Skip to Content

2. ஏன் எனக்கு இந்தக் கஷ்டம்?

ஏன் எனக்கு இந்தக் கஷ்டம்?

அன்னை எவருக்கும், எப்பொழுதும் கஷ்டம் கொடுப்பதில்லை. அன்பர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வியிது. கம்பெனியில் ஆர்டரே இல்லாமலிருந்தது. பிரார்த்தனை செய்தேன். ஏராளமான ஆர்டர் வந்தது. பணமில்லை. ஆர்டரைக் கொடுத்தவர் பணமும் கொடுக்கக் கூடாதா? என்பது கேள்வி. பணமும் வந்தபொழுது அது செலவாகி அடுத்த பிரச்சனை உருவானது நினைவிருப்பதில்லை. நாம் எதைக் கற்க வேண்டுமோ அதைக் கற்கும் சந்தர்ப்பத்தை அன்னை தருவதை ஏன் இந்தக் கஷ்டம் எனக் கேட்கிறோம். நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தபின் இந்தக் கஷ்டமிராது என்பது அனுபவம். இந்தக் கேள்வியைக் கேட்பவர் கடந்த 6 மாதம், ஒரு வருடத்தில் நடந்ததை நினைத்துப் பார்த்தால் இதே கஷ்டம் 6 மாதங்களுக்குமுன் வந்தது. அப்பொழுது பணம் வேண்டுமெனக் கேட்டேன். பணம் வந்தது. போன இடம் தெரியவில்லை என்பார்கள். நாம் மற்றவர் செய்வதைச் செய்வதில்லை, செய்யத் தெரியாது, செய்யப் பிரியப்படுவதில்லை என்பதை அறியும்வரை கஷ்டம் விலகாது. வந்தது கஷ்டமில்லை, அறிவு பெறும் வாய்ப்பு. அறிவைப் பெற்றால் அடுத்த முறை இது வராது என்ற அனுபவத்தை மறந்து விடுகிறோம். நாம் இந்த நேரம் செய்ய வேண்டியதைச் செய்தபின் கஷ்டமிராது.

அந்த நேரம் அன்பர் கேள்வி வேறு:- நான் செய்ய வேண்டியதை என்னால் செய்ய முடியவில்லை. ஏன் அன்னை செய்யக் கூடாது? முடிந்ததை முழுவதும் முடித்தால் மீதியை அன்னை செய்து விடுகிறார் என்பது அனுபவம். அதையும் செய்யாதவர் கேட்கும் கேள்வியிது.

*******



book | by Dr. Radut