Skip to Content

14. அன்னை இலக்கியம்

அன்னை இலக்கியம்

நல்லதோர் வீணை செய்து

இல. சுந்தரி

Life Divine

நல்லது கெட்டதைத் தன்னுட்கொண்டது. கெட்டதின் வித்து நல்லது. கெட்டது விலக்கப்பட வேண்டியதில்லை. ஏற்று நல்லதாகத் திருவுருமாற்றப்பட வேண்டியது. அத்திருவுருமாற்றம், குறையை விலக்குவதோடல்லாமல், குறையை அதற்கெதிரான நிறைவாக மாற்றும் பொழுது அந்நிறைவு நாமறிந்த நிறைவைவிட உயர்ந்ததாக இருக்கும்.

வாழ்க்கையிலுள்ள எந்தப் பிரச்சனையையும் இந்நூல் மூலம் தீர்க்க முடியும்.

நூலைப் பயன்படுத்தி ஒரு அதிசயத்தை நிகழ்த்தலாம். வியாதியை மணி, மந்திரம், ஔஷதம், குணப்படுத்தும். அவற்றால் தீராத வியாதியுண்டு. நூல் (Life Divine) அதைக் குணப்படுத்தும்.

இந்நூலின் பெயர் காதில் விழுவது, நூல் கண்ணில்படுவது சுபசகுனம்.

*******

இருள் பிரியத் தொடங்கும் அதிகாலைப் பொழுது. இரயில் பெட்டி தன் நீண்ட பயணத்தை நிறுத்தி ஓய்வெடுக்கும் நேரம். தஞ்சை சந்திப்பு மக்கள் கூட்டம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. கண்விழித்த வசந்தி எல்லோரும் இறங்கட்டும் என்று பொறுமையாக, வாஷ்பேசினில் முகங்கழுவி, டவலால் துடைத்துக் கொண்டு புத்துணர்வுடன் தன் டிராவலிங் பேக்கை எடுக்க வந்தபோது பெட்டியே காலியாகியிருந்தது. சீட்டின் ஜன்னலோர மூலையில் யானைக்குட்டி போல் ஒரு புத்தகம். அடடா! யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் போலிருக்கிறது என்று கூறிக்கொண்டே இரண்டு கைகளாலும் புத்தகத்தை எடுத்தாள். ‘Life Divine’ என்று பெயர் தெரிந்தது. ‘பெயரே அழகாக இருக்கிறதே. பாவம், யாருடையதோ?’ என்று சுற்றும் முற்றும் பெட்டிக்கு வெளியே எட்டிப் பார்த்தாள்.

புத்தகத்தின் சொந்தக்காரர் மூச்சிரைக்கத் தேடி வருவார் என்றெண்ணி ஒரு மணி நேரம் பிளாட்பாரத்தில் காத்திருந்தாள். ஒருவரும் வந்திலர். பெயர் ஏதேனும் இருக்குமோ என்று அட்டையைப் புரட்டினாள். ஒரு மடித்த தாள் மட்டுமிருந்தது.

அதில் ஏதேனும் புத்தகத்தின் சொந்தக்காரரைப்பற்றி இருக்குமோ என்று எண்ணிப் பார்த்தாள்.

வாசகர்களே! தொடக்கத்தில் நீங்கள் படித்த கருத்துகளே அந்தத் தாளில் எழுதப்பட்டிருந்தது.

இவள் ஒரு ஆன்மீகவாதி. இளம் பெண். திருமண ஆர்வமின்றி ஆன்மீக நாட்டமுடையவள். பெரிய அலுவலகமொன்றில் பொறுப்பான பதவியில் இருப்பவள். ஒரு முக்கியமான அலுவல் காரணமாக சென்னை சென்று திரும்பும் போதுதான் மேற்படி செய்திகளுடன் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் ‘Life Divine’ புத்தகமும், அதற்குள்ளே அதுபற்றிய ஒரு சான்றோரின் கருத்துகள் எழுதிய தாளும் கிடைக்கப் பெற்றாள்.

இது பணமாகவோ, பொருளாகவோ இருந்திருந்தால் போலீஸில் ஒப்படைத்திருப்பாள். அவளுக்கு மிகவும் பிடித்த புத்தகம். அதுவும் அவள் பெரிதும் விரும்பும் ‘தெய்வீக வாழ்வு’ பற்றியது. அதன் சிறப்புக் குறித்த குறிப்புவேறு. உரியவர் யாரும் வந்து கேட்கவுமில்லை. கடவுள் தன்பொருட்டு அளித்தது என்று எண்ணி பவித்திரமான உணர்வுடன் அதை எடுத்துக்கொண்டு தான் தங்கியுள்ள ஹாஸ்டலுக்குப் போனாள்.

இயல்பாகவே பொருட்களை ஜீவனுள்ளதாக மதித்து நடக்கும் அவளுக்கு அப்புத்தகத்துடன் உயிர்த்துடிப்புள்ள தொடர்பு வந்தது. ஆரோக்கியமும் அழகும் ததும்பும் கள்ள- மில்லாத சின்னக் குழந்தையைத் தூக்கிக் கொள்வதுபோல் உணர்வு கொள்வாள்.

பெற்றோர்கள் விபத்தில் இறந்ததால், பச்சிலைக்காடு என்ற தன் ஊரில் பெற்றோருடன் வசித்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் இங்குப் பணிபுரியும் மகளிர் விடுதியில் தங்கி வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். இந்தப் புத்தகம்

அவளுக்கு அருட்புதையல் ஒன்று கிடைத்தது போலிருந்தது. அதைப்படிக்கத் தொடங்கினாள். ஆர்வம் பெருகியது.

அவள் படித்த M.A. இந்நூலைப் படிக்க (ஆங்கிலம்) உதவியது என்று சொல்ல முடியாது. ஆர்வம் இருந்த அளவிற்கு விரைவாகப் படிக்க இயலவில்லை. ஒரே சொல் எத்தனையோ பொருள் கொள்ள இடமளித்தது. பொருத்தமான பொருளை கண்டறிய அவளிடமிருந்த ஐந்து அல்லது ஆறு சொல்- லகராதிகள் துணைபுரியவில்லை. ஓரிரு பாராக்கள் பயின்றதுமே நூலாசிரியர் (ஸ்ரீஅரவிந்தர்) மீது அளவுகடந்த பக்தி எழலாயிற்று. தனிப்பட்ட எவர் மீதும் பற்றுக் கொண்டறியாத அவளுக்கு நாளுக்குநாள் ஸ்ரீ அரவிந்தர் மீது பற்று எழலாயிற்று. பற்றற்றவர் மீது எழும் பற்றல்லவா! தீங்கு விளைவிக்காததாய் இருந்தது. அதேகணம் ஓரத்தியாயத்துடன் நிறுத்திவிட்டு ஸ்ரீ அரவிந்தர்பற்றிய நூல்களையெல்லாம் தேடிப்பிடித்து படிக்கலானாள்.

இந்நூலைப் பெறக் காரணமான அந்தப் பயணம், அதாவது அவள் தன் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற பயணம் யாரும் எதிர்பார்த்திராத அளவில் இவள் பணிபுரியும் கிளை அலுவலகத்திற்கு வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வந்திருந்தது. குசேலர் கொண்டுவந்த அவலை ஸ்ரீ கிருஷ்ணர் தம் திருவாயில் இட்ட கணத்தில் குசேலர் மனை வளம் பெற்றது போல் இவள் ‘Life Divine’ நூலைக் கையில் எடுத்த கணத்தில் காரியம் பூர்த்தியாயிருந்ததைக் கண்டாள்.

ஸ்ரீ அரவிந்தரைப்பற்றி அறிந்த செய்திகள் அவர்மீது அளவு கடந்த பக்தியுணர்வை ஏற்படுத்தவே, புரிந்து கொள்ளக் கடுமையான அந்நூலை ஸ்ரீ அரவிந்தரைத் தன் மனக்கோயிலில் எழுந்தருளச் செய்து, அவருடன் மானசீகமாய் ஆசிபெற்றுப் படிக்கத் தொடங்கினாள். தடையில்லாமல் படிப்பதற்காக அலுவலகத்திற்கு ‘லீவ்லெட்டர்’ அனுப்பி விட்டாள். படிக்கப்படிக்க புத்துணர்வும், தெம்பும் ஏற்படுவது உணர முடிந்தது. நீண்ட விடுமுறைக்குப்பின் அலுவலகம் வந்த அவளை எல்லோரும் பெருவியப்புடன் பார்த்தனர்.

நீண்ட நாள் நோயிலிருந்து நிரந்தர விடுதலை பெற்றவரின் தெளிவும், சந்தோஷமும் அவளிடம் காணப்பட்டது. இத்தனை நாட்கள் நீ எவ்வித சத்துணவு சாப்பிட்டாய்? எப்படிப்பட்ட செல்வங்களை அடைந்தாய். உன் முகத்தெளிவும், சந்தோஷமும் ஏதோ பெரிய அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதைப் போல் தெரிகிறதே? என்றனர்.

ஆமாம் எனக்கொரு புதையல் கிடைத்திருக்கிறது. அதனால் வந்த சந்தோஷம்தான் இது என்றாள்.

புதையலை நீ மட்டுமே அனுபவிக்கப் போகிறாயா? எங்களுக்குத் தரமாட்டாயா? என்றனர்.

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அது எனக்குக் கிடைத்தது என்பதால் எனக்கே சொந்தமன்று. தேவைப்படுபவர்- களுக்கு, ஏற்றுக்கொள்பவர்க்குத் தருவதற்காகவே உள்ளது என்றாள்.

அது எப்படிப்பட்டது? என்றனர். போகப்போகப் புரிந்து கொள்வீர்கள் என்றாள்.

தன் பெற்றோர் தனக்கென விட்டுச் சென்ற அந்த வீட்டைப் புதுப்பித்து, அங்கு ஒரு புதிய சூழலை உருவாக்கவும் தன் தவவாழ்வைத் தொடங்கவும் முடிவு செய்தாள்.

பாழடைந்த வீட்டைப் புதுப்பித்தாள். வீட்டைச் சுற்றி அழகுற பூஞ்செடிகளை நடச்செய்தாள். வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் தெய்வீகமும் அமைதியும் நிரப்ப வேண்டும் என்று கருதினாள். வீட்டின் தோற்றத்தில் புதுமையிருந்தது. அதனுள் பழங்கால முனிவர்களின், ரிஷிகளின் தெய்வீகச் சூழல் இருந்தது. பழைய வடிவங்களை உடைத்தெறிந்து விட்டு, அதன் உள்ளுறையும் சாரத்தைக் கைக்கொள்ளுங்கள் என்ற பகவானின் கருத்தை ஒவ்வொன்றிலும் மேற்கொள்ளத் தொடங்கினாள்.

இப்போதைக்கு வேலையை விட்டுவிடாமல் வீட்டிலும் வெளியிலும் ஒரு தவவாழ்வை மேற்கொண்டாள். அப்போது தான், அந்நூலைப்பற்றிய படித்த கருத்து ஒன்றை மெய்ப்பிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

அவள் அலுவலக மேலதிகாரிக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரத்த அழுத்தம் காரணமாக உடலின் வலப்பக்கம் பாதிக்கப்பட்டது. வலக்கால். வலக்கை செயலற்றது. கடும் மருத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவர் இருப்பதாக மருத்துவர் கருதினர்.

இந்நிலையில் அலுவலக ஊழியர்கள் அவரைக் காணச் சென்றனர். வசந்தியும் சென்றிருந்தாள். அதிகாரியின் குடும்பத்தினர் மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்திருந்தனர். ஊழியர்கள் தனித்தனியே அவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். வசந்தி மட்டும் ஏதும் பேசாமல் மௌனமாய் நின்றாள்.

அன்று அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு ‘Life Divine’ நூலுடன் அதிகாரியை மருத்துவமனையில் பார்க்கப் போனாள். மருத்துவர்களிடம் அவர் உடல் நிலை பற்றி விசாரித்தாள். மருத்துவம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் கர்மத்துடன் போட்டியிட முடியாதம்மா. அதிகபட்ச முயற்சிகளைத்தான் அவருக்கு மேற்கொண்டிருக்கிறோம். நிலைமை சீராவதற்குப் பதில் விபரீதமாகிக் கொண்டிருக்கிறது என்றனர்.

மருத்துவர்கள் அனுமதித்தால் அவருக்கு அங்கேயே தானொரு பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள்.

மருத்துவமனைக்குள் சடங்குகளுக்கு அனுமதி இல்லை என்றார் தலைமை மருத்துவர்.

தன் பிரார்த்தனையில் சடங்கு, சம்பிரதாயங்கள் ஏதுமில்லை- யென்றும் நோயாளியின் அறைக்குள் தன்னை அனுமதித்தால் போதும் என்றாள்.

அவர்கள் அவளை விநோதமாகப் பார்த்தனர். மருத்துவ- மனையின் நிபந்தனைக்கு ஊறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறி அனுமதித்தனர்.

கையுள் ‘Life Divine’ புத்தகத்துடன் மனத் தயாரிப்புடன் உள்ளே சென்றாள்.

அதிகாரியிடம் அவர் பொருட்டு அங்கு தானொரு பிரார்த்தனை மேற்கொள்ளலாமா? என்று கேட்டாள். நோயின் பிடியில் விழும்பொழுது நல்லவர்க்கு ஞானம் வருகிறது. தான் இயங்குபவன் அல்லன். இயக்கப்படுபவன் என்ற உணர்வு வலுக்கிறது. சர்வவல்லமை உடையவனை உணரும் வாய்ப்பு அல்லவா அது?

தாராளமாய்ச் செய்யம்மா. குருடனுக்கு என்ன வேண்டும்? பார்வைதானே வேண்டும். எனக்கு இப்பொழுது நலம் வேண்டும். உன் பிரார்த்தனையில் நான் மனப்பூர்வமாய் ஒன்றிவிடுவேனம்மா என்று மிகுந்த தள்ளாமையுடன் கூறினார்.

நீங்கள் அமைதியாக இருங்கள். அதுபோதும் மனதில் எண்ண அலைகள் எழுந்தால் அங்கு இறைவனின் திருவடியைப் பதித்து அதையே எண்ணுங்கள் என்று மிருதுவாகக் கூறிவிட்டு அவர் படுக்கையின் அருகே அங்கிருந்த நாற்காலியை மெதுவாக எடுத்து வைத்து அவர் முகத்தைப் பார்த்தாற் போன்ற வாகில் அமர்ந்து மடியின் மீது ‘Life Divine’ நூலைப் பிரித்து வைத்து அதில் லயித்துப் போனாள். இரண்டு பக்கங்கள் முடிந்தவுடன் புத்தகத்தை மூடியவண்ணம் அதிகாரியைப் பார்த்தாள். புத்தகத்தைப் பிரிப்பதற்கு முன் அவர் முகத்திலிருந்த அச்சம் கரைந்து போயிருந்தது. இலேசான நம்பிக்கை ரேகை தோன்ற ஆரம்பித்திருந்தது.

‘சார்! இப்பொழுது எப்படியிருக்கிறது?’ என்றாள் கனிவாக. ‘ தேறுவேனா என்ற அச்சம் போய்விட்டது. தேறுவேன் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது. சாந்தமான உணர்வு வருகிறது’, என்றார் தெளிவாக.

‘நான் மீண்டும் நாளை வருகிறேன் சார்’, என்று உத்தரவு பெற்றாள்.

தொடர்ந்து ஆறுநாட்கள் வந்தாள். படித்தாள். அவர் உடல் நிலை வியப்புறும் வண்ணம் மாறிவிட்டிருந்தது. மருத்துவர்- களுக்கு வியப்பு. விழுந்துவிட்ட கையும் காலும் ஆறே நாட்களில் குணமடைந்தது அவர்கள் மருத்துவ வரலாற்றில் இல்லாத சாதனை. குணமாகிவிடுவார் என்ற நிலையில் உள்ளவர்க்கே ஆறுமாதங்கள் ஆகும் என்ற நிலையில் தாறு மாறாகச் சென்ற இவர் உடல்நிலை ஆறே நாட்களில் குணமடைந்துவிட்டது என்பதை மருத்துவர்களாலேயே நம்ப முடியவில்லை.

அதிகாரியின் குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு நிலைமை உறுதியானவுடன் வீட்டிற்கு அனுப்பிவிட மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

நாள்தோறும் அதிகாரியும், அவர் குடும்பத்தினரும் வசந்தியின் வரவிற்குக் காத்திருந்தனர். வீட்டிற்குச் செல்ல வேண்டிய நாள் வந்தது. வசந்தி உடனிருக்கவேண்டும் என்று விரும்பினர்.

அவளும் அவர்கள் விருப்பப்படி வீடுவரை சென்று அவரைக் கொண்டுவிட்டு வந்தாள்.

சில தினங்களுக்குப் பிறகு ஒருநாள் அவளிடம் அவள் பிரார்த்தனை பற்றி விசாரித்த போது, அந்தப் புத்தகம் தனக்குக் கிடைத்ததுபற்றியும், அதன் பயன்களாக ஒரு தாளில் எழுதப்பட்டிருந்த கருத்துகள் பற்றியும் அதைத் தான் செயல்படுத்த விரும்பியதையும் கூறினாள்.

எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என்னுடல் நலமடைந்தது வெறும் மருந்துகளால் அன்று. நீ படித்த மந்திர மொழியால்தான் என்று கண் கலங்கிக் கூறினார். அன்றிலிருந்து அவளிடம் அவருக்குத் தனி மரியாதை உண்டாயிற்று.

இயல்பிலேயே நேர்மையும் செம்மையும் கொண்ட அவள் மேலும் மெருகிடப்பட்டாள். நூலை உயிரெனப் போற்றி வாழ்வைத் தவமென மாற்றினாள்.

அலுவலகத்தில் செய்தி பரவிற்று. ‘வசந்தி! நீ என்ன வைத்தியம் செய்தாய். உன்னால் குணமாயிற்று என்று சொல்கிறார்களே?’ என்றாள் ஒருத்தி.

நான் ஒரு மகானின் மந்திரமொழி வைத்திருக்கிறேன். நான் அந்த மந்திரத்தைப் படித்தேன். அவர் நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தார். அதன் மூலம் அந்தச் சக்தி செயல்பட்டு குணமடைந்தார் என்றாள்.

இவள் நோயைக் குணப்படுத்த, பிரச்சனைகளைத் தீர்க்க என்று இந்த நூலைப் பயன்படுத்தும் செய்தி பரவியது.

சிலர் வியந்தனர். சிலர் புகழ்ந்தனர். சிலரோ நம்பவும், ஏற்கவும் தயங்கினர். ஒரு புத்தகம் ஒருவர்க்குப் பாதுகாப்புத் தருமென்றால் bulletproof-க்குப் பதில் அதையே வைத்துக் கொள்ளலாமே எனக் கேலி செய்தனர்.

அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. புகழ்ச்சியும், இகழ்ச்சியும் பாதிக்காத உள்ளவுறுதி கொண்டிருந்தாள். சடங்கு, சம்பிரதாயங்களைத் தவிர்த்தாள். பொய்யின் எல்லா வடிவங்- களையும் புறக்கணித்தாள். மன அழுக்குகளைச் சிறிதுசிறிதாகப் போராடி வெற்றி கொண்டாள். அகந்தை தலையெடுக்கும் போதெல்லாம் அயராது வெட்டி வீழ்த்தினாள்.

இவளைச் சிலர், பைத்தியக்காரி என்றும் பிழைக்கத் தெரியாதவள் என்றும் விமர்சித்தனர். இவளோ எதனாலும் பாதிக்கப்படாமல் தனக்குள் ஆழ்ந்து செல்லும் பயிற்சியை மேற்கொண்டு ஆனந்தமாயிருந்தாள்.

நாளடைவில் விமர்சனங்கள் ஓய்ந்தன. விமர்சிக்கத் தமக்குத் தகுதியில்லை என்றும் உணரலாயினர்.

அலுவலகத்தில் தலையெடுக்கும் பிரச்சனைகளை இந்நூலின் அடிப்படையில் களையத் தொடங்கினாள். எனவே, பிரச்சனைகள் இவளிடம் வந்தால் அலறி ஓடிவிடும். பகைமை பாராட்ட வருபவர் நண்பராகத் திருவுருமாறித் திரும்புவர்.

உடல் நலம் தேறிவிட்ட இவள் மேலதிகாரி முத்துசுவாமி பணிவோய்வு பெற்று சென்னை செல்லும்போது, இவளிடம் பாசத்துடன் பிரியாவிடை பெற்றதுடன், தன் சென்னை முகவரியைக் கொடுத்து அவள் உதவி தேவைப்படும் போது அழைப்பதாகவும், அவள் தயவு செய்து வருகை தர வேண்டும் என்றும் சொல்லிச் செல்கிறார்.

தொடரும். . .

******book | by Dr. Radut