Skip to Content

13. சாதனைக்கு உதவும் விஷயங்கள்

சாதனைக்கு உதவும் விஷயங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

என். அசோகன்

உழைப்பதில் ஆர்வம் இல்லாத ஒருவருக்கு எவ்வளவுதான் பணம் செலவழித்து ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொடுத்தாலும் அவர் உழைக்க முன்வராதபட்சத்தில் அந்த வேலை கெட்டுத்தான் போகும். அம்மாதிரியே வேலையாட்களைக் கட்டுப்படுத்தத் தெரியாவிட்டால் அவரவர் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டு நிறுவனத்தில் லாபமே இல்லாத மாதிரி செய்து விடுவார்கள். நெருக்கடிகள் வந்தால் சோர்ந்து போகக் கூடியவர்கள், பத்து நாட்கள் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்றவுடன் அதற்குப் பயந்து போய் அதனாலேயே தொழிற்சாலையை மூடுகிறார்கள் என்றால் அப்படிப்பட்டவர்கள் எப்படி ஒரு பெரிய வேலையைச் சாதிக்க முடியும்? ஆகவே எந்த ஒரு பெரிய வேலையை அவர்களிடம் கொடுக்கும் முன்னர் வேலைக்கேற்ற மனப்பான்மை இவர்களிடம் இருக்குமா என்று தெரிந்த பின்னரே அவர்களிடம் அந்த வேலையைக் கொடுக்க வேண்டும். இதுவரையிலும் காரியப் பூர்த்திக்குத் தேவையானவைகளைப்பற்றி பொதுப்படையாகக் கூறினேன். இப்போது குறிப்பாகக் காரியப் பூர்த்திக்கு உதவக் கூடிய விஷயங்களைப்பற்றிச் சொல்ல வருகிறேன்.

1. கடின உழைப்பு: கடின உழைப்பு சாதிப்பதற்கு மிகவும் அவசியமாகிறது. காமன் சென்ஸிற்குக்கூட இது மிகவும் தெளிவாகத் தெரியும். ஏன் கடின உழைப்பு அவசியம் என்று யாருக்கும் கேட்கத் தோன்றுவதில்லை. நாம் இருப்பது பிஸிக்கல் பிளேன் என்பதால் அந்தப் பிளேனில் பலன் காண வேண்டும் என்றால் நாம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. பிஸிக்கல் பிளேனை அசைப்பதும் கடினம். மேலும் பலனும் தாமதமாகவே கொடுக்கும். விவசாயம், வியாபாரம், அரசியல், கலை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையாக இருந்தாலும் அடிப்படை வேலை பிஸிக்கலாக இருப்பதால் கடினமான உழைப்பு அவசியமாகிறது. நிலத்தைப் பயிர் செய்வது, தொழிற்சாலையை நிர்வகிப்பது, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்று எதை எடுத்துக் கொண்டாலும் கடின உழைப்புத் தேவைப்படுகின்றது. அமெரிக்கக் கண்டு பிடிப்பாளர் எடிசன் அவர்கள் கிரியேடிவிடி என்பது 99% உழைப்பும், 1%-தான் உள்ளெழுச்சியும் (inspiration) அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பரிணாமக் கொள்கையைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின் அவர்கள் அதை நிரூபிப்பதற்காக ஆதாரங்களைத் தேடி தென்அமெரிக்கா வரையிலும் இரண்டுமுறை பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர் செய்தது பெரிய கண்டுபிடிப்பு என்றாலும், அதை நிரூபிப்பதற்காகப் பல ஆயிரம் மைல்கள் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆகவே சாதிப்பதற்குக் கடின உழைப்பு அவசியமா என்பதுபற்றி யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.

எல்லோருக்கும் புரியாமல் இருக்கும் விஷயம் என்னவென்றால் ஒரு சில பேர் கடினமாக உழைக்குபோது இன்னும் சில பேர் வேலை செய்வதில் ஏன் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள் என்பதுதான். நிகழ்ச்சி பிஸிக்கலாக இருப்பதால், காரணமும் பிஸிக்கலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதிக்க வேண்டுமென்று மனதில் உற்சாகம் நிறைந்தவர்கள் அதன் காரணமாக உடலிற்கும் எனர்ஜியை வழங்கி வேலை செய்து விடுகிறார்கள். அதேசமயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்களுக்கு உணர்வு மையத்தில் உற்சாகம் குறைகிறது. அங்கே உற்சாகம் குறைவதால் உடம்பிற்கும் எனர்ஜி கிடைக்காமல் போகிறது. இதனால் இவர்களுக்கு வேலை செய்ய முடியாமல் போகிறது.

ஆகவே கடின உழைப்பு என்பது பிஸிக்கல் திறமையே இல்லை. மாறாக அது உணர்வு மையம் சம்பந்தப்பட்ட ஒரு திறமையாகும். உண்மையைச் சொன்னால் உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கும் எனர்ஜியைவிட உணர்வு மையத்தின் மூலமே உடலுக்கு அதிக எனர்ஜி கிடைக்கும். பெரும்பாலும் மனிதர்களுக்கு வேலை செய்யப் பிடிப்பதில்லை. ஆகவே பெரும்பாலானவர்கள் 9 to 5 கால வரையறையையே விரும்புகிறார்கள். இம்மாதிரி வேலை செய்யும் நேரத்தைக் குறைப்பது நமக்குச் சுகமாக இருக்கலாம். ஆனால் பலனும் அந்த அளவிற்கு அளவாகத்தான் இருக்கும். அன்னை கடுமையான உழைப்பாளி என்று பெயர் வாங்கியவர். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம்தான் தூங்கினார். பகவான் தனக்கு வரும் அன்பர் கடிதங்களுக்குப் பதில் அளிப்பதற்காக தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்கூட கண் விழித்து பதில் எழுதுவார். அன்னை ஆசிரமவாசிகளுக்கு உங்களால் அதிகபட்சம் முடிந்ததைச் செய்யுங்கள். சிரமமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அறிவுறுத்தினார்.

லட்ச ரூபாய்க்குமேல் நாம் சம்பாதிக்கலாம் என்று ஸ்ரீ கர்மயோகி அவர்கள் சொல்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்பவர்கள் இப்படி 9 to 5 என்று அளவோடு வேலை செய்தால் இது சாத்தியமாகாது. வேலை முதல்பட்சம், மற்றது எல்லாம் இரண்டாம்பட்சம் என்ற மனநிலை இருந்தால்தான் இது சாத்தியமாகும். வேலையே குறியாக இருக்கின்ற அன்பர்களும் இருக்கிறார்கள். அவர்களால் தரிசன நாட்களில்கூட தியான மையத்திற்கு வர முடிவதில்லை. ஆனால் வேலைதான் முக்கியம் என்று அன்னை சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது தரிசன நாட்களிலும் தியான மையத்திற்கு வராமல் அவர்கள் வேலை செய்வது சரி என்றுதான்படுகிறது. அவர்கள் பணி இடத்தில் இருந்தாலும், தியான மையத்திலிருந்தாலும் அன்னையின் அருள் அவர்களுடன் இருக்கும் என்று தெரிகிறது.

2. அறிவு மற்றும் திறமை: மனிதனை விலங்குகளிலிருந்து பிரிப்பது அவனுக்குள்ள அறிவும் திறமையுமே ஆகும். ஆகவே, அவனுடைய கடின உழைப்பு அறிவுமயமான உழைப்பாக இருந்தால்தான் அதற்குரிய முழுப்பலனும் கிடைக்கும். அறிவு இல்லாத கடின உழைப்பு குறைந்தபட்ச பலனையே கொடுக்கும். அறிவில்லாமல் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் கடும் வெய்யிலில் பத்து அல்லது பதினைந்து மணி நேரம்கூட வேலை செய்யலாம். ஆனால் அத்தகைய கடின உழைப்புக்கூட ஒரு நாளைக்கு நானூறு அல்லது ஐநூறுதான் சம்பாத்தியம் கொடுக்கிறது. ஆனால் திறமைசாலியான டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் நிபுணர்கள் போன்றவர்களுடைய கடின உழைப்புப் பல மடங்கு அதிக வருமானத்தைப் பெற்றுத் தருகிறது. ஏனென்றால் இங்கு அறிவின் ஈடுபாடு அதிகம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் மிகவும் வளமாக இருப்பதற்குக் காரணமே நம் நாட்டவரைவிட அந்நாட்டவர் அதிகம் படித்தவராகவும், அதிகம் திறமை உள்ளவராகவும் இருக்கிறார்கள் என்பதுதான். இரண்டாம் உலகப்போர் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளைப் பொருளாதார ரீதியாக மிகவும் சேதப்படுத்தியது. இருந்தாலும், இந்த நாடுகள் அடுத்த பத்து வருடங்களில் தங்கள் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டன. இதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த படிப்பும், திறமையுமே ஆகும். வெடிகுண்டுகள் தொழிற்சாலை, சாலைகள், கட்டடங்கள் என்றிவற்றையெல்லாம் சேதப்படுத்தின. ஆனால் மக்களுடைய அறிவு மற்றும் திறமைகளை இந்த வெடிகுண்டுகளால் அழிக்க முடிவதில்லை. அந்நாட்டு மக்களுக்கு வேண்டியது ஒரு பெரிய முதலீடாக இருந்தது. அந்த முதலீட்டை அமெரிக்க அரசாங்கம் வழங்கியபோது, அதை அவர்களுடைய திறமையுடன் இணைத்து மீண்டும் பழைய சுபிட்சத்தைக் கொண்டு வந்து விட்டனர். ஆனால் அதே அளவு போர் சேதம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக நாம் வைத்துக் கொண்டால், அதே அளவிற்கு உதவியை அமெரிக்கா செய்திருந்தாலும் நம் நாடு அவ்வளவு வேகமாகப் பொருளா- தாரத்தைச் சீர்படுத்தி இருக்காது. ஏனென்றால் அந்த அளவிற்கு நமக்குத் திறமை குறைவு.

அமெரிக்காவிற்கு இணையாக நம் நாடு அடுத்த இருபது வருடங்களில் வர வேண்டும் என்று நிறைய பேர்கள் பிரியப்படுகிறார்கள். ஆனால் அமெரிக்கர்களைப்போல படிப்பறிவையும், திறமையையும் நாம் வளர்த்துக் கொண்டால்தான் இது சாத்தியமாகும். கூடுதல் முதலீடு மற்றும் நவீன டெக்னாலஜி மட்டும் கொண்டு வந்தால் போதாது. இவற்றைப் பயன்படுத்த மக்களுக்குத் தேவையான திறமை வேண்டும். ஓர் அன்பர் அறிவோடும் திறமையோடும் செயல்படும் போது அவருக்குக் கிடைக்கும் அருள் அவர் செய்கின்ற வேலைக்குப் பல மடங்கு பலனைக் கொடுக்கிறது. இதற்குக் காரணம் அவர் வேலையை நேர்த்தியாகச் செய்கின்றார் என்பதுதான். அதேசமயத்தில் அறிவில்லாமல் கடினமாக உழைக்கும் அன்பர்களுக்குக் கிடைக்கின்ற அருள், இவர்கள் அறிவில்லாமல் செய்யும் வேலையில் ஏற்படும் பிழைகளைச் சரி செய்யவே செலவாகி விடுவதால், ஒட்டு மொத்தப் பலன் சுமாராகவே இருக்கிறது.

3. ரிஸ்க் எடுப்பது: சாதிக்க விரும்புகின்றவர்களுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடிய துணிச்சலும் வேண்டும். வாழ்க்கை நிலை- யானது இல்லை. மேலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லவும் முடியாது. அதனால் நாம் ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டியுள்ளது. மனிதன் வாழ்க்கையை எந்தளவிற்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியுமோ அந்தளவிற்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பிரியப்படுகிறான். ஆனால் குடும்பம் என்ற சிறிய வட்டத்திற்குள்தான் இது முடியும். அந்த வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் வாழ்க்கை மிகவும் பெரியதாக இருக்கிறது. மார்க்கெட் சூழ்நிலைகள், கவர்மெண்ட் பாலிசி, வானிலை, லேபர் மார்க்கெட், மற்ற வியாபாரிகள் வழங்கும் போட்டி என்று எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை. அப்படி வெளி வாழ்க்கை பெரும்பாலும் நம் கட்டுப்பாட்டில் இல்லாத சூழ்நிலையில் நாம் விரும்பியதைச் சாதிக்க வேண்டும் என்றால் நாம் ரிஸ்க் எடுத்துச் செயல்பட்டே ஆக வேண்டியதாக உள்ளது.

இப்போதெல்லாம் விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு இருக்கிறது. ஆகவே அவர்கள் நட்டம் வந்தாலும் காப்பீட்டு நிவாரணம் கிடைக்கிறது என்று நம்பி பயிர் செய்யலாம். இருபது வருடங்களுக்கு முன்னால் இத்தகைய இன்சூரன்ஸ் பாதுகாப்புகள் எல்லாம் கிடையாது. பூச்சிகள் தாக்குதல் இல்லாமல், புயல் மற்றும் வறட்சி தாக்குதல் இல்லாமல் நல்லபடியாக பயிர் வளர வேண்டும் என்று நம்பிதான் விவசாயம் செய்ய வேண்டும். பதவி மற்றும் அதிகாரத்தை விரும்புகின்றவர்களுக்கு அரசியலில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தேர்தலைச் சந்திப்பவர்களுக்கு தோல்வியை சந்திக்கும் அபாயமும் இருக்கிறது. அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் தேர்தலில் நிற்க விரும்பினால் அந்தப் பணியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்குத் துணிந்தவர்களால்தான் அரசியலில் எதுவும் சாதிக்க முடியும். அப்படிப் பார்த்தால் எல்லா துறைகளிலுமே ஏதோ ஓர் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஆபத்து இல்லாதத் துறையே இல்லை என்றுகூடச் சொல்லலாம். மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால்கூட கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால்தான் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானார்கள் என்று கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்குத் தொடர்கிறார்கள். தொடர்ந்து இரண்டு படம் தோல்வியடைந்தால், அதன் பிறகு திரைப்படத்துறையில் புது கதாநாயகர்கள், கதாநாயகிகள் முன்னுக்கு வருவதே அரிது. ஜூனியர் வழக்கறிஞர்கள் சீனியர் வழக்கறிஞர்களிடம் நெடுநாளைக்குப் பயிற்சி எடுக்க வேண்டும். சீனியர் முறையாக சொல்லித் தரவும் மாட்டார். இடையில் சீனியர் வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். ஆசிரியர் தொழிலிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. ரௌடித்தனமாக உள்ள மாணவர்களை வகுப்பில் ஆசிரியர் சமாளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு எந்த நேரமும் பள்ளியில் ஸ்ட்ரைக் மற்றும் வன்முறை வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. திருமணம் செய்கின்ற பெண்களுக்குக்கூட வரதட்சணை கொடுமை என்ற ஆபத்து இருக்கிறது.

இப்படி ஆபத்திற்குப் பயந்து யாரும் எந்தத் துறையிலும் இறங்குவது இல்லை என்றால் எவருக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றாகிவிடும். ஆகவே சாதிக்க விரும்புகின்றவர்கள் ஆபத்தைத் தைரியமாகச் சந்தித்தே ஆக வேண்டும். வருகின்ற ஆபத்துக்களைத் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் சமாளிக்கின்றவர்களுக்கு வாழ்க்கை நல்லவிதமாக ரெஸ்பான்ஸ் வழங்குகிறது. அத்துடன் நாம் சாதித்து விட்டோம் என்ற சந்தோஷமும் அவர்களுக்கு வருகிறது.

4. சமயோசித ஆற்றல்: எல்லா தேசங்களுக்கும் இயற்கை வளங்கள் அபரிமிதமாகக் கிடைக்கிறது என்று சொல்ல முடியாது. சில இயற்கை வளங்கள் இருக்கும், சில இருக்காது. எந்த ஒரு பொருளையுமே இயற்கை வளம் என்று நாமாகக் கருத முடியாது. நம் அறிவுதான் எந்தவொரு பொருளுக்கும் உபயோகத்தைக் கண்டுபிடித்து அதை இயற்கை வளமாக மாற்றுகிறது. உதாரணமாக, கடற்கரையில் உள்ள மண்ணிற்கு நீண்டகாலமாக எந்த உபயோகமும் இல்லாமலிருந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் மணலை கண்ணாடியாக மாற்றலாம் என்று தெரிய வந்த போது அது நம் பார்வைக்கு ஒரு உபயோகமான பொருளாக மாறிவிட்டது. வறண்ட பாலை நிலங்களைப் பொதுவாக எதற்கும் பயன்படாது என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட பாலை நிலங்களில் வளரக் கூடிய சில உபயோககரமான செடிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜோஜோபா என்ற ஒரு செடி இருக்கிறது. அச்செடியின் விதையிலிருந்து கிடைக்கும் ஒருவித எண்ணெய் நல்ல லூப்ரிகேட்டிங் ஆயிலாக செயல்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இந்தச் செடி பாலைவனச் சூழலில் நன்றாக வளர்வதால் இந்தச் செடியை வளர்ப்பதற்காக பாலைவனப் பிரதேசங்களுக்கு நல்ல முக்கியத்துவம் வந்து விட்டது.

சாதிப்பது என்பதைப் பற்றிப் பேசும்போது, சமயோசித ஆற்றல் என்றால் என்ன என்று கேட்கலாம். பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு வழி கண்டுபிடிப்பதைச் சமயோசித ஆற்றல் என்கிறோம். பசியால் வாடுபவனுக்கு எட்டாத உயரத்தில் மரக்கிளையில் ஒரு பழம் தென்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவ்வளவு தூரம் ஏற அவன் உடலில் தெம்பும் இல்லை. ஆனால் பசியும் உடனடியாகத் தீரவேண்டும். அந்த நேரத்தில் தரையில் ஒரு கல் கிடந்தால் அந்தக் கல்லை ஒரு கருவியாக்கி, அதை விட்டெறிந்து அந்தப் பழத்தை விழவைத்து தன் பசியை ஆற்றிக் கொள்கிறான். இப்படிச் செயல்படுவதை நாம் சமயோசித ஆற்றல் என்கிறோம்.

பொருளாதார முன்னேற்றத்தைப்பற்றி நாம் பேசும்போது சமயோசித ஆற்றலுக்கு வேறு அர்த்தம் கொடுக்கலாம். அதாவது சில தேவைப்படுகின்ற இயற்கை வளம் இல்லாதபோது, அதற்குப் பரிகாரமாக வேறு வகைகளில் அந்தக் குறையை நிறைவு செய்ய முயற்சிப்பதை நாம் சமயோசித ஆற்றல் என்று சொல்லலாம். உதாரணமாக ஜப்பான் தேசத்தில் கனரக தொழிற்சாலைகளை அமைக்கத் தேவையான இரும்பு உலோகம் இயற்கை வளமாக இல்லை. அது இல்லை என்பதால் அவர்கள் சோர்ந்துபோய் விடவில்லை. மாறாக, அது எந்தளவு தேவைபடுகிறதோ அந்தளவு அவர்கள் அதை இறக்குமதி செய்து கொண்டார்கள். மேலும் அந்நாட்டு தொழிலாளிகள் தம் தொழில் திறனையும் மேம்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவ்வகையில் இரும்பு அரிபொருளாக இருப்பதால் கிடைக்கின்ற இரும்பை வைத்துக் கொண்டு விலையுயர்ந்த கார்களை உற்பத்தி செய்ய கற்றுக் கொண்டுள்ளார்கள். இயற்கை வளங்கள் இல்லாமல் போனதை அவர்கள் தம்முடைய முன்னேற்றத்திற்குத் தடையாக என்றுமே சொன்னது கிடையாது. இருக்கின்ற சூழ்நிலையில் என்ன மாற்று ஏற்பாடு செய்ய முடியுமோ அதைச் செய்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டவர் தண்ணீர் பற்றாக்குறைக்கும் இதே அணுகுமுறையைத்தான் கையாண்டுள்ளார்கள். அதாவது பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் சொட்டு நீர் பாசனத்தை மேற்கொண்டுள்ளார்கள். அந்தச் சொட்டு நீர் பாசனத்திற்குச் செடிகள் நல்ல முறையாக ரெஸ்பான்ஸ் வழங்குவதால் இஸ்ரேல் விவசாயிகள் பூந்தோட்ட மற்றும் பழத் தோட்டத் துறையில் நல்ல வருமானம் பார்க்கிறார்கள். நம்நாடு கூட சமயோசித ஆற்றலை நன்றாக வெளிப்படுத்துகிறது. நம் நாட்டில் லேபருக்குச் சம்பளம் குறைவு. அதை ஒரு காரணமாக வைத்து வெளிநாட்டுக் கார் கம்பெனிகள் இங்கு நிறைய கார் தொழிற்சாலையை நிறுவியுள்ளார்கள். நமக்கு ஒரு பக்கம் வேலை கிடைக்கிறது. அதேசமயத்தில் அவர்களுக்கும் மலிவான விலையில் கார் உற்பத்தியாகிறது. இதே அடிப்படையில் கால் சென்டர்கள் மற்றும் B.P.O. நிறுவனங்கள் நிறைய இந்தியாவில் இயங்குகின்றன.

சமயோசித ஆற்றல் என்பது அறிவுத் திறனை மட்டும் நம்பி இருப்பது இல்லை. நிறைய திரைப்பட கதாநாயகிகள் ஏழை குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு அறிவோ, பணமோ இல்லை என்றாலும் அழகு இருக்கிறது. அந்த அழகை அவர்கள் திரைப்படத் துறையில் பயன்படுத்தி பெரிய வருமானத்தைப் பார்க்கிறார்கள். அப்படி அறிவைப் பயன்படுத்தி முன்னுக்கு வருவது ஒரு சாதனை என்றால், அழகைப் பயன்படுத்தி திரைப்படத் துறையில் முன்னுக்கு வருவதும் ஒரு சாதனைதான்.

5. ஆர்வம்: ஆர்வம் நம் சாதனைக்கு மிகவும் அவசியம். ஏனென்றால் அந்த ஆர்வம்தான் நாம் சாதிப்பதற்குத் தேவையான எனர்ஜியை வழங்குகிறது. மேலை நாட்டினர் நம் நாட்டினரைவிட அதிக சுபிட்சமாக இருக்கிறார்கள் என்றால், சாதிக்க வேண்டும் என்ற இடத்தில் நம்மைவிட அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நாமும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று பேசுகிறோமே தவிர நம்முடைய ஆர்வம் பேச்சோடு நின்றுவிடுகிறது. ஆனால் வெளிநாட்டவர்களைப் பொறுத்த வரையில் பேசுவதைவிட சாதிப்பதில் அவர்கள் ஆர்வம் நிறைய காட்டுகிறார்கள். இதனாலேயே ரிசல்ட் என்று பார்த்தால் ஆர்வம் எங்கே அதிகமாக உள்ளதோ அங்கேதான் ரிசல்ட் வருகிறது.

நம் நாட்டில் ஆர்வத்தைப் பேராசையுடன் இணைத்துத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பேரார்வம் என்பதும் பேராசை என்பதும் வேறுவேறு. நம் தகுதிக்குமீறி ஆசைப்படும் போதும், வேலையைக் குறைவாகச் செய்து அதிக சம்பளம் கேட்கும்போதும் நாம் அதை பேராசை என்கிறோம். அப்படிப் பேராசை பிடித்தவர்கள், நேர்மையாக சம்பாதிக்க முடியாத போது, நேர்மையற்ற முறைகளிலும் சம்பாதிக்கத் துணிந்து விடுகிறார்கள்.

ஆனால் நான் குறிப்பிடுகின்ற ஆர்வத்திற்கும், பேராசைக்கும் சம்பந்தமில்லை. நம் மனதில் வைத்துள்ள குறிக்கோள்களை அடைவதற்கு எடுக்கக் கூடிய அதிகபட்ச முயற்சிகளை விரும்பி எடுக்கின்ற உணர்விற்கு நான் ஆர்வம் என்று பெயரிடுகிறேன். நாம் இப்படி அதிகபட்ச முயற்சி எடுக்கும்போதுதான் நம் சாதனைக்கு இடையூறாக இருக்கின்ற பணப்பற்றாக்குறை, மந்தமான மார்க்கெட், ஒத்துழைக்காத லேபர், மோசமான வானிலை போன்ற இடையூறுகளை எல்லாம் சமாளிக்கும் தெம்பு நமக்குக் கிடைக்கிறது. ஆன்மீகத்திற்கு வரும்போது இதே முன்னேறும் ஆர்வத்தை நாம் இறை ஆர்வம் என்கிறோம். நாம் எந்தத் துறையில் இருந்தாலும் தீவிர ஆர்வம் என்பது இன்றியமையாததாகும். வாழ்க்கையைவிட பூரண யோகம் மிகவும் கடினமான துறையாகும். ஆகவே, வாழ்க்கையில் சாதிக்கும் ஆர்வத்தைவிட ஆன்மீகத்தில் சாதிக்கும் ஆர்வம் பல மடங்கு அதிகமாக இருந்தால்தான் ஆன்மீகத் துறையிலேயே நாம் அடியெடுத்து வைக்க முடியும். சாதாரண வாழ்க்கையின்மேல் நமக்கு இருக்கும் பிடிப்புகளை முறியடிக்க வேண்டும் என்றால் இத்தகைய தீவிர ஆர்வம் நமக்குத் தேவைப்படுகிறது.

நம்முடைய பிரச்சனைகளையும், பிரார்த்தனைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அன்னையை நாடுகிறோம் என்றால், அது ஒன்றும் அவருக்குச் சிரமமான காரியமில்லை. நம்முடைய குறைபாடுகளையும் மீறி அருள் நாம் கேட்பவற்றை நமக்கு வழங்குகிறது. ஆனால் நாம் வேண்டுவது ஆன்மீக முன்னேற்றம் என்றால், அந்த முன்னேற்றம் நம் குறைபாடுகளை மீறி வராது. மாறாக ஆன்மீக முன்னேற்றத்தின்மேல் இருக்கும் அளவு கடந்த ஆர்வத்தின் காரணமாக அதன் பொருட்டு நம் குறைபாடுகளை விட முன்- வந்தால்தான் அந்த ஆன்மீக முன்னேற்றமே கிடைக்கும். நமக்கு வேண்டியது அருள் என்னும்பட்சத்தில் அந்த இடத்தில் அன்னை நம்மிடம் கருணை உள்ளம் கொண்ட தாயார்போல் நடந்து கொள்வார். ஆனால், நாம் நாடுவது ஆன்மீக முன்னேற்றம் என்னும்பட்சத்தில் அன்னை ஆன்மீக குருவாக நம்மிடம் நடந்து கொண்டு அதற்குண்டான கண்டிப்பு, கறாருடன்தான் நம்மிடம் நடந்து கொள்வார்.

6. ஆர்கனைசேஷன்: இப்போது சாதனைக்கு உதவும் முக்கிய காரணமாக நான் ஆர்கனைசேஷனை எடுத்துக் கொள்கிறேன். பலனைக் கொண்டு வருவதற்கு சிஸ்டமேட்டிக்காக செயல்படுவதை நான் ஆர்கனைசேஷன் என்றேன். ஆர்கனைசேஷன் என்பது ஒரு அறிவுத் திறனாகும் என்பதால் அது நம் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாகும். மேலும் ஆர்கனைசேஷனைப் பின்பற்றும் ஸ்தாபனங்களையும் ஆங்கிலத்தில் ஆர்கனைசேஷன் என்றுதான் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸ்தாபனங்கள் கண்ணுக்குத் தெரியக் கூடியவையாக திடமாகவே காட்சியளிக்கும். ஆர்கனைசேஷன்கள் எப்படிச் சாதிக்கின்றன என்ற கேள்வியை எழுப்பலாம். நம்முடைய முறைப்படுத்தப்படாத எனர்ஜிகளுக்கு ஆர்கனைசேஷன் ஒரு direction கொடுக்கிறது. இப்படி direction கொடுத்த பின்பு அந்த எனர்ஜிகளை எல்லாம் ஒரு production சிஸ்டம் மூலம் அனுப்புகிறது. இப்படி production சிஸ்டம் மூலம் எனர்ஜிகளை அனுப்பும்போது அவை நாம் எதிர்பார்க்கும் பலனை அனுப்புகின்றன. இப்படி production சிஸ்டம் மூலம் எனர்ஜி நகரும்போது ஸ்கில்லுடன் இந்த எனர்ஜி கூட்டு சேருகிறது. இப்படி ஸ்கில்லும், எனர்ஜியும் கூட்டு சேரும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கிறது.

உதாரணத்திற்கு நாம் குழந்தைகளை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளின் எனர்ஜி முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. குழந்தைகளை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டால், நாள் முழுவதும் விளையாட்டிலேயே அந்த எனர்ஜியை செலவழித்து அதை விரயம் செய்து விடுவார்கள். ஆனால் பாடம் கற்பிப்பதற்காகப் பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பும் போது இதே குழந்தைகளின் எனர்ஜி பாடம் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஸ்கில்லாக மாறுகிறது. பள்ளியில் ஒரு சிஸ்டம் உள்ளது. அதாவது வகுப்பறைகள், ஆசிரியர்கள், பாடப் புத்தகங்கள், மற்றும் டைம் டேபிள் எல்லாம் இருக்கிறது. இப்படிப்பட்ட சிஸ்டத்திற்குள் குழந்தைகள் வரும்போது அவர்களுடைய முறைப்படுத்தப்படாத எனர்ஜிகள் எல்லாம் முறைப்படுத்தப்பட்டு ஒரு direction பெறுகின்றன. இந்தச் சமயத்தில் ஆசிரியருடைய கல்வி, கற்றுக் கொடுக்கும் திறன் ஆகியவைகள் மாணவர்கள் தேடுகின்ற அறிவை வழங்குகின்றது. இப்போது ஆசிரியரின் கற்றுக் கொடுக்கும் திறனும், மாணவனின் கற்கும் திறனும் இணைந்து அறிவு என்ற முடிவான பலனைக் கொடுக்கின்றன.

இப்படி வகுப்பறை ஆசிரியர்கள், பாடப் புத்தகம், டைம் டேபிள் என்றெல்லாம் அடங்கிய பள்ளி என்ற ஆர்கனைசேஷன் இல்லாது போனால், அதாவது இப்படிப்பட்ட ஆர்கனைசேஷன் மூலம் செயல்படாமல் போனால் மாணவர்களுக்கு அறிவு என்ற ரிசல்ட் கிடைக்காது என்று தெரிகிறது. இப்படி எல்லாவிதமான வேலைகளுக்கும் சமூகத்தில் அதற்கதற்குரிய ஆர்கனைசேஷன் இருக்கத்தான் செய்கின்றன. அறிவை வழங்க பள்ளிகள் உள்ளன என்றால், பொருட்களைத் தயாரிக்க தொழிற்சாலைகள் உள்ளன. நீதி மன்றங்கள் நீதியை வழங்குகின்றன. தபால் நிலையங்கள் தபாலை டெலிவரி செய்கின்றன. கடைகள் பொருட்களை விற்கின்றன. மருத்துவமனைகள் வியாதியிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா ஸ்தாபனங்களிலும் வேலை செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது. யார் எந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த சிஸ்டம் சொல்கிறது. உதாரணமாக, சிக்னல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. இம்மாதிரியே டைம் டேபிள்கள் வகுப்பறைகளில் பாடம் நடத்துவதை நிர்ணயிக்கின்றன. சட்ட விதிமுறைகள் நீதி வழங்குவதை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி விதிமுறைகள் என்ன உற்பத்தியாகிறது என்பதை நிர்ணயிக்கின்றன.

ஒரு தொழிற்சாலையிலோ மற்றும் அலுவலகத்திலோ சாதனையைக் கொண்டு வருவதற்குத் தேவையான முக்கிய காரணங்களை ஒன்றுடன் ஒன்று கோ-ஆர்டினேஷன் செய்யும் வேலையை ஆர்கனைசேஷன் செய்கின்றன. உதாரணமாக ஒரு கம்பெனியில் வேலை நடக்க வேண்டும் என்றால் ஐந்து முக்கியக் காரணிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேலை செய்ய வேண்டும். ஒரு கம்பெனி என்றால் அங்கே ஊழியர்கள், பணம், டெக்னாலஜி, விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் அதை வாங்குகின்ற கஸ்டமர்கள் என்று ஐந்து காரணிகள் இருக்கின்றன. இந்த ஐந்து காரணிகளும் தங்களுக்கிடையே அழகாக ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது கம்பெனியில் விற்பனை ஒழுங்காக நடைபெறுகிறது. கம்பெனியும் நன்றாக முன்னேறுகிறது. இப்படிப்பட்ட கோ-ஆர்டினேஷனில் குறை வரும்போது எந்தளவிற்குக் குறைவருகிறதோ அந்தளவிற்குச் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. கம்பெனியில் விற்பதற்கு நல்ல பொருள் இருக்கலாம். ஆனால் விற்பனைப் பிரிவில் இருப்பவர்கள் உற்சாகம் இன்றி செயல்படும்பொழுது விற்பனை குறைகிறது. அதன் விளைவாக கம்பெனி வருமானமும் குறைகிறது. விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள் உற்சாகமாக செயல்பட முன்வரலாம். பொருளும் நல்ல தரமானதாக இருக்கலாம். ஆனால் கம்பெனியில் நிதி பற்றாக்குறை இருந்தால் கஸ்டமர் எதிர்பார்க்கும் அளவிற்கு சப்ளை செய்ய முடியாமல் போகிறது. இதன் விளைவாகவும் கம்பெனியில் வருமானம் பாதிக்கப்படுகிறது.

மேனேஜ்மெண்டிற்கும், ஊழியர்களுக்கும் நல்ல சுமுகம் நிலவுகின்ற கம்பெனியில் விற்பனையும், வருமானமும் அதிகரிப்பதை நாம் பார்க்கலாம். மேலும் சமூகத்தின் தேவைகளுடன் ஒத்துப்போகின்ற கம்பெனிகள், நல்ல வளர்ச்சி அடைவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக, சமூகம் நல்ல தரமான கல்வியை இப்போது பள்ளிகளில் எதிர்பார்க்கிறது. அதற்காகக் கூடுதல் செலவு ஆகும் என்றாலும் அதைக் கொடுக்கவும் தயாராக உள்ளது. இம்மாதிரியே மருத்துவ மனைகளிலிருந்து நல்ல தரமான சிகிச்சையை எதிர்பார்க்கிறது. அந்தச் சிகிச்சை பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளைவிட இங்குச் செலவு கூடுதலாக இருக்கும் என்று தெரிந்தும் மக்கள் தயாராக இருக்கிறர்கள்.

7. ரிசப்டிவிடி Receptivity: அன்னையின் அருளுக்கு நாம் ரிசப்டிவாக இருப்பது நாம் சாதிப்பதற்கு மிகவும் அவசியமாகும். நாம் சொந்தமாகச் சாதிக்க வேண்டுமென்றால், அதில் நமக்கு எவ்வளவு திறமை இருக்கிறதோ அந்தளவிற்குத்தான் சாதிக்க முடியும். ஆனால், அன்னையை நாம் உள்ளே வரஅனுமதித்தால், அவர் நம் பர்சனாலிடியைப் பல மடங்கு விரிவடையச் செய்து அந்தளவு நம் சாதனையை உயர்த்துகிறார்.

நம் ரிசப்டிவிடியை நாம் அதிகரிப்பது எப்படி என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அருள் எப்படி நம்மைத் தேடி வருகிறதோ அப்படியே அதை நாம் ஏற்றுக்கொள்வோம் என்ற மனோபாவம் நமக்கு இருந்தால் அந்த ஒன்று மட்டுமே நம் ரிசப்டிவிடியை அதிகரிக்க உதவும். அருள் நமக்கு ஒரு நல்ல வேலையைக் கொண்டு வரலாம். ஆனால் கிடைத்த வேலை வெளியூரில் அமையலாம். கிடைக்கும் சம்பளம் அதிகமாக இருந்தாலும், உள்ளூரில் இல்லை என்பதால் நாம் அந்த வேலையை மறுக்கலாம். அவ்வாறு மறுக்கும்பொழுது அருள் நமக்குக் கொண்டு வந்த வாய்ப்பு வீணாகிப் போகிறது. இம்மாதிரி பல வழிகளில் நாம் நம் நிபந்தனைகளை அருளின்மேல் திணிக்கிறோம். இப்படியெல்லாம் திணிக்காமல், அருளை நிபந்தனையின்றி நாம் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தால் நம் சாதனையும் தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டேயிருக்கும். சைத்தியக் கல்வி என்ற தன்னுடைய கட்டுரையில் நமக்கு வருகின்ற வேலையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர நாம் விரும்பும் வேலைதான் நமக்கு வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று அன்னை வலியுறுத்துகின்றார்.

Consultant-ஆக பணிபுரிய விரும்புகின்ற ஒரு அன்பரை எடுத்துக் கொள்வோம். அவர் தனக்குக் கிடைக்கும் முதல் கிளையண்டை பத்து அல்லது இருபது கோடி turnover செய்பவராக எதிர்பார்க்கலாம். ஆனால் அவருக்குக் கிடைக்கின்ற முதல் கிளையண்ட் வருடத்திற்குப் பத்து லட்சம்தான் turnover செய்பவராக அமையலாம். அவருடைய தொழிற்கூடம் மிகவும் சாதாரணமாகத் தெரியலாம். இந்த நிலையிலும் இவர்தான் அன்னை நமக்கு அனுப்பியிருப்பது என்று அன்பர் ஏற்றுக் கொண்டார் என்றால் அவருக்கு முறையான ரிசப்டிவிடி இருக்கிறது என்றர்த்தம். இப்படி இல்லமால் பெரியதாக எதிர்பார்க்கும்போது ஏன் சிறியதாக வந்துள்ளது என்று அவர் ஏற்க மறுத்தார் என்றால் அவருக்கு ரிசப்டிவிடிக்கு பதிலாக பிடிவாதம்தான் இருக்கிறது என்றர்த்தம். கிளையண்ட் சிறியவராக இருந்தாலும் அவரை ஏற்கும்போது அக்கம்பெனியின் performance-ஐ மேம்படுத்தும்போது அதன் வழியே அடுத்தடுத்து பெரிய கிளையண்டுகள் வர வாய்ப்புள்ளது.

பொதுவாக value implementation-ஐ நாம் எந்தளவிற்குக் கடைப்பிடிக்கிறோமோ அந்தளவிற்கு ரிசப்டிவிடி அதிகரிக்கிறது. நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டு நமக்குரிய கணக்கு வழக்குகளை முறையாக எழுதிக்கொண்டு, வேலை நிமித்தமாக பழகுவோருடன் சுமுகமாக உறவு வைத்துக் கொண்டு punctuality-யையும் கடைப்பிடித்துக்கொண்டு, மெதுவாகப்பேசி, அனாவசிய வேலைகளில் ஈடுபடாமல், நம் எனர்ஜியை தேவையில்லாத வேலைகளில் செலவிடாமல், அதைச் சேகரம் செய்து கொண்டும் இருந்தால், நம்முடைய பர்சனாலிடி பலமடங்கு மேம்படுத்தப்படும். இப்படி எந்தளவிற்குப் பர்சனாலிடி மேம்படுகிறதோ, அந்தளவிற்கு அருளும் நம் வாழ்க்கையில் உள்ளே வரும்.

நாம் இருக்கின்ற நிலையில் அதிகபட்ச முயற்சி எடுப்பது எப்பொழுதும் நல்லது. இப்படி அதிகபட்ச முயற்சி எடுத்து நாம் ஓய்ந்து போகும்போது நமக்குத் தேவையான கூடுதல் எனர்ஜியை அருள் வழங்க ஆரம்பித்துவிடும். இந்த ரீதியில் பார்க்கப்போனால் பதவி உயர்விற்கு ஆசைப்படக் கூடிய ஊழியர் தன் கையில் இருக்கும் வேலையை எவ்வளவு perfect-ஆகச் செய்ய முடியுமோ அவ்வளவு perfect-ஆகச் செய்ய வேண்டும். தம் கம்பெனியின் விற்பனையை அதிகரிக்க விரும்பும் தொழிலதிபர் தன்னுடைய உற்பத்தித் திறனை முதலில் முழுமையாகத் தீர்க்க வேண்டும். விற்பனையை உயர்த்த விரும்பும் சேல்ஸ்மேன் அவரால் முடிந்த அதிகபட்ச முயற்சியை எடுக்க வேண்டும். இப்படி அவரவருக்குண்டான முழு முயற்சியை எடுக்கும்போது அடுத்த உயர்நிலைக்குப் போகத் தேவையான கூடுதல் எனர்ஜியை அருள் உரிய நேரத்தில் வழங்குகிறது. அதாவது இதற்குமேல் செலவு செய்ய எனர்ஜியே கிடையாது என்ற நிலைக்கு அவர்கள் வரும்போது அந்தக் கட்டத்தில் அருள் தலையிட்டு கூடுதல் எனர்ஜியைக் கொடுக்கிறது. அப்படி அடுத்த உயர்நிலைக்குப்போக முடியாதவர்கள் தாம் எடுக்க வேண்டிய அதிபட்ச முயற்சியை எடுக்கவில்லை. அதனால் அருள் தனக்கு ஒத்துழைக்க வரவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே மேற்சொன்ன கடின உழைப்பு, அறிவுத்திறன், ரிஸ்க் எடுப்பது, விடாமுயற்சி, சமயோசித ஆற்றல், ஆர்வம், ஆர்கனைசேஷன் ஆகிய நற்பண்புகளோடு ரிசப்டிவிடி, சமர்ப்பணம், சரணாகதி போன்ற அன்பருக்குரிய பண்புகளையும் அன்னை அன்பர் எவர் சேர்த்துக் கொண்டாலும், அவருடைய சாதனைக்கு வரம்போ, முடிவோ இல்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

முற்றும்

*******

ஜீவிய மணி
 
சுத்தம், கடின உழைப்பு, பக்தி, நம்பிக்கை, கடமையை முடித்தல், உரிமையைப் பாராட்டாதது, உள்ள பிடியை விடுவது, கேட்க மறுப்பது, பொறுமை, எதிர்பார்க்காதது, முப்பது வருடங்களானாலும் நம்பிக்கை இழக்காதது, திறமையை, பலனை எதிர்ப்பார்க்காமல் செயல்படுத்துவது, அதிகாரம் உள்ள இடத்தில் பணிந்து போவது, பிறர் நோக்கை ஏற்பது, அனைத்தையும் மறந்து அன்னையை நம்புவது, எதையும் நம்ப முடியாத நேரம் அன்னையை அழைப்பது, செய்வன திருந்தச் செய்வது, நம்ப முடியாததை ஆசையின்றி பக்தியால் நம்புவது, நிதானமாக நடப்பது, முறை வழுவாதது, கெட்டதை விட்டு நல்லதை நாடுவது, நல்லதையும், கெட்டதையும் விட்டு அன்னையை நாடுவது, அறிவைக் கடந்து ஆத்மாவை நம்புவது, சமர்ப்பணம் செய்வது ஆகியவை Life Response தரும்.
 

******



book | by Dr. Radut