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் நிலைமை வேறுமாதிரியுள்ளது. அங்கே பெண் தனக்கேற்றவரைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்கிறாள். இதனால் வேறு community-யைச் சேர்ந்த ஆண் மகனைத் தேர்ந்தெடுத்தாலும், பெற்றோர் பெரிதாக ஆட்சேபணை தெரிவிக்க தகுந்த ஆதாரமில்லாமல் போய்விடுகிறது. எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லலாமே தவிர திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவர்களால் முடிவதில்லை. பல ஆண்பிள்ளைகள் அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டு தந்தையாரைப் போனில் அழைத்து, Dad நான் திருமணம் செய்துகொண்டு விட்டேன். இதை நான் உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை என்பதால் தெரிவிக்கிறேன் என்று சொல்லி விட்டுப் பதிலுக்கு அவர் என்ன சொல்வார் என்றுகூட காத்திருக்காமல், லைனை கட் பண்ணிவிடுவார்கள்.

ஆக நம் நாட்டில் பெற்றோர்களுக்குப் பிள்ளைகள்மேல் பாசமுள்ளது. பாசத்தின் காரணமாகப் பொறுப்புமுள்ளது. பாசம், பொறுப்பு இரண்டும் அதிகமாக உள்ளதால், பிள்ளைகளின் வாழ்க்கையின் பேரில் அளவுகடந்த அதிகாரமும் வந்துவிடுகிறது. அங்கே பாசம் குறைவு, அதேசமயத்தில் சுதந்திரம் அதிகம். இது நமக்குக் குறையாகத் தெரிகிறது. பாசமும், அதிகாரமும் நிறைந்த இந்தியப் பெற்றோர் சிறந்தவரா? அல்லது பாசம் குறைந்து, சுதந்திரம் அதிகமளிக்கும் அமெரிக்கப் பெற்றோர் சிறந்தவரா? என்று முடிவு செய்வது கடினம். வயதான பெற்றோர்களை வளர்ந்த பிள்ளைகள் வைத்துப் பார்த்துக்கொள்வதை நாம் குடும்பப் பாசத்தின் உச்சகட்டமாக எடுத்துக் கொள்கிறோம். சிறந்த குடும்பப் பண்பின் அடையாளமாகவும் நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அமெரிக்காவில் இதைக் காண்பதே அரிது. இங்கே வயதானவர்களுக்கு முறையாக பென்ஷன் கிடையாது. Medical Insurance-உம் கிடையாது. அதனால் வயதானவர்களை இளம் பிள்ளைகள் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அங்கே இப்படியில்லை. வேலை செய்து ஓய்வு பெறுபவர் எல்லோருக்குமே social security pension உண்டு. உடம்பிற்கு வந்தால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இப்படி வருமானத்திற்கு வருமானம், மருத்துவ சிகிச்சைக்கு Medical Insurance என்றிருக்கும்போது கூடவே மற்றவர்கள் இருந்து பார்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இப்படி பொருளாதாரக் காரணங்களைக்காட்டி அமெரிக்கர்கள் வயதான பெற்றோர்களைக்கூட வைத்துக் கொள்ள பிரியப்படுவதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளின் privacy-யில் குறுக்கிடுவதாக நினைத்து பிள்ளைகளுடன் சென்று வாழத் தயக்கம் காட்டுகிறார்கள். பொருளாதாரக் காரணங்கள் ஒருபுறமிருந்தாலும் நம் நாட்டில் அது ஒன்று மட்டுமே காரணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. வயதானவர்களைத் தனிமை வாட்டும். பிள்ளைகள் பேரக்குழந்தைகளெல்லாம் சேர்ந்திருந்தால், இந்தத் தனிமை உணர்வு வெகுவாகக் குறையும். பேரக்குழந்தைகளும் தாத்தா, பாட்டியின் companionship-ஐ அனுபவித்து மகிழ்வார்கள். ஆகவே நம் நாட்டில் பொருளாதாரக் காரணங்களைக் காட்டிலும் குடும்பப் பாசம்தான் வயதானவர்களைப் பிள்ளைகளுடன் தங்க வைக்கிறது என்று நாம் சொல்லலாம்.

அடுத்ததாக குடும்பப் பாசத்திற்கு அடிப்படையாக இருப்பது கணவன் மனைவியிடையே இருக்கும் நெருக்கமான உறவுகள்.கணவன் என்று ஒருவன் அமைந்துவிட்டால் கடைசிவரை அவன் தன்னுடன் இருப்பான் என்ற உணர்வு மனைவிக்குக் கிடைத்தால், அந்தப் பெண்மணி மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார். இதே உணர்வு கணவனாக இருப்பவருக்கும் கிடைக்கிறது. இந்தியத் திருமண உறவுகளில் உள்ள இந்தப் பாதுகாப்பு அமெரிக்கத் திருமண உறவுகளில் இல்லை. இதற்குக் காரணமும் இருக்கிறது. இந்தியாவில் பெண்கள் கணவருக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்கின்றனர். அவருடைய செயல்பாடுகள் பிடிக்கிறதோ இல்லையோ அவற்றை நாம் ஆட்சேபிக்கக் கூடாது, மறுத்துப் பேசக் கூடாது என்று பெண்கள் அடங்கிப் போவதால், கணவன் மனைவியிடையே உள்ள சுமுகம் நீடிக்கிறது. தனக்குப் பிடிக்காததை கணவன் செய்யும்போது அதைக் கேள்விக் கேட்காமல் மனைவி இருக்கும்போது அந்த இடத்தில் கணவனுடைய பாசம் வலுப்பெறுகிறது. இந்த இடம் அமெரிக்கக் கணவன், மனைவி உறவில் இல்லை. இந்தியப் பெண்கள்போல் அமெரிக்கப் பெண்கள் கணவர்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தங்களைக் கணவர்களுக்குச் சரிசமமாக நினைக்கிறார்கள். அவர் எல்லாவற்றையும் தன்னிடம் சொல்ல வேண்டும், அவர் என்ன செய்கிறார், எங்கே போகிறார், யாருடனெல்லாம் உறவாடுகிறார் என்று எல்லாம் தனக்குத் தெரிந்தாக வேண்டும் என்று நினைக்கிறார். அவர்களுக்குப் பிடிக்காத ஏதேனும் ஒன்றைச் செய்து விட்டால், கறாராகக் கேள்வி கேட்பார்கள். வழக்கமாக 8 மணிக்குள் வீட்டிற்கு வருபவர் ஒருநாள் பத்து மணிக்கு வந்தால், பொதுவாக கடன் கொடுக்காதவர் உறவினர்கள் யாருக்காவது கொடுத்தால், மனைவிக்குப் பிடிக்காதவர் வீட்டிற்கு வந்தால், அவருக்குப் பிடிக்காத செலவு செய்தால், அமெரிக்க மனைவிகள் உடனே கேள்விகள் கேட்பார்கள். இந்தக் கேள்விகளுக்குப் பதில்கூற கணவர்கள் மறுக்கும்போது அங்கே உறவு கசந்து போகிறது. இப்படி அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுக்க முடியாத இடம் திருமண வாழ்வில் வந்துவிடும்பொழுது நாளாவட்டத்தில் உறவு கசந்துபோய் மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டுப் போகிறது.

இப்படித் திருமண உறவு முறிந்துபோகும் குடும்பங்களில் பிறந்து வளர்கின்ற குழந்தைகள் மனநலம் கெட்டு சமூக விரோதிகளாக மாறுகிறார்கள். திருட்டு, கொலை, கொள்ளை என்றிவற்றில் ஈடுபடுபவர்களையெல்லாம் பார்த்தால், இவர்கள் எல்லோருடைய பின்னணியிலும் உடைந்த குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்ட மனைவிமார்கள், குடிபோதையில் குடும்பத்தைச் சீரழித்த தகப்பனார்கள் என்றுதானிருக்கும். அங்கிருந்து இந்தியாவிற்கு வருகின்ற அமெரிக்கர்கள் இந்தியர்களின் பாசமயமான குடும்ப வாழ்க்கையைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். கணவன் வீடுகளுக்கு வரும்வரையிலும் காத்திருந்து, உணவு பரிமாறிவிட்டு, பிறகு தான் உண்ணும் மனைவி, தனக்குப் பிடித்த subject-ஐ விட்டுவிட்டு தகப்பனாருக்குப் பிடித்த subject-ஐ எடுத்துக் கொள்ளும் மகன், சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு வெறும் ரூ.500, ரூ.1000 என்று தனது பாக்கெட் செலவிற்கு வைத்துக் கொள்ளும் மகள், உடம்பு முடியாமல் படுத்துவிட்ட பெற்றோருக்கு எல்லாவிதமான பணிவிடைகளையும் செய்து காலத்தைப் போக்கும் பிள்ளைகள் என்றிவைகளையெல்லாம் நேரில் பார்க்கும் அமெரிக்கர் இப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை எப்படிச் சாத்தியம்? இம்மாதிரி எங்கள் நாட்டில் அமைந்தால், எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்று வியந்து பாராட்டுகிறார்கள். ஒருபக்கம் அதிக சுதந்திரத்தைக் கேட்கிறார்கள். மற்றொரு பக்கம் பாசமான குடும்ப வாழ்வை எதிர்பார்க்கிறார்கள். சுதந்திரத்தை ஓரளவு தியாகம் செய்தால்தான் குடும்ப வாழ்வு சிறக்கும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. எந்த அமெரிக்கப் பெண்மணியும் கணவன் வீட்டிற்கு வருவது தாமதமானால், அவருக்காகக் காத்திருக்க முன்வருவதில்லை. தனக்குப் பசி வந்தால், உடனே சாப்பிடுவேன் என்ற அந்தச் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காமல், பாசமான குடும்ப உறவுகள் வேண்டும் என்று கேட்டால், இக்கேள்வியே முரண்பாடாக அமைகிறது.

8. அமெரிக்க நாடு உலகில் நிலவும் பயங்கரவாதத்தை அழிக்க விரும்புகிறது. இருந்தாலும், அந்த நாட்டிலேயே நிலவும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது:

உலக பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் எப்படி இருக்கிறது என்றால், தன்னுடைய பிள்ளைகள் தறுதலையாக இருக்கும்போது அடுத்த வீட்டுப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்று புத்திமதி சொல்லும் குடும்பத் தலைவர்போல் உள்ளது. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகப்படுவதாகச் சொல்லிக்கொண்டு பத்து வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கா தாக்குதல் நடத்திப் பெருவெற்றி பெற்றது. இருந்தாலும், பேரழிவிற்கான ஆயுதங்கள் அங்கே எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. WTC Towers விமானத் தாக்குதலால் தகர்க்கப்பட்டபோது, அது ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் அல்கொய்தா தீவிரவாதிகளின் வேலை என்று முடிவு செய்து பத்து வருடங்களாகப் பல்லாயிரம் கோடிகளை செலவு செய்து, ஆப்கானிஸ்தானில் நிலவும் தீவிரவாதத்தை ஒடுக்கியது. இவ்வளவு செலவு செய்தாலும், தீவிரவாத பீதியிலிருந்து அமெரிக்கா விடுபட்டதாகத் தெரியவில்லை. இம்மாதிரியான நிலைமைக்குத் தீர்வாக ஸ்ரீ கர்மயோகி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், சொந்த நாட்டில் நிலவும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலன்றி, அமெரிக்காவின் தீவிரவாத முயற்சி வெற்றி பெறாது என்கிறார்.

துப்பாக்கிக் கலாச்சாரம் ஏன் அங்கு நிலவுகிறது என்பதை நாம் முதலில் அறியவேண்டும். ஆரம்பத்தில் வனாந்திரமாக அமெரிக்கா இருந்தபோது அங்குக் குடியேறியவர்கள் செவ்விந்தியர்களிடமிருந்தும், வனவிலங்குகளிடமிருந்தும் கொள்ளை முயற்சிகளில் ஈடுபடும் ரௌடிகளிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வனாந்திரத்தில் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டார்கள். வனாந்திரத்தில் போலீஸ் ஸ்டேஷன் நிறுவமுடியாது என்ற சிரமமும் இருந்தது. எனவே அரசாங்கமே பொதுமக்கள் தன்னுடைய உயிரையும் உடமையையும் அவரவரே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கக் கலாச்சாரம் நாகரீகமடைந்து, வனாந்திரங்களெல்லாம் மறைந்து சட்டம், ஒழுங்கு, போலீஸ் பாதுகாப்பு இவை எல்லாம் வந்தபிறகும் அமெரிக்க மக்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்தை விட மறுக்கிறார்கள். இந்த இடம்தான் புரியாத புதிராக உள்ளது. ஸ்ரீ கர்மயோகி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அமெரிக்கா நாகரீகமடைந்த நாடாகி விட்டபோதும், பழைய வனாந்திர பழக்கவழக்கங்களை அவர்களால் விட முடியவில்லை. அவர்களுக்குக் காவல் துறை மேலோ, சட்டம் ஒழுங்கு மேலோ இன்னமும் நம்பிக்கை வரவில்லை. அவர்கள் நம்பிக்கையெல்லாம் அவர்கள் கையில் வைத்துள்ள துப்பாக்கி மேல்தான் உள்ளது என்கிறார். இப்படித் துப்பாக்கிமேல் வைத்துள்ள நம்பிக்கையை அவர்கள் விடாமல், அங்கே நிலவும் வன்முறையையோ அல்லது வெளிநாடுகளிலிருந்து வரும் தீவிரவாத தாக்குதல்களையோ ஒழிக்க முடியாது என்கிறார்.

இருந்தாலும், அம்மக்கள் வன்முறையிலிருந்தும், தீவிரவாதத்திலிருந்தும் விடுதலை வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால் அமெரிக்க மக்களிடமுள்ள உண்மை அமெரிக்க அரசிடமில்லை. அணுகுண்டுகள் ஆபத்தானவை, அவைகளை வைத்திருப்பது நல்லதல்ல என்று பொதுவாக அமெரிக்க மக்கள் நினைக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அணுகுண்டுகளை விடுவதாக இல்லை. மாறாக, அணுகுண்டுகளை வைத்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறது. பேரழிவிற்கு வழி செய்யும் அணுகுண்டுகளை விடமாட்டேன் என்று சொல்லும் ஒரு நாடு எப்படித் தன் நாட்டில் வன்முறை தலையெடுக்காமல் தடுக்க முடியும்? அணுகுண்டுகளை அழிக்காமல் வைத்திருப்போம் என்று சொல்வதே தவறு. அந்தத் தவற்றை செய்கின்ற அமெரிக்க நாடு அதோடு நிற்காமல் அணு ஆயுதங்களை வைத்திருக்காத மற்ற நாடுகளையெல்லாம் மிரட்டி ‘உங்களுக்கு அணுசக்தி மின் நிலையம் வேண்டுமென்றால், அணுகுண்டு தயாரிக்க மாட்டோம்’ என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் நாங்கள் அணுசக்தி technology-யைக் கொடுப்போம் என்று கட்டாயப்படுத்துகிறது. இம்மாதிரி மிரட்டும்போது ஒரு போலித்தனம் வெளிப்படுகிறது. அதாவது நாங்கள் அணுகுண்டுகள் வைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் வைத்திருக்கக் கூடாது என்று சொல்வதுபோலுள்ளது. சில நாடுகள் வெளிப்படையாக இப்படி அமெரிக்க அரசாங்கத்தைக் கேள்விகள் கேட்கின்றன. உதாரணமாக, ஈரான் அணுகுண்டு தயாரித்ததை அமெரிக்கா கண்டித்தபோது ஈரானிய அதிபர் இப்படித்தான் எதிர்கேள்விக் கேட்டார். அப்படிக் கேள்வி கேட்பது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை எனும்போது இது அந்நாட்டினுடைய insincerity-யைக் காண்பிக்கிறது. Insincerity இந்த இடத்தில் மட்டும் வெளிப்பட்டு அத்துடன் நின்றுவிடுவதில்லை. மற்றும் பல இடங்களிலும் வெளிப்படச் செய்கிறது. உதாரணமாக அமெரிக்கா ஒரு ஜனநாயகக் குடியரசு. நியாயமாகப் பார்த்தால், உலகின் மற்ற நாடுகளில் ஜனநாயகக் குடியரசு அமைய அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா இதற்கு நேரெதிர் மாறான காரியத்தைத்தான் செய்கிறது. அமெரிக்காவிற்குக் கம்யூனிசத்தை ஆதரிக்கும் நாடுகள் நேரெதிரிகளாவார்கள். ஆகவே கம்யூனிசம் நிலவும் நாடுகளிலெல்லாம் அவ்வாட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா முயற்சி எடுக்கும். கம்யூனிசத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ராணுவ ஆட்சி வந்தாலும் பரவாயில்லை என்று அமெரிக்கா உள்ளது. ஜனநாயகத்தை ஆதரிக்கும் அமெரிக்கா போன்றதொரு நாடு மற்ற நாடுகளில் ராணுவ ஆட்சி வர உதவி செய்வது என்ன நியாயம்? நேருவும் இந்திராவும் நம் நாட்டின் பிரதமராக இருந்தபோது சோவியத் யூனியனுடன் இந்தியா நட்புறவு கொண்டிருந்தது. இது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை. இதன் காரணமாக, 1965-லும் சரி 1971-லும் சரி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் வந்தபோது அமெரிக்கா வெளிப்படையாக, பாகிஸ்தானைத்தான் ஆதரித்தது. இம்மாதிரியே இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் உறவில் எப்போது பிரச்சனை வந்தாலும், இஸ்ரேல் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் பாலஸ்தீனர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்பதுபோல் ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா பேசுகிறது. இதனால் பெரும் கோபமடைந்து அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவினுள் நுழைந்து, விமானங்களைக் கடத்தி, உலக வர்த்தக மைய கட்டடங்கள் இரண்டை விமானங்களை வைத்தே மோதி தகர்த்து, அமெரிக்காவையே பயங்கரவாத பீதியில் ஆழ்த்தினார்கள். இப்படியாக, அமெரிக்காவில் அமைதி நிலவ வேண்டுமென்றால், அதற்கு எதிரான காரியங்களை அந்நாடே செய்துகொண்டுள்ளது என்பது அந்நாட்டின் அறிவின்மையைக் காட்டுகிறது. அதாவது மக்களைத் துப்பாக்கி வைத்துக் கொள்ள பரவலாக அனுமதிப்பது, அணு ஆயுதங்களைக் கைவிட மறுப்பது, கம்யூனிசத்தை அழிப்பதாக நினைத்துக் கொண்டு ராணுவ ஆட்சியை ஆதரிப்பது, அமைதி விரும்பும் நாடான இந்தியாவைக் கைவிட்டு, வன்முறையை விரும்பும் பாகிஸ்தானை ஆதரிப்பது, இஸ்ரேலின் குறைபாடுகளைக் கண்டுகொள்ளாமல், அந்நாட்டையே ஆதரித்து, மற்ற முஸ்லீம் நாடுகளின் பகையைச் சம்பாதிப்பது போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபடும் வரையில் அமெரிக்காவில் அமைதி நிலவுவது கடினம். என்று இந்தத் தவறுகளையெல்லாம் அந்த அரசு உணர்ந்து, கைவிட்டு மனம் மாறுகிறதோ அன்றிலிருந்துதான் அந்நாட்டிற்கு உண்மையாக பயங்கரவாதத்திலிருந்து விடுதலை கிடைக்கும். அமெரிக்க அரசு மாறுமா மாறாதா என்று நாம் சொல்வதற்கில்லை. ஆனால் மாறினால் நல்லது என்பதை மட்டும் சொல்ல முடியும்.

முற்றும்.

********



book | by Dr. Radut